மூர்ச்சித்து வீழ்ந்த மைமூனா சிந்தை தெளிந்ததும், எழுந்து நின்றாள். எதிரிலே ஷஜருத்துர் வெற்றிக்கு அறிகுறியான புன்முறுவலுடனே வீற்றிருப்பதைக் கண்ட மைமூனாவுக்கு வயிற்றெரிச்சல் கரை கடந்து விட்டது. புண்பட்ட நெஞ்சத்துடனும் குமுறுகின்ற கோபத்துடனும் கொடிய நீலிக்குரிய

கடுமையான ஆக்ரோஷப் பார்வையுடனும் ஷஜருத்துர்ரைச் சுட்டெரித்து விடுவதுபோலே மைமூனா முறைத்து வெறிக்கப் பார்த்தாள். ஆத்திரமென்றால் சாதாரணமான ஆத்திரமல்ல. வெறுப்பாலும் வேதனையாலும் மாபெருந் துயராலும் துக்கத்தாலும் கனன்றெழுந்த கோபம். அவள் ஷஜருத்துர்ரை உச்சிமுதல் உள்ளங்கால்வரை ஒருமுறை ஏறஇறங்கப் பார்த்தாள். அவளுடைய பார்வைக்குமட்டும் எரிக்கிற சக்தி இருந்திருக்குமாயின், ஷஜருத்துர் நீறாய் நீற்றுப் போயிருப்பார்!

ஷஜருத்துர் மனமிறுகிய பாறாங்கல்லாய் மாறிப் போயிருந்தாரென்பது உண்மையே. எனினும், அவருக்குங்கூட அம் மைமூனாவின் கடுஞ்சினக் கொடும்பார்வை பெரிய திடுக்கத்தையே கொடுத்துவிட்டது. என்னெனின், மனோவசிய சாஸ்திரப்படி, ஒரு மனிதன் இனியொருவனை ஒருமைப்பட்ட உள்ளத்துறுதியுடனே முறைத்துப் பார்க்கும்போது, தானாகவே ஒருவிதமான பயங்கர உணர்ச்சி அப்பின்னவனுக்கு ஏற்படுவது சகஜம். அதைப்போல், ஷஜருத்துர்ரை மைமூனா வெறிக்கப் பார்த்த கடுங்கோபப் பார்வை அந்த சுல்தானாவின் உள்ளத்திலிருந்த இருதயத்தை ஒரே துளைப்பாய்த் துளைத்துவிட்டது. எனினும், அவர் வெளிவேஷச் சிரிப்பொன்றைச் சிரித்து மறைத்துக்கொண்டார் தமது உள்ளக்கிடக்கையை. மைமூனாவோ, தன்னுடைய பார்வையின் குறியை அப்பக்கம் இப்பக்கம் அசைக்காமல், ஷஜருத்துர்ரையே கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே பைய இரண்டடி வைத்து முன்னேறினாள். குலைந்து கிடந்த தன் கூந்தலைக் கோதி விட்டுக்கொண்டும், கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீரை முன்றானையால் துடைத்துக்கொண்டும், உதடுகள் துடிக்கத் தன்னையறியாமலே பின்காணுமாறு சபிக்கத் துவக்கினாள்:-

“ஏ, ராணி வேஷம் பூண்டுகொண்டிருக்கிற கொடிய பிசாசே! நீ சிரி, சிரி; நன்றாய்ச் சிரி! உன் நாச காலம் வெகு தூரத்திலில்லை. என் கணவனிடமிருந்து என்னை நீ பிரித்துவிட்ட பெருந்துரோகக் கொடுஞ் செயலுக்கு நீ பெறப் போகிற இறைத் தண்டனை உன்னைக் கவ்வாமல் விட்டுவிடுமென்று நீ மனப்பால் குடிக்காதே! அற்ப அனாதையாயிருந்து, அகிலம் புகழும் அரசியாகப் பரிணமித்த நீ கடைசியில் அற்பத்தினும் அற்பமாக இழிந்துபோய், அழுவாரின்றியும் உன்னைத் தீண்டுவாரின்றியும், குட்டிச்சுவராய்க் குறுகவேண்டிய காலம் இதோ சமீபித்துவிட்டது! நீ சிரிக்கிறாய்; என் அடிவயிறு பற்றியெறிகிறதடீ! நீ நாசமாய்ப் போகக் கடவாய்! உன் வயற்றிலே ஒரு சந்ததியையும் ஆண்டவன் உற்பத்தி செய்யாதிருக்கக் கடவன்! நான் என் கணவனை உயிருடனிழந்து கண்கலங்கிப் பரிதபித்து நிற்பதற்குப் பரிகாரமாக நீயும் உன் கணவனை அடியுடன் இழந்து இரண்டா முறையாகவும் கைம்பெண்ணாகக் கடவாய்! நான் என் சுகத்தையிழந்து துக்கமே கதியாக நின்று தடுமாறுவதேபோல், நீயும் நின் சுகபோக சம்பத்தையெல்லாம் ஒரே நாளில் பறிகொடுத்துவிட்டு, நடுத்தெருவில் தேரோடு நின்று தெருவோடலைந்து நாசமாய்ப் போகக் கடவாய்!

“நான் இன்று என் மனமுடைந்து, வயிறுளைந்து, மெய்சோர்ந்து, உணர்விழந்து பேரவதியுறுவதைப் போல் நீயும் இன்னம் நூறுமடங்கு பேரவதியுறக்கடவாய்! இன்று நான் உன்னுடைய சூதுக்கும் வஞ்சனைக்கும் பலியாகிப் பாழடைந்து நிற்பதைப்போல், நாளையொரு காலத்தில் என்னுடைய வாதுக்கும் வஞ்சத்துக்கும் பலியாகக் கடவாய்! என்னை நடுத்தெருவில் நிற்க வைத்து நாலுபேர் சிரிக்கும்படி செய்துவிட்ட நின்னை, நான் சந்தியிலே நிறுத்திவைத்து, என் விடாப்பழியைத் தீர்த்துக் கொள்வேனாக! என்னைக் காதல் மிக்கு நயந்து நின்ற கொழுநரிடத்திருந்து கதறக்கதறப் பிரித்து விட்ட உன்னை அவ்வாண்டவனின் கோபம் இச் சீர்மிகுந்த சிம்மாசனத்தினின்று பிய்த்துப் பிடுங்கியெறிந்து உருட்டித் தள்ளி விடுமாக! என்னையும் என் மைந்தனையும் எக்காரணமுமின்றித் திரஸ்கரித்துத் தள்ளிவிட்ட உன்னை நாளையொருகால் நானும் என் மைந்தனுமே உருட்டி தள்ளுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா போதிய சக்தியை எங்களுக்குத் தந்தருள்வானாக!

“ஏ, காதகி, பாதகி, பாவி, நீலி! சிரி, சிரி; நன்றாய்ச் சரி! என் குமுறுகிற உள்ளத்தினின்று எழுகின்ற இவ் ஒவ்வொரு வார்த்தையும் உருப்பெற்றெழுந்து உன்னைப் பாதலப் படுகுழியிலே புதைக்கின்றவனா, இல்லையா என்பதை நீயே கண்டுகொள்வாய்! ஏ, நஞ்சு தோய்ந்த நல்ல பாம்பின் விஷமக் குட்டியே! உன் விஷமே உன்னைச் சுட்டெரிக்கட்டும்! உன் பாபமே உன்னை வாட்டி வதைத்துக் கொன்று தீர்க்கட்டும். நாற்றம் பிடித்த உன் ஊத்தைச் சரீரத்தை நறுமணமூட்டி வைத்துக்கொண்டிருக்கிற நரகப் பிசாசே! உன் சுகந்த பரிமள சுவாசனைத் திரவியங்கள் உன் உடலைப் புழுக்கச் செய்யட்டும்! அன்னப் பறவையின் மென்மையான இறகில் மெத்து மெத்தென்று குந்திக் குந்திக் ‘குஷால்’ அடிக்கிற உன் நாற்றச் சரீரம் நாளைத் தினம் சாக்கடைச் சகதியில் ஊறி உப்பட்டும்! சிங்காசனமென்னும் சிறந்த பீடத்தில் ஆண்டவனை மறந்து வீற்றிருக்கும் நீ கொடிய சிறைக்கோட்டத்தின் கரடுமுரடான கற்களிலே கிடத்தாட்டப் படுவாயாக!

“அறுசுவை உணவும் நால்வகையுண்டியும் தின்று தின்று ருசிபார்த்த உன் நாவிலே நாற்றம் மிக்க நஞ்சுத் தண்ணீர் ஊற்றப்படட்டும்! நாகரிகமிக்க நற்றுணிகளிலே மூடிக்கிடக்கும் உன் மானங்கெட்ட மானிட உடல் முழு நிர்வாணமாய் நிறுத்தாட்டப்பட்டுக் கொடிய கசையடியைப் பெற்றுக்கொள்ளுமாக! ஏழையின் உள்ளத்தை இரங்கச் செய்த உன் கொடிய நெஞ்சு குழையுமட்டும் உன் இன்னுயிரென்பது நன்றாய்ச் சித்திரவதை புரியப்படுவதாக! ஏ, என் ஈரக்குலையில் ஈட்டியைச் சொருகிய ஈனச் சண்டாளியே ! உன் உயிரைக் கவரும் வானவர் என் கண்குளிர உன் ஆசை உயிரை அலற அலறக் கவர்ந்து செல்வாராக! உன் கையில் நான் பெற்ற கொடிய தண்டனைக்கு முற்றிலும் ஈடான அதற்குறிய பழிக்குப்பழியை என்னிடமிருந்தே நீ பெற்றுக்கொள்வாயாக!

“உன் மீது தற்போது நான் கொண்டுள்ள இவ்வளவு ஆத்திரத்தையும் நான் தினம் தினம் சிறுகச் சிறுகச் செம்மையாய் வளர்த்துக்கொண்டே வந்து, என் குடல் குளிரவும் உளம் குளிரவும் உடல் குளிரவும் உன் உடம்பின் ஒவ்வோர் உறுப்பிலுமுள்ள உயிரைக் கொஞ்சங் கொஞ்சமாகவும் ருசிக்க ருசிக்கவும் என் பழிக்குப் பழியைத் தீர்க்கவும் நிதானமாகவும் இனிமையாகவும் உறுஞ்சிச் சப்பி சுவைத்துக் குடித்து உள்ளம் மகிழ்வேனாக! உயிரற்ற உன் பிணம் காண்பாரற்றும் கேட்பாரற்றும் அழுவாரற்றும் எடுப்பாரற்றும் கழவுவாரற்றும் கபனிடுவாரற்றும் புதைப்பாரற்றும் சாக்கடைக் கும்பியில் கிடந்து அழுகி, நாய்க்கும் நரிக்கும் கழுகுக்கும் கோட்டானுக்கும் இரையாகித் தொலைந்து நாசமாய்ப் போகக் கடவதாக! உன்னையும் உன் வனப்பையும் உன் ஆட்சியையும் உலகம் உள்ளளவும் தர்மம் உள்ளளவும் நேர்மை உள்ளளவும் சகல மக்களும் கேட்டுக்கேட்டு வயிறெரிந்து சாபக் குவியலை உனதாவிக்கு வழங்குவாராக!”

ஷஜருத்துர் இப்படிப்பட்ட பேரிடி போன்ற பெருஞ் சாபத்தைதைக் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. எனவே மைமூனா மூச்சு விடாமல் இப்பெரிய சாபக் குவியலை முற்றும் பொழிந்து முடித்ததும், கடுஞ்சினத்துடன் அவர் ஒன்றும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டார். சாக்ஷாத் சுல்தானாவை சாதாரண மைமூனா எங்கே பின்தொடர்ந்து செல்ல முடியும்? அல்லாமலும், உள்ளே சென்ற அரசியார் அம் மனமுடைந்த பெண்மணியின் உயிருக்கே உலை வைப்பதற்கான தாக்கீதைக் கொலையாளியின் மூலம் அனுப்பிவைத்து விட்டாலோ?

மைமூனாவுக்கு இவ்வெண்ணம் உதித்தவுடனே ஒருகண நேரமும் அங்கே தாமதித்து நிற்கவில்லை. வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டே நின்ற நூருத்தீன் அலீயைப் பரபரவென்று இழுத்துக்கொண்டு, அத் தலாக்குப் பெற்ற பெண்மணி விரைவாக அவ்வரண்மனையை விட்டு வெளியேறி, கொதிக்கிற வெயிலிலே கால்நடையாய் வழி நடந்தாள்.

அவளுடைய உள்ளம் உஷ்ண மிகுதியால் துடித்த துடிப்பைவிட, ஆத்திர மிகுதியால் அவளுடைய அவயவங்கள் அதிகம் உதறின. கால்நடந்த வேகத்தைவிட அவள் மனம் காற்றாய்ப் பறந்துகொண்டிருந்தது. அவள் மூளை குழம்பிய குழப்பத்தால் எழுந்த குமுறலைவிட அவளது நெஞ்சுள் பிறந்த வைராக்கிய சித்தம் அலைமோதிக்கொண்டிருந்தது. வெயிலின் வெப்பம் பொறுக்காத துடிப்பால் அவள் விர்ரென நடந்து சென்றதைவிட, அவளுக்கிருந்த ஆத்திர மிகுதியால் பெற்றுக் கொண்ட உத்வேகமே அவளை மிகவேகமாய் உய்த்துச் சென்றது. அவள் நடக்க நடக்க, ஆத்திரம் அதிகரித்தது; ஆத்திரம் அதிகரிக்க அதிகரிக்க, நடை முன்னினும் வேகமடைந்தது. சிறுவன் நூருத்தீனோ ஒன்றும் புரியாமல் தாயின் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு, அவள் நடக்கிற வேகமான நடைக்கு ஏற்ப ஓட்டமாய் ஓடிக்கொண்டிருந்தான்.

வழி நடக்க நடக்க மைமூனாவின் உள்ளத்துள்ளே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஆங்காரமென்னும் ஜுவாலை மானஸமான சாபத்தீயைக் கக்கிக்கொண்டிருந்தது. அரண்மனையில் ஷஜருத்துர்ரைச் சபித்த சாப மொழிகளையெல்லாம் மைமூனாவின் உதடுகள் மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக்கொண்டே இருந்தன. சாபத்தாலும் சாபமொழி தன்னாலும்,… கோபத்தாலும் பேர்படைத்த கொடிய முனி துருவாசனைப் போல், அச் சாபமொழிகளை அவள் முணுமுணுக்க முணுமுணுக்க, ஆத்திரமென்பது முன்னினும் பன்மடங்காய்ப் பெருகிக்கொண்டே இருந்தது. ஆத்திரமென்றால், எப்படிப்பட்ட ஆத்திரம்! அவள் கண்ணெதிரிலேயுள்ள சகல வஸ்துக்களையும் சுட்டெரித்து விடக்கூடிய ஆத்திரம். இப்பொழுது அவளுக்குக் கணவனை வலிய இழக்க நேர்ந்ததால் ஆத்திரம் விளையவில்லை; ஆனால், ஷஜருத்துர்ரிடம் கூறிய சூளுறவு மொழிகளைச் செய்துகாட்டி மனச்சாந்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமே என்னும் பேராத்திரம் பிடர்பிடித்துத் தள்ளிக்கொண்டிருந்தது.

திடீரென வாந்திபேதி கண்டு முஈஜுத்தீன் ஒரே நிமிஷத்தில் மைமூனாவைப் பிரிந்திருந்தாலும் பாதகமில்லை! ஆனால் இன்று அக்கணவன் மனைவியைப் பிரித்த ஷஜருத்துர்ரின் நெஞ்சுத் துணிச்சல் இருக்கிறதே, அஃதொன்றேதான் திரும்பத் திரும்ப மைமூனாவின் மனத்தை மோர் கடையும் மத்தே போல் கலக்கிக் கலக்கிக் குலுக்கிக்கொண் டிருந்தது. எட்டாவது சிலுவை யுத்தத்தை ஜெயித்து, மிஸ்ரையும் முழு முஸ்லிம் உலகையும் காப்பாற்றிக் கொடுத்த பெண்மணி, அகால மரணமடைந்த தங் கணவரை எவருக்கும் தெரியாமல் மூமிய்யாவாக்கித் திருட்டு நாடகம் நடித்து எல்லார் கண்ணிலும் மண்ணைத் தெள்ளிப்போட்ட மாதரசி, கலீஃபா நியமித்தனுப்பிய மாற்று சுல்தானை மாயமாய் மறையச் செய்த மாயக்காரி, மிஸ்ரின் சூனிய சுல்தானா இப்பொழுது இப்படி ஒரு பாவமுமறியாத தன்னிடம் ஏன் பழிவாங்க வேண்டுமென்பது மைமூனாவின் உள்ளத்தை உருக்கியது; உறுத்தியது. மேலும், மிகவும் கஷ்டமான வாழ்க்கையெல்லாம் நடத்தித் தற்கொலைக்கூடச் செய்து கொள்ளத் துணிந்து நின்ற ஷஜருத்துர் இப்போது ஏன்தான் இந்தப் பதவி மோகம் பிடித்துப் பேயாய்ப் பறக்கவேண்டுமென்பது, அவள் சிந்தையைக் குலைத்தது.

மாபெரும் ராணியான அப் பெண்மணி ஒரு சாதாரண குடும்ப ஸ்திரீயாகிய தன் இனிய வாழ்க்கையைக் கெடுத்து ஏன் மகிழ்ச்சியுற வேண்டுமென்பது அவளுக்கு விளங்கவில்லை. பரம்பரையாகவே அரச குலத்தில் உதித்த ஒருத்தி நாடாளும் பேராசையின் காரணமாக இப்படி மைமூனாவைக் கைம்பெண்ணாக்கி இருந்தால், அதிசயப்படுவதற்கில்லை. ஆனால், அபலையாயிருந்து, வர்த்தகரால் வளர்க்கப்பட்டு, அமீருக்கு அடிமையாய் விற்கப்பட்டு, அரசரால் கைதியாக்கப்பட்டு, பிறகு தெய்வாதீனமாய் அவ்வரசருக்கே வாழ்க்கைப்பட்டு, உலகம் புகழ் உத்தம ரத்தின மாதுசிரோமணியாய்ப் பெயரெடுத்து, எப்படிப்பட்ட அசாதாரண மனிதராலும் எட்டமுடியாத புகழேணியின் உச்சிப்பழுவை எட்டிப்பிடித்த ஒரு விசித்திர வனிதை இவ்வாறு மைமூனாவைக் கொஞ்சமும் நெஞ்சிரக்கமின்றி நடுத் தெருவில் அலைய விடுவானேன் என்பதுதான் சரித்திராசிரியர்களின் சந்தேகமாக இன்றளவும் இருந்துவருகிறது. சரித்திர சம்பவம் கட்டுக் கதையினும் வெகு விசித்திரமாய் இருக்கிறதன்றோ!

ஆனால், எம்மைப் பொறுத்தவரை ஒன்றும் அதிசயமாகவோ அற்புதமாகவோ தோன்றவில்லை. என்னெனின், ஆண்டவன் கூறியுள்ளபடி, ஓர் அடியான் எதுவரை தன்னைப் படைத்தவனை மறக்காமலும் மறுக்காமலும், தன் கடமையைக் கொஞ்சமும் தட்டிக் கழிக்காமல் இறைவனுக்குப் பயந்து நேரான மார்க்கத்தைச் சீராகக் கடைப்பிடித்தும் வருகிறானோ, அதுவரை ஆண்டவனும் அவனுக்கு உதவி செய்கிறான்; அவ்வடியானை மிகமிக உயரிய அந்தஸ்துக்கும் உயர்த்தி விடுகிறான். ஆனால், எந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வடியான் எல்லையைக் கடக்க ஆரம்பிக்கிறானோ, எப்பொழுது தன் சுயநலத்துக்காக எந்த ஈனக் கருமத்தையும் செய்ய முற்படுகிறானோ, எந்தச் சூழ்நிலையில் தன் பேராசைக்காக எப்படிப்பட்ட தகாத முறையையும் கைக்கொள்ளத் துணிகிறானோ, அப்பொழுதே ஆண்டவனும் அவனைக் கைந்நழுவ விட்டுவிடுகிறான். கைந்நழுவ விடுவதுடனே, அவ்வடியானை எந்த உயரத்துக்கு உயர்த்தினானோ அந்த உயரத்திலிருந்து கீழே தொப்பென உருட்டி விடுவதுடன், ஆதியிலிருந்த அசல் அந்தஸ்த்துக்கும் மிகமிகத் தாழ்ந்த இழிய பாதாளப் படுகுழிக்குள்ளும் கொண்டுபோய்த் தள்ளித் தாழ்த்திப் புதைத்தும் விடுகிறான். யஹுதிகளின் சரித்திரமுழுதும் இவ்வுண்மையையே நிரூபித்துக் காட்டுகிறது. ஷஜருத்துர்ரின் பிற்கால வாழ்க்கை விசித்திரங்களும் அப்படியே காட்சியளிக்கின்றன. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமேயானால், ஷஜருத்துர் எதுவரை ஆண்டவனின் நல்லடியாருள் ஒருவராய் இருந்தாரோ, அதுவரை உச்சத்துக்கு மேல் உச்சத்துக்கு உயர்ந்து ஏறினார். ஆனால், எப்பொழுது அவர் இப்லீஸின் அடியராய் இழிந்தாரோ, அப்பொழுதே கேடுகாலமென்னும் சறுக்கற் பாதையிலே கிறுகிறுவென்று கனவேகமாக வழுக்கி வீழத் தொடங்கிவிட்டார். இதுதான் உண்மை.

ஆனால், மற்றொரு விஷயத்தையும் நாம் மறவாது கவனிக்க வேண்டும். அஃதாவது இப்படிப்பட்ட வின்னியாசமான பிற்கால வாழ்க்கையை ஷஜருத்துர்ரே விளைத்துக் கொண்டாரா அல்லது சமய சந்தர்ப்பங்களே அவரை அம்மாதிரியாக இழியச் செய்துவிட்டனவா என்பதேயாகும். ஸாலிஹ் நஜ்முத்தீன் அகால மரணமடைந்த பின்னர் ஷஜருத்துர் ஐயூபிகளுக்கே உரிய ஐயூபி ஸல்தனத்தை ஐயூபிகளுக்குத்தாம் சேர்ப்பிக்க வேண்டுமென்னும் ஒரே நல்லெண்ணத்துடனேதான் மிகமிக நெருக்கடியான வேளையில்கூட ஸாலிஹின் மரணத்தை மறைத்து வைத்தாரென்பதையும் தம் புருஷன் பிரேதத்தை மூமிய்யாவாக்கிப் பக்கத்தில் வைத்துக்கொண்டே பரிதபித்து நின்றாரென்பதையும் பட்டத்துக்குரிய இளவரசர் தூரான்ஷாவின் வருகைக்காகக் காத்துக் கிடந்தாரென்பதையும் இளவரசர் வந்த பின்னர் அவர் கொலை புரியப்படுகிறவரை ஷஜருத்துர் மிகமிக நேர்மையுடனேயே முற்றமுற்ற ஒழுகிவந்தாரென்பதையும் நீங்கள் மறந்துவிடுதல் கூடாது.

தூரான்ஷா கொலையுண்ட பின்னருங்கூட நெடுநாள் மட்டும் அந்த ராணியர் திலகம் குணத்தின் குன்றாகவே இலங்கி வந்தார். ஆயின், பாக்தாதிலே வீற்றிருந்த கலீஃபா அனாவசியமாக மிஸ்ரின் உள்நாட்டு விவகாரத்திலே தலையிட்டுக் குழப்பத்தை உண்டுபண்ண ஆரம்பித்தமையாலே எல்லாம் கெட்டுக் குட்டிச்சுவராய்ப் போய்விட்டது. அல்லது அந்த கலீஃபா நியமித்த மலிக்குல் அஷ்ரப் என்னும் ஐயூபி சுல்தானாவது சாமர்த்தியசாலியாக இருந்து மிஸ்ரைக் கைப்பற்றி இதுவரை ஒழுங்காக ஆட்சி செலுத்தியிருந்தாலும் பாதகமில்லை. கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் தாம் கலீஃபா என்னும் வீம்புக்காவது வீணே மிஸ்ரின் கிரமமான நல்லாட்சியில் பலாத்காரமாகத் தலையிட்டு, ஒழுங்காகவும் நேர்மையாகவும் அரசு செலுத்தி வந்த ஷஜருத்துர்ரை வீழ்த்தச் சூழ்ச்சிசெய்து அவ்வம்மையாரை இப்படியெல்லாம் மாறும்படி ஆக்கிவிட்டு, தாம் ஒரு பலனையுமே பெற்றுக்கொள்ளாமற் போய்விட்டார்.

அந்த கலீஃபா மட்டும் ஷஜருத்துர் என்னும் அச் சிறந்த நல்ல சுல்தானாவை வீணே கெடுக்க முற்பட்டிராமற் போயிருந்தால், அந்த ராணியார் ஏன் முஈஜுத்தீனை அவசரம் அவசரமாக மனந்திருக்கப் போகிறார்? ஏன் மைமூனாவை திரஸ்கரித்திருக்கப் போகிறார்? ஏன் அந்த அபலையான பெண்மணிக்குத் தலாக்கு வாங்கிக் கொடுத்திருக்கப் போகிறார்? அமீர் தாவூத் என்னும் ஒரு கிழவரும் சுல்தான் ஸாலிஹ் என்னும் ஓர் அரசரும் இனையற்றக் குணக்குன்றாகிய ஒப்புவமையற்ற ஓர் உன்னத ஷஜருத்துர்ரைச் சிருஷ்டி செய்திருக்க, ஒரு கலீஃபாவானவர் அந்தப் பெருங் குணமிக்க நாரியர் திலகத்தை ஒரே நாளில் குட்டிச்சுவராய் மாற்றிவிட்டு, கிலாஃபத்துக்கும் மிஸ்ரின் ஸல்தனத்துக்கும் அழியாத அபகீர்த்தியை உண்டு பண்ணிவிட்டார்.

மிஸ்ரைக் கிறிஸ்தவர்கள் மிருகத்தனமாய்த் தாக்குகிற போதெல்லாம் கலீஃபா சகலவித சுகபோக செளபாக்கியங்களுடனே குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறார். உயிரையும் கொடுத்து, மானத்தையும் மறந்து, கணவரின் பிரேதத்தையும் கட்டியழுதுகொண்டு, காஹிராவின் தலைக்கடியில் புகுந்துவிட்ட சிலுவை யுத்தக்காரர்களை ஒரு துருக்கி தேசத்து அணாதைப் பெண்மணி மாயாஜால மந்திர வித்தை செய்து சிறை பிடிக்கிறாள்; நாட்டைக் காப்பாற்றுகிறாள்; உரியவனிடம் ஒப்படைக்கிறாள்; அவன் மாண்டொழிந்த பின்னே தானே அரசாட்சியைப் பற்றிக்கொண்டு, எவரும் சற்றுமே குறை சொல்ல முடியாதபடி தண்ணிழலாட்சி யோச்சுகிறாள். அதுவரை அயர்ந்து தூங்கி வழிந்த கலீஃபா அக்கணமே வாரிச் சுருட்டி எழுகிறார். எதற்கு? ஒரு நாட்டைப் பெண்மணி ஆளக் கூடாதென்று “ஃபத்வா” விடுப்பதற்கு!

சிலுவை யுத்தக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்குத் தம்முடைய ஒரு சிறு சுண்டு விரலைக்கூட உயர்த்தத் துணியாத ஒரு பெரிய கலீஃபா, அம் மாபெரும் சிலுவை யுத்தத்தை ஒரு மாதரசி ஜெயித்துக் காப்பாற்றி முஸ்லிம் உலகுக்கெல்லாம் கியாதி அளித்துவிட்டு, அப்பால் செங்கோலைப் பற்றி நிற்பது மார்க்க முரணானது என்று மார் தட்டிக் கூறுவதற்கு கிஞ்சித்தும் அஞ்சவில்லை. எது மார்க்க முரணானது? கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் ஆணிவேரில் வெந்நீர் விட்டதைப் பார்த்துக்கொண்டே பார்க்காத மாதிரியிருந்த கலீஃபாவின் கண்மூடிச் செயல் இஸ்லாத்துக்கு முரணான செயலா? அல்லது ஒன்பதாவது லூயீ மன்னனை எட்டாவது சிலுவை யுத்தத்தில் முதுகொடியச் செய்த ஏகபத்தினியான ஷஜருத்துர் மிஸ்ரை நேர்மையாக ஆட்சி புரிந்தது இஸ்லாத்துக்கு முரணான செயலா?

‘கலீஃபா, கலீஃபா’ என்று தங்களை அழைத்துக் கொண்ட எத்தனை கலீஃபாக்கள் இஸ்லாத்துக்கு எமனாய்ப் போயினார்கள், தெரியுமா? குலபாயெ ராஷிதீன்களாகிய முதல் நான்கு கலீஃபாக்களோடேயே இஸ்லாமிய குடியரசு கிலாஃபத்தின் மஹோன்னதம் மக்கி மண்ணாய்ப் போய்விட் தென்றாலும், பிறகும் பிறகும் வந்த ஒருசில உதவாக்கறையான கலீஃபாக்களால் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களின் கண்ணியத்துக்குமே பெரிய அபக்கியாதியும் அபகீர்த்தியும் ஏற்பட்டுவிட்டன. அவற்றுள்ளெல்லாம், நம்முடைய கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் எடுத்துக் கொண்ட மிகப் பொல்லாத நடவடிக்கைகள் ஷஜருத்துர்ரை நேரெதிரான குணமிக்க பெண்ணாகப் பரிணமிக்கும்படி செய்ததுடன், மிஸ்ரின் பிற்கால அரசாங்கமே உளுத்துக் கொட்டிப் போகும்படி செய்தும் விட்டன.

இன்று மைமூனா முஈஜுத்தீனிடமிருந்து தலாக்குப் பெற்றுக் கொண்டதற்கு உண்மைக் காரணம் ஷஜருத்துர் அல்ல; ஆனால் கலீபா முஸ்தஃஸிம் பில்ல(ஹ்)வே என்பதை ஊன்றிச் சிந்திப்போர் மிக எளிதாக உணர்ந்துகொள்ள முடியும். மைமூனா தலாக்குப் பெற்றதற்கு மட்டும் அந்தக் கலீஃபா காரண பூதராய் விளங்கவில்லை. ஆனால் பின்னே நிகழப் போகிற அத்தனை விபரீத நிகழ்ச்சிகளுக்கும் அவருடைய அவசர நடவடிக்கைகளே காரணமாய் விளங்கி வருகின்றன. உருப்படியான காரியங்களை முஸ்தஃஸிம் பில்லாஹ் செய்யத் தவறியதுடனே, உருப்படாதவற்றையும் செய்துத் தொலைத்தார். அந்த கலீஃபா மட்டும் அநியாயமாய் ஷஜருத்துர்ரை வீழ்த்த முற்பட்டிராமற் போயிருந்தால், மிஸ்ரின் மேன்மை அச் சகலகலாவல்லியின் கரத்திடை எத்தன்மைத்தாய பீடுகெழு பெருமையைப் பெற்றுக்கொண்டிராதென்பதை எவரே கூறமுடியும்?

ஷஜருத்துர்ரின் அருமையான பெரிய சற்குணங்களைப் பேராசையின்பாலும் பேய்ச் செயல்களின்பாலும் திருப்பிவிட்ட மாபெரும் பாபம் முற்றும் அந்த கலீஃபாவையே முற்றமுற்றச் சார்ந்திருக்கின்றன. என்னெனின், ஆரம்பத்திலெல்லாம் ஒதுங்கி நின்றதைப்போல் பிற்காலத்திலும் அந்த கலீஃபா மிஸ்ரின் மாட்டுப் பராமுகமாய் இருந்திருப்பராயின், நிச்சயமாக ஷஜருத்துர்ரும் கெட்டிருக்க மாட்டார்; மிஸ்ரின் மேன்மையும் சற்றுமே குன்றியிருக்கமாட்டாது. – நாம் ஷஜருத்துர்ருக்காக வக்காலத்து வாங்கிப் பேசவில்லை. உண்மையாகவே, கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் மட்டுமேதாம் எல்லாக் கேடுகாலங்களுக்கும் முழுக்க முழுக்கப் பொறுப்பாளியாய் இருக்கிறார். சிந்தித்துச் சீர்தூக்கிப் பாருங்கள்! உண்மை தானே ஒளிரும்.

வேதாந்தம் ஒருபுற மிருக்க, நம் கதையைத் தோடர்வோம்:-

மைமூனா கொதிக்கிற வெயிலிலே இளமைந்தனைப் பிடித்துக்கொண்டு தன்னில்லத்துக்கு ஏகவில்லை. ஆனால் வயது முதிர்ந்த தன் தந்தையிருக்கும் இடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தாள். அபுல் ஹஸன் என்னும் அழகிய நாமம் பூண்ட அவ் விருத்தாப்பிய தந்தையார் தம்முடைய ஒரே மகள் மைமூனாவின்மாட்டுக் கொண்டிருந்த அளவு கடந்த கரிசனத்தின் காரணமாகவே முன்பெல்லாம் பலமுறையும் அவளுக்கு இதோபதேசங்கள் புரிந்து, முஈஜுத்தீனை மறந்துவிடும்படி உபதேசித்து வந்திருக்கிறார் என்பதை முன்னம் நாம் குறிப்பிட்டோம். அப்போதெல்லாம் அப் பெண்மணி தன் கடமையில் தவறக்கூடாதென்னும் ஒரே காரணத்துக்காகவே தன் தந்தை சொல்லைத் தட்டிவந்தாள் என்பதையும் நாம் கூறினோம். ஆனால், இப்பொழுது அந்த மைமூனாவுக்கு வேறு புகலிடமேது? அல்லது தன் பழைய இல்லத்துக்கு ஏகித்தான் என்ன செய்வது? தன் பொல்லாத தலைவிதியைச் சொல்லி அழுவதற்குப் பெற்ற தந்தையைவிட வேறு எவரை அவள் நெருங்குவது?

குற்றமேதும் இழைக்காத அவள் தன் கணவனிடம் மிகப் பெரிய தண்டனையும் அபராதமுமாகிய தலாக்கென்னும் கொடிய சிக்ஷையைப் பெற்றுக்கொண்டிருக்கையில், அச் சகிக்கொணா மன வேதனையை எவரிடந்தான் சொல்லித் தீர்த்துக் கொள்ளுவது? பாலையில் சிக்கிய புள்ளிமான் தன் தாகவிடாயைத் தீர்த்துக்கொள்வதற்காகத் தண்ணீரிருக்கும் இடத்தைத் தாவிப்பாய்ந்து ஒடுவதைப்போல், மைமூனாவும் தன் ஆத்திரத்தையெல்லாம் சொல்லித் தீர்த்து அழுது தேறுவதற்காகத் தன் தந்தையின் இல்லத்தை நோக்கி வழிநடந்து கொணடிருந்தாள்.

சீக்கிரமாய்ப் போய்ச் சேர்ந்து தன் தந்தையைக் கட்டிக்கொண்டு அழுது சலிக்க வேண்டுமென்னும் அவாவினாலும், சூடேறுகிற தரையில் கிளம்புகிற ஆவியின் வேகம் வீசுகிற உஷ்ணத்தினாலும் அவள் காற்றினுங்கடிய வேகத்துடனே நடந்தாள். வீதிகளில் வருவார் போவாருக்கு அப் பெண்மணி முஈஜுத்தீன் ஐபக்கின் மனைவி என்பதும் தெரியாது; அல்லது அப்பெண்மணியின் கையோடே ஓடுகிற சிறுவன் அந்த ஐபக்கின் மைந்தனென்பதும் தெரியமாட்டாது. எனினும், உயர்குலத்தைச் சேர்ந்த மாது சிரோமணிக்குரிய ஆடையாபரணங்களடன் அவள் நடந்து சென்ற வேகம் போவார் வருவாருடைய கவனத்தை ஈர்க்காமற் போகவில்லை. அத்துணை உயர் குலத்துதித்த மாதரசியும் அவளுடைய சிறு மைந்தனும் கால்நடையாகவே காஹிரா வீதிகளினூடே பட்டப்பகலில் கரிக்கிற கடுவெயிலில் நடந்து செல்வது அனைவரின் கருத்தையும் எப்படிப் பறிக்காமலிருக்கும்? சில வாலிபர்கள் முறைத்துப் பார்த்தார்கள்; சில முதியோர்கள் வெறிக்கப் பார்த்தார்கள். ஆனால் மைமூனாவோ, இடப்பக்கமோ வலப்பக்கமோ பின்பக்கமோ சிறிதும் திரும்பிப் பாராமல் தன் கருத்திலே கண்ணாக நடந்துக்கொண்டிருந்தாள். அவள் அப்படி விசித்திரமாய் நடந்தது அவ் வீதியினர்க்கு இன்னம் அதிகமான அதிசயத்தையே விளைத்தது.

இறுதியாக அந்தப் பெண்மணி குறுகலான ஒரு சிறு தெருவிலே திரும்பினாள். அங்கே சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஓரில்லத்துக் கருகிலே நெருங்கியதும், பெருமூச்சு விட்டுக்கொண்டே, வாயிற்படியை இரண்டே தாவல்களில் தாவியேறி, குறிபார்த்துக் கீழே குபீரென்று பாய்ந்து கோழிக் குஞ்சொன்றைப் பருந்து இறாஞ்சிப் பற்றுவதேபோல், அவ்வீட்டின் முன்வாயிலில் சாய்ந்து குந்திக்கொண்டிருந்த கிழவர் அபுல் ஹஸனின் மடிமீது பாய்ந்து முகத்தைப் புதைத்து, “அபூ!”என்று கோவெனக் கதறியழுதாள் மைமூனாவென்னும் மாதரசி.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment