மதீனாவில் சுபிட்சமும் மக்காவில் வயிற்றெரிச்சலும் – 1

மதீனாவில் முஸ்லிம்களும் நபியவர்களும் எப்பொழுது வந்து குடியேறினார்களோ அப்பொழுதே ஒரு பெரும் சமுதாயப் புரட்சியும் நேரிய ஒழுக்கங்களும்

சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடும் வர்த்தக மேன்மையும் விளைச்சற் பெருக்கமும் சாந்தி சமாதானமும் தீவிரமாக வேரூன்றின. அபிஸீனியாவில் முன்பு அடைக்கலம் புகுந்திருந்த முஸ்லிம் அகதிகளும் இப்போது இங்கே வந்து குடியேறினார்கள். அவ்வப்போது நபியவர்களுக்கு வந்த குர்ஆன் திருவாக்கியக் கட்டளைகள் நீதி, சட்டம், ஒழுக்கம், ஆட்சி முதலிய சகல துறைகளிலும் மக்களுக்கு அறிவூட்டி வந்தன.

சொல்லிய ஒன்றைச் செய்யாமல் விட்டதோ, அல்லது செய்யமுடியாத ஒன்றைப் பிறர்க்கு மட்டும் போதித்ததோ நபியவர்களின் வரலாற்றில் அறவே கிடையாது. அவர்களுடைய தோழர்களும் சீடர்களுமோ என்றால், அராபியரின் சமுதாயம் என்றைக்குமே கனவிலும் கண்டிராத சகோதர ஒற்றுமை, ஏழைமீது இரக்கங்காட்டல், பெண்குலத்தைப் பெருமைப் படுத்துதல், உதவிதேடி நிற்போர்க்குச் சகாயம் வழங்கல், தாம் பெற்ற இன்பத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளல், அடுத்த வீட்டுக்காரருக்கு நேர்ந்த துன்பத்தைத் தமக்கேற்பட்டதாகப் பாவித்துப் பரிகரித்தல், அனாதைகளை ஆதரித்தல், விதவைகளுக்கு மறுவாழ்வு அளித்தல், பொதுமக்கள் நலனுக்கென்று நிதிச்சாலை (பைத்துல்மால்) அமைத்தல் முதலிய முன்னேற்றச் சீர்திருத்தப் பாதைகளை வகுத்துவிட்டார்கள். இறைவனை ஐங்காலமும் தவறாமல் தொழும் கடன் யாவராலும் விடாமல் கைப்பற்றப்பட்டு வந்தது. காரிருள் கம்மிய அமாவாசை இரவில் திடுமென்று பெளர்ணமி நிலவு தோன்றினால் எப்படியிருக்குமோ அப்படி ஒளி பெற்றுவிட்டது, கழுவ முடியாத கறை படிந்து கிடந்த அராபியர் சமுதாயம். எனவே, தினமும் புதுமதம் தழுவுவோரின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது.

மதீனாவில் முதலில் பள்ளிவாசலைக் கட்டி, ஐங்காலத் தொழுகையையும் கிரமமாக நிலைநாட்டிய பின் நபி (ஸல்) கவனிக்க முற்பட்ட விஷயம், அகதிகளாக வந்திருக்கும் மக்கா வாசிகளுக்குப் புனர் வாழ்வுத் திட்டம் வகுத்தமையாகும். அவர்களுள் அனேகர் மக்காவில் சுகமாக வாழ்ந்தவர்கள்; நிரம்பவும் பணம் வைத்திருந்தவர்கள். அவர்கள் அத்தனை உல்லாச சுகபோகத்தையும் சொத்து சுதந்தரங்களையும் விட்டு ஓடிவந்திருக்கிறார்கள். இவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டுமென்றால், உள்ளூர் வாசிகளுடன் யாவரும் இரண்டறக் கலந்தாக வேண்டும். ஆரியர்களிடையே உயர் ஜாதி இறுமாப்பு எவ்வாறு வேரூன்றிக் கிடந்ததோ அவ்வாறே மக்காவாசிகளான குறைஷிகள் தாங்கள் மட்டுமே உலகின் மிகச் சிறந்த உன்னதமான மேன்மைமிக்கவர்கள் என்னும் அகம்பாவத்தில் அமிழ்ந்து கிடந்தார்கள். மக்களிடையே சகோதர உணர்ச்சி தழைக்க வேண்டுமென்றால் முதலாவதாக ஜாதிப் பிரிவினை, இனவெறி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை ஒழியவேண்டும் என்று நபியுட்பட யாவரும் உணர்ந்தனர். அவ்வப்போது வந்த திருமறைக் கட்டளைகளும் யாவரையும் சமநோக்குடன் விளித்து, ஏக சகோதர ஒற்றுமையை வளர்க்க வேண்டுமென்று ஆணையிட்டன. எனவே, மக்காவிலிருந்து இங்கு வந்த ‘உயர் வகுப்பு’ முஸ்லிம், மதீனாவிலிருந்த ‘தாழ்ந்த வகுப்பாகிய’ அவுஸ், கஸ்ரஜ் வமிச முஸ்லிம்களுடன் சகோதர உறவும் திருமண உறவும் கொள்ளுமாறு நபியவர்கள் செய்து வைத்தார்கள். முஹாஜிர்களும் அன்சார்களும் இரண்டறக் கலந்தனர்.

நாம் முன்னமே விவரித்தவாறு, மக்காவின் வர்த்தக வல்லுநர்கள் மதீனாவின் விவசாய உழைப்பாளிகளுடன் தொழில் துறையில் இணைந்தனர். ஒவ்வோர் அன்சாரியும் தன்னிடம் வந்துசேரும் முஹாஜிருக்குத் தனது சொத்தில் பாதியை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்னும் ஒரு நியதி உருவாயிற்று. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) என்னும் ஒரு முஹாஜிரை (அகதியை)ச் சந்தித்த ஒரு மதீனாவாசியான அன்சார் (உதவியாளர்), “எனது வீட்டுக்கு வாருங்கள். எனது சகல சொத்துகளிலிருந்தும் சரிபாதியைத் தங்களுக்குத் தருகிறேன்,” என்றார்.

“தோழரே! உங்கள்மீது சாந்தியுண்டாகட்டும், உங்கள் அன்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னினும் கேவலமான கதியில், பரிதபிக்கத்தக்க நிலையில் பல அகதிகள் அவதியுறுகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சகாயம் புரியுங்கள். இப்பொழுது எனக்கு ஒரு சிறு உதவி மட்டுமே போதும்—கடைத் தெருவுக்குச் செல்ல வழிகாட்டுங்கள்!”

கடைவீதிக்கு வழிகாண்பிக்கப்பட்ட இந்த அப்துர் ரஹ்மான் (ரலி) என்பவர் தமது சொந்த முயற்சியால் சிறு வர்த்தகம் தொடங்கினார். சில மாதங்களுக்குள் இவர் தமது தொழிலை எந்த அளவுக்குப் பெருக்கிக் கொண்டாரென்றால், பல லட்சங்களைச் சம்பாதித்தார். சம்பாதித்ததையெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சியின் பொருட்டாகச் செலவிட்டார். பரம பக்த உத்தமராய் விளங்கினார்.

மக்காவிலிருந்து வந்த முஸ்லிம் தோழர்கள் மதீனாவாசிகளின் உதவி பெற்று வெறும் சோம்பேறிகளாக ஆகிவிடவில்லை. கூலி வேலை செய்தாவது, மூட்டை தூக்கியாவது, எந்த ஒரு ஊழியம் புரிந்தாவது பொருளாதாரத்தை வளர்த்தார்கள்; அவரவரால் இயன்றதை மிச்சம் பிடித்துப் பொது மக்கள் நிதிசகாய நிறுவனத்தில் காணிக்கையாகக் கொட்டிக் குவித்தார்கள். இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால்: பைத்துல்மால் என்னும் பொதுநிதிப் பொக்கிஷசாலை நபி பெருமானின் (ஸல்) நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. என்றாலும், தேனெடுக்கிறவன் விரலைச் சப்புகிற சபல புத்தியோ, அல்லது சாதாரணமாக வேறு பலர் செய்வதுபோல் “எனக்குக் கண்டதுபோக மிச்சந்தானே மற்றவர்களுக்கு!” என்னும் மனப்பாங்கோ என்றைக்குமே அவருக்கு இருந்ததில்லை. அவர்கள்மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த பக்தி (அல்லது விசுவாசத்து)க்கு, அவர்கள் அத்தனை பணத்தையும் தமதாக்கிக் கொண்டிருந்தாலும் மகிழ்ச்சியுடன் அங்கீகரித்தே இருப்பார்கள்.

ஆனால், திரு நபி (ஸல்) பொதுப் பணத்தைப் பொதுமக்கள் பொருட்டாகவே செலவிட்டார்கள். தமக்கென்றோ தமது குடும்பத்தாருக்கென்றோ ஒரே ஒரு செப்புக் காசையும் எடுத்துக் கொள்ளவேயில்லை. “நான் ஓர் ஏழை; இறுதிவரை ஏழையாகவே இருக்க விரும்புகிறேன்,” என்றே அவர்கள் சொல்லி வந்தார்கள். மண்ணுலக வாழ்க்கையை அவர்கள் நீத்த அன்று தம்முடைய சொந்த சொத்து அல்லது செல்வமென்று எந்த ஒன்றையும் விட்டுச் செல்லவில்லை. வசூலாகும் எந்தப் பண்டத்திலும் நபியவர்கள் ஏதும் எடுத்துக் கொள்ளவில்லையென்றால், அவர்களுடைய ஆப்த நண்பர் அபூபக்ர் (ரலி) என்ன செய்தார் தெரியுமா? தம்மிடமிருந்த திரண்ட சொத்து, ஆஸ்தி, பண்டம், பணம் ஆகிய அனைத்தையும் அப்படியே அள்ளிக் கொடுத்துவிட்டார் பொதுநிதிக்கு! ஆம்! அபூபக்ரினும் பெருந் தியாகி வேறொருவரில்லை என்று நபியவர்களே நற்சாட்சி வழங்கியிருக்கிறார்கள்.

அபூபக்ரின் கதை இப்படியென்றால், மற்றொரு தோழர் செய்ததைப் பாருங்கள்: ஒருநாள் மாலை நபியவர்கள் தம் மற்றொரு தோழராகிய அபூதல்ஹா (ரலி) என்பவருடன் இருந்தார்கள். அப்பொழுது அங்கோர் அகதி பசியும் பட்டினியுமாக வந்து சேர்ந்தார்.

“அபூதல்ஹா! இவரை உமது வீட்டுக்கு விருந்தினராக அழைத்துச் சென்று இரவுணவு அளித்து உபசரிப்பீராக!” என்று நபியவர்கள் கட்டளையிட்டு விட்டார்கள்.

தோழர் அப்படியே அழைத்தேகினார்.

“இப்படித் திடீரென்று விருந்தினரோடு வந்திருக்கிறீர்களே! நமக்கும் குழந்தைகளுக்கும் போதுமான அளவுதானே சமைத்தேன்? குழந்தைகள் சாப்பிட்டு உறங்கிவிட்டார்கள். மிச்சமிருப்பது கொஞ்சம்தானே? என்ன செய்வது?” என்று கையைப் பிசைந்தாள் இல்லத்தரசி.

“இருப்பதைக் கொணர்ந்து இவ்விரிப்பின்மீது வை. விளக்கை அனைத்து விடு” என்றார் கணவர்.

“விளக்கில் எண்ணெய் வற்றிவிட்டது. பரவாயில்லை. இருட்டில் சாப்பிடுவோம்” என்று அவர் தம் விருந்தினரிடம் சொல்லி, சாப்பாட்டுத் தட்டின் எதிரே அமர்த்தினார். வந்தவர் பசி தீர உண்டார். தாமும் உடன் உணவருந்துகிற மாதிரி அபூதல்ஹா அவருடன் சேர்ந்து அமர்ந்து, வெறு வாயை மென்றார்; விரல்களைச் சப்பினார்; கன்னங்களைக் குதப்பினார். விருந்தளித்தவரும் சேர்ந்து உண்டார் என்னும் நினைப்புடன் அந்த அகதி உணவு முடிந்து எழுந்து சென்றார்.

அன்றிரவு அபூதல்ஹாவும் அவர் தம் பத்தினியும் முழுப்பட்டினி!

ஏழ்மையின் போது அவர்கள் அழுது வடியவுமில்லை; செல்வம் மிகுந்த போது படாடோப ஊதாரிக் கேளிக்கையில் இறங்கிவிடவுமில்லை

மெளலானா முஹம்மதலீ என்னும் பேராசிரியர் இப்படி எழுதியிருக்கிறார்: “முஸ்லிம்கள் எவ்வளவு கடினமான உழைப்பை மேற்கொண்டார்களென்றால், மிகச் சடுதியில் அவர்களுடைய வறுமை நீங்கிற்று; வளப்பம் மெருகிற்று. முஸ்லிம்கள் சுகமாகவும் சுபிட்சமாகவும் வாழத் தொடங்கினார்கள். வறுமையோ, செழுமையோ—இரண்டிலும் அவர்கள் போற்றத்தக்க பண்பையே காட்டி வந்தனர். ஏழ்மையின் போது அவர்கள் அழுது வடியவுமில்லை; செல்வம் மிகுந்த போது படாடோப ஊதாரிக் கேளிக்கையில் இறங்கிவிடவுமில்லை. அல்லாஹ்வின் பாதையிலேயே அனைத்தையும் அவர்கள் செலவிட்டார்கள்.”

மிகக் குறுகிய காலத்தில் மதீனாவில் முஸ்லிம்களின் வாணிகம் எந்த அளவுக்குப் பெருகிவிட்டது, தெரியுமா? சில வர்த்தகர்களின் வசம் இருந்த எழுநூறு, எழுநூறு ஒட்டகங்கள் பொதி சுமந்து வியாபாரப் பண்டங்களை சிரியாவுக்கும் இராக்குக்கும் கொண்டுசென்று வந்தன. (அதாவது இன்றைய கணிப்பில் கூறவேண்டுமென்றால், முந்நூறு லாரிகளைச் சொந்தத்தில் வைத்துக்கொண்டு இந்தியா முழுதும் வாணிகம் நடத்தும் பாக்கியம் பெற்ற ஒரு வர்த்தகர்க்கு இணையாகக் குறிப்பிடலாம்.)

மதீனாவில் வசித்து வந்த பல்வேறு இனமக்களையும் ஒன்றாக ஐக்கியப்படுத்துவதில் நபியவர்கள் தம் கவனத்தைத் திருப்பினார்கள். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்!’ என்னும் சூத்திரத்தை அவர்கள் வன்மையாகக் கடைப்பிடித்தார்கள். இதுவரை பொறுமையாகக் கவனித்து வந்த யூதர்களுக்கு—சிறப்பாக அந்த இன குருமார்களுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டது.

“நபி யாகூபின் காலத்திலிருந்து இஸ்ரவேல் வமிசத்தினராகிய நம்முடைய ஒரே இனத்தில் மட்டுமே நபிமார்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்கள் நம் இகலோக வாழ்வுக்கும் பரலோக வாழ்வுக்கும் வழி காட்டியிருக்கிறார்கள்; தவ்ராத் முதலிய வேதங்களை வழங்கிச் சென்றிருக்கிறார்கள். இப்பொழுது சீரழிந்து கிடக்கிற நமது சமுதாயத்தை—பன்னிரு கூட்ட இஸ்ரவேலர்களை இவர் ஒன்று கூட்டி, நம்மை மட்டுமே கைதூக்கி விட்டு நமக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக இந்த மனிதர் என்னடா வென்றால், நீசர்களையும் மிக இழிவான ஜாதியார்களையும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்களையும் ஒன்றாக மதிக்கிறார். அவர்களை எல்லாம் ஒன்றாகக் கூட்டுகிறார். எல்லாரும் சமம் என்கிறார். இஸ்ரவேல் குலம் அப்படியொன்றும் தனித்துச் செயல்பட வேண்டிய தனிச் சலுகை பெற்ற சமுதாயமில்லை என்கிறார்.

இவர் போதிக்கிற மதத்தை ஏற்று, இழிவான ஜாதியார்களுடன் சரிசமானமாகி, அந்த ஜாதிப் பெண்களுடன் கொள்வினை கொடுப்பனை நிலைநாட்டவேண்டும் என்கிறார். நம்முடைய சுவர்க்கத்தில் இந்த இழிசனர்களுக்கும் இடமுண்டு என்கிறார். சமதர்மம் பேசுகிறார். எல்லாருடைய செல்வமும் சமுதாயத்துக்குச் சொந்தமென்கிறார். எவரிடையேயும் ஏற்றத் தாழ்வு இருக்கக்கூடாது என்று கண்டிக்கிறார். எதற்கும் ஓர் எல்லை இருக்க வேண்டாமா? இஸ்ரவேலர்களின் தனித்தன்மையை—இறைவனுடைய செல்லப் பிள்ளைகளாக இலங்கிவரும் நமது சகோதரர்களை இவர் தீர்த்துக்கட்ட வந்திருக்கிறார். இவரிடமிருந்து நாம் என்னென்னவோ எதிர்பார்த்தோம். குதிரை குப்புறத் தள்ளுகிறது; குழியும் பறிக்கிறது. இதில் இணங்கிப் போவதற்கு ஒன்றுமில்லை. முஹம்மது நமக்கு எதிரி; அவர் போதிக்கும் மதம் நமக்கென்று தயாரிக்கப்பட்ட விஷம். எனவே, கடைசி வரை நாம் எதிர்க்கத்தான் வேண்டும். நம்முடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.”

ஆனால், இந்த யூதர்கள் இரு கட்சியினராகப் பிரிந்து, உள்ளூர்க் கட்சிகளான அவுஸ், கஸ்ரஜ் பிரிவினரை முறையே முடுக்கி வந்தார்கள் என்று முன்பே குறிப்பிட்டோம். நாளடைவில் மதீனாவின் அந்த இரு பிரிவினரும் இஸ்லாத்தை ஏற்று ஒரு சமுதாயமாகி அமைதியைக் கடைப்பிடிக்கவே, யூத விஷமத்துக்கு வாய்ப்புக் குறுகிக் கொண்டே வந்தது. இன்னம் எல்லா அவுஸ், கஸ்ரஜ்களும் பூரணமாக முஸ்லிம்களாக மதம் மாறவில்லையாதலால், இவர்களைக் கொண்டு குழப்பத்துக்கு வித்தூன்றும் மார்க்கத்தை யூதர்கள் துருவிக் கொண்டிருந்தார்கள்.

யூதர்களால் என்றைக்குமே தொல்லைதான் விளையுமென்பதை யுணர்ந்த நபியவர்கள் முஸ்லிம்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தைச் செய்து முடித்தார்கள். அவ்வொப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள் பின்வருமாறு: –

(1) முஸ்லிம்களும் யூதர்களும் ஒரு சமுதாய மக்களாக வாழ வேண்டும்.

(2) இரு ஜாதியாரும் அவரவர் மத அனுஷ்டானத்தை அப்படி அப்படியே பின்பற்றி வரலாம். ஒருவர் மத விஷயத்தில் மற்றவர் தலையிடக்கூடாது. யூத மதமும் இஸ்லாம் மதமும் தனித்து இயங்கும்.

(3) இவ்விருவரை எதிர்த்து மூன்றாவதாக வேறொரு கட்சியோ, இனமோ, ஜாதியோ போர் தொடுத்தாலோ, நெருக்கடி உண்டு பண்ணினாலோ உடனே இரு சாராரும் பரஸ்பரம் உதவி வழங்கவேண்டும். ஆனால், இந்த இரு இனத்தாருள் எவரும் அந்த மூன்றாம் இனத்தினர் மீது வலுச்சண்டைக்குச் சென்றால் இது பொருந்தாது.

(4) மதீனாவை எந்த எதிரியாவது வந்து தாக்க நேர்ந்தால், அப்பொழுது இந்த இருசாராரும் நேசக் கட்சியாக ஐக்கியப்பட்டு அந்த எதிரிமீது போரிட வேண்டும்.

(5) போர் முடிவில் சமாதானம் ஏற்படும்போது, இருசாராரும் பரஸ்பரம் கலந்தாலோசித்தே அமைதி நிபந்தனைகளை வரையறுக்க வேண்டும்.

(6) மதீனாவைப் புனிதமிக்க நகராக இரு சாராரும் என்றைக்குமே போற்றி வரவேண்டும். இதைத் தற்காக்கிற துறையில், இங்கே ஒருவரை எதிர்த்தொருவர் உதிரம் சிந்தாமல், பவித்திரமாய் வைத்திருக்க வேண்டும். சண்டை சச்சரவு கூடாது.

(7) எந்தத் தகராறு எழுந்தாலும், நபியவர்களே முடிவான தீர்ப்பு வழங்குவார்கள். அத்தீர்ப்புக்கு எல்லாரும் கட்டுப்பட வேண்டும்.

யூதர்கள் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். தங்கள் மதஉரிமை, வட்டித் தொழில், சமுதாய ஒழுக்கம் ஆகியவை பாதிக்கப்படவில்லையே என்று திருப்தியுற்றார்கள். ஆனாலும், யூதர் எப்போதும் யூத குணத்தையே காண்பிப்பார்கள் என்பதைப் பிற்கால நிகழ்ச்சிகள் எண்பிக்கப் போகின்றன.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

Image courtesy: questionsonislam.com


1. திரு நபி மக்காவில் வாழ்ந்த காலத்தில் வெளியான 11:61-68; 14:9; 15:80-84; 25:38; 26:141-159; 27:45-53; 29:38; 41:13; 51:43-45 53:51 54:23-31; 85:18; 89:9; 91:11-15 முதலிய திருவாக்கியங்களையும் மதினாவில் வெளியான 7:73-79 69:4 முதலிய திருவாக்கியங்களையும் காண்க.


 

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment