வேதங்களின் அக்கிரமம் – 2

by பா. தாவூத்ஷா

ஆரிய வேதத்துடைய மார்க்கத்தின் நற்குணங்களின் காரணமாய்ப் பகை வைப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது; 

இது பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும் படுகிறது. ஆனால், வேதமந்திரத்தின் உபதேசம் இப்படி இருக்குமாயின், அஃதாவது, யார் நம்மிடத்தில் பகைமை வைக்கிறானோ அவனை நாமும் ராஜாவும் சேர்ந்து புலியின்வாயில் போட்டுவிடவேண்டும், நாம் யாரிடமாவது பகைமை வைப்போமாயின் நம்மை அவனும் ராஜாவும் சேர்ந்து புலியின் வாயில் புகுத்திவிடவேண்டும், என்று இருந்திருப்பின், அது நீதமாயிருக்கும். அப்படி இல்லாமல், “உம் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறீர்? எம்வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறீர்?” என்னும் பழமொழிக்கொப்பத் தனக்கு எப்பொழுதும் கஷ்டம் வந்து நேரிடாவண்ணம் ஒருதலைப் பக்ஷப் பிரயோஜனமாகவே வேதத்தில் உபதேசம் காணப்படுகின்றது. எனவே, வேதம் தர்மமற்றதையும், அநீதத்தையுமே போதிக்கின்றது. இதேபோல் இந்த வேதத்துக்குப் பரிந்துபேசியும், இவ்வேதத்தைப் புகழ்ந்து கூறியும் வரும் மனிதர்களின் வாக்கும் செய்கையும் இப்படித்தான் இருக்கும். இப்படிப்பட்ட வார்த்தைகள் எப்படி ஈசுவரன் வார்த்தையாய் இருப்பது முடியும்?

இல்லை! இதுதான் வேதம் என்று சொல்லப்பட்டு மிகப் புகழ்ந்து பேசப்படுமாயின், அது வெட்கத்துக்குரியதும், பொய்யானதும், தவறானதுமாகவே இருக்கும்.

இதேவிதமாக மற்றொன்றைப் பார்க்க: யஜூர் 15. 19. “நாம் எந்த மனிதர்களைப் பகைக்கிறோமோ, அல்லது எந்த மனிதர்கள் நம்மைப் பகைக்கின்றார்களோ, அவர்களை நாம் (ஆரியர்கள்) இரத்தத்தைப் பருகும் உயிர்ப் பிராணிகளின் வாயில் போட்டுவிடவேண்டும்.”

ஏனெனின், அப்பொழுதுதான் அம்மிருகம் அவர்களைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கீறிக் கிழித்துக் கண்ட துண்டங்களாகச் செய்து தின்னுவது சாத்தியமாகும். ஆஹா என்ன அருமையான வேதம்! அதன் உத்தரவுகளும், உபதேசங்களும் எத்துணை இனிமையாய் இருக்கின்றன? சுவாமி தயானந்தர் இவைகளையெல்லாம் பார்த்த பிறகுதான் அவ்வேதத்தை மெச்சினாரென்றும், அல்லது அதைப் பாராமலே புகழ்ந்தாரென்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர் இதையெல்லாம் பார்த்ததன் பிறகே பரிசுத்தக் குர்ஆன்மீது பழி சுமத்துவதையும், வேதங்களைப் புகழ்வதையும் மேற்கொண்டிருப்பாராயின், காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்னும் கதைதான் அவரது செய்கைக்கு ஒப்பாகும்.

ஆஹா என்ன ஆச்சரியம்! உண்மையில் நீதிமான் ஒருவருமா ஆரிய சமாஜிகளுள் இல்லாமற் போய்விட்டனர்? அப்படி இருந்திருப்பாராயின், சுவாமிஜீயின் இவ்விதமான ஆபாச அசுத்த மொழிகளையும், தவறுதல்களையும், வீண் வார்த்தைகளையும் கண்டு வேதங்களின்மீது அவருக்குண்டான ஞானம் எவ்வளவென்று உணர்ந்து, அவர் செய்திருக்கும் வேலைகளுக்கு மாறு செய்வதுமன்றி, எட்ட நின்று கையைக் கட்டிக்கொண்டு, ‘இந்த வேதங்கள் எங்களுக்கு வேண்டாம்,’ என்று நோட்டீஸும் கொடுத்து விடுவார், என்பது திண்ணம்.

மேலும் பார்க்க: யஜூர் 11.3. “ஏ அரசனே! எவ்விதமாய்ப் பாதுகாத்துவரும் அறிஞனின் சிஷ்யர்கள் வேதங்களை அறிகிறவர்களாயிருந்து பகைவர்களின் தேசங்களை அழித்துத் தங்கள் தலைமைத் தனத்தையும், கௌரவத்தையும் இரட்டிப்பாகச் செய்து விடுகின்றனரோ, அதேபோல் மற்ற அறிஞர்களும் செய்வார்களாக.”

என்ன மஹாராஜ் தயானந்தரே! இப்பொழுது சொல்வீராக. (நான் அவர்கள்மீது குறைகூறி வந்தேன்; ஆனால், அஃது என்னுடைய குற்றமேயென்பது இப்பொழுது வெளியாயிற்று.) ஆஹா! ஆச்சரியம்! தாங்கள் கற்பித்துக்கொடுப்பதும், தங்கள் புத்தியும், யுக்தியும், நீதமும், நெறியும், உண்மையுரைத்தலும், உயர்ந்த வேதங்களின்மீது தாங்கள் கொள்ளும் பெருமையும், அல்லாஹ்! அல்லஹ்!! வாயினால் சொல்லவுங் கூடவில்லையே. பொதுவாக உலகத்திலுண்டான சகல மதங்களையும், குறிப்பாக எமது பரிசுத்தக் குர்ஆனெ மஜீதையும் தாங்கள் தூஷிப்பதும், உதறித் தள்ளுவதும் எவ்வளவு என்றுரைப்பது? இவைகளெல்லாம் தங்கள் அகத்தில் உண்டானதையல்லவோ வெளியாக்குகின்றன? மேலும் எமது குர்ஆன் ஷரீபின் விஷயமாய் எவ்வளவோ அபாண்டமான அநியாயக்காரர்களெல்லாம், பராக்கிரம சாலிகளெல்லாம் தங்களால் உண்மையை மறைத்து வைப்பது முடியாதென்றுணர்ந்து, தங்களை அறியாமலே குர்ஆன் உண்மையான வேதமென்றும், அதிலுள்ள நல்ல உபதேசங்களும், நீதங்களும், பரிபூரண ஞானங்களும் சகலரும் போற்றத் தக்கனவென்றும் கூறுவதுமன்றி, உலகத்திலுண்டான எல்லா வேதங்களும் இதன்மீது பலியாயினுங்கூட அது குறைவானதே என்றுங் கூறியுள்ளார்கள். இஃது இவ்வண்ணம் நிற்க.

எவன் கருணாநிதியின் கருணையைப் பெறவேண்டுமென்று கருதுகிறானோ, அவனுடைய கண்ணுக்குக் குர்ஆன் ஷரீப் நூருல் ஐனாக (கண்ணின் ஒளியாக) விளங்குகின்றது.

மேற் கூறப்பட்ட வேதமந்திரத்தில், வேதங்களையறிந்த கல்விமான்கள் பகைவர்களின் தேசங்களை நாசப் படுத்துவது மஹா முக்கியமாய்க் காணப்படுகிறது! ஏ பெரியவரே! ஏ நல்லவரே! பகைவர்களிடந்தான் பகைமையிருக்கிறது; ஆனால், தேசங்களிலுண்டான சிறுவர்களும், தள்ளாதவர்களும், பெண்பிள்ளைகளும் உங்களுக்கென்ன தீமை விளைத்தனர்? எதற்காக அவர்களையும் கொல்லும் பொருட்டுத் தேசத்தையே நாசப்படுத்துகிறீர்? இஃது இராஜாவின் தலைமைத் தனமும், அவர்களின் அமளிகளும், மரியாதைகளும், ஸ்திதிகளும், சேனைகளும் இரட்டிப்பாவதற்காகவே காணப்படுகிறது. உறுதியும், தர்மமும், மார்க்கமும் விருத்தியடைவதற்காக அன்று; உலகத்தை விட்டுக் குப்ரை அழிப்பதற்கன்று; ஈசுவரனின் மதிப்பையும், அவனது வல்லமையையும் நிலைநாட்டுவதற்கன்று. ஆதலின், வேதங்களில் மார்க்க விஷயங்களும், மனிதன் ஈடேறும் வழிகளும் இருப்பதற்கு மாறாய், உலகத்தில் அடித்துக்கொண்டும், சச்சரவுகள் செய்துகொண்டும், நாசங்களை உண்டு பண்ணிக்கொண்டும் இருக்கும்படியான படிப்பினையே காணப்படுகிறது. எவனேனும் உலகத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்றும், அதன் விஷயத்திலேயே மாளவேண்டுமென்றும் நாட்டங் கொள்வானாயின், அவனுக்கு இவ்விதமான வேதங்கள் அதிகமான பிரயோஜனத்தை அளிக்கலாம். எவன் கருணாநிதியின் கருணையைப் பெறவேண்டுமென்று கருதுகிறானோ, அவனுடைய கண்ணுக்குக் குர்ஆன் ஷரீப் நூருல் ஐனாக (கண்ணின் ஒளியாக) விளங்குகின்றது. வேதமோ இதற்கு மாறாய் உலக ஐசுவரியங்களைச் சேகரிப்பதன் பேராசையினால் வெட்டுவதிலும், இரத்தத்தை ஓட்டுவதிலுமே காலங்களைக் கழிக்கும்படியான உபதேசங்களினால் ஆதியிலிருந்து அந்தம்வரை பரிபூரணமாய் நிரப்பப்பட்டிருக்கிறது. இதன் சில ‘சாம்ப்பிள்’ (மாதிரி) களை மேலே காட்டியுள்ளோம்; இன்னும் சிலவற்றைக் கீழே வரைகின்றோம். இதைக்கொண்டே திருப்தியடைவீர்களாக; இல்லையேல் கொஞ்சம் சிரமப்பட்டு நீங்கள் வேதங்களைக் கண்ணுறுவீர்களாக.

யஜூர் 16. 51. “ஏ பராக்கிரமம் வாய்ந்த தளகர்த்தரே! தாங்கள் எங்கள் மனத்தைச் சந்தோஷப்படுத்துபவராய் இருங்கள். தாங்கள் எங்களைப் பக்குவமாய்ப் பாதுகாப்பதற்காக வாளையும், வேலையும், கதையையும், தண்டத்தையும் பிடித்துக்கொள்ளுங்கள்; தாங்கள் மானின் தோலை அணிந்தவராய் அம்பு வில்லுகளை ஏந்திக்கொண்டு எங்களைப் பாதுகாக்க வருவீர்களாக. இன்னமும் பகைவர்களின் பலமான படைகளை மரங்களை வெட்டுவதேபோல் வெட்டி ஜயத்தைப் பெறுவீர்களாக.”

ஜனாப்! திருவுள்ளமாகுங்கள். பகைவர்கள் படைகளை வைத்திருப்பது கூடத் தங்களுக்குப் பெரிய வருத்தத்தை இழைக்கக்கூடியதாய் இருக்கிறது. தங்களைப் போல் அந்தப் பகைவரும் இந்த மந்திரத்தைச் செய்கையில் கொண்டுவர முயற்சிப்பார்களாயின், அதனால் ஏற்படும் பலாபலந்தான் என்ன? எனவே, வேதத்தில் இவ்விதமான இரத்தப்புரட்சிகளும், சண்டை சச்சரவுகளுமே நிரப்பப்பட்டிருக்கின்றன; அதுவும், கேவலம், இவ்வுலகத்தின் ஐசுவரியத்துக்காகவே.

இன்னமும் பார்க்க: யஜூர் 16. 64, 65. “எந்த மனிதர்களை நாம் வெறுக்கிறோமோ, அல்லது எந்த மனிதர்கள் நமக்குத் துன்பத்தை இழைக்கின்றனரோ, அவர்களைக் கொதிக்கின்ற ஆவியில் தள்ளிப் பூனை எலியை வதை செய்வது போல வதை செய்யவேண்டும்.”

நல்லது! தங்களுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பவர்களுக்கு வேதம், பூனை எலியை வதை செய்வதேபோல் வதைக்கும்படியான தண்டனையைக் கொடுக்கிறது; ஆனால், தாங்கள் யாரை வெறுக்கிறீர்களோ, அவர்களுக்கு மேற்கூறப்பட்டபடி உள்ள தண்டனை எதற்காக? என்ன குற்றத்தைக் கொண்டு? உங்களுக்கு அவர்கள் என்ன தீங்கிழைத்தார்கள்? அவர்கள் ஒரு தீங்கையும் இழைக்கவில்லையே! ஆனால், இந்த வேதத்தில் கொடுமையும், அநியாயமும் தவிர மற்றவர்களைத் தாழ்ந்தோர்களாகவும், இழிவானவர்களாகவும் நடத்தவேண்டுமென்னும் அக்கிரம விஷயங்களின் உபதேசங்களேதாம் நிரம்பிக் கிடக்கின்றன.

இன்னமும் யஜூர் 17. 45-இல் காணப்படுவதாவது: “ஏ பராக்கிரம சாலியான தளகர்த்தன் மனைவியே! நீ யுத்தகளத்தை நாடியவளாய்த் தூரதேசத்தில் இருக்கும் பகைவர்களுடனே போய் யுத்தம் புரிந்து அவர்களைக் கொன்று ஜயத்தை அடைவாயாக; நீ தூரதேசங்களில் இருக்கக்கூடிய பகைவர்களுள் ஒருவரையாவது கொல்லாமல் விட்டு விடாதே!”

தொலைதூரத்தில் சும்மா உட்கார்ந்துகொண்டிருக்கும் மனிதர்களையும் சுகமாய் இருக்க விடாதீர்கள்; போய்க் கொலை புரியுங்கள்; ஒருவரையும் உயிருடன் விட்டுவிடாதீர்கள்!

ஷாபாஷ்! மேன்மேலும் முன்னுக்கு வருவீர்களாக. மிக்க தொலைதூரத்தில் சும்மா உட்கார்ந்துகொண்டிருக்கும் மனிதர்களையும் சுகமாய் இருக்க விடாதீர்கள்; போய்க் கொலை புரியுங்கள்; ஒருவரையும் உயிருடன் விட்டுவிடாதீர்கள்! ஆஹா என்ன அற்புதம்! ஜனாப் சுவாமிஜீ! வெட்கமென்னும் திரையைக் கிழித்துவிட்டுக் கொஞ்சம் வெளியில் தலையை நீட்டிப் பார்ப்பீர்களாக. இனியாகிலும் எமது குர்ஆனெ மஜீதின் மீது செய்த ஆக்ஷேபங்களை வாபஸ் வாங்கிக்கொண்டு, இந்தப்புறம் தலையை நீட்டாமல் இருப்பீராக. இன்னமும், வேதத்தின் நன்மையையும், அமைதியையும், அஃதாவது, எந்த ஜீவனையும் சும்மா விட்டுவிடாமல் கொலை செய்வதைக் கற்றுக் கொடுத்த வேதத்தையுடையவரிடம் எதிர்த்து நிற்பீர்களாக. உலகத்தை ஏமாற்றத்தின் உள்ளாக்காதீர்கள். நாவினாலும் ஒருவனுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பது பாபம் என்றல்லவோ எமது வேதம் கூறுகின்றது? ஆதலின், இப்பொழுது சொல்வீர்களாக: எங்கும் அமைதியாயும், சமாதானமாயும் இருக்கும்படி உங்கள வேதங்கள் கூறுகின்றனவா? அல்லது எமது பரிசுத்தத் திருமறையான குர்ஆனே மஜீதுதான் கற்பிக்கின்றதா? பாருங்கள். இரண்டும் தங்கள் முன்னிலையில் இப்பொழுது இருக்கின்றன; தாங்களே பார்த்து நிதானித்துப் பக்ஷபாத மில்லாது கூறுவீர்களாக.

இன்னமும், யஜூர் 1.25: “எந்தத் துஷ்டன் நமக்கு மாற்றஞ் செய்கிறானோ, அல்லது யாருக்கு நாம் மாற்றம் செய்கிறோமோ, அப்படிப்பட்ட கெடுதி செய்யும் பகைவனை நீங்கள் சங்கிலிகளால் கட்டிவிடுங்கள்; பின்பு அவர்களை அந்தச் சங்கிலியைவிட்டு எப்பொழுதும் விடுதலை கொடுக்காதீர்கள்.”

வாஸ்தவம்தான். யார் நுமக்கு மாற்றஞ் செய்கிறார்களோ, அவர்கள் இந்தத் தண்டனைக்கு லாயிக்கானவர்கள்தாம்; ஆனால், நீங்கள் யாருக்கேனும் மாற்றஞ் செய்வீர்களாயின், அப்பொழுதுமா அவர்கள் இந்தத் தண்டனைக்கு உரியவர்கள்? ‘திருட்டும், அதனுடன் தைரியமும்!’ என்பது இதற்குத்தான் சொல்லப்படுகிறது. தாங்கள் இவ்விதம் செய்வதுதான் நீதம் போலும்! அந்தோ பரிதாபம்! இப்படிப்பட்ட அநியாயமும், அட்டூழியமும், முரட்டுத்தனமும், தர்மத்தைக் கடத்தலுமான படிப்பினைகளும் சுவாமி தயானந்தருக்கு மிக்க உவப்பையும் பிரியத்தையும் தந்து, தம்மையே புகழ்ந்து கொள்ளும்படியாயும் செய்துவிட்டன!

இதற்கு மாற்றமாய் எமது திருமறையில் அமைதியாய் இருப்பதற்கும், நீதமாய் நடந்து கொள்வதற்கும், அநியாயத்தை ஒழிப்பதற்கும் கொண்டுவரப்பட்டிருக்கும் உபதேசங்களுள் சிலவற்றை நாம் மேலே காட்டினோம். ஆஹ்! மனிதர்களைக் கொலைசெய்யும் நபர்களாகிய நரபலிக்காரருடைய வேதத்தையும் நாம் உங்களுக்குக் கொஞ்சம் சுட்டிக் காட்டினோம். என்ன குற்றத்தின்மீது கொலை செய்யப்படுகின்றார்கள் எனின், நாம் அவர்களிடம் பொருத்தமில்லாமல் இருப்பதுதான்; அல்லது அவர்களை வெறுப்பதுதான்; அல்லது நாம் அவர்களிடம் பகைமை வைத்திருக்கிறோம்; அல்லது அவர்கள் படைகள் வைத்திருக்கிறார்கள்; அல்லது கிரீடங் தரித்தவர்களாய் இருக்கிறார்கள்; என்பனவேயாம். (இந்த மந்திரத்தின் பிரகாரமே ஆங்கிலேய ஆட்சியாருடன் அமர்புரிந்து அவர்களது ராஜ்யத்தையும் புரட்டிவிட வேண்டுமென்னும் துராலோசனைகளும் நடந்தேறி வருகின்றன.)

அல்லது வேததர்மத்தை விட்டு அப்புறமாயிருக்கிறார்கள்; அஃதாவது, வேதத்தை ஒப்புக் கொள்ளுகின்றார்களில்லை; அவர்கள் அதிகமான தொலை தூரத்திலிருப்பினும், பராக்கிரமசாலியான தளகர்த்தன் மனைவி சென்று ஒருவரையும் உயிருடன் விட்டு வைக்காமல் எல்லோரையும் கொன்றுவிட்டு வரவேண்டும் – அவர்கள் நிரபராதிகளாயிருப்பினுஞ் சரியே. இஃது ஒருபுறமிருக்கட்டும்.

பின்னும், யஜுர் 1.26 பார்க்க: “ஏ பகைவனே! நீ எப்பொழுதும் நேர்வழியின் பிரகாசத்தை அடையாமலிருக்கக் கடவாய்! உனக்கு ஆனந்தத்தை அளிக்கும்படியான ஞானம் எப்பொழுதும் ஆனந்தத்தை அளிக்காமல் இருக்கக் கடவதாக!”

இந்த மந்திரத்தில் வாளின் முனையான வார்த்தையை வேதபகவான் வெளியிட்டிருக்கிறார்; இதைக் கேட்ட கல்மனமுள்ள கடினசித்தனும் பெருந் திகிலையடைவான். அஃதாவது, அவன் கல்வியும் அவனுக்கு ஆனந்தத்தை அளிக்கக்கூடாது; இன்னமும் அவன் நேர்வழியின் ஒளியையும் அடையக்கூடாது. அநியாயம்! அநியாயம்!! கொடிய அநியாயம்!!! அந்தகாரம்! அந்தகாரம்!! முழு அந்தகாரம்!!! இஃது எவ்வளவு கெட்ட போதனையாய் இருக்கிறது!

இன்னமும் யஜூர் 1.28 பார்க்க: “ஏ மனிதனே! எந்த விதமாய்ப் பகைவர்களை நாசப்படுத்த முடியுமோ, அந்த விதமாயுள்ள வேலைகளைச் செய்து முடித்து, நல்லவிதமாய் ஆரோக்கியத்துடனே ஜீவியத்தை நடத்தி வருவாயாக.”

எவ்வளவு வெட்கத்துக்குரிய வேலையாய் இருக்கிறது! தன்னுடைய ஜீவனத்தை நல்லவிதமாயும், ஆரோக்கியமாயும் செய்து கொள்வதற்காக மனிதர்களை எந்தவிதமாய்க் கொல்ல முடியுமோ, அந்த விதமாய்க் கொன்று தள்ளவேண்டும். ஆஹா! இதுதான் ஆரிய வேதத்தின் படிப்பினையும், ஈசுவரனது கட்டளையுமாயிருக்கிறது. இதன் பெயர்தான் தர்மம்; இதன் பெயர்தான் ஞானம். இதனாலேயே வேத தர்மத்தை அளந்து பார்த்தல் வேண்டும். மேலும் இதனாலேயே முக்தி, அஃதாவது, இதன் காரணத்தினாலேயே ஈடேற்றம், நித்தியானந்தம் இவைகளெல்லாம் கிடைக்கும். ஆ கைசேதம்!

-பா. தாவூத்ஷா

அத்தியாயம் 2 தொடர்கிறது…

படம்: அபூநூரா

தட்டச்சு: யூனுஸ் அஹ்மது 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment