சில துஷ்டர்கள், இந்துமஹா சக்ரவர்த்தியாகிய ஔரங்கஜேப் ஆலம்கீர் (அவருக்கு ஆண்டவன் சுகசாந்தியைத் தந்தருள்வானாக) போன்ற பெரிய மதாபிமானிகளின்மீதும், சுல்தான் ஷிஹாபுத்தீன் கோரீ, சுல்தான் மஹ்மூது கஜ்னவீகள் போன்ற மாபெரும் அரசர்களின் மீதும் பொய்க் கட்டுரைகளைச் சுமத்தக் கருதி, முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தைத் தழுவாமலிருந்த ஒரு காரணத்துக்காகவே அவர்கள் கொலைசெய்து வந்தார்களென்று வாதாடுகின்றனர்.
ஔரங்கஜேப் மகாபெரிய சக்கரவர்த்தியாய் இருந்துவந்தார். அவர் தேசங்களைக் கைப்பற்றுவதற்காகவும், அவற்றைச் சீர்திருத்தம் செய்வதற்காகவும் யுத்தங்களைச் செய்தார்; அரசர்களிடம் பேசவேண்டிய பேச்சுக்களைப் பேசிமுடித்தார். இதில் ஹிந்துக்களை மாத்திரம் எடுத்துக்கொள்வது அநீதமாகவே காணப்படுகிறது; ஹிந்த முஸ்லிம் என்ற பாகுபாடின்றிச் சமரசமாகவே ஒன்றுபோல் நடத்திக் கொண்டுவந்தார். இதற்கு அன்னவரின் சரித்திரமே சான்றாய் நிற்கின்றது. அதுபோகட்டும்.
மஹ்மூது கஜ்னவீ கோயில்களைத் தகர்த்து விக்கிரஹங்களை வாரிக்கொண்டு போய்விட்டார் என்ற வார்த்தை வீணானதாகவே இருக்கிறது. “ஒவ்வோர் அரசனும் மற்றைத் தேசங்களின் ஐசுவரியங்களைக் கொள்ளையிடுவது வழக்கமே; இவ்வாறே மஹ்மூது கஜ்னவீயும் விக்கிரஹங்களின் வயிற்றுள் அதிக ஐசுவரியங்கள் உண்டென்றுணர்ந்து, அவற்றின் பக்கல் ஓடிக்கொண்டிருந்தான்; எவ்வளவோ அவனைத் தடுத்தும், தான் விக்கிரஹ நிக்ரஹம் செய்வதற்கும், விக்ரஹ ஆராதனை செய்யாமலிருப்பதற்குமே வந்தவனென்று கூறி அதையும் மறுத்துவிட்டான்,” என்றும் எதிரிகள் எழுதிவைக்காமலில்லை. ஆதலின், அவர் அப்படியே செய்ததாக நாம் வைத்துக்கொண்ட போதிலும், விக்ரஹங்களை நாசப்படுத்தியதால் எந்த ஹிந்துவையேனும் வற்புறுத்தி இஸ்லாத்தில் கொண்டுவந்தாரென்பது ஒன்றும் ஏற்படவில்லை.
“சத்தியார்த்த பிரகாச”த்தின் 11-ஆவது அத்தியாயத்தில் உருவமுள்ள ஈசுவரனான விக்ரஹங்களின் மீது மனமானது ஒருபோதும் நிலைநிற்க மாட்டாதென்றும், விக்ரஹ ஆராதனையினால் 16 வகைக் கெடுதல்கள் உண்டென்றும், விக்ரஹ ஆராதனை கூடாதென்பதற்குத் தகுந்த வேத ஆதாரங்கள் உண்டென்றும், விக்ரஹ ஆராதனை எந்த நேரத்திலும் ஆகாதென்றும் கூறுபவையும், இன்னமும் இவைபோன்ற பற்பல விதமான உபதேசங்களும் விக்ரஹங்களைத் தகர்த்தெறிய வேண்டுமென்ற போதனையையே உபதேசிக்கின்றன.
|
சங்கராசாரியர் விக்ரஹங்களை உடைத்துக்கொண்டிருந்தார்; இதைத் தயானந்த சுவாமிஜீ தமது 11-ஆவது அத்தியாயத்தில் கீழ்க்காணுமாறு வரைந்துள்ளார்: “இப்பொழுது பூமியிலிருந்து எடுக்கப்படும்படியான சிதறுண்ட விக்ரஹங்களெல்லாம் சங்கரருடைய காலத்தில் உடைக்கப்பட்டவைகள். உடைபடாதவை சமணர்களால் பயந்து பூமியில் புதைக்கப் பட்டவைகள்.” எனவே, எந்த இஸ்லாமான சக்கரவர்த்திகளின் தலைமீது பழிசுமத்தப் படுகின்றதோ. அந்த அரசர்களின் காலத்தில் அவர்களுக்காகப் பயந்து எந்த விக்ரஹமாவது எங்ஙனமாவது உடைபடாமலிருக்கும் பொருட்டு ஒளித்துப் புதைக்கப்பட்டதாய் எங்கேனும் ஒரு விஷயமேனும் காணப்படுகின்றதா? ஆரிய சமாஜிகளின் மூலபுருஷரான சுவாமி தயானந்தரும், மற்றும் ஆரியர்களும் தாங்களே விக்ரஹங்களை நிக்ரஹம் செய்பவர்களாய் விளங்கும்போது, மஹ்மூது கஜ்னவீயின்மீது ஏன் வீண்பழி சுமத்தவேண்டுமோ, தெரியவில்லை.
மஹா சக்ரவரத்தியாகிய ஔரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் குமாரனாயிருந்தும், அவரையும் ஆரிய சமாஜிகள் சும்மா விட்டனர்களில்லை; அவர்மீதும் ஆரியர்கள் தங்களாலியன்ற மட்டும் பழிதூற்றாமற் போகவில்லை. அவர் யாரையேனும் கொலை செய்திருப்பாராயின், அது ராஜாங்கக் குற்றத்துக்காகவேயல்லாமல், இஸ்லாத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காக அன்று. யுத்தகளத்திலுங்கூட ஹிந்து முஸ்லிம் என்ற வித்தியாசமின்றியே, முன்னணியில் நிறுத்தப்பட்டவனே கொல்லப்பட்டு வந்தான். இவ்வாறே ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனன் இவர்களுக்கிடையில் நடந்த விவாதங்களும், மஹாபாரத்தின் யுத்தங்களும், ராமராவண யுத்தமும், மற்றும் பழைய சண்டைகளும், பிரம்மாஜீ பார்வதிஜீயின் யுத்தங்களும் புராணங்களிலும் மற்றும் பல புஸ்தங்களிலும் நிறைந்து கிடக்கின்றன. ஆயினும், முகலாய சக்கரவர்த்திகளிடையேயும், பட்டான்களினிடையேயும் நடந்த ராஜீய யுத்தங்களெல்லாம் இஸ்லாத்தைப் பரத்துவதற்குதானா நிகழ்த்தப்பட்டன
ஔரங்கஜேப் தம்முடைய ராஜ்யாதிகார காலத்தில் அழிச்சாட்டியங்களும், அட்டூழியங்களும் அழந்துபோக வேண்டுமென்னும் நல்ல நாட்டத்துடனேதான் ஹிந்து முஸ்லிமென்ற பாகுபாடில்லாமல் சகல குறுநில மன்னர்களையும் அடக்கிக்கொண்டு வந்தாரென்பதே சரித்திர உண்மையாகும். விஷயம் இவ்வாறிருக்க, இதற்கு மாறாய் ஹிந்துக்களை முஸ்லிம்களாக்கக் கருதியே அவர் யுத்தங்களை நடத்திவந்தாரென்பது கட்டிலடங்காத கடலத்தனை பொய்யாகவேதான் கருதப்படுகின்றது. இப்படிக் கூறுபவர் நீதத்தை விட்டு அளவற்ற காததூரம் அப்பாலே நீங்கி நிற்கின்றனர். அவர் அரசராயிருந்துவந்தார். ஆதலின், தம் நீதத்துக்கொத்தவாறே ஒவ்வொரு கிரியையும் செய்துவந்தார். இவ்விடத்தில் நாம் ஒரு கேள்வி கேட்க வேண்டுவது அவசியமாய்க் காணப்படுகின்றது. அஃதாவது, “ஔரங்கஜேப் கைக்குள்ளிருந்த எத்தனை மனிதர்கள், எத்தனை ஹிந்து மந்திரிகள், எத்தனை சிற்றரசர்கள், எத்தனை ராஜாக்கள் துன்புறுத்தப்பட்டோ, அல்லது ஆசை வார்த்தை கூறப்பட்டோ முஸ்லிம்களாக்கப்பட்டார்கள்?” என்பதேயாம்.
ஔரங்கஜேப் தமது சரித்திரத்தைத் தாமே வரைந்துள்ளார்; அதில் அவர், “நான் இத்தனை ராஜாக்களை, இத்தனை மந்திரிகளை, இத்தனை சாதாரண ஹந்துப் பிரஜைகளை முஸ்லிமாக்கியுள்ளேன்,” என்று யாதோர் அச்சமுமின்றியே அதிக தைரியமாய்க் கூறுக்கூடியவராயிருந்தும், ஒரு வாக்கியத்தையும் அவர் அவ்விதமாய்க் கூறக் கண்டிலேம். இதனால் வெளிச்சமாவது யாதெனின், ஔரங்கஜேப் யாரையும் வம்பித்தோ துன்புறுத்தியோ சட்ட விரோதமாய் முஸல்மானாகச் செய்யவில்லை என்பதே.
தற்போது பிரிட்டிஷாரால் ஆளப்பட்டு வரும் தெஹ்லி என்னும் மாபெருந் தலைநகரின் கோட்டையில் வட்டவடிவுள்ள சக்கரத்தைக் கொண்ட அலமாரியுள் தொங்க விடப்பட்டிருக்கும் ஔரங்கஜேபின் சாசனத்தில் வரையப்பட்டிருக்கின்ற கோயில்களுக்களித்த மான்யங்களும், மன்னிப்புக்களும், அளவற்ற தர்மங்களுமே அவர்மீது ஆரியர்களும், கிறஸ்தவர்களுமான இஸ்லாத்தின் விரோதிகள் கூறும் அடாத பழிமொழிகளையும், அநியாய அவதூறுகளையும் உதைத்துத் தள்ளுவது மன்றி, ஔரங்கஜேபை ஹிந்துக்களுக்குப் பகைவரென்றும், கோயில்களைத் தகர்ப்பவரென்றும், வாளாயுதத்தின் வல்லமையால் இஸ்லாத்தை வளர்த்தவரென்றும் எண்பிக்க முயல்வோரும் பொய்யர்களே என்றும் ருஜுப்பித்து நிற்கின்றன.
இதுவுமல்லாமல் ஜயபுரியை (ஜெய்பூர்) ஆண்டுவந்த ராஜா ஜய்சிங் என்பவன் ஏதோ ஒருவகைத் தண்டனைக்கான காரணத்தை முன்னிட்டு ஔரங்கஜேபின் ஆணையின்படி சக்ரவர்த்தியின் சமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டான்; அப்பொழுது ஔரங்கஜேப் ஜயசிங்கை நோக்கி, “உனக்கு என்ன தண்டனை விதிக்க வேண்டுமென்று உத்தரவளிக்கும்படி நீ என்னிடம் நாடுகிறாய்?” என்று அவனுடைய இரண்டு கரங்களையும் தம்முடைய கையால் பற்றிக்கொண்டு வினவினார். அப்பொழுது ஜயசிங், “விவாகமாகும்போது பெண்ணும் புருஷனும் ஒரே கையைப் பிடிப்பதன் காரணமாய் அவர்கள் இருவரும் தங்கள் ஆயுள்பரியந்தம் அன்பாயிருக்க முடிபோட்டுக் கொள்ளுகின்றனர்; இப்பொழுது தாங்களோ என்னுடைய இரண்டு கரங்களையும் பற்றியிருக்கின்றீர்கள்,” என்று விடை பகர்ந்தான். உடனே சக்கரவர்த்தியானவர் ஜயசிங்கை விடுதலை செய்ததுமல்லாமல். அவனுடைய தேசங்களைச் சிறிது விஸ்தீரணப்படுத்தியும் அவன் வசமே ஒப்புக்கொடுத்து அனுப்பிவிட்டார். அன்று முதலே ராஜா ஜயசிங்கிற்குச் “சுமாமி” என்னும் பட்டமும் அளிக்கப்பட்டுப் பிரபல்யமாக்கப்பட்டதுமன்றி, இன்றளவும் அந்தப் பட்டம் அவனுடைய வம்சத்தில் வழங்கப்பட்டும் வருகின்றது.
எனவே, ஹிந்துமதத்தின்மீது தாம் கொண்டிருந்த துவேஷத்தின் காரணமாய்த்தான் ஔரங்கஜேப் இப்படிச் செய்தார் போலும்? அவர் மெய்யாகவே ஹிந்து மதத்தின்மீது துவேஷங்கொண்டிருப்பாராயின், ஒருவகைச் சமிக்கையைக் கொண்டே ஜயசிங்கை ஒரே வினாடிக்குள் இஸ்லாத்துக்குள்ளாக்கி இருப்பாரன்றோ? ஆனால், அவர் ஒரு முஸ்லிமானவராயிருந்தார்; ஆகவே, அவருக்கு அவ்விதமான அனுமதி மார்க்கத்தில் அளிக்கப் படாததனாலேயே அவர் நிர்ப்பந்தப்படுத்தி எவரையும் வலுவில் இஸ்லாத்திலாக்க முடியாதவராயிருந்துவந்தார்.
இன்னமும் ஔரங்கஜேப் விஷயமாய் வேறொரு பழியும் கீழ்க்கண்டவாறு சுமத்தப்படாமலில்லை. அஃதாவது : “ஒவ்வொருநாளும் ஒன்றேகால் மணங்கு கங்கணங்களென்னும் ஜினியூவைச் சேகரித்துக் கொள்ளாதவரை அவர் சாப்பிடுவதில்லை.” ஓ ஹோ! ஒரு சமயம் அவர் இதைச் சமையல் செய்து சாப்பிடுவதற்காகவே சேகரித்துக்கொண்டிருந்தார் போலும்! இதைக்காட்டினும் வேறு வீணான வார்த்தை யொன்றும் விருதாவாய்ச் சொல்லப்பட்டதில்லை.
ஔரங்கஜேப் சுமார் 50 ஆண்டுகள் மட்டும் ஆட்சி புரிந்துவந்தார்; அஃதாவது, 50 x 365 = 18,250 தினங்களாகின்றன.
தினமொன்றுக்கு 1¼ மணங்கு கங்கணம் என்பன 5/4 x 40 சேர் x 16 சட்டாங் x 5 தோலா = 4,000 தோலாக்களாகின்றன.
ஔரங்கஜேபின் 18,250 ஆட்சித் தினங்களுக்கும் அவரால் சேகரிக்கப்பட்டவை 73,000,000 தோலா ஜினியூவாகின்றன. இரண்டு ஜினியூ ஒரு தோலாவென்று வைத்துக்கொண்ட போதினும், ஏழு கோடியே முப்பது லக்ஷம் தோலாவுக்கும் 14 கோடியே 60 லக்ஷம் ஜினியூக்களாகும்.
எனவே, ஒரு ஜினியூவுக்கு ஒருவன் விகிதம் இத்தனை பிராம்மணர்களை ஔரங்கஜேப் தமது ஆட்சியின் காலத்திலே வதை புரிந்திருத்தல் வேண்டும்.
இப்பொழுது ஈண்டு நாம் கவனிக்கவேண்டிய தொன்றுண்டு. அஃதாவது : இக்காலத்தில் இந்தியாவின் மொத்த ஜனக்கிணதமானது 35 கோடி எனக் காணப்படுகிறது; இதிலும் ஜினியூ (வென்னும் கங்கணம்) அணியும் பிராம்மணர்கள் 2 கோடி காணப்படுவதும் மஹா கஷ்டமான தாகவேயிருக்கும். (மெய்யாகவே கங்கணம் அணியும் பிராம்மணர்கள் இலக்ஷக் கணக்குக்குமேல் கிடைப்பது முயற்கொம்புதான்.) விவாதத்துக்கென்று இரண்டு கோடி ஜினியூ அணியும் பிராம்மணர்கள் இருந்தார்களென்று வைத்துக்கொண்டபோதினும் 146,000,000 எங்ஙனம் இருந்திருக்க முடியும்?
|
மனிதர்களின் உற்பத்திக் கணக்கோ ஒவ்வொரு பத்து வருஷத்துக்கும் மிகமிக அதிகமாகவே பெருகிக்கொண்டு வருவதைக் காண்கின்றோம். இவ்வாறு காலத்தை முன்பின்னாக வைத்து திருப்பிப் பார்ப்போமாயின், பின்னே செல்லச் செல்ல நாளுக்கு நாள் ஜனத்தொகை குறைந்துகொண்டே போகிறது என்பதுதான் ஏற்படும். இல்லை, ஒரு கணக்குக்காக ஒவ்வொருநாளும் 8,000 கங்கணம் பூண்ட பிராம்மணர்களின் ஜினியூக்கள் மாத்திரம் சேகரிக்கப்பட்டதேயல்லாமல், ஜினியூ அணிந்திருந்தவர்கள் கொல்லப்படுவதில்லை என்று கூறப்படுமாயின், இதைக் காட்டினும் அறியாத்தனமான வார்த்தை வேறு என்னதான் இருத்தல் கூடும்? மேற்கூறப்பட்ட காட்டுமிறாண்டித்தனமான செய்கைகள் வல்லமையும், ஒழுக்கமும், உறுதியுமுள்ள அப்படிப்பட்ட மஹா சக்கரவர்த்தியால் உண்டாவது சாமான்யமான விஷயமாயும், புத்திக்கும் யுத்திக்கும் ஏற்கும்படியானதாயும் இருப்பது ஒரு சிறிதும் முடியாது. ஏனெனின், இவ்வளவு கௌரவமுள்ள சக்கரவர்த்தி யாதொரு காரண காரியமுமின்றித் தம்முடைய பிரஜைகளின் எதிர்ப்பை உண்டுபண்ணிக் கொள்ளுதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க முடியாதென்றே நாம் அறிந்துகொள்ளுகிறோம்.
இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கண்மூடித்தனமாய் வரைந்து தள்ளும் கிறிஸ்தவர்களின் சரித்திராசிரியர்களும், போதகாசிரியர்களும் கவனித்துப் பார்ப்பார்களாயின், இஸ்லாத்தைத் தவிர்த்துக் கிறிஸ்துமதம் மெய்யாகவே வாளின் வேகத்தால்தான் வளர்ந்ததென்றும், அதை ஒப்புக்கொள்ள மறுத்தவர்கள் கொல்லப்பட்டே தள்ளப்பட்டார்கள் என்றும் சந்தேகமின்றியே தெரிந்துகொள்வார்கள்.
உதாரணமாக, கி.பி. 1492-இல் எலிஜபத் மஹாராணியின் காலத்தில் ஸ்பெய்னிலுள்ள கிரனாடா (கர்னாதா) என்னும் நகரம் பிடிக்கப்பட்டதன் பின்பு அதிலிருந்த 350,000 முஸ்லிம்கள் கிறிஸ்துமதத்தை ஒப்புக்கொள்ளாத காரணத்தினாலேயே கொலை செய்யப்பட்டார்கள். ஸ்பெய்னிலிருந்த மஸ்ஜித்களெல்லாம் கிறிஸ்தவர்களின் கோயில்களாக மாற்றப்பட்டன. எத்தனையோ மதவிசாரணைக் கம்மிட்டிகள் (INQUISITIONS) நியமிக்கப்பட்டு, அதன் காரணமாய் இலக்ஷக் கணக்கான முஸ்லிம்களும், யூதர்களும், புறாட்டெஸ்ட்டென்ட்களும் கொல்லப்பட்டார்கள். எங்கேனும் இஸ்லாமானவர்கள் இவ்வித ஒழுக்கமற்ற விதமாய் நடந்துகொண்டார்களாவென்று அநதக் கிறிஸ்தவப் பாதிரிகளைக் கேட்கின்றோம். (உண்மையான ஸ்பெயின்தேச சரித்திரத்தைப் படிக்கும் எந்த இஸ்லாமானவனது கண்ணினின்றும் இரத்தக் கண்ணீர் ததும்பாமலிருக்க முடியும்? இன்ஷா அல்லாஹ், அந்தச் சரித்திரத்தையம் வெளியிட ஆண்டவனே போதும்.)
கி.பி. 1572-ஆம் வருஷம், ஆகஸ்ட்மாதம், 24-ந் தேதி ஸெய்ண்ட் பார்த்தாலோமியோவின் நாளன்று பிரான்ஸ் தேசத்தில் 9-ஆவது சார்லஸின் காலத்தில் ஓர் இரவில்மட்டும் 25 ஆயிரம் புறாட்டெஸ்ட்டென்ட்கள் கொல்லப்பட்டார்கள்; சவங்கள் சாதாரண நடைப் பாதைகளிலெல்லாம் சுமந்து கிடந்தன; நாய் நரிகளும் அவைகளைத் தின்னாமலில்லை.
கி.பி. 976 முதல் 1013-ஆம் வருஷம் வரை மால்ட்டா, ரோட்ஸ், சிசிலி முதலிய இடங்களிலிருந்த முஸ்லிம்களும், மற்றும் சிறிய தீவுகளிலுள்ள முஸ்லிம்களும் ஒருவரும் விடப்படாமல் கொல்லப்பட்டே ஒழிக்கப்பட்டார்கள். அந்தத் தீவுகளில் வசித்து வந்தவர்களெல்லாம் அப்பொழுது முஸ்லிம்களாகவே இருந்து வந்தனர். கிரைட் என்னும் தீவிலும் இப்படியேதான் செய்தார்கள்.
ஔரங்கஜேப் வாளாயுதத்தின் வேகத்தால் இஸ்லாத்தை வளர்க்க நாடியிருப்பாராயின், மேற்கூறப்பட்ட தீவுகளில் நடந்தேறியதேபோல் ஏன் இந்தியாவிலும் செய்திருக்கக் கூடாது? அப்பொழுது இத்தனை ஹிந்துக்களும் இத்தனை தேவாலயங்களும் இங்கு எஞ்சியிருக்க மாட்டா; அந்தத் தீவுகளில் நடந்தேறியதேபோல் ஒரு ஹிந்துவும் இந்தியாவில் இல்லாமலே போயிருப்பார். ஒருகால் ஔரங்கஜேப் ஹிந்துஸ்தானத்தின்மீது பரிபூரண சக்தியற்றவராய் இருந்தாரென்று கூறுவரோ? அல்லது இப்படிப்பட்ட கொடுமையை விளைவிக்க முடியாதவராயிருந்தாரா? இல்லை, இல்லை. இஸ்லாமார்க்கம் வாளாயுதத்தின் வல்லமையைக்கொண்டு வளர்ப்பதற்கு அனுமதியளிக்காததே ஔரங்கஜேப் அவ்வாறு செய்யாமைக்குக் காரணமாயிருந்துவந்தது.
கி. பி. 780-ஆம் வருஷத்தில் பிரான்ஸ்தேச சக்கரவர்த்தியாகிய சார்லஸ் என்பவன் “சீக்னி” என்னும் தேசத்தைக் கைப்பற்றி, அன்னவனின் அனுமதியின் பிரகாரம் பாதிரிகளும் ஏற்படுத்தப்பட்டு, யார் அதிக சந்தோஷத்துடனே கிறிஸ்து மதத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றாரோ, அவருக்குத் தக்கவாறு கட்டாயப்படுத்தி ஞானஸ்னானம் பெறச் செய்யவேண்டுமென்றும், அவ்வாறு ஞானஸ்னானம் பெற மறுப்பார்களாயின், மரண தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்றும், கிறிஸ்து மதமல்லாத வேறு மார்க்கத்தை அனுசரிக்கும் மற்ற மனிதர்களும் மரண தண்டனைக்கு உள்ளாவார்களென்றும் கட்டளைகளும் பிறப்பித்தான்.
கி. பி. 1098-ஆம் வருஷம் கிறிஸ்தவர்கள் அனட்டோலியாவைக் கைப்பற்றி, அதில் வசித்துவந்த 70,000 முஸ்லிம்களான ஆண் பெண் குழந்தைகளை எல்லோரையும் கொலை புரிந்ததுமன்றி, அவர்களின் மாம்சத்தையும் தின்னலாயினார்கள். இப்படிப்பட்ட அனாசாரமான அருவருக்கத்தக்க விஷயங்கள் இஸ்லாத்தின் எந்தச் சரித்திரத்திலாவது காணப்படுமாயின், எண்பிப்பீர்களாக. இன்னமும், இஸ்லாம் வாளினாலேயே பரத்தப்பட்டதென்று கூறுவார்களாயின், அதையும் நிரூபிப்பது அவர்களின் கடமையாகுமன்றோ?
முஸ்லிம்கள் தங்கள்மீது வரும் எதிரிகளின் பாணங்களைத் தடுக்கும்பொருட்டே கையில் வாளை ஏந்தினார்கள், என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மையேயாகும். இதையல்லாத வேறு வார்த்தைகள் வீண் வாதமே அல்லாது வேறில்லை. மேற் கூறப்பட்டவைகளே போன்ற அனேக விஷயங்களை ஈண்டு விரிவஞ்வி விடுத்தோம்.
இன்னமும், இஸ்லாமார்க்கம் வாளாயுதத்தின் வேகத்தாலேதான் வளர்க்கப்பட்டதென்று வாதித்து நிற்பார்களாயின், எம்முடைய சகோதரர்கள் சற்று நிதானிப்பார்களாக. சீனா தேசமும், இன்னமும் அதே போலுள்ள மற்றும் பற்பல தேசங்களும் இஸ்லாமிய ராஜரீகங்களை அடைந்திராததுமன்றி, வாள் என்னும் வம்புகளைக் கனவிலும் கண்டிராதனவாயும் இருந்தன. ஆனாலும், அத்தேசத்திலோ இற்றை நாளிலும் 8 கோடி மனிதர்கள் விக்ரஹ ஆராதனையைப்போன்ற வேம்பான வம்பு வணக்கங்களைத் தகர்த்தெறிந்துவிட்டு, ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமற்ற ஒரே ஆண்டவனான பரஞ்சோதியாயிருக்கின்ற பரிசுத்த சைதன்ய அல்லாஹ்வின் நேர் மார்க்கமான இஸ்லாத்தையே ஏற்றுக்கொண்டு இணங்கி மனமுவப்புடன் வணக்கம் புரிந்து வரகிறார்களென்பதை யாரே மறுக்கத் துணிவார்?
இதனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாவது, அத்தேசத்தின் மக்கள் இஸ்லாத்தின் இன்பமயமான சற்குணங்களையும், நற்போதனைகளையும் கண்டு மகிழ்ந்து பரிபூரண சந்தோஷத்துடனேயே சுயமே இம்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதே யாம். வாளின் வீச்சினால்தான் இஸ்லாம் வளர்ந்தோங்கிற் றென்னும் வார்த்தையையும் அவர்கள் பாழ்படுத்தி விட்டனர். எனவே, இஃதேபோல்தான் இவ்விந்தியாவிலும் இஸ்லா மார்க்கம் தழைத்தோங்கத் தலைப்பட்டது. இந்தியர்களையும் சீனர்களையும் ஒருவரும் வாளின் வன்மையால் வற்புறுத்தி இஸ்லாமார்க்கத்தில் கொண்டுவந்து சேர்க்கவில்லை.
இத் தன்மையாகவே ருஷ்யாலும் அதைச் சாந்த அனேக நாடுகளிலும் வசித்துவந்த கோடிக்கணக்கான மனிதர்கள மனமார்ந்த ஆர்வத்துடனேயே இஸ்லா மார்க்கத்தைச் சுயமே ஏற்றுக்கொண்டார்கள். இது மட்டுமா? இப்பொழுதுங்கூட ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா முதலிய மற்றும் அனேக தேசங்களில் இஸ்லாமிய ராஜ்யாதிகாரம் இல்லாமலிருந்தும், முஸ்லிமானவர்கள் பிரஜைகளாகவே இருந்துவருகின்றனர். இவ்வாறிருந்தும், அங்காங்கிருக்கின்ற அனேக மனிதர்கள் இன்னமும் தங்கள் பூரண சந்தோஷத்துடனே இஸ்லாமார்க்கத்தைச் சார்ந்து சுயமே இஸ்லாமிய சகோதரத்துவத்தை இப்பொழுதும் வளர்க்காமலில்லை.
நம்முடைய ஆரிய சகோதரர்கள் தங்களாலியன்றவரை இஸ்லாத்தை எதிர்த்தும், தங்கள் வேதத்தைப்பற்றிய பிரசாரம் அளவுக்குமிஞ்சி அதிகம் செய்தும்வரும் இக்காலத்திலுங்கூட நமது இந்தியாவில் 5 அல்லது 10 மனிதர்கள் முஸ்லிமாகாமல் ஒரு நாளேனும் கழிவதாய்க் காணப்படவில்லை.
-பா. தாவூத்ஷா
படம்: அபூநூரா
<<நூல் முகப்பு>>