வியபிசாரமன்று; ஆனால், “நியோகம்!” – 6

வினா:- அவரவர்களுடைய குலத்திலேயே நடக்க வேண்டுமா? அல்லது வேறு குலத்தில் நடக்க வேண்டுமா?

விடை:- தன்னுடைய குலத்திலாவது, அல்லது அதைவிட உயர்ந்த குலத்திலாவது ஸ்திரீகள் நியோகம் செய்துகொள்ள வேண்டும். உதாரணமாக,

‘வைசிய ஸ்திரீ ஒருத்தி பிராம்மணனையாவது அல்லது தன் வைசியக் குலத்தவனையாவது, அல்லது க்ஷத்திரிய ஸ்திரீ ஒருத்தி க்ஷத்திரியனை அல்லது பிராம்மணனையாவது, பிராம்மண ஸ்திரீ பிராம்மண புருஷனையுமே அடையவேண்டும். ஏனென்றால், வீர்யம் அதே வீர்யத்துடனாவது அல்லது உயர்ந்த வீர்யத்துடனாவது சேரவேண்டும். ஒரு பொழுதும் தாழ்ந்த வீர்யத்துடன் சேரக்கூடாது.’

இதனால் தெரியக்கிடப்பது யாதெனின், வித்தானது சரிசமானமாகவோ அல்லது உயர்ந்த ஜாதியினுடையதாகவோ இருத்தல் வேண்டுமென்பதே. “ஏனென்றால் தோட்டக்காரன் மூடனாயினும் தன் தோட்டத்தைவிட்டு வேறு தோட்டத்தில் தன் வித்துக்களைப் பயிர்செய்ய மாட்டான். சாதாரண வித்தை ஒன்றுமறியாத மூர்க்கன் இவ்விதம் செய்யும்பொழுது சர்வோத்தமமான மனித பீஜத்தைத் தான்அனுபவிக்க முடியாத வயலில் போடுகிறவன் முழு மூடனே.”

(இப்படித்தான் ஹிந்துதாசிகளும் முஸ்லிம் புருஷர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் போலும். கபீர்.)

வேதோக்தமாய்க் கல்யாணமாவது நியோகமாவது செய்துகொண்டு சந்ததிகளை உண்டுபண்ணுவதே மனித சிருஷ்டியின் முக்கிய நோக்கமாகும்.

ஐயகோ! கேவலம்! எப்படிப்பட்ட துன்பங்களையும் சங்கடங்களையும் மேற்போட்டுக்கொண்டேனும் மஹரிஷி தயானந்த்ஜீ பண்டைப் பாமர நியோக சம்பவங்களைப் புனருத்தாரணம் செய்து இந் நவீன உலகில் நிலைநிறுத்தப் பார்க்கின்றார். ஆனால், அவர் மட்டும் வேதங்களின்படி ஒழுகாமலும், ஈசுவரனின் மனச்சாக்ஷியின்படி நடக்க இயலாமலும் போய்விட்டார். ஏனெனின், வேதக்கட்டளைகளின் பிரகாரம் பரமேசுவரனின் கருத்துக்கிணங்க அவர் விவாகம் செய்துகொண்டு தாமும் தம் பாரியாளும் இந்த அழகான நியோகப் பழக்கத்தைத் தம்முடைய சிஷ்யர்களுக்கு நடத்திக் காட்டாமற் போய்விட்டார்கள். அந்தோ! இதனால் அவர் வேதங்களுக்கு முற்றிலும் மாறுசெய்தவராகவே அவரது பரமாத்மாவினால் ஒதுக்கித் தள்ளப்படுவார். எனவே, வேதங்களின் பிரகாரம் நடந்து காட்டாத நாஸ்திகர்களுள் இவரே முதன்மையானவராயிருக்கிறார். அப்ஸோஸ்!

சுவாமிஜீ விவாகமும் புரியவில்லை; நியோகமும் செய்து காட்டவில்லை; தமது வம்சத்தை நிலைநிற்கச் செய்தவராகவும் காணப்படவில்லை. தம்முடைய சிஷ்யர்களின் வம்சங்களை நிலை நிறுத்துவதற்காக நியோக வியபிசாரத்தையும் அனுமதித்துக் கொடுத்தார். ஆனால், தாம்மட்டும் இவ்வகை லீலைகளில் கலந்துகொண்டனரில்லை. ஆதலின், அவர் மனிதர்களின் முதற்கடைமையில் தவறிழைத்துவிட்டார். கபீர்.

வினா:- புனர் விவாகம் செய்து கொள்ளாது ஒருவன் நியோகத்தை அனுசரிப்பானேன்?

விடை:- வேதம் முதலான சாஸ்திரப் பிரகாரம் பிராம்மண ஜாதியார் ஒரு தடவையே கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமேயல்லாது இரண்டு தடவை செய்துகொள்ளக் கூடாது…விதவை ஒருத்தியுடன் விவாகமாகாத வாலிபனை மணமுடித்து வைப்பதும், மனைவி இழந்தவனுடன் கன்னிகை ஒருத்தியைக் கல்யாணம் முடித்து வைப்பதும் நியோகமாகா.”

(இஃது எந்தத் தெய்வத்துக்குத்தான அடுக்கும் நியாயமோ தெரியவில்லை? இதனால்தான் தயானந்தருக்குப் பின்வந்த அவருடைய சிஷ்யர்கள் விதவா விவாகத்தையும் புருஷரது புனர் விவாகத்தையும் அங்கீகரித்திருக்கிறார்கள்.)

“புருஷன் விதவையைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பாமலிருப்பதேபோல் பெண்ணும் மனைவியிழந்த புருஷனைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பமாட்டாள்.”

(சுவாமி தயானந்தர் விவாகமில்லாது சன்னியாசியாகவே இருந்துவிட்டபடியால், இவர் ஸ்திரீ புருஷர்களின் மனப்பான்மையை உள்ளபடி உணர்ந்துகொள்ள முடியாதவராய்ப் போய்விட்டார். ஏனெனின், இவர் கூறுவது இயற்கைக்கு முற்றிலும் மாற்றமாய்க் காணப்படுகின்றது. விதவைகளை மணந்துகொள்ளாத எத்தனையோ சனாதன ஹிந்துப் புருஷர்களுக்கு மறுதாரமாக இளங்கன்னிகைகள் இப்பரத கண்டத்தில் அகப்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இவ்வாறே விதவைகளை எத்தனையோ மாப்பிள்ளைகளும் மணமுடித்துக்கொள்ளச் சித்தமாயிருக்கிறார்கள்.)

“பெண் ஒருத்தி மனைவி இழந்தவனையும், புருஷன் ஒருவன் விதவையையும் மணம்புரியாமலிருக்கும்போது நியோகத்தின் அவசியம் ஏற்படுகின்றது.”

(சுவாமிஜீயின் எழுத்தின் பிரகாரம் நியோகத்தின் அந்தரங்கத் தாத்பரியமானது ஆண் பெண் சேர்க்கையாகவேதான் ஈண்டுக் காணப்படாநின்றது. இன்றேல் விவாகத்தில் ஒரு முறைக்குமேல் மணமுடித்துக்கொள்ளக் கூடாதென்றும், ஆனால், நியோகமென்னும் பெயரை வைத்துக்கொண்டு ஒவ்வோர் ஆடவரும் பதினொரு பெண்கள்மட்டும் சம்பந்தம் வைத்துக்கொண்டே போலாமென்றும், ஒவ்வொரு பெண்பிள்ளையும் அவ்வாறே பதினொரு புருஷர்கள்மட்டும் கைம்மாறிக்கொண்டே கலந்துகொள்ளலாமென்றும் அனுமதி அளிப்பதன் அந்தரங்கம்தான் என்ன? இவ்வாறு நியோக வழக்கத்துக்குச் சர்வதாரளமான வேதஅங்கீகாரம் இருந்துவரும் போது எவன்தான் இரண்டாவது முறையும் ஒரே தாரத்தை விவாகம் செய்துகொள்ளச் சம்மதிப்பான்? புருஷனை இழந்த பெண்களும் மனைவியை இழந்த புருஷர்களும் மறுவிவாகம் செய்துகொள்வதாயினும் அவர்கள் ஒவ்வொரு ஸ்திரீ புருஷராகவேதாம் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு ஒழுகவேண்டும். ஆனால், நியோகத்தை மேற்கொள்டாலோ, ஒன்று குறைய ஒரு டஜன்மட்டும் உருசிபார்த்துக் கொண்டே போகலாம்! கபீர்)

“வேத சாஸ்திரங்களில் விவாகத்திற்குப் பிரமாணம் இருப்பதேபோல் நியோகத்திற்கும் பல பிரமாணங்களிருக்கின்றன.”

(ஏன் இருக்கமாட்டா! ஆரியர் வேத சாஸ்திரங்களில் இதற்கு ஆதாரம் இல்லாமற் போய்விடுமாயின், வேறு எங்கிருந்துதான் கிடைக்கப் போகின்றன? ஏன்! வாமமார்க்கிகளுக்கும், சக்தி பூஜைக்காரர்களுக்கும் அவ்வேத சாஸ்திரங்களில் ஆதாரம் கிடைக்காமலா இருக்கின்றன? இன்னமும், வியபிசாரத்துக்கும் வேதப்பிரமாணம் காணப்படாமலில்லை. உதாரணமாக, மகீதாரின் வேத பாஷ்யத்தின் அத்தியாம் 23-ஐப் பார்வையிடுவீர்களாக. சகல கல்விகளுக்கும் கற்பனைகளுக்கும் மற்றும் பல விஷயங்களுக்கும் அவர்கள் வேதங்களே புதையல்களாயிருக்கின்றன. எனவே, அவற்றினின்றும் நியோகம்மட்டும் எவ்வாறு நீங்கியிருத்தல் முடியும்? இன்னமும், என்ன என்ன விதமான படிப்பினைகளும் அவ்வேதங்களில் உண்டென்பது உங்களுக்குத் தெரியுமா?

பசுமேதம், அசுவமேதம், நரமேதம் முதலியவெல்லாம் நியாயமானவையேயென்று கூறப்படுவதுடன், குதிரையுடன் மனித ஸ்திரீகள் நியோகம் செய்வதும் அனுமதிக்கப்பட்டதென்றே வேதப் பிரமாணம் கூறப்படுகின்றது. “கோரக்பூர் அரசன் ஒருவன் இருந்தான்; அவனுடைய குருமார்கள் ஒரு யாகம் செய்தார்கள். அவர்களுடைய கட்டளையின் பிரகாரம் அவ்வரசனது பிரியமுள்ள ராணி குதிரையுடன் சம்போகம் செய்ததனால் இறந்துபோய்விட்டாள்” – (சத்தியார்த்த பிரகாசம் 11-ஆவது அத்தி. பார்க்க).

மற்றும் “பௌண்டரீக யாகம்”, மேல் இந்தியாவிலுள்ள வெட்கங்கெட்ட “நத்துராம் திருவிழா” போன்ற செய்கைகளுக்கும் வேதப்பிரமாணங்களே காண்பிக்கின்றனர். “உண்மையைச் சொல்லுமிடத்துக் கோசேனர்கள் மிகவும் மானக்கேடான காரியங்களைச் செய்கிறார்கள்: பீச்சாங்குழுல் நிறைய வர்ணத் தண்ணீரை இழுத்துக்கொண்டு ஹோளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது மாதர்களுடைய மர்மஸ்தானங்களிலும் இரகசிய பாகங்களிலும் அதைப் பீச்சுகிறார்கள்” – (ச.பி. அத். 11). இப்படிப்பட்ட கோசேனர்களுக்கும் அவ்வேதங்களில் விதியில்லாமற் போகவில்லை. இன்னமும், எண்ணத்தொலையாத ஹிந்துமத சாகைகளில் காணப்படும் அசுகிரமான அருவருக்கத்தக்க மானக்கேடுகளுக்கெல்லாம் ஆதாரம் ஆரியரின் வேதங்களாயில்லாமல் வேறு வேதமாயிருத்தல் முடியுமோ? எல்லாவற்றின் சகல பிரமாணங்களும் அவற்றில் காணப்படுகின்றன. இல்லை! ஏதேனுமொன்று குறைவாயிருக்கிறதென்று கூறத் துணிவோமாயின், சகல கலைகளுக்கும் ஞானங்களுக்கும் அவை எப்படிப் பொக்கிஷமாயிருத்தல் சாலும்? கொக்கோக முனிவரும் வேத சாஸ்திரங்களின் பிரமாணங்களைக் கொண்டுதானே தமது இன்பநூலை எழுதியிருத்தல் வேண்டும்? கபீர்.)

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment