ஆதிகாலத்தில் முஸ்லிம்களின்மீது பலவந்தமாகக் கொண்டுவரப்பட்ட தற்காப்பு யுத்தத்தின் அவசியத்தில் ஈடுபட்டு அவர்கள் இறுதியில் பெருவெற்றியே அடைந்தார்கள். இஸ்லாத்தின் எதிரிகளின் அக்கிரம யுத்தங்களினால் கோடிக்கணக்கான முஸ்லிம்களினுடையவும் அல்லாதவர்களினுடையவுமான சென்னிகள் உதிரக் கடனுள் ஆழ்த்தப்பட்டன. எனவே, எதிரிகளின் பலாத்காரத்தினால் முஸ்லிம்கள் உருவிய தற்காப்பின் வாள்மீது எவரே தோஷம் கற்பிப்பார்? இஃதொரு தோஷமேயெனக் கூறுவார்களாயின், அன்னவர்களும் தங்களுடைய மதத்தின் பெயரால் எத்துணையோ எண்ணத் தொலையாத இரத்த சமுத்திரத்தை உண்டு பண்ணினார்களென்று யாமும் எண்பிக்கத் தையாராயிருக்கின்றோம்.
காபிரீன்கள் தங்களுடைய விஷமத்தின் பயனாய், பிறகு முஸ்லிம்களால் தலை துணிக்கப்படுவார்களாயின், அதற்கு இஸ்லா மார்க்கம் உத்தரவாதம் கூறுவது முடியாது. அவர்கள் விதைத்த சிறு வித்தே பிறகு பெரு விருக்ஷமாக மாறிவிட்டது; அவர்கள் உண்மையை உணர்ந்து ஒழுங்காக நடந்து வந்திருப்பார்களாயின், முஸ்லிம்களுடன் அக்கிரமாக மல்லாடத் துணிந்திருக்க மாட்டார்கள்; அவர்கள் முஸ்லிம்களின் வழியில் குறுக்கிட்டதனால்தான் முஸ்லிம்களும் தற்காப்பினிமித்தம் அவர்களை வழிவிலகச் செய்தார்கள். அந்தக் காபிரீன்கள் அக்கிரமமாக இஸ்லாமார்க்கத்தை இவ்வுலகினின்றும் கல்லியெடுத்துவிடப் பார்த்தார்கள்; ஆனால், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் யார்தாம் விட்டுக் கொடுத்துக்கொண்டு வாளா குந்திக்கொண்டிருக்கத் துணிவார்?
முஸ்லிம்கள் தற்காப்பினிமித்தம் யுத்தம் புரிந்தார்களென்பதை நாம் தாராளமாக ஒத்துக்கொள்ளுகிறோம். இவர்கள் பலகாலும் தங்களுக்கேற்பட்ட எதிரிகளின் இடைவிடா இடுக்கண்களைவிட்டு அவர்களுடைய கஷ்ட நிஷ்டூரங்களையும், கொடுமைக் கொலைகளையும், கொடூரத் துன்பங்களையும், அநீதங்களையும், அக்ரமங்களையும் அடியோடு இனியில்லாவண்ணம் ஒழிக்க வேண்டுமாயின், அன்னவரிடமிருந்து போதுமான வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்டாலல்லது தங்களுக்கொன்றும் இவ்வுலகில் தக்க பந்தோபஸ்தில்லையென்னும் ஒருவகைத் தீர்மானத்துக்கு வந்து சேர்ந்தார்கள். எனவே, இஸ்லாம் தோன்றி 25-ஆவது வருஷத்துக்குப் பின்பு ஹஜ்ரத் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் அரசுபுரிந்துவந்த காலத்தில், சுற்று வட்டத்திலுள்ள எல்லா அரசர்களுக்கும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது நலமென்னும் அறிக்கையொன்று அனுப்பப்பட வேண்டுமென்று முஸ்லிம்கள் தீர்மானம் செய்து முடித்தார்கள். (ஏனெனின், அம் முஸ்லிம்கள் எதிரிகளால் இம்சிக்கப்படாமலிருக்கும் பொருட்டு இவ்வாறு செய்யப்பட்டது). பிறகு அவர்கள் இஸ்லாமார்க்கத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பார்களாயின், (முஸ்லிம்களை அன்னவர் துன்புறுத்தாமலிருக்கும் பொருட்டு) “ஜிஸ்யா” வென்னும் திறைப்பணம் கேட்கவேண்டு மென்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு ஜிஸ்யாவையும் அவர்கள் கொடுக்க மறுப்பார்களாயின், அதன் பின்னர் யார் பலசாலியென்பதை அறிந்து கொள்ளும்பொருட்டு யுத்தமும் அத்தியாவசியமென்று தீர்மானிக்கப்பட்டது. (இவ்வாறு செய்வதால் பலசாலி இன்னாரென்னும் விஷயம் யுத்த களத்தில் பகிரங்கமாக விளங்கிவிடுமாதலின், அதன்பின்பு எதிரிகள் முஸ்லிம்களுக்கு இழைக்கக்கூடிய இன்னல்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தனை புரிவார்களென்று இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இஸ்லாத்தினிடத்தும் முஸ்லிம்களிடத்தும் காபிரீன்களுக்கு ஒருவிதமான நன்மதிப்புள்ள அச்சப்பாடு ஏற்படவேண்டு மென்னும் எண்ணத்துடனே அவ்வாறெல்லாம் தீர்மானிக்கப்பட்டதல்லாமல், அனுஷ்டானத்தில் ஒருபோதும் அவ்வாறு செய்யப்படவில்லை. தேச சரித்திரமும் இதற்குச் சான்றுபகரும்.)
|
இன்னமும், இப்படிப்பட்ட இன்னல்களும் இடையூறுகளும் நான்காவது கலீபாவான அலீ (ரலி) அவர்களுடைய ராஜ்யாதிகாரத்தின்போதே ஒழிந்துபோயின. அக்காலத்தில் வாளாயுதத்தின் பலத்தைக்கொண்டு இஸ்லாத்தைப் பரத்த எண்ணியிருப்பார்களாயின், ஜிஸ்யாவென்னும் ஒரு சொல்ப வரியைப் பெற்றுக்கொண்டு எதிரிகளை இஸ்லாத்துள் சேர்க்காமல் சும்மா விட்டிருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிராது. இஸ்லாத்தின் நன்மாராயங்களை ஏற்றுக்கொள்ள மனமில்லாதோர் ஜிஸ்யாவைக் கொடுத்துவிட்டுச் சுகமே எதேச்சையா யிருக்கலாமென்னும் அனுமதி மிக நன்றாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இம்மட்டுமென்றா நினைக்கின்றீர்கள்? யுத்தகளத்தில் சிறை பிடிக்கப்பட்ட யுத்தக் கைதிகளுங்கூட இஸ்லாத்தை ஏற்காமல் ஜிஸ்யாவை மட்டும் கொடுத்துவிட்டு விடுதலை பெறுதற்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
எனவே, எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும், எவனேனும் ஒருவன் ராஜதுரோக சம்பந்தமான மாபெருங் குற்றதுக்காகவல்லாமல், கேவலம் இஸ்லாமார்க்கத்தைத் தழுவவில்லையென்னும் ஒரு சாதாரண சம்பவத்துக்காக வாளின் முனைக்கு இரையாக்கப்பட்ட துண்டோவென்று இஸ்லாத்தின் பண்டைச் சரிதையை ஏடேடாய்ப் புரட்டிப் புரட்டிப் பார்ப்போமாயினும், அஃதொரு முயற்கொம்பாய்த்தான் காணப்படும். அரசியல் சம்பந்தமான குற்றத்தினிமித்தம் ஒருவன் கொல்லப்பட்டிருப்பானாயின், அதற்கு இஸ்லா மார்க்கம் எங்ஙனம் ஜவாப்தாரி யாகும்? இப்படிப்பட்ட கொலைகள் ஆரியர்களின், ஏன் ஹிந்துக்களின், இதிகாசங்களென்னப்படும் இராமாயணம், மகாபாரதமென்னும் பெருங் காப்பியங்களில் மட்டுமல்லாமல், அன்னவரின் வேறுபல மதகிரந்தங்களிலும் அனந்தம் காணப்படவில்லையா? (இராமாயணத்தில் வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றதற்குச் சமாதானம், வால்மீகி மகரிஷி தம்மாலியன்றமட்டும் சிம்புவைத்துக் கட்டிக்கூறியும், இன்றளவும் அந்த இராமனுடைய தவறான இழிசெய்கையானது உலக நிந்தனையினின்றும் ஒழிந்தபாடில்லை.)
அதிகமாயில்லாமற்போயினும், குறைந்த பக்ஷம் “சத்தியார்த்த பிரகாசம்” 11-ஆம் அத்தியாயத்திலுள்ள “ஆரிய சக்ரவர்த்திகளின் வம்சாவளி”யில் காணப்படும் யுதிஷ்டிர சக்ரவர்த்தி முதற்கொண்டு யசபால சக்ரவர்த்திவரை வந்துள்ள அரசர்களின் பெயரை மட்டும் ஞாபகத்தில் வைத்தக்கொள்வதே போதுமாகும். அந்தச் சக்ரவர்த்திகளிடம் அமைச்சர் வேலைபார்த்தக் கொண்டிருந்த நன்றிகெட்ட மந்திரிகள் பலர் அந்த அரசுரிமையைத் தாங்களே அடையவேண்டுமென்னும் கெட்ட எண்ணம் குடிகொண்டவர்களாய்த் தங்கள் சக்ரவர்த்திகளைக் கொலைபுரிந்துவிட்டுத் தாங்களே சிம்மாசனாதிபதிகளாய் மாறிவிட்டனர். குறிப்பாகக் கூறவேண்டுமாயின், விக்கிரமாதித்த மகாராஜாவோ பெரிய தர்மசீலரென்றும், மிக்க நல்லவரென்றும், இரக்கத்தன்மையுள்ளவரென்றும், நீதிமானென்றும், ஒற்றுமையின் அவதாரமேயென்றும் போற்றப்பட்டு வருவதுமல்லாமல், அவரது காலம் முற்போக்குள்ளதென்றும், அவர் பெரிய வேதாந்தியானபடியால் தரம் நெறியுடன் நடந்துவந்தாரென்றும் பெரிதும் சிலாகித்துப் பேசப்படுகின்றார். இப்படிப்பட்ட விக்கிரமாதித்தன் யாதொரு காரணமுமின்றி, தெஹ்லி(டில்லி)யிலுள்ள மோஹன்பால் ராஜாவைக் கொலைபுரிந்து தெஹ்லியின் ராஜ்யாதிகாரத்தையும் கைப்பற்றினார். ஆனால், நல்லெண்ணம் குடிகொண்ட நல்லவர்களுக்குத் தங்கள் ராஜ்யத்தை மட்டும் பரிபாலனம் செய்துகொண்டு அதிலேயே காலங் கழித்து வருவது போதாது போலும். அண்டை அயலிலுள்ள அரசர்கள் ஏமாந்தவர்களாக அல்லது பலஹீனர்களாயிருந்தால், பலசாலியாயுள்ள அரசன் அவர்கள் ராஜ்யத்தை அபகரித்துக்கொள்ள வேண்டுமென்பதுதான் ஆரியமத உபதேசமாயிருக்கிறது.
இன்னமும் ஹிந்துக்களின் வேதத்திலோ நூற்றுக்கணக்கான, இல்லை, ஆயிரக்கணக்கான இடங்களில் யாதொரு காரணமுமின்றிக் கொலைபுரிதற்கும், யுத்தங்கள் செய்தற்கும் வேண்டியமட்டும் கட்டளைகள் காணப்படுகின்றன. இம்மட்டுமா? தங்களுடைய வேததர்மத்தை ஒத்துக் கொள்ளாமல் அதற்கு மாறாயிருப்பவர்களை ஊதிச் சாம்பலாக்குவதற்கும், அவர்களிருக்கும் ஊரையே அழித்துக் கொட்டை போடுவதற்கும், அதன் நிலங்களையெல்லாம் மிருகங்களை விட்டுக் கீறிக்கிழித்து நாசமாக்குவதற்கும், விஷங்கலந்த காற்றினால் அல்லது நெருப்பின் அமளிகளால் அவர்களை ஒழித்து விடுவதற்கும் வேண்டிய அத்தாக்ஷிகளும் ஆரியர் வேதத்தில் இல்லாமற் போகவில்லை.
ஆனால், எமது பரிசுத்த குர்ஆன் ஷரீபிலோ, எவரையேனும் கொல்ல அனுமதி அளிக்கப்பட்டிருக்குமாயின், ஆரிய வேதங்களில் யாதொரு விதமான காரணமுமின்றிக் கொன்று விடுதற்கும், தங்களுடைய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்னும் ஒரே காரணத்துக்காக மட்டுமே உயிர்வதை புரிதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதே போன்ற அனுமதி அன்று என்பதை மட்டும் நாம் உறுதியாகக் கூற முன்வருவோம். எமது குர்ஆன் கூவியழைப்பதாவது : “யார் உங்களைக் கொல்லுகிறார்களோ, அவர்களையே நீங்களும் கொல்லுங்கள்.” “மேலும் நீங்கள் வரம்பு கடவாதீர்கள். (ஏனெனின்) வரம்பு கடப்பவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” பிறகும் அது கூறுகின்றது : புரட்சி உண்டு பண்ணுபவர்களை ஆண்டவன் நேசிக்கமாட்டான்; ஏனெனின், “புரட்சியை உண்டு பண்ணுவது கொல்வதைக் காட்டினும் கொடிதாகும்.” அஃதாவது. எந்த முஸ்லிமக்கும் கொடுமையால் புரட்சியை உண்டுபண்ண அதிகாரம் கிடைக்க மாட்டாது; ஆனால், எந்த முஸ்லிமேனும் துன்புறுத்தப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ போய்விடுவானாயின், அப்படிப்பட்ட குற்றவாளியை மன்னித்துவிடுதற்கு எமது வேதத்தில் ஒரு மேலான கட்டளை பிறந்துள்ளது. ஏனெனின், “நிச்சயமாகவே ஆண்டவன் பொறுமைசாலிகளுடன் இருக்கிறான்.”
இப்படிப்பட்ட கட்டளைகளே எமது பரிசுத்த வேதவாக்கியத்தில் அனேகம் மல்கிக் கிடக்கின்றன. இவ்வாறான நிலைமையிலே இஸ்லாமார்க்கம் வாளாயுதத்தால் பரத்தப்பட்டதென்றால், அஃது எமது குர்ஆனின் மார்க்கமாகாது; குர்ஆனை ஒப்புக்கொண்ட வேறெந்த முஸ்லிமும் இதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டான்; ஏனெனின், இஸ்லா மார்க்கம் சாந்த குணத்தின் மூலமாயும், சற்குண நல்லொழுக்கங்களுடனேயும் யாதொரு விதமான துன்புறுத்தலும் இல்லாமலுமே விருத்தியடைதல் வேண்டுமென்று எமது திருமுறை கூறாநிற்கின்றது.
எனவே, ஒருவருக்கும் வாளால் இஸ்லாத்தை உன்னத நிலைக்குக் கொண்டுவருதற்கு அதிகாரம் கிடையாது. வாளின் வேகத்தாலேயே இஸ்லாம் இப்படிப்பட்ட நிலைமையை அடைந்தது என்பதற்குத் தக்க சரித்திர ஆதாரமும் கிடையாது. அப்படியே உண்டெனக் கூறுபவன் பொய்யனாகவே காணப்படுவான்.
-பா. தாவூத்ஷா
படம்: அபூநூரா
<<நூல் முகப்பு>>