பத்றில் நிகழ்ந்த போர் குறைஷிகளின் ஆணவத்தை அடித்து நொறுக்கிற்று. அதே சமயத்தில் இஸ்லாத்தின் ஆணிவேர் பலமாக ஊன்ற ஆரம்பித்தது.
யூதர்களும், அக்கம் பக்கத்திலிருந்த நாடோடி பதவீ கூட்டத்தினரும் வியக்கத்தக்க முறையில் விழிப்புணர்ச்சியைப் பெற்றனர். தெய்வ கடாக்ஷம் துணை நின்ற ஒரே காரணத்தால்தான் மிகச் சிறுபான்மையினரான அனுபவமிலா முஸ்லிம் படையினர், தங்களைப்போல் மூன்று மடங்கு பெருகிக் கிடந்த அனுபவமிக்க பெரும்பான்மையினரை வென்றார்கள என்பதை எல்லாரும் கண்ணாரக் கண்டார்கள். அல்லாமலும், இஸ்லாத்தின் கொடிய பகைவர்களாகிய எல்லா முரட்டுக் குறைஷித் தலைவர்களும் ஒரு மொத்தமாகச் செத்துத் தொலைந்ததும் அனைவரையும் சிந்திக்கத் தூண்டிற்று. தெய்வ சங்கல்பத்தால்தான், நபியவர்கள் வருணிக்கும் அளப்பரும் சக்தி மிக்க ஏக இறைவனின் அற்புத சக்தியால்தான் எல்லாம் நிறைவேறின என்பதை யாவரும் உணர்ந்தனர்.
போர்க்களத்திலும் பக்தி பரவசராகி நபி (ஸல்) உருக்கமாகப் பிரார்த்தனை நிகழ்த்தியதும், அப் பிரார்த்தனையை இறைவன் ஏற்று அங்கீகரித்ததும் மறக்கொணா அற்புதங்களன்றோ? அந்த பத்றுக் களத்தில் மட்டும் குறைஷிகள் வெற்றி பெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இஸ்லாமே இருக்கிற இடம் தெரியாமல் சுத்தமாகத் துடைத்து எறியப்பட்டிருக்கும். ஆனால், சென்ற 15 ஆண்டுகளாக இறைவன் தனது திருமறையில் என்ன தீர்க்க தரிசனங்களை வழங்கி வந்தானோ அவையெல்லாம் இப்போது நிறைவேறின. சத்தியமே ஜயம் பெறும்; அசத்தியம் அழிந்துவிடும் என்னும் வேதவாக்கு இந்தப் போர்க்களத்தில்தான் முதலாவது நிரூபணத்தை வழங்கிற்று.
இப் போர் நிகழந்ததும் ரமலான் மாதம்; 15 ஆண்டுகட்குமுன் முதன்முறையாக நபியவர்கள் பெற்ற வேத ஞானம் நிகழ்ந்ததும் ரமலான் மாதம். எனவே, உலகமெலாம் வாழ்கிற முஸ்லிம்கள் இப் புனித மாதம் முழுதும் பகலில் கடுமையான நோன்பு விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் கட்டளையை இறைவன் குர்ஆன் வாயிலாகப் பிறப்பித்து விட்டான். இஸ்லாத்தை இறைவன் இந்த மாதத்தில் காப்பாற்றித் தந்ததற்காக இன்றும் எல்லா முஸ்லிம்களும் தீவிரமாக இவ்வுண்ணாவிரதத்தை அனுஷ்டித்து வருகிறார்கள்; என்றும் அனுஷ்டித்து வருவார்கள்.
பத்றுப்போர் முடிவு மதீனாவில் இருந்தவர்களுக்கு இப்படியாகத் தெய்வ பக்தியையும் நல்ல ஞான வெளிச்சத்தையும் நல்கிய அதே நேரத்தில் மக்காவிலிருந்த தோற்றுப்போன கட்சியினர்க்கு அதிகமான ஆத்திரத்தை மூட்டிவிட்டது. எங்கே தவறிருக்கிறது என்பதைக் கண்டறிய அவர்களுக்கு அவகாசமில்லை. அடியுண்ட நாகம்போல் அவர்கள் சீறினார்கள். பத்றுக் களத்தில் தங்களுக்கேற்பட்ட எல்லா அவமானங்களையும் நஷ்டங்களையும் உடனடியாக நேர் செய்துவிட வேண்டும் என்பதிலேயே அவர்கள் குறியாயிருந்தார்கள். தாங்கள் வழிபடும் தேவதைகள் ஒரு முறை கைவிட்ட போதிலும், அடுத்தடுத்துப் பெருவெற்றிகளைச் சம்பாதித்துத்தரும் என்று எதிர்பார்த்தார்கள். முன்பு ஏதோ தெய்வக் குறைபாடு நிகழ்ந்துவிட்டது போலும் என்று கருதி, இப்போது அதிதீவிரமாகப் பூஜைகளை நிறைவேற்றினார்கள். அடுத்து போரில் நிச்சயம் வெற்றி கிட்டிடும் என்று அவர்கள் மனமார நம்பினார்கள். பெரும்பான்மையினரை எதிர்த்துச் சிறுபான்மையினர் எப்படியும் இறுதிவரை வெற்றியடைய முடியாது என்கிற மந்திரத்தை அவர்கள் ஜபித்துக் கொண்டேயிருந்தார்கள்.
“பழிவாங்குவோம், பழிவாங்குவோம்! பத்றில் ஜெயித்தவர்களைப் பதராய் ஊதித் தள்ளுவோம்! வாலிபர்களே, கிளர்ந்தெழுங்கள்! புதுப் படையை உருவாக்குவோம்! புதுத் தலைவரைத் தேர்ந்தெடுப்போம்! பழிக்குப் பழி வாங்கியே தீருவோம்!” – மக்காவின் மூலை முடுக்கெல்லாம் இதே கோஷம்; இதே பேச்சு.
எல்லாக் குறைஷிகளும் ஒன்று கூடினார்கள். ஏகமனதாக அவர்கள் அபூஸுஃப்யானைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அவ் வர்த்தகக் கேசரி சிரியாவிலிருந்து கொணர்ந்த 1000 ஒட்டகப் பொதிச் சரக்குகளையும் விற்றுக் காசாக்கி, அத்தனை செல்வத்தையும் பழிதீர்க்கும் படலத்துக்கென்று ஒதுக்கினார்கள். பத்றுப் போர் முடிந்து ஒரு வருடம் கழிவதற்குள் எல்லாம் சித்தமாகி விட்டன. கைதேர்ந்த வில் வீரர்களும் வாள் வீரர்களும் அடங்கிய 3000 படை வீரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர். 200 குதிரைப் படை தயாராயிற்று. மேனி முழுதும் இருப்புக் கவசமணிந்த 700 சூரர்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பணம் தண்ணீராய் ஓடிற்று. படை வீரர்கள் புஷ்டியூட்டும் உணவுகளை விலாப்புடைக்க உண்டார்கள். பீப்பாய்க் கணக்கில் சாராயம் சேகரமாயிற்று.
மங்கையர் திலகங்கள் வீடடங்கிக் கிடக்கக்கூடாதென்றும் போர்க்களம் நோக்கிச் செல்லும் தியாகச் செம்மல்களாகிய போர் வீரர்களை உடனுக்குடன் உற்சாகப்படுத்திவிட இவர்களும் உடன்வர வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. குலப் பத்தினிகளின்றி, விலை மாதரும் நிரம்பத் திரட்டப்பட்டனர். அவ்வப்போது நாட்டியமாடியும் உற்சாகமூட்டும் பாடல்களை மிழற்றியும் இவர்கள் சோர்ந்துபோன உள்ளங்களுக்குச் சொகுசு ஊட்ட வேண்டுமென்று ஆணையிடப் பெற்றார்கள். போர்க் களத்துக்குத் தேவையான இறைச்சி, ரொட்டி, பழவகைகள், பானங்கள், மற்றும் கேளிக்கைப் பொருள்கள் யாவும் பொதி பொதியாக மூட்டை கட்டப்பட்டன.
அபூஸுஃப்யான் ஆயத்தம் செய்தான். வில், அம்பு, ஈட்டி, கத்தி, குத்துவாள் முதலிய அனைத்து ஆயுதங்களும் செப்பனிடப்பட்டன. மக்கா நகர் முழுதுமே போர் மேகப் படலத்தில் மூழ்கிவிட்டது. சிறு கைவினைஞர் முதல் பெரிய வாத்தகர்வரை, சிறு குடிசைத் தொழில் முதல் பெரிய பட்டரைவரை எங்குமே எவருமே போர்க்கருவி, போருக்கான துணைப் பொருள்கள் முதலியவற்றை உருவாக்குவதிலேயே முனைந்து விட்டார்கள்.
புரோகிதர்களும் பூசாரிகளும் சாமிகளுக்குப் பூஜையிட்டு, பலி நைவேத்தியம் நிறைவேற்றி, ஒரு நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுத்து, பச்சைக் கொடி காட்டினார்கள். ஹிஜ்ரீ 3-ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் ஒரு நல் முகூர்த்தத்தில் குறைஷியரின் சேனை சகல தடபுடல்களுடனும் மக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டது. சேனையின் தலைவன் அபூஸுஃப்யான். உடன் சென்ற பெண்களின் கூட்டத்துக்கோ அவனுடைய மனைவி ஹிந்த் என்பவள் தலைவி. போர் முரசும் தாரை தப்பட்டைகளும் முழங்க அப் பெருஞ்சேனை புறப்பட்டதை மக்காவில் தங்கியிருந்த மக்கட் கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தது. அக் குறைஷிப் படையில் திஹாமா (Tihama), கினானா (Kinana) என்னும் முரட்டு நாடோடி அராபியர் வமிச வீரர்களும் அடங்கியிருந்தார்கள். (சேனை மக்காவை விட்டுப் புறப்பட்ட தேதி கி.பி. 625, ஜனவரி, 15 என்று மேல் நாட்டினர் கணித்திருக்கிறார்கள்.)
புற்றீசல் போன்ற இப்பெரும் பட்டாளம் மதீனாவைத் தாண்டி வடக்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள உஹது என்னும் ஒரு குன்றின் அடிவாரத்தில் ஷவ்வால் 9, வியாழன் அன்று பாடி இறங்கிற்று. சேனைத் தலைவன் அபூஸுஃப்யான் தன்னுடன் கொண்டு சென்றிருந்த சாமிச் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து நடுவில் வீற்றிருக்க, பிறைச் சந்திரனின் வளைவை நிகர்த்தப் படை முழுதும் அவனைச் சூழ்ந்து அணி வகுத்துக் கொண்டன. போர் தொடங்குமுன், அந்த வீரர்கள் விஷம வேலைகளில் ஈடுபட்டனர். மதீனாவின் சுற்றுப் புறத்திலிருந்த வளப்பமான மேய்ச்சல் வெளிகளை அவர்கள் வசப்படுத்திக் கொண்டார்கள்; செழிப்பான சாகுபடிப் பண்டங்களையும் கதிர்களையும் அறுத்துத் தங்கள் குதிரைகளுக்குத் தீனியாக வழங்கினார்கள்; ஒட்டகங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, அந்நிலங்களையெல்லாம் பாழ்படச் செய்தார்கள்.
ஹி. 3, ஷவ்வால் 10-ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று திரு நபி (ஸல்) தம்முடைய தோழர்களை எல்லாம் ஓரிடத்தில் ஒன்று கூட்டினார்கள். இப்பொழுது என்ன நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்னும் ஆலோசனை நிகழ்த்தப்பட்டது.
“தோழர்களே! நான் சில உவமதரிசனத் தோற்றங்களைக் கண்டேன். எனது வாளின் முனை சிறிது மூளியாகிவிட்டதாக ஒரு தோற்றம் ஏற்பட்டது. எனது உடலுறுப்பில் ஏதோ ஒன்று போர்க்களத்தில் பாதிக்கப்படலாமென்று நினைக்கிறேன். மற்றோர் உவம தரிசனத்தில் எனது மேனி முழுதையும் இருப்புக் கவசம் மூடிக் கொண்டிருப்பதுபோல் தோன்றிற்று. இதன் பொருள் என்னவென்றால், நாம் மதீனாவை விட்டு வெளியே செல்லாமல், இங்கேயே பாதுகாப்புச் செய்து கொள்ளவேண்டும் என்பதாகும். நான் இன்னொரு தோற்றமும் கண்டேன். பல பசுமாடுகள் வெட்டப்பட்டன் போன்ற காட்சி அது. அதாவது, என் குடிமக்களுக்குச் சேதங்கள் விளையும் என்பது இதற்கு அர்த்தம். எனவே இந்த உவமத் தோற்றங்களையெல்லாம் அனுசரித்து நான் என்ன முடிவுக்கு வந்திருக்கிறேனென்றால், எக் காரணத்தை முன்னிட்டும் நாம் மதீனா நகருக்கு வெளியே சென்று போரிடக் கூடாது; இங்கே நகருக்குள் இருந்தவாறே நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் இருந்ததைவிட இப்போது இம் மதீனா நகரம் அதிக பாதுகாப்புடனே இருக்கிறது. நகரைச் சுற்றிக் கோட்டைச் சுவர் எழுப்பியுள்ளோம் அல்லவா?”
நபியவர்களின் இச் சொற்பெருக்கைச் செவியேற்ற வயதில் முதிர்ந்த அறிஞர்கள், போர்த் தந்திரமுறை உணர்ந்தவர்கள் எல்லாரும் மதீனாவுக்குள் இருந்தவாறே தற்காப்புப் போர் நிகழ்த்துவதுதான் சிறந்தது, ஏற்புடைத்து என்று அங்கீகரித்தார்கள். நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையும் இதை ஆதரித்தான். (பத்றுப் போர் இவன் எதிர்பார்த்தபடி முடியாமற் போகவே, முஸ்லிம்களின் கை ஓங்கவே, தன்னால் அரசனாக உயர்வது இயலாது என்று உணர்ந்து, இவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறி, பொய்ந் நடிப்பு நடித்து வந்தான். இவன் புரிந்த அத்தனை தில்லுமுல்லுகளும் இறைவனால் அவ்வப்போது அம்பலப்படுத்தப்பட்டதை இன்றும் குர்ஆனின் பல திருவசனங்களில் காணலாம்.)
ஆனால், வாலிப ரத்தம் நாளங்களில் ஓடும் இள யுவர்கள் இந்த யோசனையை ஏற்கவில்லை. “பதுங்கிக் கிடந்து ஒளிந்து மறைவதா? கூடாது! நாம் நகரைவிட்டு வெளியேறி எதிரிப் படைகளிடம் நெருங்கி நேருக்கு நேர் நின்று போராடி நமது தீரத்தை அரங்கேற்ற வேண்டும். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்போம்! அல்லாஹ் துணை நிற்க, திரு நபி (ஸல்) வழிகாட்ட, நிச்சயம் நமக்கே வெற்றி விளையும். கையாலாகாத பேடிகளே போல் நாம் கைகட்டி இங்கே தூரத்தில் நிற்பதா? அக்கிரமக்காரர்களான எதிரிகள் நமது நிலபுலங்களை நிர்த்தூளியாக்குவதை நீடிக்கவிடுவதா? கூடாது! நாம் முன்னேறி உஹது மலையடிவாரத்துக்குத்தான் செல்ல வேண்டும்,” என்று அந்த வாலிபர்கள் வீராவேசமாகப் பேசினார்கள்.
ஜனநாயக முறையைப் பின்பற்றும் நபிமணி (ஸல்) இரண்டு யோசனைகளையும் சமர்ப்பித்து, வாக்கெடுப்பு நிகழ்த்தினார்கள். பெரும்பாலான வாக்குகள் வாலிபர்கள் வழங்கிய யோசனைக்கு ஆதரவாக விழுந்தன. இச் சந்தர்ப்பத்தில் நபியவர்கள் தமது சர்வாதிகாரத்தை அல்லது எதேச்சாதிகாரத்தைப் பிரயோகித்து இருப்பார்களேயானால், எவரும் மறுத்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. பொறுமையே போர்த் திட்டங்களிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஓர் எல்லையை அவர்கள் வகுத்துக் காட்டினார்கள். ஏனென்றால், என்றைக்குமே எவருமே சர்வாதிகாரத்தைப் பிரயோகிக்கலாகாது என்பது அவர்களது தீவிரமான கோட்பாடு.
உடனே 1000 முஸ்லிம் வீரர்கள் படை திரண்டனர். அவர்களுள் இரண்டு பேர் மட்டுமே குதிரை வீரர்கள்; மற்ற யாவரும் காலாட் படையினர். இந்தக் காலாட் படையினருள்ளும் 100 பேர் மட்டுமே இருப்புக் கவசம் அணிந்திருந்தார்கள். திரு நபி (ஸல்) போர்க் கவசம் பூண்டு, இச் சேனைக்குத் தலைமை வகித்து, அந்த வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறைகிற வேளையில் மதீனாவை விட்டுப் புறப்பட்டு, வடக்கே இருந்த உஹது என்னும் குன்று நோக்கிப் படைநடத்திச் சென்றார்கள். ஈச்சமரச்சோலைகளின் மறைவூடே நடந்து, முஸ்லிம் சேனை உஹதுக்கருகில் ஓர் இடத்தில் நடுச் சாமத்தில் பாடியிறங்கிற்று. (கி.பி. 625, ஜனவரி, 26, சனிக்கிழமை.)
இந்தச் சேனையிலிருந்த 1000 வீரர்களுள், 300 பேர் அப்துல்லாஹ் இப்னு உபை என்னும் நயவஞ்சகத் தலைவனின் ஆட்கள். மதீனாவுக்குள் உள்ளிருந்தே போராட வேண்டும் என்னும் தனது யோசனையைப் பெரும்பான்மையினர் செல்லாமல் ஆக்கிவிட்டதில் பெரு வருத்தமடைந்த அவன், வேறு வழியின்றி இப்படையோடு இவ்வளவு தூரம் வந்துவிட்டான். பத்றுப் போரின் முடிவில் தான் அரசனாக முடியாமற் போய்விட்டதே என்னும் வருத்தம் இன்னம் அவனை வாட்டிக்கொண்டுதான் இருந்தது. கூடாரத்தில் மல்லாந்து படுத்துக்கொண்டே தனது கற்பனைத் தேரை ஓட்டினான்.
“சென்ற முறை நான் ஏமாறிப்போனேன். இம்முறை நான் ஏமாறக் கூடாது. என்னையும் என் சகாக்களையும் உத்தமமான முஸ்லிம்கள் என்று எல்லாரும் ஏமாளித்தனமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நானும் பரமபக்த சிகாமணிபோல் வேடமிட்டுக் கபட நாடகம் ஆடி வருகிறேன். குறைஷிகளுடன் நான் ஏற்கெனவே செய்துள்ள ஒப்பந்தப்படி, எந்த நேரத்தில் மதீனா முஸ்லிம்களை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தாலும், எனக்குரிய அரச பதவி என்னும் பரிசு நிச்சயம் கிடைக்கும். அபூஜஹலைவிட இந்த அபூஸுஃப்யான் யோக்கியன். இவன் நிச்சயம் எனக்குக் கைகொடுப்பான்; 3000 முரட்டு மூர்க்க வீரர்களுடன் இங்கே படையெடுத்து வந்திருக்கிறான். முஹம்மதோ, என்னுடைய 300 படைவீரர்களையும் சேர்த்து 1000 படையினரை மட்டுமே திரட்டியிருக்கிறார். முட்டாள்தனமாகக் குறைஷியரை எதிர்த்து என்னுடைய முந்நூறு பேரையும் இழப்பதைவிட, அவர்களுடன் இணங்கிப் போவதே விவேகம். பொழுது விடிந்ததும் நான் என்னுடைய வீரர்களைத் திரும்ப அழைத்துக்கொண்டு மதீனாவுக்கே திரும்பிவிடப் போகிறேன். முஹம்மதும் அவருடைய 700 போர் வீரர்களும் குறைஷிகளுக்கு இரையாகட்டும். நாளை மாலைக்குள் அந்த 3000 மக்காவாசிகளும் நிச்சயம் வெற்றி பெற்று விடுவார்கள். பெயருக்குக்கூட ஒரே ஒரு முஸ்லிமும் தப்பிப் பிழைக்கப் போவதில்லை. போர் முடிந்த பிறகு மதீனாவுக்கு ஒரு மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். தக்க சமயத்தில் நான் பின் வாங்கியதற்காக, முஸ்லிம்களை அதோ கதியில் அலற விட்டதற்காக என்னை எல்லாக் குறைஷிகளும் மெச்சிப் பாராட்டுவார்கள். பிறகு எல்லாருமாகச் சேர்ந்து என்னையே அரசனாகப் பதவியேற்குமாறு கேட்டுக் கொள்வார்கள். முதலில் நான் கொஞ்சம் பிகு செய்வேன். பிறகு, ‘உங்கள் எல்லாரின் விருப்பத்தையும் ஏற்று நடக்கச் சித்தமாய் இருக்கிறேன்!’ என்று பொய்யான பணிவுடன் நடிப்பேன். இந்த ஷவ்வால் பௌர்ணமி இரவில் நான் ராஜபோகத்துடன் பஞ்சணை மெத்தையில் துயில் கொள்வேன். இந்த மாதிரி கட்டாந்தரையில் கூடாரத்தில் மல்லாந்து கிடந்து வெதும்ப மாட்டேன். இன்று பிறை 11; நாளை மறுதினம் பௌர்ணமி! அன்று நானே ராஜா!”
தொடரும்…
-N.B. அப்துல் ஜப்பார்
Image courtesy: totalwar-ar.wikia.com
<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License