லூயீ அவ்வாறு பேசி முடிந்ததும், சுல்தான் சிறிது சாந்தமாகப் பேசினார்:- “ஏ, ரிதா பிரான்ஸ்! நாமொன்றும் தேவதூஷணம் செய்யவில்லை. ஆனால், நீரும் நும்முடைய இனத்தவருமே அந்த பேரோக்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிக் கொண்டும், அவர்கள் பெற்றுவந்த தேவதண்டனைக்கு ஒப்பான தண்டனைகளை மேலும் மேலும்
அடைந்துகொண்டும் வருகிறீர்கள். அத்தகைய கொடிய தண்டனைகளைப் பெற்றுங்கூட உங்களுக்கெல்லாம் கண் திறக்கவில்லையே என்றும், பாபமான வழிகளினின்று நேரான மார்க்கத்துக்குத் திரும்பாமல் இன்னம் அதிகமான பாப மூட்டைகளைச் சுமக்கிறீர்களே என்றுமே நாம் பெரிதும் வருந்துகிறோம்.
“தேவலோக ராஜ்ஜியத்தையோ, அல்லது உங்களுடைய தேவனையும் தேவ குமாரனையுமோ, நாம் பரிசிக்கவில்லை இஃது எங்கள் வேதக் கட்டளை. ஆனால், அந்தப் பரலோக ராஜ்ஜியத்தின் பெயராலும், தேவனின் பரிசுத்த நாமத்தாலும் நீங்களெல்லீரும் புரிய முற்படுகின்ற கொள்ளைத் தொழிலையும் கொலைத் தொழிலையும் இருக்க இருக்கப் பெருக்கிக்கொண்டே போகின்றீர்களே, அவற்றைப் பார்த்தே நாம் நகைக்கின்றோம். நீங்கள் நேரான வழியில் சீராக மனத்தைத் திருப்பிக்கொண்டுவிட வேண்டும் என்னும் எண்ணத்துடனே அல்லாஹுத் தஆலா சென்ற எட்டுச் சிலுவை யுத்தங்களிலும் இணையற்ற தோல்வியையும் அபகீர்த்தியையும் உங்களுக்கு அளித்துவந்தும்,அவற்றிலிருந்து நல்ல பாடங்கற்காமல், மேலும் மேலும் தேவனைச் சோதிக்க ஆரம்பிக்கின்றீர்களே, அத்தகைய ஷைத்தானிய செய்கையைக் கண்டுதான் நாம் மிகவும் வருந்துகின்றோம்.
“இறைவனின் தேர்ந்தேடுக்கப்பட்ட செல்வ குழந்தைகளென்று தங்களை அழைத்துக்கொள்ளும் பனீ இஸ்ராயீல்கள் எப்படித் தேவனின் (எஹோவாவின்) பெயராலும் தங்களுடைய உயர்த்தப்பட்ட அந்தஸ்த்தின் பெயராலும் இல்லாத அநியாயங்களையும் பொல்லாத அட்டூழியங்களையும் புரிந்து வருகிறார்களோ, அஃதேபோல் நீங்களெல்லீரும் தேவனின் பெயராலும் சிலுவையின் பெயராலும் போப்பின் பெயராலும் தேவ நிந்தனை புரிகிறீர்களே என்றுதான் பெருங் கவலைப்படுகிறோம். நீங்களெல்லீரும் சத்தியத்துக்காக நிஜமாகவே போரிடுவதாய் இருப்பின், இப்படி அடுத்தடுத்துத் தோல்விக்குமேல் தோல்வியைப் பெற்றுக் கொள்வீர்களா? அல்லது சத்தியமே உருவான ஆண்டவன்தான் அசத்தியத்துக்கு உதவி புரிவானா?
“ஏ, லூயீ முனிவரே! பதஷ்டமடையாதீர்; நன்றாக யோசித்துப் பாரும்! சமாதான வாழ்க்கை நடாத்தி வருகிற எங்கள்மீது உங்களுக்கெல்லாம் ஏன் வீண் பொறாமை பிறக்க வேண்டும்? நாங்கள் எப்போதாவது எங்கள் மதத்தின் பெயரால், அல்லது எங்கள் நபியின் பெயரால் அநாகரிகமாகவும் மிருகத்தனமாகவும் பேராசையுடன் இரத்தவெறி பிடித்து உங்கள் நாடுகளின் மீது வாளையுருவிப் படையெடுத்து வந்திருக்கிறோமோ? அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் மதத்தின் பெயரால் வாளேந்திக்கொண்டு, கப்பலேறிக் கடல் கடந்து வந்து, உங்கள் மிருகவெறிகளை வெளிக் காட்டுகின்றீர்கள்? ஒவ்வொரு யுத்தத்திலும் நீங்கள் சொல்லொணாத் தண்டனைகளை அடைந்தும், மீண்டும் மீண்டும் ஏன் வீணே எங்கள்மீது பாய்கின்றீர்கள்? லூயீ! நாம் சாந்தமாகவே கேட்கிறோம்: ஏன் இந்தக் கோல மெல்லாம்?”
“ஏ முஹம்மதிய சுல்தான்! ஷைத்தான் வேதம் ஓதுவதைப் போலல்லவா இருக்கிறது, நீர் பேசுகிற பேச்சு! சாந்திமார்க்கம், சாந்திமார்க்கம் என்று உங்கள் மதத்தை நீங்கள் அழைத்துக் கொண்டு, அதே மதத்தின் பெயரால் வாள்வீச்சைக் கொண்டே அக்கிரமம் புரிவதை நாங்கள் பார்க்கவில்லையா? வாளாயுதத்தின் உதவியைக் கொண்டே யன்றோ நீங்கள் உங்கள் மதத்தைப் பரத்தி வருகிறீர்கள்? நாங்கள் என்ன கேட்கிறோம்? உங்கள் ராஜ்ஜியத்தையா கேட்கிறோம்? இல்லையே! எங்கள் இயேசுநாதர் உயிர் பெற்றெழுந்த கல்லறையும் அவர் அறையுண்ட சிலுவையும் இருக்கிற புண்ணிய பூமியைத்தானே கேட்கின்றோம்? வீம்புக்காகவாவது நீங்கள் ஜெரூஸலத்தை விடாப்பிடியாய்ப் பிடித்து வைத்துக்கொண்டு, தேவன் சத்தியத்துக்காக மட்டுமே உதவி புரிவான் என்று கூறுவது தேவநிந்தனை அல்லவோ?”
“ஏ, ரிதா பிரான்ஸ்! எங்கள் தூய்மையான மதத்தின் பெயரால் நாங்கள் வாள்வீச்சைக் கொண்டே மதப்பிரசாரம் புரிந்துவருகிறோம் என்று நீர் கூறுவதைப் பார்த்து நாம் மனம் வருந்தினாலும், சிரிக்காமலிருக்க முடியவில்லை. ஏனென்றால், நாங்கள் எங்கள் கலீபாவின் பெயராலோ, அல்லது இஸ்லாத்தின் பெயராலோ, படையெடுத்துக் கொண்டு மத்தியதரைக் கடலைக் கடந்து ரோமாபுரி மீதோ, அல்லது உங்கள் பிரான்ஸ் தேசத்தின்மீதோ, பாய்ந்து, விழுந்து, கொலை, கொள்ளை, தீயிடுதல், கற்பழித்தல், தேவாலயங்களைத் தகர்த்தல் முதலிய பஞ்சமா பாதகங்களை நிகழ்த்தியதுமில்லை; அல்லது இனி நிகழ்த்தப் போவதுமில்லை. தற்காப்புச் சம்மந்தப்பட்டவரை இதுகாறும் நாங்கள் தர்ம யுத்த வரம்பை மீறாமலேதான் இருந்து வருகிறோம்; அதனால் இறைவனின் இன்னருளையும் பெற்று மகிழ்ந்து வருகிறோம்.
|
“நீங்கள் ஜெரூஸலத்தைக் கேட்பதாகவும் அதை நாங்கள் வீம்புக்காகவாவது கொடுக்க மறுப்பதாகவும் நீர் கூறுகிறீர். பிற்காலத்தில் வரப்போகிற சந்ததியார்கள், நீங்களெல்லீரும் ஜெரூஸலத்தைக் கைப்பற்றப் போவதாகச் சொல்லிக்கொண்டு நிரபராதிகளான தமீதாவாசிகள் மீதும் ஏனை நகர்வாசிகள் மீதும் புரிந்த மாகொடிய மிருகாண்டித்தனமான கோரச் செயல்களைப் படித்துப் படித்து வயிறெரியப் போகிறார்கள். ஒரு கன்னத்தில் அறை கொடுத்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் காட்ட வேண்டுமென்று உபதேசித்தவருக்காப் போர் தொடுத்ததாகப் பறை சாற்றுகிற நீங்கள் உங்களையே உண்மைக் கிறிஸ்தவர்களென்று அழைத்துக்கொள்வதும், ஆனால் அதே சமயத்தில் அறையே கொடுக்காதவரின் இரு கன்னங்களிலும் அறைவதும் மிக அழகாய்த்தான் இருக்கின்றன! ‘எதிரிகளையும் நேசிக்க வேண்டும்,’ என்று உபதேசித்தவருக்காகச் சிலுவைக் கொடி பிடித்து வந்ததாகக் கூறும் நீங்கள் உங்கள் எதிரியே அல்லாத ஐயூபிகளை அழிக்க முற்படுவது எந்த இலக்கணத்தைச் சேர்ந்ததோ?”
“முன்னம் நான் கூறியபடி, நீங்கள் மீண்டும் ஷைத்தானின் வேலையைத்தான் செய்கின்றீர்கள். என்னெனின், ஜெரூஸலத்தை நீங்கள் ஆரம்பத்திலேயே எங்களிடம் ஒப்படைத்திருந்தால், இந்தக் கேடுகாலமெல்லாம் ஏன் விளைகின்றன? நாங்கள் தமீதாமீதும் காஹிராமீதும் படையெடுத்து வருவதற்கு நீங்களேயல்லவா ஆதிகாரணமாய் விளங்கி வருகிறீர்கள்? இழைக்கிற தவற்றையும் இழைத்துவிட்டு, அதன் காரணமாகப் பின்னர் நிகழ்கிற நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் பொறுப்பாளி என்று கூறுவது விந்தையினும் விந்தையாய் இருக்கிறது! நாளையொரு காலத்தில் மக்கள் இச் சரித்திரத்தைப் படித்து விட்டு, எங்களைப் பார்த்து நகைப்பார்களா? அல்லது உங்களைப் பார்த்து நகைப்பார்களா? தேவன்மீது ஆணையாக! நாங்கள் சத்தியத்துக்காவே சிலுவைக் கொடி பிடித்தோம். இறுதியிலே சத்தியமே வெற்றி பெறப் போகிறது. தாற்காலிகமாக ஏற்படுகிற அற்ப வெற்றிகளைப் பார்த்து நீங்கள் அக மகிழ்கிறீர்கள்! போகப்போக நீங்களெல்லீரும் தேவனின் தண்டனையைப் பெறத்தான் போகிறீர்கள்; ஜெரூஸலமும் எங்கள் வசம் வரத்தான் போகிறது! இதில் ஐயமே இல்லை. கிறிஸ்து மத விரோதிகளான உங்களுக்குத் தேவன் எப்படி இறுதி வெற்றியைக் கொடுப்பார்?”
“ஏ ரிதா பிரான்ஸ்! எதிர் காலத்தில் நீங்களெல்லீரும் மீண்டும் சிலுவை யுத்தம் புரிய போவதும், அப்போது உங்கள் தேவன் எங்கள் கைவயமிருக்கிற ஜெரூஸலத்தைப் பிடுங்கி உங்கள் கையில் கொடுக்கப் போவதும் ஒரு பக்கல் இருக்கட்டும். அதைப்பற்றி நாம் இப்போது கவலைப்படத் தேவையில்லை. இதுபோது நடந்த இந்த எட்டாவது சிலுவை யுத்தத்தில் நீரும் நும்முடைய சகாக்களும் புரிந்திருக்கிற அத்தனை குற்றங்களுக்கும் குரூரச் செயல்களுக்கும் பயங்கரச் சதிகளுக்கும் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் கோரச் செயல்களுக்கும் நீர் என்ன சமாதானம் சொல்லுகிறீர்?”
“சிறுவரே! யுத்தமென்றால், எல்லாந்தாம் நடைபெறும். இதிலென்ன அதிசயமோ, அல்லது அசம்பாவிதமோ இருக்க முடியும்? முன்னம் நான் கூறியதுபோல, சத்தியத்தை நிலை நிறுத்த நான் என் வீரர்களுடன் படையெடுத்து வந்தேன். எனவே, போர் தொடுத்தது குற்றமன்று. போர் மூண்ட பின்னர்ச் சிற்சில சந்தர்ப்பங்களில் சிற்சில குரூரச்செயல்கள் இரு சாராராலுமே நடந்திருக்கலாம். எனவே, குறிப்பிட்ட எந்தப் பாதகச் செயல்களுக்கும் நான் குற்றவாளியாக மாட்டேன். ஆகவே, நான் குற்றமேதும் இழைக்காத நிலைமையிலேயே இத்திருவோலக்கத்தில் பொன்விலங்கு பூட்டப்பெற்றுப் பெரிய குற்றவாளியே போல் நிறுத்தப்பட்டிருக்கிறேன் என்பதுதான் எனது அபிப்ராயம்!”
அரசவையில் இருந்த மிகச் சிலரைத் தவிர்த்துப் பெரும்பான்மையானவர்களுக்கு பிரெஞ்சு மொழி தெரியாதாகையால், பெருங் கூச்சலேதும் இதுவரை கிளம்பவில்லை, ஆனால் இறுதியாக லூயீ மன்னர் தாம் எவ்வகையிலும் குற்றவாளியல்லர் என்றும் வீணே தம்மை விலங்கிட்டு நிறுத்தியிருக்கின்றனர் என்றும் கூறியவுடனே எல்லோரும் விஷயத்தை யூகித்துக்கொண்டு, தத்தமக்குள்ளே பேசிக்கொண்டு, பேராராவாரத்தைக் கிளப்பிவிட்டனர். சுல்தானுக்கோ, சொல்லமுடியாத ஆத்திரம் பிறந்துவிட்டது. சபையினரை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, அதே கோபத்துடனே லூயீயைப் பார்த்தார். மீட்டும் நிச்சப்தம் நிலவியது.
“ஏ லூயீ! நீர் இதுவரை பிதற்றிவந்த எல்லாப் பிதற்றல்களையும் விட உம்மை நீரே நிரபராதி என்றும் ஒரு குற்றமும் இழைக்காத நிர்த்தோஷியென்றும் தீர்ப்புக் கூறிக்கொண்ட மாபெரும் பிதற்றலே சிகரமாக விளங்குகிறது! நல்ல வேளை! இவ்வளவுடன் விட்டீரே! எல்லாப் பாபத்துக்கும் ஐயூபிகளே குற்றவாளிகள் என்றும் அதே மூச்சில் கூறாமற் போனீரே!”என்று மலிக்குல் முஅல்லம் பேசிக்கொண்டே, பெருஞ் சிரிப்புச் சிரித்தார். அச் சிரிப்பு மகா பயங்கரமாய் இருந்தது.
“ஏ ஐயூபி ! ஏன் சிரிக்கிறீர்? நான் மீண்டும் கூறுகிறேன்: நானோ அல்லது எங்களைச் சேர்ந்த எந்தக் கிறிஸ்தவனோ, குற்றவாளியல்லன் என்பதைத் திரும்பவும் கூறுகிறேன். இதை விடுத்து, நீர் எம்மீது குற்றச்சாட்டு ஏதாவது ஏற்படுத்தினால், அஃது ஒருதலைப் பக்கமான தீர்ப்பாகவே போய் முடியுமென்பதையும் வலியுறுத்திச் சொல்லுகிறேன். நான் நிரபராதி; என் இனத்தவர் அனைவரும் குற்றமற்றவர்களே!”
“ஏ, கைதியாரே! ஏதொரு குற்றமுமற்ற பெரியவரே! நீர் வாக்குச் சாதரியமாய்ப் பேசுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர். இதுவம் ஓர் போர்த் தந்திரம் போலும்! நீர் குற்றவாளிதான் என்பதை நாம் கூறவில்லை; அந்த எல்லாம்வல்ல இறைவனே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்த உலகத்தில் எந்தக் குற்றவாளிதான் தன் குற்றத்தைத் தானே ஏற்றுக் கொள்கிறான், நீர் ஏற்றுக்கொள்ள? நீர் ஒரு குற்றம் இரு குற்றம் புரிந்ததில்லை. உம்முடைய தலையிலும், தாடி மீசையிலும் எத்தனை ரோமங்கள் இருக்கின்றனவோ, அத்தனையையும் விடச் சற்று அதிகமான குற்றச்சாட்டுக்களே உம்மீது குவிந்து கிடக்கின்றன. உம்மைச் சரியான வகையில் பழிதீர்த்துக்கொள்ள எம் தந்தை இப்போது ஈங்கில்லாமற்போனது உம்முடைய பேரதிருஷ்டமே! தமீதாவை உமக்குப் பலியாக்கிய கவர்னர் எம் தந்தையால் இரு துண்டாக வெட்டி எறியப்பட்டார். ஆனால், அந்த தமீதாவை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, அங்கிருந்த ஆண்களைக் கொன்று, பெண்களைக் கற்பழித்த உம்முடைய சகாக்களும் நீரும் இப்போது எத்தனை துண்டுகளாக வெட்டப்பட்டுக் கழுகுகளுக்கும் காக்கைகளுக்கும் இரையாக்கப் பட்டிருப்பீர்கள், தெரியுமா? எங்கள் வம்சத்து எல்லா சுல்தான்களையும்விட மிகவும் மூர்ககமான எம் தந்தையின் கொடுங் கோபத்துக்கு உங்களையெல்லாம் ஆளாக்காமல் ஆண்டவனே தடுத்துவிட்டான்.
“இப்போது நாம் நும்மீது கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை ஏற்படுத்துகிறோம்:- 1. அநியாய அக்கிரமப் போர்தொடுத்தீர். 2. காரணமேதுமின்றி தமீதாமீது பாய்ந்தீர். 3. ஓர் எதிர்ப்பைக் கூடக் காட்டாத அத்தனை சாந்த தமீதாவாசிகளையும் கைதியாக்கி, ஆண்களைக் கொலை புரிந்தீர்; பெண்களின் கற்பையழிக்கத் துணைபுரிந்தீர். 4. பள்ளிவாசல்களைப் பாழ்படுத்தினீர். 5. வர்த்தகர்களின் பொருள்களைக் கொள்ளை அடித்தவர்களை ஊக்கிவிட்டீர். 6. மிஸ்ரின் சுல்தானும் அவருடைய ஒரே மைந்தரும் இங்கே இல்லாத நேரம் பார்த்துப் பேடித்தனமாகவும் கபட மார்க்கமாகவும் காஹிராமீது படையெடுத்தீர்.
“இத்தியாதி கொடுமைகளையெல்லாம் புரிந்திருந்தும், இந்தச் சபையிலே நின்றுகொண்டு நெஞ்சம் கொஞ்சமும் அஞ்சாமல், உம்மைப் பரிசுத்தமான நிரபராதியென்று வெகு தைரியமாகக் கூறிக் கொள்கிறீர். நேர்மையே நிலைநிற்க வேண்டுமென்றும் எவர்க்கும் நீதியே வழங்க வேண்டுமென்றும் திடமான கொள்கையும் உறுதியான வைராக்கியமும் பூண்ட ஐயூபி வம்சத்தில் தோன்றியுள்ள நாம் உம்மைக் குற்றவாளி என்று, அதிலும் ஈடிணையற்ற மாபெருங் குற்றவாளி என்றே உம்மை நிர்ணயிக்கிறோம்.”
கோபத்தைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு, இந்தக் குற்றச்சாட்டை மலிக்குல் முஅல்லம் நிதானமாகக் கூறியது கேட்டு, எல்லாரும் சரிதானென்று தலை அசைத்தார்கள். ஆனால், லூயீயும் அவருடைய உடந்தைக் குற்றவாளிகளும் மெளனமாக நின்றார்கள். சுல்தான் குற்றப் பத்திரிகை வாசித்து முடித்த பின்னர் என்ன செய்ய முடியும்?
“இக் குற்றச்சாட்டுகளுக்கு என்ன தண்டனை?”என்று லூயீ துடுக்காகக் கேட்டார்.
வாலிப வயதை இப்போதுதான் எட்டிக் கொண்டிருக்கிற சிறிய சுல்தானுக்கு இந்த விபரீதக் கேள்வி அடக்கொணா ஆத்திரத்தை மூட்டிவிட்டது.
“ஏ ரிதா பரான்ஸ்! இங்கே நீர் விளையாடுகிறீரோ? உமக்கேற்ற தண்டனையை இப்போதே அவசரமாக வழங்கி, அநீதியிழைக்க நாம் விரும்பவில்லை. உமக்கு என்ன தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதை நன்றாய், எமது திருமறையில் கூறியுள்ளாங்கு, அலசி ஆராய்ந்து, இரண்டொரு நாட்கள் பொறுத்தே வெளியிடுவோம். எங்கள் சிறைக்கூடம் இன்னமும் உங்களையெல்லாம் விட்டுப்பிரிய ஆர்வங் கொள்ளவில்லை. அடே, யாரங்கே? இந்தச் சிலுவை யுத்த வீரப்புலிகளைப் பத்திரமாகக் கூண்டுள்ளே அடைத்துவை! தண்டனை வேண்டுமாம், தண்டனை!” என்று சிறைக்காவலனைப் பார்த்துக் கட்டளையிட்டுவிட்டு, கோபப் பரவசராய் மலிக்குல் முஅல்லம் சபையைவிட்டு வெளியேறினார்.
சபையோர் முகத்தில் வியப்பும் கோபமும் கலந்து பிரதிபலித்தன.
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்