அன்பியாக்களிடம் வேண்டுதல்

by பா. தாவூத்ஷா

ஒரு சாலிஹானவரை ஜீவித காலத்தில் துஆ கேட்கச் சொல்வதற்கும் மரணமடைந்ததன் பின் அவரிடம் வேண்டுதல் புரிவதற்கும் உள்ள வித்தியாசம். 

நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தபோது, இல்லை, யாரேனும் சாலிஹான மனிதர்

உயிருடன் இருந்தபோது, அன்னவர்களிடம் துஆ கேட்கும்படி வேண்டுதல் செய்வதிலும், அவர்கள் மரணமடைந்ததன் பின் அவர்களின் சமாதிகளினருகே சென்று துஆ கேட்க வேண்டுமென்று வேண்டுதல் புரிவதிலும் எவ்வளவு வித்தியாசம் காணப்படுகின்றது! என்று மேற்கூறியதிலிருந்து தாங்கள் நன்கு தெரிந்துகொண்டிருக்கலாம்.

அன்னவர்கள் உயிருடன் இருந்த காலத்தே அவர்களுக்கு வணக்கம் செய்யப்படுவது கூடாத ஒரு காரியமாகும். ஏனெனின், அன்பியாக்களும் ஸாலிஹீன்களுமாகிய அவர்கள் இவ்வாறு ஆண்டவனைத் தவிர்த்து தங்களுக்கு வணக்கம் புரிவதைச் சற்றும் சகித்திருக்க மாட்டார்கள். ஆனால், இவ்வாறு தங்கள் கண்முன்னே இவ்வண்ணமாய காரியம் செய்யப்படுமாயின், அதனை அதிகம் கண்டனம் செய்துகொண்டிருந்தார்கள். உதாரணமாக, ஈஸா (அலை) அவர்கள் ஆண்டவனிடம் சொல்லும் வாக்கியத்தை எமது திருக் குர்ஆன் பின்காணுமாறு விளக்கிக் காட்டுகின்றது:

(கிறிஸ்தவர்களான) அவர்களுக்கு நீ எனக்குச் சொல்லியதைத் தவிர மற்றொன்றையும் நான் சொல்லவில்லை. (நான்) ‘என்னுடைய நாயனும், நுங்களின் நாயனுமான அந்த அல்லாஹ்வையே நீங்கள் வணங்கவேண்டும்’ (என்று சொன்னேன்.) யான் அவர்களின் மத்தியிலிருந்த மட்டும் நானே அன்னவர்களுக்குச் சாட்சியாயிருந்தேன். நீ என்னை மரணிக்கச் செய்ததன்பின் நீயே அவர்களைப் பார்ப்பவனாயிருந்தாய். மேலும் நீ சகல வஸ்துக்களையும் பாதுகாக்கக் கூடியவனாய் இருக்கின்றாய்” (குர்ஆன் 5:117).

இஃது ஒருபுறமிருக்க, நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் நாயகமவர்களின் சமுகம் வந்து, “தாங்களும் அல்லாஹ்வும் நாடியபடி எல்லாம் நடைபெறும்” என்று சொன்னார். இதைச் செவியுற்றதும் எம்பெருமானார் அவர்கள், “அல்லாஹ்வுக்குச் சமமாகவா என்னையும் எண்ணுகின்றீர்கள்? ‘ஆண்டவன் மாத்திரம் தனியே நாடியபடி சகல காரியமும் நடைபெறும்’ என்று சொல்லுங்கள்,” என விடை பகர்ந்தார்கள்.

இஃதேபோல் மற்றொரு சமயம் நாட்டிலுள்ள ஓர் அஃராபியப் பெண் நாயகம் (ஸல்) அவர்களிடம், “நாளை மறுதினம் நடக்கப்போகும் விஷயங்களை நம்முள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவார்கள்,” என்று கூறினாள். இதைக் கேட்டவுடன் நபிகள் நாயகம் அவர்கள், “முன் கூறிக்கொண்டிருந்ததேபோல் ‘எல்லாக் காலத்தின் விஷயங்களையும் ஆண்டவன் ஒருவன்தான் அறிவான்’ என்று கூறுவாயாக” எனக் கூறினார்கள். இவ்வளவுடன் நின்றுவிடாது, “நசாராக்கள் தங்கள் நபியை உயர்த்தி (அல்லாஹ்வாக்கி) யதேபோல் என்னையும் நீங்கள் உயர்த்தி விடாதீர்கள். ஆனால், யான் ஆண்டவனுடைய அடியாரும் அவனது தூதராயும்தான் இருக்கிறேன்,” என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இன்னுமொரு சமயம் நாயகம் (ஸல்) அவர்கள் வீற்றிருந்தபொழுது சஹாபாக்களான நாயகத்தின் தோழர்கள் நபிகள் (ஸல்) அவர்களுக்கு மரியாதை செய்யவேண்டுமென எண்ணங் கொண்டு, நபிகள் (ஸல்) அவர்களுக்குப் பின்னே தொழுகையில் நிற்பதேபோல் கையைக் கட்டிக்கொண்டு அணிவகுத்து நின்றார்கள். அதைக் கண்டவுடன் எம்பிரான் (ஸல்) அவர்கள், “ஒன்றுமறியாத அஜமிகள் சிலரைச் சிலர் கௌரவிப்பதேபோல் நீங்கள் என்னைக் கௌரவிக்க வேண்டாம்” எனக் கண்டித்தார்கள். இவ்வண்ணம் நபிகள் திலகம் கூறியதிலிருந்து சஹாபாக்களான உத்தம நேயர்கள் நாயகம் (ஸல்) அவர்கள் வருவதைக் கண்டாலும் எழுந்து நிற்பதையும் விட்டுவிட்டார்கள். ஆனால், ஹஜரத் அனஸ் (ரலி) அவர்களின் சொற்படி சஹாபாக்கள் நம் ரசூல் (ஸல்) அவர்களைத் தங்களின் மனைவி பிள்ளைகள், சொத்து சுதந்திரம் முதலியவைகளைக் காட்டினும் மிக்க மேலாகவே எண்ணியும் நேசித்தும் வந்தார்கள். ஆனால், நாயகம் (ஸல்) அவர்கள் விஜயம் செய்யும்போது அவர்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கத்துடன் எவரும் எழுந்து நின்று மரியாதை செய்ததில்லை. ஏனெனின், இவ்வாறு அடிக்கடி எழுந்து நிற்பதை எம்பிரான் (ஸல்) அவர்கள் மிக மிகக் கண்டித்திருக்கின்றார்கள்.

ஒரு சமயம் ஹஜரத் மஆத் (ரலி) அவர்கள் நாயகமவர்களுக்குச் சிரவணக்கம் செய்து சாஷ்டாங்கம் பண்ணினார்கள். இதைக் கண்டவுடன் நாயகம் (ஸல்) அவர்கள், “(ஏ மஆத்!) அல்லாஹ் அல்லாத வேறெவருக்கும் சிரவணக்கம் செய்வது கூடாது. இவ்வாறு ஒருவர் மற்றவருக்குச் சிரவணக்கம் செய்வது கூடுமாயின், கணவனுக்கு மனைவி சிரவணக்கம் செய்யவேண்டுமென நான் கட்டளை பிறப்பித்திருப்பேன். கணவனுக்கு மனைவி அனேக நன்மைகளைச் செய்யவேண்டியவளாய் இருக்கிறாள். (ஆனால்) இவ்வாறு ஒருவருக்கு மற்றொருவர் சிரவணக்கம் செய்வது கூடாது)” என்று மிக மிகத் தெளிவாய்த் திருவுளம் பற்றியுள்ளார்கள்.

ஒரு தருணம் ஹஜரத் அலீ (ரலி) அவர்களின் சமுகம், “தங்களுக்குள்ளேயே ஒருவன் ஆண்டவனாய் இருக்கிறான் என்று கூறிக்கொண்டிருந்த சில ஜிந்தீக்குக்கள் வந்தார்கள். இவர்களின் விஷயம் தெரிந்தவுடன் ஹஜரத் அலீ (ரலி) அவர்கள் மிக்க சினங்கொண்டு, அன்னவர்களை நெருப்பில் போட்டு எரித்துவிட வேண்டுமெனக் கடிந்து கூறினார்கள்.”

எனவே, அன்பியாக்கள் அவுலியாக்களுக்கே சிரவணக்கம் செய்வது கூடாதெனப் பல கண்டனங்கள் காணக் கிடக்கும்போது, சாதாரண மனிதர்களின் விஷயத்தில் நாம் வீணே தலையிடுவானேன்? இவ்வாறு மரியாதை பெற்றுக்கொள்ள வேண்டுமென மனத்தினாலும் நாட்டங் கொள்ளுபவர்கள் உண்மையிலேயே உலகத்தின்கண் வீண் புரட்சியையே உண்டுபண்ண வேண்டுமென விழைகின்றனர் என்றுதான் கொள்ளல் வேண்டும். ஆனால், இவ்வாறு ஃபித்னாக்களையும் ஃபஸாதுகளையுமே உண்டுபண்ணிக்கொண்டு திரியும் சில மஷாயிகுகள் உண்மையில் ஃபிர்அவ்னின் இனத்தைச் சேர்ந்தவர்களென்றுதான் கொள்ளல் வேண்டும்.

ஆகையால் அன்பியாக்களையும் சாலிஹீன்களையும் எல்லையைக் கடந்து அப்பால் மேலாக உயர்த்திக்கொண்டு போவதும் அவர்களை ரப்பேபோல் செய்துவிடுவதும் அவர்களுக்குச் சிரவணக்கம் செய்வதும் அவர்கள் மரணமடைந்ததன்பின் இம்மாதிரியான காரியங்களில் சம்பந்தப்பட்டுப் பாபிகளாய்ப் போய்விடாமல் மூஃமினான நம் சோதரர்கள் அனைவரையும் ஆண்டவன் காத்துக்கொள்வானாக.

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>

Related Articles

Leave a Comment