அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்

“அல் முஹ்மல்” என்பது ஓர் அரபுச் சொற்றொடராகும்; அதன் அர்த்தமோ, ஒரு பெரியார், “ஹிந்தியின் ராகத்தை முகலாயர் பாடுதல்,” என்று கூறியிருப்பதே போலவாகும். அகராதியின்படியும் இலக்கணச் சட்டங்களின்படியும் “அல் முஹ்மல்” என்பது அர்த்தமில்லாத ஒரு வீணானதையே குறிக்கும். அஃதாவது, ஒரு வார்த்தை, அஃது எப்பாஷையிலுள்ளதாயினும் அப்பாஷைக் கொத்த சட்டங்களினின்றும் அர்த்தங்களினின்றும் கருத்துக்களினின்றும் அப்புறப்பட்டதாய் இருக்க, ஒருவர் மற்றொருவருக்கு அதன் கருத்துப்படி நடந்துகொள்ள வேண்டுமெனக் கூறுவது வீணானதேயாகும், என்று பொருள்படும். இது, ஹிந்தி பாஷையை அறியாத ஒரு முகலாயன் ஹிந்தியின் கவியை மாத்திரம் பாடிக்கொண்டு, விஷயம் இன்னதென விளங்காமலிருப்பதற்கு ஒப்பாகும். இதே விதமாகத்தான் ஆந்திர தேசத்தார் அர்த்தம் விளங்காமல் தமது தெலுங்கு பாஷையில் தமிழிலுள்ள “திவ்ய பிரபந்த”த்தை ஓதி வருகின்றனர். இதே விதமாகவே ஆரியரின் ‘ஜஞ்சிகிருத’ கிளிப்பிள்ளை வேதம் உலகினருக்குப் பயன்படாதததாயிருக்கிறது. ஏனெனின், ஸம்ஸ்கிருத வேதம் உலகத்தின் எந்தப் பேசும் பாஷையையும் சார்ந்ததாயில்லை. எனவே, அவ்வேதம் இயற்கையில் வீணான விஷயமாகவே காணப்படா நின்றது.

“சத்தியார்த்த பிரகாசம்” அத்தியாயம் 7-இல் பாரக்க:

“வினா:- தேச பாஷையில் எதிலாவது வேதத்தைப் பிரகாசஞ் செய்யாமல் ஸம்ஸ்கிருத பாஷையில் ஏன் செய்தார்?

விடை:- வேறு எந்தப் பாஷையிலாவது பிரகாசஞ் செய்திருந்தால் பரமேசுவரர் பக்ஷபாதியாய் இருந்திருப்பார்.”

கடவுள் ஒரு ஜாதியாருக்கு மட்டுமே சொந்தமான பாஷையில் வேதத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவர் பக்ஷபாதியாவாரென்று தயானந்தர் கூறுகிறார். ஒரு ஜாதியாருக்குரிய பாஷையில் வேதத்தை வெளிப்படுத்துவது பக்ஷபாதந்தான்; ஆனால், ஒருவருக்கும் விளங்காத ஒரு குருட்டுப் பாஷையில் வெளிப்படுத்தியிருப்பதால், இப்பொழுது ஈசுவரன் புத்தியில்லாத ஒரு முழு மகனாகத்தான் இருக்கிறான். ஏனெனின், உலகத்தில் ஒருவருமறியாத பாஷையாயும், அதன் நன்மை இன்னது, தீமை இன்னதென்று அறிய முடியாததாயுமுள்ள செத்த ஸம்ஸ்கிருத பாஷையில் வேதத்தை வெளிப்படுத்தினான். எனவே, அதை மதிப்பவன் ஒருவனுமில்லை. ஏனெனின், ஒவ்வொரு மனிதனும் தான் எதை நல்லவிதமாய் உணர்ந்தும் அறிந்துமிருக்கிறானோ, அதற்கே மரியாதை செய்கிறான். ஆரியர் வேதந்தான் ஒரு நூதன என்றும் பேசப்படாத பாஷையில் வெளியிடப்பட்டதாய் விளங்குகிறதே!

இஃது ஒருபுறமிருக்க; வேதத்தை ஏதாவதொரு பேசும் பாஷையில் பரமேசுவரர் வெளிப்படுத்தியிருப்பாராயின், அப்பொழுது வேதங்களைப் படிப்பதிலும் படித்துக் கொடுப்பதிலும் அதை விளங்கிக் கொள்வதிலும் விளங்க வைப்பதிலும் எவ்வளவோ சௌகரியங்கள் ஏற்பட்டிருக்குமே. ஆனால், பரமேசுவரர் வேதத்தை ஒருவருக்கும் விளங்காத விதமாய் ஸம்ஸ்கிருதத்திலே வெளிப்படுத்தி வைத்து, நான்கு ரிஷிகளுக்குமட்டுமே முதலில் அதைக் கற்பித்துக் கொடுத்துப் பக்ஷபாதமுடையவராய் ஆய்விட்டார்; எனவே, அவர் உலகத்திலுண்டான சகல ஜீவஜந்துக்களுக்கும் தமது வேதத்தை கற்பித்துக் கொடுத்திருப்பாராயின், அப்பொழுது பக்ஷபாதமுள்ளவராய் இருந்திருக்க மாட்டார். மேலும் உலகமே அவற்றின்படி நடந்தும் வந்திருக்கும். இந்தத் தவறுதலின் காரணமாகவே இற்றை நாள்வரை உலகத்திலுண்டான ஒவ்வொரு தேசத்தின் மனிதர்களும் வேதங்களைப் பெற்றுக்கொண்ட நான்கு ரிஷிகளின் சந்ததியார்களும்கூட வேதத்தின் கருத்து இன்னதுதானென்று விளங்கிக்கொள்ள முடியாதவர்களாய் ஆந்தையேபோல் விழித்துக்கொண்டிருக்கின்றனர்.

நல்லது சகோதரீர்! பரமேசவரர் நல்ல நீதம் செய்தார். வேதத்தை எந்தத் தேச பாஷையிலாவது இறக்கி வைக்காமல் அவர் செய்த நல்லூழியத்தால் உலகத்தினர் அதன் உயர்தரத் தத்துவங்களை உணர்ந்துகொள்ள முடியாதவர்களாய் இருந்ததுமல்லாமல், ஒரு சிலருக்கு வேறொருவித ஞானோதயமும் உண்டாயிற்று: எவ்வாறெனின், ஒவ்வொரு மனிதனும் சிவனைப் போலவென்றும் ஒவ்வொரு மனுஷியும் பார்வதியைப் போலவென்றும் தோன்றலாயினார்; இதனால் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தமக்கிடையில் பரமசிவன் பார்வதியின் சம்பந்தமே போன்ற சம்பந்தத்தை வைத்துக்கொள்ளலாம் என்கிறார். எனவே, பெண்ணானவள் தனக்கு மனைவியாகக் கூடியவளாய் இருப்பினும் அல்லது ஆகக்கூடாதவளாய் இருப்பினும் அவளை ஆடவன் வரன்முறையில்லாது பெண்டாளலாம். இதினின்றுமேதான் வாமமார்க்கத்தின் அடிப்படை ஏற்படலாயிற்று.

இன்னமும் சிலர் புருஷ லிங்கத்தைப் பூஜிக்கவும் சிலர் பெண் குறியை வணங்கவும் சிலர் கட்குடத்தையும் கஞ்சாவையும் பூஜிக்கவும் சிலர் அரச மரத்தையும் சிலர் ஒதியையும் சிலர் வேம்பையும் சிலர் கறையான் புற்றையும் சிலர் மஹாதேவனையும் சிலர் நந்திக் கல்லையும் சிலர் விஷ்ணுவையும் சிலர் பிரம்மாவையும் சிலர் சுப்ரமண்யனையும் சிலர் யானை முகத் தொந்தியாணையும் சிலர் மகாசக்தியையும் சிலர் ராமனையும் சிலர் கிருஷ்ணனையும் சிலர் தம்முடைய பெண்ஜாதிமாரையும் சிலர் பசுவையும் ரிஷபத்தையும் பன்றியையும் குரங்கையும் நாயையும் நரியையும் நத்தையையும் நண்டையும் ஆமையையும் கருடனையும் சிலர் அனுமானையும் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கவும் தலைப்பட்டனர். சிலர் அசுவமேதம், சிலர் கோமேதம், சிலர் அஜமேதம், சிலர் நரமேதங்களின் வழியைப் பின்பற்றலாயினார். இவைகளடங்கலும் வேதத்தின் படிப்பினைகளாகவே இருக்கின்றன.

(ச.பி. அத். 11 பார்க்க:) “ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தி சிருஷ்டியின் துவக்கத்தில் ஆரியர்களே சகலதேயத்து அதிபதிகளா யிருந்தார்கள்….. பூலோகத்தி லிருக்கும்படியான சகல மதங்களும் கலைகளும் ஆரியவர்த்த நாட்டிலிருந்தே உண்டானவைகள்.”

பிறகு (ச.பி. 12-ஆவது அத்தி. பார்க்க:) “மகீதரரைப் போன்ற உரையாசிரியர்கள், கோமாளிகள், பாதகர்கள், இராக்ஷசர்களென்பதில் சந்தேகமில்லை. அவர்களுடைய போக்கிரித்தனத்தினாலேயே வேதங்களின்மீது பழி சுமத்தப்பட்டது. வேதங்களைத் தக்க ஆசிரியர்களுடன் கூடி, சாரவாகர்கள், அபாணகர்கள், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியவர்கள் படிக்காமலிருந்தது வருந்தத்தக்கதேயாகும். இதனாலேயே புத்தி மழுங்கிப்போய் வேதங்களைப்பற்றி மதியீனமாகப் பேத்த வாரம்பித்தார்கள். தீய வாம மார்க்கத்தவர்களால் எழுதப்பட்ட ஆதாரமில்லாததும் முழுப் பொய்யாயும் கெட்டுமிருக்கிற உரைகளைப் படித்து அறிவில்லாத ஆழ்ந்த பள்ளத்தாக்கில் விழுகிறார்கள்.”

என்ன ஆலீ ஜனாப் அவர்களே! மகீதரரும் வாமமார்க்கப் பண்டிதர்களும் தத்தம் ஸம்ஸ்கிருத ஞானத்துக்கு ஏற்றவாறாகவே வெதங்களை மொழிபெயர்த்து, அவற்றிற்கு வியாக்கியானங்களும் செய்துள்ளார்கள். இன்னமும் எவ்வெவ் விஷயங்கள் அவர்களுடைய மார்க்கத்தில் காணப்படுகின்றனவோ, அவையடங்கலும் உங்கள் வேதங்களிலிருந்தே இறக்கிக் கொண்டுவரப் பட்டனவாய்க் காணப்படுகின்றன. அவர்கள் வேத ரகசியங்களின் நுட்பங்களையெல்லாம் மிக விளக்கமாய் அறிந்துகொண்ட பின்னரே இவைகளடங்கலும் வேதத்தில் காணப்படுபவையென்று உறுதிப்படுத்தினர். எனவே, இப்பொழுது இவ்வுலக முழுதும், முக்கியமாய் இப்பரதகண்ட முழுதும் காணப்பட்டுவரும் (ச.பி. 10, 11, 12 அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்) மகா வெறுப்புடன் அருவருக்கத்தக்கனவும் கேடுகளை விளைக்கத்தக்கனவும் கெட்ட செயல்களைப் போதிக்கத் தக்கனவுமாய் இருந்துவரும் எல்லாவிதமான அக்கிரமங்களும் அநியாயங்களும் வேத பகவானின் உதவியினாலேயே உற்பத்தியாய் இருக்கின்றனவென்று கொள்ளல் வேண்டும்.

இம்மட்டோடு நில்லாமல், ஆரிய வேதங்கள் நான்கும் யாருமறியாத ஸம்ஸ்கிருதத்தில் இருந்து வருவதனால், எந்த மனிதனும் தனக்குச் சிறிது ஸம்ஸ்கிருத பாஷையில் அபிவிருத்தியிருப்பதைக் கொண்டு தன்னை வேதவிளக்க மஹா ஞானியென்று கூறிக்கொள்ளலாம்; தன் மனப்போக்குக் கொத்தவாறு ஏதேனுமொரு சுலோகத்தின் கருத்தை அமைத்துக்கொண்டு, வேறெந்த மனிதன் முன்னும் அஞ்சா நெஞ்சடன் அதை அரற்றிவரலாம். ஏனெனின், வேதங்கள் எல்லா மனிதர்களாலும் ஏகோபித்தவாறு அறிந்துகொள்ளத் தக்கவிதமாய் ஏதேனுமொரு தேச பாஷையில் எழுதி வைக்கப்பட்டில்லையே. எனவே, அவற்றின் சட்டதிட்டங்களும் இன்னவைதாமென்று ஒருவராலும் ‘கெட்டியாய்த்’ தீர்மானித்து விடுவது முடியாது. ஏனெனின், ஸம்ஸ்கிருதம் ஆதிமுதல் ஒரு பேச்சுவழக்கற்ற பாஷையாய் ஏட்டிலே மட்டும் இருந்து வருகிறது; ஆதலின், அவ்வேதங்களின் கருத்துக்களைத் தத்தம் மனம்போனவாறு அவரவரும் செய்வதில் வேறொருவருக்கும் அஞ்சவேண்டிய அவசியமேயில்லை.

வேதங்களுக்குப் பின்பு அனேககாலம் கழிந்த பிறகே ஸம்ஸ்கிருத பாஷையின் சட்டதிட்டங்களென்பன ஒருவாறு அமைக்கப்பட்டு, அவற்றுள்ளும் யார் நிர்மாணித்தது சரி, யார் நிர்மாணித்தது சரியன்று என்னும் விவாதம் உண்டாய், ஒவ்வொருவரும் தாம் தாம் செய்த சட்டங்களும் கருத்துக்களுமே சரியானவை என்றும் மற்றையோர் கூறும் சட்டங்களும் கருத்துக்களும் சரியானவை அல்லவென்றும் அன்றுமுதல் இன்றுவரை வாதாடிக் கொண்டில்லாமலில்லை. எனவே, ஒவ்வொரு மனிதனும் தனக்கு விளங்கிய வியாக்யானமே உண்மையானதென்றும் மற்றையோர் சொலலம் வியாக்யானங்களெல்லாம் சுத்தப் பொய்யானவை என்றும் கூறுகிறான்.

ஆதலின், ஸம்ஸ்கிருத வேதங்களெல்லாம் மேற்கூறியவர் போன்ற பல ஞானவான்களின் சொற்களாகவும் இருக்கலாம். அல்லது ஒருவருக்கும் விளங்காத வகையில் எழுதக்கூடிய அத்துணை அழகையுடைய ஒரு மேதாவியின் புத்திசாலித்தனமாயும் இருக்கலாம்! இக்காரணத்தினால்தான் வேத தர்மத்தின் நிபந்தனைகள் ஆயிரக்கணக்காக இருப்பதுமல்லாமல், அவை ஒன்றுக்கொன்று மூலக் கொள்கைகளிலும் முற்றிலும் முரணாய்க் காணப்படுகின்றன. இவற்றிற்குச் சான்றாகச் சிற்சில பிரிவினைகளை மட்டும் இங்கு வரைகின்றோம். அவற்றிலிருந்து ஆரியவேத தர்மங்கள் ஒன்றோடொன்று எத்துணை நேர்மாற்றமாய்க் காணப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

-பா. தாவூத்ஷா

படம்: அபூநூரா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment