அருளாளனும் அன்புடையோனமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்,

உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் இறைவன் அவ்வப்போது தன்னுடைய தூதர்களை அனுப்பிக்கொண்டே வந்திருக்கிறான்.

தன்னுடைய படைப்புக்கள், என்ன காரணத்துக்காகவும் என்ன நோக்கத்துடனும் அவை படைக்கப்பட்டனவோ, அவற்றை நிறைவேற்றும் வகையில் நடப்பதற்கும் வாழ்வதற்கும் அவர்களுக்கு உபதேசிக்கவும் வழிகாட்டவுமே இத்தகைய தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறான். இவர்கள் அனைவருமே இறைவனுடைய செய்தியை மக்களிடையே பரப்பி அவர்கள் உன்னதமான வாழ்க்கையை வாழச் செய்ய முயற்சித்தவர்கள்தாம். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரும் தோன்றிய காலத்தைப் பொறுத்தும் தோன்றிய இடத்தைப் பொறுத்தும் தோன்ற வேண்டியிருந்த அவசியத்தைப் பொறுத்தும் எந்த எந்த மக்கள் பிரிவினிடையே அவர்கள் தோன்றினார்களோ அவர்களுக்குத் தலைவராகவும் இறைவனுடைய திருத்தூதராகவும் வாழ்ந்து மறைந்தார்கள். வேறு சிலருடைய வாழ்க்கை மனித இனம் முழுவதற்கும் வழிகாட்டியாக அமையாமல் இருந்துவிட்டது.

இந்த நிலையில்தான் முஹம்மது நபி அவர்கள் தோன்றினார்கள். அவர்கள் தோன்றிய இடம், அவர்கள் தோன்றும்போது இருந்த உலகின் சூழ்நிலை ஆகியவை அனைத்தும் அவர்களுக்கு இறைவனுடைய திருத்தூதர் என்ற முறையில் ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்துவிட்டன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த மக்களுடைய இறைத் தூதர் என்று இல்லாமல், எல்லா உலகங்களுக்கும் எக்காலத்துக்கும் யாவற்றுக்கும் அருட்கொடையாக இருக்கின்ற வகையில் அவர்களுடைய வாழ்க்கையை இறைவன் அமைத்துத் தந்தான். ஆகவேதான், அவர்களுடைய பெயரைக்கூடக் குறிப்பிடாமல், “நபிகள் நாயகம்”, “நபிகள் திலகம்” என்ற சொற்களாலேயே அவர்களைக் குறிப்பிடும் பழக்கம் அமைந்துவிட்டது. “நபிகள் நாயகம்”, “நபிகள் திலகம்” என்ற சொற்களின் அமைப்பிலிருந்தே பல நபிகள் இவ்வுலகில் தோன்றி இருக்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம், நாயகர் ஆனவர்களும் திலகம் போல் ஆனவர்களும் முஹம்மது நபி அவர்கள் என்பது தெளிவாகிறது.

நபி என்ற சொல்லுக்கு இறைத் தூதர் என்று பொருள். இறைவன் ஒரு தூதுவரை மக்களிடையே அனுப்புவதற்கு உள்ள அவசியத்தை தர்க்க தீதியாகக்கூட மறுப்பதற்கில்லை. யாவற்றையும் படைத்துக் காத்து ஆளும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையிலிருந்து பிறப்பது அது. அந்த மக்களை நல்வழிப்படுத்துவது இறைவனுடைய கடமை. தன்னுடைய படைப்பை நல்வழிப்படுத்தும் தன் கடமையை நிறைவேற்றுவதற்கு இறைவன் கடைப்பிடிக்கும் முறை தானே தூதுவர்களை அனுப்பி, அந்தப் படைப்பினத்தை வாழச் செய்து, அதற்கு அந்தத் தூதர்கள் மூலம் நல்வழியை உபதேசிப்பதும் அவர்களை வாழ்ந்து காட்டச் செய்வதும் ஆகும். இதுவே சிறந்த முறை என்பதைச் சிந்தனையும் வலியுறுத்தும். வெறும் உபதேசத்தைவிட, அந்த உபதேசத்தின்படி வாழ்ந்து காட்டும் ஒருவர் அம் மக்களிடையே தோன்றுவாரேயானால் அவரைப் பின்பற்றி நல்வழியில் நடப்பது அம்மக்களுக்குச் சுலபமானதாகும். ஆகவே, இப்படி ஒரு தூதரை அனுப்புவத தன் படைப்புக்களிடத்து இறைவன் காட்டும் கருணையினாலேயே ஆகும்.

சென்னை உயர் நீதிமன்ற, கனம் நீதிபதி ஜனாப் மு.மு. இஸ்மாயீல் அவர்கள் வழங்கியது

இத்தகைய தூதர் மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவேண்டுமானால், அத்தூதருடைய வாழ்க்கை மனித வாழ்க்கையினுடைய எல்லாத் தரங்களையும் துறைகளையும் உள்ளடக்கிக் கொண்டதாக அமைய வேண்டும். இந்த அமைப்பு நபிகள் நாயகம் முஹம்மது (சல்) அவர்களுக்குக் கிட்டிற்று. இந்த வாழ்வு எப்படி அமைந்திருந்தது என்பதைத்தான் இந்நூல் விளக்குகிறது.

ஓர் இறைத் தூதருடைய வாழ்வு மனித வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கிக் கொண்டதாக இருந்துவிட்டால் மாத்திரம் போதாது. அப்படி அந்த வாழ்வு இருந்ததைப் பிறர் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, அந்த வாழ்வு ஒரு சரித்திர புருஷருடைய வாழ்வாக அமைய வேண்டுமேயன்றி ஒரு புராண நாயகருடைய வாழ்வாக இருக்கக்கூடாது. இப்படிப் பார்க்கும்பொழுது முஹம்மது நபி அவர்களுடைய வாழ்க்கை, சரித்திர ஆதாரங்களின் அடிப்படையில் இன்றும் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய வாழ்வாக இருக்கிறது; கர்ண பரம்பரையான கதைகளிலிருந்து உய்த்துரைக்கக்கூடிய வாழ்வாக அது இல்லை.

ஆக, முஹம்மது நபி (சல்) அவர்களுடைய வாழ்வு இரண்டு முக்கியமான அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, மனித வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கிக் கொண்டதாக அது அமைந்திருப்பது. இரண்டு, சரித்திர பூர்வமாகத் தெரிந்து கொள்ளக்கூடியதாக அது அமைந்திருப்பது. இவையன்றி, மூன்றாம் அம்சம் ஒன்றும் இருக்கிறது. முஹம்மது நபி (சல்) அவர்கள் பிறக்கும்பொழுதே ‘நபி’ என்ற அந்தஸ்தை ஏற்றவர்களாகப் பிறக்கவில்லை. அவர்களுடைய 40-ஆவது வயதில்தான் இறைவன் அவர்களுக்கு நபித்துவத்தை அருளி, அவர்களைத் தன் திருத்தூதரென்று அறிவித்தான். இந்த முறையில் அவர்களுடைய வாழ்க்கை இரு பகுதியாக அமைந்திருக்கிறது: ஒன்று, நபித்துவத்துக்கு முந்தியது; மற்றொன்று நபித்துவத்துக்குப் பிந்தியது. நபித்துவத்துக்குப் பிந்திய வாழ்க்கை இறைவனுடைய ஆணையின் அடிப்படையில் அமைந்திருந்தது. அமைந்துதான் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் வற்புறுத்தத் தேவையில்லை. நபித்துவத்துக்கு முந்திய வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. இவ்விரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்குமானால், மயக்கத்துக்கு இடம் உண்டாவதோடன்றி, அவர்களை ‘நபி’ என்று ஏற்றுக் கொள்வதற்குத்  தயக்கத்திற்கும் இடம் கொடுத்திருக்கும். அப்படி இல்லாமல், முந்திய வாழ்க்கை பிந்திய வாழக்கையோடு கொஞ்சங்கூட முரண்பாடு இல்லாமல் பொருந்துவதாகவும் தழுவுவதாகவும் இருக்குமானால் நபித்துவம் இயற்கையானதாகவே அமைந்துவிடும். அதாவது, முந்தின வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்தவர்கள் அப்படிப்பட்ட ஓர் உன்னத வாழ்க்கையை வாழ்ந்தவர் நபித்துவத்துக்குத் தகுதியானவரே என்று பிறர் ஏற்றுக் கொள்ளும்படியாக அமைந்திருக்க வேண்டும். அப்படியே அமைந்தும் இருந்தது. இதையும் சரித்திரம் பதிவு செய்து வைத்திருக்கிறது.

முஹம்மது நபி (சல்) அவர்களுடைய வாழ்க்கையிலும் சொல்லிலும் செயலிலும் வேறு ஒரு சிறப்பும் அமைந்திருக்கிறது. அவர்களைத் தங்கள் மதத் தவைர் என்று முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டதன்றி, அவர்கள் அனித வர்க்கத்தின் ஒரு தலைவர் என்று மதம், மொழி, நாடு, காலம் ஆகிய எந்த அடிப்படையிலும் வேறுபாடின்றி யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அவர்களை ஒரு மதத் தலைவர் என்று மாத்திரம் எண்ணிக் கொண்டதன் காரணமாக முஸ்லிம் அல்லாதார் பெரும்பாலோர் அவர்களைப்பற்றியோ அவர்களது வாழ்க்கையைப் பற்றியோ தெரிந்து கொள்ள முற்படவில்லை. அப்படி அவர்கள முற்படாமல் இருப்பதற்கு அவர்கள்தாம் முழுக்க முழுக்கக் காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. அவர்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்கும் முறையில் அவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய நூல்களை முஸ்லிம்கள் போதுமான அளவுக்கு எழுதித் தரவும் இல்லை.

இந்தக் குறையை நீக்கும் வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது. இதற்கு முன்னாலும் வேறு சில அறிஞர்கள் முஹம்மது நபி (சல்) அவர்களுடைய தூய வாழ்க்கையைத் தமிழிலே எழுதி இருக்கிறார்கள். அவற்றில் சில இப்போது கிடைப்பதில்லை. இந்த நூல் எல்லோரும், குறிப்பாக முஸ்லிம் அல்லாதார், நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை ஒரளவாவது சரியாகத் தெரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த நூலின் ஆசிரியர் ஜனாப் N.B. அப்துல் ஜப்பார், B.A. ஆவார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்களுள் ஒருவராக இருந்த காலஞ்சென்ற ஜனாப் அல்ஹாஜ் பா. தாவூத்ஷா சாஹிப், B.A. அவர்களுடைய குமாரர். காலஞ்சென்ற தாவூத்ஷா சாஹிப் அவர்களுடைய இஸ்லாமியப் பணியையும் தமிழ்ப் பணியையும் தமிழுலகம் என்றும் மறக்க முடியாது! இன்றைய தமிழ் முஸ்லிம்களிடையே விஞ்ஞான அடிப்படையில் இஸ்லாமிய உணர்வு மேலோங்கி இருப்பதற்கு அவர்களுடைய எழுச்சிமிக்க எழுத்தும் பேச்சும் பெருத்த அளவுக்கு காரணமென்று நிச்சயமாகச் சொல்லலாம். இஸ்லாத்தை அணுகிய அவர்களுடைய குறிப்பிட்ட போக்குப் பல முஸ்லிம்களுக்கு அவர்களை எதிரிகளாக்கிற்று என்றாலும், தாம் நம்பியவற்றிலிருந்து கிஞ்சித்தும் வளைந்து கொடுக்காமல் உறுதியுடனம் வலுவுடனும் தங்களுடைய கருத்துகளை அவர்கள் எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்திக் கொண்டே வந்தார்கள். அவர்களுடைய தமிழறிவு பரந்தது. பழம்பெரும் தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் அவர்களுக்குப் பயிற்சி உண்டு. அவர்களுடைய பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் இலக்கண பிதி வரம்புக்குட்பட்ட தூய தமிழாகவே இருக்கும். பேச்சுநடை என்னும்போது மேடைப்பேச்சு நடை என்பது ஒன்று; வீட்டிலே பேசுகின்ற நடை என்பது ஒன்று. நம்மில் பெரும்பாலோருக்கு இவ்விரு நடைகளும் வெவ்வேறாகவே இருக்கும். ஆனால் காலஞ்சென்ற தாவூத்ஷா சாஹிப் அவர்களுக்கோ இவ்விரு நடையும் ஒன்றாகவே இருந்தன. அவர்கள் பேச்சைக் கேட்டவர்கள்தாம் இதன் லாவகத்தை அனுபவித்து மகிழ்ந்திருக்க முடியும்.

அத்தகையவர்களுடைய குமாரர் இந்நூலின் ஆசிரியர். தந்தையினுடைய எல்லாப் பணிகளிலும் உடன் இருந்து பயின்றவர்; அனுபவம் பெற்றவர். தந்தையினுடைய திருக்குர்ஆன் தமிழ்த் தெளிவுரைக்குக் கூட்டாசிரியராக இருக்கிறவர். ஆகவே இஸ்லாத்தைப் பற்றியும் அதன் திருத்தூதராகிய நபிகள் நாயகம் அவர்களைப் பற்றியும் எழுதுவதற்குத் தகுதி பெற்றவர். இந்தத் தகுதி இந்நூலில் தெளிவாகத் தெரிகிறது. சரித்திர ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும் நாயகம் அவர்களுடைய வாழ்க்கையைத் தமிழர்களுக்காக அவர் எழுதியிருக்கிறார். நாயகம் அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றி அரபி, பார்சி, உருது ஆகிய மொழிகளில் அல்லாமல் உலகின் அனைத்துப் பாஷைகளிலும் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை எழுதியவர்களில் பலர் முஸ்லிம் அல்லாதார். அவர்களில் சிலர் சரித்திர ஆதாரங்களின்படி நாயகம் அவர்களுடைய வாழ்க்கை எப்படி அமைந்திருந்ததோ அப்படியே எழுதி இருக்கிறார்கள். வேறு சிலர் தங்களுடைய சொந்தக் கோணங்களிலிருந்து அந்த வாழ்க்கையை விமர்சித்திருப்பதோடு விளக்கம் கொடுக்கவும் முயன்றிருக்கிறார்கள். இத்தகைய நூல்கள் பலவற்றைப் படித்துத் தாம் தெரிந்து கொண்டவற்றிலிருந்து இதன் ஆசிரியர் இந்த நூலைப் படைத்திருக்கிறார். சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் சரித்திர ஆதாரங்களின்  அடிப்படையில் அமைந்தவையே ஆயினும், தாம் குறிப்பிடப்போகும் கருத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் தமிழ் மொழியின் மரபுப்படியும் சம்பாஷணைகளிலும் விளக்கங்களிலும் ஆசிரியர் தம் போக்குக்கு இடம் கொடுத்திருக்கிறார்.

நல்ல தமிழ் நடை, இலக்கண விதிகளுக்கு உட்பட்ட வாக்கிய அமைப்பு, பொருத்தமான சொல்லாட்சி ஆகியவை இந்நூலுக்கு அணி செய்கின்றன.

ஆனால், ஒன்றை மாத்திரம் எடுத்துக்காட்ட வேண்டும். முஸ்லிம்களுடைய கருத்திலும் கொள்கையிலும் நபிகள் நாயகம் அவர்களுக்கு இருக்கும் ஒப்புயர்வற்ற அந்தஸ்தின் காரணமாக அவர்களைப்பற்றிக் கூறும் பொழுதெல்லாம் இம்மியளவும் மரியாதைக் குறைவு உண்டாகக்கூடாது என்பதற்காக, “நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள், செய்தார்கள்; முஹம்மது நபி (சல்) அவர்கள் சொன்னார்கள், செய்தார்கள்” என்று சொல்வதே வழக்கமாகிவிட்டது. இலக்கண விதிப்படி ‘ஆர்’ என்பதே பலர்பால் படர்க்கை விகுதியாகி விடுவதனால், அதுவே மரியாதைப் பன்மை விகுதியாகி விடுகிறது; அதற்கு மேலும் ‘கள்’ என்னும் மற்றொரு விதியைச் சேர்க்க வேண்டாம் என்று விவாதிக்கக் கூடும். ஆனால், உணர்ச்சிகள் இடம் பெறும் இடத்து, இந்த விவாதம் மாத்திரம் பதிலாகி விடாது. மேலும், இந்தக் காலத்தில் ‘ஆர்’ விகுதியோடு ‘கள்’ என்பதையும் சேர்த்து எழுதுவதும் பேசுவதும் எல்லாத் தமிழ் மக்களுக்குமே சர்வ சாதாரணமாகிவிட்டது. இவை எல்லாவற்றையும் உத்தேசித்து ஆசிரியர் அவர்களும் ‘ஆர்’ என்ற விகுதியோடு நின்று விடாமல் ‘கள்’ என்பதையும் சேர்த்து ஆண்டிருக்கலாம். இதை நான் எடுத்துக்காட்டுவது நூலின் பயனை எந்த விதத்திலும் குறைத்து விடதாது. முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதாரும் இஸ்லாத்தின் திருத்தூதராகிய முஹம்மது நபி அவர்களுடைய வாழ்க்கையைக் குழுப்பத்திற்கு இடமின்றித் தெரிந்து கொள்வதற்கு இந்நூல் பெருத்த அளவில் உதவுமென்பதில் சிறிதும் ஐயமில்லை.

-மு.மு. இஸ்மாயீல்

சென்னை-4

24-1-1978

 

குறிப்பு: ஜனாப். மு.மு. இஸ்மாயீல் அணிந்துரையின் இறுதியில் தெரிவித்துள்ள ஆலோசனை இந்த இணையப் பதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது.

 

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>

Related Articles

Leave a Comment