اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ اَنْ لَّاَ اِلٰهَ اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَ نَشْهدُ اَنَّ مُحَمَّدَاً عَبْدُهُ وَ رَسُولُهُ اَمَّا بَعْدُ اَيُّهَا اَلْاِخْوَانُ
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்கவேண்டும் என்பதை எனக்கும் சொல்லிக்கொள்ளுகின்றேன்.
அன்பிற்குரிய அரிய முஸ்லிம் நேசர்காள்! சர்வலோகத்தின் மீதும் சம்பூர்ண சக்தி வாய்ந்த எல்லாம்வல்ல இறைவனைப் புகழ்ந்து, அவனுடைய உண்மைத் திருத்தூதர் நபிகள் நாயகத்தின்மீது ஆசிமொழியும் கூறியதன் பின் அறிந்துகொள்வீர்களாக. இத்தரணியின் மாந்தரெல்லாரும் எல்லாத் துறையிலும் சீர்திருத்தமடைந்து சன்மார்க்கத்தில் ஒழுகி முக்தி பெறவேண்டும் என்பதற்காகவே அவதரித்த நபிகள் நாயகம் முஹம்மத் முஸ்தபா ரஸூல் (ஸல்) அவர்களைப்பற்றி ஆண்டவன் குர்ஆன் மஜீதில், “ஏ நபீ! உண்மையாக உம்மை நாம் சாக்ஷியம் கூறுபவராகவும் நன்மாராயம் அறிவிப்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை விடுப்பவராகவும் ஆண்டவன் பக்கல் அவனது கட்டளையைக் கொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கும் தீபமாகவும் அனுப்பி வைத்தோம்,” என்றே இயம்பியுள்ளான்.
நபிகள் நாயகம் இவ்வுலகில் எக் காரியங்களுக்காக அவதரித்தார்களோ அவற்றையெல்லாம் உலகத்தாரிடையே பரிபூரணமாய்ப் புரிந்து நிறைவேற்றிவிட்டார்கள். அஞ்ஞானம் மிகுந்திருந்த அரபிகளையெல்லாம் மெய்ஞ்ஞானத்தில் பக்கல் கொண்டு வந்து விட்டார்கள். எனவே, இஸ்லாமார்க்கத்தை உலகத்திலெல்லாம் பரவச் செய்துவிட்டார்கள். தேவஞான வஹீ மூலமாய் வெளியான குர்ஆனை உலகத்தாருக்கு நல்லவிதமாய் எடுத்துப் போதித்து விட்டார்கள். தாங்கள் சுயமே எல்லா நற்குண நற்செயல்களையும் அனுஷ்டித்துக் காட்டி, ஜனங்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்தார்கள். பெண்மணிகளுக்கெல்லாம் போதுமான சுதந்தரத்தையும் மதச்சட்ட தாராளத்தையும் அளித்தார்கள். முஸ்லிம் சமூகத்தையெல்லாம் “ஆண்டவன் மீது நன்னம்பிக்கை கொண்டவர்களெல்லாம் ஏக சகோதரர்களே” என்ற வாக்கியத்தின்படி சகோதரத்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும்படி செய்தார்கள். தம்முடைய உம்மத்துகள் எல்லாரையும் குர்ஆன் ஆயத்துப்படி ஒன்றுசேர்த்து ஆண்டவனது வடக்கயிற்றை (தீனுல் இஸ்லாத்தை)ப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்படி உத்தர விட்டார்கள். வேதவாக்கியப்படி சகல லோகத்தாருக்கும் ஓர் அரிய தயாளமாகவே அவர்கள் அவதரித்தார்கள். எல்லாருக்கும் நல்லவராயிருந்து, எல்லாரையும் சாந்தத்திற்குரிய சன்மார்க்கத்திலே சேர்த்து வைத்தார்கள்.
இப்படிப்பட்ட உயர் திருநபி முஹம்மத் (ஸல்) நம்மைப்போன்ற ஒரு மனிதராகவே இருந்து வந்ததனால் இறுதியில் ஆண்டவன் ஆணைப்படி காலகதியடைந்து இத் தரணியைவிட்டு மறைந்துபோனார்கள். ஆண்டவன் ஏற்பாடு செய்தவைகளுக்கு மாற்றம் ஏற்பட முடியாது என்பதைத் தம் மேன்மையான மரணத்தால் உலகத்தவருக்கு உணர்த்திவிட்டார்கள். “ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தைச் சுவைத்துத்தான் தீரும்,” என்ற வேதவாக்கியத்தை மெய்ப்பித்து விட்டார்கள். எனவே, மரணமென்பது எல்லாருக்கும் பொதுவானதேயாகும். “பொன்றுதல் ஒருகாலத்தும் தவிருமோ? பொதுமைத் தன்றோ?” இந்த மவுத்து எத்தகைய மேன்மை வாய்ந்தவர்களையும் ஒருபோதும் விட்டுவிடாதென்பது திண்ணமேயாம். அப்படிப்பட்ட திரு நபியே (ஸல்) இவ்வுலக வாழ்க்கையை விட்டும் பரலோகம் ஏகிவிட்டார்கள்.
நண்பர்காள்! இத்தகைய உத்தமோத்தமரான திரு நபியே (ஸல்) காலகதியடைந்து போயிருக்க, சதா அஞ்ஞானத்திலும் துன்மார்க்கத்திலும் பாதகத்திலும் பாபத்தொழிலிலும் உழன்றுகிடக்கும் நமக்கெல்லாம் மரணம் வாராதென்றா எண்ணுகின்றீர்கள்? மரணம் நிச்சயம் என்பதைத் திரு நபியின் மவுத்தால் நாம் நன்கு தெரிந்துகொண்டிருந்தும், இன்னம் மௌட்டியத்துள் இருப்பது சரியாமா? இது தகுமா? இது முறையா? இது தர்மந்தானா?
ஆண்டவனை மறந்து தொழாமலே இருந்துவிடுவது உத்தமமாகுமா? நம்மை ஆண்டவன் இதற்கெல்லாம் கேள்விக் கணக்குக் கேட்க மாட்டானா? அவனை நீங்கள் எளிதில் ஏமாற்றிவிடலாமென்றா எண்ணுகின்றீர்கள்? நம்முடைய நன்மை தீமைகளுக்கெல்லாம் நாம் ஜவாப் சொல்லித் தீரவேண்டாமா? ஒரு சிறு நன்மையாயினும், ஒரு சிறு தீமையாயினும், அதனதன் பிரதிபலனைச் செய்தவன் அடைந்தே தீரவேண்டும் என்னும் குர்ஆனின் ஆணை உங்களுக்கில்லையா?
ஆதலின், எம் முஸ்லிம்காள்! நாயகத்தின் மரணத்தைப் பற்றிய விவரத்தைச் சிறிது தெரிந்துகொண்டு, நம் இகலோக வாழ்க்கையைக் கண்டு உள்ளம் பூரித்து உண்மையான ஆண்டவனை மறந்திராமல், இனிமேலாயினும் நம்முடைய நடவடிக்கைகளைப் பரிசுத்தப் படுத்திக் கொள்ளக் கடவோமாக. நம் நபிகள்பிரான் (ஸல்) இத்தரணிக்கு அனுப்பப்பட்டதன் நோக்கமான வேலைகளையெல்லாம் பூர்த்தியானவுடன் தமக்கு இனி இவ்வுலகில் வேலையில்லை, ஆண்டவன் சன்னிதிக்குச் செல்லத்தான் வேண்டுமென்பது அவர்களுக்கு நிச்சயமாய்ப் புலப்பட்டு விட்டது. ஆதலால், தமது ஜீவியத்தின் இறுதி ஹஜ்ஜாய் விளங்கிய “ஹஜ்ஜத்துல் விதா” இல் மனித கோடிகளுக்கும் தங்கள் சஹாபாக்களுக்கும் மற்றும் ஏனையோர்களுக்கும் தங்கள் சுற்றத்தார்களுக்கும் சொல்ல வேண்டியவைகளையெல்லாம் அரஃபாத்திலே சொல்லி முடித்து, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தாங்கள் இவ்வுலகின்கண் காணக் கிடைக்க மாட்டார்கள் என்பதையும் அங்குக் கூடியிருந்த மாந்தர்களனைவருக்கும் சயிக்கினையாய் எச்சரிக்கை செய்ததுமன்றி, இவ்வுலக மானிடர்களடங்கலும் தங்களின் மேலான உபதேசத்தையடையும் பொருட்டு, “நான் சொல்லிய இவ்வுபதேசங்களைக் கேட்ட நீங்கள் (இங்குக் கூடியிருப்பவர்கள) இங்கு வந்து கேட்க முடியாமலிருந்த (மறைவான) மனிதர்களுக்குந் தெளிவாய் எடுத்துச் சொல்லிவிட வேண்டும்,” என்றும் திருவுளம்பற்றிச் சென்றார்கள்.
அதன்பின்பு நம் நபிகள் நாயகத்துக்கு (ஸல்) ஸபர் மாதம் 27-ஆம் தேதி வியாதி ஏற்பட்டது. அந்த வியாதியிருக்கும் காலத்தில்கூட நபிகள்பிரான் (ஸல்) மஸ்ஜிதுக்குச் சென்று தவறாமல் ஐந்து வேளையும் தொழுதுவந்தார்கள். தங்கள் உம்மத்துகளையுந் தொழுதுகொள்ளுமாறு அதிகம் வற்புறுத்திக் கூறினார்கள். தமது வியாதி அதிகப்பட்டுத் தம்மால் வழக்கமான காரியங்களையும் செய்ய முடியாமற் போகவே, தங்கள் இமாமத்து வேலையைத் தோழரான அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு அளித்துவிட்டார்கள். இறுதி முறையாக நாயகம் (ஸல்) வேறு சில மனிதரின் உதவிகொண்டு பள்ளிக்குச் சென்று மின்பரில் நின்று உருக்கமான ஒரு பிரசங்கத்தையும் முக்கியமான போதனைகளையும் ஜனங்களின் கடமைகளையும் இன்ன இன்னவையென்று கண்ணீர் உகுத்த வண்ணம் பிரசங்கித்தார்கள். ஜனங்களெல்லாரும் உடன் கண்ணீர் வடித்தார்கள். நாயகத்தின் (ஸல்) முகமும் மஞ்சள் நிறத்ததாய் போயிற்று. அதன்பின்பு தம் பத்தினி ஆயிஷா நாயகியின் (ரலி) இல்லத்துக்குத் திரும்பி வந்தார்கள். அப்பால் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டன்று, திங்கள் மாலையில் தேகவியோக முற்றுவிட்டார்கள்.
அங்குக் கூடியிருந்தோரெல்லாம் நாயகம் (ஸல்) மரணமடைந்த சம்பவத்துக்காக அதிகம் துக்கித்தார்கள். அவ்விறுதி வேளையிலும் நம் நபிகள் நாயகம் (ஸல்) தம் உம்மத்துகளாகிய நம்முடைய க்ஷேமத்துக்காக ஆண்டவன்பால் மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்கள். தொழுகையைப் பற்றி அதிகம் வற்புறுத்தினார்கள். தங்கள் மனைவி மக்களுக்கு நற்போதனையையும் வசிய்யத்தையும் செய்து முடித்தார்கள். ஆண்டவனது கட்டளைப்படி வந்த மலக்கல் மௌத்தும் நாயகத்தின் (ஸல்) ஆத்மாவை அப் பரிசுத்த திருமேனியை விட்டுப் பிரித்து விட்டார்கள். எனவே, இவ்வுலகத்துக்கெல்லாம் அதிபதியாய் விளங்கிய நபிகள் நாயகம் (ஸல்) ரபீஉல் அவ்வல் மாதம் பிறை பன்னிரெண்டிலே திங்கட்கிழமையன்று மரணமடைந்து போயினார்கள்-; உலகத்துக்கொரு பெருஞ்சோதியாய் இலங்கி வந்த நபிகள்பிரான் (ஸல்) காலகதியடைந்து போய் விட்டார்கள். “இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.” பிறகு ஆயிஷா நாயகியின் (ரலி) இல்லத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
எனவே, எமதாருயிரனைய முஸ்லிம் சோதரர்காள்! இப்படிப்பட்ட தீர்க்கதரிசியே (ஸல்) தமது ஆவியைத் துறந்து பரகதி அடைந்திருக்க, நாமெல்லாம் ஏன் மரணத்தைப்பற்றி அறிந்து நல் வாழ்க்கையை மேற்கொள்ளலாகாது? ஆதலின் நேயர்காள்! நாயகத்தின் போதனையைச் சிரமேற்கொண்டு, ஆத்மார்த்தப் பரிசுத்தமடையுங்கள். நம் மதக்கடமைகளையெல்லாம் சிறிதும் தவறாமல் நிறைவேற்றுங்கள். நமதிரஸூல் நாயகத்தைப் பின்பற்றலென்பது, அன்னவர் எப்படிப்பட்ட இஷாஅத் (பிரசார) ஊழியத்தில் தங்களுக்குரிய உடல் பொருள் ஆவியையெல்லாம் அர்ப்பணம் செய்தார்களோ அத்தகைய மகா மேலான காரியத்தில் நாமும் ஈடுபட வேண்டுமென்பதே அல்லாது, அவர்கள் செய்து வந்தததையும் சொல்லி வந்ததையும் ஒரு பக்கல் விடுத்து, அவர்களது திருநாமத்தை மட்டும் தலைமேற் கொண்டு வீண் இடம்பத்துக்காகப் பதம் பாடிப் புகழ்ந்து திரிவதில் யாது பயன்?
எனவே, இஷாஅத் புரியுங்கள். உத்தமராக முயற்சியெடுங்கள். ஆண்டவன் நம்மெல்லோரையும் இகத்தில் நல்ல ஈமானுடன் வைத்துப் பரத்திலும் மோக்ஷப் பேரானந்தத்தை அளித்தருள்வானாக.
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَِ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَِ
بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،
<<முந்தையது>> <<அடுத்தது>>