ஊழினும் பெரிய வலிமை உலகினில் எதற்குமே கிடையாதென்பது யாவரும் ஏற்கிற உண்மையெனினும் பட்டத்துக்கு வந்து ஒரு வாரங்கூடக் கடக்கா முன்னம் மலிக்குல் முஅல்லம் என்னும் சிறிய சுல்தானுக்கு வந்தடுத்த தலைவிதி இருக்கிறதே, அது மகாமகா விசித்திரமானது
என்பதைப் போகப் போகத் தெரிந்து கொள்ளப் போகின்றீர்கள். எனவே, விதி என்பது முஅல்லம் சுல்தானுக்கு எதிராகச் சதி செய்யச் செய்ய, அவரும் புர்ஜீ மம்லூக்குகளின் மாயவலைக்குள்ளே வலியச்சென்று விழுந்து கொண்டேயிருந்தார். பக்ருத்தீனென்னும் நயவஞ்சக புர்ஜீயின் பசப்புதல்களுக்கு இரையான சுல்தானை ஒளிந்திருந்து பார்த்த ருக்னுத்தீன் இயற்கையாகவே மனம் வெறுத்துப்போய் ஷஜருத்துர்ரிடம் கீழ்க்கண்டபடி உரையாடல் நிகழ்த்தியதில் வியப்பில்லை அல்லவா?
“யா உம்ம கலீல்! இந்த ஸல்தனத்துக்கு ஆண்டவன் இனியில்லாச் சோதனையை இறக்கிய வேளையில், தாங்கள் இந்தச் சொத்து முழுதையும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பெரியதோர் அமானத்துப் பொருளேயென்று கருதினீர்கள. அதற்காகவே அல்லு பகல் அறுபது நாழிகையும் அரும்பாடு பட்டீர்கள்; பட்டினி கிடந்தீர்கள்; கண் விழித்தீர்கள். கணவரைப் பிரிந்தும் கருத்தைப் பறி கொடாதிருந்தீர்கள். எதிரிகளை ஏமாற்றப் பிரேதத்தை மூமிய்யா வாக்கினீர்கள்; உண்மையை ஒளித்து வைத்தீர்கள்; நேத்திரங்களைச் சுத்தமாய்த் துடைத்துக்கொண்டு, பொய்யான புன்னகையை வரவழைத்தீர்கள். மகா யுத்தத்தை மனமறுகாது தைரியத்துடனே நடத்தினீர்கள். மாபெரும் வெற்றியைப் பெற்றீர்கள்; இணையில்லாத மிகப்பெரும் புகழை இந் நாட்டுக்காக பாரினில் நிலைநாட்டினீர்கள்; இந்த ஸல்தனத்தையும் செவ்வன் காப்பாற்றினீர்கள். உரியவனிடத்தும் இதனை அலுங்காது ஒப்பித்தீர்கள்.
“அப்போதெல்லாம் அடியேனும் அடிமையுமாகிய யான் என்னால் இயலாத அளவுக்கும் மேலாகவெல்லாம் முற்ற முற்ற ஒத்துழைத்தே வந்திருக்கிறேன். ஆனால், இப்போது எனக்கும் என் இனத்தவருக்கும் விரோதமாக அந்தக் ‘கற்றுக்குட்டி’ எங்கள் எதிரிகளுடன் கூடிக் குலவித் திட்டமிட்டு வருகிற சதிச் செயல்களுக்கு இக்கணமே யான் பரிகாரம் தேடா விட்டால், எங்கள் வம்சத்தை யானே கொன்றொழிக்க உதவி புரிந்ததாகப் போவதுடன், இந்த ஸல்தனத்தை ஆளுவதற்கு அருகதையில்லாத ஓர் அற்பனுக்காக இதனைக் காப்பாற்றிக் கொடுத்தேனென்னும் மாபெரும் பழியையும் சுமந்து, ஆண்டவனுக்கும் மகா பாவியாய்ப் போய்விடுவேனென்று பெரிதும் அஞ்சுகின்றேன், அம்மணி!” என்னும் முகவுரையுடனே ஆரம்பித்த ருக்னுத்தீன், தான் ஒளிந்திருந்து கவனித்த நிகழ்ச்சிகளத்தனையையும் விஸ்தரித்துக் கூறினார்.
“இவ்வளவு தூரத்துக்கா புர்ஜீகள் இழிந்து விட்டார்கள்? தூரான் ஷாவும் அந்தப் பொல்லாத போக்கிரிகளின் மாய வலையுள்ளே விழுந்து கொண்டேயிருக்கிறானா?” என்று ஷஜருத்துர் ஒன்றுமறியாதவர்போல் வியப்புடனே வினவினார்.
“ஆண்டவன்மீது ஆணையாகச் சொல்கிறேன்! அந்த அற்பனுக்கு ஆயுள் குறுகிக்கொண்டே வருகிறது. யான் எடுக்கப் போகிற எதிர் நடவடிக்கைகள் தங்களுக்குத் திடுக்கத்தை உண்டுபண்ணக் கூடாதே என்பதற்காகத்தான் இப்போது முற்கூட்டியே தெரிவிக்க வந்தேன். இந்த ஸல்தனத்தை யான் அவனுக்காகச் சம்பாதித்துக் கொடுத்தேன். அந்தப் பெரும் பாபத்தைக் கழுவிக்கொள்வதற்காக அவன் உதிரத்தில் என் கைகளை நனைக்காமல் இருக்கப்போவதில்லை!”
“ருக்னுத்தீன்! தூரான்ஷா சிறு பையன்தானே? அவன் தெரியாத்தனத்தாலும் அறியாமையாலும் ஏதேதோ உளறினால், நீர் ஏன் பதஷ்டமடைகின்றீர்? நானும் சமீபத்தில் அவனது மனப் போக்கின் தவற்றை உணர்ந்து கொண்டமையால், சிறுகச் சிறுக நல்ல புத்தி போதித்து வருகிறேன். சீக்கிரமே அவன் மனம் திரும்பி விடுவான்; திருந்தியும் விடக் கூடும். என் பேச்சை இதுவரை அவன் தட்டி நடந்ததேயில்லை. நான் இப்போது இந்த இத்தாவில் முடங்கிக் கிடப்பதால், புர்ஜீகள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவனை ஏதேதோ ஏய்த்து வருகிறார்கள. வெந்நீரினால் வீடு வெந்து போகுமோ? சிறிது பொறுத்துக் கொள்ளும். போகப் போக எல்லாம் சரிப்பட்டு விடுமென்றே நினைக்கிறேன்.”
“அம்மணி! தங்கள் கணவரின் புத்திரன் என்னும் கரிசனத்தினால் தாங்கள் இப்படிப் பேசுகிறீர்களென்று நான் நினைக்கிறேன். உங்கள் தூரான்ஷாவை விட மகத்தான துரோகி இப்போது வேறெவன் இங்கிருக்க முடியும்? அவன் எதையாவது முன்பின் யோசித்துப் பேசுகிறான் என்றா தாங்கள் நினைக்கின்றீர்கள்? மூளையுள்ளவன் எவனுமே அவனைப்போல் பிதற்ற மாட்டான் என்றுதான் சொல்லலாம், அம்மணி! அவனுடைய மண்டையில் மூளையே இல்லை; ஏனென்றால், அது தற்சமயம் அவனுடைய முழங்காலுக்குக் கிழே இறங்கிப் போயிருக்கிறது. அவன் என்னையும் என் இனத்தவரையும் மட்டுமா நிந்திக்கிறான்? தங்களையுங் கூடச் சேர்த்தல்லவோ அறை கூவுகிறான். நாம் இருவரும் படாதபாடு அத்தனையும் பட்டு அவனுக்குச் செய்த உபகாரங்களுக்கு இந்தக் கைம்மாறுதானா நமக்குக் கிடைக்கவேண்டும்? அவன் நமக்கு நன்றி தெரிவிக்க வேண்டாம்; ஆனால், அதைக் கொன்றொழிக்காமலாவது அவன் இருக்க வேண்டாமா? நன்றி கொன்ற மகற்கு உய்யும் வகை ஏது? இனி, அம்மணி! முடியாது, முடியாது, முடியாது! முக்காலும் முடியாது! அவனை இனி ஒரு கணமாவது உயிருடன் விட்டு வைத்திருப்பதென்பது நம் எல்லார்க்குமே பேராபத்தாய்த்தான் வந்து முடியப் போகிறது. அவனுக்காக இந்த ராஜ்யத்தைத் தாங்கள் ரக்ஷித்துக் கொடுத்ததே பெரிய பாபமென்று இப்போது நன்கு புலனாகிறபொழுது, அவனுக்காக வக்காலத்துப் பேசி, மீட்டும் பெரிய பாபத்தையும் மாபெரும் அவதூற்றையும் சம்பாதித்துக் கொண்டு விடாதீர்கள். வெறிபிடித்த நாயை உடனே கொல்ல வேண்டுமென்னும் உண்மையைத் தாங்கள் அறிய மாட்டீர்களோ?”
“ருக்னுத்தீன்! ஏன் இப்படித் துடிக்கின்றீர்? அவன் ஒருவனால் என்ன செய்ய முடியும்? சிலுவையுத்தக் கைதிகள் இன்னம் சிறையிலே இருக்க, யுத்தப் பிற்கால வாழ்க்கை இன்னம் பழைய நிலைமைக்கு வந்தெய்தாதிருக்க, நீர் இச்சமயத்தில் உள்நாட்டுக் குழப்பத்தையும் உண்டுபண்ணி விடுவீரானால், என்ன நேரும் தெரியுமா? நீர் இப்போது எவ்வளவு ஆத்திரங் கொண்டிருக்கிறீரோ, அதைவிட அதிகமாகவே நானும் ஆத்திரப் படுகிறேன். என்ன செய்வது? முள்ளின்மேல் துணியைப் போட்டுவிட்டால், மெல்ல மெல்லத்தானே பிரித்தெடுக்க வேண்டும்?”
“முள்ளின்மேல் விரித்த துணியை மெல்ல மெல்ல எடுத்துக் காப்பாற்றுவதாய் இருந்தால்தானே, அந்தக் கவலை? துணி போனால் போகட்டும் என்னும் சூழ்நிலை இப்போது வந்திருக்கிறதே! நாம் தெரியாத்தனத்தால் எந்த முட்டாளை இந்த ஸல்தனத்துக்கு உயர்த்தினோமோ, அநத முட்டாளை இப்போதே துண்டு துண்டாய்க் கிழித்தெறிவதை விட்டுவிட்டு…”
“வேண்டாம்! சற்றே பொறுத்துக்கொள்ளும்!”
“இதில் தாங்கள் உபதேசிக்க வேண்டுவதோ, அதை நான் கேட்க வேண்டுவதோ, ஏதுமிருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. தங்கள் உபதேசங்களைக் கேட்டு, இதுவரை யான் பெற்றிருக்கிற வெகுமதிகள், போதும்! போதும்! தங்கள்மீது அதிருப்தி கொண்டு யான் இப்படிப் பேசவில்லை. தாங்கள் தங்களுக்கிருக்கிற இயற்கையான தயாள குணத்தை இப்போதும் காட்டியே வருகின்றீர்கள். ஆனால், என்னுடைய பொறுமை முகடுமுட்டிப் போய்விட்டது! இனி ஒரு கணங்கூடப் பொறுக்க முடியாது! முடியாது!!”
ஷஜருத்துர் மேற்கொண்டு இன்னதுதான் பேசுவதென்று ஒன்றும் தோன்றாமல், மெளனமாயிருந்தார். தம் மாற்றாள் மைந்தனின் விபரீதப்போக்கை இப்போது அவர் முற்றும் நன்குணர்ந்திருந்த போதினும், தம் மனத்தைப் பக்குவமாக மாற்றிக்கொண்டே உரையாடினார். ஆனால், எப்படித்தான் இனி ருக்னுத்தீனைச் சமாதானப்படுத்த முடியம்? ஷஜருத்துர் மெளனமாய்ச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
“யா உம்ம கலீல்! தங்களின் நிமித்தமாகவே யான் இன்றளவும் செய்ந்நன்றி யறிதலுடன் ஒழுகி வருகிறேன். தங்களுக்காகவே வாளேந்தி ஜிஹாத் புரிந்தேன்; தங்களுக்காகவே யான் சுல்தான் ஸாலிஹின் உடலைப் பாடம்பண்ண உதவி புரிந்தேன்; தங்களுக்காகவே யானும் பல இரவுகளும் பல பகல்களும் நித்திரையை ஒழித்தேன்; தங்களுக்காகவே யான் அப் பயங்கரமான மகா ரகசியத்தை ஒளித்து வைத்தேன்; தங்களுக்காகவே யான் என் உடல் பொருள் ஆவியனைத்தையும் அர்ப்பணம் பண்ணி வந்தேன். எல்லாவற்றிக்கும் மேலாக, தங்கள் பொருட்டாகவே யான் தூரான்ஷாவுக்கு ராஜ விசுவாசப் பிரமாணமும் செய்து கொடுத்தேன். ஆனால், இதுபோது தாங்கள் இத்தாவில் முடங்கிக் கிடப்பதையும் அவன் அயோக்கியத்தனமாக என் இனத்தவருக்கும் எனக்கும் விரோதமாகச் சூழ்ச்சிகள் செய்வதற்காகவே சுல்தானாக அரியாசனம் ஏறியிருப்பதையும் கண்டு, யான் மனம் வெதும்புகிறேன்.
“குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பை இனியும் வாளா விட்டு வைப்பதா? கூடாது, கூடாது, கூடாது! சுல்தான் ஸாலிஹுக்குப் பிறந்த ஒரு புத்திரன் இப்படி எங்களுக்காகப் புதைகுழி தோண்டுவதை எப்படிச் சகித்திருப்பேன்? இதற்காகவா யான் இவனுக்கு ராஜ விசுவாசப் பிரமாணம் பண்ணிக் கொடுத்தேன்? இப்படிப்பட்ட துரோகத்தைப் பெற்றுக் கொள்ளவோ அத்தனை தியாகங்களையும் புரிந்தேன்? நன்றி கொன்ற பன்றியாகிய இவனுக்காகவா யான் இந்த ஸல்தனத்தைக் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும்? அமரர்கள் மெச்சும் ஐயூபி சுல்தான்கள் ஆட்சி செலுத்திய இந்த நாட்டை இன்று ஒரு ஷைத்தான் மாசுபடுத்துவதை யான் இன்னமுமா கண்டு சகிக்க வேண்டும்? ஏ, அம்மையே! பதில் கூறுங்கள்!
|
“என் உள்ளம் பதறுகிறது; உதிரம் கொதிக்கிறது; மூளை குழம்புகிறது; மண்டை கிறுகிறுக்கிறது; எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த அற்பக் கொசுவை இப்போதே நசுக்கியெறிய என் நெஞ்சம் குமுறி நிற்கிறது. தாங்கள் அனுமதி கொடுத்தால், தங்கள் நல்லாசியுடனேயே பழிதீர்த்துக் கொள்ளுகிறேன்; இன்றேல், தங்கள் அனுமதியில்லாமலே என் திட்டத்தை முடித்து வைக்கிறேன். வீரர் ஜாதியில் ஜனித்து, சுல்தான் ஸாலிஹின் உப்பைத் தின்று ஜீவித்து, அவருக்காகவே சர்வசங்க பரித்தியாகமும் புரிந்து நிற்கிற யான் இந்தக் கயவனைக் கொன்று கூறு போடாவிட்டால், என்னை ஆண்டவன் மன்னிக்க மாட்டான்! என் தாயே யான் பேசவில்லை; பற்றியெரிகிற என் வயிற்றிலிருந்து இவ்வார்த்தைகள் குமுறிக்கொண்டு வெளிவருகின்றன.
“உலகிலுள்ள பஞ்சமா பாதகங்கள் அத்தனையையும் விட ஆயிரம் மடங்கு பொல்லாததான செய்ந்நன்றி கொன்ற சுல்தான் ஒருவன் இந்த மிஸ்ரிலே ஆட்சி புரிந்தான் என்னும் அவச் சொல்லுக்கும் அவனை அப்படியெல்லாம் ஊக்கிவிட்ட பாவத்துக்கும் தாங்கள் ஆளாகாதீர்கள்! மங்கோலிய நாட்டு வீரன் லூயீயை மட்டுமே தோற்கடிக்க மாட்டான்; ஆனால், நன்றி கொன்ற துரோகிகளையும் கொன்றொழிப்பான் என்னும் உண்மையினை யான் உலகோர்க்கு உணர்த்த வேண்டும். இனிமேல், இந்த எகிப்து தேசத்தின் வரலாற்றைப் படிக்கிறவர்கள் எவரும் என்றைக்குமே கனவில்கூடச் செய்ந்நன்றி கொல்ல மாட்டார்.
“ஏ, அன்னையே! என்னை மன்னியுங்கள். தங்கள்மீது வெறுப்புக் கொண்டு யான் பேசவில்லை; அல்லது தாங்கள் கூறுகிறவற்றுக்கு மாற்றமாக நடக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் பேசவில்லை. உண்மையிலேயே தங்கள்மீது எனக்கு வருத்தமோ வெறுப்போ இருந்திருந்தால், இப்போது இங்கே வந்து இவ்வளவும் பேசியிருக்கமாட்டேன். தாங்களும் தங்கள் மாற்றாள் மைந்தனின் நடவடிக்கைகளைக் கவனித்தே வருகின்றீர்கள் என்பதை நான் நன்கறிவேன். அவன் மீது தாங்கள் மட்டற்ற வெறுப்புக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நான் உணர்வேன்.
“இன்று அரசவை கலைந்து சற்று நேரத்தில் தங்களைக் காண இங்கு வந்தேன். ஆனால், அதற்கு முன்னரே அவன் இங்கு வந்து தங்களிடம் உரையாடியதை மறைந்திருந்து கேட்டேன். மேற்கொண்டு என்ன நடக்கிறதென்பதைக் கவனிக்கவே அவனுடைய அந்தரங்க அறையிலிருக்கிற பெரிய உமல் தாழிக்குள்ளே ஒருவருக்கும் தெரியாமல் நுழைந்து ஒளிந்திருந்து பார்த்து வந்தேன். தாங்களோ, தங்களுக்கிருக்கிற தயாள குணத்தின் காரணத்தால் அவனைப்பற்றி மறைத்துப் பேசுகிறீர்கள். இதற்காக யான் தங்களை மெச்சுகிறேனென்றாலும் அவனைப் பற்றித் தாங்கள் இனியும் நல்லபிப்ராயம் கொள்வதையோ, அல்லது அவனைச் சும்மா விட்டுவிடும்படி எனக்கு உபதேசிப்பதையோ யான் எப்படி ஏற்க முடியும்? ஒரு முட்டாட்டனத்துக்கு மாறாகப் பல முட்டாட்டனங்களைப் புரியலாமா? உலகம் உய்ய வேண்டுமானால், இந்த ஸல்தனத் காப்பாற்றப்பட வேண்டுமானால், பஹ்ரீகளாகிய நாங்களும் மாஜீ சுல்தானாகிய தாங்களும் இவ்வுலகத்தில் உயிருடனே இருக்க வேண்டுமென்றால், இனி ஒரு நிமிஷங் கூட இந்தப் பொல்லாத சிறு பயலின் ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. ஆட்சிக்கு முற்றப்புள்ளி வைப்பதுடனே, அவனுடைய உயிருக்கும் உலை வைத்துவிட வேண்டும். இனிமேல் அவனைத் திருத்த முடியும் என்னும் எண்ணத்தைத் தாங்கள் கனவிலும் கருதாதீர்கள்.”
ஷஜருத்துர் தலையைக் கவிழ்த்துத் தரையைப் பார்த்துக் கொண்டு, ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு “அந்த லூயீ விஷயம் என்ன ஆயிற்று? எனக்கு அதைப்பற்றி எவரும் ஏதும் சொல்லவில்லையே!” என்று வேறு பக்கமாக விஷயத்தைத் திருப்பினார். ருக்னுத்தினுக்கு இநதக் கேள்வி சிறிது ஏமாற்றத்தையே கொடுத்ததென்றாலும், சட்டென்று பதிலளித்தார்:-
“ஒரு கோடி பிராங்க் ஈடு கொடுத்து விட்டால், எல்லாக் கிறிஸ்தவர்களையும் விடுதலை செய்வதாக இன்று தீர்ப்புக் கூறப் பட்டது. ஆனால், அந்தத் தொகை உச்சரிக்கப்பட்டபோது, லூயீயின் முகத்தைப் பார்த்தேன். அவன் ஒரு கோடி புளியங்கொட்டை கூடக் கொடுக்கத் தயாராயிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மேலும், அந்த சுல்தான் என்கிற சிறுவன் பித்துக் கொள்ளியோ என்றுகூட லூயீ சந்தேகித்தானென்றே நான் கருதுகிறேன். புர்ஜீகளின் கைப்பொம்மையாய் இருக்கிற தூரான்ஷா ஒரு கோடி பிராங்க் ஏன் கேட்க மாட்டான்? அதுவுங் கேட்பான்; அதற்கு மேலுங் கூடக் கேட்பான்.”
“அப்படியானால், தூரான்ஷா விதித்த அபராதம் மிக அதிகமென்றா நீர் கருதுகிறீர்? நசாராக்கள் நமக்கு விளைத்திருக்கிற அத்தனை கஷ்ட நஷ்டங்களுக்கும் அந்தத் தொகை சிறிதுதானே?”
“ஒன்றும் அறியாதவரேபோல் பேசுகிறீர்களே! எதிரிகள் நம்மிடம் சிக்கிக் கொண்டார்கள் என்பதற்காக வாய்க்கு வந்த படியெல்லாம் அபராதம் விதிப்பதா? எதற்கும் ஓர் எல்லையில்லையா? எதிரியின் சக்திக்கு எவ்வளவு இயலுமோ, அவ்வளவேதான் அபராதம் விதிப்பதன்றோ நேர்மையாகும்? இந்த உலகம் முழுதையும் மிஸ்ரின் ஸல்தனத்துக்கு அடகு வைத்தால்தான் விடுதலை செய்யமுடியும் என்று சொல்வதற்கும் ஒரு கோடி பிராங்க் அபராதம் விதித்ததாகச் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? நசாராக்கள் நாசம் அதிகம் விளைத்திருப்பது மெய்யே. எனினும், இந்தப் பாழாய்ப்போன சிலுவையுத்தங்களால் அவர்களுக்கும் ஏராளமான பொருள் நஷ்டம் விளைந்தே இருக்கிறதென்பதை நாம் மறந்து விடலாமா? குதிரைகளில் மட்டும் சுமார் 6000 நஷ்டமென்று தெரிகிறது. இப்படிக் கெட்டு மெலிந்த லூயீயைப் பார்த்து, ஒரு கோடி பிராங்க் அபராதம் என்று சொல்லுவது வேடிக்கையான வார்த்தையா? அல்லது அர்த்தமற்ற வெறும் பிதற்றலா? எனக்கே இப்படி இருக்கும்போது, லூயீயும் அவனுடைய சகாக்களும் என்ன நினைக்கமாட்டார்கள்? அவர்களும் நம்மைப் போல மனிதர்களே அல்லவா? கருணையுடன் கூடிய நியதியே கண்ணியம் பெறும் அன்றோ?”
“ருக்னுத்தீன்! நீர் சொல்வதெல்லாம் சரிதான்! ஆனால், இப்போதுள்ள நிலைமையைத் தலைகீழாய்ப் புரட்டிப் பார்த்தீரா? இன்று லூயீ அவ் யுத்தத்தில் தோல்வியடையாமல், வெற்றி பெற்று, உம்மைக் கைதியாகக் கொண்டுபோய்ப் போப்பாண்டவரின் முன்னிலையில் நிறுத்தியிருந்தால், அநத நசாராக்கள் என்ன செய்திருப்பார்கள், தெரியுமா?”
“அம்மணி! எதிரி நம்மை என்ன செய்திருப்பான் என்று யூகித்து, அதற்காக அபராதம் விதிப்பதா? அல்லது நாமே நம்முடைய பகுத்தறிவைப் பிரயோகித்து நமக்குச் சிறந்ததாகவும் நியாயமானதாகவும் படுகிற இஸ்லாமிய தண்டனையை விதிப்பதா? அல்லது, நாம் விதிக்கிற தொகையை எதிரியிடமிருந்து பெறுவதற்கு மார்க்கமுண்டா என்பதையாவது நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமன்றோ?”
“நாம் கேட்பதைக் கேட்டு விடுவோம். அவனால் கொடுக்க முடிந்ததைக் கொடுக்கட்டுமே!”
“யா உம்ம கலீல்! இது மிக விசித்திரமாகவே இருக்கிறது! ஐயூபிகள் அநியாய அபராதம் விதித்தார்களென்னும் பழிச் சொல்லையும், விதித்த அபராதத்தை வசூலிக்க வழிவகையற்றுப்போய் விட்டார்கள் என்கிற அவதூற்றையும் ஏற்க வேண்டுமோ? இன்று தாங்கள் அரியாசனத்தில் அமர்ந்திருப்பதாயிருந்தால், இப்படிப்பட்ட அநியாயமான அளவுகடந்த தண்டனையா விதித்திருப்பீர்கள்? முஸ்லீம்கள் ‘பொல்லாத போக்கிரிகள்’ என்று எதிர்காலத்தில் எல்லாரும் நம்மை இழிவுபடுத்திப் பேசுதற்கல்லவோ இன்று தூரான் இப்படியெல்லாம் அக்கிரமம் புரிகிறான்?”
“ருக்னுத்தீன்! நான் விஷயத்தை விசாரிக்கிறேன். நீர் கொஞ்சம் பொறுமையுடன் இருந்துவரக் கடவீர். செப்பனிட முடியாதபடி வியவகாரம் முற்றிப் போயிருந்தால், அப்புறம் என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்யலாம்.”
“யா உம்ம கலீல்! நாயின் வாலை நிமிர்த்த முடியுமா? அவனை உங்களால் திருத்தத்தான் முடியுமா? எங்கள் வம்சத்தையே தொலைக்கப் போகின்றானாமே அவன்! அவன் எங்களைத் தொலைக்கிறானா, அல்லது நாங்கள் அவனை ஒழிக்கிறோமா என்பதைச் சில தினங்களில் கண்டு கொள்வீர்கள். எப்படி யான் இந்தக் கையில் வாள்பிடித்து, லூயீயை வென்று இந்த நாட்டின் ஆட்சியைத் தூரானுக்குப் பிச்சையிட்டேனோ, அதேவிதமாக இதே கையில் கத்தியேந்தி இவனுடைய நெஞ்சைப் பிளந்து, நன்றி மறந்த ஹிருதயத்தைக் கசக்கிப் பிழியாவிட்டால், நான் ஜாஹிர் ருக்னுத்தீன் அல்ல என்பதைத் தங்கள் முன்னர்த் திரிகரண சுத்தியுடனே சத்தியம் செய்து சொல்லுகிறேன்!
“எந்தக் கையினால் அவனுடைய தந்தையின் உயிரிழந்த உடலைக் கிழித்துப் பக்குவம் செய்தேனோ, அதே கையினால் உயிருள்ள இவனுடைய உடலைக் கிழித்து உயிர் குடிக்கப் போகிறேன்! எந்தக் கையினால் ஸாலிஹ் நஜ்முத்தீன் பிரேதத்தை மிக மரியாதையுடன் சுமந்து சென்றேனோ. அதே கையினால் இவனுடைய உடலை உருட்டிவிடாமல் போக மாட்டேன்! சுல்தான் ஸாலிஹின் மரணத்தை வெளியே உச்சரிக்காமல் எந்த நாவை அடக்கி வந்தேனோ, அதே நாவினால் இவனுடைய கொலையைப் பற்றிப் பிரசாரம் புரியப் போகிறேன்! சுல்தான் ஸாலிஹின் நலத்துக்காக எந்த உடலை வாட்டி வந்தேனோ, அதே என் உடலின் உதவியால் இவனை வாட்டி வதைக்கப் போகிறேன்!
“அம்மையே! ஆண்டவன்மீது ஆணையாக! யான் இவனுடைய உயிரைக் குடித்து உதிரத்தை ஓட்டுகிற வரையில் தினமும் ஒரு வேளை உணவை உட்கொள்வதில்லையென்று உறுதி கூறுகிறேன்!” என்று கொடிய சபதம் கூறிவிட்டு, வேகமாக எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
ருக்னுத்தீனின் இந்தக் கடைசி வார்த்தைகள் அந்த அறையின் மேல் மண்டபத்தில் எதிரொலியால் ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. ஷஜருத்துர்ருக்கோ, ஆயிரம் ஈட்டி கொண்டு ஏககாலத்தில் குத்துவது போன்ற உணர்ச்சியை உண்டு பண்ணிவிட்டன. ருக்னுத்தீனின் பயங்கரமான கொடிய சபதத்தின் கூர்மை எப்படி இருக்குமென்பதை அவ் விதவை முன்னமே நன்கறிவாராதலால், இதுபோது உடல் நடுங்கிப் போயினார். உள்ளமும் குன்றிவிட்டது. சபதமென்றால், சாதாரணமான சபதமா? உள்ளத்துள்ளிருந்து உந்தியெழுந்த உத்வேகத்தின் உணர்ச்சியால் பிறந்த கணையினுங் கூரிய சொற்களல்லவா? ஷஜருத்துர் வெய்துயிர்த்து மனம் வெதும்பினார்.
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்