ஷஜருத்துர் செய்த அத்தனையும் – ஸாலிஹை அண்டியது முதல் இன்று வரை புரிந்த எல்லாச் செயல்களும் – பட்டத்துக்கு உரியவராகிய தம்மை ஒழித்துக் கட்டுவதற்கேதான் என்று முஅல்லம் முடிவுகட்டி விட்டமையால், அந்த விபரீத அஸ்திபாரத்தின்மீது தம்

கற்பனையாகிய மனோராஜ்யக் கட்டிடத்தை மிக்க வனப்புடனே நிருமிக்கத் தொடங்கினார். ஷஜருத்துர் தம்மிடம் அன்றுமுதல் இன்று வரை பேசியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் கபடமானதுதான் என்றே இப்போது அனர்த்தம் செய்ய ஆரம்பித்தார். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயே அல்லவா?

முஅல்லம் தம் கற்பனைத் தேரில் ஏறிச் சஞ்சரித்த வண்ணம் இருந்தபோது, சிறிதே உறங்க ஆரம்பித்தார். ஆனாலும், மெய்ம்மறந்த தூக்கம் தூங்கவில்லை. அரைகுறையான நித்திரையில் கண்மூடினார். உடனே விசித்திரமான கனவுகள் – காராக் கோட்டிகளெல்லாம் – காட்சியளிக்க ஆரம்பித்தன. மரணமடைந்த அபூபக்ர் ஆதிலாகிய பெரிய தந்தையார் முதலாவதாக வந்து நின்றார். அவர் ஏதேதோ ஏசிப்பேசி, அகன்றார். அடுத்தபடியாக மூனிஸ்ஸா தோன்றினார்; அவரும் ஏதேதோ உபதேசித்துச் சென்றார். இறுதியாக ஸாலிஹ் நஜ்முத்தீன் தோன்றலாயினார்.

“என்னருந் தந்தையே! ஏன் முகவாட்டத்துடனே காணப்படுகிறீர்கள்?” என்று முஅல்லம் அக்கனவில் வினவினார்.

“ஏ அறிவிலி! உன்னை இவ்வுலகில் இறுதியாகச் சந்தித்துப் போகவே இப்போது நான் இங்கு வந்திருக்கிறேன். நீ நெடு நாளைக்கு இந்த ஸல்தனத்தை ஆட்சி செலுத்தி, என்னையும் நம் முன்னோர்களையும் கண்ணியப்படுத்தி, ஐயூபிகளின் பெருமையை நிலைநாட்டக்கூடிய கான்முளையென்று இது காறும் எதிர்பார்த்து இறுமாந்திருந்தேன். ஆனால், ஏ பதரே! நீ என் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாய். நான் யார் யாரை இந்த நாட்டின் துரோகிகள் என்று கழுவேற்றினேனோ, அவரவர் சந்ததியை நீ உன் அத்தியந்த நண்பர்களாகவும் உற்ற துணைவர்களாகவும் ஏற்றுக்கொண்டிருக்கிறாய். நம்முடைய சந்ததியார்களின் பாதுகாவலுக்காகவும் கண்ணியத்துக்காகவும் எந்த பஹ்ரீ மம்லூக்குகளையும் ஹல்காக்களையும் சிருஷ்டி செய்துவிட்டேனோ, அதே பஹ்ரீகளை நீ அழிக்கத் துணிந்திருக்கிறாய். எந்த ஷஜருத்துர் என்னும் நாரிகளின் திலகத்தை உலகம் மெச்சிப் புகழ்கிறதோ, அந்த ஷஜருத்துர் என்னும் நன்முத்து ஹாரத்துக்கு நீ பொல்லாத கேடு விளைவிக்க நாடுகிறாய்.

“ஏ, என் மைந்தனாய்ப் பிறந்த அசடே! உனக்கு நான் எத்தனை முறை எச்சரிக்கை விடுத்திருக்கிறேன்! நீ என்றைக்குமே அந்த நாரிமணிக்கு அடங்கியும் அவள் உபதேசிக்கிற வார்த்தைகளுக்குச் செவி தாழ்த்தியும் ஒழுகிக்கொள்ள வேண்டுமென்று எத்தனை வகையில் சொல்லியிருக்கிறேன்? நீ தந்தை சொல்லையும் தட்டி, ஷஜருத்துர்ரையும் அவமரியாதைப் படுத்தி, கழுதைக் குணம் படைத்த பக்ருத்தீனின் கபட நாடகங்களுக்கு இரையாகி, உன் கழுத்துக்கே கத்தியைக் கொண்டு வருகிறாயே, நீ உருப்படுவாயா?

“ஏ, பதடி! என் வயிற்றிற் பிறந்த நீ எனக்கும் என் மனைவிக்குமா தரோகம் இழைக்க வேண்டும்? உனக்காக அந்த ஷஜருத்துர் என்னவெல்லாம் பரித்தியாகம் புரிந்தாள் தெரியுமா? அடே, நீசா! அவள் புரிந்த உதவிக்கெல்லாம் நீ கைம்மாறு செய்ய வேண்டாம்; ஆனால், அவள் உனக்குச் சாதித்தவற்றுக்கு நன்றியறிதலுடனாவது நடக்க வேண்டாமா? செத்துக்கிடந்த பிணமாகிய என் பக்கத்தில்கூட அவள் உட்காராமல், மாடங்களில் ஏறிக்கொண்டு நீ வருகிற திக்கையே பார்த்துக்கொண்டு நின்றாளே, அதையாவது நீ ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா? இந்த ஸல்தனத் என்னும் அமானத்துப் பொருளை ஆண்டவனுக்கு அஞ்சி அவள் உனக்காகப் பாதுகாத்துத் தந்தாளே, அதற்காகவாவது நீ நன்றி செலுத்த வேண்டாமா? அவள் உன்னை வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெறாவிட்டாலும் உலகப் பழிக்கு அஞ்சியஞ்சி நின்மாட்டு மிகுந்த பிரியத்துடனே நடந்து கொண்டாளே, அதையாவது நீ மறக்காமல் இருந்தாயா? மறந்தாலும் போகட்டும். அன்ன மூட்டிய கையை வெடுக்கென்று விழுந்து நீ கடிக்காமல்தான் இருதாயா?

“ஏ, கூறுகெட்ட குய முட்டாளே! அவளை ‘அடிமை அடிமை’ என்று இடித்துக் கூறுகிறாயே, அந்த அடிமைக்கு இருக்கிற விவேகத்தில் ஒரு கோடியில் ஒரு பங்காவது உனக்கு இருக்கிறதா? உன் தாயை இழந்த பின்னர் இந்த ஷஜருத்துர்ரின் சிஷ்யனாகவாவது நீ உயர்ந்துபோய் இந்த ஐயூபி வம்சத்துப் பேரையும் புகழையும் மிகைபடுத்துவாய் என்று நம்பி எதிர்பார்த்திருந்தேனடா பாவி! என் தலையிலும் அவள் தலையிலும் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டாயாடா!

“ஏ, மூர்க்கனே! நீ என் சாபத்தைப் பெற்றுக்கொள்! உலகம் உள்ளளவும் எல்லாரும் உன் கதையைக் கேட்டுத் திட்டிக் குவிக்கப் போகிற சாப மூட்டையையும் பெற்றுக்கொள்! தூர்த்தனே, பாதகனே, காதகனே! நீ நாசமாய்ப் போகக் கடவாய்! நீ எந்த மம்லூக் இனத்தவரைச் சார்ந்து நிற்கிறாயோ, அவர்களும் நாசமாய்ப் போகக் கடவர்! ஏ, சண்டாள துரோகியே! உன்னை நான் என் மனமாரச் சபிக்கிறேன். உனக்கு லாயிக்கில்லாத இந்த ஸல்தனத்தை, உனக்குப் பொருத்தமில்லாத இந்த அரசாங்கத்தை உன்மீது சுமத்திவிட்ட புண்ணியாத்துமாக்களை ஆண்டவனே மன்னிப்பானாக! அவ் ஏகவல்லோன் இக்கணமே உன் மணிமுடியைக் கீழே உருட்டி விடுவானாக! ஐயூபி வம்சத்தின் இணையற்ற பெருமைக்கு வன்பகைஞனாய் அவதரித்திருக்கும் உன் உற்பாதபிண்ட ஆயுளை இன்னம் நீளமாக்கி வைத்துப் பெரிய அபக்கியாதியை உண்டுபண்ணுவதை விட, உன்னை இன்றைக்கே கொன்று ஒழிக்கும்படி ஆண்டவனை யான் இறைஞ்சுகின்றேன்.

“ஏ, கொலைகாரனே! கேடுகெட்ட கடையனே, மூளையற்ற மடயனே, புத்திகெட்ட வீணனே! நீ இனியும் சாவாதிருப்பது பாபமே! தொலைந்து போகக் கடவாய், சொத்துத் தொலையக் கடவாய், கொல்லப்பட்டு ஒழிக்கப்படுவாய் நீ!”

இவ்வாறெல்லாம் சபித்துவிட்டு, அந்த ஸாலிஹின் உருவம் மறைந்தது. முஅல்லமோ, பதறி எழுந்தார். கண்ட கனவின் பயங்கர சப்தம் இன்னம் செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. ஒரே இருட்டாய் இருந்தபடியால், பயங்கரம் இன்னம் அதிகாத்தது. யாரோ பக்கத்தில் ஒளிந்திருந்து, தம் மார்பிலே கட்டாரியால் குத்தியதைப்போல் மனனம் செய்து கொண்டார். பணியாட்களைக் கூவியழைக்கலாம் என்றால், நா எழவில்லை. பயங்கரத்தின் அதிர்ச்சியால் ஏற்பட்ட பெருந் திடுக்கத்தால் ஒன்றும் புரியாமலே மயக்கமுற்றுப் படுத்துவிட்டார்.

மலிக்குல் முஅல்லம் பட்டத்துக்கு வருவதற்கு முன்னரே புர்ஜீகள் மிகவும் நயவஞ்சகமாகச் சூழ்ச்சிகள் செய்து, அவரைச் தவறான வழிகளிலே திருப்பிவிட்டார்கள் என்பதை முன்னமே நாம் கூறியிருக்கிறேம். ஆனால், அவர் பஹ்ரீகளுக்கும் ஷஜருத்துர்ருக்கும் என்னென்ன வகைகளில் தீமைகளைப் புரியமுனைந்தார் என்பதை நுணுக்கமாக வருணித்தோமில்லை. என்னெனின், அவருடைய குணவிசேஷங்களில் எத்தன்மைத்தாய எதிர்பாராத முரண்மிக்க மாற்றங்கள் நொடிப்பொழுதில் ஏற்பட்டுவிட்டன என்றால், அவற்றை நாம் வருணித்தால்கூடப் படிப்பவர்கள் சற்றும் நம்ப முடியாதபடி அவை அத்துணை அநாகரிகமாய்க் காணப்பட்டன.

புர்ஜீகள் ஸாலிஹைப் பழிவாங்க இயலாமற் போயினமையால், அவர் மைந்தனையாவது தங்கள் ஆயுதமாக மாற்றிக் கொண்டு, ஷஜருத்துர்ரையும் பஹ்ரீகளையும் தீர்த்துக் கட்டி விடுவது என்று முரட்டுத்தனமாகத் துணிந்து இறங்கிவிட்டார்கள். பொல்லாத அவர்களின் நயவஞ்சகப்பேச்சு முஅல்லம் சுல்தானின் பிடர்பிடித்து உந்திக் கொண்டே இருந்தபடியால், புர்ஜீகள் தோண்டிய கொப்பக் குழிக்குள்ளே வெகு சுலபமாக விழுந்ததுடன், அவர்கள் போட்ட திட்டங்களுக்கும் உதவியாய்ப் போய்விட்டார். மேலும் மேலும் தவறான வழிகளிலே மிக வேகமாக இழிந்து, புர்ஜீகள் சொல்வதற்கெல்லாம் தலையசைத்துக் கொண்டும் பஹ்ரீகள் மீதும் ஷஜருத்துர் மீதும் பகைமை உணர்ச்சியை வளர்த்துக்கொண்டும், மனிதர்களுள் மிகவும் கீழான குணம் படைத்தவரின் இனத்துடன் சென்று சேர்ந்துவிட்டார்.

இறுதியாக, இன்றைத் தினத்திலே அவருடைய நிலைமை எப்படிப்போயிருந்தது என்றால், மிகவும் அன்பு பாராட்டிய மாற்றாந்தாய் முதல், காஹிராவின் கடை வீதியிலே உலவுகிற கடைசி மனிதன் வரையில் ஸாலிஹின் மைந்தரை வாய்க்கு வந்தபடி தூற்றிச் சபிக்கும்படி அத்துணைமட்டும் மாறிப்போயிருந்தது. புர்ஜீகளைத் தவிர வேறு எந்த மனிதருக்கும் சுல்தான் மீது மோகமில்லை. புர்ஜீகளும் அவரை ஏணியாக வைத்துக் கொண்டு தாங்கள் ஸல்தனத்தைப் பற்றிக்கொள்ளவே திட்டமிட்டு வந்தார்கள். உத்தேசம் இருபது வயதே எட்டியிருந்த இளவலான முஅல்லம் இப்படிப்பட்ட இழிவான நிலையை எய்தி விட்டதைக்கண்டு, சரித்திராசிரியர்கள் எல்லாருமே கவலைப்படுகிறார்கள். நிற்க.

அந்த இரவின் கடைச் சாமத்தில் அமீர் பக்ருத்தீன் சுல்தானின் சயன அறையுள் நுழைந்து எட்டிப் பார்த்தார். கும்பிருட்டாய் இருப்பதைக் கண்டு அதிசயித்து, ஏவலாட்களை அழைத்து விளக்கேற்றச் சொன்னார். மூர்ச்சையுற்ற நிலையில் சுல்தான் பஞ்சணைமீது நீட்டிக் கிடப்பதைக் கண்டார். அவசரமாகச் சென்று சுல்தானை எழுப்பினார். முஅல்லம் மயக்கந்தெளிந்து அல்லோல கல்லோலமாக அரண்டு விழித்தார்.

“யா மலிக்! தாங்கள் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம். எல்லாம் ஒழுங்காகவே இருக்கிறது. லூயீயையும் மற்றக் கைதிகளையும் செங்கோட்டைக் கோபுரச் சிறையுள் கொண்டு போய்ச் சேர்த்து விட்டேன். இனிமேல் பஹ்ரீகள் ஒன்றும் வாலாட்ட முடியாது. அன்றியும், அவர்கள் ஏதாவது கலகத்துக்கு ஏற்பாடு செய்தால், என்ன செய்வது என்பதற்காக எல்லா புர்ஜீ மம்லூக்குகளையும் ஆயுதந் தரித்துத் தயாராய் இருக்கச் சொல்லி ஆக்ஞை இட்டுவிட்டேன். நேற்று இந்த மிஸ்ருக்கு வந்து சேர்ந்த இந்தப் பேடி மம்லூக்குகளால் என்ன செய்ய முடியும்?” என்று பக்ருத்தீன் வீரத்தொனியில் பேசினார்.

“ஏ, பெரியவரே! என் மனம் சொல்லொணாச் சஞ்சலத்தில் கிடந்து உழலுகிறது. துன்னிமித்தங்கள் பலவற்றைக் கனவில் கண்டு என் நெஞ்சம் புயலில் சிக்கிய படவேபோல் தத்தளிக்கிறது. ஆண்டவன் என்னைச் சோதிக்கிறான்!” என்று சுல்தான் பதஷ்டத்துடன் பதறினார்.

பக்ருத்தீன் இடியிடியென்று சிரித்தார்.

“யா சுல்தானும் முல்க்! கனவைக் கண்டா கலங்குகிறீர்கள்? நிழலைக் கண்டு பயப்படுவாரும் உண்டோ? தங்களை எவரால் என்ன செய்ய முடியும்? தாங்கள் எவ்வளவு பெரிய ஸல்தனத்துக்கு இன்று எஜமானராய் விளங்குகின்றீர்கள்! புர்ஜீகளாகிய எங்கள் உடம்பின் இறுதிச் சொட்டு ரத்தம் சிந்தி முடிகிறவரையில் தாங்கள் கவலைப்படுவானேன்? யானிருக்கப் பயமேன்? இந்த அற்பர்களாகிய பஹ்ரீ பதடிகளால் என்ன செய்ய இயலும்? தங்களை விடச் சிறிதே வயது முதிர்ந்த அடிமைப் பெண்ணாகிய ஒருத்தி இந்த ஸல்தனத்தை ஆட்டிப் படைத்திருக்கும்போது, ஸலாஹுத்தீன் ஐயூபியின் பேரராகிய ஆண் சிங்கக் குட்டியாகிய தாங்களேன் தத்தளிக்கிறீர்கள்? புது மம்லூக்குகளின் காக்கைக் கூட்டத்தை வைத்துக் கொண்டு வேற்றுநாட்டு அடிமை ஸ்திரீ ஒருத்தி இந்த நாட்டைக் கலக்குக் கலக்கென்று கலக்கியிருக்க, ஐயூபியான தாங்கள் பரம்பரை மம்லூக்குகளாகிய எங்களை வைத்துக் கொண்டுமா பயப்பட வேண்டும்? தாங்கள் எதற்குப் பயப்படுகிறீர்களென்பதே எனக்கொன்றும் புரியவில்லையே, சுல்தான்!”

சுல்தான் நெடுமூச் செறிந்தார். வாஸ்தவந்தானே! கேவலம் ஓர் அடிமை ஸ்திரீ, சுல்தானின் மனைவியென்ற ஹோதாவில் உலக அற்புதத்தையெல்லாம் இந்த ஸல்தனத்தில் செய்து காட்டியிருக்கும் பொழுது – அதிலும் புத்தப் புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட புது மம்லூக்குகளின் உதவியை வைத்துக்கொண்டு அவ்வளவும் நிகழ்த்திக்காட்டியிருக்கும் பொழுது – இந்த சுல்தான் வம்சத்தில் அசல் சுல்தானாக அவதரித்துள்ள முஅல்லம் ஏன் அஞ்ச வேண்டும்? அதிலும், பரம்பரையாக வேரூன்றிக் கிடக்கும் புர்ஜீகளின் உதவி வேண்டிய அளவுக்குக் கிடைக்கும்போது ஏன் தயங்க வேண்டும்? அமீர் பக்ருத்தீன் கூறுவன அனைத்தும் மெய்யே யன்றோ? – சிந்திக்கச் சிந்திக்க, சுல்தானுக்கு மேலும் மேலும் மூச்சு வாங்கியது.

“யா மலிக்குல் முஸ்லிமீன்! நான் சொல்வது தவறா? ஏன் தங்கள் மன வலிமையைத் தாங்களே பலஹீனப் படுத்திக்கொள்ள வேண்டும்? தாங்கள் சத்தியத்தை நிலைநிறுத்தவும் அசத்தியத்தை அழித்தொழிக்கவுமே யன்றோ சுல்தானாக உயர்ந்திருக்கிறீர்கள்? இங்ஙனமிருக்க, தங்கள் ஸல்தனத்தக்கும் தங்கள் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கங்கணம்கட்டி நிற்கிற எதிரிகள்மீது தக்க நடவடிக்கை எடுப்பதை எவராலே தடுக்கவோ, அல்லது மாற்றி அமைக்கவோ முடியும்?”

“பக்ருத்தீன்! என் மூளையைக் குழப்பாதீர்! பஹ்ரீகளும் என் சிற்றன்னையும் எவ்வளவு பலம் பொருந்தியவர்கள் தெரியுமா? இந்த ஸல்தனத்திலுள்ள சகல மக்களின் நன்மதிப்புக்கும் நம்பிக்கைக்கும் அவர்கள் பாத்திரமாயிருக்கிறார்கள் என்பதை நீர் அறியமாட்டீரா?”

“இருக்கட்டுமே! இப்பொழுதொன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லையே? அவர்கள் பொதுமக்களின் மனத்தை இன்னம் மாற்றிவிடா முன்னமேயேதான் நாம் நடவடிக்கை எடுக்கப் போகிறோமே! நாளையே எல்லா பஹ்ரீகளையும் ஷஜருத்துர்ரையும் சேர்த்துக் கைது செய்துவிட்டு, சிறுகச்சிறுகப் பகிரங்க விசாரணை நடத்தி, ஒவ்வொரு பஹ்ரீயாக ராஜத் துரோகக் குற்றத்துக்காகத் தூக்குமேடைக்கு அனுப்பப்பட்டு விட்டால், தாங்கள் கூறுகிற ‘நன்மதிப்பும் நம்பிக்கையும்’ என்ன செய்ய முடியும்?

“எனவேதான், யானும் அடிக்கடி தங்களிடம் கூறிவந்திருக்கிறேன்: சிறு முளையாக இருக்கும் போதே கிள்ளியெறிய வேண்டும்! பரு மரமாகப் போய் விட்டால், கோடரியால் பிளக்கவேண்டி வரும் என்று பலமுறை சொல்லியுள்ளேன். இப்போதும் யோசனை செய்ய என்ன இருக்கிறது? தாங்களே சர்வ சக்தியும் படைத்த சுல்தான்! நாங்களோ, சென்ற பல ஆண்டுகளாக இங்கேயே வேரூன்றிப்போன பேர்வழிகள். எங்கள் சோதரர் அமீர் தாவூத் பின் மூஸா இந்த ஸல்தனத்துக்காகப் புரிந்திருக்கிற தியாகங்கள் சரித்திர பிரசித்தி பெற்றவை. இன்னம் யோசிக்க வேண்டியதோ, பயப்பட வேண்டியதோ, என்ன இருக்கிறது? ஆண்டவன் நம் கக்ஷியிலேயே இருக்கிறான். யா மலிக்! நம்முடைய எண்ணம் தூய்மையானது; நாம் கடைப்பிடிக்கும் கொள்கை நேர்மையானது; நம் மக்களின் நலனுக்காகவே நாம் இவ் வேற்பாடுகளெல்லாம் எடுக்கிறோம். தாங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” என்று தூபம் போட்டார் அந்த அயோக்கிய சிகாமணி.

களிமண்ணைக் குயவன் எப்படியெல்லாம் தன் இஷ்டத்துக்கு வளைத்து வனைகின்றனோ, அதே விதமாக, பக்ருத்தீன் மலிக்குல் முஅல்லத்தின் மூளையை வனைவதில் கெட்டிக்காரராய் இருந்து வந்தார். எனவே, இப்படியெல்லாம் அவர் பேசியதும், சுல்தானின் மனம் மாறிவிட்டது. எப்படியாவது பஹ்ரீகளை ஒழித்துக் கட்டத்தான் வேண்டுமென்றும் கனவில் தோன்றிய தோற்றங்கள் வெறும் மனப் பிரேமையேயன்றி வேறல்லவென்றும் முடிவு கட்டிவிட்டார்.

“அப்படியானால், எல்லா பஹ்ரீகளையுமே கைது செய்ய வேண்டுமென்கிறீரோ?”

“வேறு வழி என்ன இருக்கிறது? தங்கள் தந்தையார் முன்னம் இப்படித்தான் திடீரென்று ஒருநாள் எங்கள் இனத்து அமீர்கள் அனைவரையும் கைதுசெய்தார். அன்றைக்குத்தானே இந்த ஷஜருத்துர்ரும் இங்கே கைதியாகக் கொண்டு வரப்பட்டாள்! இதற்குள்ளா தாங்கள் மறந்துவிட்டீர்கள்?”

“நான் மறக்கவில்லை. ஆனால், அன்றைக்கு இருந்த நிலைமைக்கும் இன்றைக்கு இருக்கிற நிலைமைக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறதே! பஹ்ரீகள் எல்லார்மீதும் குற்றப் பத்திரிகை வாசிக்கலாமென்றாலும் ஷஜருத்துர்ரின்மீது என்ன குற்றத்தைச் சுமத்துவது?”

“யா மலிக்! என்ன குற்றமா? அரசாங்கத் துரோகிகளான பஹ்ரீகளுடன் உறவாடுவதையும் அவர்களை ஊக்கிவிடுவதையும் அவர்களுக்கு உடந்தையாய் இருப்பதையும்விட வேறு பெரிய குற்றம் இவ்வுலகில் என்ன இருக்க முடியும்? நன்று சொன்னீர்கள்! எல்லாம் யாரால் வந்த வினை? நாங்களெல்லாரும் அந்தக் கபட சித்தம் படைத்த அடிமைச் சிறுமிக்கு உடந்தையாய் இருப்பதற்கு மறுப்போமென்ற ஒரே காரணத்தாலல்லவோ எங்களை முற்றும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இத்தனை கபட நாடகங்களையும் நடித்தாள் அந்தப் பெண்மணி? – என்ன யோசிக்கிறீர்கள்?”

“ஏ, அமீரே! எல்லாம் சரிதான்.தீவுக்குள்ளே தங்களைப் பிரமாதமாகப் பலப்படுத்திக்கொண்டிருக்கிற பஹ்ரீகளை எப்படிக் கைது செய்வது?”

“இதுவும் ஒரு யோசனையா? அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். தாங்கள் கட்டளை மட்டுந்தானே இட வேண்டும்? தாங்கள் காலாலிட்ட வேலையை நாங்கள் தலையால் செய்து முடிக்க ஆயத்தமாய் இருக்கும்போது தயக்கம் ஏனோ?”

“ஷஜருத்துர்ரை என்ன செய்வது?”

“ஏன்! இருக்கிற இடத்தை விட்டு அப்பால் இப்பால் அசையக் கூடாதென்று கடுமையான தடையுத்தரவைப் போட்டுவிட வேண்டுவது தானே? அவளறையைச் சுற்றிலும் நான்கு புர்ஜீகளைக் காவல் வைத்துவிட்டால் போகிறது!”

“என்னவோ, எனக்கொன்றும் செவ்வனம் புலப்படவில்லை. எல்லாம் ஒரே குழப்பமாய் இருக்கிறது. எல்லாவற்றையும் ஒழுங்காக நீங்களெல்லீரும் செய்து முடிப்பதாயிருந்தால், நல்லதுதான். ஆனால்…”

“ஆனால்…. என்ன? யானிருக்கப் பயமேன்?”

மலிக்குல் முஅல்லம் இவ்வாறாக மிக நெருக்கடியான கட்டத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார். மெல்லவும் முடியவில்லை; விழுங்கவும் இயலவில்லை. சரியென்று தலையசைப்பதைத் தவிர்த்து, வேறு வழியில்லாது போய்விட்டது.

சுல்தான் தலையை அசைப்பதை மட்டுமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பக்ருத்தீன் அக்கணமே அங்கிருந்து அகன்றார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>

Related Articles

Leave a Comment