பீடிகை – பகுதி 5

by பா. தாவூத்ஷா

“இது சுவர்க்கமா? அல்லது வேசிகள் வசிக்கும் இல்லமா? இத்தகையோனை நாம் கடவுள் என்றழைப்பதா? அல்லது காமியென்றழைப்பதா? … ஏன் கடவுள் மனிதர்களையும் சுவர்க்கத்தில் எப்பொழுதும் வைத்துக்கொள்ளவில்லை? இதிலிருந்து முகம்மதியக் கடவுள் அறிவிலி என்றும் நியாயமற்றவரென்றும் புலனாகவில்லையா?”

“சுவர்க்கத்திலிருக்கும் மாதர்கள் தீர்ப்பு தினம்வரையில் எங்ஙனம் காலத்தைக் கழிக்கிறார்கள்? முகம்மதியக் கடவுள், இம்மாதர்களின் துணையாயிருந்து காலங்கழிக்க உதவுகிறார் போலும் … கடவுளின் சந்நிதியாகிய சுவர்க்கத்தில் மாதர்களுக்கு மதிப்பு அதிகமாயிருக்கிறது … எனவே முகம்மதியக் கடவுளுக்கு ஸ்திரீகளின் காமவலையில் சிக்கும் ஆபத்திருந்து வருகிறது,”

என்று முஸ்லிம் சுவர்க்கத்தைப்பற்றிச் சுவாமி தயானந்தர் மிக்க நாஜூக்காக வருணிக்கிறார்.

“தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு…குலத்தளவே யாகும் குணம்,” என்றார் ஒரு பெரியார். “உன் நேசர்கள் இன்னார் இனையார் என்று சொன்னால், உன்னுடைய குணாதிசயம் இன்னது இனையதென்று யான் சொல்வேன்,” என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. இவ்வாறே நியோக மென்னும் ஒருவகை நூதன ஜினா வழக்கத்தைச் சற்றும் லஜ்ஜையில்லாது தம்முடைய ஆரியசமாஜத்துள் அனுமதித்து நுழைத்துக்கொண்ட தயானந்தர் வேறு நூல்களிலும் ஜினாவையல்லாது வேறொன்றையுங் காணமாட்டார். காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறமாகத்தானே தோற்றும்? ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு ஜாதியருள்ளும் வியபிசாரமென்பது ஒரு மானக்கேடான ஈனக்காரியமாய்க் கருதப்பட்டு வரும் இக்காலத்தில், தயானந்த சன்னியாசி தம்முடைய கோஷ்டியுள் பகிரங்கமான வியபிசாரத்தை ‘நியோக’மென்னும் மாறு பேருடன் நுழைத்திருக்கிறார். இப்படிப்பட்ட காமியாகிய போலிச் சன்னியாசிக்கு இஸ்லாத்தின் சுவர்க்கத்தில் வியபிசாரமல்லாது வேறு எதுதான் காணப்படும்?

தாயானந்தரின் மஹா அநாகரிகமான, ஆனால், எல்லோரும் வெட்கப்படவேண்டிய, இக்காலத்துக்குச் சற்றும் அவசியமில்லாத, அதிக பகிரங்கமான, பந்து மித்திரர்களுக்கெல்லாம் லஜ்ஜையில்லாது முழுதும் பொருத்தமான நியோகத்தின் நல்ல விதத்தைப்பற்றி இந்நூலின் 5-ஆவது அத்தியாயம் மிக விரிவாக எடுத்தோதுவதால், அதை ஈண்டு ஒரு முறை விவரித்துக்காட்ட விருப்பம் கொண்டிலேம்; ஆரிய நவநாகரிக நாஜூக்கான நியோகத்தைப்பற்றி அவ்விடத்திலே ஆழப்படித்து ஆனந்தங் கொள்வீர்களாக.

‘பளிங்கினால் கட்டப்பட்ட விடுதிக்குள் வசிப்பவன் வெளியிலுள்ளார்மீது கல்லெறிவது கூடா’தென்று ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுகின்றது. ஏனெனின், வெளியிலுள்ளோரும் பதிலுக்குப் பதிலாய்க் கல்லை எடுத்து எறியத் துணிவார்களாயின், கண்ணாடி வீட்டுக்குள்ளிருக்கும் மனிதனுடைய கதியானது என்னாகும்? தன் மூக்கு அறுபட்டுவிட்ட போதினும், எதிரில் வருவோனுக்குச் சகுனத்தடை ஏற்பட்டு விட்டால், அதுவே போதுமென்று சொன்ன சூர்ப்பணகையின் கதையைத்தான் ஒத்திருக்கிறது, நம் சுவாமிஜீ எமது குர்ஆன் ஷரீபை இழித்துக்கூற முற்பட்டது.

“ஆதாமைத் தொழு எனத் தேவர்களுக்குச் சொல்ல எல்லோரும் இப்லிசை (சைத்தான்) தவிர அவரைத் தொழுதார்கள். அவன் கர்வத்தினால் நிரம்பிக் காபிரிகளில் ஒருவனானான் (2. 32). இது மகம்மதியக் கடவுளின் சர்வ வல்லமையுள்ள சக்தியைக் காட்டவில்லை. இதிலிருந்து அவருக்கு முக்காலத்தையுணரும் தன்மை இருப்பதாகவும் தெரியவில்லை. சர்வ வல்லமையுள்ள அருட்பெருங் கடவுளாயிருப்பின் சாத்தானை அவர் படைத்திருக்கமாட்டார். சாத்தான் கடவுள் கட்டளையை மறுத்தும் அவரால் சாத்தானை அடக்க முடியவில்லை. இந்த ஒரு சாத்தானை அடக்கியாளும் திறமை படைக்காத கடவுள் எங்ஙனம் இலக்ஷக்கணக்கில் இருந்துவரும் சாத்தான் துணைவர்களை (நம்பிக்கையற்றவர்களை)த் தீமை செய்யாது பார்த்துக் கொள்ள முடியும்? சிலரைத் தப்புவழியில் செல்லவிடுகிறார். இதிலிருந்து கூறப்படும் உண்மை யாது? சாத்தானிடமிருந்து கடவுள் கொஞ்சம் கற்றுக்கொண்டுள்ளார்; சாத்தான் கடவுளிடமிருந்து கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கிறான்.”

ஆதியில் பிராணிகள் சிருஷ்டிக்கப் பட்டபோது அவற்றுள் பலவகையான பிராணிகள் (மனிதப் பிராணி உட்பட) எவ்வாறு தீத்தொழிலில் தெய்வ நோக்கத்துக்கு நேர் விரோதமாய் இறங்கத் துணிந்தன?

இஃதிருக்கட்டும். இப்பொழுது மனித ஜாதியில் காணப்படும் இவ்வுலக ஏற்றத் தாழ்வுக்கெல்லாம் முன்ஜன்மக் கருமமே காரணமென்று தயானந்தர் கூறுகிறார்; ஆனால், ஆதியில் பிராணிகள் சிருஷ்டிக்கப் பட்டபோது அவற்றுள் பலவகையான பிராணிகள் (மனிதப் பிராணி உட்பட) எவ்வாறு தீத்தொழிலில் தெய்வ நோக்கத்துக்கு நேர் விரோதமாய் இறங்கத் துணிந்தன? அப்பொழுது ஆரியரின் பரமேசுவரர் கையாலாகாமல் கட்டிய கரங்களுடன் வாயைப் பிளந்துகொண்டு வெறுமையாய்த்தான் வாளா உட்காந்திருந்தாரா? அந்த ஆதி அயோக்கியர்களை அடக்க முடியாத ஒரு பரமாத்தாவும் பரமாத்மா ஆவரோ? என்று நாமும் கேட்கின்றோம்.

“நல்லது, கெட்டது என்று உணர்ச்சிதரும் மரத்தைத் தோட்டத்தில் பயிராக்கியது யார்? கடவுள் பயிர் செய்தாரா? அவருக்காகவா? அல்லது பிறருக்காகவா? பிறருக்கென்றால் ஆதாம் ஏவாளை இம்மரத்தின் பழத்தைத் தின்னவேண்டாமென்று தடுத்திருக்க வேண்டியதில்லையே?”

என்று தயானந்தர் வினவுகிறார். வாஸ்தவந்தான். உலகத்தில் மனிதர்கள் நன்மையையும் செய்கிறார்கள்; தீமையையும் செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் முன்ஜன்ம வினையென்று கூறப்பட்டபோதினும், தீமை என்பதை இவ்வுலகத்தில் உற்பத்தி செய்தவர் யார்? பரிசுத்தமான பரமாத்மாவாயிருப்பவர் தீமை என்பதையே இப்பிரபஞ்சத்தில் சிருஷ்டித்திருக்க வேண்டியதில்லையே? இதுவே அப்பரமேசுவரனின் முழுமுட்டாள் தனத்தைக் காண்பிக்கவில்லையா? ஐயகோ தயானந்த ஈசுவரா!

சுவர்க்கத்திலுள்ளவர்கள் இறுதியில் சாகவேண்டியவர்களென்றே தயானந்தர் எழுதுகிறார். நித்தியானந்தத்தை அனுபவிக்கும் மோக்ஷம் பெற்ற ஆன்மாக்களும் தேவதூதர்களும் ஏன் மரித்தல் வேண்டும்? பிறந்ததெல்லாம் இறந்தே தீரவெண்டுமென்கிறார். மேலும் காரணமில்லாமல் காரியமில்லை என்கிறார். ஆனால், ஒரு காரணமுமில்லாமல் கடவுள் மட்டும் உண்டாயினாரென்று ஒப்புக் கொள்ளுகிறார். காரணத்துக்குக் காரணமும், வேருக்கு வேரும் இல்லையென்று இவர் யுக்தி வாதம் செய்கிறார். காரணமில்லாமல் கடவுளே தோன்றியிருக்கும்போது, அப்படிப்பட்ட கடவுளால் கொடுக்கப்படும் மோக்ஷமென்பதும் முடிவடையாமல் நித்தியானந்தமாயிருப்பதில் என்ன ஆக்ஷேபமிருத்தல் கூடும்? அவருக்கு இது விளங்கவில்லையா? காரணத்துக்குக் காரணம் இல்லையென்பது எத்துணைத் தர்க்க விரோதமான முழுமூடத்தனமாய்க் காணப்படுகின்றது? வேருக்கு வேர் இல்லையா?

“முகம்மதியக் கடவுளை” இவர் அடிக்கடி “பாரபட்சமுடையவர்” என்று போதிய காரணமில்லாது தூஷித்து வருகிறார். “நரகத்திலிருப்பவர்களிடம் அவருக்குக் கருணையில்லையா?” என்றும் கேட்கிறார். கடவுள் மயிரிணக்கமும் விட்டுக் கொடுக்காத நிஷ்பக்ஷபாதமுள்ள நியாயாதிபதியென்றும், அவர்பால் கருணை என்பதற்கே இடமில்லையென்றும் தயானந்தரே ஒத்துக் கொள்ளுகிறார். அப்படிப்பட்ட இவர் எமது கடவுளைப்பற்றிக் குறைகூற முன்வருவதுதான் வேடிக்கையாயிருக்கிறது! ஆ என்ன முழு மூடத்தனம்!

மனிதர்கள் எப்பொழுதும் ஆச்சரிய சக்திகளையுடையவராய் இருப்பது முடியாதென்று இவர் வாதிக்கிறார். “கடவுள் இக்காலத்திலிருப்பவர்களில் ஒருவரிடம்கூட ஏன் அந்த அபாரசக்திகளைத் தரவில்லை?” என்றும் எழுதுகிறார். மெய்தான்; ஆதியில் பரமேசுவரன் நான்கு ரிஷிகளுக்கு மட்டும் ஸம்ஸ்கிருத பாஷையில் வேதங்களை அறிவித்தாரென்று இவரே கூறுகிறார். இப்படிப்பட்ட அபூர்வமான அதிசய சக்தியை நாம் இக்காலத்தில் காண்கின்றோமா? இந்தத் தயானந்தராலேனும் அப்படிச் செய்து காட்ட முடியுமா? அவ்வாறிருக்க, இவர் ஏன் ஆதியில் வேத பகவான் ஒருவருக்கும் தெரியாத பாஷையில் நான்கு ரிஷிகளுக்கு மட்டும் நான்கு வேதங்களையும் அறிவித்தாரென்று நம்புகிறார். அந்தோ பரிதாபம்!

முஸ்லிம்கள் தங்களுடைய நியாயத் தீர்ப்புக்காக அதிக நாள்மட்டும் காத்திருக்க வேண்டியதற்கு அவசியமில்லை என்கிறார். சரிதான். மோக்ஷத்துக்குள் சென்ற ஆத்மாக்கள் ஒரு மகா கல்ப காலம்வரை அவ்விடத்தில் தங்கியிருந்துவிட்டுப் பிறகு வேளியேற்றப்படும் என்கிறார். இவர் இந்த “மகா கல்பம்” என்பதற்குச் சரியான காரணங் காட்டிவிடுவாராயின், இறுதித் தீர்ப்புநாள் எட்டியிருப்பதற்கும் நாம் தக்க காரணம் கூறுவோம்.

“முகம்மதியர்கள் இவ்வுலகம் 7,000 அல்லது 8,000 வருஷங்களாகத்தான் இருப்பதாக நினைக்கிறார்கள். நம்பவும் செய்கிறார்கள்,” என்றும் குறைகூறுகிறார். இதற்கு ஆதாரம் எமது மார்க்கத்தில் ஒன்றுமே காணப்படவில்லை. ஆனால், தயானந்தரே இப்பிரபஞ்ச உற்பத்திக்கு இப்புறம் வேதங்கள் வெளியாய் “ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது கோடியே சில்லறை வருஷங்கள்” என்று கூறுகிறார். இந்தக் கணக்கை இவர் எப்படி நிரூபிக்கப் போகின்றார்?1 இப்படிப்பட்ட மூடக்களிமண் மூளையையுடையவரே இஸ்லாத்தை ஏளனம் செய்ய முன்வந்துவிட்டார்.

“இஸ்லாம் மதத்தைத் தழுவாத பிறமதத்தினரை நம்பிக்கையற்ற மதமற்ற புல்லியர் என்று அழைக்கிறீர்கள். அவர்களும் உங்களை அங்ஙனந்தான் அழைக்கிறார்கள். உங்கள் கடவுள் அவர்களைச் சபித்திருப்பதுபோல அவர்கள் கடவுளும் உங்களைச் சபிக்கவே செய்கிறது. இவைகளில் எது சரியானது? எது தவறானது? என்று அறிய விரும்புகிறோம். எல்லாக் கொள்கைகளிலும் தப்பு இருக்கிறது,” என்று சொல்லுகிறார்.

வாஸ்தவந்தான்; ஆரியசமாஜிகளும் அவரல்லாத ஏனை ஹிந்துக்களும் இப்படித்தான் ஒருவரையொருவர் ஏசிக் கொள்ளுகிறார்கள். அவ்விருதிறத்தாரையும் நோக்கி, நாமும் இப்படித்தான் வினவுகிறோம். ஆரியசமாஜம் ஸனாதன தர்மமாமோ?

“இஸ்லாம் கடவுளைத் தவிர வேறு யாரும் இவ்வளவு தைரியதாய் இத்தகைய பொய்களையும் முடியாத பொருளற்றவைகளையும் கூறமுடியாது. ஒருமலையை மாத்திரம் கோலால் தொட்டவுடன் பன்னிரண்டு ஊற்றுக் கண்கள் கிளம்பியதென்பது பெரும் செப்படி வித்தை,”

என்று விஸ்தாரம் பேசுகிறார். நல்லது! தயானந்தர் தம்முடைய வேதங்கள் ஆதியில் எப்படி ஒருவருக்கும் விளங்காத தேவபாஷையில் நான்கு ரிஷிகளுக்குமட்டும் கற்றுக்கொடுக்கப்பட்டனவென்னும் “செப்படி” வித்தைக்கு எவ்வாறு சமாதானம் கூறப்போகின்றார்?

“கடவுள் விரும்பிய சிலருக்குத் தமது விசேஷ மன்னிப்பைக் காட்டுவாரா?” என்று வினவுகிறார். பரமாத்மா எவ்வாறு நான்கு ரிஷிகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக வேதங்களை வெளியிட்டாரென்று நாமும் வினவுகிறோம். இது பக்ஷபாதமற்ற பரமேசுவரனின் செய்கையாமோ?

“எப்பக்கம் திரும்பிய போதிலும் அல்லாஹ்வின் முகமே (2.109)” என்று கூறி அவர் பரிகாசம் பண்ணுகிறார். ஆனால், அவருடைய கடவுளும் ‘சர்வவியாபி’ (விஷ்ணு) என்பதை மறந்துவிட்டார்.

இவ்வாறு தயானந்தர் ச. பி. 14-ஆவது அத்தியாயத்தில் எமது குர்ஆன் ஷரீபு முழுதையும் ஆராய்ச்சி செய்து, 159 ஆயத்துக்களைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு, தமக்குத் தோன்றியவாறு மனம் போனபடியெல்லாம் விபரீத வியாக்கியானம் செய்துள்ளார். அவருடைய ஒவ்வொரு முட்டாள்தனமான வார்த்தைக்கும் அவரது ச.பி-த்திலிருந்தே மறுப்பெழுதிக்கொண்டிருக்கலாம். “சத்தியார்த்த பிரகாச” மென்னும் இந்த அசத்தியார்த்த பிரசார ஆபாஸ நூலில் காணப்படும் முழுமூடத்தனமான செய்கைகளையெல்லாம் ஒவ்வொன்றாக விரித்துக்கொண்டே போவதென்றால், அஃதொரு தனி நூலாகவே விளைந்துவிடும். தயானந்தரைப்பற்றியும் ச. பி-த்தைப் பற்றியும் எவ்வளவோ எழுதிக்கொண்டு போகலாம். ஸ்தாலீபுலாக நியாயமாக2 நாம் மேலே சிலவற்றை மட்டும் மாதிரிக்காக எடுத்தெழுதியிருக்கிறோம். மிகுதி வியாக்கியானங்களுக்கும் இவ்வாறே மறுப்பைக் கண்டுகொள்வீர்களாக. இச்சிறு நூல் அதிக துரிதமாய் முடிவடைய வேண்டியிருப்பதனாலும், விரிந்துக்கொண்டே போனால் இதுவும் விரித்துக்கொண்டே போகுமென்னும் அச்சத்தினாலும் இவ்வளவுடன் இங்கு நிறுத்திக்கொண்டோம். வேண்டுமாயின், ஆரியசமாஜத்தைப்பற்றி மற்றொரு நூலும் ஆண்டவனருளால் எழுதி வெளியிடச் சித்தமா யிருக்கிறோம்.

“மகாத்மா” காந்தியும் தயானந்தரின் தர்க்கமுறை நன்றன்றென்று கண்டித்திருக்குங்கால், இத் தமிழ் நாட்டிலுள்ள பல பத்திரிகாசிரியர்களும் மற்றும் பல பிரமுகர்களும் தங்கள் சகோதரர்களான முஸ்லிம்களுக்கு எவ்வித மனப்புண் உண்டாதல் கூடுமென்பதைச் சற்றும் கவனியாமல், இப்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் தமிழ் ச.பி-த்துக்கு அளவிறந்த மதிப்புரைகள் கொடுத்திருப்பது சாலவும் வருந்தத்தக்கதே. சென்னை சு. மி. ஆசிரியர் காலஞ்சென்ற ஏ. அரங்கசாமி ஐயங்கார், ச. பி. 2-ஆவது பாகத்தைப் பாராமலே தமது “முன்னுரை“யைக் கொடுத்து விட்டதாகக் கூறுகிறார். இப்படியேதான் எல்லா மதிப்புரைகளும் கொடுக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், இப்பால் அன்னவரெல்லாம் என்செய்து விட்டனர்? அவர்கள் மௌனமே அவர்களது மனப்பான்மையை நன்கு நிரூபித்துக் காண்பிக்கின்றது. அந்தோ இந்தியாவின் போலி ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையே!

இச்சிறு நூலானது, நம்முடைய சொந்த ஆராய்ச்சியின் பயனாகவும், வட இந்தியாவில் மற்றும் பற்பல பிரமுகர்கள் ஆரிய சமாஜத்துக்கு எதிரிடையாய் எழுதி வெளியிட்டிருக்கும் நூல்களையும் ஆதாரமாக வைத்துக்கொண்டும் எழுதி வெளியிடப்பட்டிருக்கிறது. இதை உருவாக்கி வெளியிடும் விஷயத்தில் எமக்கு மெத்த உதவி புரிந்துவந்த மௌலானா மௌலவீ ஹாபிஸ். ஏ. என். முஹம்மது யூஸுபு சாஹிப் (பாக்கவீ) அவர்களுக்கும் யாம் பெரிதும் நன்றி செலுத்தக் கடமைப்பட் டுள்ளோம். இதிலுள்ள பிழைகளைத் தயைகூர்ந்து மன்னித்து விடுவிர்களாக. மேலும் அவகாசக்குறைவால் உர்து பாஷையிலுள்ள நடையைப் போதுமானவரை தமிழ் நடையாக மாற்றி எழுதுவதற்கும் சமயம் வாய்க்காமைக்காக மெத்த வருந்துகிறோம். ஆயினும், குற்றங்களைக் களைந்து குணத்தைமட்டும் கிரகிப்பதே கற்றறிந்த மாந்தோரின் கடமையாதலின், ஈண்டு இப்பீடிகையை இவ்வளவுடன் நிறுத்திக்கொள்ளுகிறாம்.

-பா. தாவூத்ஷா

படம்: அபூநூரா


  1. முன்னொரு காலத்தில் புத்திசாலித்தனமுள்ள பாரஸீக வாலிபனொருவன் இருந்தானென்பதைக் கேள்வியுற்ற அத் தேச மன்னன் அவனை வரவழைத்து மூன்று விசித்திர வினாக்களை விடுத்தான். அவற்றுள் ஒன்று, “வானத்தில் எத்தனை நக்ஷத்திரம்?” என்பதாகும்; அதற்கு அச் சிறுவன் ஒரு காகிதமும் பென்ஸிலும் கொண்டுவரச்சொல்லி, ஒருவராலும் எண்ணிவிட முடியாத விதமாய் அத்துணைக் கறுப்புப் புள்ளிகளை அதில் நிறைத்துவைத்தான்; அதுதான் வானநக்ஷத்திரக் கணக்கென்றும் விடையிறுத்தான். இதற்கும் தயானந்தரின் இவ்விடைக்கும் என்ன வேறுபாடுண்டென்று யோசித்துப் பார்ப்பீர்களாக. 
  2. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறே பதம் என்னும் நியதி.  

 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

Related Articles

Leave a Comment