மதீனாவில் சுபிட்சமும் மக்காவில் வயிற்றெரிச்சலும் – 3

ஹிஜ்ரீ 2-ஆம் (கி.பி. 623) ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) என்பவரின் தலைமையில் சுற்றுப் பார்வையிடும் குழுவொன்றை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.

அவரிடம் முத்திரையிட்டு மூடிய கடிதமொன்றை அவர்கள் கொடுத்தார்கள். பாலைவனத்தில் தெற்குப் புறமாக இரண்டு நாள் பிரயாண தூரத்தைக் கடந்தபின்னரே அக்கடிதத்தை அவர்கள் பிரித்துப் படிக்க வேண்டுமென்பது கடுமையான கட்டளை. அவ்வாறே அவர்கள் இரண்டு நாள் வழி நடந்து, பிறகு அந்த ஓலையைப் பிரித்துப் பார்த்தார்கள். “குறைஷிகளின் நடமாட்டம் எந்த அளவுக்கு இருக்கிற தென்பதைக் கண்டறிய நீங்கள் நேரே நக்லா (Nakhla) என்னுமிடத்துக்குச் செல்லுங்கள். அவர்கள் நமக்கெதிராக என்ன திட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டறியுங்கள். இப்போது நாம் விழிப்புணர்ச்சியுடன் இருந்தாக வேண்டும். ஜாக்கிரதை!” என்னும் கட்டளை அதில் பொறிக்கப்பட்டிருந்தது. அப்படியே அவர்கள் நக்லாவைச் சென்று அடைந்தார்கள்.

இரவு நேரத்தில், சிரியாவிலிருந்து சில குறைஷி வர்த்தகர்கள் மக்காவுக்குத் திரும்பும் வழியில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவ் வர்த்தகர்களின் தலைவனாக இருந்தவன் ஒரு சத்திரத்தில் அமர்ந்து கதை அளந்து கொண்டு இருந்தான். அவன் பெயர் அப்துல்லாஹ் இப்னு ஹலரமீ, மதீனாவிலிருந்து மற்றொரு அப்துல்லாஹ் (இப்னு ஜஹ்ஷ்) தம் நண்பர்களுடன் வந்து இதே இடத்தில் தங்கியிருப்பது அவனுக்குத் தெரியாது. எனவே, உரத்த குரலில் அவன் இவ்வாறு சிலருடன் பேசிக்கொண்டிருந்தான்:

“அவரவரும் தம் இஷ்டம்போல் சுதந்தரமாக நடந்து இன்பம் அனுபவித்து வருகிறோம். நாம் பல கூட்டங்களாகப் பிரிந்து உல்லாசமாக வாழ்ந்து வருகிறோம். மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஓடிய முஹம்மத் எல்லா மனிதரையும் ஒன்றுபடுத்தி, அவர்களுடைய சுதந்தரத்தை எல்லாம் பறித்து, ஒரே சமுதாயத்தை உருவாக்கப் போவதாகச் சொல்லி, தம்மை ஒரு சர்வாதிகாரியாக ஆக்கிக்கொண்டார். மதீனாவின் மடயர்களோ தங்கள் உரிமையையும் இழந்து, அறிவையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டார்கள். பரலோகத்துக்குப் பாதை காண்பிக்கிறதாகப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறவர் இகலோக விஷயங்களில் ஈடுபட்டுவிட்டார். மக்காவாசிகளாகிய நாங்கள் வடக்கே சிரியாவுக்குச் சென்று வயிற்றுப் பிழைப்பு நடத்துவதைக்கூட அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வழியிலே மதீனாவிக் கால் நீட்டிக் குந்திக்கொண்டு எங்களை வழிமறிக்கிறார்.”

அப்பொழுது அங்கிருந்த ஒருவர், “ஏன், நீங்கள் சிரியாவுக்குப் போன சமயத்தில், அல்லது இப்போது திரும்பி வந்த சமயத்தில் மதீனாவாசிகள் உங்களுக்கு ஏதும் உபத்திரவம் விளைத்தார்களோ?” என்று கேட்டார்.

“இது என்ன குறுக்கு விசாரணை? நாங்கள் ஏழை வியாபாரிகள். அதனால் எங்களை மடக்கிப் பயனில்லை என்று விட்டுவிட்டார்கள். ஓடுமீன் ஓடி ஒருமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்குப்போல அவர்கள் பதிவியிருக்கிறார்கள்; பலம் திரட்டி வருகிறார்கள் வழிப்பறி செய்வதற்குத் திட்டமிடும்போது யாருமே அதிக லாபத்தின்மீது தானே குறியா யிருப்பார்கள்?”

“பணக்கார வர்த்தகர்கள் வரும்போது பதுங்கிப் பாய மதீனா முஸ்லிம்கள் திட்டமிட்டுக் காத்திருப்பதாகச் சொல்கிறீரே, இது எப்படி உமக்குத் தெரியும்?”

அப்துல்லாஹ் இப்னு ஹலரமீக்கு எரிச்சல் வந்தது.

“எங்கள் குறைஷிக்குல பெருந் தனிகர், வர்த்தகக் கேசரி அபூஸுஃபியான் (Abu Sufyan) இப்போது சிரியாவில் இருக்கிறார். அவர் மக்காவிலிருந்து சிரியாவுக்கு வரும்போது மிகவும் சூட்சுமமாக எல்லா இரகசியங்களையும் அறிந்து வந்தார். அவர் சிரியா நாட்டிலிருந்து பெருஞ் செல்வத்துடனும் 1000 ஒட்டகங்கள்மீது ஏற்றப்பட்ட சரக்கு பொதிகளுடனும் திரும்பும்போது மதீனாவாசிகள் அவரை வழிமடக்கி, பெரிய கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று அவர் நம்பகமான தகவல்களைத் தெரிவித்தார். அபூஸுஃபியான் ஏன் பொய் சொல்ல வேண்டும்?”

“இது அவருடைய விபரீதக் கற்பனையாகவும் இருக்கலாமல்லவா? சிரியாவுக்கு அவர் மதீனாவின் வழியாகத்தானே ஒட்டகச் சுமைகளை ஓட்டிச் சென்றார்? அப்போது அவரை முஸ்லிம்கள் ஏதும் துன்புறுத்தவில்லையே!”

“போகும்போது அவர் கொண்டு சென்ற சரக்கின் பெறுமதியைவிட, வடக்கிலிருக்கும் சாம்ராஜ்யங்களிலிருந்து அவர் கொணரும் பொருள்கள் மதிப்பு மிக்கவை; அபூர்வமானவை; கிடைத்தற்கரியன. அவற்றைப் பறிப்பதில்தான் அதிக பயனுண்டு என்று மதீனாவாசிகள் காத்திருக்கிறார்கள். அபூஸுஃபியான் பொய் பேச மாட்டார்!”

“அப்படியானால், அவர் எப்படிக் காப்பாறிக் கொள்ளப் போகிறார்?”

“சென்ற சில வாரங்களுக்கு முன்னேயே அவர் உமைர் என்னும் ஓர் இரகசியத் தூதன் மூலமாக மக்காவுக்கு இந்த ஆபத்தைத் தெரிவித்துவிட்டார். அவர் வடக்கிலிருந்து மதீனாவின் அருகே வருவதற்குள், தெற்கே மக்காவிலிருந்து பெருந் துணைப்படை யொன்று இங்கு வந்து சேரும். அபூஸுஃபியானுக்குப் பக்க பலமாக மக்காவின் மாபெரும் வீரர்கள் வந்து சேர்வதைக் கண்டதும் மதீனாவாசிகள் விலவிலத்துப் போவார்கள். நாங்கள்கூட இப்போது நேராக மக்காவுக்குச் சென்று உடனே அவ்வுதவியாளர்களைத் துரிதப்படுத்தத்தான் போகிறோம். எங்கள் வர்த்தகத் தலைவரைக் காப்பாற்ற வேண்டியது எங்கள் மகத்தான கடமை!”

சத்திரத்தில் அமர்ந்து கொண்டு ஹலரமீ இப்படியெல்லாம் கதையளப்பதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷுக்கும் (ரலி) அவருடனிருந்த முஸ்லிம் தோழர்களுக்கும் சொல்லொணாக் கோபம் வந்துவிட்டது.

“புளுகு மூட்டைச் சிகாமணியே! நீ கையிருப்பு வைத்திருக்கும் சரக்கு மூட்டையைவிட உனது கற்பனையான திடீர்ப் புளுகுகள் மிதமிஞ்சியிருக்கும் போல் தெரிகிறதே! சாத்விக புருஷராகிய, அமைதியின் காவலராகிய, ஒருவருக்கும் ஒரு தீங்கும் நினையாதவராகிய எங்கள் மாண்புமிகு தலைவர், மனிதர் குல மாணிக்கம், இரக்கத்தின் இருப்பிடம், தருக்கிலாச் சிறப்பு நபி, வள்ளல் ரசூலை — இறைவனின் துதரை வாய்கூசாமல் இப்படியா நீ வருணிக்கிறாய்? அவரென்ன ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவரா, அல்லது மதீனாவில் வாழும் அவருடைய நல்லடியார்களாகிய நாங்களெல்லாம் கொள்ளிவாய்ப் பிசாசுகளா? வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று என்னவெல்லாமோ புலம்புகிறாய். உங்கள் அண்டைப் புளுகன் அபூஸுஃபியானைப் பரம உத்தமனென்று நீ புகழ்ந்து மெச்சிக்கொள்! ஆனால், இல்லாததை எல்லாம் கற்பித்து உளறித்திரிகிறதை இப்படியெல்லாம் பிரசாரம் புரியாதே! ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிவந்தால் அதுவே மெய்யாகிவிடும் என்பது உனது எண்ணமோ? ‘பொய் புளுகுகிறோம் என்று தெரிந்துகொண்டே மெய்யுடன் பொய்யைக் கலக்காதீர்கள்!’ என்று எங்கள் திருவேதம் ஆணையிடுகிறது. அந்த வேதத்தை நீ ஏற்காவிட்டாலும், அதிலுள்ள உண்மைக்காவது தலை வணங்கு. அபூஸுஃபியானின் புளுகுக்கு நீ சப்பை கட்டுக் கட்டுவதை இத்துடன் நிறுத்திக்கொள்!”

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) இவ்வாறு பேசியதைக் கேட்டதும், ஹலரமீக்கு அவனுடனிருந்த மற்றக் குறைஷிகளுக்கும் பேரதிர்ச்சி ஏற்பட்டது. முதலாவது, அச் சத்திரத்தில் முஸ்லிம்களும் ஒண்டியிருக்கிறார்களே என்பது; இரண்டாவது, எந்த நிரபராதிகளாகிய மதீனா முஸ்லிம்களின்மீது இவன் அபாண்டமான பொய்ப்பழியைச் சுமத்தி வீண் கதையளந்தானோ அது அம்பலமாகி விட்டதே என்பது. இசகுபிசகாக மாட்டிக் கொண்ட எந்தப் புளுகனும் இப்படிப்பட்ட நேரத்தில் ஒன்று, ஓடி ஒளிவான்; அல்லது மிருகத்தனமான பலாத்காரத்தைக் காண்பிப்பான். இருளில் ஓட முடியாத ஹலரமீ வன்செயலைக் கடைப்பிடித்தான். வாள் வீசினான்.

திரு நபியின் போதனை எக்காரணத்தை முன்னிட்டும் வலுச் சண்டைக்குப் போகக்கூடாது என்று கண்டிப்பதை அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) அறிவார். ஆனாலும், பெரும் புளுகும் புளுகித் தீர்த்து, வாளையும் ஹலரமீ உருவியதைக் கண்ட அவர் தமது கத்தியை உருவினார். குறைஷி வர்த்தகனின் தலை உருண்டது. அவனுக்குப் பக்கபலமாயிருந்த இருவர் சரணடையவே, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) அவர்களைக் கைதியாக்கிப் பிடித்துக் கொண்டார்.

இக் குழப்பத்தில் தப்பிப் பிழைத்த மற்ற மக்கா வர்த்தகர்கள் ஓடோடிச் சென்று, குறைஷிகளிடம் ஓவென்றழுது ஒப்பாரியிட்டார்கள்; மதீனாவிலிருந்து தெற்கே நக்லா வரை மதீனாவின் புரட்சியாளர்கள் வந்து பதுங்கிப் பாய்கிறார்கள் என்று கதை கட்டிவிட்டார்கள். சிந்திக்கும் ஆற்றல் அறவே இல்லாத, பொறுமை என்றால் இன்னதென்றே அறியாத மக்காவிலிருந்த அத்தனை புத்திசாலிகளும் மதம் பிடித்த யானைபோல் ஆனார்கள்.

“ஆஹா, இவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டதா? இப்போதே படையெடுப்போம்! புறப்படுங்கள், மதீனா நோக்கி! தொலைத்துக் கட்டுவோம் நம் எதிரிகளை!” என்று ஏக குரலில் யாவரும் ஆர்ப்பரித்தனர்.

அந்த வெறியர்கள் மத்தியிலும் ஒரே ஒரு சிந்தனை யாளனிருந்தான்.

“என்ன, தடை செய்யப்பட்ட இந்த ரஜப் மாதத்தில் போர் தொடுப்பதா? கூடாது. சாமிகள் நம்மைச் சபித்து விடும். அடுத்த பிறை (ஷஅபான்) பிறக்கட்டும். அது வரை நாம் மூச்சுவிடக் கூடாது!” என்று நினைவூட்டினான் அவன்.

சட்டென்று மின்விசை தாக்குண்டாற்போல் குறைஷிகள் செயலிழந்தார்கள். ஆம்! தடை செய்யப்பட்ட மாதத்தில் போர் தொடங்கக் கூடாதுதான். உருவிய வாள்களை உறையிலிட்டுத் துடித்தார்கள் குறைஷிகள். ஷஅபான் பிறக்கட்டு மென்று பல்லைக் கடித்தார்கள்.

இது வியப்பில்லை. ஆனால், ஷஅபான் பிறந்து சின்னாட்கள் சென்றதும், சிரியாவிலிருந்து அபூஸுஃபியானும் ஒட்டகப் பொதிகளும் கூடவே மற்றும் சில வர்த்தகர்களும் பத்திரமாக மக்கா நோக்கி நெருங்கி வந்து கொண்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் வந்தன. வழி மடக்கப்பட்டு வெறுங்கையுடனோ, அல்லது உயிரிழந்து பிணமாகவோ அபூஸுஃபியானும் உடனிருந்தவர்களும் திரும்பப் போகிறார்கள் என்று திகிலுடன் எதிர்பார்த்திருந்த மக்கா வாசிகளுக்கு இது மயக்க மூட்டும் செய்தியாக இருந்தது.

சில நாட்களில் அப் பெருந்தன வர்த்தகத் தலைவன் 1000 ஒட்டகப் பொதிகளுடன் பத்திரமாக வந்து சேர, எல்லாரும் எதிர்கொண்டு சென்று மொய்த்துக் கொண்டார்கள்.

“மதீனா வழியே நீங்கள் எப்படிக் கடந்து வந்தீர்கள்? வழியில் ஆபத்து ஏதும் நிகழவில்லையா? நாங்கள் இங்கே பயந்து கிடக்கிறோம்!”

“இல்லை. நான் போகும்போதும் ஒன்றும் அபாயம் நேரிடவில்லை. என்றாலும், பாதுகாப்பாக இருக்கட்டுமே என்பதற்காகவே துணையுதவியை இங்கிருந்து அனுப்பி வைக்கும்படி சிரியாவிலிருந்து உங்களுக்கெல்லாம் செய்தி யனுப்பினேன். உங்களுக்கு அந்தச் செய்தி வந்ததோ இல்லையோ என்கிற குழப்பம் எனக்கு. வரப்போகிற ஹஜ் பருவத்துக்காக நான் திரட்டிய சரக்கின் பெறுமதியோ மிக அதிகம். எனவே, நான் சென்ற வழியே மீளாமல், கடற்கரை யோரமாகச் சுற்றிக் கொண்டு திரும்பி வந்தேன். ஏன், என்ன நடந்தது?”

“அப்துல்லாஹ் இப்னு ஹலரமீயை மதீனா முஸ்லிம்கள் கொன்றுவிட்டார்கள். ரஜப் மாத மத்தியில் இச்செய்தி தெரிந்தது. தடை நீங்கிய மாதம் ஷஅபான் பிறந்ததும் 1000 வீரர்கள் இங்கிருந்து புறப்பட்டு மதீனா மீது படையெடுத்துச் சென்று இருக்கிறார்கள். நீங்களோ வேறு வழியாக வந்திருக்கிறீர்கள்.”

“என்ன, ஹலரமீ கொலையுண்டாரா? பழிக்குப் பழி வாங்க 1000 பேர் மதீனா மீது படையெடுத்துச் சென்றிருக்கிறார்களா? பேஷ்! ஒழியட்டும் புது மதம்! தொலையட்டும் புரட்சிச் சமுதாயம்!”

தான் வந்து சேர்ந்தபின் குறைஷித் தலைவர்கள் சோர்வுற்று விடாமல், வருமுன்பே வடக்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றுவிட்டார்கள் என்னும் செய்தி கேட்ட அபூஸுஃபியானுக்குப் பரமானந்தம்! தான் வரு முன்பே ஷஅபான் பிறந்து, தடை நீங்கிப் போர் வாசல் திறக்கப்பட்டு விட்டதே என்று பரம திருப்தி! இந்தச் சூழ்நிலைகளை உருவாக்கிய சாமிகளுக்கு நன்றி நவின்று, பூஜை நைவேத்தியம் நிறைவேற்ற அபூஸுஃபியானும் உடன் வந்த மற்ற வர்த்தகர்களும் கஅபா ஆலயத்துக்குள் விரைவாக ஏகினர்.

ஆம்! அபூஸுஃபியான் திரும்பு முன்னே குறைஷிகள் அபூஜஹலைத் தலைவனாகக் கொண்டு, மதீனாவின் முஸ்லிம்கள் மீது பழிதீர்த்துக் கொள்ள, ஆயிரத்துக்கதிகமான வலு வீரர்களுடன், எல்லாப் போர்க்கருவிகளையும் ஏந்தி, வடக்கு நோக்கிப் புறப்பட்டு விட்டிருந்தார்கள். அவர்கள் சென்ற வழியும், அபூஸுஃபியான் வந்த பாதையும் வேறு வேறாக இருந்தமையால், ஒருவரை யொருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. அபூஸுஃபியானின் தலைமையில் அத்தனை வர்த்தகக் கூட்டமும் சரக்கு பொதிகளும் மக்காவுக்குப் பத்திரமாக வந்து சேர்ந்த விஷயம் தெரியாமலே அபூஜஹல் சேனாதிபதியாகத் தலைமை வகித்து, மதீனா நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தான்.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

Image courtesy: askislampedia.com

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment