நபியவர்கள் தமது பிரசாரத்தைத் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆயின. அப்பொழுது அவர்கள் பொருட்டாக எதையும் தியாகம் செய்யத் தயாராயிருந்த ஐம்பது தோழர்கள் அவருக்குப் பக்க பலமாக நின்றார்கள். மக்காவாசிகள் எத்துணைக்கெத்துணை மூர்க்கமாகப்
புது மதத்தை எதிர்த்தார்களோ அத்துணைக்கத்துணை இப் புதிய முஸ்லிம்களிடையே சகோதர ஒற்றுமையும் ஐக்கியமும் வளர்ந்தன. சீக்கிரமே வேறு சிலரும் சிறுகச் சிறுக இஸ்லாத்தின்மீது நேசம் பாராட்டி முஸ்லிம்களாக மாறி வந்தார்கள். குறைஷிகளோ புதுப்புது விதமான உபத்திரவங்களையும் சித்திரவதைகளையும் உற்பத்தி செய்வது பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருந்தார்கள். தம்முடைய பரம விரோதிக்குச் சிறு ஊறு விளைந்தாலும் அதைக் காணச் சகியாத நபிபெருமானவர்கள், தமது போதனையைச் செவியேற்று ஏக இறைவனின்மீது நம்பிக்கை கொள்ளும் நல்லாடியர்கள் எதிரிகளிடம் பெறும் கொடிய இம்சைகளை எப்படிச் சகிப்பார்கள்?
ஒருநாள் நபியவர்கள் அந் நல்லடியார்களை ஒன்று கூட்டினார்கள். “இந்தக் குறைஷிகள் உங்களுக்கு இழைத்து வரும் கொடுமைகளின் குரூரம் நாள்தோறும் அளவு மீறிக் கொண்டே செல்வதை நான் காண்கிறேன். துஷ்டனைக் கண்டால் தூர விலக வேண்டும் என்பதே நியதி. எனவே, நீங்கள் எல்லாரும் இங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டு, ஒரு பத்திரமான இடத்துக்குச் சென்று பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லாரும் சேர்ந்து என்னுடன் இடுக்கண் அனுபவித்தது போதும். நான் இனித் தனித்து நின்று இந்த எதிரிகளின் சேஷ்டைகளைச் சமாளித்துக் கொள்கிறேன். இனியும் நீங்கள் எவரும் சித்திரவதைக்கு இரையாகாமலிருந்தால், அதுவே போதும். என்னுடன் இறைவனிருக்கிறான். எனவே, எப்படிப்பட்ட விரோதியையும் என்னால் மடக்கிவிட முடியும். எனது பொருட்டாக நீங்கள் கவலையுறத் தேவையில்லை. அண்மையில் அபிஸீனியா (எத்தியோப்பியா) என்றொரு நாடு உள்ளது. அங்கே எவரும் அநீதி இழைக்கப்படுவதில்லை. ஏனென்றால், அங்கே நெறிமுறையான நீதி செலுத்தும் மன்னரொருவர் ஆட்சிப் பீடத்தின்மீது அமர்ந்து அரசாட்சி செய்து வருகிறார். நீங்கள் யாவரும் தற்சமயம் இங்கிருந்து புறப்பட்டு அங்குச் சென்று புகலிடம் தேடிக் கொள்ளுங்கள். இது ஒரு தாத்காலிகமான பிரிவுதான். அல்லாஹ் சீக்கிரமே ஒரு நல்வழியைக் காண்பிப்பான். அப்போது எல்லா உபத்திரவங்களும் பனிபோல் நீங்கிவிடும்.” இவ்வாறு நபியவர்கள் யோசனை வழங்கினார்கள்.
எது வருவதாயிருப்பினும் நபியை விட்டுப் பிரிவதே கூடாது என்றே எல்லாம் முஸ்லிம்களும் சற்றுப் பின்வாங்கினார்கள். ஆனால், குர்ஆன் திருவாக்கியங்கள் நபி இடும் கட்டளைக்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது; முரண்பட நடக்கக்கூடாது என்று முஸ்லிம்களுக்கு உறுதியான ஆணையிட்டிருப்பதை அவர்கள் நினைவு கூர்ந்து தவித்தார்கள். அப்பொழுது நபியவர்கள் தம் சீடர்களுள் பதினொரு நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்; அவர்களுக்கு உதுமான் (ரலி) என்னும் தம் மருமகரையே தலைவராக நியமித்து, தம் மகள் ருகையாவையும் (ரலி) சேர்த்து, “புறப்படுங்கள், அபிஸீனியாவை நோக்கி!” என்று கட்டளையிட்டார்கள். அந்த ஆண்டு (கி.பி. 615) ரஜப் மாதத்தில் அவர்கள் 11 பேரும் மக்காவைவிட்டுப் புறப்பட்டு விட்டார்கள். சிலர் வாகனங்களிலும் சிலர் கால்நடையாக நடந்தும் கரையை எட்டினார்கள். படகிலேறிக் கடல் கடந்து அவர்கள் பத்திரமாய் அபிஸீனியாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.
அப்பொழுது அந் நாட்டின் மன்னராக விளங்கியவர் நஜ்ஜாஷி (நீகஸ்) என்பவராவார். இவரொரு கிறிஸ்தவர். இவருடைய குடிமக்கள் யாவரும் கிறிஸ்தவர்களே. இந்தப் பத்திரமான இடத்துக்கு வந்த முஸ்லிம்கள் சற்றே மூச்சுவிட்டு நிம்மதியனுபவித்தனர். முஸ்லிம்களின் இந்த முதல் வெளியேற்றம் இஸ்லாமிய சரித்திர ஏடுகளில் முஹாஜராத் என்று குறிப்பிடப்படுகிறது. இவர்கள் அபிஸீனியாவில் சென்று பத்திரமாக இருப்பது தெரிந்து, சீக்கிரமே மக்காவிலிருந்து அடுத்தடுத்துப் பலரும் வெளியேறி இந் நாட்டுக்கு ஓடி வந்தனர். 83 ஆண்களும் 18 பெண்களும் இப்போது இக் கிறித்தவ நாட்டில் வந்து குடிபுகுந்து விட்டார்கள்.
|
முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து வெளிநாட்டுக்குச் சென்று அங்கே அடைக்கலம் புகுந்துவிட்டார்கள் என்பதைக் குறைஷிகள் தெரிந்துகொண்டார்கள். ‘பீடைகள் ஒழிந்த மட்டில் அதுவே நிம்மதி’ என்று அவர்கள் கருதவில்லை; மாறாக, அன்னிய நாட்டுக்குச் சென்றிருக்கும் புது மதத்தினர் அங்கிருப்பவர்களையும் அங்கத்தினர்களாக்கி மேலும் வலுப் பெற்றுவிட்டால் பேராபத்து விளையுமே என்று கலக்கமுற்றார்கள். அபூஜஹலும் மற்றுமுள்ள தலைவர்களும் ஒன்று கூடினர். “என்ன! நம்முடைய பண்டைய மதத்தைத் தீர்த்துக்கட்ட அபிஸீனியாவில் ஒரு கோட்டையா?” என்று அவர்கள் ஆத்திரமுற்றார்கள். ‘இங்கிருந்து ஒரு தூதுக் குழுவை அங்கனுப்பி, அத் துரோகிகளைக் காட்டு விலங்கை வேட்டையாடுவதுபோல் பிடித்திழுத்து வரவேண்டும்,’ என்று முடிவு கட்டினார்கள். அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆ, அம்ரிப்னுல்-ஆஸ் என்னும் இரண்டு முரட்டுப் பேர்வழிகளை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்; ஏராளமான பொன்னும் பொருளும் வெகுமதியாக அவ்விருவருக்கும் வழங்கினார்கள்.
“நீங்கள் இப்போதே புறப்பட்டு நஜ்ஜாஷி மன்னரின் சமுகத்தில் சென்று முறையிட்டுக் கொள்ளுங்கள். எப்படியாவது அவரை மயக்கி, அவரிடமிருந்து துரோகிகளைப் பிரித்து, கையோடு இங்கே கொணர்ந்து சேருங்கள். அவர்களை வாணலியிலிட்டுப் பொரிப்பதற்கு நாங்கள் இதற்கிடையில் எண்ணெயைக் கொதிக்க வைக்கிறோம்,” என்று அபூஜஹல் அவ்விரு தூதர்களிடமும் கூறினான்.
இவ்விரண்டு கிங்கரர்களும் மிகவிரைவில் அந் நாட்டுக்குச் சென்று சேர்ந்தார்கள். அங்கு வாழ்ந்துவரும் புரோகிதர்களையும் மதத் தலைவர்களையும் மற்றும் பிஷப் முதலியவர்களையும் முதலாவதாக இவர்கள் வசப்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டார்கள். “எங்கள் நாட்டிலிருந்து அழிச்சாட்டியம் பண்ணிவந்த இந்தப் புரட்சிக்காரர்கள் உங்கள் கிறித்து மதத்துக்கேகூட எதிர்ப்புக் கோஷமிட்டு வந்தார்கள். இவர்கள் புதுமையைப் புகுத்துவதாகப் பொய் பேசி, நம்முடைய பூர்விக மதக் கோட்பாட்டையே கேலி செய்து வருகிறார்கள். நம் முன்னோர்களெல்லாம் வடிகட்டிய முட்டாள்களாம்! அவர்களைப் பின்பற்றும் நாமெல்லாரும் அறிவிலிகளாம்! இந்தப் போக்கிரிகள் மட்டும் பரம உத்தமர்களாம்! இவர்கள் மக்களினத்துக்கு வழிகாட்டி, சுவர்க்கத்தின் பாதையை திறந்துவிட முற்பட்டிருக்கிறார்களாம்! இவ்வாறு ஏய்த்துத் திரியும் எத்தர்களை நீங்கள் எப்படி உங்களிடையே நிம்மதியாக வைத்து வாழ முடியும்? மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டீர்களே! உண்மையை எடுத்துச் சொல்லி உங்கள் மன்னரை நீங்கள் எச்சரித்துவிட வேண்டாமா? செத்த எலியை வாலைப் பிடித்துத் தூக்கி எறிகிற வேகத்தில் நீங்கள் செயல்பட வேண்டாமா?” என்று இந்த இரு தூதர்களும் தூபமிட்டார்கள். பணிகாரத்தைப் பக்குவமாய் வேக வைப்பதற்குக் கொஞ்சம் ஆப்ப சோடாத் தூளைச் சேர்ப்பதுபோல், அவ்வத் தலைவர்களுக்கும் தக்கமுறையில் வெகுமதிப் பொருள்களையும் பொற் காசுகளையும் பரிசாக (லஞ்சமாக) நீட்டினார்கள்!
குறைஷித் தூதர்களின் கபடத் திட்டம் கைம்மேல் பலனைப் பெற்றுக் கொண்டது. மன்னருடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்த பாதிரிகள், பிஷப்புகள் மற்றுமுள்ள புரோகிதர்கள் எப்படியோ நஜ்ஜாஷியிடம் கோள் பற்றவைத்து, குறைஷித் தலைவர்கள் அனுப்பியுள்ள தூதர்களுக்கு அவர் நேர்முகப் பேட்டியளிக்குமாறு ஒரு வாய்ப்பை உண்டுபண்ணித் தந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் அரசரின் அத்தாணி மண்டப நீதிமன்றத்தில் இரண்டு குறைஷித் தூதுவர்களும் வந்த சேர்ந்தார்கள். மன்னர் அதே நேரத்தில் முஸ்லிம்களின் சார்பான பிரதிநிதிகளையும் அங்கு வரவழைத்திருந்தார். அப்பொழுது அம்ரிப்னுல்-ஆஸ் என்னும் குறைஷித் தூதர் மன்னரை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டிப் பணிவுடன் வணங்கி, அரச தர்பாருக்குரிய நெறிமுறை வழுவாமல் பல ஒழுங்கு முறைகளை நிறைவேற்றினார்.
“மன்னர் பெருமானே! நாங்கள் மிகவும் அமைதியுடன் அண்டை நாடாம் அரேபியாவில் வாழும் சமாதான விரும்பிகள். எங்கள் சமுதாய அமைப்பு ஒரு கட்டுக்கோப்புடன் விளங்கி வருகிறது. நாங்கள் மற்றவரின் மதக் கோட்பாடுகளில் தலையிடாமல், தொன்றுதொட்டு எங்கள் முன்னோர் பின்பற்றிவரும் வழிபாட்டு முறைகளை அனுஷ்டித்து வருகிறோம். பிறர் மதத்தை ஏசுவதில்லை; பரிகசிப்பதில்லை. எம் மதமும் சம்மதமென்று வாழ்ந்து வரும் எங்களிடையே சில புல்லுருவிகள் முளைத்து விட்டன. அவற்றைக் களைந்து நசுக்கி எறிய நாங்கள் முற்பட்ட நேரத்தில் அத் துரோகிகள் கபடத்தனமாக எங்களைவிட்டு ஓடிவந்து இங்கே அடைக்கலம் புகுந்து விட்டார்கள். கிறித்து மதத்தையே கிண்டல் செய்கிற இப்படிப்பட்ட விஷமிகளுக்கு மாட்சிமை மிக்க மன்னர் பெருமானாகிய தாங்கள் மிகவும் கண்ணியத்துடன் பாதுகாப்பு வழங்கி வருகிறீர்கள். இது உங்களுடைய பெருந்தன்மையையும் உங்கள் மத ஸ்தாபகர் கற்றுத் தந்திருக்கும் நேச உடன்பாட்டுச் சகிப்புத் தன்மையும் காண்பிக்கின்றது. நாங்கள் இப்போது உங்களிடம் வேறொன்றும் கேட்கவில்லை. இங்கு ஓடி வந்திருக்கிறவர்கள் எங்கள் நாட்டுப் பிரஜைகள். இவர்கள் அங்கே துரோகம் செய்துவிட்டு இங்கே வந்து ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து அவர்களை எம்மிடம் ஒப்புக் கொடுங்கள். நாங்கள் அவர்களைக் கூட்டிச் சென்று எங்கள் நாட்டு நெறியின்படி நீதி வழங்கிக் கொள்கிறோம்.”
அதுகேட்டு நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம் பிரதிநிதிகளைப் பார்த்து, “உங்கள் கட்சி என்ன? இவர் கூறும் குற்றச்சாட்டுகள் மெய்தானா?” என்று கேட்டார்.
தொடரும்…
-N.B. அப்துல் ஜப்பார்
<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>