அப்ரஹாம் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் நபி இப்ராஹீம் (அலை) தம் மனையாட்டியையும் மைந்தர் இஸ்மாயீலையும் (அலை) மக்கா நகரிலுள்ள குன்றுகளிடையே பல நூற்றாண்டுகளுக்கு முன் விட்டுச் சென்றார். அந்தத் தீர்க்கதரிசியின் குலத்தனிர்

தலைமுறை தலைமுறையாக அங்கே பெருகி வந்தார்கள். அக் குலத்தின் நாற்பதாவது தலைமுறையில் தோன்றியவர் அத்னான் என்பவர் ஆவார். இந்த அத்னானின் ஒன்பதாவது சந்ததியினராக நஜ்ர் பின் கினானா என்பவர் தோன்றினார். இவர் தோற்றுவித்த வம்சம் ‘குறைஷி குலம்’ என்று அழைக்கப்படுகிறது. அக்கால அநாகரிகச் சூழ்நிலையில் கொஞ்சம் நாகரிகமும் சிறிது அறிவுக் கூர்மையும் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் வர்த்தகம் புரிந்து நேர்மையாகப் பொருளீட்ட வேண்டும் என்னும் பொறுப்புணர்ச்சியும் பெற்ற குலத்தினராகக் குறைஷிகள் விளங்கினார்கள்.

இந்தக் குறைஷி குலத்தின் ஒன்பதாவது சந்ததியில் குஸையி என்பவர் தோன்றினார். இவர் எப்படிப்பட்ட ஒரு கண்ணிய புருஷராக இலங்கினாரென்றால், அரபு நாட்டின் மிக உயர்ந்த, அதிகமும் பெருமை வாய்ந்த பதவியாகக் கருதப்பட்ட கஅபா ஆலய நிர்வாகம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. உருவமிலா ஓர் இறைவனை வழிபடவென்று உலகில் முதன் முதலாகத் தோன்றிய ஆலயம் கஅபா என்று சரித்திர ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்கின்றனர். அத்துணைப் புராதனமிக்க புனித ஆலயம் அது. எனவே, அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் கண்ணிய புருஷன் இக்கால ஐ. நா. சபைப் பொதுச் செயலாளரோ அல்லது அமெரிக்க நாட்டு ஜனாதிபதியோ பெற்றுவரும் கௌரவத்தை நிகர்த்த பெருமைக்கு ஆளானதில் வியப்பில்லை. இந்த ஆலய நிர்வாகியாகிய குஸையி என்பவரின் பேரர் வயிற்றுப்பிள்ளை அப்துல் முத்தலிப் ஆவார். அப்துல் முத்தலிபின் பேரராகத் தோன்றிய பெருமானே முஹம்மத் (ஸல்)* ஆவார்கள்.

(இறைவனும் வானவர்களும் கூடத் திருநபி மீது வாழ்த்து வழங்கிப் பெருமைப்படுத்துகிறார்களாகையால், ஒவ்வொரு முஸ்லிமும் தவறாமல் அவரை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறார் என்பது திருக் குர்ஆனிடும் கட்டளை. எனவே, நபியின் பெயர் உச்சரிக்கப்படும்போது ‘இறைவனின் சாந்தியும் சமாதானமும் இவர் மீது சொரியக் கடவன!’ என்னும் பொருளமைந்த ‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ என்று வாழ்த்துக் கூறுவது கடனாம். இந்த வாழ்த்தின் சுருக்கமே ‘ஸல்’ என்று குறிக்கப்படுகிறது. இந் நூலில் எங்கெல்லாம் திருநபியின் பெயர் வருகிறதோ அங்கெல்லாம் இதைக் கொண்டு கூட்டிப் படிக்க.)

பாட்டனார் அப்துல் முத்தலிப் தலைமுறைப் பாத்தியதையாகிய கஅபா ஆலய நிர்வாகப் பணியைச் செவ்வனே ஆற்றிவரும்போது, ஆண்டுதோறும் மக்கா நகருக்கு வந்து குழுமுகின்ற பல்லாயிரக் கணக்கான யாத்திரிகர்கள் வர்த்தகம், வாணிபம் முதலியவற்றால் நிரம்பவும் பொருளாதாரப் பெருக்கத்தை உண்டு பண்ணிச் சென்றார்கள். எனவே, இயற்கை வளம் ஏதுமில்லாத மக்கா நகரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் வாழ்ந்த மக்கள் கஅபா ஆலய மகத்துவம் காரணமாகவும் அங்கு வந்து செல்லும் யாத்திரிகர்களின் செல்வப் பரிவர்த்தனை காரணமாகவும் மிகவும் செல்வந்தர்களாகவும் பொருள்வளம் பெற்றவர்களாகவும் உயர்ந்தார்கள். இதைக் கண்டு அரபு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த தலைவர்கள் வயிறெரிந்தார்கள். இவ்வாறு வயிற்றெரிச்சலுற்றவர்களுள் மிகவும் பிரபலமானவன் அப்ரஹா என்னும் ஒரு கிறித்தவத் தலைமையதிகாரியாவான்.

இந்த அப்ரஹா என்பவன் எமன் மாநிலத் தலைநகராகிய ஸன்ஆ என்னும் பட்டணத்தில் ஒரு நேர்த்தியான மாதா கோயிலை நிர்மாணித்தான். இனிமேல் அரபு நாட்டுக்கு வரும் பல்லாயிரக் கணக்கான யாத்திரிகர்கள் தங்கள் செல்வத்தையும் வர்த்தகப் பண்டங்களையும் சுமந்து கொண்டு மக்காவுக்குச் செல்ல மாட்டார்கள், கஅபா ஆலயத்தை தேடிச் செல்ல மாட்டார்கள், மாறாக ஸன்ஆவுக்கே வருவார்கள், இங்குள்ள தேவாலயத்திலேயே குழுமுவார்கள்; இதனால் எமன் வட்டாரம் பொருளாதார முன்னேற்றத்தைப் பெற்றுக் கொள்ளும், யாவரும் பணக்காரர்களாக உயர்ந்து விடுவர் என்று தப்புக் கணக்குப் போட்டான். தனது எண்ணம் பகற் கனவாகி விட்டதையும் தொடர்ந்து யாத்திரிகர்கள் மக்காவுக்கே சென்று ஹிஜாஸ் மாநிலத்தையே வளப்பமிக்கதாக ஆக்கி வருவதையும் அப்ரஹா கண்டு அதிர்ச்சியுற்றான். ஒரு பெரும் படையைத் திரட்டிச் சென்று மக்கா வாசிகள் மீது போர் தொடுத்து, அவர்களைக் கொன்று குவித்து, கஅபா ஆலயத்தையும் தகர்த்துத் தரை மட்டமாக்கிவிட்டால் எல்லாம் சரிப்பட்டு விடுமென்று அவன் பகற் கனவு கண்டான். இந்தப் போரில் தான் வென்றுவிட்டால் சகல லாபங்களையும் இனி எமன் மாநிலமே அடையும் என்பது அவன் கொண்ட பேராசையாகும். இப் பேராசை அவனை எந்த அளவுக்கு உந்திவிட்டதென்றால், கைதேர்ந்த வில் வீரர்களும் ஈட்டி யெறிபவர்களும் ஆயிரக் கணக்கிலடங்கிய பெரும் சேனை யொன்றைத் திரட்டிக் கொண்டு, ஒரு யானைப் படையுடன் அவன் மக்கா மீது படையெடுத்துச் சென்றான் (கி. பி. 571).

அவன் மக்காவுக்கு மூன்று யோஜனைத் தொலைவில் பாசறையிறங்கி, தான் படையெடுத்து வந்திருக்கும் நோக்கம் இன்னதென்றும் உடனே சமாதானத்துக்கு இணங்கிவிட வேண்டுமென்றும் மக்கா வாசிகளுக்குத் தூது விடுத்தான். அதே சமயத்தில் அப்ரஹாவின் படையிலிருந்த சில வீரர்கள் அங்கே மேய்ந்து கொண்டிருந்த சில ஒட்டகங்களைப் பிடித்து வைத்துக் கொண்டார்கள். அந்த ஒட்டகங்களோ மக்காவின் அதிபராகிய அப்துல் முத்தலிபுக்குச் சொந்தமானவை. இந்தத் தகவலறிந்த அப்துல் முத்தலிப் தாமே தனியே புறப்பட்டு, அப்ரஹா தங்கியிருந்த பாசறைக்கு வந்து அவனெதிரில் நின்றார். கஅபா ஆலயப் பாதுகாவலரும் குறைஷித் தலைவரும் மக்கா நகர் அதிபருமாகிய இந்தக் கண்ணிய புருஷர் கஅபா ஆலயத்தைத் தகர்க்கக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டு மன்றாடவே இப்போது இங்கே தன்னெதிரில் வந்து நிற்கிறார் என்று இறுமாந்துவிட்ட அப்ரஹா, “எங்கே வந்தீர்? உங்களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் நிரம்பவும் வசூலித்துத் தரும் கருவியாகிய கஅபாவை நாம் காப்பாற்றித் தர வேண்டுமென்று யாசிக்கத்தானே வந்திருக்கிறீர்?” என்று சுடச் சுடக் கேட்டான். அப்பொழுது மிகவும் நிதானமாகவும் சாந்தமாகவும் அப்துல் முத்தலிப், “இல்லை. அநியாயமாக நீங்கள் கவர்ந்து கொண்டுவிட்ட என்னுடைய 12 ஒட்டகங்களை மரியாதையுடன் திருப்பித் தந்துவிடுங்கள் என்று அறிவிப்புக் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன்,” என்று பதிலளித்தார்.

இது கேட்டு மிகவும் வியப்புற்றுவிட்ட அப்ரஹா, “என்ன, கேவலம் ஒட்டகங்களா? இவற்றின் மீது இவ்வளவு அக்கறை செலுத்தும் நீர் உம்முடைய பாதுகாவலில் இருக்கும் கஅபா ஆலயத்தின் மீது கொஞ்சமும் பரிவு காண்பிப்பதாகத் தெரியவில்லையே! நான் இவ்வளவு தூரம் இப்பெருஞ் சேனையுடன் படையெடுத்து வந்திருப்பது உம்முடைய தருக்கு மிக்க செருக்குக்குக் காரணமான அந்த ஆலயத்தை உடைத்தெறிந்து தூற் பறக்க விடுவதற்காகவே என்பதை நீர் இன்னமும் அறியீரோ?” என்று கோபத்துடன் கேட்டான்.

“என்னுடைய ஒட்டகங்களே எனக்கு முக்கியம். பாவம், வாயில்லா ஜீவன்கள் அவை. நான் அவற்றின் எஜமான். எனவே என்னை நம்பி வாழும் அவற்றின் பாதுகாப்பைத் தேடுவது எனது மகத்தான கடன். அவற்றை எனக்குத் திருப்பித் தந்துவிடு… கஅபாவைப் பற்றி நீ குறிப்பிட்டாய். வாஸ்தவந்தான். அந்த ஆலயத்திற்கு நானல்லன் எஜமான். இறைவன்தான் அதற்கு எஜமான். அவனுக்குத் தெரியும் தனது உடைமையை எப்படிக் காப்பாற்றிக் கொள்வதென்று. அதில் தலையிட எனக்கு அதிகாரமில்லை”.

இது கேட்டு அப்ரஹா பெருநகை நகைத்தான். அப்துல் முத்தலிப் ஏமாற்றத்துடன் இல்லம் திரும்பினார். எல்லாக் குறைஷிகளும் இக்கணமே மக்கா நகரைக் காலி செய்துவிட்டு, பந்தோபஸ்தான வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்தார். மூர்க்க வெறியுடன் பெரும் படை திரட்டிப் பாய்ந்து வரும் எதிரியை எதிர்த்துச் சமாளிக்க வழியில்லை என்பதால் இம் முடிவு தீர்மானிக்கப்பட்டது. அப்ரஹாவும் அவனது பெரும் பட்டாளமும் வெட்டுக்கிளிப் படைபோல் மக்கா மீது வந்து மோதினர். இறுதியாக நகரைவிட்டு வெளியேறுமுன் அப்துல் முத்தலிப் கஅபா ஆலயச் சுவர் மீது தொங்கிய திரைச் சீலை நுனியொன்றைப் பற்றிப் பிடித்து, தேம்பி அழுத வண்ணம் நாக்குழற, “ஏ அல்லாஹ்! இது உனது இல்லம். இதைத் தற்காக்கும் அத்துணை வல்லமையில்லாத பலஹீனர்களாக நாங்கள் இருக்கிறோம். எனவே, இதைப் பாதுகாத்துக் கொள்ளும் மகத்தான பொறுப்பு நினதே!” என்று முறையிட்டார்.

உரித்து வைத்த வாழைப்பழமே போல், மக்கா நகர் பேராசையெனும் பெரும்பசி மிக்க அப்ரஹாவின் படை எதிரே காட்சியளித்தது. ஆனால், என்னே விந்தை! சற்றே பொழுதில் வானில் கடல் அலைபோல் சிற்சிறு பறவைகள் கூட்டங் கூட்டமாய் அப்ரஹாவின் படைகளை நோக்கிப் பறந்து வந்தன. அப்பறவை ஒவ்வொன்றின் சொண்டிலும் ஒரு சிறு கல்லும் இரு கால்களில் இரு சிறு கற்களும் இருந்தன. அப்ரஹாவின் படையினரின் தலைக்கு மேல் வந்தவுடன் அப்பறவைகள் சுமந்து வந்த பொடிக்கற்களைப் படை வீரர்களின் மேல் பொழிந்துவிட்டுச் சென்றன. 

அத்தனை முன்னணி வீரர்களும் மேலெல்லாம் வைசூரிக் கொப்புளங்கள் தோன்ற, கடுஞ் சுரத்தால் பீடிக்கப்பட்டு ஈசல்போல் வீழ்ந்து செத்தார்கள். பயங்கரக் கொள்ளை நோய் மின்சார வேகத்தில் படையெங்கும் நொடிப் பொழுதில் பரவவே, அவனவனும் உயிர் தப்பினால் போதுமென்று புறமுதுகிட்டு ஓட முற்பட்டான். படையொழுங்கு சிதறி, பதர்போல் பறந்து தாறுமாறாக எல்லாரும் ஓட்டம் பிடிக்கவே, அப்ரஹா உட்பட, அவனுடைய சேனைத் தலைவர்களுட்படக் குதிரைக் குளப்படிகளுக்கும் பதறியோடும் வீரர்களின் காலடி மண்ணுக்கும் பரிதாபகரமாய் ஆளாகிவிட்டனர்.

பாதுகாப்புக்காக வெளியேறியிருந்த மக்காவாசிகள் மீண்டும் தத்தம் தாயகம் திரும்பினர். அவ்வாறு திரும்பிய ஒரு குடும்பப் பெண்மணியாம் ஆமினா என்னும் மாதரசி வயிறுளைந்து ஓர் ஆண்மகவை 20-4-571 அன்று கருவுயிர்த்தார். அப்ரஹா பின்வாங்கி யோடிய சின்னாட்களில் அவதரித்த அருமைச் சிசுவே முஹம்மத் ஆவார். இவர் அஹ்மத் என்றும் அழைக்கப்படுகிறார். அரபு மொழியில் ‘ஹம்து’ என்றால் ‘புகழ்’ என்பது பொருள். இந்த மூலத்தினின்று தோன்றிய முஹம்மத், அஹ்மத் என்னும் இரு பெயர்ச் சொற்களும் புகழ்பவர் அல்லது புகழப் பெறுபவர் என்ற பொருளை வழங்கும். அரபு நாட்டில் இப் பெயர் சூடியவர் வேறு சிலரும் இருக்கக்கூடு மென்பதால், சிறப்பாக நபி பெருமானாரைக் குறிப்பிட்டுக் காட்ட அவருடைய முந்திய நான்கு தலைமுறைகளையும் கருத்திலிருத்துவது கடனாம். அதாவது, முஹம்மது நபியின் (ஸல்)  தந்தையின் பெயர் அப்துல்லாஹ்; இவருடைய தந்தை அப்துல் முத்தலிப்; அப்துல் முத்தலிபின் தந்தை ஹாஷிம்; ஹாஷிமின் தந்தை அப்து மனாஃப் என்பதாம்.

அப்துல் முத்தலிபுக்கு 12 மகன்களும் 6 மகள்களும் இருந்தனர். அந்தப் பன்னிரு மைந்தர்களுள் மூத்தவர் பெயர் ஹாரித், இரண்டாம் மகன் அபூலஹப், மூன்றாம் மகன் அபூத்தாலிப், நான்காவது ஜுபைர், ஐந்தாவது அப்துல்லாஹ் ஆவர். அப்துல்லாஹ்வின் தம்பிமார் ஏழுபேர்களுள் முக்கியமானவர்கள் அப்பாஸ், ஹம்ஸா என்பவர்கள். இவர்கள் பிற்கால இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஆகையால், இவர்களை இங்கு நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

அப்துல்லாஹ் ஆமினா என்ற பெண்ணை மணந்தார். இந்த மாதரசி ஜுஹ்ரா என்னும் ஒரு கீர்த்திமிக்க வம்சத்தில் தோன்றியவர். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து இல்லறம் நடத்தி வருகையில் ஆமினா கருவுற்றார். அக்கால் அநாகரிகம் பிடித்த அரப் நாட்டில் மிகவும் நேர்மையான நாகரிகத் தம்பதிகளாய் விளங்கிய அவர்களை மெச்சிப் புகழாதவரில்லை எனலாம். வர்த்தகத்தினிமித்தம் சிரியா நாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் நேரிடவே, கருவுற்ற இளம் மனைவியைப் பிரிய மனமின்றிப் பிரிந்து அப்துல்லாஹ் புறப்பட்டுச் சென்றார். அவர் வர்த்தகம் முடிந்து மக்காவுக்குத் திரும்பி வரும்பொழுது, வழியில் மதீனா நகரில் நோயுற்று அங்கேயே உயிர் நீத்தார். எனவே, கருவிலிருக்கையிலேயே தந்தையை இழந்த தனியராக முஹம்மத் மண்ணிடைப் பிறந்தார். அவர் பிறந்த 20-4-571 திங்கட் கிழமையானது சாந்திரமானமாகிய ரபீஉல் அவ்வல் பிறை 12 என்று பெரும்பாலானவர் கணக்கிடுகின்றனர். மற்றும் சிலர் அன்று பிறை 9 என்கின்றனர்.

கைம்பெண்ணாகிவிட்ட தம் மருமகளை அப்துல் முத்தலிப் அன்புடன் ஆதரித்ததுடன், பேரக் குழந்தை முஹம்மதுக்குப் போதிய தாய்ப்பால் ஊட்டம் இல்லாததை உணர்ந்து, ஹலீமா என்னும் செவிலித் தாயைப் பாலூட்ட நியமித்தார். மிகவும் நல்ல பெண்மணியாகிய இச் செவிலித்தாய் முஹம்மதைத் தன்னுடன் எடுத்துச் சென்று ஒரு கிராமத்தில் இரண்டாண்டுகள்வரை பாலூட்டி வளர்த்து ஆமினாவிடம் திரும்ப ஒப்படைக்க வந்தார். ஆனால், ஆமினா மேலும் நாலாண்டு காலத்துக்கு அக் குழந்தையை ஹலீமாவிடமே விட்டுவைக்க விரும்பினார். ஆறு வயது நிரம்பிய பின் முஹம்மத் தம் தாயிடம் வந்து சேர்ந்தார். ஆமினாவுக்குத் தம் கணவரது உடல் அடக்கமாகியிருக்கும் இடத்தைக் காணவேண்டும் என்னும் ஆசை எழவே, தம் மைந்தரை அழைத்துக்கொண்டு அவ்விடம் நோக்கிப் புறப்பட்டார். அகால மரணமடைந்த கணவர் அப்துல்லாஹ்வை நினைத்து இரு சொட்டுக் கண்ணீர்விட்டு ஆமீனா மக்கா நோக்கித் திரும்புகையில், வழியில் அப்வா என்னுமிடத்தருகே திடீரென்று உயிர்நீத்தார். ஆறு வயது முஹம்மத் இப்போது தாயையும் இழந்து தனி மரமாகிவிட்டார். எனவே, தந்தைப் பாசமோ தாய்ப் பாசமோ இன்னதென்று உணர முடியாத பருவத்தே அவரை இறைவன் அப்போதே ஒரு தியாகி ஆக்கிவிட்டான் போலும்!

அனாதைச் சிறுவராம் அஹ்மதை வளர்க்கும் முழுப் பொறுப்பும் பாட்டனார் அப்துல் முத்தலிபின் மீது வந்து விடிந்தது. ஆனாலும் மேலும் இரண்டாண்டுகள் கழியுமுன்னே அப் பாட்டனாரும் காலமாகி விட்டார். எனவே, முஹம்மத் தம் பெரிய தந்தையாகிய அபூத்தாலிபின் ஆதரவை நாடி, அவருடைய பாதுகாவலில் வாழவேண்டியவராயினார். கி.பி. 620 வரை இந்தப் பெரியப்பரே அவருடைய வளர்ப்புத் தந்தையாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாம். (ஆங்கிலத்தில் வரலாற்றை வரையும் ஆசிரியர்கள் அபூத்தாலிப் முஹம்மதின் பெரிய தந்தை என்பதைக் குறிப்பிட, ‘Uncle Abu Talib’ என்று வரைகின்றனர். Uncle என்னும் ஆங்கிலச் சொல் சிறிய தந்தை, பெரிய தந்தை, தாய் மாமன், அத்தையின் கணவர், சித்தியின் கணவர், பெரியம்மாவின் கணவர் ஆகிய அத்தனை உறவு முறையினரையும் குறிப்பிடும் ஒரு குறுகலான சொல்லாகும். தமிழ் நாட்டில் பெரும்பாலும் தாய் மாமனையே ‘அங்கிள்’ என்று பலரும் அழைக்கின்ற காரணத்தால், போதிய ஆராய்ச்சியறிவில்லாத தமிழ் வரலாற்றாசிரியர்கள் ‘முஹம்மது தம் தாய் மாமன் அபூத்தாலிபால் வளர்க்கப்பட்டார்’ என்று பொறுப்பில்லாமல் எழுதிவிடுகிறார்கள். அப்துல் முத்தலிபின் மூன்றாவது மகனாக விளங்கிய அபூத்தாலிப் முஹம்மதின் பெரியப்பா; மாமா அல்லர். இதை யாவரும் கருத்திடைப் பொருத்துதற் கடனாம்.)

சிறுவர் முஹம்மத் செவிலித் தாயிடம் வளர்ந்தபோதோ அல்லது பாட்டனார் அப்துல் முத்தலிபின் ஆதரவில் வாழ்ந்த போதோ, அல்லது எட்டு வயதாகி அபூத்தாலிபின் பாதுகாவலில் இருந்தபொழுதோ ஓர் எழுத்தேனும் எழுதவோ அல்லது படிக்கவோ கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அடையப் பெறவில்லை. எனவே, தமது வாழ்நாள் முழுதும் தமது பெயரைக்கூட எழுதத் தெரியாத ஒரு விசித்திர மனிதராகவே முஹம்மத் வாழ்ந்துவந்தார் என்பதை நாம் மறக்கக் கூடாது. எழுத்துவாசனை யறியாதவரை வடமொழியில் ‘நிரக்ஷரகுக்ஷி’ என்பார்கள்; அரபு மொழியில் ‘உம்மீ’ என்பார்கள். உலகின் மிகச் சிறந்த பெருவேதத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தந்த முஹம்மத் இறுதிவரை ‘உம்மீ’யாகவே விளங்கினார் என்று பல இடங்களில் அது சான்று பகர்வதைக் காணலாம். பிற்காலத்தில் இறைவனிடம் நேரடியாகக் கல்வி பயிலும் வாய்ப்பு அவருக்குக் காத்திருந்த காரணத்தால், பூவுலக ஆசிரியர் எவரும் இவருக்குக் குருவாக அமையவில்லை என்றும் மற்றொரு மனித குருவுக்கு முஹம்மத் சீடராய் அமையவில்லை என்றும் தத்துவ ஆசிரியர்கள் இதற்கு விளக்கம் நல்குவர். பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியரை அடுத்து நிரம்பக் கல்வி பயின்று பிற்காலத்தில் கீர்த்திமிக்கவர்களாக உயர்பவரும் உண்டு; அல்லது தறிகெட்ட தறுதலைகளாகத் திரிபவர்களும் உண்டு. ஆனால், எந்தப் பள்ளிக்கும் செல்லாமல், எந்த ஆசிரியரிடமும் பயிலாமல், மிகப் பெரிய ஞானியாக, மாபெரும் மதி நுட்பம் வாய்ந்தவராக, பேரொளிப் பிரகாச தீர்க்கதரிசியாக உயர வேண்டிய தனிப் பெருமை இச் சிறுவருக்காகக் காத்து நின்ற தென்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சூனியத்திலிருந்து சூட்சுமம் தோன்ற முடியும் என்பதற்கோர் எடுத்துக்காட்டாக, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இறைவன் இறுதிவரை ‘உம்மீ’யாகவே விட்டுவைத்தான்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>

Related Articles

Leave a Comment