பீடிகை – பகுதி 4

by பா. தாவூத்ஷா

“பிஸ்மில்லாஹ்” சொல்லிக் கால்நடைகளை அறுப்பது கூடாதாம்; ஆனால் யாகங்கள் செய்து பெரும்பெரும் மிருகங்களையெல்லாம் (மனிதப்பிராணி உட்பட) முழுமையாக (ஸ்வாஹா) விழுங்கிவிடலாம் போலும்! காளியின் பெயராலும், மற்றுமுள்ள மூளியின் பெயராலும் மதுபானத்தையும் நரமாம்ஸம் உட்பட எல்லா பிராணி மாம்சங்களையும் புசித்தலையும் மேற்கொண்டு வரலாம். அது வேதக்கட்டளையாம்! தெய்வத்தின் பெயரால் அறுக்கப்படாமல் தானே செத்த எல்லாப் பிராணிகளையும் பற்பல ஹிந்துக்கள் புசித்துவருதல் ஆகும் போலும்!

“காப்பிரிகளைக் கத்திக்கு இரையாக்கு என்று இம்மதம் கூறுகிறது,”

என்று எழுதுகிறார். இதற்குமட்டும் யாம் ரூபாய் பதினாயிரம் பந்தயம் கட்டுவோம். ஜம்புநாதனேனும், இவரது குருவேனும், அவரது குருவேனும், அவரது பரமேசுவரனேனும் குர்ஆன் ஷரீபிலிருந்து இவ்விஷயத்தை ருஜுப்படுத்துவாராயின், இப்பந்தயத் தொகையை அளிக்கக் காத்திருக்கிறோம். அவர்கள் இதில் தவறி விடுவார்களாயின், கேவலம் பேடித்தனத்தால் பிறரை வஞ்சிப்பவரென்றே உலகம் தீர்மானிக்கும். ஆரியாவர்த்தமே புண்ணிய பூமியென்றும், மற்ற நாடுகளெல்லாம் மிலேச்ச தேசமென்றும் தயானந்தர்தாம் கூறுவார். இதற்கு மனுவிலிருந்தும் ஆதாரம் காட்டுவார். ஆனால், இஸ்லாம் இப்படிச் சொல்லவில்லை.

“கடவுள் நியாய காரியங்களைப்பற்றி அவர் குறித்த ஒரு நாளில்தான் கவனிப்பார் என்றால் அவர் குற்றம் செய்பராவார்,”

என்று எழுதுகிறார். குறிப்பிட்ட ஒருநாளில்தான் நியாயம் செய்வாரென்றும், மற்ற நாட்களில் அநியாயம் செய்கிறாரென்றும் கண்டுபிடித்த இவரது மூளையே மூளை!

“நல்லது என்பது சகலமதங்களின் சம்மதமாயின் முகம்மதியமதம் மாத்திரம் எல்லா மதங்களையும்விட எப்படி உயர்ந்ததாகும்?”

என்று கேட்கிறார். இவ்வினாவையே நாமும் திருப்பிக் கேட்கின்றோம். 5000 ஆண்டுகளுக்கு முன் தமது ஆரியமதமே இவ்வுலக முழுதும் பரவியிருந்த தென்கிறார். “பூகோளத்தில் விளங்கும்படியான சகலவித்தைகளும் ஆரியவர்த்தத்திலுண்டானவைகளே” என்றும் பிதற்றுகிறார். இஃது எப்படி மெய்யாகும்? தயானந்தரின் சரித்திர ஞானசூன்யம் ஒரு பக்கல் கிடக்க; மற்றெல்லா மதங்களையுங் காட்டிலும் இவரது மதம்மட்டும் எவ்வாறு உயர்ந்ததாகும்? நியோகம் நிறைந்திருப்பதால் அஃது உயர்ந்துவிட்டது போலும்!

“முகம்மதியர் முன் ஜன்மத்தில், மறுபிறப்பில் நம்பிக்கை யில்லாதவர்கள். எனவே கர்மவினைக் கேற்றவாறு பயன் என்பது அவர்கள் மதப்பிரகாரம் ஏற்படாது. ஆதலால், ஒருவனைக் கஷ்டத்திற்குள்ளாக்குவதும், ஒருவனுக்குச் சுகத்தை தருவதும், மற்றொருவனுக்குத் துக்கத்தைத் தருவதும் கடவுளின் பாரபக்ஷத் தன்மையைக் காட்டவில்லையா?”

என்று கேட்கிறார். மெய்தான்; இப்படிப்பட்ட வேற்றுமைகளெல்லாம் முன்ஜென்மப் பயனால்தான் வருகின்றன வென்று இவர் ருஜுவில்லாமல் வெறுமையாய்ப் பிதற்றிக்கொண்டு வருகிறார்; இவ் வுலகிலுள்ள வேற்றுமைகளையல்லாது வேறொரு ருஜுவும் மறுபிறப்புண்டென்பதற்கு இவர் எடுத்துக் காட்டவில்லை. இப்பிரபஞ்சத்தில் வேற்றுமைகள் காணப்படுவதை நாம் ஒத்துக்கொள்வோம்; தயானந்தர் கூற்றுப்பிரகாரம் முன்ஜன்ம ஞாபகமும் எமக்கில்லாதது மெய்தான். இங்குள்ள வேற்றுமைகளுக்குக் காரணமொன்றும் எமக்குப் புலப்படவில்லை யென்றே வைத்துக்கொள்வோம். இதனால் அவருடைய மறுஜன்மம் ருஜுவாய் விடுமா? இவ் வேற்றுமைகளுக்கெல்லாம் பகவானிடத்தில் முன்ஜன்மக் கருமமல்லாமல் வேறு காரணம் ஒன்று இருத்தல் கூடாதா? இதற்கென்ன இவர் சமாதானம் கூறுவார்?

“மேலே குறிக்கப்பட்டிருக்கும் வரியைக் கடவுள், ஜனங்கள் இதை உச்சாரணம் செய்யும்படி நேரில் சொல்லிக்கொடுத்தார் என்று ஒரு உரை கூறுகின்றது. அரிச்சுவடியையும் கடவுளே நேராகச் சொல்லி வைத்திருக்கவேண்டுமென்று இதிலிருந்து தோன்றவில்லையா!”

என்று வியப்புறுகின்றார். இதற்கு அவருடைய எழுத்தையே எடுத்துக் காட்டுவோம்:

48 வயதுள்ள கிழப் பிரமசாரி 24 வயதுள்ள இளநங்கையையே மணத்தல் உத்தமமென்றும்

“வினா:- எந்த ஆத்மாவில் எப்பொழுது வேதங்களை உபதேசஞ் செய்தார்? விடை:- சிருஷ்டியின் முதலில் பரமாத்மா அக்கினி, வாயு, ஆதித்தியன், அங்கிரா இப் புருஷர்களுடைய ஆத்மாவில் பிரகாசஞ் செய்தார். சுவேதசை 6.18-ஆவது வாக்கியத்தை ஆதாரங்காட்டிய, வினா:- மேற்கண்ட வாக்கியத்தின் பிரகாரம் பிரம்மாவுக்கு உபதேசஞ் செய்ததாக இருக்கிறதே? அக்னி முதலியவர்கள் என்று ஏன் சொல்லுகிறீர்கள்? விடை:- பிரம்மாவின் ஆத்மாவில் அக்கினி முதலிய ரிஷிகளின் மூலமாக ஸ்தாபித்தார். (மனு 1.23) சிருஷ்டி முதலில் பரமேசுவரன் மனிதர்களையுண்டுபண்ணி அக்னி முதலிய நான்கு ரிஷிகளின் மூலமாகப் பிரம்மாவை அடையச்செய்து அப்பிரம்மாவானவர் அக்னி, வாயு, ஆதித்யன், அங்கிராவினிடமிருந்து ரிக், யஜு, சாம, அதர்வண வேதத்தை முறையே கிரகித்தார்.

இத்தகைய அறிவில்லா அபத்தத்தின் முன் எம்முடைய வேதத்தையும் பரிகாசம் செய்யத் துணிந்து விட்டார்.

குர்ஆன் ஷரீபு அரபு பாஷையில் வெளிவந்தது ஒரு குற்றமாம். ஒரு தேசத்திலேனும் பேசப்படாமல் செத்துப்போன பாஷையாய்க் கருதப்பட்டும், ஒரிடத்தும் பேசப்படாமையால்2 பற்பல வகையான மாறுபட்ட வியாக்யானங்களுக்கு இடங்கொடுத்துக் கொண்டும் வந்திருக்கும் ஸம்ஸ்கிருத பாஷையில் வேதங்களை வைத்திருக்கும் இவர் அரபு பாஷையில் வேதம் வெளியானதைப்பற்றி வாதனைப்படுவதுதான் ஒரு வேதனையாய்க் காணப்படாநின்றது. ஒரு தேசத்துக்கும் சொந்தமல்லாத அவரது பாஷையே உயர்ந்த பாஷையாம்; இஃது எம்மட்டும் மெய்யென்பது பாஷா தத்துவ நிபுணர்களுக்கே நன்கு விளங்கக் கிடக்கின்றது.

“நல்லவர்கள், பக்தர்கள் எத்துணையுமில்லாது ஒளியின் பாதையில் நடப்பார்கள். அவர்களுக்குக் குர்ஆன் துணை தேவையில்லை,”

என்கிறார். இது வாஸ்தவமாயின், இவர் ஏன் ஒரு நூதன ஆரியசமாஜ மதத்தை உற்பத்திசெய்தார்? இவருக்கு ஏன் ஸம்ஸ்கிருதத்தில் நான்கு வேதங்கள்?

“பைபிளும் வேதபுத்தக மல்லவா? அங்ஙனமிருக்க, முகம்மதியர்கள் ஏன் அவர்கள் குரானில் வைக்கும் நம்பிக்கையைப் பைபிளில் வைக்கக் கூடாது?”

என்றெழுதுகிறார். இவர் ஏன் அவ்வேதத்திலே நம்பிக்கை வைக்கக் கூடாதென்று நாம் கேட்கிறோம். இவர் தம்பால் 4 வேதங்களை வைத்துக்கொண்டு, “ஒரு நூல்” என்கிறார். எத்துணைப் பொய்! “கிறிஸ்துவர்களும், முகம்மதியர்களுந்தானா கடவுள் அருள் பெற்றவர்கள்?” என்று வினவுகிறார். இவர் மட்டும் ஏன் தமது வேதங்களில் நம்பிக்கை வையாதவர்களை நாஸ்திகர் என்கிறார்? “வேதங்களைத் தூஷிக்கிறவன் நாஸ்திகனாகிறான்.”

“(6) அவர்கள் உள்ளத்தில் இருப்பவை ரோகம். அல்லாவானவர் அதை அதிகரிக்கிறார்—(2.9). அவர்கள் நிரபராதியாய் இருக்கத் தீய விஷயங்களில் நடத்தல் என்னும் ரோகத்தை வளர்க்கிறார் என்பதுதான் உங்கள் கொள்கையோ? கடவுளுக்கு இரக்கமில்லையா? இது மிருகத்தனமல்லவா?” என்று வினவுகிறார்.

இவரது வேடிக்கையைப் பாருங்கள்!

“வினா:— ஈசுவரன் ஒருவர் செய்யும் பாபத்தை மன்னித்து விடுகிறாரா? விடை:— இல்லை. ஏனெனில், பாப மன்னிப்பு நியாய நஷ்டத்தைத் தரும்.”

இப்படிப்பட்டவரே இரக்கத்தைப் பற்றிப் பேசுகிறார். மேலும் இல்லாத ரோகத்தை ஆண்டவன் அபிவிருத்தி செய்வதில்லை; பாபியே தன் பாபத்துக்குக் காரணமென்பதே இஸ்லாத்தின் மூலக் கொள்கையாம். தயானந்தரே, “எந்தெந்த இடத்தில் எப்படிக் கிரகிக்க வேண்டுமோ அப்படிக் கிரகிக்க முயலவேண்டும். தாங்களும் இன்னும் மற்ற எல்லோரும் அங்ஙனமே ஏற்றுக்கொள்ளல் அவசியமாகும்,” என்று தம் நூலுக்குப் பீடிகை போட்டுக் கொள்ளுகிறார். ஆனால், எம்முடைய வேத்தைப் படிக்குங்கால், தாம்மட்டும் அந்தக் கண்ணாடியைக் கழற்றிவிட்டார் போலும்!

“(7) பூமியைப் படுக்கைபோல் விரித்து, ஆகாசத்தை உனக்குப் போர்வைபோல் செய்துளார் (2.20). சுவர்க்கலோகம் பூமியின் கூரையாகுமா? இது குரான் செய்த கடவுளின் அறியாமையைக் காட்டவில்லையா? வானம் கூரையென்று கூறுதல் அசட்டுத்தனமாகும். முகம்மதியர்கள் சில கிரகங்களைச் சுவர்க்கம் என்று கூறினர். அது அவர்களுடைய மனோபாவ சிருஷ்டியே யாகும்,”

என்று உளறுகிறார். இவரது மொழிபெயர்ப்பில் சுவர்க்கம் கூரையென்று காணப்படாமலிருக்க, ஸோமலதையின் சத்தைப் பருகிவிட்டு, இவர் மது மயக்கங்கொண்டு விட்டார்போலும்!

“பரமேசுவரனே பூமி ஆதித்தியன் முதலான சர்வலோகங்களையும் தரிக்கிறார் ………. இப் பூலோகம் ஜலத்துடன் கூடிக்கொண்டு சூரியனை நாலா பக்கமும் சுற்றுகிறது….

“வினா:— சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் இவைகளென்ன? இவைகளில் மனிதன் முதலான சிருஷ்டிகளுண்டா? இல்லையா? விடை:— மனிதன் முதலானவர்கள் வசிக்கும் லோகங்கள் அவை …. பிருதிவி, ஜலம், அக்கினி, வாயு, ஆகாசம், சந்திரன், நக்ஷத்திரம், சூரியன் இவைகளுக்கு வசு என்று பெயர். ஏனென்றால் அதில் சகல பதார்த்தங்களும், பிரஜைகளும் வசிக்கின்றன … சூரியன், சந்திரன் முதலான கிரகங்கள் நம்முடைய பூமியைப்போல வசுவானபடியினால் அதில் இம்மாதிரி பிரஜைகளிருப்பதைக் குறித்து எவ்விதம் சந்தேக மேற்படும்? பரமேசுவரனுடைய இச்சிறிய உலகமே மனிதன் முதலான சிருஷ்டிகளால் நிறைந்திருக்கும் பொழுது மீதி உலகங்களெல்லாம் எவ்விதம் சூன்யமாயிருக்கும்? …. இவ்வளவு கணக்கற்ற உலகங்களில் மனிதன் முதலான சிருஷ்டிகளுண்டு.

“வினா:— இவ்வுலகில் மனிதன் முதலானவர்களுக்கு ஆகிருதி அவயவமிருப்பதுபோல் அன்னிய உலகங்களிலும் உண்டா? அல்லது வேறாயிருக்கிறதா? விடை:— ஆகிருதியில் கொஞ்சம் வித்தியாசமிருக்கக்கூடும். எஜ்ஜாதியுடைய சிருஷ்டி இத்தேசத்தில் எவ்விதமிருக்கிறதோ அவ்விதமே அஜ்ஜாதியினுடைய சிருஷ்டி அன்னிய லோகங்களிலேயும் இருக்கும் ….

“வினா:— இவ்வுலகத்தில் போலவே மீதி உலகங்களிலும் வேதம் முதலியவை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதா? விடை:— ஆமாம்…,”

என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் முன்பின் யோசியாது ஊமத்தையைத் தின்ற உன்மத்தனே போல உளறும் பைத்தியக்காரத் தனத்தையுடைய இந்தப் பேய்மனிதன் இஸ்லாத்தின் வேதத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்ய முன் வந்ததுதான் ஒரு நகைப்புக்கிடமான காரியமாய்க் காணப்படாநின்றது. ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற நவீன வானசாஸ்திரிகளனைவரும் இவரிடமே சென்று பாடம் கேட்டல் வேண்டும்! அங்காரக மனிதர்களுடன் சம்பாஷனை செய்ய விரும்பும் மேல் நாட்டினரும் இவரது பாதத்தடியில்தான் வந்து குந்த வேண்டும்! ஒட்டகம் கொக்கைப் பார்த்து, “நண்பா, ஏன் கழுத்து இத்துணைக் கோணலாய் வளைந்து போயிருக்கிறது?” என்று ஏசல் பாடிக்கொண்ட கதையை நீங்கள் அறிவீர்களன்றோ?

“அறிவாளிகள் இங்ஙனம் கடவுள் செய்தலை நம்ப மாட்டார்கள். கடவுளும் இங்ஙனம் செய்யாது. இத்தகைய புன்சொல், அறிவும் நாகரீகமும் படைப்பவர்களிடம் செல்லாது. காட்டு மிறாண்டிகள்தான் நம்புவார்கள்,” என்றெழுதுகிறார்.

வாஸ்தவம்தான். ஜன்ம முண்டென்பதை ருஜுப்பிக்காது தயானந்தர், மனிதன் இறந்தவுடன் மறு பிறப்பெடுக்கிறானென்றும், உடற்கூற்றுச் சாஸ்திரத்துக்கு முற்றிலும் முரணாய் அபாத் துவாரம்வரை மூச்சு நிற்கிறதென்றும், சரியான பிரமசாரிக்கு 400 வய தென்றும், 48 வயதுள்ள கிழப் பிரமசாரி 24 வயதுள்ள இளநங்கையையே மணத்தல் உத்தமமென்றும், “எண்ண மில்லாமல் ஒருவனுடைய இமைகள்கூடக் கொட்டுகிறதில்லை1யென்றும், “படித்த ஸ்திரீ அப்பொழுதே கருத்தரித்ததை உணர்ந்து விடுகிறாள்,” என்றும், இறந்தோருக்குச் சிராத்தம் கூடாதென்றும், கண்ணன் கடவுளல்லவென்றும், இராமன் அவதார புருஷனல்லவென்றும், மரத்துக்கு முன்தான் வித்தென்றும், இன்னமும் என்னென்னவோ வாயில் வந்தவாறெல்லாம் பினாத்தியிருக்கின்றாரே, இவற்றையெல்லாம் எந்தக் “காட்டு மிறாண்டிகள்” நம்புவார்களோ? நாம் அறிகிலேம்.

“இது முகம்மதியக் கடவுளின் சர்வ வல்லமையுள்ள சக்தியைக் காட்டவில்லை. இதிலிருந்து அவருக்கு முற்காலத்தை உணரும் தன்மையிருப்பதாகவும் தெரியவில்லை,” என்கிறார்.

இவரே தமது பரமேசுவரனுக்கு முக்கால அறிவில்லையென்கிறாரே: “ஈசுவரனை முக்கால ஞானி எனல் மூடத்தனமாகும்.”

“முதலில் கடவுள் ஆதாமைச் சுவர்க்கம் போன்ற தோட்டத்தில் இருக்கச் செய்தார். பிறகு தோட்டத்திலிருந்து தள்ளிப் போட்டார். … அந்தச் சுவர்க்கத் தோட்டத்திலிருந்து ஆதாம் ஏவாளுடன் எங்ஙனம் வீழ்ந்தார்? சுவர்க்கத் தோட்டம் எங்கிருக்கிறது? வானத்திலா? எங்காவது மலையுச்சியிலா? பட்சிபோல் பறந்து ஆதாம் கீழே விழுந்தாரா? அல்லது கல்லைப்போல் கீழே விழுந்தாரா?”

என்று அவர் வினவுகிறார்.

முதலில் மனித சிருஷ்டி திபேத்தில்தான் உண்டாயிற்றென்றும், “ஆதிசிருஷ்டியில் மைதுனங்கிடையா” தென்றும், ஆதியில் ஒரு மனிதனுக்குமேல் பல மனிதர்களே சிருஷ்டிக்கப் பட்டார்களென்றும், அவர்களெல்லோரும் யௌவன புருஷர்களேயென்றும், சிருஷ்டிக்கு ஆரம்பமும் முடிவும் இல்லையென்றும், ஆதியிலிருந்த மனிதர்கள் ஒரே ஜாதியினரென்றும்,

“வினா:— இத்தேசத்திற்கு (இந்தியாவுக்கு) அதற்கு முன்னிருந்த பெயரென்ன? இதில் யார் இருந்தார்கள்? விடை:— இதற்கு முந்தி பெயரே கிடையாது. ஏனென்றால் ஆரியர்களுக்கு முந்தி இதில் யாரும் வசிக்கவில்லை. ஏனென்றால் சிருஷ்டி முதலிருந்து கொஞ்சகாலத்திற்குப் பிறகு திபேத்திலிருந்து நேராக வந்து இத்தேசத்தில்தான் வசித்தார்கள்,” என்றும்,

பாதாள தேசமென்னப்படுவது அமெரிக்காவென்றும்,

“இக்ஷுவாகு முதற்கொண்டு கௌரவ பாண்டவர்கள் வரையில் முழு பூகோளத்திலேயும் ஆரியர்களுடைய இராஜ்யம் ஓங்கி வேதம் ஆரியவர்த்த மற்ற நாடுகளில்கூடக் கற்பிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டு வந்தது,” என்றும்,

“ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபது கோடியே சில்லறை வருஷங்கள் பிரபஞ்ச சிருஷ்டியாயும், வேதங்கள் வெளியாயுமாகின்றன,” என்றும்,

“முக்திபெற்ற ஜீவன் முக்தியை அடைந்து மகாகல்பம் வரையிலும் பிரம்மத்தில் ஆனந்தத்தையனுபவிக்கிறது. மறுபடியும் மகா கல்பத்திற்குப் பிறகு முக்தி சுகத்தைவிட்டு உலகத்திற்குத் திரும்பிவருகிறது. கணக்கு விவரம் இதுவேயாகும்:

காலம் நாலு யுகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
விடை :—

சத்தியயுகம் 17,28,000 வருடங்கள்
துவாபரயுகம் 12,96,000 வருடங்கள்
திரேதாயுகம் 8,64,000 வருடங்கள்
கலியுகம் 4,32,000 வருடங்கள்
மொத்தம் 43,20,000 வருடங்கள்

ஆக சதுர்யுகம் ஒன்றுக்கு வருஷங்கள் 43,20,000.

2000 சதுர்யுகம் = 864,00,00,000 வருஷங்கள் ஒரு அகோராத்திரம்
30 அகோராத்திரம் = ஒரு மாசம்
12 மாசங்கள் = ஒரு வருஷம்
100 வருஷங்கள் = ஒரு பரந்த காலம் (மகா கல்பம்)

ஆகவே, மொத்த வருஷங்கள் = 100 x 12 x 30 x 2000 x 43,20,000 = 3,11,040,000,000,000 வருஷங்கள்,” என்றும்

சன்னிபாத ஜுரத்தினால் சர்வமும் பிதற்றும் தயானந்தர் குர்ஆன் ஷரீபின் சிருஷ்டியைத் தாறுமாறாய் வியாக்கியானம் செய்யத் துணிந்தது ஒரு விந்தையினும் விந்தையேயாம்! அந்தோ மந்த புத்தியே!

-பா. தாவூத்ஷா

பீடிகை தொடரும்…

படம்: அபூநூரா


  1. மனிதனுடைய எண்ணமில்லாமல் தேகத்துள்ளும் மனத்துள்ளும் எண்ணிறந்த காரியங்கள் நடைபெறுகின்றன வென்னும் இரகசியத்தை ஆரியர்கள் அறியார்கள். 
  2. “ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதை” வுற்றுக்கிடக்கிறதென்பார் “மனோன்மணீயம்” எழுதியவர். 

 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

Related Articles

Leave a Comment