உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் உரை

by நூருத்தீன்

பனூ உமைய்யா கலீஃபா சுலைமான் இப்னு அப்துல் மாலிக், தமக்குப் பின் உமர் இப்னு அப்துல் அஸீஸ்தாம் கலீஃபா என்று நியமித்துவிட்டு மரணிக்கிறார், உமர் இப்னு அப்துல் அஸீஸுக்கோ

அதில் துளியும் விருப்பமில்லை; ஆர்வமும் இல்லை. உமையாக்களின் கலீஃபாவாகத் திகழ்ந்தவர் அப்துல் மாலிக் இப்னு மர்வான். அவருடைய வாரிசுகளில் ஒருவர்தாம் சுலைமான் இப்னு அப்துல் மாலிக். மரணப் படுக்கையில் இருந்த இவர் தமக்குப் பின் தம்முடைய வாரிசுகளுக்கும் சகோதரர்களுக்கும் முன்னுரிமை அளிக்காமல் உமர் இப்னு அப்துல் அஸீஸைத் தேர்ந்தெடுத்தார். அதற்கு முழு முக்கியக் காரணம் உமரின் அப்பட்டமான இறையச்சம், அவருடைய திறமையின் மீது இருந்த நம்பிக்கை. தம் தந்தையின் சகோதரர் மகன், தம் சகோதரியின் கணவர் என்ற உறவுமுறை நெருக்கமெல்லாம் இருந்தாலும் சுலைமான் இப்னு அப்துல் மாலிக்குக்கு அவையெல்லாம் இரண்டாம் பட்சமாகியிருந்தன.

தவிர, உமர் இப்னு அப்துல் அஸீஸ் நபியவர்களின் அணுக்கத் தோழர் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களின் வாரிசு வழி வந்தவர் என்பது சுவையான பின்னணித் தகவல். உமர் கத்தாபின் மகன் ஆஸிம் (ரலி) அவர்களின் பேரர்தாம் உமர் இப்னு அப்துல் அஸீஸ்.

இத் தகவல்கள் ஒருபுறம் இருக்கட்டும். தாம் வேண்டி விரும்பாத பெரும் பொறுப்பும் கிரீடமும் தம் தலைக்கு வந்ததும் அதை தட்டிக் கழிக்கத்தான் பார்த்தார் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்). ஆனால் மக்களின் ஆதரவும் அவர்களின் சத்தியப் பிரமாணமும் கலீஃபாவாகப் பொறுப்பேற்றே தீர வேண்டிய கட்டாய நிலைக்கு அவரைத் தள்ளியது. பதவியேற்றதும் மக்களிடம் உரையாற்றினார் அவர்.

“நிச்சயமாக, உங்களுடைய நபிக்குப் பிறகு வேறொரு நபி வரப்போவதே இல்லை. அந்த நபிக்கு அருளப்பெற்ற வேதத்திற்குப் பிறகு வேறு வேதம் இல்லை. உலக இறுதித் தீர்ப்பு நாள் வரை இதுதான் அல்லாஹ்வின் நிச்சயமான தீர்மானமாகும். நான் இங்கு நீதிபதியல்லன்; ஆனால் நீதியை நிறைவேற்றுபவன். நான் புதிதாக எதையும் புகுத்துபவனல்லன்; ஆனால் பின்பற்றுபவன். நான் அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் நடந்து கொள்வேனாயின் யாரும் எனக்குக் கீழ்படியத் தேவையில்லை. உங்களுள் ஒருவர், அல்லாஹ்வின் நாட்டப்படி, என் மீது கடினச் சுமையைச் சுமத்தியுள்ள போதிலும், நான் உங்களைவிட உயர்ந்தவனல்லன்.

மக்களே! எம்முடன் சகவாசம் வைத்துக்கொள்ள விரும்புபவர் ஐந்து விஷயங்களில் சகவாசம் கொள்ளலாம்; இயலாதெனில் அவர் எம்மை நெருங்க வேண்டாம். தம்முடைய தேவைகளை எம்மிடம் எடுத்துவர இயலாதவரின் கோரிக்கைகளை எம்மிடம் கொண்டு வருபவர்; தம் முயற்சிகளின் மூலம் யாம் நற்செயல் புரிய உதவுபவர்; யாம் வழிகாட்டும் நல்லறங்களுக்கு இயைந்து செயல்படுபவர்; நம் சமூகத்தில் யாரையும் ஏமாற்றாதவர்; தமக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாதவர்.

எதைவிடவும் எல்லாவற்றைவிடவும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்று உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். இதைவிட வேறெதுவும் இல்லை. மறுமையை அறியுங்கள். அதற்கென செயல்படுபவனின் உலக விவகாரங்களை அல்லாஹ் திருப்திகரமாக்கி விடுவான். உங்கள் அகத்தைச் செம்மைப்படுத்துங்கள்; புறத்தை அல்லாஹ் மேம்படுத்துவான். மரணத்தைப் பற்றி அதிகமதிகம் அக்கறை கொள்ளுங்கள்; அது உங்களை வந்தடையும்முன் அதற்குத் தயாராகுங்கள்; ஏனெனில் அது உங்களை அழிக்கக்கூடியது.

இந்தச் சமூகம் இறைவனைப் பற்றியோ, நபியவர்களைப் பற்றியோ, அவருக்கு அருளப்பெற்ற வேதத்தைப் பற்றியோ பிரிவினை கொள்ளவில்லை. ஆனால், தீனார், திர்ஹங்களில் (உலக ஆதாயங்களில்) பிரிவினை கொண்டுள்ளது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, பொய்யன் எவனுக்கும் நான் எதையும் அளிக்க மாட்டேன், உண்மையாளனுக்கு எதையும் தவிர்க்க மாட்டேன்.”

பிறகு குரலை உயர்த்தி, ”மக்களே! யார் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறாரோ, அவருக்குக் கீழ்படிவது கடமை. யார் அல்லாஹ்வுக்குக் கீழ்படியவில்லையோ, அவருக்குக் கீழ்படிவது கூடாது. நான் அல்லாஹ்வுக்குக் கீழ்படிவேனாயின் எனக்குக் கீழ்படியுங்கள். நான் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியவில்லையெனில், நீங்கள் எனக்குக் கீழ்படியத் தேவையில்லை. சுற்றுப்புற நகரங்களிலும் வட்டாரங்களிலும் உள்ளவர்கள், உங்களைப் போல் எனக்குக் கட்டுப்பட்டால், நான் உங்களின் தலைவன். அவர்கள் அதற்கு மாறாகவோ, கிளர்ந்து எழுந்தாலோ நான் உங்கள் தலைவனல்லன்.”

உள்ளூரில் உள்ளவர்கள் பிரமாணம் அளித்தது மட்டும் போதாது, இதர பகுதிகளில் உள்ள மக்கள் தம்மை எதிர்க்காமல் இருந்தால் மட்டுமே தமக்கு இந்தப் பதவி என்று அவர் முத்தாய்ப்பாய் முடித்தது பதவியின்மீது அவருக்கு இருந்த ஆர்வமின்மையைத் தெளிவாக்கப் போதாது? பதவிக்காக அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, அடித்துக்கொள்ளும் காட்சிகள் பழகிப்போன நமக்கு விந்தை அது.

அவரது உரையின் அடிநாதமாக இழையோடும் செய்தி அனைத்தும் இறைவனையும் அவனைச் சார்ந்துமே இருப்பதைக் கவனித்தீர்களா? தாம் அமைக்கப்போகும் ஆட்சி எவ்விதம் அமையப் போகிறது, தாம் எப்படி இருந்தால் மக்கள் தமக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தெள்ளத் தெளிவாய் உரைத்து அதன்படி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்). அப்படியாக அவர் ஆட்சி புரிந்த நேர்த்தி, இறையச்சம் ஆகியவையெல்லாம் அவரை இரண்டாம் உமர், குலபாஉர் ராஷிதீன்களின் வரிசையில் ஐந்தாவது கலீஃபா என்ற பட்டத்தையும் பெருமையையும் பெற்றுத் தந்துவிட்டன.

இதுவரை நாம் வாசித்த அம் மேன்மக்களின் உபதேசங்களெல்லாம் ஊருக்கு மட்டுமல்ல. நமக்கும்தான். நம்முள் அத்தகு குணநலன்களை வளர்த்துக் கொள்ளாமல், வானத்திலிருந்து ஒருவர் குதித்து வர வேண்டும், நல்லாட்சி அமைத்து நம்மை ஈடேற்ற வேண்டும் என்று கால் நீட்டிப் படுத்திருந்தால், நம் பார்வைக்கு விட்டம் மட்டுமே மிஞ்சும்.

-நூருத்தீன்

வெளியீடு: அல்ஹஸனாத் ஜனவரி 2018

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<<முந்தையது>>

<<ஒரு பிடி உபதேசம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment