வியபிசாரமன்று; ஆனால், “நியோகம்!” – 4

by பா. தாவூத்ஷா

மத்வாசாரியர் முதலியோரால் எழுதப்பெற்றிருக்கும் ருக்வேத பாஷ்யத்தில் இவ்வாறு ஒரு விஷயம் காணப்படாநின்றது: பிரம்மா தன் சகோதரியுடனும் குமாரியுடனும் சேர்க்கை செய்வதும் சாராயம் குடிப்பதும் மாமிசம் புசிப்பதும் இன்னமும் இவைபோன்ற செய்கைகளைச் செய்வதும் (தயானந்தர் கூறுவது போலவே) பாபம், வெட்கம், வியபிசாரம் ஆகியவைகளை ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லாதனவாகவே காணப்படுகின்றன; ஏனெனின், அவர்களும் தங்கள் வேதசாஸ்திரப் பிரகாரமே செய்துவருவதாகக் கருதுகின்றனர். எனவே, தயானந்தர் அவர்களுடைய அபிப்பிராயத்துக்கு மாற்றமான அபிப்பிராயம் கொள்வது தங்கள் வேத சாஸ்திரத்துக்கே மாறு செய்வதாகும்.

நியோகம் செய்வதைத் தயானந்தர் வியபிசாரமென்று ஒப்புக்கொள்ள எப்படி மறுக்கின்றாரோ, அப்படியே அவர்களும் ஒரு குறிப்பான சட்டத்தின் பிரகாரம் அதைச் செய்வதில் வியபிசாரமொன்றும் இல்லை என்கின்றனர். என்ன விந்தை! வியபிசாரத்தை வியபிசாரமென்று ஒத்துக்கொள்ளாமல் வியபிசாரம் புரிவதால், வியபிசாரம் வியபிசாரம் அல்லாமலா போகப்போகின்றது? ஏன் நியோகத்தை வியபிசாரமென்றும் வெட்கங்கெட்ட வேலையென்றும் கூறுவது கூடாது? பிறகு ஆரியர்கள் வியபிசாரமென்று கூறும் வேசித்தனத்தின் இலக்ஷணந்தானென்ன? அதை ஏன் தயானந்தர் கூறிப்போந்தனரில்லை? இஃது அன்னவரின் அறிவின்மையையும் தவறுதலையும் உணர்ச்சியின்மையையுமே விளக்குகின்றது.

இன்னமும் தயானந்தரே விவாகத்தின் எட்டு வகைகளைப்பற்றித் தமது ச. பி. 4-ஆவது அத்தியாயத்தில் பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளார்: —

எண்வகை மணம்: (1) பிராம்மம், (2) தைவம், (3) ஆர்ஷம், (4) பிரஜாபத்யம், (5) ஆசுரம், (6) காந்தர்வம், (7) இராக்ஷசம், (8) பைசாசம் என்பனவாம்.

  1. மணமகனும் மணமகளும் ‘சரிவர’ பிரம்மசர்யாசிரமத்தில் பூர்ணமான வித்தையைக் கற்று, தர்மிஷ்டர்களாய் இருந்து இருவருக்குமு் பரஸ்பரம் பிரேமையுடன் நடக்கும் விவாகத்திற்கே “பிராம்மம்” என்று பெயர் கூறுவர்.
  2. பெரிய யாகமொன்றில் பிள்ளை யாககர்த்தாவாய் இருக்கும்பொழுது பெண்ணை அலங்கரித்து அவனிடம் கொடுப்பதற்கே “தைவம்” என்று பெயர் சொல்வர்.
  3. மணமகனிடமிருந்து ஏதேனும் உபயதானம் பெற்றுக்கொண்டு மணமகளைக் கொடுப்பதற்கே “ஆர்ஷம்” என்று பெயர்.
  4. தர்மத்தை (மதத்தை) முன்னிட்டு அதன் அபிவிருத்திக்காகச் செய்யும் விவாகத்திற்குப் “பிரஜாபத்யம்” என்று பெயர்.
  5. மாப்பிள்ளையிடமிருந்தேனும் பெண்ணிடமிருந்தேனும் ஏதேனும் கிரயம் கிடைக்கும் என்னும் எண்ணத்துடன் செய்யும் விவாகமே “ஆசுரம்” எனப்படும்.
  6. காலம் சமயம் என்னும் யாதொரு சட்டமுமின்றி அசம்பாவிதமாய் ஏதோவொரு காரணத்தைக் கொண்டு பெண் மாப்பிள்ளைக் கிடையில் பொருத்தத்துடனே பற்றுதல் ஏற்படுவதற்குக் “காந்தவர்வம்” என்று பெயர்.
  7. சண்டை செய்து பலாத்காரமாய் அச்சங் காட்டியோ, ஏமாற்றியோ ஒரு பெண்ணை அபகரித்துக் கொண்டுபோய்க் கல்யாணம் செய்துகொள்வதற்கு “ராக்ஷசம்” என்று பெயர்.
  8. தூக்கத்தில் இருக்கிற, அல்லது பித்து, குடி முதலான வெறி மயக்கத்தில் இருக்கிற, அல்லது பித்து முதலியவற்றால் அறிவிழந்திருக்கிற ஒரு பெண்ணைப் பலாத்காரமாய்ச் சேர்வதற்குப் “பைசாசம்” என்று நாமங் கூறுவர்.

இவையனைத்தும் விவாகமென்றே கருதப்படுமாயின், வேறு எந்த “இழவை”த்தான் வியபிசாரமென்று கூறுகின்றனரோ தெரியவில்லை. அது நிற்க.

ஏதேனும் சட்டமும் நியதியும் வியபசாரத்திலும் களவியலிலும் இல்லாமற் போகவில்லை; நல்ல காரியமாயினும், தீய காரியமாயினும் ஏதொன்றும் ஒருவகைச் சட்டதிட்டத்தினின்றும் நீங்கினதாய்க் காணப்படவில்லை. 5-ஆவது வகைக்கு ஏற்ற கன்னிகையைப் பேசுவா என்று கூறுகின்றனர். அவளுக்காக ஏதேனும் உபயதானம் கொடுத்துவிட்டு அவளுடனே சேர்க்கை செய்வதும் உண்பதும் உறங்குவதும் உண்பிப்பதும் ஆடுவதும் பாடுவதும் சாமவேத சட்டப்பிரகாரம் வியபிசாரமாகின்றது; ஆனால், ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டத்துக்குக் கட்டுப்பட்டிருக்கும் அண் பெண் சேர்க்கையானது தயானந்த்ஜீயின் அபிப்பிராயப் பிரகாரம் வியபிசாரமாகாது. ஆயினும், மேற்கூறியவை “பேசுவா”விடம் (துர்க்கிருத்தியம் உள்ளவளிடம்) பழகக்கூடிய சட்டங்களாய் அமைந்திருக்கின்றன. இப்பொழுது தயானந்தரின் நியோகத்தைக் காட்டினும் “பேசுவா”வின் விவாகத்தில் அதிகமான சட்டங்கள் இருக்கின்றனவா, இல்லையா என்று ஆலோசித்துப் பாருங்கள். சட்டத்தின் பிரகாரம் ஆரியரின் நியோகமே வியபிசாரமா அல்லது “பேசுவா”வின் விவாகம் வியபிசாரமா? இதுவே வியபிசாரமென்று கருதப்படும்போது, அதைப்பற்றிச் சொல்வானேன்?

பிறகு காந்தர்வ விவாகத்தைக் கவனிப்போம்: தனிப்பட்ட காளையும் தனிப்பட்ட கட்டழகியும் காம மேலீட்டால் கலந்து கொள்வது ‘காந்தர்வ’ மணமாம். “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள், என்ன பயனு மில,” என்பதேபோல் கண்ணொடு கண் காமமுற்றுச் சந்திப்பதே இவ் விவாகத்துக்குப் போதும். எனவே, இதற்கு வேறொரு சட்டமும் திட்டமும் தேவையில்லை. எவனோ, வேறு எவனுடைய குமாரியையோ சகோதரியையோ தனிப்பட்ட இடத்தில் சந்தித்து ஏமாற்றிக் காமத்தால் அவள் கற்பை அழித்துவிடுகிறான். இதுவுமொரு விவாகமென்று கருதப்படுமாயின், மேற்கூறியவாறு கற்பழிக்கப்படும் கன்னிகைகள் போகும் கதிதான் என்ன? பிறகு சமூகத்தின் கட்டுப்பாடுதான் என்னாகும்? இப்படிப்பட்ட காந்தர்வம் விவாகமாகவே முடிந்து தீருகிறது. உதாரணமாக, கிருஷ்ண பரமாத்மாவின் சோதரி சுபத்ராதேவியை அர்ஜுனன் துவாரகையில் கண்டு “காந்தர்வம்” செய்ததை வியபிசாரமென்று கூறுவது கூடாது. என்னே ஆச்சரியம்! வியபிசாரமென்று வேறு எதைத்தான் அவர்கள் கூறுகிறார்கள்?

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

Related Articles

Leave a Comment