ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் அடங்கிய அரை உலகத்தின் நடுமத்தியில் அடங்கிக் கிடக்கிறது அரபு நாட்டுத் தீபகற்பம். 12 லட்சம் சதுர மைல் பரப்புள்ள இந்நாட்டின் மூன்றிலொரு பகுதி வெறும் பாலைவனமாகும். மெச்சிப் பாராட்டத்தக்க ஆறு

எதுவுமே இங்கே கிடையாது. அரேபியா பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றுதான் ஹிஜாஸ் என்னும் மாநிலமாகும். இங்கேதான் ‘பாதுகாக்கப்பட்ட பரிசுத்த தலம்’ என்று பொருள்படும் ‘ஹரம்’ என்னும் வட்டம் அமைந்துள்ளது. மனித நினைவுக்கு அப்பாற்பட்ட மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தப் பரிசுத்த தலவட்டாரத்துக்குள் எவரும் எவரும் எந்தவிதச் சச்சரவும் போராட்டமும் நிகழ்ததத் தகாது என்னும் தடை விதி பேணிக் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது. அத்துணைப் பரிசுத்தமிக்க தலம் அது. அங்கேதான் கஅபா என்னும் புனித ஆலயமும் இருக்கிறது. மக்கா, மதீனா போன்ற நகர்களும் ஹிஜாஸிலேதான் உள்ளன.

ஹிஜாஸுக்கு அடுத்தபடியாக விளங்கும் மற்றொரு மாநிலம் எமன் என்று அழைக்கப்படுகிறது. இது அரேபியா தீபகற்பத்தின் தென்பகுதியில் இருக்கிறது. முழு அரேபியாவிலும் வளப்பமிக்க பூபாகம் இதுவே. இங்கேதன் நாகரிகம் வளர்ச்சி பெற்றிருந்தது. மிகப் பழங்கால் நாகரிகச் சின்னங்களாகிய பெருங் கட்டிடங்களின் இடிபாடுகள் இன்றும் இங்கே காணப்படுகின்றன. விவசாயத்துக்கு ஏற்ற நிலப்பரப்புகள் இங்குண்டு. உலோகங்கள், கெம்புக் கற்கள், நறுமணக் கறிமசாலாப் பண்டங்கள் முதலிய பொருள்களின் வர்த்தகங்களும் இங்கேயே நடந்து வந்தன. எமனுக்கு அடுத்த தரத்தில் விளங்கும் மாநிலங்கள் நஜ்து, உம்மான் என்பனவாம்.

இவ்வாறான பரந்த நிலப்பரப்பில் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை நாடோடிகளான கூட்டத்தினர் பலர் வசித்து வந்தனர். பொதுவாக இந்த நாடோதடிகள் ‘பதவீகள்’ (Bedouin) என்று அழைக்கப்படுவர். ஈரநைப்பு இல்லாத வரட்சிமிக்க பரந்த மணற்பாலை வெளியில் அவர்கள் தங்கள் ஆடு, ஒட்டகம், குதிரை முதலியவற்றை நடத்தி, எங்கெங்குப் புல்வெளி தென்படுகின்றதோ அங்கெல்லாம் திரிந்து வந்த காரணத்தால் நாடோடிகளாக விளங்கியதில் வியப்பில்லை. எனவே, கட்டுக்கோப்பான சமுதாயமோ, நிரந்தரக் குடியிருப்புப் பெற்ற மக்களினமோ எவ்விடத்திலும் நிலையாயிருந்ததில்லை. நகரங்களிலிருந்தவர்களும் வாணிபத்தின் நிமித்தம் எங்கெங்கும் அலைந்து வந்தனர். இவற்றால் விளைந்த முடிவு என்னவென்றால்: நாட்டில் சட்டமில்லை; மக்களிடைக் கட்டுப்பாடில்லை; அரசு என்று ஏதுமில்லை. அவனவனும் தன்தன் விருப்பம்போல் நடந்து கொண்டான். சில சமயங்களில் அந்த நாடோடிகள் தனித்தனிக் குழுவினராகச் செயல்பட்டு, வலாத்காரத்தை ஆயுதமாகக் கொண்டே வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் தலைவன் இருப்பான். அவனும் மாநிலமெங்கும் முழு அதிகாரத்தைச் செலுத்தும் வல்லமை பெற்றிருந்ததில்லை.

மிக அற்பக் காரணமாக, அல்லது இன்னதுதான் காரணமென்றே கண்டறிய முடியாத நிலையில் ஒரு குழுவினருக்கும் மற்றொரு குழுவினருக்கும் இடையே பகைமை தோன்றிவிடும்

மிக அற்பக் காரணமாக, அல்லது இன்னதுதான் காரணமென்றே கண்டறிய முடியாத நிலையில் ஒரு குழுவினருக்கும் மற்றொரு குழுவினருக்கும் இடையே பகைமை தோன்றிவிடும்; அல்லது சச்சரவு மூண்டுவிடும். இவ்வாறு ஆரம்பித்த புகைச்சல் பெரும் போராக உருவெடுத்து, தொடர்ந்து பல ஆண்டுகள் வரை, தலைமுறை தலைமுறையாக நீடித்துப் பல்லாயிரக்கணக்கான தலைகள் துணிக்கப்படும்; பெண்கள் கற்பழிக்கப்படுவர்; தீவிபத்துகள் சூழ்ந்துவிடும்; கொள்ளைகளும் படுகொலைகளும் தலைவிரித்தாடும்; குழப்பமும் கூச்சலும் கட்டுக்கடங்காமல் போய்விடும். அடிமைகள் பெருகுவர்; உணவுப் பண்டங்கள் சீரழியும்; உடைமைகள் நாசமாகிவிடும்; அரக்கத்தனம் தாண்டவமாடும். அமைதியான காலங்களில் கூட அந்நாட்டில் ஒரு விசித்திரமான சூழ்நிலை நிலவுவதுண்டு. அதாவது, பாலைவனக் காட்டின் நடுவில் தனிக் கூடாரம் ஒன்றில் தங்கியிருக்கும் ஒரு ஷெய்கிடம் (கண்ணிய புருஷன்) எவனாவது தஞ்சம் புகுந்தால், அந்த ஷெய்கு இவனுக்கு முழு ஆதரவும் தருவான்; உண்ண உணவளிப்பான்; சகலவிதமான பாதுகாப்பும் நல்குவான். ஆனால், அதே சமயத்தில் அந்த ஷெய்கு வெளியிற் சென்று வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபடுவான்; கொலைக்கு அஞ்சமாட்டான். பல நிரபராதிகள் அவனுடைய வெறித்தனத்துக்கு அநியாயமாய்ப் பலியாகி விடுவர்.

வேளாண்மை முதலிய எத்தொழிலும் உருவாக முடியாத சூழ்நிலை காரணமாக, அவனவனும் சூது விளையாடுவதிலும், குதிரைப் பந்தயங்களிலும் பொழுதைக் கழிப்பான். மது அருந்துவதில் அந்த அராபியர்கள் இணையற்ற பெருங் குடிகாரர்களாக இலங்கினார்கள். மது வெறியும் சூதாட்டமும் அவர்களுடைய அறிவைப் பறித்துப் பாதி விலங்குகளாக மாற்றிவிடவே, பெண்கள் அம் முரடர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி, காமவெறி தீர்த்துக் கொள்ளும் கருவிகளாக நடத்தப்பட்டனர். ஒருவன் இத்தனை  மனைவிகளைத்தான் மணக்கலாம் என்னும் உச்சவரம்பு ஏதுமில்லை. அல்லது இத்தனை வைப்பாட்டிகளைத்தான் வைத்திருக்கலாம் என்னும் நியதியில்லை. பெண்களுக்குக் கற்பு என்று ஒன்றுண்டு என்னும் கவலையும் எவனுக்கும் இருந்ததில்லை. அனேக முரடர்கள் ஆயிரக்கணக்கில் ஆசை நாயகிகளை அனுபவிப்பார்கள்; அதே சமயத்தில் அவர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளும் நோக்கத்துடன் அந்த ஆசை நாயகிகளையே வியபிசாரத்தில ஈடுபடுத்துவார்கள். ஒரு தகப்பன் விட்டுச்செல்லும் சொத்துக்களுக்கு வாரிசாக விளங்கும் மைந்தன், தன்னைப் பெற்ற தாயல்லாத மற்ற அத்தனை மாற்றாந் தாய்களையும் தன்னுடைய மனைவிகளாக அல்லது வைப்பாட்டிகளாக ஆக்கிக் கொண்டு விடுவான். எக்காரணம் பற்றியும் ஒரு பெண் தன்னுடைய கணவனின் சொத்திலிருந்தோ அல்லது தன் தந்தை, சகோதரன் முதலியோரின் சொத்திலிருந்தோ ஒரு காசும் உரிமையாகப் பெறமுடியாது. தேய்ந்துபோன பழைய செருப்பைக் கழற்றி யெறிந்துவிட்டு வேறு புதுக் காலணியை அணிவதே போன்றுதான் ஒவ்வொருவனும் தன் தன் காதலியிடம் நடந்துகொள்வான்.

பெண்கள் இவ்வாறு சீரழிவதைக் காணும் எவன் தான் ஒரு மகளைப் பெற விரும்புவான்? எனவே, அவனவனும் நிரம்ப ஆண் மக்களையே பெற்றுக்கொள்ள விரும்புவானன்றி, பெண் மகவு வேண்டுமென்று கொஞ்சமும் விரும்பமாட்டான். தன்னுடைய மனைவி ஒரு மகளைப் பெற்றாள் என்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் கணவன் தனது முகத்தில் முக்காடிட்டுத் தேம்பி தேம்பி அழுவான்; தலைமறைவாய் வாழ முற்படுவான்; மிகவும் போக்கிரியான, நெஞ்சில் ஈரமிலாதவனோ மணலைத் தோணடி அப்பெண் சிசுவை உயிருடன் புதைத்து விடுவான். தனக்கொரு மகள் பிறக்கவே கூடாது என்னும் வெறுப்புணர்ச்சி அக்கால அராபியர்களிடையே எந்த அளவுக்கு நிலவி வந்த தென்பதற்கு இரு சான்றுகள் போதும். ஒன்று, கருவுற்ற தன் மனைவியை விட்டு வர்த்தகத்தினிமித்தம் வெளியூர் செல்கிற கணவன் அவளுக்கொரு கட்டளையிட்டுச் செல்வான். அதாவது, அவள் கருவுயிர்க்கிற நேரம் வந்ததும் ஆழமான குழியொன்றை மணலில் பறித்து, அக்குழிக்கெதிரே பிரசவிக்க வேண்டும். பிறக்கும் சிசு ஆணாயிருந்தால், உடனே அதனை எடுத்துச் சீராட்டிப் பாராட்டிப் பாதுகாக்க வேண்டும்; பெண்ணாயிருந்தாலோ அதே நொடியில் அச்சிசுவைக் குழியுள் தள்ளிப் புதைத்துவிட வேண்டும்!

மற்றோர் எடுத்துக் காட்டை வரலாறு விட்டுச் சென்றிருக்கிறது. அதாவது, இவ்வாறு கட்டளையிட்டுச் சென்ற கணவன் திரும்பி வருமுன் மனைவி ஒரு மகளைப் பெற்றாள். அது எத்துணை அழகாகவும் கவர்ச்சி மிக்கதாகவும் விளங்கிற்றென்றால், தாயானவள் அதைக் கொல்ல விரும்பாமல் அண்டை வீட்டாரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னாள். திரும்பி வந்த கணவனுக்கு இது தெரியாது. அடுத்த வீட்டில் வளர்ந்த சிறுமி எட்டு வயது நிரம்புமுன் எவ்வளவு எழிலுடனும் அறிவுக் கூர்மையுடனும் கவர்ச்சிமிக்க எடுப்பான தோற்றத்துடனும் திகழ்ந்தாளென்றால், அவள் தன்னுடைய மகள்தான் என்பது தெரியாமலே அவன் அவள்மீது கொள்ளைப் பிரியமும் கரிசனமும் கொண்டு விட்டான். தன் கணவனுக்கு இப் பெண் குழந்தைமீது இயற்கையான இப்படிப்பட்ட பாசம் ஊற்றெடுத்துப் பெருகிவிட்டதே என்று களிப்புற்ற மனைவி உண்மையைக் கக்கி விட்டாள். “இவ்வளவு அழகான புத்திசாலிக் குழந்தையை நான் அன்றைக்கே புதைத்து விட்டிருந்தால் இப்பொழுது இப்படி நீங்கள் மகிழ முடியுமா? இதுவரை அடுத்த வீட்டுக்காரரின் குழந்தை இது என்று கொஞ்சி மகிழ்ந்தீர்கள். இனி அவ்வாறு இரவலாகக் கொஞ்ச வேண்டியதில்லை. இது நாம் பெற்ற பாக்கியசாலி. இனி இங்கேயே நாம் வைத்து ஆசை தீர மகிழலாம்!”

இந்தச் செய்தியைக் கேட்ட கணவன் இடியுண்ட நாகமேபோல ஆகிவிட்டான். சில நாட்களில் அக் குழந்தையைத் தனியே ஒரு திறந்த வெளிக்கு அழைத்துச் சென்றான். அங்கே மணலில் குழிபறித்தான். ஒன்று மறியாத சிறுமி அவனுடைய செயலை ஆர்வத்தோடு கவனித்தாள். குழிபறிப்பதால் எழும் மணல் துளிகள் அவனடைய தாடி ரோமத்தில் படிவதைக்கூட அந்நிரபராதியான சிறுமி தட்டித் துடைத்துவிட்டாள். “ஏன் இந்தக் குழி பறிக்கிறீர்கள்?” என்று ஆவலுடன் அவனை அவள் கேட்டாள். அதே கணத்தில் அவளைக் குப்புறத் தள்ளி அவன் அக்குழியுள் போட்டுப் புதைத்துவிட்டான். தான் பெண் பெற்ற பாவம் நீங்கிப் புனிதமாகிவிட்ட பெருந் திருப்தியுடன் வீடு திரும்பினான் அக்காதகன். (இந்த வரலாற்றைப் பின்னொரு காலத்தில் இவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கழிவிரக்கத்துடன் சொல்லி யழுததையும் அதைக் கேட்டு நபி பெருமானார் கண்ணீர் விட்டுப் பெருவேதனை யடைந்ததையும் ஹதீது நூல்களில் நாம் படிக்கும்போது நெஞ்சம் பாகாயுருகி விடுவதை உணரலாம்.)

அராபியர்கள் பெண்களை வெறுத்து வந்த அதே சமயத்தில், தாங்கள் வழிபட்டு வந்த அத்தனை தெய்வங்களையும் பெண் தேவதைகளாகவே கொண்டிருந்தனர்.

அராபியர்கள் பெண்களை வெறுத்து வந்த அதே சமயத்தில், தாங்கள் வழிபட்டு வந்த அத்தனை தெய்வங்களையும் பெண் தேவதைகளாகவே கொண்டிருந்தனர். எண்ணிலடங்காத அத்தனை சாமிகளும் பெண்களே! அம் மக்கள் ஏன் இப்படிப்பட்ட விபரீத முரண்பாட்டைக் கடைப்பிடித்தனர் என்பது புரியவில்லை. ஒருவனாக இலங்கும் இறைவன் உலகின் அத்தனை கருமங்களையும் தனியே பராமரிக்க முடியாதாகையால், அவன் பல பெண்களைப் பெற்று, அவர்களைத் தேவதைகளாக்கி உலகில் பரிபாலனம் செய்ய நியமித்துவிட்டிருக்கிறான் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

எனவே, எந்த எந்தத் துறையை எவ்வெத் தேவதை கண்காணிக்கிறது என்று அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்களோ அவ்வத் தேவதைக்கும் அவ்வச் சமயத்தில் பூஜை, நைவேத்தியம் செய்வார்கள்; உயிர்ப்பலி இடுவார்கள்; நரபலியும் கொடுப்பார்கள். தாங்கள் வழிபடும் தேவதைகளுக்கென்று தனியான ஆலயம் என்று ஒன்று இருக்க வேண்டுமென்பதில்லை. கல்லோ, கட்டையோ, மணல் மேடோ, குழி விழுந்த பாறையோ அல்லது ஒரு பட்டுப் போன மரமோ —எது கண்ணெதிரில் தென்பட்டாலும் போதும். அதுவே ஒரு தேவதையாகிவிடும். எதுவும் அகப்படவில்லை யென்றால், திறந்த வெளியில் செல்லும்போது மணலைச் சிலர் குவிப்பார்கள். அவ்வாறு குவிக்கப்பட்ட மணல் காற்றில் அடிபட்டுக் கலைந்து விடாமல் பெண்ணொட்டகத்தின் முலைக் காம்பிலிருந்து பாலைப் பீய்ச்சி அதைக் கெட்டிப்படுத்துவார்கள். பிறகு அம் மணல் திட்டைத் தேவதை என்று கும்பிடுவார்கள். இன்னம் சிலர் தங்களுடன் எடுத்துச் செல்லும் அடுப்புக் கூட்டும் மூன்று கற்களுள் ஒன்றை எடுத்து நட்டேகூட அதைப் பூசிப்பார்கள்.

நாளொன்றுக்கு ஒரு தேவதை என்று 360 சாமிகளை அவர்கள் வழிபட்டு வந்ததுடன், கொள்ளை நோய்கள் வந்து விட்டால் அப்பொழுதுக்கென்று புதுத் தேவதைகள் முளைத்துவிடும். சூரியன், சந்திரன், உடுக்குலங்கள், பறவைகள், விலங்குகள், மரங்கள் முதலிய அனைத்தும் கூடத் தெய்வங்களென்று அவர்களால் வழிபடப்பட்டன. ஒரு சாமிக்கு அபசாரம் செய்துவிட்டால் மற்றொரு சாமியிடம் முறையிட்டுப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. சாமிப் பூஜை வளர வளரப் பூசாரி இனமும் புரோகிதர் இனமும் தாமே வளர்ந்தன. சில சமயங்களில் சாமிக்குச் செலுத்தப்பட்ட பக்தியைவிட, பூசாரி புரோகிதர்களுக்கு வழங்கப்பட்ட பக்தி வழிபாடு மிகைத்துவிடும். மடயர்களான மக்கள் மேலும் அறிவிழந்த மாக்களாக்கப்பட்டனர்.

தெய்வ நம்பிக்கையுள்ள ஆத்திகர்களின் போக்கு இதுவென்றால், கடவுளே கிடையாது என்று சாதித்த நாத்திகர்களைப் பற்றி என்ன சொல்லக் கிடக்கிறது! மனிதனுக்கு ஆத்மா உண்டென்றேனும் அவனவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு இறை நியதித் தண்டனை அல்லது வெகுமதி கிடைக்கு மென்றேனும் அந்த நாத்திகர்கள் கிஞ்சித்தும் கருதியதில்லை. அவர்கள், மதம் என்பது ஒரு பரிகசிக்கத்தக்க கோட்பாடு என்று நினைத்தார்கள். எந்தத் தேவதைகளை அவர்கள் கண்கண்ட தெய்வமாகப் போற்றி வணங்கி வந்தார்களோ, அதே தேவதைகளை எட்டி உதைத்துத் தள்ளுவதிலும் சில ஆத்திர்கள் பின் வாங்கியதில்லை.

ஒரு கீர்த்தி மிக்க பாவலர் இருந்தார். இம்ரா உல் கைஸ் என்று அவர் அழைக்கப்பட்டார். அவருடைய தந்தையைச் சிலர் கொன்றுவிட்டார்கள். அந்தக் கொலைக்கு ஈடாகத் தம் எதிரிகள்மீது பழிக்குப்பழி நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்று தடுமாறிய உள்ளத்துடன் அவர் தம் இஷ்ட தேவதையிடம் சென்று குறிபார்த்தார். அந்தக் காலத்தில் அராபியர் தேவதைகளின் அனுமதி உண்டா இல்லையா என்பதைக் கண்டறிய மூன்று அம்புகளையும் வில்லையும் எடுத்துச் சென்று சன்னிதியில் நின்று கும்பிட்டு, கண்களை மூடித் தியானித்தபடி வானம் நோக்கி அம்பை எய்வார்கள். ஓர் அம்பில் ‘சரியே!’ என்று பொறித்திருக்கும்; மற்றொன்றில் ‘சரியில்லை; கூடாது’ என்று பொறித்திருக்கும்; மூன்றாவது அம்பில் ஒன்றும் பொறித்திராது. மூடிய கண்ணுடன் பறக்க விடப்பட்ட அம்பு சாமி எதிரே வந்து வீழ்ந்ததும் அந்தப் பக்தன் அதை எடுத்துப் பார்ப்பான். அனுமதியளிக்கும் அம்பு வந்து வீழ்ந்திருந்தால் தனது எண்ணத்தை நிறைவேற்ற முற்படுவான்; அனுமதி மறுக்கும் அம்பு என்றால், கைவிடுவான்; ஆனால், வெற்றம்பு வந்து வீழ்ந்தால் மறுமுறை அம்பு எய்வான். இம்ரா உல் கைஸ் என்னும் புலவர் அதே முறையைப் பின்பற்றி அம்பு எய்தார். அவர் மும்முறை முயன்றும், ஒவ்வொரு தடவையும் ‘கூடாது’ என்று தடை விதிக்கும் அம்பே வந்து விழுந்தது. கவிஞருக்குக் கோபம் பொத்துக் கொண்டுவிட்டது. ‘ஏ பாழாய்ப் போன மூதேவியே! உன்னுடைய அப்பனை எவனாவது கொலை புரிந்திருந்தால் அன்றோ உனக்கந்த வேதனை புரியும்? என் அப்பனுக்கெதிராகப் பழி வாங்கக்கூடாதென்று தடுக்கும் நீயும் ஒரு சாமியா!” என்று ஆவேசத்துடன் அலறி, அவர் பிடித்திருந்த வில்லை அச்சிலைமீது வீசித் தகர்த்தெறிந்தார்!

அக்கால அராபியர் சமுதாயத்தில் கல்வியறிவு மிகக் குறைவு. எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் தொகையே எங்கும் அதிகம். பரந்த பாலைவனத்தில் எங்கோ ஒரு மூலையில் சிறு சோலைகள் காணப்படுவதேபோல், எவனாவது ஒருவன் எழத்தறிவுள்ளவனாக விளங்குவான். அவன் பெரும்பாலும் ஒரு பாடகனாகவோ அல்லது கவிஞனாகவோ இருப்பான். அவனது வாயிலிருந்து உதிரும் சொற்கள் எதுகை மோனை நயங்களுடன் நல்ல யாப்புடன் விளங்கும். ஆனாலும், அவ்வாறு இயற்றப்படும் இனிய கவிதைகளும் பாடல்களும் கொஞ்சமேனும் அறிவுக்கு விருந்தூட்டுவனவாகவோ, தத்துவம் பொதிந்தனவாகவோ, அல்லது நல்லொழுக்கம் கற்பிப்பனவாகவோ இருந்ததில்லை. கேவலம் சிற்றின்பக் கெளிக்கைகளும் மதுரச மகிமையும் குதிரைகளின் பெருமையும் கொள்ளையிடுவதன் இன்பமும் கொலை புரிவதன் கலைகளும் சூதாட்டத்தனி மகத்துவமும் மட்டுமே சொன்னயம் சொட்டச் சொட்ட அப்பாடல்களில் ஒலிக்கும். குடித்துக் கூத்தடித்துக் கும்மாளமிடும் கயவர்களுக்கு அப் பாட்டுக்கள் பக்க வாத்தியமாக அமைவதோடு சரி. எந்த விதமான ஆசாரமும் நல்வழியும் நீதிநெறியும் அவற்றில் யாக்கப்பட்டதில்லை. எனவே, ஏற்கெனவே போதை யூட்டப் பெற்ற புத்தியை மேலும் லாகிரி மிக்கதாக மழுங்கச் செய்யவெ கவிஞர்கள் தம் திறமையைக் காட்டினார்களன்றி, சிதைவுற்ற சமுதாயத்தைச் சீர்திருத்தும் நற்போதனையை வழங்க எப் பண்டிதனும் முன் வந்ததில்லை.

நீண்ட நெடிய மரங்கள் வளர்ந்து நெருங்கி அடர்ந்த காட்டின் கடும் இருட்டில் நிலம் சதுசதுப்பாயிருக்கும்; சூரிய ஒளி இலைச் செறிவினூடே உட்புகாது; உயிருக்கு ஆபத்து உண்டுபண்ணும், ஊர்வனவும் ஓடுவனவுமான உயிரினங்கள் அங்கே பதுங்கி வாழும்; தப்பித் தவறி உட்புகுந்தவனுக்குக் கண்ணும் தெரியாது, திரும்பி வரும் மார்க்கமும் புலப்படாது. அவன் உயிருடன் தப்பிப் பிழைப்பானா என்பதே சந்தேகம். இந்த உபமானத்தையேதான் அக்கால அந்தகார அரபு நாட்டுக்குப் பொருந்திக் காட்டலாம். குருடனுக்கு வழிப்பாதை தெரியாது; ஆனால், அவன் கையில் ஓர் ஊன்றுகோலை நீட்டிவிட்டால் அதன் துணையைக் கொண்டு அவன் வழி நடப்பான். அந்தகார் அரபுமக்கள் கண்ணிருந்தும் குரடராகித் திரிந்தாரகள்; காரிருள் சூழ்ந்த கும்மிருட்டில் திகைத்து நின்றார்கள். அக் குருடர்களுக்குத் தேவைப் பட்டதோ ஓர் ஊன்று கோல். கண்ணிருந்தும் பார்க்க முடியாமல் கும்மிருட்டுக் காட்டிடை நின்றார் போலிருந்த அவர்களுக்கு இன்றியமையாது தேவைப்பட்டதோ ஓர் ஒளிச் சுடர். குருடர்க்குக் கண் வழங்கிக் கும்மிருட்டில் ஒளி புகுத்தி மாயா ஜால மந்திர வித்தைபோல் 23 ஆண்டுகளுக்குள் பேரற்புதத்தை விளைத்த பெருந்தகையாளரைப் பற்றித்தான் இனி நீங்கள் படித்துப் பரவசமடையப் போகிறீர்கள்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

 

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>

Related Articles

Leave a Comment