மைமூனா இங்ஙனமெல்லாம் மனம் வெதும்பித் தத்தளித்துக் கண்ணீருகுத்துக்கொண்டிருந்த வேளையில் சுல்தான் முஈஜுத்தீன் ஐபக் ஷஜருத்துர் ராணியின் முன்னே முழங்காற்படியிட்டு நின்றுகொண்டு, பல்லிளித்துப் பரிதாபகரமாய்க் காட்சியளித்தார். முஈஜ்

இயற்கையாகவே பலசாலியாயிருந்தும் அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண் சிங்கமாயிருந்தும் மாட்சிமை மிக்க சுல்தானா ஷஜருத்துர்ரின் ஆத்திரத்துக்கு முன்னே ஒரு சிறு ஆட்டுக்குட்டியாய் மாறிப்போய் விட்டார். மிஸ்ரின் சுல்தான் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் ராஜபோக சுகசல்லாபத்தை அவர் சிறிது நுகர்ந்து மெய்மறந்து, இதுவே பூலோக சுவர்க்கமென்று கருதிவிட்டார். மேலும், சாஹஸ மிக்க ஸரஸாங்கியான ஷஜருத்துர்ரின் காமவேட்கை மிக்க விஷமங்களுக்கு முஈஜ் இரையாகிப் போய்விட்டமையால், மைமூனாவின் சிற்றின்பத்தைவிட ஷஜருத்துர்ரின் பேரின்பமே தெவிட்டாத தெள்ளமுது என்று மனப்பால் குடிக்க ஆரம்பித்தார்.

முஈஜுக்கு ராஜ்யத்தின் மீதுள்ள மோகத்தையும் ஷஜருத்துர்ரின் மீதுள்ள தணியாத தாபத்தையும் அத் துருக்கி நாட்டு மாது நன்கு தெரிந்துக்கொண்டு விட்டமையால், அந்த சுல்தானின் பலஹீனத்தைத் தமக்குச் சாதகமான வழிகளில் திருப்பிக் கொண்டார். காமப்பித்தும் நாடாளும் பேராசையும் ஐபக்கை நிரந்தரமாக அடிமைப்படுத்திவிட்டன வென்பதைக் கண்டுகொண்ட ஷஜருத்துர் அந்த சுல்தானை ஓடோட வெருட்டத் தலைப்பட்டதுடனே, அவரிடமிருந்து மிஸ்ர் பிடுங்கப்பட்டு விடக்கூடுமென்பதையும் ஷஜருத்துர்ராகிய தாம் முஈஜைத் திரஸ்கரிக்கக் கூடுமென்பதையும் ஜாடையாக அறிவித்துப் பயமுறுத்தாட்டி வந்தார். ஷஜருத்துர் முஈஜை வரித்த சமயத்தில் அவருக்கிருந்த மனவுறுதி மட்டும் தகராது நிலைத்து நின்றிருக்குமேயானால், சரித்திரமே வேறு விதமாய்ப் போய் முடிந்திருக்கும். ஆனால் ஐபக் மிகச்சில நாட்களில் ஷஜருத்துர்ரின் மோகத்தில் மூழ்கிப்போய் விட்டமையாலும் ராஜசுக போகத்தின் பேரானந்தப் பெருவெளியை யெட்டி விட்டமையாலும் ஷஜருத்துர்ருக்கு அடிபணியும் முதற்றர அடிமையாக இழிந்து விட்டார். குலூபுத்ராவென்னும் கிளியோபட்ராவிடம் சிக்கிய ரோமபுரி சக்கரவர்த்திகள் தங்கள் மதியை அன்னவளின் சரஸ சல்லாபத்துக்குப் பலி கொடுத்த கதையே போல் இந்த சுல்தான் ஐபக் காட்சியளித்தார். என்னே, காமத்தின் கடிய சக்தி! சீஸர், அந்தோணி போன்ற மாபெரும் வீரர்களுங்கூடக் காம இச்சையின் முன்னே கதி கலங்கிப்போய் விடுகின்றனர்.

அன்று அரசவையில் ஐயூபிச் சிறுவராகிய மூஸாவும் சுல்தானாக அரியாசனத்தில் அமர்த்தப்பட்ட கதையைக் கேள்வியுற்ற சற்று நேரத்தில் விதூஷகனின் வேடிக்கைக் கூத்தைப்போலப் பல்லெல்லாம் தெரியக்காட்டி, சொல்லெல்லாம் சொல்லி நாட்டி, துணைக்கரம் விரித்து நீட்டி, தன்மான மென்பதனை யோட்டி ஐபக் சுல்தான் தம்முன் நிற்பதைக்கண்டு பேய்ப்போலச் சிரித்தார் ஷஜருத்துர் என்று முன்னம் விவரித்தோமல்லவா? அப் பேய்ச்சிரிப்பின் பயங்கரச் சப்தத்தைக் கேட்ட ஐபக் இடியுண்ட நெடுமரமே போல் தொப்பென்று தம் முழங்கால்களை பூமியில்நட்டு, நடுங்குகிற கரத்துடனே ஷஜருத்துர்ரின் சேலை நுனியின் முன்றானையைப் பற்றிக்கொண்டு பரிதாபமாய் நின்றார். ஷஜருத்துர்ரோ, சற்றும் மனமிரங்காமல், குரூரமாக முகத்தைச் சுளித்துவைத்துக் கொண்டு, கங்கியைக் கக்கும் கண்களுடனே, சுல்தானைச் சுட்டெரிப்பது போல் கூர்ந்து நோக்கினார். அப் பார்வையின் கூர்மை ஐபக்கின் நெஞ்சிலே குத்தப்பட்ட கட்டாரியினும் பொல்லாததா யிருந்தபடியால், அக்காட்சியைக் காணச் சகியாமல், மண்டியிட்டு நின்றபடியே தம் சிரத்தைக் கவிழ்த்துக் கொண்டார்.

“இப்போது நீங்கள் நடந்து கொண்டதைக் சமயோசித புத்தியென்றா கூறுகிறீர்கள்?” என்று பிய்த்துப் பிடுங்குகிற தொனியில் ஷஜருத்துர் அடித்தொண்டையால் கத்தினார். அதிலும், “சமயோசித புத்தி” என்னும் வார்த்தைகளை அவர் உச்சரித்த தொனியிலே ஆத்திரங் கலந்த கேலி நகைப்பு ஒலித்தது.

“ஏ, என்னருங் காதற் கனிரசமே! கட்டிக் கரும்பே! கட்டாணி முத்தே! கற்கண்டே! காமக் களஞ்சியமே! என்னை வேறென்ன செய்யச் சொல்லுகிறாய்? நீ காலாலிடுகிற வேலையை நான் என் தலையால் செய்து முடிக்கிறேன். ஆகையால், என்னை வீணே நீ கோபிக்க வேண்டாமென்றுதான் மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். நீ உரக்கப் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் என் வயிற்றைக் கலக்கி அலசி விடுகிறதே. என்மீது நீ தயைகூர்வாய்! உன் கருணை மிக்க காதற்சொற்களைச் சிறிதே மிழற்றவாய்! என் கண்ணே!”

“மிஸ்ர் பற்றியெரியும் போது, உங்களுக்குக் காமத்தீ மூண்டெழுகிறது போலும்! வீடு பற்றி எரிகிற வேளையில் ஒருவன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம்! அம்மாதிரி நீங்கள் என்னிடம் கொஞ்சிக் குலவிக் கூத்தடிக்க இதுதான் தருணமோ? புது சுல்தான் இன்று பட்டமேறியிருக்கிற குதூகல வைபவத்தைக் கொண்டாடுவதற்காக வந்திருக்கிறீர்களோ? நன்று நன்று!… என் வயிறு எரிகிறது; மூளை கிறுகிறுக்கிறது; உங்களுக்கென்னடா வென்றால், விரகதாபம் வேகமாய்த் துள்ளிப் பாய்கிறது!

“ஏ, சுல்தான்! நமக்கெல்லாருக்குமே கேடு காலம் வந்து கவிந்துக்கொண்டிருக்கிற தென்பதை நீங்கள் உணரவில்லையா? எந்த கலீஃபாவின் திட்டத்தை உருக்குலைக்க நான் இத்தனை நாட்களாக எதிர்த்திட்டமிட்டு வந்தேனோ, அவ் வெதிர்த்திட்டங்களெல்லாம் கடுங்காற்றிற் சிக்கிய இலவம் பஞ்சாய்ப் பறந்து போய்விட்டனவென்பதை நீங்கள் பார்க்கவில்லையா? எந்த ஐயூபி பட்டத்துக்கு வரக்கூடாதென்பதற்காக நான் உங்களை மணந்து உங்களிடம் என் ஸல்தனத்தை ஒப்படைத்தேனோ, அந்த என் சொத்தை, அதே ஐயூபி, என் வன்பகைவர்களான புர்ஜீகளின் ஒத்துழைப்பால் கவர்ந்துகொண்டு விட்டான் என்பதை நீங்கள் உணரவில்லையா? நான் உங்களை மணந்ததும் உங்களையே சுல்தானாக்கியதும் அந்த புர்ஜீகளின் இறுமாப்பிலே மண்ணைத் தெள்ளிப்போடவே யன்றோ? இப்போது என்ன நடந்து விட்டது, பார்த்தீர்களா? இனி நாம் இருப்பதா, அல்லது இறப்பதா என்பதே பிரச்சினையாயிருக்கிற இந்நேரத்தில் நீங்கள் என் வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறீர்களே! உங்களுக்கு முன்னே இதே சிம்மாசனத்தில் சுல்தான்களாக வீற்றிருந்த அபூபக்ர் ஆதிலும் தூரான்ஷா முஅல்லமும் என்ன கதியாய்ப் போய் முடிந்தனர், தெரியுமா?”

அபூபக்கர் ஆதிலையும் தூரான்ஷா வையும் ஷஜருத்துர் ஞாபக மூட்டியவுடனே முஈஜுத்தீன் ஐபக்குக்குத் திகீரென்ற பயங்கர உணர்ச்சி யொன்று பிறந்தது. உயிர் போய்க்கொண்டிருப்பவன் பேசுகிற ஹீனஸ்வரத்தில், “ஆ!” என்று அலறினார் ஐபக் சுல்தான்.

முட்கள் நிறைந்த பீடமே சிங்காசனமென்பதையும், விஷம் நிரம்பிய தொப்பியே ராஜ கிரீடமென்பதையும் நீங்கள் உணர மாட்டீர்கள்.

“ஆம்! தூரான்ஷாவின் ஹிருதயத்தை லூயீயின் முன்னே கசக்கி யெறிந்தவர்கள் இன்னம் இந்தக் காஹிராவிலே உயிருடனேயே யிருக்கிறார்கள். உங்களுக்கும் எனக்கும் அத்தகைய பேராபத்து வருவதாயிருந்தால், எவருமே தடுக்க முடியாது. பஞ்சணையில் படுத்துக்கொண்டு பற்பல விதமான கேளிவிலாசங்களை நடத்துகிறது மட்டுமேதான் சுல்தானின் வாழ்க்கையென்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் போலும்! முட்கள் நிறைந்த பீடமே சிங்காசனமென்பதையும், விஷம் நிரம்பிய தொப்பியே ராஜ கிரீடமென்பதையும் நீங்கள் உணர மாட்டீர்கள். இன்று நடந்த சம்பவங்களால் நாம் நம் புதைகுழிகளின் பக்கல் விரைவாக ஈர்க்கப்படுகிறோமென்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். உங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஐயூபி உங்களுடைய உயிர் கொல்லியாகவே விளங்கிவருகிறானென்பதை நீங்கள் கருதிப் பார்க்க மாட்டீர்கள். உங்களுடைய கதியும் என்னுடைய கதியும் மிஸ்ரிகளின் கதியும் என்னவாய்ப் போகுமென்பதை நீங்கள் சற்றாவது சிந்தித்ததுண்டா?” என்று நிதானமான தொனியில் நேர்மையாய் மொழிந்தார் ஷஜருத்துர்.

“அப்படியானால், தப்பிக் கொள்ள வழி கிடையாதா? ஷஜருத்துர்! எல்லாம் தெரிந்த நீயே இப்படி என் இடுப்பை ஒடிக்கிறாயே! என்ன செய்யவேண்டுமென்பதை இக்கணமே சொல்லிவிடு. வேண்டுமானால் யான் இப்போதே சென்று அந்தப் போட்டி சுல்தானைக் கண்டதுண்டமாய் வெட்டிப் போட்டுவிட்டு வந்து விடுகிறேன்! அவன் இருப்பதால்தானே இத்தனை இடையூறுகளும்?” என்று தொடை நடுங்கிக்கொண்டே முஈஜ் மொழியலுற்றார்.

ஷஜருத்துர் இவ்வார்த்தைகளைக் கேட்டுவிட்டுப் பயங்கரமான தொனியில் இடியிடி யென்று பெரு நகைப்பு நகைத்தார். அவர் சிரித்த சிரிப்பின் வேகத்தால் அவ்வறை முழுதுமே எதிரொலி கிளம்பிற்று.

“உங்களுடைய மூளை உருகிவிட்டதா, என்ன? அஷ்ரபைக் கொல்வதற்கு உங்களுக்குத் தைரிய முண்டா? அப்படித் துணிச்சலாக நீங்கள் அவனைக் கொன்று விட்டால் மட்டும் எங்ஙனம் தப்பிவிடுவீர்கள்? இதுவும் என்ன, சொக்கட்டான் விளையாட்டா? அல்லது சுண்டைக்காய் வற்றலா? -இது வேடிக்கையாய்ப் பேசுகிற விஷயமன்றே! கவனியுங்கள் :

“என் உபதேசங்களைப் பூரணமாய்ச் செவியேற்று, என் கட்டளைப்படி எல்லாம் முற்ற முற்ற நீங்கள் நடந்துகொள்வதாயிருந்தால் மட்டுமே நாம் எல்லாரும் தப்பலாம்; நல்ல வழியில் பழியும் தீர்த்துக்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு, நீங்கள் உங்கள் மனம்போனபடி நடந்து கொள்வதாயிருப்பின், எனக்கொன்றும் நஷ்டமில்லை. ஆனால், உங்களுடைய உயிர்தான் போய்விடும். நான் இந்நாட்டுக்கு அடிமையாய் வந்தவள்; மீறிப்போனால் மீண்டும் நான் அடிமையாக விற்கப்படுவேன்; அவ்வளவேதான். ஆனால், நீங்களோ தற்போது சுல்தான் என்னும் சுமையையும் சேர்த்துத் தாங்கிக் கொண்டிருப்பதால், புர்ஜீகள் உங்களுடைய கல்லறையைத் தூரான்ஷாவின் புதைகுழிக்குப் பக்கத்திலேயே கட்டிவிடுவார்களென்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. எனவே, நான் கூறுகிற உபதேசங்களெல்லாம் உங்களுயிரையும், உங்கள் பதவியையும் காப்பாற்ற வேண்டுமென்னும் ஒரே நோக்கத்துக்காகத்தான். என்ன சொல்கிறீர்கள்?”

உடனே முஈஜுத்தீன் மண்டியிட்டு நின்றதை விட்டு, மெல்ல எழுந்து நின்றார். ஷஜருத்துர்ரின் பயங்கர மூட்டும் இம்முகவுரையைக் கேட்டவுடனே அவர் விலவிலத்துப்போயினார். “நீ சொல்வதை நான் என்றைக்காவது மீறியதுண்டா? சொல், சீக்கிரம் சொல் என் கண்ணே! நான் என்ன செய்ய வேண்டுமென்பதை இக்கணமே சொல்லிவிடு. நான் அப்படியே செய்து முடிக்கிறேன்,” என்று பதஷ்டத்துடன் பகரலுற்றார்.

ஷஜருத்துர் நிமிர்ந்து நின்றார். வாயிலண்டைச் சென்று வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தார். அங்கே உளவரெவரும் நிற்கவில்லையென்பதைத் தெரிந்துகொண்டு கதவை மெல்லச் சார்த்தித் தாழ்ப்பாளிட்டார். பிறகு நிதானமாக அன்ன நடை நடந்து வந்து அந்த மின்னலிடையாள் அங்கிருந்த சார்வணையில் ஒய்யாரமாகச் சாய்ந்துகொண்டார். வலது காலை நீட்டிக்கொண்டும் இடது காலை மடக்கி நிறுத்தி, அதன் முழந்தாளை இருகை கோத்துக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டும் தம் கணவருக்கு உபதேசிக்கத் தொடங்கினார்:

“என்னருமை நாதா! இந்ந உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுள்ளும் நான் தங்களைமட்டுமே நேசிக்கிறேனென்று கூறவும் வேண்டுமோ? நான் என் சுயநலத்தை முற்றுங் களைந்து தங்கள் நலன் ஒன்றனைமட்டுமே கருதி என்னுயிரை வைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு வேண்டாத விரோதிகள் என்னைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டி விடுகிறார்கள். என்றைக்கு இந்த ஸல்தனத்தைத் தங்களிடம் நான் ஒப்படைத்து விட்டேனோ, அன்றே நான் வெற்று மனுஷியாய்ப் போய்விட்டேன். நியாயபூர்வமாக நீங்களே தாம் சர்வ வல்லமையும் பொருந்திய மாபெரிய சுல்தான். தங்களை வீழ்த்தவோ, அல்லது தங்களுக்குப் போட்டியாக வேறொரு சுல்தானை நியமிக்கவோ, கலீஃபா உட்பட எவருக்குமே இவ்வவனியில் அதிகாரம் கிடையாது.

“ஆனால், இப்போது விஷயம் வேறுவிதமாகப் போய் முடிந்திருக்கின்றமையால், தாங்கள் சர்வ ஜாக்கிரதையுடனே நடந்து கொள்ள வேண்டும். தங்களுடைய நடவடிக்கைகளையும் என்னுடைய நடவடிக்கைகளையும் மூஸாவின் ஒற்றர்களான புர்ஜீகள் வேவு பார்த்துக்கொண்டு அலைவார்கள். எனவே, அந்த விஷயத்தில் முதலாவதாக நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடுத்தபடியாக, இந்த அஷ்ரப் என்னும் மூஸாவை அடியோடு தொலைத்து தலைமுழுகித்தான் ஆகவேண்டும். ஆனால், இப்போதல்ல; கொஞ்சம் நாட்பொறுத்துச் செய்ய வேண்டும். அந்தக் காரியத்தை – அச் சமயம் எப்போது வாய்க்கிதென்பதை நான் பின்னர்த் தெரிவிக்கிறேன். மூன்றாவதாக, நீங்கள் புர்ஜீகள்மாட்டும் மூஸாவின்மாட்டும் மெய்யென்பு ததும்பித் தத்தளிப்பதுபோலே நடந்து கொள்ள வேண்டும். உங்கள் நடிப்பு இந்த விஷயத்தில் எவ்வளவு சாமார்த்தியம் மிக்கதாக விளங்கவேண்டுமென்றால், எல்லா புர்ஜீகளும் என்னைக்கூட அவர்களுடைய அத்தியந்த நண்பியாக மாறிப்போய் விட்டதாக எண்ணி, ஏமாந்துப்போக வேண்டும். பிறகு, அவ்வப்போது நான் சொல்லுகிறபடியெல்லாம் மூஸாவுக்குப் பின்னே கொப்பம்* தோண்டிக்கொண்டிருக்க வேண்டும்; இறுதியாக, நாம் இந்த ஆபத்திலிருந்து முற்றிலும் தப்பி வெளியேறுகிறவரை உங்களுடைய பாரியை மைமூனாவைப் பற்றியோ, அல்லது மைந்தன் நூருத்தீன் அலீயைப் பற்றியோ கொஞ்சமும் சிந்திக்கவும் கூடாது.”

“ஷஜருத்துர்ரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாய்க் கேட்டு வந்த முஈஜுத்தீன் மௌனமாய்த் தலையசைத்துக் கொண்டேயிருந்தார். ஆனால், மைமூனாவின் பெயரும் நூருத்தீனின் நாமமும் உச்சரிக்கப்பட்டவுடனே அவருடைய மேனியின் மயிர்க்கால்கள் சிலிர்த்துவிட்டன. தானாடாவிட்டாலும் தன் மேனியாடும் என்பது மெய்யன்றோ? இதுவரை மறந்திருந்த ஒரு பெரிய விஷயத்தை ஷஜருத்துர் ஞாபகமூட்டியது முஈஜை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. ஆனால், சாதுரியமிக்க ஷஜருத்துர் முஈஜீத்தீனின் முகக் குறிப்பின் வாயிலாய், அவருள்ளத்தை ஊகித்துத் தெரிந்துகொண்டு விட்டபடியால், மோகத் தீயை மூட்டிவிடும் மோகனப் புன்னகையைப் பூத்து முஈஜை மெய்மறக்க செய்துவிட்டார். அப்புன்னகையைப் பார்த்து மகிழ்ந்த முஈஜுத்தீன் அந்த க்ஷணத்திலேயே தன் மைமூனாவையும் அவளுடைய ஏக மைந்தனையும் மறந்துவிட்டார்.

உலக சரித்திரத்தில், பெண்ணொருத்தியின் புன்னகை புருஷர்களின் மேனிமுழுதையும் மயக்கிவிட்டதென்பது உண்மையென்று கொள்வோமானால், அது ஷஜருத்துர்ரின் முறுவல்தானென்பதை அச்சமின்றி அழுத்தந் திருத்தமாய் அறைந்துவிடலாம்.

“ஷஜருத்துர்! யான் என்னதான் சுல்தானாக இருந்தாலும், உனக்கு என்றென்றும் யான் அடிமை யன்றே? நீயாகப் பார்த்து எனக்கிட்ட பிச்சைதானே இந்த ஸல்தனத்? நான் இந்த மிஸ்ரை ஆட்டிப் படைப்பது வாஸ்தவமென்று வைத்துக் கொண்டாலும், நீ என்னை ஆட்கொண்டிருக்கும் போது நீ தானே நிஜமான சுல்தானாவாக மிளிர்ந்துகொண்டிருக்கிறாய்! உன் மதியூகத்தின் முன்னே எவன்தான் போட்டி போட முடியும்? சும்மாவா ஸாலிஹ் நஜ்முத்தீன் உன் அழகுக்குப் பலியாகிப் போய்விட்டார்? அவரே உனக்கு அடிமைப்பட்டிருக்க, யான் என்ன அவரைவிடப் பெரியவனா? அவரே உன் வார்த்தைக்கு மாற்றம் சொல்லாமல் முற்றமுற்றக் கீழ்ப்படிந்திருக்க, யான் எப்படி உன் உபதேசங்களைத் திரஸ்கரிக்க முடியும்? யான் என்ன செய்யவேண்டுமென்பதை மட்டும் நீ எனக்கு அடிக்கடி நினைப்பூட்டிவிடு. யான் அவ்வண்ணமே எல்லாவற்றையும் செய்கிறேனா, இல்லையா – பார்!”

அன்றிரவு அங்ஙனம் காதற்கனிவிலே கழிந்தது. சுயநலத்தின் மீதே நோக்கமாகவும் தாம் கொண்டுவிட்ட சபதங்களையெல்லாம் தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்ள ஐபக்கையே சாதனமாகவும் கொண்டுவிட்ட ஷஜருத்தூர், ஊடலளிக்கும் வேளைகளில் ஊடலளித்தும் கூடலளிக்கும் வேளைகளில் கூடலளித்தும் அவ்விரண்டையும் சேர்த்தளித்தும், மானிட இனத்துக்கே பொதுவான சாபமாக விளங்கி வருகிற கேடுகாலம் என்னும், அதல பாதலத்துக்கு வழிக்கோலிக் கொண்டார். முப்பது வருஷங்கள் வாழ்ந்தாருமில்லை; முப்பது வருஷம் கெட்டாருமில்லை யென்னும் பொய்யாமொழிக்கு ஷஜருத்துர் மட்டும் விதிவிலக்கல்லவே!

நாதனின் பிரிவால் மனம் நைந்துருகிய மைமூனா தன்னில்லத்தில் வாடிவதங்கிக் குழைந்து போயிருக்கிற சமயத்தில், முஈஜுத்தீன் ஐபக் ரூபலாவண்ய சௌந்தரியான ஸாஹஸ ஷஜருத்துர்ருடனே கூடிக்குலவி உண்டாட்டயர்ந்துகொண்டிருந்தார். ஒரு பத்தினிப் பெண்ணின் சாபக்குவியலுக்கு ஷஜருத்துர் இங்ஙனமாக இலக்காகி விட்டார்.

மைமூனா அனுப்பிய சேவகன் அரண்மனைக்கு ஓடோடியும் வந்தான். அன்று அங்கு நடந்த எல்லா விருந்தாந்தங்களையும் நேரில் கேட்டுத் தெரிந்துக் கொண்டான். பிறகு சுல்தான் முஈஜுத்தீனை எப்படிச் சந்திப்பதென்று யோசித்துக்கொண்டே நின்றான். அரசவை கலைந்ததும் ஷஜருத்துர்ரின் அந்தரங்க அறைக்குள்ளே சென்று நுழைந்த ஐபக் சுல்தான் இன்னம் வெளியில் வரவில்லை யென்பதைக் கேள்வியுற்று, நெடுநேரம் காத்திருந்தான். நள்ளிரவு நெருங்கியும்கூட ஐபக்கின் தரிசனம் கிடைக்காமற் போயினமையால், அவன் வந்தவழியே வாளா திரும்பிச் சென்று, தன் வருகைக்காகக் காத்து நின்ற மைமூனாவிடம் சகல விருந்தாந்தங்களையும் எடுத்துக் கூறினான்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

 

* கொப்பம் யானையைப் பிடிக்க வெட்டும் பெருங்குழி.

 

 

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment