(11) சொல்:- (ச.பி. அத். 5) “எல்லாவிதமான உலக போகங்களும் நம் கர்மங்களினாலேயே ஏற்படுகிறதென்பதைக் கண்டு சந்நியாசியாயுள்ள பிராம்மணன் வைராக்கியத்தை அடையவேண்டும். ஆக்கப்படாதவரான பரமாத்மாவை அற்ப கர்மத்தினால் அடைய முடியாது. ஆகையினால் பொருளுடன் வேதத்தை அறிந்தவனும், பரமேசுவரனை அறிகிறவனாயுமிருக்கும் குருவை அடைந்து எல்லாச் சந்தேகங்களையும் ஒருவன் தீர்த்துக்கொள்ள வேண்டும்.”
(11) செயல்:- சுவாமிஜீ ஜீவித்திருந்த காலம்வரை வேறு எந்தக் கிரந்தத்திலும் அவருக்கு ஏதாவது ஒரு சிறு பொருளிலேனும் சந்தேகம் ஏற்பட்டு, அந்தச் சந்தேகத்தை நிவர்த்திப்பதற்காக எந்தக் குருவினிடத்திலும் சென்று ஞானத்தைப் பெற்று வைராகியானார் என்றேனும், அச் சந்தேகங்களை நிவாரணம் பண்ணிக்கொண்ட பிறகே சன்னியாசத்தைக் கைக்கொண்டார் என்றேனும் கண்டு கொள்வது முடியாது. ஆனால், இதற்கு மாறாய் (ஜீவியம் 181 – ஆம் பக்கம், 11 – ஆவது வரி) “சுவாமிஜீ அடிக்கடி சுவாமி விரஜானந்தரிடம் தாம் நேரே சென்றோ, அல்லது கடிதப் போக்குவரத்தின் மூலமாகவோ தம்முடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டிருந்தார்.”
அஃதாவது, சுவாமிஜீ சன்னியாசத்தை எடுத்துக்கொண்ட பின்பு 25 வருஷம்வரை தம்முடைய சந்தேகங்களை நீக்கிக்கொண்டேயிருந்தார். இஃது ஒருபுறமிருக்க (ஜீவிய சரித்திரம், பக்கம் 130) சுவாமி தயானந்தர் தம் வாழ்நாட்களில் பலமுறை தம்முடைய அபிப்பிராயங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தார். உதாரணமாக, அவர் சொல்லின் பிரகாரம், கஷ்டமான பூஜாரித்தனத்தை ஏற்றுக்கொண்டு பூஜாரியாகவே இருந்துவந்தார். அப்பொழுது ருத்ராக்ஷம் முதலிய மணிமாலைகளை அணிந்திருந்தார்; பிறகு சில நாட்களுக்குப் பின் அவைகளைக் கண்டனம் பண்ணிக் களைந்து எறிந்துவிட்டார். ஒரு சமயம் ஒழியாத மோக்ஷமுண்டென்று கூறினார்; சிலகாலத்துக்குப் பின்னர்த் தம்முடைய அபிப்பிராயங்களைத் தாமே மாற்றிக்கொண்டார். (௸ 156-ஆம் பக்கம் 2–ஆவது வரி) “சுவாமிஜீ பரோடா வந்தார்; பின்பு இங்குள்ள பிரம்மசாரிகளிடத்தும் சன்னியாசிகளிடத்தும் சேர்ந்திருந்து வேதாந்தியாய் விட்டார்.”
(எனவே, அவர் இன்னும் சிலகாலம் சுகமாய் ஜீவித்து இருந்திருப்பாராயின், வேறு என்னென்ன அபிப்பிராயங்களை மாற்றியிராரென்று யாரே கூறத்துணிவர்? மேலும் அவரது வயது முதிர முதிர அவருடைய ஞானமும் மேலோங்கிக் கொண்டே வந்தது! உண்மையின் சாயலும் அவருக்கு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது! ஆதலின், இப்படி இருக்குமித் தறுவாயில், சுவாமி தயானந்த சரஸ்வதி தமது சன்னியாச காலத்தில் சகல ஞானங்களிலும் பரிபூரணமடைந்தவராய் இருந்தாரென்று யார்தாம் கூறுவர்? அப்படியே அவர் வேத ஞானத்தில் பரிபூரண மெய்தியவரென்று வைத்துக் கொள்வோமாயினும், அவர் தம்முடைய அபிப்பிராயங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த்து அர்த்தமில்லாத ஒரு வெறும் பேச்சாகவே காணப்படுகிறது. எனவே, இதனால் ஏற்படுவது யாதெனின், சுவாமி தயானந்தர் வேதத்தை உணர்ந்தவருமல்லர், வேதத்தை அறிந்தவருமல்லர், பேரொளி ஞானம் பெற்றவருமல்லர், அவர் செய்த வேலைகளெல்லாம் வேதத்துக்கு முற்றிலும் மாற்றமாயிருந்தன, என்பதுதான். கபீர்.)
(12) சொல்:- சகல வர்ணத்தாரின் ஆண் பெண் இரு பாலாரும் கல்வியுடனும் தர்மத்துடனும் இருப்பதுமல்லாது பிரசாரமும் அவசியமாய்ச் செய்தல் வேண்டும். (ச. பி.) யஜுர் வேதம் அத்தியாயம் 8, மந்திரம் 8-ஐ ஒவ்வொரு பெண்பிள்ளையும், படிப்பாளாக: “ஏ! என்னுடைய எஜமானே! நான் தங்களை விவாக ஒழுங்குடனே மணம் புரிந்துகொண்டேன். தாங்கள் அதிக வீரியத்தை அளிக்கக்கூடியவர்களாய் இருக்கின்றீர்கள். நான் தங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய உணவுகளைச் செய்து கொடுக்கிறேன். மேலும் நான் தங்களுக்குக் கற்றுணர்ந்தவர்களின் நேசத்துக்குச் சம்மதிப்பதே போல் தாங்களும் எனக்கு உத்தரவு கொடுத்தருள்வீராக.” (வார்த்தையோ நீதத்துக்குரியதாகவே காணப்படுகிறது!)
(12) செயல்:- (ஜீவிய சரித்திரம் பக்கம் 187) சுவாமிஜீயின் வழக்கமாவது ஸ்திரீகளைச் சமீபத்தில் அணுகவொட்டாமல் தடுப்பதேயாகும். அஜ்மீரில் பெண்கள் அவரது உபதேசத்தைக் கேட்பதற்காக வந்து கூடினர்; ஆனால், சுவாமிஜீ அதைத் தடுத்துவிட்டார். (எனவே, யஜுர் வேதத்தில் காணப்படும் கற்றுணர்ந்தவர்களின் நேசத்தைப் பெற வேண்டுமென்னும் மந்திரம் தயானந்தரிடம் வீணாகவே முடிந்தது; அல்லது அவரது வேலை வேதத்துக்கு முற்றிலும் வேற்றுமையாய் முடிந்து விட்டது.)
(13) சொல்:- (ச. பி. அத். 10) புத்தியை மழுப்பி நாசஞ்செய்யும் சகலவிதமான கெட்ட பானங்களையும், கஞ்சா, பங்க், அபின் முதலியவைகளையும் உபயோகப்படுத்துவது கூடாது.
(13) செயல்:- (ஜீவிய சரித்திரம் பக்கம் 171, வரி 1) சாண்டால்கட் தர்காவின் மடத்தில் போய் இறங்கினார். அவ்விடத்தில் இரவு பகலாய் யோக ஞானங்களைப் படிப்பதிலும், அதன்படி நடப்பதிலுமே காலங்கழித்து வந்தார். அவ்விடத்திலிருந்தே பங்க் குடிப்பதன் பழக்கமும் ஏற்பட்டுவிட்டது. (என்ன! சொன்ன சொல்லுக்குச் சரியான உறுதியளித்தார்!) (ஆயீனயெ அப்ஆலே தயானந்த், பக்கம் 154, வரி 7) சுவாமிஜீக்குப் புகையிலைத் தின்னுவதில் அதிகப் பிரியம் இருந்தது. இதைப்பற்றி ஆக்ஷேபிப்பவருக்கு அவர் அளிக்கும் விடையாவது: “உங்களுக்குக் கேள்வி கேட்கும் முறையே தெரியாமலிருக்கிறது,” என்பதே. (இத்தகைய விடை மிக நன்றாயிருக்கிறது!)
ஒருநாள் மீரட்டில் பண்டிட் பாகீரதீயின் ஹுக்காவைச் சுவாமிஜீ உடைத்துவிட்டு வந்துவிட்டார்; அவர் திடும்பிரவேசமாய்ச் சுவாமிஜீமுன் ரேவாடி என்னும் நகரில் பிரசங்கம் புரியும் சதசிற்கு ஓடிவந்தார். அவரைக் கண்டவுடன் பிரசங்கத்தில் சுவாமிஜீ சொல்லத் துணிந்ததாவது: “நான் ஹுக்கா குடிப்பதை விடுத்துச் சன்னியாசிகளின் தொழிலான புகையிலைத் தின்னுவதையே ஆரம்பித்துவிட்டேன்,” என்பதே. இதையறிந்த பண்டிட் பாகீரதீ சொன்னார்: “நீர் மீரட்டில் என்னுடைய ஹுக்காவை உடைத்துவிட்டு ஏன் என்னிடம் சொல்லாமல் இவ்விடம் வந்துவிட்டீர்?” அதற்குப் பண்டிதர் சுவாமி விடை பகர்ந்ததாவது: “இங்கு என்னுடைய வாஸஸ்தலம் இருக்கிறபடியால் நான் அவ்விடத்தை விட்டு வந்துவிட்டேன்.” உடனே அதே நேரத்தில் அவ்வளவோடு பிரசங்கம் முடிக்கப்பட்டது அதற்கடுத்த நாள் ஜனவரி 10-ஆம் தேதியில் ரேவாடியிலிருந்து தெஹ்லிக்குப் போய்விட்டார். (14) சொல்:- (ச. பி. அத், 4 இறுதி) உலகத்திலுண்டான சகல காரியங்களும் கிருகஸ்தாசிரமத்தினுள்ளே பொதிந்து நிற்கின்றன. இந்த ஆசிரமம் இல்லாமற்போமாயின், பிள்ளைகள் உண்டாகாததனால் பிரமசர்யம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகிய மூன்று ஆசிரமங்களும் எங்கிருந்து வரும்? எவனேனும் கிருகஸ்தாசிரமத்தைத் தூஷிப்பானாயின், அவனே தூஷிக்கத்தக்கவன். (விவாகம் முடித்துக்கொண்டு ஜமீன்தாரின் வேலை, வியவசாயம், வியாபாரம், வேறு கூலிவேலை ஆகிய மற்றத் தொழில்கள் செய்வதும், சந்தானங்களைப் பெறுவதுமே கிருகஸ்தாசிரமமென்று கூறப்படுகிறது.)
(ச. பி. அத். 4. இறுதி) எவனொருவன் மோக்ஷத்தையும், உலக சுகத்தையும் விரும்புகிறானோ, அவன் கிருகஸ்தாசிரம விதிகளை அனுசரிக்க வேண்டும். பலஹீனமுற்ற இந்திரியங்களை உடையவர்களும், பயந்தவர்களும் இந்த ஆசிரமத்தை நடத்த யோக்யமானவர்களல்லர். (தயானந்த மஹாராஜாவே இவ்வாக்கியத்தின் அனுஷ்டானத்தைச் செய்து காட்டிவிட்டார். வெளி வேஷத்திலும் தாம் பயமற்றவர், பலஹீனமற்ற இந்திரியங்களையுடையவர் என்பதைக் காட்டிக்கொள்ளவில்லை. கபீர்.)
(14) செயல்:- (ஜீவிய சரித்திரம், பக்கம் 147) சுவாமிஜீ தமது 21-ஆவது வயதில் விவாகம் பண்ணிக்கொள்ள மறுத்தார். (வரி 19) விவாகம் வேண்டாம் என்றே மறுத்துத் தள்ளிவிட்டார். வீட்டை விட்டும் ஓடிவிட்டார். இன்றுவரை வீட்டிலுள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தாரில்லை, விவாகமும் செய்துகொள்ளவில்லை. (தயானந்தரே! நீர் உமது செய்கையால் கிருகஸ்தாசிரமத்துக்குத் தீங்கிழைத்துவிட்டீர். உம்மைப் பின்பற்றும் செம்மறி ஆடுகளுக்குத் தீதான விதையை விதைத்துவிட்டீர். என்ன! நீர் பலஹீனமுள்ளவராயிருந்தீரா? அல்லது பயந்தவராயிருந்தீரா? அல்லது ஆண்மைத்தனம் அற்றவராயிருந்தீரா? எதையாவது நீர் உமது நாவால் நவில்வீராக. நீர் மோக்ஷத்தையடையும் மார்க்கத்தை விட்டு விட்டுத் தவறான வழியை ஏன் தெரிந்துகொண்டீர்? ஆதலின், நீர் எந்த உயர்தரமான இனத்துள் சேர்ந்தவராய் இருப்பீரென்று யாங்கள் அறிகிலேம். ‘தன்னிடம் மோசமும் அன்னியரிடம் உபதேசமும்’ என்று இதற்காகவே கூறுகின்றனர் போலும்!
(15) சொல்:- (ச. பி. அத். 4. இறுதியின் தாத்பரியம்.) ஆண் பெண் இருபாலாரும் படைக்கப்பட்டதன் தாத்பரியமாவது: அவர்கள் தர்மத்தினால் வேதத்தின் கட்டளைக்கிணங்க விவாகமோ, அல்லது நியோகமோ செய்து சந்தானங்களை அடைய வேண்டுமென்பதே.
(15) செயல்:- 14-ஆம் நெ. சொல்லைப்பார்க்க: சுவாமிஜீ தாம் விவாகமும் செய்து கொள்ளவில்லை; நியோகமும் செய்தனரில்லை. ஆகவே, பரிதாபம்! தம்முடைய வார்த்தைக்கும், வேதத்துக்கும் முற்றிலும் முரணாய் நடந்து கொண்டார்.
-பா. தாவூத்ஷா
படம்: அபூநூரா
தட்டச்சு: யூனுஸ் அஹ்மது
<<நூல் முகப்பு>>