வியபிசாரமன்று; ஆனால், “நியோகம்!” – 9

பிறகு ருக்வேதம் 10. 10. 10-ஆவது மந்திரத்திலிருந்து ஆதாரங் காட்டிப் பின்வருமாறு மஹரிஷி சாஹிப்பஹாத்தூர் சத்தியார்த்தப் பிரகாசம். அத்தியாயம் 11-இல் வரைந்துள்ளார்:

புருஷன் சந்தானோற்பத்தி செய்வதற்குச் சக்தியற்றவனாக ஆய்விடுவானாயின் அப்பொழுது தன் மனைவியை நோக்கி, ‘ஓ சௌபாக்கியவதீ! நீ என்னை விடுத்து வேறு புருஷர்களை விரும்புவாயாக; ஏனெனின், என்னிடத்திலிருந்து சந்ததியையடைய உன்னால் முடியாது,’ என்று சொல்லவேண்டும். நியோகத்தைக் கோருகிற ஸ்திரீயானவள் கல்யாணம் செய்துகொண்ட தன் புருஷனைப் பணியவேண்டும். அப்பொழுது மனைவியானவள் வேறு புருஷர்களுடனே நியோகம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். அவ்வண்ணமே வியாதியாலேனும் வேறு காரணங்களாலேனும் வருந்திக்கொண்டு சந்ததியை உண்டுபண்ண யோக்கியமற்ற ஸ்திரீயும் தன் புருஷனை நோக்கி, ‘ஏ என் எஜமானே! தாங்கள் என்னிடத்திலிருந்து சந்ததியைப் பெறவேண்டுமென்ற விருப்பத்தை விடுத்து வேறு விதவைகளுடன் நியோகத்தினால் சந்தானங்களைப் பெற்றுக்கொள்வீர்களாக.’ என்று அனுமதி கொடுக்க வேண்டும்.

உண்மைதான், பெண்பிள்ளைகளின் கற்புநிலையிலும், ஆண்பிள்ளைகளின் ஒழுக்கநிலையிலும் ஆரியர்கள் அதிக கௌரவம் வைத்துள்ளாரென்பதை எவரே மறுக்கத் துணிவர்! இந்த ஆண் பெண்களின் ஒழுக்க நிலையானது சூரியப்பிரகாசத்தினும் அதி பகிரங்கமாகவே பட்டப்பகலைவிட வெட்ட வெளிச்சமாய்க் காணப்படுகிறது. ஏனெனின், சிறுபெண்களுக்கு ஆண்மைத்தனமற்ற புருஷன் கிடைப்பதும் அவன் கையாலாகாமல் விழித்துக்கொண்டிருக்கும்போது ஒன்றல்ல, பதினொரு பதினொரு அன்னிய புருஷர்களுடன் தன் மனைவி கூடி இன்பம் அனுபவிக்க அனுமதி கொடுப்பதும் அவள் பிற புருஷனுடன் கூட்டுறவு செய்யும்போதெல்லாம் தன்னுடைய மனஸை அடக்கிக்கொண்டு பொறாமைகொள்ளாது புத்திரவாஞ்சையுடன் திருப்தியான சமாதானம் செய்துகொள்வதும் எத்துணை இன்பரஸமாய் இருக்குமென்று நீங்களே நினைத்துப் பாருங்கள். இதைக்காட்டினும் பதிவிரதா தர்மமென்பது வேறு என்னவாயிருத்தல் கூடுமென்று நினைக்கின்றீர்கள்?

ஆண்பிள்ளையின் அந்தஸ்துக்கு அவன் ஆண்மைத்தனம் அற்றிருப்பதே பேடித்தனம் நம்பர் ஒன்றாகும். இரண்டாவதாக, அவன் விழித்த விழிகளுடனே உயிரையும் வைத்துக்கொண்டு தன் மஞ்சத்தின் மீது ஒன்றல்ல! பதினொரு வெவ்வேறு ஜாதி வெவ்வேறு ஆண்பிள்ளைகளை உறங்கும்படி உத்தரவும் கொடுப்பதுதான் மகா ருசிகரமாயிருக்கும். மேலும் அயலார் தன் பள்ளியுள் சென்று அவரது வீரியத்தின் உதவியினால் ஜனிக்கும் சிசக்களைத் தன் மார்போடணைத்து இன்பச் சுவையுடன் உச்சிமோந்து உள்ளம் குளிர்ந்து புத்திர வாத்ஸல்யத்தால் புளகாங்கிதங் கொண்டு மனங்கனிந்து இன்பம் ததும்புவதுதான் அவனது பேடித்தனம் நம்பர் மூன்றாகும். எனவே, இப்படிப்பட்டவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்துடையவர்களென்று சுவாமி தயானந்த்ஜீ பட்டம் சூட்டியது வீணாகாது. (ஆனால், சுவாமிஜீ மட்டும் இவ்விதமான உயர்ந்த பௌர்ஷத்தை யடைந்து பட்டம் பெற்றுக்கொள்ளாதது மிக வருந்தத்தக்கதேயாகும். கபீர்.)

இன்னமும் தன் பெண்ஜாதியை அன்னிய புருஷர்களுடன் ஆனந்தம் அனுபவிக்கும்படி அனுமதி கொடுத்துவிட்டு, அவள்முன் பேடியினும் பேடியாய்க் கையாலாகாத நபுஞ்சகனாய் நிற்கும் (அவளுக்குப் பற்றாத) ஆண்மைத்தனமற்ற புருஷன்முன் அந்த மனைவியானவள் கைகூப்பி வணங்கி நிற்கவேண்டுமென்று உபதேசிப்பதுதான் மகாமகா ஆச்சரியமாய்க் காணப்படா நின்றது. சிருஷ்டிகளின் இயற்கைக் குணங்களுக்கு முற்றிலும் மாற்றமாயும். குறிப்பாக ஸ்திரீகளின் மஞ்சத்திற்கும் மனச்சாக்ஷிக்கும் முற்றிலும் முரணாயும் இது காணப்படவில்லையா? ஏனெனின், தேகவலுவும் பௌர்ஷமும் நல்ல ரூப லாவண்யமும் நிரம்பப்பெற்ற புருஷர்களையே பெண்கள் விரும்பி வரிக்கின்றனரென்று ஆரியரின் ஸம்ஸ்கிருத கிரந்தங்களிலேயே அத்தாக்ஷி காணப்படுகின்றது. அப்படிப்பட்ட புருஷருக்குத்தாம் அந்த மனைவியர் அடிபணிந்து அவர்மீது காதலும் கொள்ளுவர்; தம்முடைய கரிசன முழுதையும் தமக்குப் பிரியமுள்ள பிராண நாதரிடமே செலுத்துவர். இதுதான் இவ்வுலகில் நடைபெறுவது.

ஆனால், இதற்கு மாறாக ஒரு ஸ்திரீயின் புருஷன் புருஷனாயில்லாது பேடியாய் விடுவானாயின், அவள் அவனுடைய அனுமதியில்லாமலே தன் புருஷனைக்காட்டினும் பலசாலியான மற்றொருவனைப் பெற்றுக்கொண்டு தன் விவாக புருஷனை உயிருடன் விட்டு விலகிப்போகிறாள். அல்லது வேறு காரணங்களைக்கொண்டு விலகாமலிருப்பாளாயின், தன் புருஷனைத் தெருத்திண்ணையில் உறங்க வைத்துவிட்டுத் தோட்டத்தால் வரும் ஆசாநாயகன்மீது தன் பாசமுழுதையும் அள்ளிக் கொட்டிவிடுகிறாள்; தன் சொந்தப்புருஷனை ஒரு புருஷனென்றெ மதிக்கின்றாளில்லை. தன் புருஷனை மட்டுமல்லாமல் தாய்தந்தையரையும் மற்றுமுள்ள சகோதரர்களையும் ஏமாற்றிவிட்டுத் தன் ஆசாநாயகனிடம் பாசத்தைத் திருப்பிவிடுகிறாள். அவனிடத்திலேயே கைகட்டி வாய்பொத்தி நின்று தன் இச்சையின் இன்பசுகங்களை நிறைவேற்றிக் கொள்ளுகிறாள். புருஷனுடைய அனுமதியில்லாமலே  சோரநாயகன் விஷயம் இத்துணை விமரிசையாய்  நடைபெற்று வரும்போது, சொந்த நாயகனும் அன்னிய புருஷரிடம் இன்பம் துய்க்கலாமென்று அனுமதி கொடுத்துவிடுவானாயின், அதன்பின்பு கேட்பானேன்! பிறகு அவள் தன் நாயகனைத் தெய்வமென்றுதான் கும்பிடுவாள்.

(ஒரு புருஷன் மரணத் தறுவாயிலிருந்தபோது தன் பிரிய நாயகியை நோக்கி, “ஏ, சௌபாக்கியவதி! நான் இறந்த பின் நீ நம் எதிர் வீட்டுக்காரனான என் நண்பனையே மறுவிவாகம் செய்துகொள்,” என்று வேண்டிக்கொண்டான்; அதற்கவள், “இதற்காகத் தாங்கள் மனக்கவலை கொள்ளவேண்டாம்; எதிர்வீட்டுக்காரருடன் நான் முன்னமேயே ஏற்பாடு செய்துவைத்திருக்கிறேன்,” என்று சொன்ன கதையே ஈண்டு எமது ஞாபகத்துக்கு வருகின்றது.)

தன்னுடைய காமத்தீயைச் சமனஞ்செய்து தனது உள்ளத்துக்கும் உடம்புக்கும் இன்பச் சுவையை யளிக்கும் அந்த அண்பிள்ளையின் பக்கமே அவளது பணிவிடை முழுவதும் திரும்பிவிடுமல்லாது, ஆண்மைத்தனமற்ற, ஆண்பிள்ளையென்று அழைக்க அருகதையற்ற தன் விவாகநாதனை ஏன் திரும்பிப் பார்க்கப்போகிறாள்?

பிறகு மனு, 9.76-ஐ நம் சுவாமிஜீ மேற்கோள் காட்டி,

மணம் முடித்த மாப்பிள்ளை வித்தையைக் கற்றுக்கொள்ள நாடி அன்னியதேசம் போயிருப்பானாயின், 8 வருஷகாலமும், கல்விக்காகவோ கீர்த்திக்காகவோ போயிருப்பானாயின், 6 வருஷகாலமும், செல்வம் முதலானவற்றைச் சேகரிக்கச் சென்றிருப்பானாயின், 3 வருஷ காலமும் அவனை எதிர்பார்த்திருந்து (அக்கால அளவுக்குள் அவன் வாராமலிருந்தால்) பிறகு நியோகம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வாளாக. குறிப்பிட்ட காலத்துக்குள் சொந்த மணவாளன் வந்துவிடுவானாயின், நியோகம் செய்யும் புருஷர்களின் தொடர்புகளினின்றும் அவள் விலகிக்கொள்ள வேண்டும். இதேபோல் புருஷர்களுக்கும் சட்டங்களிருக்கின்றன,

என்று எழுதுகிறார்.

(எனவே, ஈசுவரனால் இரக்கத்துடன் அளிக்கப்பட்ட ஜனனேந்திரியங்கள் செயலற்று நின்று விடாமலும் அவற்றுள் அழுக்கு முதலிய துருக்கள் பிடித்து விடாமலும், பாதுகாக்கும் பொருட்டே மனு மஹாராஜ் மிக்க கருணையுடன் இந்தச் சட்டத்தைச் செய்திருக்கிறார்! “கைப்பட்ட பண்டம் கண்ணாடி” என்று தமிழில் ஒரு பழமொழி சொல்லுவர்; “உபயோகத்தில் இருந்துவரும் திறவுகோலே எப்பொழுதும் பளபளப்புடன் இருந்து வரும்” என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. விஷயம் இவ்வாறிருக்க, 8; 6; 3 வருஷங்களென்று தவணை ஏற்படுத்தியதன் கருத்துத்தான் எமக்கு விளங்கவில்லை. புருஷரைப் பிரிந்த பெண்களும், பெண்களைப் பிரிந்த புருஷர்களும் நியோகத்தை ஆரம்பிக்கலாமென்று அனுமதி கொடுக்கும்போது, அதில் எல்லைகளை ஏற்படுத்தியதன் காரணங்களை விவரிக்க முடியாமல் என்ன இரகசியங்களிருக்கின்றனவோ! சுவாமிஜீயே எமக்கு அவற்றை விளக்கிக் காட்டுவாராக. கபீர்.)

அதன்பின்பு மனு, 9.81-ஐ ஆதாரங்காட்டி,

விவாகமான மனைவி மலடாயிருந்து கர்ப்பமாகாமலிருந்தால் எட்டு வருஷம் சென்றும், குழந்தைகளுண்டாய் மரித்துக் கொண்டிருந்தால் பத்துவருஷம் சென்றும், பிறக்குந்தோறெல்லாம் ஆண்களன்றிப் பெண்களே பிறந்துகொண்டிருந்தால் பதினொரு வருஷமும், பிரியமில்லாத மனைவி சண்டைக்காரியாய் யிருந்தால் ஒரு நிமிஷமும் தாமதிக்கமால் உடனேயும் அந்த மனைவியை விட்டுவிட்டு வேறு பெண் பிள்ளையிடம் நியோகம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதேபோல் புருஷனும் மிக்க துன்பம் செய்பவனாயிருப்பின், பெண்ஜாதி அவனை விட்டு வேறு புருஷனுடன் நியோகம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கல்யாணமான புருஷனுடைய சொத்துக்களைத் தன் குழந்தைக்குச் சேர்த்து வைக்கட்டும்.

(ஷாபாஷ்! புருஷன் செய்த கொடுமைக்காகப் பெண்ஜாதி கொடுக்கும் தண்டனை மிகப் பொருத்தமாயிருக்கிறது! நியோகத்தினால் எத்தனைவகைப் பிரயோஜனமுண்டென்று நினைக்கின்றீர்கள்? ஒருபுறம் மனைவியானவள் 11 புருஷருடன் நியோகம் செய்து 10 குழந்தைகளைப் பெற்றெடுப்பாள். மற்றொருபுறம் கணவன் 11 அன்னிய ஸ்திரீகளுடன் நியோகம் செய்து 10 குழந்தைகளைப் பெற்றெடுப்பான். குழந்தை இல்லையென்னும் குறையினால் நியோகம் செய்யத் தலைப்பட்ட தம்பதிகள் இப்பொழுது 20 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். ஈதெல்லாம் வேததர்மத்துக்கு முற்றிலும் பொருத்தமானதென்றே ஆரியர் கூறாநிற்பர். “உன் குழந்தைகளும் என் குழந்தைகளும் நம் குழந்தைகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன,” என்று ஓர் ஆங்கிலேயன் தன் மனைவியிடம் கூறிய கதைதான் ஈண்டு எமக்கு ஞாபகம் வருகின்றது.

இப்பொழுது இந்த 20 குழந்தைகளும் கற்புடன் பிறந்தனவா? அல்லவா? இதற்குரிய வேதசாக்ஷியத்தை ஆரியநேயர் காண்பிப்பார்களாக. விவாகமான தம்பதிகளுக்கு 10 குழந்தைகளுக்கு மேல் உண்டாவது கூடாதென்னும்போது, ஈண்டு நியோகதம்பதிகள் 20 குழந்தைகளை ஈன்றெடுத்திருக்கிறார்கள். இன்றேல் மற்றோர் உதாரணத்தை எடுத்துப் பார்ப்போம்: வாழ்க்கைப்பட்ட ஸ்திரீ ஒருத்தி தன் புருஷனிடம் 11 குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். பிறகு புருஷன் இறந்த காரணத்தினால் நியோகம் செய்ய ஆரம்பித்த 11 புருஷர்களிடம் 10 குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். ஆக மொத்தம் அவளுக்கு 21 குழந்தைகளாய்விட்டன. இஃது ஆரியர் வேதத்துக்கு அடுக்குமா? அடுக்காதா? கபீர்.)

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment