துஆவும் சலவாத்தும்

ஆண்டவனிடம் துஆ கேட்க நாயகமவர்கள்மீது சலவாத் சொல்ல.

நம் நபிகள் (ஸல்) திலகமவர்கள், ஆண்டவனிடமே ஒவ்வொரு வஸ்துவையும் வேண்டிக் கேட்க வேண்டுமென்றும் தங்கள்மீது சலவாத் சொல்லவேண்டுமென்றும் தங்களுடைய அத்தியந்த

நேயர்களான சஹாபாக்களுக்கு அடிக்கடி சொல்வதுண்டு. இவ்வாறுதான் செய்ய வேண்டுமென்று அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையில் பின்வருமாறு சுட்டிக் காட்டியிருக்கிறான்:

சில மனிதர்கள் சில மனிதர்களிடம் சென்று, ‘உங்களுடன் யுத்தம் செய்வதற்காக அவர்கள் (குறைஷிகள் ஏராளமாய் மனிதர்களை) சேர்த்து வைத்திருக்கின்றனர். எனவே, நீங்கள் அவர்களுக்கஞ்சி நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறுகின்றனர்.  (ஆனால், இவ்வார்த்தை) அவர்களுக்கு ஈமானின் உறுதியை மேலும் அதிகமாய்ச் செய்துவிட்டது. எனவே, அவர்கள் (ஆண்டவன்மீது கொண்டுள்ள உறுதியின் காரணமாய்) ‘எங்களுக்கு அல்லா(ஹ்) போதுமானவன். அவன் அழகான பொறுப்பாளி,’ என்று பதில் கூறுகின்றனர். (யுத்தத்தின் பின்) அவர்கள் ஆண்டவனது அருளையும், அவனது அருட்கொடையையும் அடைந்தவர்களாய்த் திரும்பினார்கள். அவர்களை எந்த விதமான தீமையும் தொடரவில்லை. மேலும், அல்லாஹ்வின் பொருத்தத்தையே அவர்கள் தேடுகிறார்கள். அல்லாஹ் மகா பெரிய கொடையாளியாய் இருக்கின்றான்”—(3:172,173).

இத்திருவாக்கியத்தில் காணக்கிடக்கும் “ஹஸ்புனல் லாஹு வ நிஃமல் வகீல்” என்னும் இவ்வாக்கியத்தை ஹஜரத் இப்ராஹீம் (அலை) அவர்கள், தங்களைக் குஃப்பார்கள் நெருப்பு நிறைந்த அக்கினிக் கிடங்கில் தள்ளியபோது கூறினார்கள் என்றும் இவ்வாறே நம் நபிகள் திலமவர்களிடம் மக்காவின் குஃப்பார்களுள் சிலர் வந்து, இவர்களைப் பயமுறுத்தவான்வேண்டி மக்காவின் குறைஷிகள் ஏராளமான மனிதர்களைச் சேர்த்துக் கொண்டு இவர்களுடன் யுத்தம் செய்யப் போகின்றார்களென்றும், எனவே, இவர்கள் பயந்துகொண்டிருக்க வேண்டுமென்றும் சொன்னபோதும் நபிகள் (ஸல்) அவர்களும் இவ் வாக்கியத்தையே திருவுளமானார்களென்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ரிவாயத் செய்திருக்கிறார்கள்.

இஃதேபோல் நபிகள் நாதரவர்களுக்கு ஏதேனும் மனச்சோர்வு ஏற்படுமாயின், அது சமயம், “வணக்கத்துக்குரியவன் ஆண்டவன் தவிர வேறில்லை. அவன் மஹா பெரியவன்; தயாள அரசன்; வணக்கத்துக்குரியவன் வலிமையான அர்ஷின் அதிபதியான அல்லாஹ் ஒருவனே யாவன்; வணக்கத்துக்குரியவன் வானுலகங்களையும் பூலோகத்தையும் படைத்து ரக்ஷிக்கும் அந்த அல்லாஹ் ஒருவனே யாவன்,” என்று சொல்லிக்கொண் டிருப்பார்களாம். இன்னம், இவ்வாறான உயரிய வேண்டுகோள்களைத் தங்கள் குடும்பத்தவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வந்தார்களென்றும் ரிவாயத் செய்யப்பட்டிருக்கிறது. எம் வள்ளல் நாயகமவர்கள் ஆண்டவனிடம் எதையேனும் வேண்டும் நாட்டங் கொள்ளுவார்களாயின், “ஏ உயிர்பித்திருப்பவனே! யாதொரு குறைவுமின்றி ஒரே நிலைமையாய் நிலைத்திருப்பவனே! உன் அருளைக்கொண்டு யான் உதவி தேடுகின்றேன்,” என்று விண்ணப்பித்துக்கொண்டிருப்பார்களென்றும், தங்களுடைய அருமைப் புதல்வியான ஹஜரத் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் இவ்வாறே வேண்டிக்கொள்ள வேண்டுமென்று நபிகள் (ஸல்) அவர்கள் போதித்திருக்கிறார்களென்றும் ரிவாயத்துக்களில் காணக்கிடக்கின்றன.

ஒரு சமயம் நம் வள்ளல் (ஸல்) அவர்கள் தங்கள் உண்மை நேயர்களை நோக்கிச் சொன்னார்கள்: “சூரிய கிரஹணமும் சந்திர கிரஹணமும் ஆண்டவனுடைய இரு பெரும் அடையாளங்களாகும். எனவே, இவற்றிற்கும் (மனிதப்) பிறப்பு வளர்ப்புக்கும் எவ்வித சம்பந்தமு மில்லை. இதன் மூலமாய் அல்லாஹ் தன்னுடைய மகிமையையும் மஹாத்தியத்தையும் மனிதர்களுக்குக் காட்டுகிறான்; இவ்வடையாளங்களை நீங்கள் கண்ணுறுவீர்களாயின், ஆண்டவனுக் கஞ்சி அவனுக்கு வணக்கம் புரிந்து நுங்களின் பாபங்களுக்கு மன்னிப்பைத் தேடுவீர்களாக. அதுசமயம் நன்மையான காரியங்களை அதிகமாய்ச் செய்யுங்கள். அடிமைகளை உரிமையாக்குங்கள்; தான தர்மங்களைச் செய்யுங்கள்.” ஆனால், ‘இவ்விரு கிரஹணங்களைக் கண்ணுற்றதும் நீங்கள் மலாயிக்கத்துகளான வானவர்களிடமோ, அல்லது அன்பியாக்களிடமோ, அல்லது வேறு மனிதர்களான பெரியார்களிடமோ சென்று இந்த ஆபத்தான வேளையில் உங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள்,’ என்றும் நம் வள்ளலவர்கள் (ஸல்) போதித்துச் சென்றார்களில்லை.

எனவே, நபிகள் (ஸல்) அவர்களின் சற்குணங்களையும் ஒழுக்கங்களையும் நடக்கைகளையும் கவனிக்கப் புகுவீர்களாயின், இவ்விதமான உபதேசங்களையே அனேகமாய் நீங்கள் கண்டுகொள்வீர்கள். ஆகவே, உண்மையிலேயே ஆண்டவன்மீதும் அவனுடைய ரசூலின்மீதும் நன்னம்பிக்கை கொண்டிருக்கும் மூஃமினானவர்கள், எவ்வாறு ஆண்டவனும் ரசூலும் சொல்லிய, இல்லை, காட்டிய ஒரு மார்க்கத்தைப் பின் பற்றாது, நசாராக்களும் முஷ்ரிகீன்களும் காட்டிச் சென்ற மார்க்கத்தைப் பின்தொடர்ந்து நடந்து செல்வார்கள் என்று சொல்ல முடியும்? மூஃமினான சோதரர்காள்! நுங்கள் ஈமான் கூறுகின்ற நேரான பாதையில் சீராய் நடந்து செல்வீர்களாக.

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment