பீடிகை – பகுதி 1

by பா. தாவூத்ஷா

செந்தமிழ் நாட்டுச் சீரியர்களான நம் சனாதன தர்ம ஹிந்து நண்பர்களுக்கெல்லாம் மிக்க பணிவுடன் எம்முடைய மனமார்ந்த மன்னிப்பைச் சமர்ப்பித்துக் கொண்டு, இந்தப் “பீடிகை” என்னும் மகா மனவருத்தம் நிறைந்த – ஆனால், அத்தியாவசியத்தினிமித்தம் அறைப்படவேண்டிய – ஏதோ ஒன்றை எம் சிற்றறிவுக் கெட்டிய மட்டில் ஈண்டு எழுதத் துணிகின்றோம். தயானந்தரின் “சத்தியார்த்த பிரகாசம்” தமிழில் (தமிழ் மொழியென்று சொல்வது பொருத்தமாகாது; ஆனால், தமிழே போன்ற எழுத்துக்களில்) வெளிவந்திராவிடின், இந்த “ஆரியருக்கொரு வெடிகுண்டு” என்னும் தமிழ் நூல் எழுதப்படுவதற்கும் அத்தியாவசியம் ஏற்பட்டிராதென்பது திண்ணம்.

தயானந்தர் ஸூக்ஷம ஞானமற்ற ஒரு ஸ்தூல புத்தியுடையவராகவே எமது அபிப்ராயத்தில் காணப்படுகின்றார். இவர் தம்முடைய வேதங்களை, மற்றெல்லா ஹிந்துக்களைக் காட்டிலும், மற்றெல்லா ஆசாரிய புருஷர்களைக் காட்டினும் மிக்க நல்லவிதமாக அறிந்தவரென்று இறுமாப்புக் கொண்டிருந்த போதினும், பிற மதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கால், அவ்வம் மதவாதிகளின் மனமானது அளவு கடந்து புண்படும்படியான விதத்திலே அனாவசியமாக அத்துணைக் கீழ்மைத்தனமாகவும் நீசத்தனமாகவும் வரைந்திருக்கிறார்.

இந்நூல் முதலில் வெளிவந்தபொழுது, இதனைப் பறிமுதல் செய்து எம்மையும் கிரிமினல் சிஷைக்குள்ளாக்கிய ஆரிய சமாஜிகளும் அவர்களுக்குத் துணையாய் நின்ற பலப்பல ஆரியர்களும் இறுதியிலே ஏமாந்து போயினர். சத்தியம் நிலை நின்றது.
-பா. தா.

இவரைப் படித்தவரென்றும் மஹரிஷியென்றும் சரஸ்வதியென்றும் கூறுவது பிறகு இருக்கட்டும்; சாதாரணமான ஒரு கீழ்மகனும் இவரைப்போல் பிற மதங்களை அத்துணை நீசத்தனமாகத் தாக்கத் துணிந்திருக்க மாட்டான். தயானந்தர் சிறந்த கல்விமானென்பது வாஸ்தவமென்போமாயின், அதை அவருடைய ச. பி. 11, 12, 13, 14-ஆவது அத்தியாயங்களே பொய்ப்படுத்தி நிற்கின்றன. ஆனால், அவரொரு “மோட்டோ” புத்தியுள்ள முரட்டுத்தனமும் மூர்க்கத்தனமும் பிடிவாதமும் சண்டைக்குணமும் நிறைந்தவரென்பதே எமது மனமார்ந்த அபிப்ராயமாகும்.

சுவாமி தயானந்தர் தம்முடைய ஹிந்து மதத்திலுள்ள குறைகளையும் அதிலுள்ள பிற்போக்கான முறைகளையும் கண்டு, அந்த வேததர்மத்தைச் செப்பஞ்செய்து, பண்டை ஆரிய கர்மமென்னப்படும் வைதிக தர்மத்துக்குத் திருப்ப முயற்சி செய்திருப்பாராயின், அவரைப்பற்றி எம்போன்ற முஸ்லிம் நண்பர்கள் குறைகூற ஒருபோதும் முன் வந்திருக்க மாட்டார்கள். ஏனெனின், அவரவருக்கும் பிறமதங்களைத் தூஷிக்காது தத்தம் மார்க்கத்தைச் சீர் திருத்தம் செய்துகொள்வதற்குச் சகலவிதமான உரிமைகளும் இல்லாமற் போகவில்லை. ஆனால், தயானந்தர், தம்முடைய வேததர்ம மதபோதனைக்கு முற்றிலும் மாற்றமாகவும் அனாவசியமாகவும் செய்ய முற்படும் தம்முடைய துணிச்சலான செய்கையால் வீணான ஹிந்து-முஸ்லிம் கலகங்களே உற்பத்தியாகுமென்பதை முற்றிலும் அறிந்தவராயிருந்தும், தமது ச.பி. 14-ஆவது அத்தியாயத்தில் எமது தீனுல் இஸ்லாத்தைப் பற்றியும் இதன் பரிசுத்த வேதத்தைப் பற்றியும் இதை வெளியாக்கித் தந்த சர்வலோக ரக்ஷகனாகிய சாக்ஷாத் பரப்பிரம்மத்தைப் பற்றியும் இவ்வேதம் வெளிவருவதற்குத துணைக் கருவியாய் நின்றுதவிய எங்கள் பரிசுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும் அயோக்கியர்களென்றும் போக்கிரிகளென்றும் மடயர்களென்றும் அறிவிலிகளென்றும் காமிகளென்றும் கயவர்களென்றும் இன்னும் என்னென்னவோ தம்முடைய வாயில் வந்தவராறெல்லாமும் பிதற்றி வைதிருக்கின்றார்.

கேவலம் ஸோமலதையைப் பருகிவிட்டு மயக்கங் கொண்ட மனத்தினனும் அத்துணைப் பாமரத்தன்மையாகவும் பேய்த்தனமாகவும் பினாத்தியிருக்க மாட்டான். உண்மை இவ்வாறிருக்க, ஒரு மத சீர்திருத்தக்காரரென்றும் வேதக்கல்வி பயின்றவரென்றும் ஸம்ஸ்கிருதத்தில் மெத்த பாண்டித்யம் வாய்ந்தவரென்றும் கூறப்படும் ஒரு மஹரிஷி (சரஸ்வதி சாஹிப்) இவ்வாறு இஸ்லாத்தைப் பற்றி எழுதத் துணிந்ததானது மிகவும் வியசனிக்கத்தக்க காரியமாகவே இருந்து வருகிறது. இவர் வேதக் கொள்கைகளில் மஹா நிபுணரென்று கூறிக்கொண்டு, தம்முடைய ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களிலும் மற்றுமள்ள இதிகாச புராணங்களிலும் அமைந்து கிடக்கும் மகா மகா ஆபாஸமான விஷயங்களையும் அருவருக்கத்தக்க கொடிய காரியங்களையும் அறிந்திருந்தும் (இவர் அவற்றையெல்லாம் அறியாமலிருந்திருப்பது ஒருபோதும் முடியாது) இஸ்லா மார்க்கத்தைப் பற்றி எல்லை கடந்து தூஷிக்கத் துணிந்துவிட்டார். என்னே இவரது மடமை!

இப்படிப்பட்ட அசுசிகரமான ஆபாஸ நூலானது (ச. பி.) தமிழ் எழுத்தில் வெளியாகாதவரை இத் தென்னிந்தியாவேனும் ஒருவாறு ஹிந்து – முஸ்லிம் கலகத்தினின்றும் விலகி ஷேமமாயிருக்குமென்று எண்ணியிருந்தோம்; ஆனால், இப்பொழுது தமிழ் மொழியென்று ஒருவாற்றானும் சொல்லொணாத அப்படிப்பட்ட ஆபாஸமான அருவருக்கத்தக்க நடையிலே தமிழ் எழுத்துக்களால், பஞ்ச இலக்கணத்துக்கும் முற்றிலும் மாற்றமாய், ச. பி. இரு பகுதிகளும் வெளிவந்துலாவுகின்றன. இனி ஆரியசமாஜிகளின் ஒழுங்கீனத்தையும், அன்னாரின் குருவின் ஒழுங்கீனத்தையும், அவர்களுடைய வேதங்களென்னப்படும் துராசார நூல்களின் ஒழுங்கீனத்தையும் வெளியிடாமலிருப்பது எம் போன்ற முஸ்லிம்களின்மீது ஒரு பெருந் தோஷத்தையே விளைவிக்கும்.

பீடிகை தொடரும்…

-பா. தாவூத்ஷா

பட உதவி: அபூநூரா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

Related Articles

Leave a Comment