நபியவர்களுக்கு ஐம்பது வயது நிரம்பிற்று (கி.பி. 620). அப்போது நிகழ்ந்த ஆண்டுக்கு முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் “துக்கம் பீரிட்ட துயர்மிகு ஆண்டு” (Aam-ul-Huzn) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
ஏனென்றால், அந்த வருடத்திலேதான் அவர்களுடைய பாதுகாவலராகிய பெரிய தந்தை அபூத்தாலிபும் பெருமைக்குரிய பிராட்டியார் அன்னை கதீஜாவும் (ரலி) மரணமடைந்தார்கள். ஏக காலத்தில் இரு சிறகிழந்த பறவை போலாயினார் முஹம்மத் (ஸல்).
தாம் பெற்ற பிளை்ளையினும் உற்ற பிள்ளையாக அபூத்தாலிப் நபியவர்களை வளர்த்துப் போஷித்துப் பராமரித்து வந்த காரணத்தால், முதுமைப் பிராயத்தில் தள்ளாடிய உடலுடன் மரணப்படுக்கையிற் கிடந்த அப் பெரியாரின் பக்கத்திலேயே நபியவர்கள் அசையாமல் நின்றிருந்தார்கள். என்னதான் அம் முதியவர் தம் தம்பி மைந்தர்மீது அபிமானம் கொண்டிருந்தாலும், இந்த நிமிடம் வரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. அவருடைய மைந்தர்களான அலீ, ஜஅஃபர் ஆகிய எல்லாரும் முஸ்லிம்களாக ஆகிவிட்டிருந்தும், அவர் மட்டும் இன்னும் பழைமையில் மூழ்கிக் கிடந்தாரே என்னும் ஏக்கம் நபியவர்களை வாட்டித்தான் வந்தது. என்றாலும், அப் பெரியார் இறுதி மூச்சுவிடும் முன்னேயாவது நல்ல புத்தி பெற்று, ஏக இறைவனை ஏற்க மாட்டாரா என்று இவர்கள் எதிர்பார்த்து நின்றிருந்தார்கள்.
குறைஷிகுல அதி தீவிரவாதியாகிய, முஸ்லிம்களின் பரம விரோதியாகிய அபூஜஹல், அபூத்தாலிப் உலக வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பது அறிந்தான். பக்கத்தில் முஹம்மதும் (ஸல்) நின்று கொண்டிருக்கிறா ரென்பதைக் கேள்வியுற்றான். கிழவர் உயிர் விடுகிற நேரத்தில் இஸ்லாத்தை ஏற்றுவிட்டால் எல்லாம் கெட்டு விடுமே என்று அவன் கவலைப்பட்டான். எனவே, விரைந்தோடி இவனும் அபூத்தாலிபின் எதிரே ஒரு நாற்காலி மீது அமர்ந்து கொண்டான்.
“பெரிய தந்தையே! உங்களுக்கு இறுதி நேரம் நெருங்கி விட்டது. இப்போதாவது உங்களைப் படைத்த அந்த ஒரே இறைவனாம் அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வையுங்கள். அவனிடமே பிழை பொறுப்புத் தேடிக் கொள்ளுங்ள். அவன் என்றைக்கும் உங்களைச் சுவனத்தளவில் சேர்த்து வைப்பான்,” என்று நபியவர்கள் உபதேசித்தார்கள்.
“ஏ அபூத்தாலிப்! இந்த இறுதி நிமிடத்தில் நீர் மனம் தடுமாற வேண்டாம். உம்முடைய தம்பி மைந்தன் விரிக்கும் மாயவலையில் விழவேண்டாம். நாம் சந்திர குலத்தினர். நம் குலதெய்வம் சந்திரனின் உருவங்களாகிய லாத், மனாத், உஸ்ஸா – இவையே உம்மைக் காப்பாற்றும். இத்தனை காலம் இத் தேவதைகளை வழிபட்டுவிட்டு இப்போது இவற்றைக் கைவிட்டு விடாதீர்!” என்று அணை போட்டான் அபூஜஹல்.
இருவரையும் மாறி மாறி அபூத்தாலிப் தம்முடைய பஞ்சடைந்த நேத்திரங்களால் உற்றுப் பார்த்தார். இப்போது ஈமான் கொண்டு விட்டதாகப் பகிரங்கமாக அறிவித்துவிட்டுக் கண் மூடி விட்டால், மறுகணமே அபூஜஹல் தனது ஆத்திரம் முழுதையும் நபியவர்கள்மீது அவிழ்த்து விடுவான் என்பதை அவர் உணர்ந்தார்; எனவே, மூடிய வாய்க்குள்ளே ஏதே முணுமுணுத்த வண்ணம் இறுதி மூச்சை விட்டார்.
இந்த மரணத்தினால் துயருற்று நபியவர்கள் துக்கம் காத்திருக்கையில், மிகச் சடுதியிலேயே கதீஜா (ரலி) அம்மையார் (வயது 65) படுக்கையில் நீட்டிவிட்டார். எவரையும் விடாமல் பற்றிப் பிடிக்கும் மரணப்பிணி மனைவிக்கு வந்துவிட்டதே என்று நபி (ஸல்) மனங் கலங்கவில்லை. ஆனால், “என்னை எவரும் நம்பாத நேரத்தில் என்மீது முதலாவது நம்பிக்கை வைத்த நாரி சிரோமணியே! முதல் வஹீயறிவிப்பு (இறையறிவிப்பு) வந்து திகிலால் முடங்கிக் கிடந்த என்னைத் தேற்றித் தெம்பூட்டிய மாணிக்கமே! சுற்றிலும் இருள் கம்மி, வழி தெரியாமல் திகைத்துத் தடுமாறிய எனக்கு (வரக்கா மூலம்) வழி காண்பித்த வனிதையே! காலமெலாம் கருத்தொருமித்து என்னைக் களிப்புறச் செய்து வந்த உத்தம பத்தினியே! ஏங்கித் தவித்த எனது உள்ளத்துக்கொரு சாந்தி நல்கி உடன் நின்று உதவி நல்கிய வானவர்குலப் பெண்ணணங்கே! நான் உன்னை விட்டுப் பிரிய வேண்டிய கட்டம் வந்துவிட்டதே என்பதற்காகவே இரு சொட்டுக் கண்ணீர் வடிக்கிறேன். நான் அழவில்லை; என் நெஞ்சம் கசிந்துருகுகிறது!” என்றே அவர்கள் தேறினார்கள். உலகின் மிகச் சிறந்த உத்தமருக்குப் பத்தினியாய் வாய்க்கும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததை நினைத்தும், தம் கணவர் நபியாய் உயரும் பெருமையைக் காணும் பேறு தமக்குக் கிட்டியதை எண்ணியும், பூரிப்புடன் இறையடி சேர்ந்தார் அம் மாதர்குல மாணிக்கம்.
பிறர் துன்பம் அனுபவிப்பதைக் கண்டு அதில் இன்பம் பெறும் உலுத்தர் இனத்தைச் சேர்ந்த அபூஜஹல் போன்றவர்கள் பெருமானாரைக் களிப்புடன் ஏளனம் செய்தார்கள். ஒரு கல்லில் இரு மாங்காய்கள் விழுந்ததேபோல், ஒரே சமயத்தில் இரு பெரிய ஊன்றுகோல்களை இழந்த அவர் இனித் துயர் மிகுதியாலும், தமக்கேகூட இப்படிப்பட்ட கடுஞ்சோதனை ஏற்பட்டுவிட்டதே என்னும் ஏமாற்றத்தாலும் அல்லாஹ்வைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார் என்று அவர்கள் தப்புக் கணக்குப் போட்டார்கள்.
ஆனால், ஈருலக ரட்சகராகிய நபியவர்கள் இந்த அற்பச் சோதனையாலெல்லாம் மனம் மாறி விடுவாரோ? ஓரிரு நாட்களிலேயே அவர்கள் இத் துன்பத்தை மறந்து, இறைவன் தமக்கு இட்டிருக்கும் மகத்தான பொறுப்பை நிறைவேற்ற எப்போதும்போல் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்துவிட்டார்கள். மனைவியின் செல்வப் பெருக்காலும் பெரிய தந்தையின் பராமரிப்பு என்னும் பாதுகாவலாலும் முஹம்மத் துள்ளுகிறார்; அவை இரண்டும் நீங்கிவிட்டால் அவர் பலமிழந்து விடுவார் என்று எதிரிகள் எண்ணியிருந்தார்கள். இப்போது மீண்டும் அதே வேகத்தில், அல்லது அதனினும் சற்றுக் கூடுதலான வேகத்தில் தமது பழைய பல்லவியைப் புது உற்சாகத்துடன் அவர் தொடர்ந்து விட்டாரே என்று அவர்கள் பதறிப்போய் விட்டார்கள்; என்றாலும், இனி இவரைச் சுலபமாக வீழ்த்திவிட முடியும் என்று நினைத்தார்கள். எதிர்ப்பிரசாரம், ஏசிக் குவித்தல், கூக்குரலிடல், குழப்பம் விளைத்தல், சுடுசொல் தொடுத்தல் முதலிய ஆயுதங்களை அவர்கள் பிரயோகிக்க முற்பட்டார்கள். ஏற்கெனவே இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருந்தவர்களைத் திரும்பத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள முடியவில்லையென்றாலும், புதிதான அங்கத்தினர்கள் அப் புதுமதத்தின்பால் போய்ச் சேராதவாறு குறைஷிகள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்தார்கள். இஸ்லாத்தை எவரும் தழுவாதிருக்க, ஒவ்வொருவருடைய பலஹீனத்தையும் எடைபோட்டு, பொன்னை ஈந்தும், பெண்ணை ஈந்தும், சலுகைகள் வழங்கியும் எதிராக வேலை செய்தார்கள். பணம் பாதாளம் வரை பாய்ந்தது.
“நீங்கள் செத்து மடிந்து பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து முஹம்மது விவரிக்கிற கற்பனையான சுவர்க்க போகம் உங்களுக்கு வேண்டுமா? அல்லது இப்பொழுதே கண்ணுக்கு மெய்யாக, கருத்துக்கு இனிதாக இந்தச் செல்வமும் சிற்றின்பச் சுகபோகமும் வேண்டுமா?” என்று அவர்கள் ஒவ்வொரு சபல புத்தி படைத்தவனையும் மடக்கிப் பிடித்தார்கள். “முஹம்மதின் மூத்த பெரியப்பர் அபூலஹபே நம்முடைய கட்சியில் இருக்கிறார்; காலமெலாம் வளர்த்த அபூத்தாலிபேகூடப் புது மதத்தைத் தழுவாமல் உயிர் நீத்தார். இவற்றிலிருந்து நீங்கள் உண்மையை உணர வேண்டாமா? பத்தாண்டு காலமாக இவர் எவ்வளவோ குட்டிக்கரணங்கள் போட்டும், தம் பாட்டனார் முப்பாட்டனாரின் சந்ததியார்களைக்கூட இவரால் தமது கட்சிக்குத் திருப்பிக் கொள்ள முடியவில்லையே; இவரா உங்களைக் கடைத்தேற்றப் போகிறார்? இவர் வருணிக்கிற அந்த இறைவன் மட்டும் நிஜமாகவே சர்வ வல்லமை பொருந்தியவனாக இருப்பானாகில், இவருக்கேன் இத்தனை சிரமம்? அவனே ஒரு நொடியில் நம்மெல்லாரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கமாட்டானா?” என்றும் சிலர் தர்க்கம் பேசினார்கள்.
நிலைமை முற்றி விட்டது. இனி மக்காவாசிகளின் மனத்தைத் தெளிவுறச் செய்ய எடுக்கும் முயற்சிகள் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகிவிடும் என்பதைப் பெருமானார் ஓர்ந்து கொண்டார்கள். எனவே, இனி இந்த ஊர் மக்களை நல்வழிப் படுத்துவதை இம்மட்டோடு நிறுத்தினார்கள்.
மக்கா நகருக்குக் கிழக்குத் திசையில் சுமார் 70 மைல்களுக்கப்பால் மலைப் பிரதேசத்தில் தாயிஃப் (Taif) என்றொரு கோடைக் காலத்தில் குளிர்ச்சி தரும் நகர் அமைந்திருக்கிறது. இது ‘ஹரம்’ வட்டாரத்துக்கு வெளியிலுள்ள நகரம். இங்கே பழத் தோட்டங்களும், காய் கறித் தோட்டங்களும் செழிப்புடன் காட்சியளிக்கும். மக்காவிலுள்ள பெருந்தனிகர்கள் கடுங்கோடையில் இங்கே வந்து தங்கிச் சுகம் அனுபவித்துச் செல்வார்கள். அந் நகரில் வசிப்பவர்களை இப்போது சந்தித்து, இஸ்லாமிய பிரசாரம் செய்யலாமே என்று நபியவர்களுக்கு ஓர் எண்ணம் உதித்தது. பிறந்த மண்ணில் தம்மை எவரும் மதிக்கவில்லை யென்றாலும், அந்த அன்னிய நகரில் வாழ்பவர்களாவது தமக்குச் செவி சாய்ப்பார்கள் என்று அவர்கள் நம்பி எதிர்பார்த்தார்கள். எனவே, தம்முடைய விசுவாசமிக்க ஊழியரான ஸைது என்பவரை உடன் அழைத்துக்கொண்டு நபி பெருமானார் (ஸல்) தாயிஃப் நகரை நோக்கி நடந்தார்கள். ஏக இறைவன் கோட்பாட்டை எங்கெங்கும் பரத்த வேண்டும் என்னும் ஆர்வம் அவர்களுக்கு எந்த அளவுக்கு மிகுந்திருந்ததென்றால், தொந்தி மணற் காட்டினூடே அவ்வளவு தூரம் நடையாகவே நடந்து செல்வதில் அவர்கள் கொஞ்சமும் அலுப்போ சலிப்போ அடையவில்லை.
தெம்புடனும், மிகுந்த நம்பிக்கையுடனும் நபியவர்களும் ஸைதும் தாயிஃப் நகரை அடைந்தார்கள். ஆனால், மக்காவின் குறைஷிகளைவிட இங்குள்ள குடிமக்கள் மிகப் பெரிய போக்கிரிகள் என்பதை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
தொடரும்…
-N.B. அப்துல் ஜப்பார்
<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License