இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) – 02

by நூருத்தீன்

அநியாயமாகத் தமக்குத் துன்பத்தை விளைவித்த ஆளுநருக்குக் கடுமையான தண்டனை அளிப்பேன் என்று கூறிய கலீஃபாவிடம் இமாம் மாலிக் (ரஹ்) அமைதியாகப் பதில் அளித்தார். “அல்லாஹ் கலீஃபாவைப் பொருந்திக்

கொள்வானாக. தனது அருளைப் பொழிவானாக. நான் அவரை மன்னித்துவிட்டேன். ஏனெனில் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிதோன்றல். தங்களின் உறவினர்.”

பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்று அனைத்திற்கும் சாத்தியம் இருந்தும் நியாயம் இருந்தும் ‘அதெல்லாம் வேண்டாம், மன்னித்து விட்டேன்’ என்று உளப்பூர்வமாகச் சொல்வதற்குப் பெருந்தன்மை வேண்டும்; மனத்தில் ஐயத்திற்கு இடமின்றி இறை ஞானம் நிறைந்திருக்க வேண்டும். அவையெல்லாம் இமாம் மாலிக்கிடம் அளவற்று நிறைந்திருந்தன. எளிமையாக வெளிவந்தது பதில்.

நெகிழ்ந்துபோன கலீஃபா, “அல்லாஹ் தங்களையும் தங்கள் உறவினர்களையும் மன்னிப்பானாக” என்று வாழ்த்தினார். இமாமின் மீது மதிப்பும் அன்பும் மரியாதையும் பெருமளவு கூடிப்போய், ‘தங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள். அநீதியைக் களைவதற்கான எவ்வகை உதவியானாலும் மக்களின் நலனுக்கான எந்த வேண்டுகோளாக இருந்தாலும் உடனே எனக்கு எழுதுங்கள். அவை நிறைவேற்றப்படும்’ என்று உறுதிமொழியும் அளித்தார்.

யமன் நாட்டு அஸ்பாஹ் கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் மாலிக் இப்னு அபூஆமீர். அவருக்கு அந்நாட்டு ஆளுநரிடம் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு, சச்சரவாகி, வாக்குவாதம் நீண்டு பேசித் தீர்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டது. ‘இப்படியெல்லாம் பேசிக்கொண்டே இருந்தால் நீர் சரிவர மாட்டீர். கலீஃபாவிடம் நானே நேரில் போய் நியாயம் கேட்டு வருகிறேன்’ என்று கிளம்பியவர் நெடும் பயணமாக மதீனா வந்து சேர்ந்துவிட்டார். புகார் அளிக்க வந்தவருக்கு மதீனாவில் பற்பல நபித் தோழர்களைக் கண்டதும் குதூகலமாகிவிட்டது. தமது பிரச்னையை எல்லாம் மறந்துவிட்டு, ‘இனி இதுதான் என் ஊர், இங்குதான் என் குடித்தனம்’ என்று மூட்டை முடிச்சை அப்படியே இறக்கி வைத்துவிட்டு அந்நகரிலேயே தங்கிவிட்டார். எதற்கு? கசடறக் கற்பதற்கு.

உமர் இப்னுல் கத்தாப், உதுமான் இப்னு அஃப்பான், ஆயிஷா, தல்ஹா மற்றும் பல நபித் தோழர்களிடமிருந்து (ரலியல்லாஹு அன்ஹும்) சுற்றிச் சுற்றிப் பாடம் பயில ஆரம்பித்து, இஸ்லாமிய அறிஞராக மாறினார் மாலிக் இப்னு அபூஆமீர். அவருக்கு அனஸ் என்றொரு மகன் பிறந்தார். அந்த அனஸுக்கு ஒரு மகன் பிறந்தார். அவர்தாம் இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்).

அறிஞரான பாட்டனார், அவரது வளர்ப்பில் இஸ்லாமியக் கல்வியை ஆழ்ந்து தெளிவுறக் கற்று வளர்ந்த அவருடைய வாரிசுகள் என்றிருந்த குடும்பத்தில் பிறந்த மாலிக் இப்னு அனஸுக்குக் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் குடும்பச் சூழல் இயற்கையாகவே அமைந்து போனது. அந்தப் பக்கம், இந்தப் பக்கம், வர்த்தகத்தின் பக்கமெல்லாம் கவனம் செல்லாமல், சிதறாமல் சிந்தையெல்லாம் கல்வியாகிப் போனார் மாலிக் இப்னு அனஸ். இஸ்லாமியக் கல்விதான் குறிக்கோள் என்றானதும் மாலிக் இப்னு அனஸ் முதலில் கவனம் செலுத்தியது குர்ஆன். அதைப் பயின்றும் மனனம் செய்து முடித்ததும் இயல்பாக அவரது நாட்டம் ஹதீஸின் மீதும் ஃபிக்ஹின் மீதும் படர்ந்தது.

அவருக்கு அல்-நத்ரு என்றொரு சகோதரர். அல்-நத்ரு இப்னு அனஸுக்கு ஹதீஸ் கல்வியில் பேரார்வம்; ஆழ்ந்த அறிவு. அத் துறையில் அவர் ஊறி ஊறி, தேர்ச்சி ஏற்பட்டு, சிறப்பை அடைந்து அறிஞர்கள் குழுவில் – குறிப்பாக ஹதீஸ் கலை அறிஞர்கள் மத்தியில் – அல்-நத்ரு இப்னு அனஸுக்குப் பெரும் மதிப்பு உருவாகியது. தம் சகோதரருடன் சேர்ந்து பாலகர் மாலிக் இப்னு அனஸும் அந்த ஹதீஸ் குழுவுக்குச் செல்ல ஆரம்பித்தார். அல்-நத்ரின் சகோதரர் மாலிக் என்று அவர்களுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்படித்தான் அவரை அறிந்தார்கள், அழைத்தார்கள் அந்த அறிஞர்கள்.

தாமும் ஹதீஸ் கலையைப் பயிலத் தொடங்கினார் மாலிக் இப்னு அனஸ். நாளாக நாளாக, அவருடைய ஞானம் உயர்வடைந்து, சிறப்படைந்து, புகழடைந்து ஒரு கட்டத்தில் மாலிக்கின் அண்ணன் அல்-நத்ரு என்று குறிப்பிடும் அளவிற்கு அந்தச் சகோதரர்களின் அடையாளம் மாறிப்போனது.

ரபீஆ இப்னு அப்துர் ரஹ்மான் என்ற அறிஞர் அக்காலத்தில் மதீனாவில் மிக முக்கியமானவர். மக்கள் மத்தியில் அவருக்குப் பெரிதும் மதிப்பும் மரியாதையும் இருந்தன. அவரது மார்க்க அணுகுமுறை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமைந்திருந்தது.

மாலிக்கிடம் அவருடைய தாயார், ‘மகனே! நீ அவரது வகுப்புகளுக்குச் செல். உனக்கு அது சிறப்பானது. அவரிடம் ஞானம் பயில். பிறகு அவரது நற்குணங்களைப் பழகு’ என்று கூறி அவரது வகுப்புகளுக்குத் தம் மகனை அனுப்பிவைக்க ஆரம்பித்தார். நாள்தோறும் சிறப்பான ஆடையையும் தலைப்பாகையையும் அணிவித்து ‘போய்வா’ என்று வகுப்புகளுக்கு அனுப்பிவைப்பது அவரது வழக்கம். அந்தளவிற்குத் தம் மகனின் இஸ்லமியக் கல்வியின்மீது அக்கறை, கவனம் அத் தாயாருக்கு.

குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு சட்டங்களை அணுகும் ரபீஆவின் பாடமுறை மாணவர் மாலிக் இப்னு அனஸுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. கருத்தூன்றிப் பயில ஆரம்பித்தார் அவர். ரபீஆவிடம் ஃபிக்ஹ் பாடங்களைப் பயில்வது அவருடைய இளம் பருவத்திலேயே தொடங்கிவிட்டதாகத்தான் அறிய முடிகிறது. மாலிக்கின் காதில் வளையம் இருந்ததைப் பார்த்திருக்கிறேன் என்று அவர் காலத்தவர் அறிவித்த குறிப்புகள் உள்ளன. இளவயதினர் அக்காலத்தில் காதில் வளையம் அணிந்திருக்கின்றனர் போலும்.

பயில்வது, அவை அனைத்தையும் அப்படியே மனனம் செய்து மனத்தில் சேமித்து வைப்பது மாணவர் மாலிக்கின் பழக்கம். படிக்கும்போது மரத்தின் அடியில் அதன் நிழலில் அமர்பவர், தாம் படிப்பதை முடிக்கும்வரை அவ்விடத்தை விட்டு அகல்வதில்லை. ஆனால் சூரியன் நகர நகர, நிழலும் நகரும் அல்லவா? அதனால் அதற்கு ஏற்ப மரத்தைச் சுற்றிச் சுற்றி நகர்ந்து அமர்ந்து கொள்வாரே தவிர முடிக்கும்வரை அதுதான் அன்று அவரது இருப்பிடம். மற்றபடி பாட வகுப்புக் குழுமங்கள், மார்க்க அறிஞர்கள், கல்வியாளர்கள் மத்தியிலேயே அவரது பொழுது கழிந்திருக்கிறது.

இப்படியான தினசரி செயல்களைத் தவிர வேறு யாரையும் சந்திக்காமல், பேசாமல் புத்தகமும் கையுமாகவே அவர் இருப்பதைக் கண்ட அவரின் சகோதரிக்கு ஆச்சரியம். ஒருமுறை தம் தந்தையிடம், “இந்த என் சகோதரர் யாரையும் சென்று சந்திப்பதில்லையே” என்று கூறியிருக்கிறார்.

“மகளே! அவர் அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ்களை மனனம் செய்து கொண்டிருக்கிறார்” என்று பதில் அளித்திருக்கிறார் தந்தை அனஸ். அப்படியெல்லாம் தம் மகனின் கல்வியின் மீது அக்கறையும் பெருமிதமும் உள்ளவரானாலும் கண்டிப்பில் ஒன்றும் குறை இருந்ததில்லை. கடுமையாகக்கூட அது வெளிப்படும். ஒருநாள் மாலிக்கிடமும் அவர் சகோதரரிடமும் ஒரு வினா தொடுத்தார் அனஸ். இருவரும் விடை அளித்தார்கள். ஆனால் மாலிக்கின் விடை தவறு. அவருடைய சகோதரரின் விடையே சரியானதாக இருந்தது.

பாடத்தைப் படிக்காமல் என்ன பராக்கு என்று திட்டுவோமில்லையா? அதைப்போல், “பாடத்தை விட்டு புறாக்கள் உனது கவனத்தைத் திருப்பிவிட்டதா?” என்று கடிந்தார் தந்தை.

அவ்வளவுதான். சிறுவர் மாலிக் இப்னு அனஸுக்குக் கோபம் வந்துவிட்டது. ரோஷத்துடன் ஒரு முடிவுக்கு வந்தார். காரியம் ஒன்று செய்தார்.

அது –

(தொடரும்)

-நூருத்தீன்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment