முற்கூறிய சம்பவம் நிகழ்ந்து ஒருவாரம் கழிந்ததும், மீட்டும் அந்த யுத்த குற்றவாளிகளின் விஷயம் பரிசீலனைக்கு வந்தது. அதற்கிடையில் அரசாங்க சம்மந்தமான ஏணை வியவகாரங்கள் பைசல் செயயப்பட்டன. அவையெல்லாம் ஒருவாறு முடிந்தவுடன், இப்போது இரண்டாம் முறையாக லூயீயும்

ஏனைக் கைதிகளும் அரசவையிலே கொணர்ந்து நிறுத்தப்பட்டார்கள். தங்களுக்கு எந்த விதமான விபரீத தண்டனையை அந்த முரட்டு முஸ்லிம்கள் வழங்கப் போகின்றனரோ என்னும் மாபெரிய ஏக்கத்தின் காரணமாக இக் கைதிகள் முகம் வாடியிருந்ததுடன், துரும்பாய் இளைத்துப்போயும் காணப்பட்டார்கள். தூக்கு மேடைக்குக் கொண்டு செல்லப்படும் கொலைக் குற்றவாளியின் நெஞ்சம் படுகிற பாட்டையே இவர்களும் பட்டுவந்தார்கள் எனல் வேண்டும்.

“ஏ குற்றவாளிகளே! உங்களுக்கெல்லாம் தண்டனையை விதிக்கு முன்னர் நாம் மீண்டும் ஒரு தருணம் தருகின்றோம். இப்போதாவது உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? அல்லது திரும்பத் திரும்ப ‘நிரபராதிகளே’ என்று தான் பிடிவாதமாய்ச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்களா? சென்ற ஒருவாரமாக நீங்கள் எல்லாவற்றையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்து, குற்றத்தை ஏற்றுக்கொள்ளச் சித்தமாய் இருக்கிறீர்களல்லவா?” என்று சுல்தான் முஅல்லம் மெல்லக் கேட்டார்.

“பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவின் பரிசுத்த ராஜ்ஜியத்துக்காக நாங்கள் இழைத்த எதையுமே குற்றமென்று ஏற்றுக்கொள்ளச் சித்தமாய் இல்லை. எனினும், நீங்கள் என்ன தண்டனையை எங்களுக்கு வழங்கினாலும் இயேசுவின் நாமத்தால் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறோம்!”என்று லுயீ பளிச்சென்று பதில் கூறினார்.

“ரிதா பிரான்ஸ்! நீங்களெல்லீரும் இழைத்திருக்கிற மபெருங் குற்றங்களுக்கு என்ன தண்டனை, தெரியுமா?”

“மிஞ்சி மிஞ்சிப் போனால், எங்களுடைய சிரங்களை வெட்டி வீழ்த்துவீர்கள். அவ்வளவு தானே? அதை ஏற்க நாங்கள் சித்தமாயே இருக்கிறோம்!”

“ரிதா பிரான்ஸ்! ஐரோப்பியரைப் போன்ற அநாகரிகம் பிடித்த ஜாதியர்களாகவா எங்களை நீர் கருதிக்கொண்டீர்? உங்களுடைய சிரங்களைச் சேதிப்பதால் நாங்கள் என்ன பிரயோஜனத்தைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம்? சிரச்சேதம் செய்வதொன்றே எதிரிகளைத் திருத்தும் சரியான வழியென்று நாம் கருதியிருக்கவில்லை. எதிரிகள் மாட்டு அன்புடனும் பக்ஷத்துடனும் நடந்து கொள்ள வேண்டுமென்று வலியறுத்திப் பிரசாரம் புரிந்து, இஸ்லாத்தை இத் தரணியில் நிலைநிறுத்திச் சென்ற இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டை அடியொற்றிப் பின்பற்றும் உண்மை மூமின்களாகிய நாங்கள், உங்களெல்லீரையும் போல் கயமையாக நடந்துகொள்வோமென்றா நீர் நினைக்கத் துணிந்துவிட்டீர்? இல்லை, இல்லை! முக்காலுமில்லை! நுங்களை எல்லாம் மன்னிப்பதற்காகவே நாம் இந்த அரியாசனத்தின்மீது அமர்ந்திருக்கிறோமன்றி, கொலை புரிவதற்காக அன்று. முஸ்லிம் குடிமக்கள் நுங்கள் கரத்திடைச் சிக்கினால், நிச்சயமாக நீங்கள் அவ்விதம் கொலைத் தண்டனையை வழங்குவீர்கள். ஆனால் எங்களிடம் இறுதிநபி முஹம்மதைப் (ஸல்) பின்பற்றும் எங்கள் வயம் சிக்கிக்கொண்ட நீங்கள் இறுதிவரை கண்ணியமாகவே நடாத்தப்படுவீர்கள்!”

இந்தச் சற்றும் எதிர்பாராத பெருந்தன்மை மிக்க சொற்களைக் கேட்டதும், லூயீயும் அவருடைய சகாக்களும் அதிசயமிக்கவர்களாய்ப் போய்த் தரையிலே சிரங் குனிந்தவர்களாய் வேரூன்றி நின்று விட்டார்கள். என்னெனின், குற்றப் பத்திரிக்கை வாசிக்கப்பெற்ற அன்றிலிருந்து சென்ற ஒருவாரமாகவே தாங்கள் சிரச்சேதம் என்னும் இறுதித் தண்டனையையே பெற்றுக்கொள்ளப் போவதாகவே எண்ணியெண்ணி வெம்பி வெய்துயிர்த்த அவர்கள் இந்தக் காருண்ய மிக்க இனிய சொற்களைக் கேட்டதும், தங்கள் செவிகளையே நம்ப முடியாதபடி ஆச்சரியமுற்று விட்டார்கள். தூக்குமேடை வரையில் இழுத்துச் செல்லப்பட்ட கொலைக் குற்றவாளி திடீரென்று விடுதலை பெற்றுக்கொண்டால், அவன் எங்ஙனம் துள்ளி மகிழ்வானோ, அங்ஙனமே அக் கைதிகளும் உள்ளத்துடிப்பால் நிலைகுலைந்து போயினார்கள்.

“ரிதா பிரான்ஸ்! நாம் பேசுகிற வார்த்தைகளை நீர் நம்பாமல் சந்தேகிக்கிறீரென்றும், அல்லது கபடமாக நாம் பேசுகிறோமோ வென்று நீர் கருதுகிறீரென்றும் உமது முகத்தோற்றத்திலிருந்து யூகிக்கின்றோம். சென்ற காலத்தைச் சற்றே சீர்தூக்கிப் பாரும். எங்கள் ஐயூபி வம்ச சுல்தான்களுள் எவரேனும் எந்தச் சிலுவை யுத்தக்காரனையேனும் எப்போதாவது பழிவாங்கியதாக நீவிர் கேள்வியுற்றிருக்கின்றீரா? எம் மூதாதயரான ஆதிலோ, அல்லது காமிலோ, அல்லது ஸலாஹுத்தீனையோ, எப்படிப்பட்ட வி­ஷமியான கிறிஸ்தவர் மீதுமே பழிவாங்கியதில்லையே?* இங்ஙனமிருக்க, நீர் எம்முடைய வார்த்தைகளில் வீண் சந்தேகம் கொள்வானேன்? எம் முன்னோர்களைவிட, இந்த உதார குணத்தில் யாம் சற்றேனும் பின்னிடைந்து விடுவோமென்றா நீர் ஐயுறுகின்றீர்? அல்லாஹ்வின்மீது ஆணையாக! உங்களுள் ஒருவர் உயிரைக்கூட நாம் கவரப்போவதில்லை. உயிருடனேயே உங்களையெல்லாம் விட்டுவிடப் போகின்றோம். இறைவனது கோபத்துக்கு ஆளான நீங்கள் அந்த இறைவனிடமேதான் உரிய தண்டனைகளைப் பெறவேண்டுமன்றி, அவற்றை நாம் வழங்குவதற்கு உரிமைபெற்றில்லை. உங்களையெல்லாம் மன்னித்து விட்டுவிடுவது என்னும் பெருந்தன்மையைப் பிரயோகிக்க மட்டுமே நாம் உரிமை பெற்றிருக்கிறோம். எனவே, ஒன்றுக்கும் அஞ்சாதீர்கள். உங்கள் உயிர் உங்களை விட்டு எம்மால் பறிக்கப்படமாட்டாது! தங்களுடைய ஜன்ம சத்துருக்களை எல்லாம் சீயென்று கூடக் கூறாது, அடியுடன் மன்னித்துவிட்ட முஹம்மது நபியைப் (ஸல்) பின்பற்றி ஒழுகும் உண்மை மூமின்கள் நாங்கள் எனபது மட்டும் உங்கள் நினைவிலிருக்கட்டும்.”

கண்ணீர் மல்கிய கண்களை லூயீ மன்னர் உயர்த்தி, சுல்தானைக் கூர்ந்து நோக்கினார். பண்ணாத அக்கிரமமெல்லாம் பண்ணி, இல்லாத இடையூறுகளையெல்லாம் இழைத்து, பொல்லாத பாடெல்லாம் படுத்தி, இறுதியிலே போர்க்களத்தில் பெரிய தோல்வியையும் பெற்றுக்கொண்டு, மிகவும் பயங்கரமான கொலைத் தண்டனையை எதிர்பார்த்து நின்ற லூயீ மன்னருக்கு இந்த விசித்திரமான வார்த்தைகள் உள்ளக் கிளர்ச்சியை உண்டுபண்ணி விட்டன. உயிருக்கு அபாயமில்லை என்ற உறுதியைவிட, மன்னிப்புக் கிடைத்துவிட்டதே என்னும் பெருமிதமே லூயீயின் எஃகைப் போன்ற கடின ஹிருதயத்தை மெழுகே போல் இளக உருக்கி விட்டது. துக்கம் தொண்டையை அடைக்க, துயரம் நெஞ்சை அழுத்த, அவர் இன்னது பேசுவதென்று தோன்றாமல் திகைத்து நின்றார். கண்களில் பெருகிய அவலக் கண்ணீர் அருவியாய்ப் பொங்கிக் கன்னங்களில் வழிந்து, தாடி ரோமங்களின் வழியே இழிந்து கொண்டிருந்தது.

“என்ன யோசிக்கிறீர்? நீரும் நும்முடைய படையில் அடங்கிய ஐம்பதினாயிரம் கிறிஸ்தவர்களும் இழைத்த அத்தனை கொடுமைகளையும் நாம் மன்னித்தே விட்டோம் என்பதை மீட்டும் உறுத்திக் கூறுகிறோம். ஆனால், இப்போதாவது நீங்கள் நுங்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டு பச்சாத்தாபப் படுவீர்கள் என்று நம்புகிறோம். என்ன, ரிதா பிரான்ஸ்! கொடுமையான யுத்தக் குற்றங்களை நீர் புரிந்ததை இப்போதாவது ஏற்றுக்கொள்கிறீரா?”

“ஏ சுல்தான்! எம்மீது குற்றத்தைச் சுமத்துகிறீர்; பின்னர் மன்னித்து விட்டதாகக் கூறுகிறீர். அதற்கப்பாலும் குற்றத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லுகிறீர். ஒன்றும் புலனாக வில்லையே?”என்று லூயீ தொண்டையைக் கனைத்துக்கொண்டு மந்தணமான தொனியில் மொழியலுற்றார்.

“வாஸ்தவந்தான்! நீர் உம்முடைய குற்றத்தை ஒத்துக்கொள்ளாத நிலையில் நாம் எப்படி மன்னிப்பது? முதலில் நீர் உமது தவற்றை ஏற்றுக்கொண்ட பின்னரேயன்றோ நாம் தீர்ப்புக்கூற
முடியும்?”

“அப்படியானால், இந்தச் சிலுவை யத்தத்தை நான் ஏற்று நடத்தியது குற்றமென்றே வைத்துக் கொள்வோமே!”

“குற்றமென்று வைத்துக் கொள்வதாவது? இதில் இன்னமும் சந்தேகம் இருக்கிறதோ?”

“சரி ! குற்றமென்றே யான் ஏற்றுக் கொள்கிறேன்,” என்று சட்டென்று சுருக்கமாக விடையீந்தார் சிறைவர் லூயீ.

“அப்படியானால், அத்தகைய மாபெருங் குற்றத்தை நாம் மன்னித்துவிடத் தயாராய் இருக்கிறோம். ஆனால், அப்படி நாம் மன்னிப்பதற்கு நீர் என்ன ஈட்டுப்பரிகாரம் கொடுக்க வேண்டும், தெரியுமா?”

“ஈட்டுப் பரிகாரமா? யானோ, இங்கே கைதியாக நிறுத்தப்பட்டிருக்கிறேன். என்னுடைய எல்லாப் பொருள்களையும், என் வாளுட்பட எல்லாவற்றையும் முன்னமே நீங்கள் பறிமுதல் செய்துகொண்டு விட்டீர்கள். இந்நிலையில் இன்னம் என்ன பரிகாரங்களை என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்?”

சுல்தான் முஅல்லம் இடிஇடி என்று சிரித்தார்.

ஏ கிறிஸ்தவ முனிவரே! உமக்கு எங்கள் தீனுல் இஸ்லாத்தின் அரிய கொள்கைகளைப்பற்றி ஒன்றுமே தெரியாது. எங்கள் மதச் சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறது தெரியுமா?

“ஏ கிறிஸ்தவ முனிவரே! உமக்கு எங்கள் தீனுல் இஸ்லாத்தின் அரிய கொள்கைகளைப்பற்றி ஒன்றுமே தெரியாது. எங்கள் மதச் சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறது தெரியுமா? ‘கொலை போன்ற பெரும் பாதகச் செயலை ஒருவன் செய்துவிட்டால், அதனால் பாதிக்கப்பட்டவன் அந்த இழக்கப்பட்ட உயிருக்கு ஈடாக அக் கொலையாளியின் உயிரையும் கேட்கலாம்; அல்லது உதிரக் கிரயமாக வேறு பொருள்களாகவும் அக் குற்றவாளியிடமிருந்து நஷ்டஈடு பெற்றுக் கொள்ளலாம்’ என்றே எமது சட்டம் இயம்புகிறது. எனவே, உம்முடைய அத்தனை கொலைகளுக்கும் ஈடாக உமது உயிரை வாங்குவதால் எங்களுக்கு எத்தகைய பிரயோஜனமும் விளையப்போவதில்லை. அதற்குப் பதிலாக உமக்கு அபராதம் விதித்து, அதனால் கிடைக்கிற தொகையைக் கொண்டு, உயிரிழக்க நேர்ந்தவர்களின் குடும்பத்தை நாம் காப்பாற்ற உறுதி பூண்டுள்ளோம். ஆதலால், நாம் உமக்கு நியாயமாக விதிக்கிற அபராதங்களை நீர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”

“என்ன அபராதம்?”

“அதைத்தானே நாமும் யோசித்துக் கொண்டிருக்கிறோம்! ஆனால், அபராதத்தை நாம் நிர்ணயிப்பததற்கு உம்முடைய சில பதில்கள் தேவைப் படுகின்றனவே?”

“கேளுங்கள்; எனககுத் தெரிந்தவற்றைச் சொல்லுகிறேன்.”

“ஜெரூஸலத்தைக் கைப்பற்றப் போவதற்காகப் படை திரட்டிய நீர் அங்கே செல்லாமல், இந்த மிஸ்ர் நோக்கி ஏன் வந்தீர்?”

“ஏ சுல்தான்! யுத்த தந்திரக் கொள்கைகளுக்கு அர்த்தம் கற்பிக்க முடியுமா?”

“சரி! அதை யுத்த தந்திரமென்று வைத்துக் கொள்வோம். தமீதாவை ஏன் அழித்தீர்கள்?”

“நாங்கள் ஒன்றையும் அழிக்கவில்லையே! தமீதாவுக்குள் நாங்கள் காலடி எடுத்து வைத்தபோது, ஒருவர்கூட எங்களைத் தடுத்து நிறுத்தவில்லை; அல்லது எதிர்த்துப் போரிடவுமில்லை. எனவே, நாங்கள் அந் நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டோம். அவ்வளவேதான்.”

“ஜெரூஸலத்துக்கு ஈடாக நீங்கள் தமீதாவைக் கைப்பற்றவில்லை அல்லவா?”

“இல்லை.”

“அப்படியானால், அந் நகரை நீங்கள் இப்பொழுது விட்டுவிட வேண்டுமல்லவா?”

எட்டாவது சிலவை யுத்தத்தின் பெயரால் லுயீ சம்பாதித்த ஒரே ஒரு பொருள் அந்த தமீதாதான். அந்த ஒரே வெற்றியையும் இக்கணமே மறுபேச்சின்றி விட்டுவிட வேண்டுமென்றால், அந்தப் பேராசை பிடித்த பிரெஞ்சு மன்னருக்கு எப்படி இருந்திருக்கும்? வாய்மூடி மெளனியாய் நின்றார்.

“ஏன் பேச மறுக்கின்றீர்? தமீதாவை எங்களுககுத் திருப்பிக் கொடுத்து விடுகிறீரல்லவா?” என்று முஅல்லம் மீட்டும் வினவினார்.

அரை மனத்துடனும் அவமானத்துடனும் லூயீ சரியென்று தந் தலையை அசைத்தார்.

“அப்படியானால், அந் நகரத்தில் நீர் எங்கள் மஸ்ஜித்களை எல்லாம் மாதா கோவில்களாக மாற்றியிருப்பதை நாம் மீட்டும் மஸ்ஜித்களாகச் செய்து விடுவதில் உமக்கு ஆக்ஷேபமில்லையல்லவா?”

“அப்படியானால், தமீதாவில் ஒரு மாதா கோவில்கூட இல்லாமற் செய்துவிடப் போகிறீர்களோ?”

“ரிதா பிரானஸ்! ஏன் இப்படி விபரீதமாக வாது புரிகிறீர்? தொன்று தொட்டு நிலவி வருகிற யூத, கிறிஸ்தவ வணக்க ஸ்தலங்களை நாங்கள் எப்போதுமே அழித்ததுமில்லை, அல்லது மஸ்ஜித்களாக மாற்றியதுமில்லையே! முஸ்லிம்கள், சன்னியாசி மடாலயங்களையும் மாதா கோவில்களையும் யூத ஜபாலயங்களையும் தாங்களே முன்னின்று காப்பாற்றிக் கொடுக்கக் கட்டுப்பட்டுள்ளார்கள்; இஃது எங்கள் வேதக் கட்டளை. ஆகவே, தமீதாவில் முன்பிருந்த அத்தனை வணக்க ஸ்தலங்களும் பழைய நிலைக்குத் திருப்பிக் கொண்டுவரப்பட வேண்டுமென்று மட்டுமே நாம் கவலைப்படுகிறோமன்றி, நீர் நினைக்கிற விபரீதங்களை நாம் புரிய எண்ணவில்லை.”

லூயீ பேசாமல் மரத்துப்போய் நின்றார்.

உடனே அரசாவையின் இலேகர் கொறுக்காந் தட்டைப் பேனாவையும் கடுதாசியையும் கொண்டு வந்தார். தமீதாவைக் கிறிஸ்தவர்கள் உடனே காலி செய்துவிட வேண்டுமென்றும் அங்கு இவர்களால் இழைக்கப்பட்ட பொருள் நஷ்டங்கள் ஈடு செய்யப்பட வேண்டுமென்றும் வரையப்பட்டன. லூயீ மிக்க மனக் கசப்புடனே அப் பத்திரத்தில் கையொப்பமிட்டார்.

இதுவரை கால்கடுக்க நின்ற லூயீ ஆசனமொன்றில் அமர்த்தப் பட்டார். இதேபோல் அவருடைய சகாக்களும் அமர்ந்தார்கள். இனி அப்பால் மேற்கொண்ட பேசசு வார்த்தைகள் நிகழ்த்தப்பட்டன.

“ரிதா பிரான்ஸ்! தமீதாவை-அஃதாவது, எங்களுக்கே உரிய சொத்தாகிய தமீதாவை நாங்கள் பெற்றுக் கொண்டது சரிதான். ஆனால், இன்னம் ஒரு முக்கிய விஷயம் மட்டும் எஞ்சி நிற்கிறதல்லவா? – அதுதான் நீரும் உம்முடைய இனத்தவரும் விடுதலை பெறுதற்கான ஈட்டுக் கிரயமாகும் – அதற்கென்ன சொல்லுகிறீர்?”

“அதுதான் முன்னமே சொன்னேனே! எல்லாப் பொருளையும் இழந்து சிறைவனாக இங்கே நிற்கிற என்னிடம் ஒரு செப்புக்காசும் இல்லையே! யான் எங்கிருந்து எதைக் கொடுக்கப் போகிறேன்?”

“உம் கையில் தற்போது பணமில்லை என்பதை நாங்கள் எல்லோரும் நன்கறிவோம். எனினும், உம்முடைய ராஜ்ஜியத்திலும் உம்முடைய விடுதலையைக் கோருகிறவர்கள் கையிலும் இந்த ஸல்தனத்து முழுமையுமே விலைகொடுத்து வாங்கக்கூடிய அவ்வளவு தங்கம் இருக்கிறதென்பதை நாம் நன்கறிவோம். எனவே, நீர் இங்கிருந்து சுயேச்சையடைந்து வெளியேற வேண்டுமென்றால், அவர்களுக்குச் செய்தி சொல்லியனுப்பி, நாம் கோருகிற அபராதத்தை முற்றும் செலுத்தி, அதன் பின்னரே விடுதலை பெறமுடியும். என்ன சொல்லுகிறீர்?”

லூயீ தாடியைத் தடவிக்கொண்டே மேலுங்கீழும் நோக்கினார். “ஸல்தனத்தையே வாங்கக்கூடிய அவ்வளவு தங்கம்” ஐரோப்பியர்களிடம் இருப்பதாக முஅல்லம் கூறியதால், கோடிக்கணக்கில் அநத அபராதத் தொகை நிர்ணயக்கப்படும் போலுமென்று லூயீ மனத்தடுமாற்றம் உற்றபடியால், தீரத் தெளிய யோசித்தார்.

“அந்த அபராதத் தொகை எவ்வளவென்று நீங்கள் கணித்திருக்கிறீர்கள்?”என்று லூயீ இறுதியாக மெல்ல வினவினார்.

சுல்தான் தம்முடைய வஜீர்களையம் பிரதானிகளையும் நோக்கினார். சில முக்கியஸ்தர்களைத் தம்மருகில் கூப்பிட்டுக் காதோடு காதாக ஏதேதோ குசுகுசுவென்று பேசினார். இப்படியாகச் சில நிமிஷங்கள் கழிந்ததும், அவர் மெதுவாகத் தலையசைத்துக்கொண்டு, லூயீயை நோட்டமிட்டார்.

““ஏ, ரிதா பிரான்ஸ்! உங்களெல்லீரின் விடுதலைக்கும் ஒரு மொத்தக் கிரயமாக ஒரு தொகையை நாம் இதுபோது நிர்ணயித்து விட்டோம். நீங்களெல்லீரும் எமக்கும் எம் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வளவோ கணக்கிலடங்காப் பெரு நஷ்டத்தை விளைத்திருந்தும், நாம் அதற்கெல்லாம் தனித்தனியாகக் கணக்கிடாமல், மொத்தமாக ஒரு தொகையை நிர்ணயித்து இருக்கிறோம். அது மிகவும் நியாயமான தொகையாகும். என்ன, தெரியுமா?””

“அஃதென்ன தொகையோ?”

“நீர் இக்கணமே ஒரு கோடி பிராங்க் உங்கள் நாணயக் கணக்கிலே எங்களுக்கு அபராதமாகச் செலுத்த வேண்டும்!”

“ஒ…ரு…கோ…டி….யா!”என்று லூயீ தம் விழி பிதுங்கப் பிளந்த வாயை மூடவே இல்லை!

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

 

படம்: By El Greco

 


* பிரிட்டிஷ் சர்வ வித்தியாகோசம் (Encyclopaedia Britannica) என்னும் மாபெரிய கிரந்தத்தின் 14-ஆம் பதிப்பில், “சிலுவை யுத்தங்கள்” என்னும் கட்டுரையிலே கீழ்க்கண்ட வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் நீங்கள் கண்டுகொள்ளலாம்:- “முற்ற முற்ற ஐயூபிகள் எப்போதுமே எதிரிகள்மாட்டு வீரத்துடனும் விட்டுக்கொடுக்கும் தன்மையுடனுமே இருந்தார்கள். கிறிஸ்தவர்கள்மீது ஸலாஹுத்தீனோ, அவர் சந்ததியார்களான ஆதிலும் காமிலுமோ தீராப் பகையோ வெறுப்போ எப்போதுமே கொண்டிருக்கவில்லை.” எதிரிகளைக் கொல்வதைவிட அவர்களை மன்னிப்பதே மகா சீர்திருத்தமுறை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

 


 

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>

Related Articles

Leave a Comment