அல் முஹ்மல் – 2

ஆரிய சமாஜிகளுக்குள்ளேயே ஒரு வகுப்பார் வேதங்களின் அத்தாக்ஷியைக் கொண்டே மாமிச போஜனம் பண்ணலாம் என்கின்றனர்; மற்றொரு வகுப்பார் அதைக் கொண்டே அதை மறுக்கின்றனர்; ஆயினும், இருவகுப்பாரும் சுவாமி

தயானந்த்ஜீயைப் பின்பற்றுபவர்களே. ஒருவர் ஒரு பதத்தின் பொருளை மாமிச போஜனம் கூடும் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்; மற்றொருவர் அப்பதத்தின் பொருளைக் கொண்டே மாமிச போஜனம் கூடாதென்று பிரமாணம் காட்டுகின்றனர்.

இவ்வாறே ஒவ்வொருவரும் தாம் தாம் சொல்வதும் செய்வதுமே சரியென்றும் மற்றவர் சொல்வதும் செய்வதும் சரியல்லவென்றும் கூறாநிற்பர்; அவரவரும் தத்தம் வியாக்கியானங்களே சரியென்றும் மற்றவை தவறென்றும் கூறித் தீர்பளிக்கின்றனர். உதாரமணாக, தயானந்தர் தமது ச. பி. அத். 3-இல் கூறியிருப்பதை நோட்டமிடுவீர்களாக:

சுவாமிஜீ தமக்குமுன் ஏற்பட்டிருந்த சகல வேத வியாக்கியானங்களும் அகராதிகளும் இலக்கணச் சட்டதிட்டங்களும் முற்றிலும் தவறானவையென்று தீர்ப்பளித்துள்ளார். ஏனெனின், அவை சுவாமிஜீயின் சொந்த அபிப்ராயத்துக்கு முற்றிலும் முரணாகவும் இடையூறாகவும் இருந்து வந்ததுதான் காரணம். ஆதலின், அவையனைத்தும் பொய்யானவையென்றும் வழக்கத்தில் கொண்டு நடக்கக் கூடியவையல்லவென்றும் வெளிப்படுத்தியுள்ளார். மற்றோர் உதாரணத்தையும் ஈண்டு எடுத்துப் பார்ப்போம்.

தயானந்தரின் குருவான பரிபூரணக் கண் பார்வையற்ற விரஜானந்தரைப் பற்றி ஆரோய்வோமாக: சுவாமி விரஜானந்தருக்கும் சுவாமி ரங்காசாரியருக்கும் இடையில் காசி மஹாராஜாவின் அனுமதியின்மீது அவரது முன்னிலையிலேயே ஒரு விவாதம் உண்டாயிற்று; அந்த வாதமுழுதும் ஒரு ஸம்ஸ்கிருத வாக்கியத்தின் வியாக்கியானத்தையே பொறுத்திருந்தது. அப்பொழுது அவர் இருவருள் ஒவ்வொருவரும் தாம் தாம் சொல்லும் வியாக்கியானமே மெய்யென்பதற்கு ஆதாரமாக அனேக புஸ்தகங்களை மேற்கோள் காட்டினர். அவற்றுள் ஒவ்வொரு கிரந்தமும் மேற்கோள் காட்டியவருக்குச் சான்றாகவும் மற்றவருக்கு விரோதமாகவுமே காணப்பட்டு வந்தது; அதனால் ஒவ்வொருவரும் தத்தமக்கு மாறான கிரந்தங்களை ஒப்புக்கொள்ள மறுத்துக்கொண்டே வந்தனர். இறுதியில் பெரும்பான்மையான அபிப்பிராயத்தின் பிரகாரம் சுவாமி ரங்காசாரியரே ஜயமடைந்தார்; சுவாமி விரஜானந்தர் தோல்வியுற்றார். இதன் விவரத்தை விரஜானந்தரின் ஜீவிய சரித்திரத்தில் பார்த்துக்கொள்க.

எனவே, இவ்வாறாகத்தான் ஸம்ஸ்கிருத பாஷையின் சகலவிதமான வியாகரணங்களும் நிகண்டுகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு பதமும் ஒவ்வொரு விதியும் அவரவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் இடங்கொடுத்துக் கொண்டிருக்கும். எனவே, எந்த இலக்கணச் சட்டமும் எந்த அகராதியும் எல்லோராலும் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை; எல்லோராலும் ஏகோபித்து எப்படித்தான் ஏற்றுக்கொள்வது முடியும்?

ஈசுவர மஹாராஜ் சகல ஞானங்களையும் அறிவுகளையும் கல்விகளையும் தத்துவங்களையும் உணர்ந்தவராய் இருந்து வருவதனால் ஏதேனுமொரு தேசபாஷையில் தம்முடைய வேதங்களை வெளியிட்டிருப்பாராயின், அதனால் பக்ஷபாதமுள்ளவரென்று கருதப்படுவாரென்று அஞ்சியே, ஒருவருக்கும் விளங்காத, ஒரு தேசத்திலும் பேசப்படாத, ஏட்டுவழக்கில் அருகிப்போன ஒரு கடின பாஷையில் அந்நான்கு வேதங்களையும் வெளிப்படுத்தத் துணிந்தார்; அவ்வாறு பக்ஷபாதத்தினின்றும் தப்பிக்கொள்ள விரும்பிய பரமேசுவரனும், “சிருஷ்டியின் முதலில் அக்கினி, வாயு, ஆதித்யன், அங்கிரா ஆகிய நான்கு புருஷர்களின் ஆத்மாவில் (மட்டுமே) பிரகாசிக்கச் செய்தார்.”

ஒருவருக்கும் சொந்தமல்லாத ஸம்ஸ்கிருதத்தில் வேதங்களை வெளியிட்ட “பரமாத்மா” உயிருள்ள சகல வஸ்துக்களுக்கும் அவ்வேதங்களைக் கற்பித்துக் கொடுத்திருப்பாராயின், ஒருவாறு பக்ஷபாதத்தினின்றும் மீட்சியடைந்திருப்பார். அப்பொழுது எல்லாச் சிருஷ்டிகளும் அவ்வேதங்களைக் கற்றிருக்கும்; ஒவ்வொருவரும் அதன்படி நடந்திருப்பார். அப்பொழுது ஒவ்வொரு சிருஷ்டியும் நன்மையையேனும் தீமையையேனும் அடைய அருகதையுடையதாகும். பல்வேறு மனிதர்களுக்கிடையில் பல்வேறு வகையான அபிப்ராயபேதம் ஏற்பட்டிராது. அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு நூற்றைம்பது கோடி வருஷம் சென்ற பின்புதான் வேதஞானம் அங்கே போய்ச் சேர்ந்தது. ஆதலின், அதற்கு முன்னிருந்த அமெரிக்காவாசிகளைத் தண்டிப்பதற்கு ஈசுவரனுக்கு அதிகாரம் கிடையாது.

இன்னமும் ஈசுவரன் கீழ்க்காணும் விஷயங்களையும் கவனித்தாரில்லை: இப்பொழுது ஒருவருக்கும் விளங்காத ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள வேதத்தின் விஷயம் பிற்காலத்தில் என்னவாகும்? வேத தர்மாத்மாக்களின் நிலைமையும் என்னவாகும்? நமது வார்த்தையை நல்லவிதமாய் வியாக்கியானம் செய்யப் புகுவோர்களுள் பற்பல மனிதர் பற்பலவிதமான அபிப்பிராயங்களை உடையவராய் விடுவார்களே. இந்த ஸம்ஸ்கிருத பாஷை அவர்களுடையதன்று; ஆதலின், அதை அவர்கள் அறியவு மாட்டார்கள். எனவே, அவரவரும் தத்தம் மனம்போன போக்கெல்லாம் போய்த் தனித்தனியான வியாக்கியானத்தினால் பற்பலவிதமாய் வேத தர்மத்தைப் பாழாக்கிவிடுவர். நாம் நாடாத விஷயங்களையெல்லாம் வேதத்தினின்றும் தோண்டி எடுப்பர். அவற்றிற்குப் பற்பலவிதமான நவநாமங்களையும் புதிய வர்ணங்களையும் இட்டு, மனிதர்களைத் தவறிய வழியில் செலுத்திவிடுவார்கள்.

ஒரே ஒரு வாக்கியத்தையே எடுத்துக்கொண்டு பெரியதொரு நீளமான குதர்க்கப் பாலைவனத்தில் தத்தமக்குரிய இஷ்டப்பிரகாரம் நெடுந்தூரம் அலைந்து திரிவார்கள். எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டும் பரமேசுவரனின் மெய்யான கருத்தின் கிட்டவும் எட்டமாட்டார்கள்; தத்தம் ஜயத்தை நாடியே ஒவ்வொருவரும் ஓடித்திரிவர். அவர்களுக்கிடையே நீ, நீ, நான், நான் என்பதே அதிகமாக விவாதித்து நிற்கும். அதன் பயனாக ஒவ்வொருவரும் தம்மைத் தவிர்த்து, ஏனையோரெல்லாம் தவறானவர்களென்றும் நாஸ்திகர்களென்றுமே அழைத்துக் கொள்வார்கள். எல்லோருடைய குழப்பத்தின் பயனாகவும் ஒருவரும் நேர்வழியடைய மாட்டார்; தாங்களும் சீர்திருந்தாததோடு மற்றவர்களையும் சீர்திருத்த மாட்டார்கள். வீணானதும் பொய்யானதுமான வார்த்தைகளின்மீதே வாதாடிக் கொண்டிருப்பார்கள். இதைவிட அவர்களுக்கு வேறுவழியும் கிடைக்க மாட்டாது; ஏனெனின், இவ்விதமான விதண்டா வாதங்களுள் இன்னது சரியென்றும் இன்னது தவறென்றும் தீர்மானம் செய்வதற்கு வேண்டிய சட்டதிட்டங்கள் கிடையா. அப்படியே உண்டென்று கூறப்படுமாயின், அவையெல்லாம் ஒரு கக்ஷியரால் ஒத்துக்கொள்ளப்பட்ட போதிலும் மற்றக் கக்ஷியரால் மறுக்கப்பட்டனவாகவே காணப்படும்.

ச. பி. 7-ஆவது அத்தியாயம் பார்க்க:

“வினா:- வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் பிரகாசம் செய்யப்பட்டது. அக்கினி முதலிய ரிஷிகள் அப்பாஷையை அறியவில்லையாதலால் வேதத்தின் அர்த்தத்தை எப்படி அறிந்தார்கள்?

விடை:- பரமேசுவரன் அவ்வேதத்தை அறியும்படி செய்தார். தர்மாத்மா, யோகி, மஹரிஷி இவர்கள் எதனுடைய அர்த்தத்தை அறிய வேண்டுமென்று தியான ஸ்திதியில் பரமேசுவரனின் ஸ்வரூபத்தில் சமாதியை அடைகிறார்களோ அப்பொழுது பரமாத்மாவானவர் அபீஷ்டமான மந்திரத்தின் அர்த்தத்தை அறியச் செய்கிறார். அப்படி அனேக யோகிகளுடையவும் ரிஷிகளுடையவும் மனதில் வேத அர்த்தம் பிரகாசமடைந்து அந்தந்த ரிஷி முனிகள் இதிகாச பூர்வமாய்க் கிரந்தங்களைச் செய்தார்கள். அதுவே பிராம்மணம் அல்லது பிரம்மமாகும். அதாவது எந்த வேதத்திற்கு வியாக்கியானம செய்யப்பட்டிருக்கிறதோ, அதற்கே பிராம்மணமென்று பெயர்.”

எனவே, நூற்றுக்கணக்கான மஹரிஷிகளும் முனிவர்களும் பரமேசுவரன் ஸ்வரூபத்தில் சமாதியை அடைந்து, அதனால் பரமேசுவரனின் நிலைமையையும் அடைந்த பிறகுதான் 1126-ஐ விட அதிகமான வேதங்களை உற்பத்தி செய்து, தங்கள் வேத ஞானத்தின் காரணமாய்ப் பற்பல மந்திரங்களின் அர்த்தங்களைப் பற்பலவிதமாக அனேக நூற்றாண்டுகளில் செய்து முடித்தனர். சுவாமி தயானந்தஜீயின் காலம்வரை இவரது அபிப்ராயத்தின் பிரகாரம் வேதங்களின் உண்மைப் பொருள் அறியப்படாமலிருந்ததனால் ஆதிமுதல் ஆரியர்கள் எந்த வேதத்தின்படி நடந்து வந்தார்கள்?

அவர்கள் வேதங்களின் அர்த்தத்தை விளங்கிக் கொள்வதற்குமுன் தர்மாத்மாவாகவும் யோகியாகவும் மஹரிஷியாகவும் முனிவர்களாகவும் எவ்வாறு ஆய்விட்டனர்? சமாதியடைவதன் ஒழுங்குகளை வேதத்தை அறியுமுன்னே எப்படிக் கற்றுக்கொண்டு “பரமேசுவரனின் ஸ்வரூபத்தில் சமாதியை” அடைந்தார்கள்?

அதற்குமுன் பரமேசுவரனின் ஸ்திதியை அடைவதற்கு யாரிடமிருந்து நியதி கற்றுக்கொண்டனர்? அதை எவ்வாறு எவ்விடத்தில் செய்தனர்? இவ்வித நிலைமையில் வேதம் பிரகாசம் செய்யப்பட்டபோது அதனால் என்ன பிரயோஜனம் உண்டாயிற்று?

எனவே, மஹரிஷிகளும் முனிவர்களும் பல மந்திரங்களின் பொருள்களையும் 1127 வேதங்களாய்ச் சித்தப்படுத்தி மனிதர்களின் முன்வைத்த காலம்வரை வேதங்கள் இருந்ததும் இல்லாமற் போனதும் ஒன்றுதானே.

மஹரிஷிகளும் முனிவர்களும் சமாதியில் இருந்ததன் பயன் யாது? தர்மாத்மாக்களும் மஹரிஷிகளும் யோகிகளும் முனிவர்களும் தம்முடைய சமாதியின் பயனாய் வேதங்களின் உண்மையான கருத்துகளையும் தத்துவங்களையுமேதாம் உணர்ந்து கொண்டார்கள் என்று எவ்வாறு தெரிந்துகொள்வது?

எந்த உரைகல்லின் உதவியைக் கொண்டு இன்னாருடைய வியாக்கியானம் தவறானதென்றும் மெய்ப்பிக்கப்பட்டன?

அந்த மனிதர்களெல்லாரும் கபடமுள்ள முனிவர்கள், அல்லது வீண்பெருமைக்கார வேஷதார பாஷண்ட ரிஷிகள், அல்லது வஞ்சக சித்தம் குடிகொண்ட துஷ்டர்களான பொல்லாத யோகிகள், போக்கிரிகளான தர்மாத்மாக்கள் அல்லரென்று எவ்வாறு தெரிந்து கொண்டார்கள்?

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment