நம்மீது சுமத்தப்படும் பழிகள் இம்மட்டுமென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை; இல்லை. கீழ்க் காணும் ஒன்றிரண்டைமட்டும் உற்று நோக்குவீர்களாக:
“கி.பி. 1186-இல் ஷிஹாபுத்தீன் இந்தியாவைக் கைப்பற்றினார்; அதிலிருந்து 1857-ஆம் வருஷம்வரை இருந்த இஸ்லாமிய அரசாங்கத்தில் முஸ்லிம்களின் உடைவாள் உறையைவிட்டுக் கழற்றப்பட்டதாகவே இருந்துவந்தது. மேலும் அவர்களுடைய அரசாங்கம் அப்பொழுது நடைபெற்று வந்ததால் யாருக்கும் அஞ்சாமல் வாளாயுதத்தின் வேகத்தால் ஹிந்துக்களை முஸ்லிம்களாகச் செய்தனர்; எனவே, இஸ்லாமியர்களின் வாளின் வேகம் சற்றேறக்குறைய 671 வருஷம் வரை நடந்து ஜொலித்துக் கொண்டே ஹிந்துக்களை முஸல்மான்களாகச் செய்துகொண்டிருந்தது. மேலும் அப்பொழுது அவர்களிடம் பொன், வெள்ளி முதலிய மற்றும் பல ஐசுவரியமும், பெண்களும் (?) இருந்தமையால், அவற்றின் பேராசைகளை ஹிந்துக்களுக்கு ஊட்டி அவர்களை முஸல்மான்களாகச் செய்யாமலில்லை.”
ஆனால், அந்த 671 வருஷகாலத்தில் இருந்துவந்த இஸ்லாமிய ராஜ்யாதிகாரத்தில் பொன், வெள்ளி முதலிய மற்றும்பல ஐசவரியங்கள், பெண்கள் ஆகிய இவ்வளவும் இருந்தும், வாளின் வேகத்தால் இஸ்லாத்தை வளர்த்தும், இரண்டரைக் கோடி முஸ்லிம்களே அப்பொழுது இருந்துவந்தனர்; அவர்களுள் பூர்விக இஸ்லாமானவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள் என்பது பொய்யாகாது.
அதற்குப் பிறகு இஸ்லாமியர்களின் வாட்கள் பிடுங்கப்பட்டன; அவர்களுடைய அரசாங்கமும் அழிக்கப்பட்டது. பொன், வெள்ளி, பெண்கள் ஆகியவெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன; சகலமும் அன்னியர்கள் ஆட்சிக்குள் அகப்பட்டுக் கொண்டன. இவ்விதமாய்ச் செய்யப்பட்டு இன்றுவரை சுமார் 82 வருஷம் ஆகின்றன. ஆனால், இற்றை நாளில் நாம் நம்முடைய உண்மைச் சகோதரர்களான முஸல்மான்களைக் கணக்கிடுவோமாயின், ஆண்டவனது பேருதவியால் 9 கோடி முஸ்லிம்களெனக் கண்டுகொள்ளுகிறோம். அஃதாவது, 671 வருஷத்தில் கத்தியின் வேகத்தாலும், பொன், வெள்ளி, பெண் இவைகளின் அவாவினாலும் 2½ கோடி போக மிகுதி 6½ கோடி ஹிந்துக்கள் 82 வருஷத்தில் இஸ்லா மார்க்கத்தைத் தழுவியிருக்கிறார்கள். இப்பொழுதோ, இஸ்லாமியர்களின் வாளின் வன்மையும், பொன், வெள்ளி, பெண் (?) முதலிய மற்றும் பல ஐசுவரியங்களின் அவாவும் இல்லாமலிருக்கும்போது, ஒவ்வோர் ஆண்டிலும் சமார் 8 லக்ஷம் ஹிந்துக்கள் வீதம் முஸல்மான்களாக ஆய்க்கொண்டே வந்திருக்கிறார்கள். எனவே, இப்பொழுதுங்கூட மேற்கூறப்பட்ட அபத்த வார்த்தைகளை எந்தக் கண் குருடானவன் தான் ஏற்றுக் கொள்ளத் துணிவான்? அப்படியே அதுதான் சரியென்று இன்னும் கூறுபவர் அறியாத் தன்மையால் சொல்லுகிறாரென்பதைத் தவிர்த்து வேறு என்னதான் சொல்லக்கூடும்? ஏனோ கண்ணிருந்தும் மக்கள் பலர் குருடராகின்றனர்.
இப்பொழுது நாம் முதல் சாக்ஷியாக ஆரியசமாஜிகளின் தலைமையானவரும், லாஹூர் ஹைக்கோர்ட்டு வக்கீலும், சுத்தி சங்கத்தனின் பிரபல தலைவருமான லாலா லஜபதிராயை எடுத்துக் கொள்வோம். இவர் இஸ்லாத்தின்மீது பழி சுமத்துவதைத் தமது முதற்கடமையாய்க் கொண்டிருக்கிறார். ஏனெனின், சுத்தி சங்கத்தனின் முட்டையிலிருந்து இவ்விதமான சூட்டைக் கொண்டல்லாமல் குஞ்சு வெளிப்படுவது முடியாதன்றோ? எதுவரை ஹிந்துக்களைக் கீழ்க்கண்டவாறு ஏமாற்றத்தின் உள்ளாக்கமாட்டாரோ, அதுவரை அவரின் அவாவும் நிறைவேற மாட்டாது. “உங்கள் முன்னோர்கள் ஆண்மைத்தன மற்றவர்களாய்க் காணப்பட்டனர்; வாளின் வேகத்தைக் கண்டஞ்சி முஸ்லிம்களாய் விட்டனர். உங்கள் பெரியோர்கள் நாய் பூனை இவைகளைக் காட்டினும் பொன், வெள்ளி, பெண் இவைகளின்மீது ஆவல்கொண்டு முஸ்லிம்களாய் மாறினர். நுங்கள் மூதாதைகள் கெட்ட நடக்கையும் துர்க்குணமும் உள்ளவர்களாய் இருந்தமையாலேயே பெண்களின்மீது ஆவல் கொண்டு இஸ்லாமார்க்கத்தைத் தழுவிக் கொண்டனர். ஆனால், முஸல்மான்களின் மார்க்கமோ உண்மையில் உறுதியற்றதாயும் பொய்யானதாயுமே இருக்கிறது.”
ஆனால், லாலா லஜபதிராய், மஹரிஷி சுவாமி தயானந்த சரஸ்வதியின் சரித்திரம் 93-ஆம் பக்கம், 15-ஆவது வரியில் சொல்லுகிறார்: “இஸ்லாமிய மதமும், கிறிஸ்து மதமும் சேர்ந்து, வேத மார்க்கத்தின்மீது செய்துகொண்டிருந்த பெரும் பெரும் ஆக்ஷேபங்களெல்லாம் சுவாமி தயானந்தரின் படிப்பினையால் அழிந்து நாசமாய்ப் போய்விட்டன. இப்பொழுது முஸல்மான்களும், கிறிஸ்தவர்களும் ஹிந்து மார்க்கத்தை விக்ரஹ ஆராதனைக்குரிய மதமென்று பாமர ஹிந்துக்களை ஏமாற்றுவது முடியாது.” (உண்மையையம் மெய்யான நீதத்தையும் உரைப்பதுதான் லாலாஜீயினிடம் ஏமாற்றம் போலும்! கபீர்.)
|
“பின்பு தங்கள் மார்க்கத்தில் சேர்த்துக்கொள்வது முடியாது.” (அஃதாவது, முஸல்மான்கள் ஹிந்துக்களின் வேதங்களிலுள்ள விக்ரஹ ஆராதனையின் ஊழல்களை எடுத்துக்காட்டி ஹிந்துக்களை இஸ்லாத்துக்குள்ளாக்கினர்; வாளின் வேகத்தாலன்று. ஏக தெய்வத்தின் மகிமையையும், விக்ரஹத் தொழும்பின் கேவலத்தையும் தயானந்தருக்கு உணர்த்தியது எமது வேதமே என்பதை எவரே மறுக்கத் துணிவார்? கபீர்.)
“அறிந்துகொள்வீர்களாக: முஸல்மான்களின் பலமும், கிறிஸ்தவர்களின் பலமும் அறவே முறிந்துவிட்டன. விக்ரஹ ஆராதனையின் உறுதியான கோட்டையின் உட்கருத்தானது பரிசுத்த ஈசுவரனை வணங்குதவன் வீடே என்று நிரூபித்துக்காட்டி, முஸல்மான்களும், கிறிஸ்தவர்களும் செய்துவந்த மல்லுகளை மடங்கச்செய்து, வேதத்தின் தர்மத்தைவிட அவர்கள் மேலாய்ப் பேசிக்கொள்வது ஒன்றும் முடியாதென்றும் காட்டிவிட்டார்.”
எனவே, லாலாஜீயின் வார்த்தைகளால் நாம் அறிந்துகொள்ள வேண்டியது ஒன்றுண்டு: அஃதாவது, முஸல்மான்கள் ஹிந்துக்களுக்கு அவர்களின் விக்ரஹ ஆராதனையின் பிரயோஜனமற்ற தன்மையையும், அன்னவரின் மதத் தவறுதல்களையும் எடுத்து வெளியில் வீசியே வெற்றிகொண்டனர் என்பதே. வேதங்களின் துர்ப்போதனைகளை முஸ்லிம்கள் கீறி வெளியிட்டு அவற்றைப் புத்திமான்கள் வெறுக்கும்படி செய்தனர். வேதத்தின் ஊழல்களைக் கண்ட ஒவ்வொரு மனிதனும் அவற்றை வெறுக்கவேண்டியது ஆவசியகமாகவே காணப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ஹிந்துவுக்கும் தன் வேதத்தின்மீதும், அதன் ஆராதனைகளின்மீதும் சுயமே வெறுப்புண்டாகும் போதும், இஸ்லாமானவர்கள் வாளேந்தவேண்டிய அவசியம் இல்லாமலிருக்கும்போதும் வாளைக்கொண்டு சண்டையிட்டு ஹிந்துக்களையெல்லாம் முஸ்லிம்களாக்க யாதோர் அவசியமும் காணக் கிடைக்கவில்லை. ஆதலின், ஹிந்துக்கள் தங்கள் வேதங்களின்மீது சுயமே வெறுப்புக்கொண்டவர்களாய்ப் பரிசுத்த இஸ்லா மார்க்கத்தைத் தாமே ஏற்றுக் கொண்டார்களேயொழிய, முஸல்மான்களின் வாளின் வேகத்தால் அவர்கள் ஒருவரும் துன்புறுத்தப்பட்டு இஸ்லாத்துள் இழுத்துக்கொண்டு வரப்பட்டதில்லை.
பின்பு அதே சரித்திரத்தின் 102-ஆவது பக்கம், 1-ஆவது வரியில் கூறுகிறார்; “வேதங்களை ஈசுவரனின் ஞான கிரந்தமென்று ஒப்புக்கொண்டு (தயானந்தர்) தமது பாஷ்யத்தின் மூலமாய் அவற்றைச் சாதாரண புஸ்தகங்களின் மதிப்பைவிடக் கீழே இறக்கிவிட்டார்.” (லாலாஜீயே! யாரே இப்படிச் செய்தவர்? முஸல்மான்களின் வாளாயுதங்களா இப்படிச் செய்துவிட்டன? கபீர்.)
“வேதம் அந்தகாரத்திலிருந்து புறப்பட்டு வெளியில் வந்து உலாவியபோது மனிதர்கள் (எந்த மனிதர்களெனின், ஹிந்துவாயிருந்த அவர்கள். கபீர்.) இயற்கையின் விதமாகவே சாயன், மகீதர் இவர்களின் பாஷ்யத்தைப் படித்துப் படித்துப் பிறகு வேதங்களை வீணானவைகளின் கிரந்தங்களென முடிவு கூறிவிட்டனர். ஈசுவரனின் ஞான வெளிப்பாடன்றென்பது ஒருபுறமிருக்க, இதற்கோர் உயர்ந்த அந்தஸ்தை அளிப்பதும் முடியாதென்று வேதாந்திகள் விளக்கிவிட்டனர்.”
லாலாஜீ அவர்களே! இப்பொழுது நீதமாய்க் கூறுங்கள். ஹிந்துக்கள் வேதங்களின் இவ்விதமான கேவல நிலைமையைக் காண்பார்களாயின், அவற்றின்மீது அபேக்ஷை கொள்ளுவார்களா? அல்லது அருவருப்புடன் வெறுத்துத் தள்ளுவார்களா? அல்லது அவற்றின்படி செயலும் (வாமமார்க்கம், நியோகம் போன்றவை) செய்வார்களா? ஆதின், கற்றுணர்ந்தவர்களே வேதங்களை வெறுத்துத் தள்ளி, வேறு வழியை நாடி ஓடிவரும்போது, வாளின் வேகத்துக்கு இங்கு என்ன அவசியமிருக்கிற்து என்பதுதான் விளங்கவில்லை.
பிறகு இரண்டாவது சாக்ஷியாக லாலா தீவான் சந்தை (இவர் ஓர் எம். ஏ. பட்டதாரி) எடுத்துக்கொள்வோம்; இவர் டி.ஏ.வீ. காலேஜின் புரொபெஸருமாவார். இவர் 1961-ஆவது வருஷம் கூடிய ஆரியசமாஜிகளின் மகாநாட்டில் கூறியிருக்கிறார் : “1901-ஆம் வருஷத்திலிருந்து 1911-ஆம் வருஷம்வரை பஞ்சாபிலுள்ள தாழ்ந்த வகுப்பான 1,69,103, ஹந்துக்களும், 50 லக்ஷம் உயர்தர ஹிந்துக்களும் முஸல்மானகளாகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறிவிட்டனர்.”
இது பஞ்சாபில் மாத்திரம் நடந்த விஷயாகும். எல்லைப்புற மாகாணம், பீஹார் மாகாணம், ஐக்கிய மாகாணம், பம்பாய் மாகாணம், மதராஸ் மாகாணம், வங்காள மாகாணம் அகிய இவைகளிலுண்டான கணக்குக்கள் அதில் சேர்ந்திருக்கவில்லை. ஒருசமயம் 1901-இல் இருந்து 1911-க் கிடையில் இஸ்லாமானவர்களின் வாள் பஞ்சாப் மாகாணத்தில் போய் வீசியிருக்கலாம்; அதன் காரணமாகவே அத்துணை ஹிந்துக்களும் முஸல்மான்களாய் மாறியிருக்கலாம். ஆதலின், இப்பொழுது முஸ்லிம்கள் வாளின் வன்மையினாலேயே வம்புத்தனமாய் ஹிந்துக்களை முஸ்லிம்களாக ஆக்கினர் என்று சொல்பவர்களுக்கு ஏதேனும் வெட்கமென்பது ஏற்பட்டதா? இன்னமும், இஸ்லாத்தினுள் இன்றியமையாத இனிய அற்புத சற்குணங்களும், நல்லொழுக்கங்களும் உண்டென்பதும் அவர்களுக்கு வெளியாயிற்றா? இவ்விதமான நற்கருமங்களையும், சற்குணங்களையும் கண்டல்லவோ எமது மார்க்கம், இஸ்லாமிய அரசர்களின் காலந்தானென்ன! இன்னும் அதைவிட மிகமேலாய்த் துலங்கிக்கொண்டு வருகின்றது.
மறுபடியும் மூன்றாவது சாக்ஷியாக மிஸ்டர் அனீரக் சாஹெப் பஹாத்துர் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர் கூறுகிறார் : “வேதங்களின் இரகசியத்தினால் கி. பி. 1871-இல் இருந்து 1881 வரை பத்துவருஷ காலத்திற்குள்ளே முஸல்மான்களின் எண்ணிக்கை 96 லக்ஷத்து 72 ஆயிரம் அதிகமாய்ப் பெருகிவிட்டது.” என்ன! இந்தப் பெருக்கம் வாளாயுதத்தை நடத்தியதால் உண்டாயிற்றா? அல்லது வேறு எதையும் இதற்குக் காரணமாகக் கூறுவீர்களா?
நான்காவது சாக்ஷியாகப் புரொபெஸர் ஆர்னால்டு சாஹெப் பஹாத்துர் அவர்களை எடுத்துக்கொள்வோம். அவர் கூறுகிறார் : “வேதங்களின் இரகசியங்களின் காரணமாய் மத்திய தீவுகளிலும், மலேயாவிலும் மூன்று கோடி முஸ்லிம்கள் அதிகமாய் மல்கிவிட்டனர்.” என்னே! இங்கும் முஸ்லிம் வாட்கள் வீசிக்கொண்டிருந்தன போலும்!
|
இஃது ஒருபுறமிருக்க; நாம், ஓர் ஊரில் சிலரை ஹிந்துக்களாகவும், மற்றோர் ஊரில் அந்த வம்சத்தைச் சார்ந்தவர்களுள் சிலரை முஸ்லிம்களாகவும், அல்லது ஒரே ஊரில் ஒரே வம்சத்தினின்றும் சிலரை ஹிந்துக்களாகவும், சிலரை முஸ்லிம்களாகவும் கண்ணுறுகின்றோம். இதன் காரணந்தான் என்ன? ஒருகால் ஒரே வம்சத்தில் சிலரை ஔரங்கஜேப் தம்முடைய வாளாயுதத்தின் பலத்தால் முஸ்லிமாக்கி விட்டதன்பின், அவரது வாள் மற்றவர்களிடம் வருவதற்கு முன் துண்டமாய் விட்டதா? அல்லது ஒரு பாதி மனிதர்கள் முஸ்லிம்களானவுடனேதான் அவரது ராஜாங்கம் அழிந்துபோய் விட்டதா? அப்படி இல்லையென்று சொல்வீர்களாயின், தாங்கள் புகலும் வார்த்தைகள் பொய்யாய் முடியுமே. ஏனெனின், ஒரு பகுதியினர்மீது மட்டும் கத்திகளை உபயோகித்து இஸ்லாத்தை ஒப்புக்கொள்ள வைப்பதும், மற்றொரு பகுதியினர்மீது அவற்றை வீசாமலிருப்பதும் எப்படி முடியும்?
இந்தியாவில் முஸ்லிம்கள் எண்ணூறு வருடகாலமட்டும் அரசுசெலுத்தி வந்தும், இற்றை நாளில் 22 கோடி ஹிந்துக்களும், இத்தனை தேவாலய மடாலயங்களும் எஞ்சியிருக்கின்றன; ஆனால், ஸ்பெய்ன் தேசத்தில் முஸ்லிம்கள் தொள்ளாயிர வருஷகாலத்துக்கு மேல் அரசுபுரிந்து வந்தும், பிறகு கிறிஸ்தவ ஆதிக்கம் ஏற்பட்டபின்பு இக்காலத்தில் அத்தேசத்தில் ஒரு மஸ்ஜிதேனும் ஒரு முஸ்லிமேனும் எஞ்சியிருக்கவில்லையே என்னே! கிறிஸ்தவரின் காருண்யம்! இதுவும் போக; வாஸ்தவத்திலேயே இஸ்லா மார்க்கத்தை ஒப்புக்கொள்ளாதவர்கள் வெட்டப்பட்டிருப்பார்களாயின், இஸ்லாமானவர்கள் அனைவரும் விடப்பட்டு விட்டு, இஸ்லாத்தை ஒத்துக் கொள்ளாதவர்கள் அனைவரும் வெட்டப்பட்டே போயிருப்பார்கள். பிறகு இக் காலத்தில் இஸ்லாம் உண்மையான மார்க்கமன்றென்று கூறிக்கொண்டு திரியும் வான்கோழிகளும், காடைகளும், கௌதாரிகளும் நமது கண்ணுக்குப் புலப்படாமலே ஒழிந்துபோயிருக்குமே.
ஆதலின், இக்காலத்தில் இஸ்லாத்தை எதிர்த்துத்தாக்க இத்தனை லாலாஜீகளும், பண்டிட்ஜீகளும் இப்பரத கண்டத்தில் எஞ்சியிருப்பதிலிருந்தே வாளாயுதத்தின் வேகத்தால் சுத்தசத்திய சன்மார்க்கமான இஸ்லா மார்க்கம் இப்பரத கண்டத்தில் எப்பொழுதும் பரத்தப்பட வில்லையென்று நன்கு தெரிந்து கொள்ள வேண்டியது அத்தியாவசியமாய்க் காணப்படுகிறதென்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லையன்றோ?
-பா. தாவூத்ஷா
பட உதவி: அபூநூரா
<<நூல் முகப்பு>>