கோபாவேசத்துடன் குரைத்துவிட்டு நடந்த மலிக்குல் முஅல்லம் நேரே தமது அந்தரங்க அறைக்குள்ளே சென்று சாய்வு நாற்காலியொன்றில் தொப்பென்று விழுந்து சாய்ந்து கொண்டார். அவர் சாய்ந்த வேகத்தில் தலையிலிருந்த மணி முடி

ஒரு பக்கல் உருண்டோடியது. உதடுகள் துடிக்க, நெஞ்சம் பதைக்க, உடலெல்லாம் விலவிலக்க அவர் அப்படியே மல்லாந்து கிடந்தார். சுல்தான் மிகவும் கோபமாயிருக்கிறரென்று பயந்து, அவருடைய சேவகர்களும் சிப்பந்திகளும் அருகில் நெருங்க அஞ்சிச் சற்றுத் தூரத்திலே கைகட்டி வாய்பொத்தி நின்றார்கள்.

சுல்தானின் கோபம் தணிதற்குச் சுமார் ஒரு மணி நேரம் சென்றது. பிறகு எழுந்தார்; தர்பார் உடைகளைக் களைந்தெறிந்தார்; சாதாரண அணிகலன்களையே அணிந்துகொண்டார். தம் முகத்தை ஒரு முறை நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொண்டார். அரும்பு விட்டதும் விடாததுமாயிருந்த தம் மீசையைத் தடவிக் கொண்டார், தம்முடைய அழகைக் கண்டு புன் முறுவல் பூத்துக்கொண்டார்.

இந்தச் சமயத்தில் ஒரு பணியாள் வந்து சுல்தானின் பக்கத்தில் குனிந்து பவ்யமாக நின்றான்.

“யா ஸாஹிப்! அமீர் பக்ருத்தீன் தங்களைக் காண வந்திருக்கிறார். உள்ளே அழைத்து வரட்டுமா?”

“உடனே அழைத்தவா. இதற்குக்கூட என் உத்தரவா பெறவேண்டும்? சீக்கிரம்!”

புர்ஜீ மம்லூக்குகளுள் மிகவும் வயது முதிர்ந்த பக்ருத்தீன் என்பவர், சமீபத்தில் நிகழ்ந்த சிலுவை யுத்தத்தில் அமீராக உயர்த்தப்பட்டவர். யுத்த காலத்தில் புர்ஜீகளால் குழப்பம் மூண்டுவிடாதிருப்பதற்காக ஷஜருத்துர் பல தற்கால தந்திரங்களைக் கடைப்பிடித்தார் என்பதை முன்னமே விவரித்திருக்கிறோமல்லா? அப்படிப்பட்ட தந்திரங்களுள் அந்த ஸுல்தானா செய்த ஒரு பெரிய விவேகமிக்க தந்திரம் புர்ஜீகளுக்கு அமீர் அந்தஸ்தைக் கொடுத்ததாகும். ஸாலிஹ் பட்டமேறியவுடனே எல்லா அமீர்களையும் கொன்று குவித்துவிட்டபடியால், நடுநடுங்கிப்போன புர்ஜீகளுக்கு ஷஜருத்துர் செய்த இந்த உபாயம் சிறிது வெற்றியைத் தந்தது. பஹ்ரீகளை மட்டும் ஷஜருத்துர் உயர்பதவிகளில் அமர்த்தவில்லை என்றும், புர்ஜீகளுக்குங்கூட சமஅந்தஸ்தும் கெளரவமும் அளித்து வந்தாரென்றும் எல்லா மக்களும் பெருமையாக எண்ணிக்கொள்ளும்படி அந்த ராணியார் ஒழுங்கு செய்துவிட்டிருந்தார். மேலும், பஹ்ரீகளை ஷஜருத்துர் அளவுமீறி நேசித்த போதினும் புர்ஜீகளை வெளிப்படையாய்ப் பகைத்துக் கொள்ளாமலே காலங் கடத்தினார்.

அமீர் தாவூதால் வளர்க்கப்பட்ட காரணத்தால் ஷஜருத்துர் புர்ஜீகளையும் நேசிக்கிறாரென்றே எல்லாரும் சாதாரணமாக எண்ணிக் கொண்டார்கள். ஷஜருதுர்ரும் மிக்க சாமர்த்தியமாகவே சகல காரியங்களையும் சாதித்து வந்த படியால், எந்தக் கக்ஷி மம்லூக்குக்கும் அவர்மீது அதிருப்தி ஏற்பட்டதில்லை. ஆனால், சுல்தான் ஸாலிஹ் மரணமடைந்ததை அவர் பரம ரகசியமாக ஒளித்து வைத்ததும் அதற்கு ஒரு பஹ்ரீ மம்லூக்கான ருக்னுத்தீன் முற்றமுற்ற உபகாரமாகவும் ஒத்தாசையாகவும் இருந்து வந்ததும், வெளியானவுடனேதான் அத்தனை புர்ஜீகளுக்கும் ஷஜருத்துர் மீது சொல்லொணாப் பகைமையுணர்ச்சியை மூட்டி விட்டன. ஷஜருத்துர் பஹ்ரீகளையே அளவு கடந்து நேசிக்கிறாரென்றும் புர்ஜீகளை வெறுத்துத்தான் வருகிறாரென்றும் இதுபோது அவர்கள் உணர்ந்து கொண்டு விட்டபடியால், சுல்தானைத் தங்கள் வலையுள்ளே போட்டுக் கொண்டு, பஹ்ரீகளை ஒழித்து, ஷஜருத்துர்ரை நாடு கடத்தி, ஸல்தனத்தையே தாங்கள் கைப்பற்றிக் கொள்ள முடிவுகட்டி விட்டார்கள்.

ஈதெல்லாம் தெரிந்தேதான் ஷஜருத்துர் தம் மாற்றாள் மைந்தரை எச்சரித்தார். ஆனால், மலிக்குல் முஅல்லமின் தலைவிதியும் அவிவேக மதியும் வேறுவிதமாக இருந்தன. ‘கரைப்பவர் கரைத்தால் கல்லுங் கரையும்’ என்றபடி, முஅல்லம் காஹிராவுக்குத் திரும்பி வந்ததிலிருந்தே புர்ஜீகள் நயவஞ்சகமாக அவரை மயக்கி விட்டமையால், ஷஜருத்துர்ரின் பொன்மொழிகளுக்குக் கூடச் செவிசாய்க்க முடியாதவராய்ப் போய் விட்டார். ‘கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே,’ என்பார்களல்லவா?

எனவே, விதி என்னும் சதி இதுபோது பக்ருத்தீனின் உருவத்தில் சுல்தான் மலிக்குல் முஅல்லம்முன் வந்து நின்றது.

பக்ருத்தீன் புன்முறுவல் தவழ்ந்த வதனத்துடனே சுல்தானுக்கு ஸலாம் சொன்னார். சுல்தானும் பதில் ஸலாம் சொல்லிக் கொண்டே பக்ருத்தீனை அமரச் சொன்னார்.

“யா ஸாஹிபல் ஜலாலுல் மலிக்! இதுபோது அவசரமான முக்கிய விஷயமொன்றைத் தங்களிடம் சொல்ல வந்திருக்கிறேன். அதற்குத் தங்கள் அனுமதி கிடைத்தால், வெளியிடுகிறேன்.”

“ஏ, அமீரே ! இந்த ஸல்தனத்தின் நலனொன்றையே பிரதான நோக்கமாய்க் கொண்டுள்ள தாங்கள் என் உத்தரவைப் பெற்றுத்தானா பேச வேண்டும்? தாராளமாய் உம்முடைய உள்ளக் கிடக்கையை இப்போதே சொல்லலாமே! அஃதென்ன அவ்வளவு அவசரமான முக்கிய விஷயமோ?”

பக்ருத்தீன் தம் நெற்றியைச் சொறிந்து கொண்டே சுற்று முற்றும் நோக்கினார். சுல்தானின் ஏவலாட்கள் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தமையால் அமீர் சற்றுத் தயங்குகிறாரென்பதை யூகித்துக்கொண்டு, உடனே அவர்களை அங்கிருந்து வெளியேறி விடுமாறு முஅல்லம் ஆக்ஞாபித்தார். எல்லாரும் அரசு ஆக்கினைப்படி வெளியேறிவிட்டனர். சுல்தானும் பக்ருத்தீனும் மட்டுமே தனித்திருந்தனர்.

“யா சுல்தான்! நாம் இதுவரை ருக்னுத்தீனைப் பற்றியும் அவனுடைய இனத்தவரைப் பற்றியும் என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தோமோ, அது வரவர மிகவும் பெருத்துவிட்டது என்பதை இப்போது யான் உணர்கிறேன். என்னெனின், அந்த லூயீயையும் மற்றக் கிறிஸ்தவக் கைதிகளையும் எப்படியாவது தப்ப விட்டுவிடுவதற்கு பஹ்ரீகள் திட்டமிட்டு வருகிறார்கள். தாங்கள் இன்னம் சிறிது அஜாக்கிரதையாயிருந்தால், குடியே முழுகிவிடுமென்று நாங்கள் பெரிதும் அஞ்சுகிறோம், ஹுஜூர்!” என்று ஒரு பெரிய போடாகப் போட்டார் பக்ருத்தீன்.

“கிறிஸ்தவர்களைத் தப்ப விடுவதற்குத் திட்டமிடுகிறார்களா? எனக்கொன்றும் விளங்கவில்லையே?”

“யா மலிக்! நானென்ன பொய்யா பேசுகிறேன்? நிச்சயமாக, அந்த பஹ்ரீகள் பெரிய துரோகிகளே.”

“துரோகிகள்!” என்று பற்களை நறநறவெனக் கடித்துச் சீறினார் முஅல்லம்.

“யா சுல்தான்! இன்று தாங்கள் அரசவையைக் கலைத்துவிட்டு வந்தவுடனே ஜாஹிர் ருக்னுத்தீனைக் கவனித்தேன். அவனுடைய நடத்தைகளும் முகபாவங்களும் விபரீதமானவையாகத் தோன்றின. உடனே நான் அவனை நெருங்கிச் சிறிது பேசிப்பார்த்தேன்……….. யா மலிக்! அவன் எனக்குச் சொன்ன பதிலைத் தாங்கள் மட்டும் கேட்டிருப்பீர்களேல், இந்நேரம் அவனுயிர் பிரிந்துப் போயிருக்குமே!”

“என்ன சொன்னான் அந்தத் துரோகிப் பயல்?”

“யா மலிக்! என்ன சொன்னானா? ஒரு கோடி பிராங்க் அபராதம் விதிக்கிற தாங்ககள் சுத்த முட்டாளாம்! தாங்கள் போகாத ஊருக்கு வழி சொல்லுகிறீர்களாம்! தாங்கள் அற்பச் சிறுவராம்! இன்னம் ஏதேதோ அவன் உளறுகிறான்!”

“அப்புறம்?”

“சுருக்கிச் சொல்லுமளவில், அந்த ருக்னுத்தீனே, லூயீக்காக வக்காலத்துப் பேசி, அவனையும் அவனுடைய சகோதரக் கைதிகளையும் உடனே விடுதலை செய்துவிடுவானென்று தோன்றுகிறது! தாங்கள் இனியும் அந்த பஹ்ரீயை நம்பி, அவன் கைவசமே கிறிஸ்தவக் கைதிகளை ஒப்படைத்து வைத்திருப்பது அவ்வளவு சிலாக்கியமாய்த் தோன்றவில்லை….. எனவே,…..”

“ஏ, அமீர்! இக்கணமே நீர் சிறையதிகாரியிடம் சென்று, இன்று முதல் பஹ்ரீ மம்லூகோ பஹ்ரீ அமீரோ ஒருவன்கூடச் சிறைக் கூடத்தின் பக்கமே வரக்கூடாதென்று நான் அவசரச் சட்டத்தைப் பிரயோகித்திருப்பதாகத் தெரிவித்துவிடும். இனிமேல் அந்த பஹ்ரீகள் எவரேனும் அப்பக்கம் நடமாடினால் உடனே விசாரணையின்றித் தண்டிக்கப்படுவர் என்பதையும் விளம்பரப்படுத்திவிடும். மேலும், அந்த பஹ்ரீகள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களல்லராகையால், இந்த ஸல்தனத்தின் பிரதானமான பொக்கிஷ சாலை, சிறைக் கூடம், தளவாட அறைகள் முதலியவற்றின் சாவிகளை இக்கணமே எம்மிடம் சேர்ப்பித்துவிட வேண்டுமென்றும் கட்டளையிட்டுவிடும்!… இவ்வளவு தூரத்துக்கும் வற்துவிட்டார்களா, அந்த அயோக்கிய பஹ்ரீகள்?”

பக்ருத்தீன் கைகளைப் பிசைந்து கொண்டும், நயவஞ்சகப் புன்முறுவல் பூத்துக்கொண்டும், எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினார்.

“யா சுல்தான்! பஹ்ரீகளையோ அல்லது ஜாஹிர் ருக்னுத்தீனையோ தாங்கள் நோவதில் பயனில்லையே! எய்பவர் எய்தால் அம்பு என்ன செய்யும்? பஹ்ரீகள் எத்தகைய பொல்லாத அக்கிரமத்தை இழைத்தாலும் ஷஜருத்துர் அம்மையார் அவர்களைக் கோபிக்கவும் மாட்டார்; ஏற்றுக்கொண்டும் பேசுவார் என்று அந்தக் கயவர்கள் உணர்ந்திருக்கின்றமையாலேதான் தங்கள் தலைக்குமேல் பாக்குப் பிடிக்கிறார்கள்…”

“இந்த ஸல்தனத்துக்கு நான் அதிகாரியா? அல்லது அந்தத் துருக்கி தேசத்திலிருந்து ஒண்டவந்த அனாதைப் பிடாரி அதிகாரியா?”

“யா மலிக்! நிஜ தேசபக்தி மிக்க எங்களுக்குத் தெரியும் ஐயூபி வம்சத்தார்களின் நேர்மையைப் பற்றியும், தங்களுக்கே உரித்தான எல்லையற்ற அதிகாரங்களைப் பற்றியும். நேற்று முளைத்த இந்தக் கள்ளப் பயல்களாகிய பஹ்ரீகளுக்கு அவை என்ன தெரியும்? ஏதோ தங்கள் காலஞ்சென்ற தந்தையும் ஷஜருத்துர்ரும் அப் பொல்லாத போக்கிரிகளைப் பரம யோக்கியர்களென்று கருதி, கொஞ்சம் பதவியையும் கொடுத்தார்கள். தேளுக்கு அதிகாரம் கொடுத்தால், பிறகு கேட்கவா வேண்டும்? நிமி­ஷத்துக்கு நிமிஷ­ம் கொட்டாமல் அது வேறு என்ன செய்யும்? சுல்தானாகிய தங்களை அற்பரென்றும் அறிவிலியென்றும் அதுவென்றும் இதுவென்றும் வாய்க்கு வந்தவாறெல்லாம் இழிவுபடக் கூறுவதுடன், இன்றுங்கூட அவ்விதவை ஷஜருத்துர்ரையே அவர்கள் சுல்தானாவாகக் கருதிக்கொண்டு மனம்போன போக்கெல்லாம் நடந்துகொள்கிறார்கள். ராஜ தந்திரம் தெரியாத ஓர் அபலையை எப்படி வேண்டுமானாலும் மயக்கித் திருப்பிவிட முடியுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தாங்கள் கண்விழிப்படைந்துவிட்டீர்கள் என்பதைக் கண்டு, தங்களை முற்றமுற்ற வெறுக்கிறார்கள். யாரையும் நோவதில் பயனில்லை. எல்லாம் கால வித்தியாசம்தான்!”

“என்ன கால வித்தியாசம்? இந்த ராஜ்ஜியத்துக்கு நாம் சுல்தானாய் இருக்கிற வரையில், எந்தப் பயல், அல்லது எந்தச் சிறுக்கி வாலாட்ட முடியும்? நெருப்புடன் விளையாடுகிறார்களோ அந்த பஹ்ரீகள்? நான் முன்னமே நினைத்தேன் இந்தக் கேடுகாலமெல்லாம் விளையுமென்று! இன்னம் சில மாதங்களுக்குள் இந்த நாட்டிலேயே ஒரு பஹ்ரீகூட உயிருடனில்லாமற் செய்யாவிட்டால் நானும் ஒரு சுல்தானா?” என்று கோபாவேசத்துடன் மலிக்குல் முஅல்லம் கொதித்துச் சீறினார்.

“வேறொன்றுமில்லை, சுல்தான்! புர்ஜீகளாகிய நாங்கள் அந்தக் கிறிஸ்தவர்களை எதிர்த்துப் போர்க்களத்திலே கடுமையான யுத்தம் புரிந்து கொண்டிருந்த பொழுது இந்த பஹ்ரீகள் என்ன செய்தார்கள் தெரியுமா? ஷஜருத்துர்ரைச் சூழ்ந்து கொண்டும், அவருக்கு இச்சகம் பேசிக்கொண்டும், கபடத்தனமாக அவ்வம்மையாரைத் தங்களின் துரோக வலைக்குள்ளே போட்டுக்கொண்டும் இருந்தார்கள். ஷஜருத்துர் எவ்வளவோ விவேகமிக்கவர்தாம் என்றாலும் பெண்பிள்ளை தானே?”

“வேடிக்கையாவது? பெரிய வயிற்றெரிச்சலாய் இருக்கிறது! அவர் மட்டும் என் தந்தையின் மனைவியாய் இல்லாமற் போயிருந்தால், இப்போது நடக்கிற விஷயமே வேறாயிருக்கும்!…”

“ஏ அமீர்! இந்தப் பயல்கள் என் சிற்றன்னையை எந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறார்களென்றால், முன்பெல்லாம் அவருக்கிருந்த விவேகம் இப்போது எங்குப்போய் ஒளிந்து கொண்டதென்றே எனக்குத் தெரியவில்லை! சற்று முன்னர்க்கூட அவர் என்னிடம் பேசும்போது, என்றுமில்லாதபடி கண்ட கண்டவாறு ஏசிப்பேசி விட்டார். அவருடைய உபதேசங்களை நான் கேட்கவேண்டுமாம்! பஹ்ரீகளை மட்டுமே நேசிக்க வேண்டுமாம்! புர்ஜீகளைத் திரஸ்கரிக்க வேண்டுமாம்! … ஹா, ஹா, ஹா!”

“யா மலிக்! ஈதென்ன விபரீதமாயிருக்கிறதே! சுல்தானாகிய தாங்கள் ஷஜருத்துர் அம்மையார் சொல்லுகிறபடி ஆடவேண்டுமோ? அப்படியானால், தாங்கள் அதிகாரதைப் பிரயோகிப்பதானாலும் அற்த அம்மையார் இஷ்டப்பட்டால் தான் பிரயோகிக்கலாமோ? நல்ல வேடிக்கையாய் இருக்கிறதே!”

“வேடிக்கையாவது? பெரிய வயிற்றெரிச்சலாய் இருக்கிறது! அவர் மட்டும் என் தந்தையின் மனைவியாய் இல்லாமற் போயிருந்தால், இப்போது நடக்கிற விஷயமே வேறாயிருக்கும்!… ஹும்! இப்போது அதைப்பற்றி என்ன கவலை? பஹ்ரீகளின் வாலை ஒட்ட நறுக்கி விட்டால், என் சிற்றன்னைக்குத் தானே புத்தி வருகிறது…!”

பிறகு மெளனம் நிலவியது. சுல்தான் தம்முடைய ஆத்திரத்தை ஆற்றிக் கொள்வதற்காக எழுந்து, கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு, அந்த அறையில் மேலுங் கீழும் உலாவினார். பக்ருத்தீனோ, கள்ளச் சிரிப்புத் தவழும் தம் வதனத்தை மலிக்குல் முஅல்லத்தை நோக்கி வைத்துக்கொண்டிருந்தார்.

உலாவிக் கொண்டே யிருந்த முஅல்லம் சட்டென்று நின்றார்.

“அமீர் பக்ருத்தீன்! இந்த பஹ்ரீகள் இனி எம்முடைய உயிருக்கும் ஆபத்தை உண்டுபண்ணச் சூழ்ச்சி செய்யலாமாகையால், இன்று முதல் எம்முடைய ஹல்காவில் புர்ஜீ மம்லூக்குகள் மட்டுமே இருக்கு வேண்டும். பஹ்ரீ ஹல்காவை இக்கணமே கலைத்து, எல்லா பஹ்ரீ மம்லூக்குகளையும் அந்தத் தீவுக்கே ஓடிப்போகச் சொல்ல வேண்டும்! இனிமேல் அவர்கள் ராஜீய விஷயத்தில் தலையிடக் கூடாது; இந்த அரண்மனையின் பக்கமும் திரும்பிப் பார்க்கக் கூடாது; இஃது எமது அரசக்கட்டளை. நீர் இங்கிருந்து இப்போதே சென்று இவ்வுத்தரவையும் விளம்பரப்படுத்திவிட வேண்டும் – என்ன தெரிகிறதா?” என்று வாலிப முறுக்கால் ஏற்படும் விபரீத தொனியில் முன்பின் யோசியாது பேசினார் குஞ்சு சுல்தான் முஅல்லம்.

இந்தக் கட்டத்தையே எட்டவேண்டுமென்று இத்தனை நாட்களாகப் பொறுமையுடன் பெருஞ் சூழ்ச்சி செய்துவந்த அக் கிழ அமீருக்கு, சுல்தானின் கடைசிச் சொற்களைக்கேட்டதும், தேன் குடித்த நரியே போல் துள்ளிக் குதித்தார். பொங்கிய சந்தோஷத்தால் அவர் சட்டென்றெழுத்து, குனிந்து ஸலாம் போட்டுவிட்டு, விர்ரென்று வெளியேறினார்.

ஆனால், சுல்தானுக்கும் பக்ருத்தீனுக்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணையின் ஒவ்வொரு சொல்லையும் பஹ்ரீ தலைவர் ஜாஹிர் ருக்னுத்தீன் அந்த அறையிலேயே உள்ள பெரிய முதுமக்கட்டாழி போன்ற மண் உழலுக்கேள்ளே ஒளிந்திருந்து நன்றாய்க் கேட்டுக்கொண்டிருந்தார் என்பதை வேறு எவருமே அறிய மாட்டார்.

மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்து சுமார் கால்மணி நேரம் சென்றதும், சுல்தான் முஅல்லம் அவ் வறையிலிருந்து வெளியேறினார். எல்லாச் சந்தடியும் அடங்கிய பின்னர் ருக்னுத்தீன் அந்தப் பெரிய உமல்தாழியிலிருந்து மெல்ல வெளியில் எட்டிப்பார்த்தார். அங்கு வேறெருவரும் இல்லை என்பதை அவர் நிச்சயப்படுத்திக் கொண்டதும், வெளியே இறங்கி வந்தார். அவருடைய முகத் தோற்றமும் பார்வையும் அதிபயங்கரமாய் இருந்தன. ஆத்திரத்தால் ஏற்பட்ட நெஞ்சத் துடிப்பால் அவருடைய மார்பு படபடத்துக்கொண்டிருந்தது. நாசித் துவாரங்கள் விரிந்து கோபக் கனலைக் கக்கிக்கொண்டிருந்தன. அவருடைய வாய் ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது. பிறகு எதையோ நினைத்துக் கொண்டவர்போல் சுற்று முற்றும் பார்த்து விட்டு, நேரே ஷஜருத்துர் அமர்ந்திருந்த அறைக்குள் போய்ச் சேர்ந்தார்.

கணவரைப் பிரிந்த காரிகையொருத்தி நான்கு மாதமும் பத்து நாட்களும் வேறெவர் வதனத்திலும் விழிக்காமல், ஒரு முலையில் காத்துக் கிடக்கவேண்டுமென்பது முஸ்லிம்களுக்கு இடப்பட்டிருக்கும் ஷரீஅத் சட்டமாகும். எனவே, ஸாலிஹ் காலஞ் சென்று இன்னம் அந்தக் குறிப்பிட்ட தவணை எல்லை முடிவடையாமையால், ஷஜருத்துர் ‘இத்தா’ என்னும் அந்தக் காத்திருத்தலை முடித்துக் கொள்ளாமல் மூலையிலிருந்தார். நியாயமாய்ப் பார்ககப்போனால், சுல்தான் ஸாலிஹ் உயிர் துறந்த மறு நிமிஷ முதலே ஷஜருத்துர் அந்த இத்தாவில் இருந்திருத்தல் வேண்டும். ஆனால், அரசியல் அவசர நிலையை உத்தேசித்துக் கணவரின் மரணத்தை அவர் மறைக்க நேர்ந்தமையால், ருக்னுத்தீனுடனும் பிற ஆடவர்களுடனும் சகஜமாகப் பழகியே வந்திருக்கிற ரென்பதை நீங்கள் அறிந்தேயிருக்கிறீர்கள். ஆயினும். தூரான்ஷா திரும்பி வந்த பின்னர் ஸாலிஹின் பிரேதவடக்கம் நடந்து மடிந்ததும், இத்தாவுக்குள் ஷஜருத்துர் முடங்கிக்கிடந்தார். இப்படி அவர் இத்தா காத்ததும் சம்பிரதாயத்துக்காகவேயாதலால், ருக்னுத்தீன் அவ்வம்மையாரைப் பார்த்துச் சில சமயங்களில் முக்கிய விஷயங்களைப்பற்றிச் சம்பாஷித்தேயிருக்கிறார். எனவே, இன்று சுல்தானுக்கும் பக்ருத்தீனுக்கு இடையே நடந்த சம்பாஷணையை ஒளிந்திருந்து கேட்ட ருக்னுத்தீன் அவசரமாக ஷஜருத்துர்ரைக் கண்டு பேச விரைந்து ஏகினார்.

சற்று முன்னர்த் தம்மிடம் சிறு பிள்ளைத்தனமாகவும் பொறுப்பற்ற விதமாகவும் நன்றி கெட்ட துரோக வார்த்தைகளுடனும் வாதாடிச் சென்ற முஅல்லமைப் பற்றியே சிந்தித்துச் சிந்தித்து ஷஜருத்துர் வாடி வதங்கிக்கொண்டிருந்த வேளையில் அவரெதிரே ருக்னுத்தீன் திடுமென்று வந்து நின்றதைக்கண்டு, அதிசயித்துப் போயினார். சோபையற்றுப் பொலிவிழந்து, மாமை நிறம் குன்றி வெளுத்துப்போயிருந்த ஷஜருத்துர்ரின் முகத்தை உற்று நோக்கிய வண்ணம் ருக்னுத்தீன் வெறிக்கப் பார்த்தார்.

“யா உம்மு கலீல்! தாங்களும் காலஞ் சென்ற சுல்தான் மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபியும் நாயினுங் கடையேனாகிய அடியேனுக்கு உப்பிட்டு வந்தமைக்காக இன்றளவும் யான் இந்த ஸல்தனத்துக்கு மிகவும் நன்றியறிதல் உள்ளவனாகவே இருந்து வந்திருக்கிறேன் என்பதற்கு அந்த அல்லாஹூத்தஆலாவே சாட்சியாய் இருக்கிறான். அஃதே போல், இனிமேல் – இந்த நிமிஷ முதல், இதே ஸல்தனத்தின் சுல்தானாகத் தன்னை அழைத்துக் கொள்ளும் ஓர் அற்பப் பதரை நான் அடியுடன் அழித்தொழிக்காமல் இருக்கப் போவதில்லை என்பதற்கும் அதே ஆண்டவனே சாட்சியிருக்கிறான் என்பதைத் தாங்கள் மறந்துவிடவேண்டாம்!” என்று ருக்னுத்தீன் நிதானமாகவும் ஒவ்வொரு வார்த்தையாகவும் உச்சரித்தார். ஆனால், அச் சொற்கள் எவ்வளவு மனக் கசப்புடன் கூடிய உள்ளத்தினின்று உதித்துப் பிறந்தனவென்பதையும் ஷஜருத்துர் நன்கு ஓர்ந்து கொண்டார்.

“ருக்னுத்தீன்! ஏன் இன்று இவ்வளளவு மனக் கசப்புடன் பேசுகிறீர்? இப்போது அப்படிப்பட்ட பெரிய விபரீதம் என்ன நிகழ்ந்து விட்டது?” என்று ஷஜருத்துர் பைய வினவினார்.

“என்ன பெரிய விபரீதம் நிகழ்ந்து விட்டதென்றா தாங்கள் வினவுகின்றீர்கள்? வேறொன்றும் பிரமாதமில்லை. இந்த உலகம் உற்பத்தியானதிலிருந்து இன்று வரை வேறெவருமே செய்யத் துணிந்திராத மாபெரும் துரோக மிக்க சதியைத் தங்கள் கணவரின் புத்திரன் செய்யத் துணிந்துவிட்டான். இனியும் யான் எப்படிச் சும்மா இருக்க முடியும் ?”

“சதி செய்கிறானா?”

“சதியில்லை – சதியாலோசனை செய்கிறான் !  எப்படிப்பட்ட சதியாலோசனை தெரியுமா? கேட்பவருள்ளம் இடிந்து தவிடுபொடியாகிவிடத் தக்க சதியாலோசனை; கைகொடுத்துக் காப்பாற்றியவரின் கழுத்தை அறுக்கும் சதியாலோசனை; ஸல்தனத்தைச் சம்பாதித்துக் கொடுத்தவரின் தலைமேலே பாறங்கல்லைத் தூக்கிப்போடும் பரமநீசச் சதியாலோசனை; அன்னமிட்ட வீட்டிலே கன்னமிட்டுக் கொலை புரியும் கொடிய சதியாலோசனை…” என்று ருக்னுத்தீன் மூச்சுவிடாமல் அடுக்கினார்.

ஷஜருத்துர் மெய் சோர்ந்தார்; மனம் மறுகினார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

Image source: http://wulfgnar.deviantart.com

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>

Related Articles

Leave a Comment