اَلْحَمْدُ لِلهِ الَّذِي هَدٰينَا السَّبِيْلَ الرَّشَادَ وَ جَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَ الْاَدْيَانِ فَمَنْ قَامَ وَجْهَهُ لِلدِّيْنِ حَنِيْفًا فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ وَسَلَّم اَمّٓا بَعْدْ
அன்பிற் சிறந்த, ஈமான் கொண்டுள்ள, அரிய சோதரர்காள்! அனைத்துலகையும் படைத்தாளும் ஆண்டவனை ஆதியிற் புகழ்ந்து, அவனுடைய இறுதித் தூதர் நபிகள் நாயகத்தின்மீது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் – அல்லாஹ்வின் ஆசியும் சாந்தியும் அன்னவர்கள் மீது அமையக்கடவன வென்று) ஆசிமொழி கூறியதன் பின்னர் அறிந்துகொள்வீர்களாக:—
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் செய்கின்றேன். முதன் முதலாக ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.
وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ ۗ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِِ
“இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவர்களும் மனிதர்களுள் இருக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது பேரன்புடையோனாக இருக்கின்றான்” என்று அவ்விறைவன் தன் திருக்குர்ஆனிலே சூரா பகராவின் 207ஆம் ஆயத்தில் கூறியுள்ளான்.
சோதரர்காள்! இவ்வரும் புண்ணியாத்மாக்கள் யாரெனின், அவர்கள்தாம், அல்லாஹ்வுடைய சன்மார்க்கத்திற்காகவும் அவனுடைய கட்டளைகளை பின்பற்றுவதற்காகவும் அவன் பாதையில் தங்கள் சிரமத்தையும் சுகத்தையும் கருதாது, தம்முயிர், பொருள், ஆவி யாவற்றையும் தத்தம் செய்துவிடக்கூடிய தியாகிகளாய் இருக்கிறார்கள். தீனுல் இஸ்லாத்துக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த நம்முடைய நபிகள் நாயகமும் (ஸல்) அபூபக்ரு, உமர், உதுமான், அலீ (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய நால்வர்களும் இவர்களைப் போலவே மதத்துக்காகச் சொல்லொணாக் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஹஜ்ரத் பிலால், ஸஅத், தல்ஹா, அபூஉபைதா, ஸுஹைப், இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹும்) முதலிய உத்தமர்களும் உயிர்த்தியாகிகளும் ஆண்டவனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நல்ல மனிதர்களேயாவார்கள்.
எம் முஸ்லிம் சகோதரர்காள்! இந் நல்ல புண்ணியாத்மாக்களின் அருஞ்செயல்களை நமூனாவாக வைத்துக்கொண்டு, அவற்றைப் போன்ற நற்கருமங்கள் நாமும் நம் தீனுக்காகவும் அல்லாஹ்வின் கட்டளைக்காகவும் என்னென்ன செய்திருக்கின்றோம் என்பதை நாமெல்லோரும் ஒருசிறிது சிந்தித்துப் பார்த்தல் வேண்டாமா? நம்முடைய நபிகள் நாதர் முஹம்மது (ஸல்) இஸ்லாத்தின் வெற்றிக்காகவென்று குஃப்பார் குறைஷிகளிடத்தில் எம்மட்டோ இன்னல்களுக்கெல்லாம் ஆளாகியிருக்கின்றார்கள்! தாக்கப்பட்டார்கள்; தகைக்கப்பட்டு உதிரம் சிந்தினார்கள்; ஆகாரவசதிகள் தடுக்கப்பட்டுப் பசியால் வாடினார்கள்; வீட்டைவிட்டு விரட்டப்பட்டார்கள்; இறுதியில் தம் நாட்டைத் துறந்தார்கள்; யுத்தம் புரிந்தார்கள்; உதிரம் சொரிந்தார்கள்; கல்லடிபட்டுப் பல்லுடைபட்டார்கள். இன்னம் எத்தனையோ எழுத முடியாத இம்சைகளுக்கெல்லாம் உள்ளாயினார்கள். இதைப்போன்ற ஒருசிறு துன்பத்தையேனும் நாம் இதுபோது நம் மார்க்கத்திற்காக அனுபவித்தோமா? இல்லையே!
நாயகத்தின் (ஸல்) தோழர்களான சஹாபாக்களும் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய ரஸூலுக்காகவும் தீனுக்காகவும் தங்கள் உறவினர்களையும் மனைவி மக்களையும் விட்டு, இஸ்லாத்தில் சேர்ந்து, நாயகத்துடன் பொதுநன்மைக்காக உழைத்தார்கள். யுத்தசன்னத்தர்களாக நின்று சலுகை சிறிதும் பாராட்டாது அல்லாஹ்வுக்காகத் தங்கள் சுற்றத்தார்களையும் வீழ்த்தி இருக்கின்றார்கள். தங்கள் வீட்டுக் குடித்தனச் சுகத்தையும் கருதாது எல்லாச் சொத்து சுதந்தரங்களையும் ஒரு சிறிய தொகையைத் தவிர்த்து, தீனுக்காகவும் ஏழைகளின் பாதுகாப்புக்காகவும் அர்ப்பணம் செய்தார்கள். கொடிய வெயிலையும் பாராட்டாது அவ்வரபு நாட்டிலே அலைந்து திரிந்து உழைத்தார்கள். சொல்லொணா அல்லல்களுக்கெல்லாம் ஆளாக்கப்பட்டார்கள்.
இஸ்லாத்தில் அளவிறந்த பக்தி விசுவாசம் வைத்திருந்த ஹஜ்ரத் பிலால் (ரலி) இஸ்லாத்தின் நன்மைக்காக எம்மட்டோ கொடுமைகளையெல்லாம் சகித்துச் சாந்தமுற்றார். அவர் கொதிக்கின்ற மணலில் மல்லாத்தி வீழ்த்தப்பட்டு, மார்பின்மீது கொதிக்கின்ற பாறையை ஏற்றப்பெற்று, இஸ்லாத்தின் விரோதிகளால் உதைக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, தகைக்கப்பட்டு மட்டிலடங்காத அத்துணைக் கொடுஞ் சித்திரவதைகளுக்கெல்லாம் ஆளாக்கப்பட்டார். எதிரிகள் எம்மட்டுந் துன்புறுத்தி வற்புறுத்தியும், அவர் தமது ஈமானை ஒரு சிறிதும் இழக்கவேயில்லை. கொடுமைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு, “அஹதுன்! அஹதுன்!”—நாயன் ஒருவனே! நாயன் ஒருவனே! என்று ஏக இறைவனைத் தியானித்தார்.
எனவே, எம்மரும் முஸ்லிம்காள்! நமது தீனுக்காகவும் அல்லாஹ், ரஸூலுக்காகவும் நாம் ஒரு சிறிதளவேனும் இத்தகைய துன்பங்கள் பட்டோமா? இம்சிக்கப்பட்டோமா? இன்னல்கள் இழைக்கப் பெற்றோமா? ஊழியம் புரிந்தோமா? உதவியளித்தோமா? இல்லையே! இஸ்லாத்தின் தாத்பரியங்களையேனும் உணர்ந்துகொள்ளப் பிரயத்தனப்படுகின்றோமா? அதுவுமில்லையே! பிறகு என்னதான் செய்கின்றோம் மறுமைக்காக?
பண்டை முஸ்லிம் தியாகிகளுள் ஒருவரான தோழர் ஹஜ்ரத் கப்பாப் (ரலி) இஸ்லாத்தைத் தழுவியபோது, தம் எசமானியால் அடித்துத் துன்புறுத்தப்பட்டார். பசியாலும் தாகத்தாலும் வாடி வருந்தினார். அவர் தமது தலையில் பழுக்கக் காய்ச்சிய இருப்புக் கம்பிகளால் சூடுபோடப்பட்டார். மற்றும் பலவாறு இம்சிக்கப்பட்டார். அப்போதும் அவர், “ஏ என் எசமானியே! நீ என்னை என்ன சித்திரவதை புரிந்தபோதிலும், என் மூச்சுள்ள மட்டும் இஸ்லாத்தில் இருந்துதான் தீருவேன்” என்றார்.
ஏ நண்பர்காள்! நீங்கள் உங்கள் இஸ்லாத்துக்காக இப்படிப்பட்ட இருப்புக்கோலால் சூடிடப்பட்டீர்களா? அல்லது சிறையிலிடப்பட்டுப் பசியால் வாடினீர்களா? இல்லையே! ஆனால், அதற்கு நேர்மாறாய்ச் சொற்பத் திரவியத்துக்காகத் தங்கள் பரிசுத்த இஸ்லாமென்னும் பேரொளியை விற்றுவிடவுமல்லவோ தையாராய் இருக்கின்றீர்கள்? இதைக் கவனிக்க வேண்டாமா?
நேயர்காள்! நம்மைப் படைத்து அறிவை அளித்துள்ள அல்லாஹ்வின் அருளைப் பெறுவான் வேண்டி, அதற்குரிய ஒழுக்கத்தையும், தியாகத்தையும், நல்ல அமல்களையும் நாம் புரிதல் வேண்டாமா? நபிகள் நாயகத்தின்பால் (ஸல்) அதிக விசுவாசம் வைத்து, அவர்கள் தம்முயிரினும் அதிகமாய்ப் பாலித்துவந்த இஸ்லாத்தின் உன்னதத்தை நாம் கண்ணியப்படுத்த வேண்டாமா? இஸ்லாத்தை இதன் விரோதிகளின் தீமைகளினின்று தற்காத்து, வாழ்வுறச் செய்தல் வேண்டாமா? நபிகள் நாயகம் (ஸல்) நமக்கருளிய நல்ல முறைகளை, ஸுன்னத்துகளை நாம் கடைப்பிடித்தல் வேண்டாமா?
இவ்வுலகில் பரிசுத்தம் பெற்று மறுவுலகில் பேரின்பம் பெறத்தக்க நல்ல செயல்களையும் தொழுகை, நோன்பு, தான தர்மம், மக்கா யாத்திரை முதலிய கடமைகளையும் நிறைவேற்றுவது வேண்டாமா? அவசியம் அவை வேண்டியவைதாமே!
ஆதலின், இஸ்லாத்தின் சோதரர்காள்! இன்றுகாறும் நாம் கிடந்து உழன்ற அந்தகார ஆழியை விட்டு வெளிக்கிளம்பி, ஞான வெளிக்கு வந்து, புத்துணர்வும் சத்தொழுக்கமும் பெறக்கடவோமாக. அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்காகவும் நாயகத்தின் சிபாரிசு என்னும் ஷஃபாஅத்தை இறுதியில் அடைவதற்காகவும் நாம் இஸ்லாத்துக்கு அதிகம் உழைப்போமாக! நமது அகத்தையும் புறத்தையும் பரிசுத்தப்படுத்திப் பரிபூரணச் சுக சாந்தியை அடைவோமாக!
இந்த முஹர்ரம் மாதத்தில் இஸ்லாத்துக்காகவும் ஆண்டவனது கருணைக்காகவும் அருளுக்காகவும் மதத்தின் மாண்புக்காகவும் யுத்தகளத்தில் தங்கள் இரத்தத்தைச் சிந்தி ஆவியையும் அர்ப்பணம் செய்து, ஆண்டவன் பாதையில் ஷஹீதாய்—(உயிர்த் தியாகியாய்)ப் போன இமாம் ஹஸன்(றலி) ஹுஸைன்(றலி) போல் நாமும் அம்மட்டும் ஆவியைத் தியாகம் புரிந்து அத்துணைப் பேரூழியம் புரியாமற் போயினும், அவர்களைப்போல் நமது ஒழுக்கத்தையேனும் பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆண்டவன், அவனுடைய ரஸூல் (ஸல்) ஆகியவர்களின் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு வாழ்க்கைப் பரிசுத்தம் பெறுவோமாக.
ஏ எங்கள் ரக்ஷகனே! எங்களெல்லாரையும் உனது நல்லடியார்களாகவும் உன் வேதக்கட்டளைப்படி ஒழுகுவோர்களாகவும் உன்னுடைய திருநபியின் அடிச்சுவட்டையே பின்பற்றுவோர்களாகவும் தீனுக்கு உழைப்போர்களாகவும் உனது அருளக்குரியவர்களாகவும் செய்து, இம்மையிலும் மறுமையிலும் பேரருளை அளித்தருள்வாயாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!