இன்னமும், முஸ்லிம்களின் கண்களினின்றும் இரத்தக் கண்ணீரை வடிக்கும்படியான அத்துணை ஆபாஸமான முறையிலே ச. பி. 14-ஆவது அத்தியாயத்தையும் தமிழில் வெளியிட்டுவிட்டு, இந்த நூலை முஸ்லிம்களுக்கு விற்பதிலையென்னும் பயங்கொள்ளித் தனத்தால் இதைத் தமிழில் மொழிபெயர்த்த ஆரியசமாஜ இரு சகோதரர்களும் முஸ்லிம்களின் புறமுதுகில் கட்டாரியால் குத்துவதைக் கண்டும், யாம் இனிச் சகித்திருப்பது முடியாதென்றே இச்சிறு நூலை வெளியிட முற்பட்டோம். இந்த ஆரிய சமாஜிகளுக்கும் இவர்களுடைய முழுமூட ஆசிரியருக்கும் மறுப்பெழுதத் துணியுங்கால், இந்நாட்டில் சனாதன தர்மிகளுக்கும் பொதுவாய் விளங்கும் அந்த நான்கு வேதங்களையும் தாக்கும்படியான அத்தியாவசியம் நேரிட்டிருப்பதற்காக நம் சனாதன தர்ம ஹிந்து சகோதரர்களனைவரும் எம்மை மன்னித்தருள்வார்களாக.
சுவாமி தயானந்தர் தம்முடைய நான்கு வேதங்களுமே மெய்யானவையென்றும் மேலானவையென்றும், மற்றைய மதவாதிகளின் வேதங்களெல்லாம் பொய்யானவையென்றும் கீழானவையென்றும் அபிப்ராயம் கொண்டிருப்பதால், அன்னவரின் வேதங்களைத்தாக்கி எழுதவேண்டுவது எமது முதற் கடைமையாயிற்று; இதனால் சனாதன தர்மிகளுக்கு மனநோய் உண்டாகுமென்பதை எண்ணி, எம்மனம் மிகவும் உண்மையிலே வருந்துகின்றது. அனால், அன்னவரைக் குறித்தேனும், அவர்களுடைய வேதங்கொள்கைகளைக் குறித்தேனும் யாமொன்றும் இச்சிறு நூலின்கண் எழுதத் துணிந்திலேம்; இதில் எழுதப்பட்டிருக்கும் அத்துணை மறுப்புக்களும் ஆரியசமாஜிகளுக்கென்றே என்று ஈண்டு மிகஉறுதியாய்க் கூறுகின்றோம்.
அருமைச் சகோதர்காள்! “சத்தியார்த்த பிரகாசம்” என்னும் மூலகிரந்தம் முதன் முதலில் ஹிந்தி பாஷையில் தயானந்தர்1 என்னும் ஒரு குஜராத்தி குண்டோதர சன்னியாசியால் எழுதப்பட்டது; இவர் கி.பி. 1824 முதல் 1883 வரை ஜீவித்திருந்தார். இவர் தம்முடைய “14-ஆவது அத்தியாயத்தின் முகவுரை”யில் பின் வருமாறு எழுதுகிறார்:
“2பிறருக்குத் துன்பம் விளைத்தல், தனது நலத்தை நாடுதல் என்பது முறையல்ல… ஏனெனில், பிடிவாதம், பாரபக்ஷம், பகை, பொறாமை, அசூயை வீண்வாதங்களில் (ஆசை) இவைகளைக் களைந்து வளரவொட்டாமல் தடுப்பதே இதன் எண்ணமாகும். பிறருக்குத் துன்பம் விளையாமல் பார்த்துக் கொள்வதும் ஒவ்வொருவருடைய நன்மையை மேம்படுத்துவதுமே நம்முடைய கடமைகளில் சாலச் சிறந்ததாகும்.”
இன்னமும் தமது பொது முகவுரையில் அடியிற்காணுமாறும் எழுதியிருக்கிறார் :
“இந்நூலை ஆக்கியதன் நோக்கம் உண்மையை உலகிலுள்ளோர்க்கு விளக்கிக் காட்டவேண்டுமென்பதே…..”யாம்.
இவரது கடமை,
“உள்ளதை உள்ளவாறே மேற்கோள்களின் துணையைக்கொண்டு சத்தியத்தை நிரூபித்துக் காட்டுவதேயாகும்,”
என்று வரையப்பட்டிருக்கிறது.
|
“மற்றவர்களுடைய மனத்தைப் புண்படுத்துவதோ நோகச்செய்வதோ நம்முடைய நோக்கமில்லை,”
என்று அந்தத் தயை மிகுந்த ஆனந்த மஹரிஷியே எழுதுகிறார்.
“எம் மனிதருக்கும் கஷ்டத்தையோ துக்கத்தையோ உண்டு பண்ணக்கூடிய தாத்பரியத்தையுடைய வார்த்தைகள் யாதொன்றையும் மறைத்தோ பகிரங்கமாகவோ இந்நூலில் நாம் புகுத்தவில்லை,”
என்றும் சொல்லுகிறார். இவருடைய சொல்லுக்கும் செய்கைக்கும் எத்துணை நேர்மாறான வித்தியாசம் காணப்படுகிற தென்பதை இதைக் கண்ணுறுவோரே ச. பி-த்திலிருந்து நன்கு தெரிந்துகொள்வார்கள்.
“ஒவ்வொரு மதத்திலும் அறிஞர்கள் இருக்கின்றார்கள். எம்மதத்தினரும் பிற மதங்களைத் தூற்றாமலும்…. உலக க்ஷேமத்தைக் கோருவாரேயானால் உலகத்திற்கு க்ஷேமம் அதிகம் ஏற்படும். அதை விடுத்து அறிவை மதத் தூற்றல் முதலிய செயல்களில் உபயோகப்படுத்துபவர்கள் உலகிற்கு என்ன நன்மையையும் செய்தவராகார். அவர்களது கூற்றுப் பாமர ஜனங்களின் மனதில் கொதிப்பை உண்டுபண்ணும். இதனால் துக்கம், கஷ்டம் முதலானவை பெருகுகின்றன. பெருகவே மனித ஜாதியின் சுகத்திற்குக் கேடு விளைகிறது. அழிவும் ஏற்படுகிறது,”
என்றும் அவர் எழுதுகிறார்.
“சத்தியத்தினாலேயே வித்வான்களுடைய வழி வெளிச்சமாகிறது. இவ்வுறுதியைக் கைக்கொண்ட பெரியோர்கள் பரோபகாரம் செய்வதிலிருந்தும் சத்திய நெறியிலிருந்தும் ஒரு பொழுதும் பிறழமாட்டார்கள்,”
என்றும் எடுத்தோதுகிறார்.
“பொய்ச் சத்தியத்தினிடத்திலுள்ள நூற்களை ஆராய்ந்து, அவைகளிற் புதைந்து கிடக்கும் சத்திய வாக்கியங்களை எடுத்துக்கொண்டும் சத்திய விரோதமானவைகளைக் கண்டித்தும் உள்ளோம்,”
என்கிறார்.
“பிறமத நூல்களிலிருக்கும் குற்றங்களையும், குறைகளையம், அசத்தியமான தத்துவங்களையும் எடுத்துக் காட்டிக் கண்டித்துள்ளோம். …….. சிலரைப்போல் பிறர் மதமென்று தூற்றியுமிலோம். பக்ஷபாதத்துடனிருப்பது மனிதத்தன்மையாகாது,”
என்றும் எடுத்தோதுகிறார்.
“சிலர் பக்ஷபாதம், பிடிவாதம் காரணமாகக் கர்த்தாவினுடைய எண்ணத்திற்கு விரோதமாகப் பொருள்செய்ய முயல்கிறார்கள். சத்திய சாஸ்திரங்களின் ஆராய்ச்சியில் பக்ஷமாதமாய்ப் பேசுகிறவர்கள் பாபிகளேயாவார்கள். நாம் பைபில், குர்ஆன் இவற்றைப் பக்ஷபாதத்தோடு நோக்காமல் குணத்தைக் கிரகித்தும் குற்றங்களைக் களைந்தும் பலருக்கும் பிரயோஜனப்படுமாறு விளக்கியுள்ளோம். எல்லோரும் இதைப் பின்பற்றுதலே நலமாகும். சத்தியா சத்தியங்களை அறிய எண்ணாது பக்ஷபாத எண்ணத்தோடு நூற்களுக்குப் பொருள்தர வரும் ஒருவன் அறிஞனாக மாட்டான்,”
என்றும் இயம்புகின்றார். ஆனால், மேற்கூறிய உறுதிமொழிகளுக்கும் உபதேச ரத்தினங்களுக்கும் தயானந்தரின் “14-ஆவது அத்தியாயம்” எத்துணைப் பொருத்தமுள்ளதாய் அமைந்திருக்கிறதென்பதை இதைப் படிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும், சனாதன தர்ம ஹிந்து நண்பரும் மிகச்செம்மையாக வெகு எளிதில் உணர்ந்து கொள்வார்கள்.
சுவாமி தயானந்தர் தமது முகவரையிலே இன்னமும்,
“பக்ஷபாதத்துடனிருப்பது மனிதத்தன்மையாகாது. மிருகமானது தன் பலங் காரணமாக எப்படிப் பலக்குறைவான மிருகங்களைத் துன்புறுத்தியும் கொன்றும் விடுகிறதோ அப்படியே மனித சரீரத்தை யடைந்ததன் பலனாக அதை ஓர் ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒருவன் தீச் செயல்களில் பிரவேசிப்பானேயானால் அவன் மனிதனாக மாட்டான்; மிருகமேயாவான். பலமுள்ள காலத்தில் பலமற்றவைகளைக் காப்பாற்றுகிறவனே உண்மையான மனிதனாவான். பேராசையினால் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கிறவனை மிருகங்களினும் இழிந்தவனென்றே கொள்ளல் வேண்டும்,”
என்றும் கூறியுள்ளார். ஷாபாஷ்!
இவர் இஸ்லாத்தைப் பற்றித் தமது ச.பி-த்தில் எழுதியிருக்கும் பான்மையை நோக்குங்கால், இவரது இவ்வெழுத்தே இவருக்கு எத்துணைப் பொருத்தமாயிருக்கிறதென்பதை நீங்களே நன்கறிந்து கொள்வீர்கள். ஒரு மதத்தைப்பற்றி மற்றொரு மதவாதி தாக்கி எழுதுங்கால், அவன் ஒரு மனிதனாயிருப்பது பிறகு இருக்கட்டும்; ஆனால், அவன் மனிதனாயில்லாமல் கேவலம் ஒரு மிருகத்தினும் தாழ்ந்தவனாகவே இருப்பினும், சுவாமி தயானந்தர் இஸ்லாத்தைப்பற்றி எழுதியிருப்பதேபோல் அத்துணைப் பாமரத்தன்மையாகவும், கேடாகவும் எழுத முன்வந்திருக்க மாட்டான். எனவே, சுவாமிஜீயின் ச. பி. 14-ஆவது அத்தியாயம் அவருடைய நீசத்தனமான கேவல மனப்பான்மையையே பிரதிபலித்துக் காட்டுகிறதல்லாமல், இஸ்லாத்தின் உயரிய தன்மையை ஒரு சிறிதும் தாழ்த்திவிடவில்லையென்பது திண்ணமேயாம்.
-பா. தாவூத்ஷா
படம்: அபூநூரா
- இவரது தந்தையால் இடப்பட்ட இயற்பெயர் “பிரன் சத்ரீ சிவபஜன்” என்பதாகும். பிறகு இவரும் இவருடைய சிஷ்யர்களும் சேர்ந்து, “மூலசங்கரர்” என்று அப்பெயரை மாற்றிக் கொண்டனர். இவரது நாமமேபோல இன்னாரின் மதக் கொள்கைகளும் அடிக்கடி மாறிக்கொண்டே வந்தன. இவர் பிரமசரிய ஆசிரமத்தில் கைப்பொங்கல் செய்யவேண்டுமேயென்னும் கஷ்டத்தினின்றும் விடுதலையடையும் பொருட்டே தமது 18-ஆவது பிராயத்தில் தம்முடைய வேதங்களுக்கே முரணாய்ச் சன்னியாசம் எடுத்துக்கொண்டார். ⇪
- இந்நூல் முழுதிலும் கூடியமட்டும் பிகரங்கமான பிரத்தியக்ஷ இலக்கணப் பிழைகளைமட்டும் திருத்தி, ஜம்புநாதனின் நடையிலேயே பெரும்பாலும், ச. பி-த்தின் மேற்கோள்களை யாம் எழுத்தெழுதியிருக்கிறோம். ஆனால், ஜம்புநாதனது மொழிபெயர்ப்புச் சரியில்லாத விடங்களிலும், கருத்து விளங்காத இடங்களிலும் உர்து பாஷையில் வெளியாயிருக்கும் ச. பி-த்திலிருந்து மொழிபெயர்த்து மேற்கோள் காட்டியிருக்கிறோம். ⇪
<<நூல் முகப்பு>>