“என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே! நான் தனியாகவே சென்று அந்த அமைதியைக் குலைக்கும் சமூக விரோதியாகிய முஹம்மதை எனது வாளால் இரு துண்டாக வெட்டி வீசி எறிந்து வந்துவிடுகிறேன்!” என்று உமர் மார்தட்டி எழுந்தார். அபூஜஹ்லுக்கோ உற்சாகம் கரை

புரண்டு விட்டது. இதுவரை இப்படி ஒரு துணிச்சல் மிக்க வீரர் முன் வராத காரணத்தால் செயலற்றுக் கிடந்த குறைஷியர் சமுதாயம், இந்த உமரின் வெறித்தனத்துக்கு மேலும் சூடு ஏற்றிவிட்டது. மிகவும் அற்பமான சிறுபான்மையினர்களின் தலைவரான முஹம்மதைக் கொன்று விட்டால், கொஞ்ச நாட்களுக்கே சலசலப்பு இருக்குமென்றும்  மிகப் பெரும்பான்மையினராகிய எல்லாக் குறைஷிகளும் ஒன்றாய்ச் சேர்ந்து மிகச் சடுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்தி, சகஜ நிலைமைக்குக் கொண்டுவந்துவிட முடியும் என்றும் தப்புக் கணக்கிட்ட அந்த எதிரிகள் உமரை மேலும் உற்சாகப்படுத்தி, “வெற்றியுடன் மீள்க! முஹம்மதின் தலை தரையில் உருளட்டும்!” என்று முடுக்கி விட்டார்கள்.

துடிக்கும் உதடுகள், உருவிப் பிடித்த வாள், தீப்பொறி கக்கும் கண்கள், நற நறவென்று மெல்லும் பற்கள், நெருப்பு மிதிக்கிற வேகத்தில் பாய்ந்தோடும் கால்கள், ஒரே வீச்சில் இரு துண்டுகளாக வெட்டியெறிந்து விடவேண்டும் என்னும் ஒரே ஆவேசம் — இந்த லட்சணங்களுடன் உமருப்னுல் கத்தாப் வெறித்தனமாக வீதியூடே பாய்ந்து, நபியவர்கள் தங்கிப் பிரசாரம் செய்து வந்த அர்க்கம் என்பவரின் இல்லத்தை நோக்கி ஏகிக் கொண்டிருந்தார்.

கடும் ரோஷத்துடன் படமெடுத்துக் கொண்டு பறந்து பாய்கிற ராஜநாகத்தைக் கண்டு வழியிலுள்ளோர் தம்மையறியாமலே பதறி விலகியோடுவதைப் போல், இந்த ராட்சசக் கோலத்துடன் ஓடுகிற உமரைக் கண்டு யாவரும் வீதியின் இருபுறமும் ஒதுங்கி நின்று விட்டார்கள். அப்போது ஒரு முஸ்லிம் தற்செயலாக அவரெதிரே குறுக்கிட்டு, “கத்தாபின் மைந்தரே! ஏனிந்தக் கோலம்? யாரைக் கொல்லும் வெறியுடன் இப்படி நீர் ஓடுகிறீர்?” என்று கேட்டார். மூச்சு இரைக்க இரைக்க, நாசித் துளைகளிலிருந்து நெருப்புப் புகை கக்க, “என்ன கேள்வி இது? நம் சமூக துரோகியை, நிலையான அமைதியை நிஷ்டூரமாகக் குலைத்து வருகிற முஹம்மதைக் கொன்று தீர்க்கத்தான் நான் போகிறேன். சற்றே விலகி வழி விடு!” என்று உமர் சீறினார். (இவ்வாறு எதிரே குறுக்கிட்டவர் ஒரு முஸ்லிம் என்பதை உமர் அறியார். அந்த மனிதரும் பழைமை விரும்பி என்கிற நினைவில்தான் அவர் நின்று பதில் பேசினார். இன்றேல், தமது வெறியைத் தீர்த்துக் கொள்ள அவர் அந்தக் குறிக்கிட்ட மனிதரை முதலில் துண்டு துண்டாகக் கூறு போட்டு விட்டிருப்பார்!)

“அது சரி. உமக்கு ஃபாத்திமா என்றொரு தங்கை உண்டல்லவா?”

”ஆமாம். அவளுக்கென்ன?”

“அவளுக்கொரு கணவர் இருக்கிறாரல்லவா? அவர் பெயர் ஸயீது தானே?”

“ஆமாம். அவன் என் மைத்துனன்… இதெல்லாம் என்ன வீண் கேள்வி? வழியை விட்டு விலகு. நீ கேட்கிற அனாவசியமான கேள்விகளுக்கு நின்று பதில் சொல்ல எனக்கு நேரமில்லை!”

“உம்முடைய வழியை நான் வீணே மறிக்கவில்லை. ஆனால், முஹம்மதைக் கொல்லப் புறப்பட்ட நீர், உம்முடைய சொந்தத் தங்கையும் மைத்துனரும் அந்த முஹம்மது மீது நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பதை இன்னம் உணராத ஓர் ஏமாளியாயிருக்கிறீரே என்பதை நினைத்துத்தான் நான் பரிதவிக்கிறேன். பிறருக்கு வைத்தியம் செய்கிறவன் முதலில் தனக்கிருக்கிற வியாதியைப் போக்கிக் கொள்ள வேண்டுமல்லவா?”

சாட்டை வீச்சினால் சுறீரென்று கசையடி பெற்ற கைதி போல் உமர் நடு வீதியில் உடல் நெளிந்தார். “என்ன! என் வீட்டிலேயே சதித் துரோகமா? முதலில் இதைக் கண்டறிந்து பரிகாரம் தேடவேண்டும்,” என்று அவர் முணு முணுத்தார். முஹம்மது (ஸல்) இருந்த அர்க்கம் என்பவரின் இல்லத்தை நோக்கி நடந்த அவரது கால்கள் இப்போது தம் தங்கையின் வீடு நோக்கித் திரும்பின. ஓருயிரைக் குறிபார்த்து ஏந்திப் பிடிக்கப்பட்ட வாளாயுதம் இப்போது ஈருயிர்களைப் பதம் பார்க்க விரைந்தேகிற்று!

அவ்வில்லத்தில் அப்போது கப்பாப் என்னும் முஸ்லிம் தோழர் வந்து, ஃபாத்திமாவிடமும் அவர் கணவர் ஸயீதிடமும் புதிதாக வெளிவந்த சில குர்ஆன் திருவசனங்களை ஒப்பித்துக் காட்டி விளக்கம் கூறிக் கொண்டிருந்தார். இம் மூவரும் மெய்ம்மறந்து அந்த இறை வசனங்களின் இன்பத்தைச் சுவைத்துக் கொண்டிருக்கையில், கோபாவேசத்துடன் கையில் வாளேந்தி அங்கு வந்து நிற்கும் உமரை அண்ணாந்து பார்த்தார்கள். சிட்டுக் குருவிக் கூட்டத்தில் கல் வந்து வீழ்ந்தாற் போல் அம் மூவரும் மூலைக்கொருவராகச் சிதறி ஓடினார்கள். அவ்வாறு ஓடும்போதே தங்கள் கைகளில் வைத்திருந்த திருக் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டிருந்த ஏடுகளை மறைத்துக் கொண்டார்கள். எனினும், உமர் அந்த வீட்டினுள் நுழையு முன்பே உள்ளே பாராயணம் நடந்து கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டேதான் வந்தாராகையால், தம் மைத்துனரைத் தாவிப் பிடித்து, தாடியைப் பற்றி ஒரு குலுக்குக் குலுக்கி, “இங்கே என்ன நிகழ்ந்தது? என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள்?” என்று கர்ஜித்தார்.

கணவரைக் காப்பாற்ற ஃபாத்திமா பாய்ந்தோடி வந்து உமரெதிரே நின்று தடுக்கவே, அந்தக் கூரிய வாள் முனை அவ்வம்மையின் நெற்றியையும் தலையுச்சியையும் கிழித்து விட்டது. உதிரம் ஆறாய்ப் பெருகிற்று. என்றாலும், அத் தீரமிக்க பெண்மணி வழிகிற இரத்தத்தைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே முரட்டுத் துணிச்சலுடன், “அண்ணே! சுற்றி வளைத்துப் பேச விருப்பமில்லை. நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். எங்களை என்ன வேண்டுமானாலும செய்து கொள்! நாங்கள் இஸ்லாத்தை மனமார ஏற்றுக் கொண்டிருக்கிறோம். எங்கும் நிறைந்தவன் ஒரே இறைவன்தான். அவனன்றி வேறு தெய்வமேதும் இல்லை!” என்று பொரிந்து தள்ளினார்.

கத்திக் காயமுற்று வேதனைப்படுகிற இந்த வேளையிலும் இவ்வளவு துணிச்சலுடன் தம் தங்கை பேசுவதைக் கண்ட உமர் சற்றே நிதானமடைந்தார்.

கத்திக் காயமுற்று வேதனைப்படுகிற இந்த வேளையிலும் இவ்வளவு துணிச்சலுடன் தம் தங்கை பேசுவதைக் கண்ட உமர் சற்றே நிதானமடைந்தார். உதிரம் சொட்டும் முகமும் தளராத வைராக்கியமும் பெற்று நிற்கும் ஃபாத்திமாவின் நிலை ஏனோ அந்த முரட்டு மூர்க்கரின் சீற்றத்தை ஒரு நொடியில் அடக்கிவிட்டன. அவர் வாளாயுதத்தைக் கீழே எறிந்துவிட்டு, அடி உதைகளையும் நிறுத்தி, “என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள்? அதை எனக்குக் காண்பியுங்கள்!” என்று மைத்துனரையும் தங்கையையும் மாறி மாறிப் பார்த்துக் கேட்டார்.

“அண்ணே! இப் புனித ஏடுகளைத் தொடும் பாக்கியம் உனக்கில்லை. நீசத்தனமான உனது கரங்கள் அவற்றின் மீது பட்டால் அவை பவித்திரம் இழந்துவிடும்; நீயும் அவற்றைக் கிழித்தெறிந்து விடுவாய். உனது எண்ணம் பரிசுத்தமாயிருக்குமானால், முதலில் உனது கைகளையும் முகத்தையும் தண்ணீரில் கழுவிப் புறப் பரிசுத்தத்தை உண்டுபண்ணிக் கொள்!” என்றார் ஃபாத்திமா.

உமர் அப்படியே கழுவிக் கொண்டார். திருக் குர்ஆனின் இருபதாவது அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்கள் அடங்கிய ஏடுகள் அவரிடம் நீட்டப்பட்டன. நன்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்த உமர் அத் திருவாக்கியங்களைப் படித்துப் பார்த்தார். இதுவரை அவரது உள்ளத்தில் ஊறிப்போய்க் கிடந்த அசுசியான பாசிக் கறை அக்கணமே ஒரு நொடியில் மறைந்துவிட்டது. இறுகிக் கிடக்கும் கருங்கற் பாறையில் எங்கிருந்தோ ஊற்றுப் பெருக்கெடுப்பது போல், அவருடைய கடிய நெஞ்சம் பாகாயுருகிக் கண்களிலிருந்து சில சொட்டுக் கண்ணீரைக் கசியவிட்டது!

இதுவே தக்க சமயமென்று கண்ட கப்பாப் தாம் பதுங்கியிருந்த மூலையிலிருந்து வெளிப்பட்டு, ஸயீதைக் கைகோத்துப் பிடித்துக் கொண்டு, “உமருப்னுல் கத்தாப்! எங்கும் நிறைந்த ஏக இறைவனின் மகிமையைப் பார்த்தீரா? சோலைவனக் குளிர்த் தென்றலை அனுபவிக்க வேண்டிய நீர் இத்தனை காலம் கடுஞ்சுரப் பாலைநிலக் கானல் நீரைத் தேடித் திரிந்தீரே! படைத்த உமது ரக்ஷகனை நீர் வணங்காமல், நீரே மண்ணைக் குவித்து ஓர் உருவைப் படைத்து அதற்கு உமது சிரத்தை வளைத்தீரே! இப்போதாவது உண்மையுணர்ந்தீர். இதுவும் அவனது கிருபையே!” என்று ஆர்ப்பரித்தார்.

இதே நேரத்தில் அர்க்கம் என்பவரின் இல்லத்தில் நபிபெருமானார் நாற்பது தோழர்களிடையில் அமர்ந்து உபதேசம் புரிந்து கொண்டிருந்தார்கள். குறைஷிகள் கூட்டத்தில் நிகழ்ந்த சதித் திட்டத்தையும் உருவிய வாளுடன் உமர் இந்தப் பக்கமாக வெறியுடன் ஓடிவந்து கொண்டிருக்கிறார் என்பதையும் அங்கு வந்து ஒருவர் தெரிவித்தார். எல்லாரும் பெருந்திகிலடைந்து பதறிவிட்டார்கள். ஏதாவது பெரிய அற்புதம் தோன்றினாலன்றி, நபி (ஸல்) உட்படத் தாங்கள் அத்தனை பேரும் உமரீன் சீற்றத்துக்கு இரையாகப் போவது உறுதி என்று அவர்கள் முடிவு கட்டிவிட்டார்கள். கிலிபிடித்த உளத் தடுமாற்றத்துடன் வீட்டின் கதவை அழுத்தி மூடித் தாளிட்டுக் கொண்டு, ஒவ்வொரு வினாடியும் அந்த மூர்க்கரின் வருகையை எதிர்பார்த்து அவர்கள் காத்திருந்தார்கள். தகவல் வந்து பல நிமிடங்களாகியும் இன்னம் அவர் வந்து கதவைத் தட்டக் காணோமே என்று குழம்பியிருந்த அவர்களிடையே நபியவர்கள் மட்டும் சிறிதும் சலனமடையாமல் தொடர்ந்து போதனையை நிகழ்த்திய வண்ணமிருந்தார்கள்.

அச்சமயத்தில் தெருக் கதவு தடதட வென்று தட்டப்பட்ட ஒலி எழுந்தது. ஒரு தோழர் மெதுவாய் எழுந்து, பதுங்கி நடந்து, கதவுத் தொளையினூடே கண்ணைப் பொருத்திப் பார்த்தார். அங்கே உமர் தமது தோளிலே கத்தியைத் தொங்கவிட்டு நிற்பதைக் கண்டு அச்சத்துடன் சபைக்கு வந்து, “அதோ வந்துவிட்டது, நாம் எதிர்பார்த்த பேராபத்து! மரண தூதன் கதவைத் தட்டுகிறான்!” என்று அவர் மெல்லிய குரலில் பதஷ்டத்துடன் அறிவித்தார். நபியவர்களோ, “கதவைத் திறவுங்கள். உமரை உள்ளே வரவிடுங்கள். ஒன்றும் தலை போகாது!” என்று கட்டளையிட்டார்கள். பசியுடன் உறுமும் சிங்கத்தின் கூண்டுக்குள் வலியத் தலையை நுழைக்கும் வேதனையுடன் அத் தோழர் கதவைத் திறந்துவிட்டார்.

மதகைத் திறந்து விட்டதும் மோதிப் பாயும் வெள்ள நீர் போன்று உமர் அந்த வாசற்படியை நொடியிற் கடந்து, கண்ணீர் அருவியாய்ப் பெருகியோட, ஓடி வந்த மூச்சிறைக்க, பொங்கியெழும் அழுகையை அடக்கித் தேம்பித் தேம்பிப் புலம்பிய வண்ணம் கழுகுப் பாய்ச்சல் வேகத்தில் பெருமானாரின் கரங்களிடைப் பாய்ந்து முகம் புதைத்து, “ஏ அல்லாஹ்வின் தூதரே! நான் சத்தியமாக அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வின் மீதும் அவன் அனுப்பி வைத்திருக்கும் திரு நபியாகிய தங்கள் மீதும் நம்பிக்கை கொண்டுவிட்டேன், நம்பிக்கை கொண்டு விட்டேன்! அடியேனைத் தாங்களே மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். தங்களை அல்லால் எனக்கு வேறு புகலில்லை, கதி இல்லை!” என்று சிறு குழுந்தை போல் விம்மி விம்மி ஏங்கியழுதார்.

நம்ப முடியாத இப் பேரற்புதப் பெருங்காட்சியைக் கண்ட அங்கிருந்த அத்தனை பேரும் ஆனந்தக் கண்ணீர் நேத்திரங்களைத் திரையிட, ஏக காலத்தில் ஒரே பெருங் குரலில் அல்லாஹு அக்பர்! என்று வானதிர முழங்கினார்கள். அப்பொழுது எழுந்த அப் பேரொலி அக்ரமின் வீட்டைக் கடந்து, மைதான வெளியைத் தாண்டி, எதிரே நின்றிருந்த குன்றின் மீது மோதி, இன்னம் தீர்க்கமாக எதிரொலித்தது. அவ்வெதிரொலி ரீங்காரமிட்டுக் கஅபாவின் திசை நோக்கி முழங்கவே, அங்கு ஆவலுடன் எதிர்பார்த்து அமர்ந்திருந்த அபூஜஹ்லும் அவனுடைய சகாக்களும் ஒன்றும் புரியாமல் திகைத்தார்கள்.

சீர்திருத்தவாதியென்று சொல்லிச் சீர்கேட்டை உண்டு பண்ணி வரும் ‘பொய் வேஷக்கார’ரின் சிரத்தைச் சீவிக் கையோடு கொணர்ந்து, தங்கள் யாவரையும் களிப்பிடை உமர் மூழ்கடிக்கப் போகிறாரென்று கனவு கண்டவாறு போதையுள் மூழ்கிக் கற்பனையுலகில் மிதந்து கொண்டிருந்த அக் காட்டுமிராண்டிக் குறைஷியரின் செவித் துளைகளுக்குள் “அல்லாஹ்வே மிகப் பெரியவன்! — (அல்லாஹு அக்பர்)” என்னும் ஒலியலையானது பத்துக் கிலோ எடையுள்ள உருக்கி வார்த்த காரீயமே போல் பாய்ந்து, துடிதுடிக்கச் செய்து விட்டது.

குறைஷிகள் முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்லும் திட்டத்தில் மட்டும் தோல்வி காணவில்லை; ஆனால், தங்களுக்குப் பக்க பலமாயிருந்து பல தெய்வ வணக்க உருவ வழிபாடுகளுக்குக் கொடி பிடித்து நின்ற பெருந்தீரரான, முரட்டு வீரரான, குறி தப்பாமல் வாள் வீசித் தலைகளை உருளச் செய்கிறவரான, நன்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்த ஒரு முரட்டு ஆத்மாவாகிய உமரையே (ரலி) இழந்துவிட்டார்கள். அவர் சென்றவிடத்தில் சண்டை நிகழ்ந்து கொல்லப்பட்டுப் போயிருந்தாலும் அவர்கள் அவருக்கென்று விழா எடுத்திருப்பார்கள்; அவரையும் ஒரு கடவுளாக ஆக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அந்தோ பரிதாபம்! அவரை எதிர்க் கட்சித் தலைவராக அவர்கள் முஸ்லிம்களின் கரத்திடைப் பறி கொடுத்து விட்டார்கள்.

குறைஷிகள் கட்டி வந்த மனக் கோட்டையில் இடி விழுந்தது. இதுவரை கஅபாவின் சுற்று வட்டத்தில் கேட்டறியாத பேரொலியாகிய ‘அல்லாஹு அக்பர்’ என்னும் முழக்கம் எதிரொலியாக அங்கு வந்து மோதும்படி செய்து கொண்டார்கள். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டு விட்டது! நினைக்கும் கேடு தனக்கே வந்தது! போதிய பலமின்றித் தவழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்த புது மதக் கோட்பாடு புதிய பொலிவொடு திகழ்ந்தது.

இப் பெரும் சம்பவம், பெருமானார் நபிப் பட்டம் பெற்ற நான்காம் ஆண்டில் நிகழ்ந்தது.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>

Related Articles

Leave a Comment