பீடிகை – பகுதி 3

by பா. தாவூத்ஷா

“அரபி மொழியிலுள்ள குர்ஆன் தேர்ந்த முகம்மதியக் கல்விமான்களால் உருது பாஷையில் செய்யப்பட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பு சம்ஸ்கிருத எழுத்தில் ஹிந்தியில் எழுதப்பட்டு அரபி படித்தவர்களால் பார்வை இடப்பட்டு திருத்தப்பட்டிருக்கிறது,”

என்றும் தயானந்தர் தைரியமாகக் கூறுகிறார். இவரது பச்சைப் பொய்யான படுபுளுகை பின்வரும் ஆராய்ச்சியிலிருந்து நீங்களே நன்கு தெரிந்து கொள்வீர்கள். இவர் எந்த “முகம்மதியக் கல்விமானால் உருது பாஷையில் செய்யப்பட்ட” மொழி பெயர்ப்பை ஹிந்தியில் எழுதிக்கொண்டாரென்று செப்பவில்லை; இது ‘ஹம்பக்’ நெ 1. பிறகு அஃது எந்த “அரபி படித்தவர்களால் பார்வையிடப்பட்டுத் திருத்தப்பட்டிருக்கிற”தென்றும் குறித்துக் காட்டவில்லை; இது ‘ஹம்பக்’ நெ 2.

அவ்விருவரின் பெயரையும் தயானந்தர் எழுதிக் காட்டியிருந்தால், இவரது மொழி பெயர்ப்பைப் பற்றிய குறை நிறை இப்படிப்பட்டதென்று நாம் எடுத்துக்காட்ட முன்வருதல் சாலும். இஃதில்லாதபோது, இவர் இஸ்லாத்தை இழிவுசெய்து காட்டவேண்டுமென்னும் அயோக்கிய எண்ணத்தினாலேதான் வேறு எவரெவரோ அன்னியர் அசூயையுடன் தப்புந் தவறுமாக எழுதியதை ஆதாரமாக வைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் தாறுமாறாக எழுதி விட்டார் என்று தான் இவ்வுலகம் தீர்மானிக்கும். “படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்,” என்னும் பழமொழியே இவருக்குச் சாலப் பொருத்தமாகும்.

“ஆசிரியரது கருத்தையும் பொருளையும் தழுவியே மொழிபெயர்த்துள்ளேன். இது சிறப்பாகப் பதினான்காவது அத்தியாயத்திற்கு ஏற்கும். முகம்மதியர்களால் தரும நூலெனக் கருதப்படும் குர்ஆன் ஷரீபுக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாதது ஒரு குறையே யாகும். குர்ஆனைப் பொறுத்தவரையில் முக்கியமாக நான் கருத்தையும் பொருளையும் ஒட்டியே பதினான்காவது அத்தியாயத்தில் எடுத்துக்காட்டாக ஆளப்பட்டுள்ள மேற்கோள்களை மொழிபெயர்த் துள்ளேன் ….. பொருள் வேற்றுமை இராதென்று கூறுவேன்,”

என்று தமிழ் மொழிபெயர்ப்பாசிரியர் தைரியமாக மொழிகின்றார். ஆனால், இவரது 14-ஆவது அத்தியாயத்தைப் படித்துப் பார்ப்பீர்களேல், இவர் எத்துணைத் தூரம் குர்ஆன் ஷரீபின் கருத்தையும் பொருளையும் ஒட்டிப் பொருள் வேற்றுமை இல்லாமல் எழுதியிருக்கிறாரென்பதை மிக நன்றாகத் தெரிந்துகொள்வீர்கள்.

நண்பர் ஜம்புநாதனேனும் அவ்விருவரின் பெயரையும் நிரூபிக்கத் தையாராயிருக்கிறாரா வென்று நாம் அறைகூவியழைக்கின்றோம். இவரும் அவர்கள் இன்னாரென்று ருஜுப்பிக்கத் தவறி விடுவாராயின், இவரது 14-ஆவது அத்தியாயம் சென்னையிலுள்ள குப்பைக் குழியிலேதான் புதைப்பதற்கு அருகதையுள்ளதாகும். ஆரிய சமாஜ நண்பர் எம். ஆர். ஜ. இடம் இப்பொழுது மூன்று வினாக்களை விடுக்கின்றோம்:

  1. எந்த “முகம்மதியக் கல்விமான்” உருது பாஷையில் செய்த மொழிபெயர்ப்பை உம்முடைய குருவானவர் எடுத்தாண்டிருக்கிறார்?
  2. எந்த “அரபிபடித்த முஸ்லிம்களால் பார்வையிடப்பட்டு” அந்நூல் திருத்தப்பட்டது?
  3. நீர் அம் மொழிபெயர்ப்பின் கருத்தையும் பொருளையும் வேற்றுமையில்லாது மொழிபெயர்த்திருப்பது வாஸ்தவந்தானென்று ருஜுப்பிக்கத் தையாராயிருக்கிறீரா?

இன்றேல், நீர் சத்தியார்த்த பிரகாசம் செய்யாது அசத்தியார்த்த பிரசாரம் செய்தவராகவே உம்முடைய “பரமேசுவரனால்” ஒதுக்கித் தள்ளப்படுவீர். இதுவே சத்தியம்!

இஸ்லாத்தை இழிவுசெய்து காட்டவேண்டுமென்னும் அயோக்கிய எண்ணத்தினாலேதான் வேறு எவரெவரோ அன்னியர் அசூயையுடன் தப்புந் தவறுமாக எழுதியதை ஆதாரமாக வைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் தாறுமாறாக எழுதி விட்டார்

இனி, தயானந்தரின் “பதினான்காவது அத்தியாய”த்தைப் பற்றி ஒரு சிறிதே எடுத்தெழுதுவாம்; அதில் எம்முடைய சொந்த அபிப்ராயம் ஒன்றையும் எடுத்தோதாமலே, (ஏனெனின், ஆரிய சமாஜிகளைத் தாக்கப் பின்வரும் மெஷீன் பீரங்கியிலிருந்து நீங்கள் தயானந்தரைப் பற்றியும், அவரது ஆரியசமாஜத்தைப் பற்றியும் நன்கு தெரிந்து கொள்வீர்கள். அப்பொழுதுதான் நம் ஆரிய சமாஜ நண்பர்கள் ஊர்தெரியாமல் ஓட்டம் பிடிப்பார்கள்) அவருடைய சத்தியார்த்த பிரகாசத்திலிருந்தே இடத்துக் கேற்றவாறு இடித்துரைக்கும் மேற்கோள்களை மட்டும் இப் பீடிகையின்கண் எடுத்தோதுவாம்1:-

பிஸ்மில்லாஹ்வைப் பற்றிக் கூறும்போது தயானந்தர்,

“முகம்மதியர்கள் குர்ஆனைக் கடவுளின் அருள்மொழி எனக் கொள்கிறார்கள். மேற் கூறப்பட்டதிலிருந்து இந்நூலை ஆக்கியவர் கடவுள் இல்லை என்றும், ஒரு தனி மனிதன் என்றுமே புலனாகும். இந்நூல் கடவுளால் ஆக்கப்பட்டதெனின், ‘அல்லாவின் பேரால் இந்நூலை ஆரம்பிக்கிறேன்’ என்று சொல்லப்பட்டிருக்க வேண்டியதில்லை. மனித ஜாதியின் நன்மையை ஒட்டி நான் இப்புஸ்தகத்தை ஆக்குகிறேன், என்று சொல்லியிருக்கலாம்,”

என்று எழுதுகிறார். வாஸ்தவந்தான் :

“ஞானிக்குஞ் ஞானியான ஏ பரம்பொருளே! வண்டிச் சக்கிரம்போல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்கு மூலாதாரமாயும் எங்கும் பரவியுள்ள உன்னை அறிவதற்குப் பாத்திரமாயும் இருக்கும் உனது அருளைப்பெற்ற எனது மனம் உண்மை அறிவால் அலங்கரிக்கப்படட்டும். ஏ! லோக நாயகா! திக்குகள் தோறும் ரதத்தை நடத்தும் வல்லமையுள்ள சாரதி, குதிரையை ஆட்டி வைப்பதுபோல் என்னை ஆட்டிவைக்கும் மனதைத் தீய பாதையினின்றும் விலக்கி நல்ல வழியை அதற்குக் காட்டுவாய். இறைவனே எனது இப்பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வாய்,”

என்று யஜுர்வேதம் 34:6-இலிருந்தும், மற்றும் அவ்வேதத்தின் பற்பல இடங்களிலிருந்தும் பற்பல பிரார்த்தனைகளை அவரே தமது நூலில் எடுத்தெழுதுகிறார். (இன்னமும் ருக் வேதத்திலுள்ள காயத்திரி என்னும் சூரிய நமஸ்காரப் பிரார்த்தனையையும் பார்ப்பீர்களாக.)

இவற்றையெல்லாம் நோக்குங்கால் அவருடைய வேதங்கள் ஆண்டவனுடைய வாக்கேபோல் காணப்படாமல் அடியானுடைய வாக்காகவே காணப்படுகின்றன. ஆண்டவன் வாக்கு அடியான் வாக்காக எப்படி ஆதல் முடியும்? இன்னமும் இவர் ருக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கையும் பரமேசுவரனது வாக்கென்கிறார். இதற்குப் பூர்வபக்ஷமான ஆதாரங் காட்டாது, வெறுமையாய் வாய்வேதாந்தம் பேசுகிறார். தயானந்தரின் வேதங்கள் தேவவாக்காயிருப்பின், அவை யாரால், எவருக்கு, எக்காலத்தில், எவ்விடத்தில் வெளியாக்கப்பட்டனவென்று அவ் வேதங்களைக் கொண்டே ருஜுப்பித்தல் வேண்டும். தயானந்தரின் வாய் மொழியையும், ஜம்புநாதரின் வாதத்தையும் நாம் கேட்கத் தையாராயில்லை. ஜம்புநாதனும், அவரது ஞானகுருவும், அவரது குருவாகிய விரஜானந்தரும் சேர்ந்துகொண்டு ஈசுவர வாக்கிலிருந்தே இந்நான்கு விஷயங்களையும் ருஜுப்பித்தல் அத்தியாவசியமாகும்.

கடவுள் “தயாளுவாயின் ஜீவன்களைக் கொலைசெய்து வருத்துதலை அவர் எங்ஙனம் ஆமோதித்தல் கூடும்? ஜீவ ஹிம்சை கடவுளின் தயாளுத்தன்மைக்குப் பங்கம் விளைப்பதாகுமன்றோ?”

என்று எழுதுகிறார். உண்மைதான்; இவர் தம்முடைய 4 வேதங்களும் ஈசுவர வாக்கென்கிறார். ருக் வேத முழுதும் பற்பலவிதமான அருவருக்கத்தக்க அனாசார “அசுவமேதம், கோமேதம், நரமேதம்”, “பௌண்டரீக யாகம்” போன்ற யாகங்களைப்பற்றி யெல்லாம் இவர் படித்திலர்போலும்! அவ்வேதத்துக்கு இவர் வேறுபொருள் செய்தல்கூடும்; அப்பொருளானது சரியான பொருளென்று சனாதன ஹிந்துமத ஐதிகத்தால் ருஜுப்பிக்க முன்வருவரோ? இவர் தம்மிஷ்டம்போல வேதத்தைப் புரட்டிப் பொருள் செய்துவிட்டு, ‘என் பரமேசுவரனுக்கு ஜீவகாருண்யம் உண்டு,’ என்று வாய்வேதாந்தம் பேசினால், அறிஞர்கள் ஒத்துக்கொள்வார்களோ? வேதக்கருத்தையே வேறாகப் புரட்டுபவருடன் வேறு யார்தான் விவாதித்தல் கூடும்?

-பா. தாவூத்ஷா

பீடிகை தொடரும்…

படம்: அபூநூரா


  1. இம் முறை நேர்மையான முறையன்றென்று சில அறிஞர்கள் ஆஷேபித்தல் கூடும். ஆனால், இப்படிப்பட்ட தர்க்க முறையைச் சுவாமி தயானந்த மஹரிஷியிடமிருந்தே நாம் கற்றுக்கொண்டிருக்கிறோமென்று அன்னவருக்குச் சமாதானம் கூறுவோம். “உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்,” என்பது ஒரு தென்னாட்டுப் பழமொழியாகும். 

 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

Related Articles

Leave a Comment