(16) சொல்:- (ச. பி. அத். 5) உலகாசைகளான கீர்த்தி செல்வம், கௌரவம், புத்திரவாஞ்சை ஆகியவற்றை வெறுத்துச் சன்னியாசிகள் பிச்சை எடுத்து உண்டு, இரவும் பகலும் மோக்ஷ சாதனத்திலேயே காலத்தை வைராக்கியத்துடன் கழித்தல் வேண்டும்.
(16) செயல்:- நீர் உம்முடைய கீர்த்தியும், பிரதாபமும், செல்வமும், கௌரவமும் ஓங்குவதற்காகவே 11, 12, 13, 14 –ஆவது அத்தியாயங்களை எழுதியுள்ளீர். பிறகு இரவும் பகலும் மோக்ஷ சாதனத்திலேயே காலத்தைக் கழிப்பதற்குமாறாய் மனிதர்களுடன் கண்டகண்ட இடத்திலெல்லாம் வீண் தர்க்கங்கள் புரிவதிலும் குதர்க்கமாக மல்லாடுவதிலுமே உம்முடைய வாணாளை வீணாய்க் கழித்துவிட்டீர். அழகான செல்வத்தையடைந்திருந்தீர். யானை, பல்லக்கு, சால்வை, இவற்றுடன் உயர்தர வாகனங்களிலும் ஏறிச் சுற்றித்திரிந்தீர். மயிர்க் கம்பளம், உயர்ந்த வேஷ்டி, இரத்தினக் கம்பளம், பட்டு தினிசுகள், பனாத், உயர்ந்த துணிகள் முதலியவற்றை உடுத்திக்கொண்டீர். அழகான வெல்வெட் மெத்தைகளின் மீது படுத்துச் சயனித்தீர். தீதான பல விஷயங்களில் ஆழ்ந்திருந்தீர்; சன்னியாசிக்குக் கூடாத எத்தனையோ கிரியைகளைச் செய்துவந்தீர். மேலும் உம்முடைய உடையைப் பற்றி, மீரட்டில் வெளியாகும் “ஆரியா சமாசார்” என்னும் பத்திரிகை மேற்கோள் காட்டிய “தயானந்த் சஹல்கப்பட் தர்பன்” என்னும் சிவப்புத்தாள் பிரசுரத்தின் பக்கம் 45, வரி 23-இல் காணப்படுவது பின்வருமாறாகும்:
உயர்தரமான அங்கவஸ்திரம் 1. மஞ்சள் அங்கவஸ்திரம் 2. சிவப்பு அங்கவஸ்திரம் 1. மயிர்த் துப்பட்டி 1. பட்டினாலான மஞ்சள் சோகா 1. ஆக்ரா பட்டின் சோகா 1. பச்சைச் சோகா 1. பட்டினால் உள்ள கோட் 2. சிவப்பு இடைக்கட்டு 1. பட்டுக்கரை வேஷ்டி 2. கழுத்தில் அணியக்கூடிய ருமால் 1. இன்னும் அனேக சாமான்களும். சுவாமிஜீ மரணமடைந்தபோது கி. பி. 28-12-1883-இல் மோஹன்லால் விஷ்ணுவால் பண்டியா அஜ்மீரின் உபமந்திரப் பரோபகார சபாவின் மாபெரிய கூட்டத்தில் விளம்பரப்படுத்தியதாவது:
“4,300 ரூபாய் ரொக்கமிருக்கிறது. இன்னமும் 11,000 ரூபாய் பல மனிதர்களிடத்திலிருந்து வசூல் செய்யவேண்டியிருக்கிறது. 4,000 ரூபாய் பெறுமானமுள்ள அச்சுக்கூடமும், 48,000 ரூபாய் மதிப்புள்ள புஸ்தகங்களும் கையிருப்பு இருக்கின்றன.” “தயான்ந்த் சரித்திர தர்ப்பன்” பக்கம் 47, வரி 8 பார்க்க: சுவாமிஜீக்கு ஐசுவரியத்தின் அவாவானது மட்டிலடங்காததாய் இருந்துவந்தது. செல்வத்தையடைவதற்காக மூன்று விதமான தந்திரங்களை அவர் செய்தார்: முதலாவதாய், தாமே சொந்தத்தில் பிரஸ் (அச்சியந்திரசாலை) ஏற்படுத்தினார். புஸ்தகங்களின் கிரயங்களை இரட்டிப்புக்களாய் வைத்தார். அவருடைய புஸ்தகங்களை வேறு யாரும் எவ்விதமாயும் பிரசுரம் செய்வது கூடாதென்று ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. வேதங்களுக்குத் தவறான மொழிபெயர்ப்புக்களைச் செய்தார்; செல்வங்களைச் சேகரித்தார். மனிதர்களிடத்தில் சந்தா வசூல் செய்யப்பட்டுப் புஸ்தகங்கள் விற்கப்பட்டன. தயாகரனின் கிரந்தம் அச்சிடுவதற்காகச் சந்தா வசூலித்தார். வேத பாஷ்யமும் அதி சீக்கிரத்தில் வெளியாகுமென்று ரூபாய் வசூலிக்கப் பட்டது; உபதேசமண்டலம் அச்சிடுவதற்காக ஒரிலக்ஷம் ரூபாய்க்கு அப்பீல் செய்தார். இன்னமும் எத்தனையோ விதங்களாய்ப் பணம் வசூலிக்கப்பட்டது. (ஆயீனயெ அப்ஆலே தயானந்த், 117-ஆம் பக்கம்.)
சுவாமிஜீ நல்லவிதமாக ஷட்ரசத்தோடு பஞ்சபக்ஷண பரமான்ன போஜனம் செய்பவராயிருந்தார். எனவே, சுவாமிஜீ ஐம்புல ஆசைகளுக்கு ஈடுபட்டவரென்பதும், அல்லது அவற்றை அடக்கியாண்டவரென்பதும் செவ்வனே விளங்காமற் போகவில்லை. ஆதலின், பலவகையாலும் ஐசுவரியத்தைச் சேர்ப்பதில் அவர் ஈடுபட்டிருந்தார் என்பதும், கௌரவத்தில் அதிகம் ஆசை வைத்திருந்தாரென்பதும், வேதத்துக்கு முற்றிலும் முரணாயிருக்கும் சண்டை சச்சரவுகளை விலைக்கு வாங்கிவந்தாரென்பதும் வெளிப்படையாய் விளங்குகின்றன.
(யஜூர் வேதம் அத்தியாயம் 17, மந்திரம் 31 பார்க்க:) “ஏ, மானிடர்காள்! எத்தனையோ மனிதர்கள் கோபாவேசத்தின் காரணமாய் அறியாமை என்னும் இருளில் ஆழ்ந்து தட்டுக்கெட்டுத் தடுமாறிப் பொய் புரட்டுக்களில் ஈடுபட்டுப் பாரமார்த்திக நல்வழியை விட்டு லௌகிக விஷயங்களில் ஆழ்ந்தும், உலக போகங்களில் மூழ்கியும் உழலுகின்றனர்.” (அவ்வாறே நீங்களும் அந்தப் பரமாத்மாவை அறிகின்றீர்களில்லை. எனவே, வாத பிரதிவாதங்களில் ஈடுபடுவர்கள் ஈசுவரனை அறிவதினின்றும் ஏமாந்துபோய் உலக விஷயங்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். ஈசுவரனுக்கும் இவருக்குமிடையில் ஒரு சம்பந்தமும் ஏற்படுவதில்லை; இவர்கள் ஒன்றுமறியாத சாதுக்களாகவே இருக்கின்றனர்.)
(17) சொல்:- (ஜீவிய சரித்திரம், பக்கம் 142, வரி 17) எதுவரை மஹாதேவனைப் பகிரங்கமாய்க் கண்டுகொள்ள மாட்டேனோ, அதுவரை நான் அவனுக்கு வணக்கஞ் செய்யப் போவதில்லை.”
(17) செயல்:- (ஜீவிய சரித்திரம், பக்கம் 171, வரி 5) சாந்தால்கடுவைச் சார்ந்த ஒரு சத்திரத்துக்குப் போய்ச் சேர்ந்து, அங்கே பங்க் குடித்த மயக்கநேரத்தில் கனவில் மஹாதேவனும், பார்வதிதேவியும் தம் விஷயமாய்த் தர்க்கித்துக்கொண்டிருந்ததைக் கண்டார். பார்வதி சொன்னாள்: ‘தயான்ந்த சரஸ்வதிக்குக் கலியாணம் முடிந்துவிடுமாயின், மிக நன்மையாய்க் காணப்படும்.’ மஹாதேவனோ அதை மறுத்துக்கொண்டிருந்ததுமன்றி, பங்கின் மயக்கத்தின் பக்கம் சயிக்கினைசெய்து காட்டிக்கொண்டுமிருந்தார். (அஃதாவது, அவர் கோரியபடி மஹாதேவன் தரிசனமளித்தான். ஆனால், தயான்ந்தர் தமது சொல்லை நிறை வேற்றினாரில்லை. இவ்விதமான கஞ்சா மயக்கம் பிடித்தவர்களுக்கு வேதசாஸ்திரத்தில் என்ன நாமம் சூட்டப்பட்டிருக்கிறது? கபீர்.)
(18) சொல்:- (ச. பி. அத். 1) “விஷ்” (பரவுகிறது) என்னும் தாதுவுடன் “நு” ப்ரத்யயமடைந்து விஷ்னு சப்தம் சித்தமாகிறது. சராசர முழுவதிலும் பரவியிருக்கிறபடியினால் பரமேசுவரனுக்கு விஷ்ணு என்று பெயர். (எனவே, சுவாமிஜீயின் கருத்தாவது சர்வவியாபியான ஈசுவரன் ஒவ்வோர் அணுவிலும் பரவியிருக்கிறார் என்பதே. கபீர்.)
(18) செயல்:- (ஜீவியசரித்திரம், பக்கம் 142, வரி 2) “இந்த மஹாதேவான கல்லின்மீது எலிகள் ஓடுகின்றன; அதை அசுத்தமும் படுத்திவிடுகின்றன. வேதங்களில் நான் கேள்விப்பட்டிருக்கும் மஹாதேவோ சத்தியன் (சகல சக்தியுடையவன்). தன்மீது எலியை ஏற எப்படிவிடுவான்? இந்த விக்ரஹமோ தலையைக்கூட அசைக்கமுடியாததாய் இருக்கிறது; தன்னைத் தப்புவித்துக்கொள்ள முடியாததுமாயிருக்கிறது. நான் இதற்கு வணக்கம் புரிய மாட்டேன்.
(செய்யாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால், தாங்கள் சொல்வதேபோல் சர்வவியாபியான பரமாத்மாவின் பிரதிநிதியாயிருப்பது தன்னை அசுத்தப்படுத்துவதையும், தன்மீது ஓடித் திரியும்படியானதையும் ஒருபோதும் விலக்கிக்கொள்ள முடிவதில்லை. ஆனால், சர்வ வியாபியான பரமாத்மா சத்தியவானல்லவா? ஆதலின், அவனது வியாபகம் நிறைந்த பிரதிநிதி சத்தியன் அல்லன் என்பதற்குக் கொண்டுவந்த ஆதாரம் ஆதாரமற்றதாய் முடிந்தது. ஆதலின், தாங்கள் மஹா தேவான விக்ரஹத்தை வணங்குவது அத்தியாவசியமாய்க் காணப்படுகின்றது; அல்லது தன் பிரதிநிதியைப் போலவே ஈசுவரனும் இருக்கிறானென்று கொள்வீர்களாயின், அவனுக்கு வணக்கம் புரிவதை விட்டு விலகியிருக்க வேண்டியது அத்தியாவசியமாய்க் காணப்படா நின்றது. இதன்பின்பு தங்களிஷ்டம்போல் எதை மேற்கொண்டாலும் மேற்கொள்ளலாம். கபீர்.)
(19) சொல்:- (ச. பி. அத். 5; மனு. 6.97.) “ஓ ரிஷிகளே! பிரமசர்யம், வானப்பிரஸ்தம், கிருகஸ்தம், சன்னியாசமாகிற நான்கு ஆசிரமங்களை அடைவதே பிராம்மணர்களுடைய கடமை.”
(19) செயல்:- (ஜீவியசரித்திரம், பக்கம் 158, வரி 18) என்ன மோசம்! சுவாமி தயான்ந்தர் பிரமசாரி சமையல் செய்வதென்னும் சங்கங்களை விட்டுத் தப்பும்பொருட்டே சன்னியாசம் எடுத்துக்கொண்டார். மேலும் சன்னியாசங் கொடுக்குங் குருக்கள் கீழ்த்தர எந்த ஆசிரமத்தையும் நிறைவேற்றிக் கொள்ளாத (சிறிய) பிராம்மண வாலிபனை உயர்தரப் பதவியான சன்னியாச ஆசிரமத்தில் சேர்த்து விடுகின்றனர்.
(ஆதலின், வேதத்துக்குச் சரியான தம்முடைய சொல்லை உறுதிப்படுத்த முடியாமல் இச்செய்கையால் தம்மைப் பிராம்மணரென்றும் ஊர்ஜிதப்படுத்தாமல் போய்விட்டார். ஏனெனின், மேற்கூறிய பிரகாரம் பிராம்மணர்களின் கடமையைச் செய்யாதவர்கள் பிராம்மணர்கள் அல்லரென்றே கொள்ளப்படுகின்றனர். கபீர்.)
(20) சொல்:- (ச. பி. அத். 9) “பந்தமும் மோக்ஷமும் இயல்பாகவே விளையக்கூடியன வல்ல; செய்கையினால் அடையப்படுவனவே; இயல்பாயிருந்தால் அவைகள் எப்பொழுதும் நீங்காமல் காயமாயிருக்கும்.
வினா:- எதிலிருந்து மறுபடியும் பிறப்பு இறப்புக் கிடையாவோ, அதையே முக்தியென்று உலகமும் கிரந்த கர்த்தாக்களும் நம்புகிறார்கள்.
விடை: இது உண்மையாகாது. (ஏனெனின்) ஜீவனுடைய சாமர்த்தியம், சரீரம் முதலான பொருள்கள் எல்லையுள்ளனவென்றால் அவற்றின் பயன்கள் எவ்விதம் அனந்தமாய் இருக்கக்கூடும்?…… முக்தியிலிருந்து எஜ்ஜீவனும் திரும்பி வராமல் போனால் உலகம் அவைகளற்றதாய்விடும்.”
(20) செயல்:- (ஜீவிய சரித்திரம், பக்கம் 316, வரி 16) முக்தி என்பது, “எத்துணை விதமான துக்கங்களிருக்கின்றனவோ, அத்துணையையும் விட்டு நீங்கி ஒரே சச்சிதானந்த ஸ்வரூபியான பரமேசுவரனிடம் சேர்ந்து, சதா ஆனந்தமாயிருந்து, பிறப்பு இறப்பு இவைகளைப் போலுள்ள துக்க சாகரத்துள் வீழாமலிருப்பதே.” இதில் தயானந்தரின் உட்கருத்தைச் சரித்திராசிரியர் எடுத்தெழுதியுள்ளார். கபீர்.
(21) சொல்:- (ச. பி. அத். 5) “வித்தை (என்னும் தர்மமாவது) அணுவிலிருந்து பரமேசுவரன் வரையிலுள்ள பதார்த்தங்களினுடைய ஞானத்தையும், அதைச் சரியாய் உபயோகிப்பதையும், அதாவது உள்ளதை உள்ளவாறு அறிவதுதான். இதற்கு மாறானது அவித்தை; அதர்மம்.”
(21) செயல்:- நம்மால் மேற்கூறப்பட்ட விஷயங்களிலிருந்து அணுவிலிருந்து பரமேசுவரன் வரையிலுள்ள வஸ்துக்களின் ஞானம் சுவாமிஜீக்கு எவ்வளவு இருந்ததென்று உணர்ந்து கொள்ளலாம். மேலும் சுவாமிஜீ வேதங்களை நல்லவிதமாக உணர்ந்திருப்பாராயின், அவர் தம்முடைய அபிப்பிராயங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிராதென்பது தெரியாத விஷயமன்று. தம்முடைய அபிப்பிராயங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்ததால் “சுவாமிஜீ வேதத்தின்மீது மாத்திரம் நம்பிக்கை வைக்காமல்” தம்முடைய சுயேச்சையையும் பின்பற்றி நடந்தாரென்பதும் வெளியாகாமலில்லை. (எனவே, சுவாமிஜீயினிடம் மேற் கூறப்பட்ட வித்தை என்னும் தர்மம் காணப்படாததால் அவித்தை நிரம்பிய அதர்மியாய் இருக்கிறார் என்பது அறியத் தக்கதே. கபீர்.)
(22) சொல்:- ஆதலின், வித்தையைக் கற்றுத் தர்மாத்மாக்களாய் விரோதமின்றிச் சகல ஜீவன்களுக்கும் நல்ல உபதேசம் செய்யப்படட்டும்; இனிமையான வார்த்தை எழுத்து இவைகளால் உபதேசம் செய்தல் வேண்டும். சத்தியோபதேசத்தினால் தர்மத்தின் விருத்தியையும், அதர்மத்தின் நாசத்தையும் செய்கிறவர்களே மேலோர்கள்.
(22) செயல்:- 21 நெ. சொல் செயலினால் சுவாமிஜீ தர்மாத்மாவே அல்லரென்பது வெளியாயிற்று. எனவே, மஹஸ்ஸாரா தாக்ஷன் சாஹிபின் “ஆரியாவும் பிரசாரமும்” என்பதன் 3-ஆம் நெ. பார்க்க: “இப்பொழுது சித்தாந்தங்களை விட்டுவிட்டு, வேறு மதவாதிகளுடனே ஸமரஸம் செய்கின்றார்.”
(சுவாமி தயான்ந்தர் தம்முடைய “சத்தியார்த்த பிரகாசம்” என்னும் நூலில் ஹிந்துமதம் உட்பட வேறு மதவாதிகளையும் மிக மிக இழிவாக இடித்துக் கூறுவதுமன்றி, குரு நானக்தேவ், குரு கோவிந்த்சிங், ராஜா ராம் மோஹன்ராய் போன்ற பெரியார்களையும் சும்மா விட்டு விடவில்லை. கபீர்.)
-பா. தாவூத்ஷா
படம்: அபூநூரா
தட்டச்சு: யூனுஸ் அஹ்மது
<<நூல் முகப்பு>>