அல் முஹ்மல் – 3

ஸ்ரீ சங்கராசாரியரைப் பற்றிப் புகழ்ந்து பேசுங்கால் சுவாமி தயானந்தர் ச.பி. 11-ஆவது அத்தியாயத்தில் கூறுவதன் கருத்தாவது: சங்கராசாரியர் வைதிக மதத்தையே தழுவியிருந்தார்; அவர் ஹிந்துஸ்தானத்தில் இரண்டாம் முறையாக வேததர்மத்தை நிலைப்படுத்தினார்; ஜைனர்களின் விஷமத்தை ஒடுக்கி

அவர்களை நாசப்படுத்தினார்.

ஆனால், அவரைப் பற்றியே இவ்வாறும் எழுதுகிறார்: “ஜீவனும் பிரம்மமும் ஒன்று என்பதும் உலகம் பொய் என்பதுமே ஸ்ரீ சங்கராசாரியருடைய உண்மையான மதமாவென்று கவனிக்க வேண்டும். சமண மதக் கண்டனத்திற்காக அவர் அதை எண்ணியிருந்தால் சரியே; அவருடைய சொந்த மதக் கொள்கையாய் அது இருந்திருக்குமேயானால் தப்பு என்றே சொல்ல வேண்டும்.”

எனவே, பெரும்பாலும் சங்கராசாரியரும் மற்ற மகான்களும் ஜைனர்களின் வேதத்தையும் பௌத்தர்களின் வேதத்தையும் தாக்குவதற்காகவும் அவ்வாறு கூறியிருக்கலாம். ஏனெனின், அன்னார் தேசமும் காலமும் உள்ள விதத்தின் அவசியத்திற்கேற்பத் தம்முடைய கல்வியையும் கொள்கையையும் உறுதிப் படுத்துவதற்காகவே தம்முடைய சொந்தமான வேறு பல நாட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு மனச்சாட்சிக்கு நேர்மாற்றமான வாதங்களைப் புரிந்திருக்கலாம். அல்லது அவர்களைப் பொய்யர்களென்று கண்டிக்கும் நம் தயானந்தரே பொய்யராகவும் இருக்கலாம்.

சைவர்களைப் பற்றிக் கூறும்போது தயானந்தர் இவ்வாறு எழுதுகிறார் (ச.பி. அத். 11): “வாமமார்க்கிகளும் சைவர்களும் ஒன்று சேர்ந்து லிங்கம், ஜலாதாரி என்று சொல்லப்பட்ட அண் பெண் குறிகளைப் பூஜை செய்து அதைப் பரவச் செய்யவும் கட்டுப்பட்டார்கள்……. அது காட்டாளர்களுடைய செய்கை.”

இன்னும் ராமானுஜரைப் பற்றிக் கூறுங்கால், “சுலோகங்களையும் சாரீரிக சூத்திரங்களையும் உபநிடத உரைகளையும் சங்கராசாரியருக்கு எதிராகச் செய்தார்……. ஜீவனும் பிரம்மமும் ஒன்றென்றும் இரண்டாவதான வேறு வஸ்து உண்மையில் ஒன்றுமில்லையென்றும் பிரபஞ்சம் பொய்யென்றும் மாயை என்றும் அந்தியமென்றும் சங்கராசாரியர் நம்பினார். இதற்கு மாறாக ராமானுஜர், ஜீவன் பிரம்மம் மாயை இ்ம்மூன்றும் நித்தியமென்று நம்பினார். சங்கராசாரியர் பிரம்மத்திலிருந்து ஜீவனையும் காரண வஸ்துவையும் வேறாக நம்பாததும் சரியாகாது. இந்த அம்சத்தில் ராமானுஜர், ஜீவன் அதாவது, மாயையுடன் கூடின பரமேசுவர் ஒன்றுதானென்று எண்ணி, இ்ம் மூன்றையும் போற்றி அத்வைதமென்று (விசிஷ்டாத் வைதமென்று) சொல்வதும் எப்பொழுதும் வீண் காரியமேயாகும்,” என்று வருணித்திருக்கிறார்.

இன்னமும் சக்கிராங்கிதர் வேத விரோதிகளென்றும் தயானந்த்ஜீ குறை கூறுகிறார். இதனால் தாம் மட்டுமே உண்மை ஞானி என்றும் மற்றவரெல்லாரும் வேதங்களையறியாத பொய்யர்களென்றும் சுவாமி தயானந்தர் கூறுவது வெளியாகின்றது. உண்மையில் அவர்களே சரியானவர்களாகவும் நம் தயானந்தரே தவறானவராகவும் இருக்கலாம். ஆரிய சமாஜத்தில் சேர்ந்தவர்களே சத்தியோபதேசம் புரிபவர்களென்றும் பொய்யைப் பொய்யென்றும் மெய்யை மெய்யென்றும் வெளியாக்குகிறவர்கள் என்றும் மற்றவர்கள் பிடிவாதக்காரர்களென்றும் கருதப்படுகிறார்கள்.

“இந்த நூலை ஆக்கியதன் நோக்கம் உண்மையை உலகிலுள்ளோர்க்கு விளக்கிக் காட்ட வேண்டுமென்பதே. பொய்யைப் பொய்யென்றும் மெய்யை மெய்யென்றும் விளக்கியுள்ளோம். பொய்யை மெய்யென்றும் மெய்யைப் பொய்யென்றும் காட்டுவது உண்மையாகாது. ஆனால், உண்மையை உள்ளவாறே பேசவதும் எழுதுவதும் நம்புவதுமே சத்தயமாகும். சில பிடிவாதக்காரர்கள் பொய்யை மெய்யாகவும் மெய்யைப் பொய்யாகவும் காட்ட முயலுகிறார்கள். ஆதலின், அவர்கள் சத்தியத்தைப் பெற்றுக் கொள்வது முடியாது. அறிஞர்களின் கடமை யாதெனில், உள்ளதை உள்ளவாறே மேற்கோள்களின் துணையைக் கொண்டு சத்தியத்தை நிரூபித்துக் காட்டுவதேயாகும்……. இந்நூல் இப்படிப்பட்ட தீய விஷயங்களினின்றும் பரிசுத்தப்படுத்தப் பட்டிருக்கிறது. இதை எழுதுங்கால் நாம் இவைகளினால் பாதிக்கப்படவில்லை. மற்றவர்களுடைய மனதைப் புண்படுத்துவதோ நோகச் செய்வதோ நம்முடைய நோக்கமில்லை. ஆனால்……. சத்தியா சத்தியத்தை யாவரும் அறிந்து சத்தியத்தைத் தழுவி அசத்தியத்தை ஒழிக்க வேண்டும். ஏனெனில், சத்தியா சத்திய உபதேசம் இருந்தாலொழிய மானிடவர்க்கம் மேல் எழ முடியாது” – (ச.பி. முகவுரை)

ச.பி. 11-ஆவது அத்தியாத்திலிருந்து மேலே எடுத்துக் காட்டப்பட்ட விஷயங்களெல்லாம் சுவாமி தயானந்தரின் அபிப்பிராயமேயாகும். ஆதலின், இவர் தமது முகவுரையில் கூறியவண்ணம் இவரே நேர்மையானவரென்றும் உண்மையானவரென்றும் மெய்யை மெய்யாகவும் பொய்யைப் பொய்யாகவும் எடுத்துக் காண்பிப்பவரென்றும் பிடிவாதத்தன மற்றவரென்றும் நிரூபித்துக் காட்டப் போதிய சாக்ஷியம் ஏற்பட்டிருக்கிறதென்று சொல்லலாம். ஆனால், தயானந்தருக்கும் சங்கராசாரியருக்கும் ராமானுஜாசாரியாருக்கும் இடையில் வேறெவ்விதமான பகைமையும் இல்லாதபோது, இம்மூவருக்கிடையில் வானத்துக்கும் பூமிக்குமுள்ள வித்தியாசம் ஹிந்து மதத்தின் மூலக் கொள்கைகளிலேயே ஏற்பட்டிருப்பதன் காரணம்தான் யாது?

இப்பொழுது நம் முன்னிலையில் ச.பி. –த்தின்படி வேதங்களை அறிந்த இருவர் காணப்படுகின்றனர். வேத விரோதியன்று ஒதுக்கப்பட்ட ராமானுஜர் ஒருபக்கல் இருக்கட்டும்; சங்கராசாரியர் வேதத்தை உணர்ந்தவரென்றும் வைதிக மார்க்கத்தை இப்பரத கண்டத்தில் புனருத்தாரணம் செய்து நிலை நிறுத்தியவரென்றும் வேத மதத்துக்கு மாற்றமாயிருந்துவந்த ஜைன நாஸ்திகத்தை ஒழித்தவரென்றும் சுவாமி தயானந்தரே நற்சாக்ஷி பத்திரம் கொடுத்திருக்கிறார்; தயானந்தரோ வேத ஞானங்களில் தமக்கு முதிர்ந்த அனுபவம் உண்டென்று பெருமை பாராட்டிக் கொள்ளுகிறார். எனவே, சங்கர மதத்துக்கும் தயானந்த மதத்துக்கும் இடையில் உத்தர துருவத்துக்கும் தக்ஷிண துருவத்துக்கும் இடையிலுள்ள தூரத்தைக் காட்டினும் அதிகமாகவே காணப்படுகின்றது; மேலும் ஒன்றுக்கொன்று அவ்விரு துருவங்களேபோல் நேர் மாறாகவும் காணப்படுகின்றன. ஏனெனின், ஒருவர் வேதத்தின்படியே ஈசுவரனும் ஜீவனும் பிரகிருதியும் நித்தியமென்றும் மற்றொருவர் அதே வேதத்திலிருந்தே ஈசுவரனைத் தவிர்த்து மற்றுமண்டான சகல ஜீவன்களும் பிரகிருதியும் அநித்தியமே என்றும் வாதித்துச் சாதிக்கிறார்கள்.

ஆனால், தயானந்தர் ச.பி. அத். 11-இல் எழுதியிருப்பதே போல் “கவி ஒருவர் கூறும் வண்ணம் தன்னயக்காரர்கள் தங்களுடைய வேலையை முடித்துக்கொள்வதில் கெடுதல்களையும் குற்றங்களையும் கவனிக்கிறதில்லை. அவைகளைச் சுத்தமானவை என்றும் நம்புகிறார்கள்,” என்று வாதிக்க முன்வரலாம். ஆனால், ஆதி சங்கராசாரியரும் அவருடைய அக்கால சிஷ்யர்களும் இக்காலத்தில் இருப்பார்களாயின், தயானந்தரின் கொள்கைகளைப் பற்றியும் அனுஷ்டானங்களைப் பற்றியும் இப்படித்தான் அவர்களும் சொல்லியிருப்பார்கள். இல்லை! இன்னமும் கேவலமாக, அக்காலத்திய ஜைனமதத்தை ஆணிவேருடன் அழித்ததேபோல இக்காலத்திய விரஜானந்தரையும் அவருடைய சிஷ்யரான தயானந்தரையும் இவரது மார்க்கமாகிய ஆரிய நியோக மார்க்கத்தையும் அடியோடு ஆசாரியர் திருவடிகளை அடையும்படி பரலோக பிராப்தியாக்கி இருப்பார்கள்.

இவ்விருவருள் இவரைக் காட்டினும் சங்கராசாரியர் தாழ்ந்தவரென்று கூறி முடிவு கட்டிவிடுவது ஒரு சாமான்யமான காரியமன்று. ஆதலின், இவ்விருவரும் ஒரே விதமான நான்கு வேதங்களைக் கொண்டே உதயகிரிக்கும் அஸ்தகிரிக்குமுள்ள அபிப்ராய பேதத்தை அடைந்திருக்கிறார்கள். இவ்விருவருள் மெய்யானவர் இன்னவரன்றும் பொய்யானவர் இன்னவரென்றும் மெய்யான ஹிந்துவாகிய எவரேனும் கூறுவாராக.

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

Related Articles

Leave a Comment