தோழியர் – 04 உம்முவரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் (ரலி)

by நூருத்தீன்
4. உம்முவரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் (أم ورقة بنت عبد لله الحارث)

ருநாள் காலை பள்ளிவாசலுக்கு விரைந்து வந்தார் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு. சொற்பொழிவு மேடையின்மீது விரைந்து ஏறியவர், மக்களுக்கு ஒரு முக்கியச் செய்தியை அறிவித்தார். துக்கச் செய்தி அது. அடுத்து அவர் கட்டளையொன்று இட, விரைந்து ஓடினார்கள் சிலர்.

மதீனாவிலிருந்து சற்று தொலைவில் அவர்கள் தேடி ஓடி வந்த இருவர் பிடிபட்டனர். கலீஃபா உமரிடம் அவர்களை இழுத்துவர, குற்றத்தை ஒப்புக்கொண்டனர் இருவரும்.

‘கொல்லுங்கள் அவர்களை’ எனத் தீர்ப்பு வழங்கப்பட, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டனர் அவ்விருவரும். அவ்விதமான தண்டனை மதீனாவில் நிறைவேற்றப்பட்டது அதுவே முதல் முறை. காரணம் இருந்தது. அவர்கள் புரிந்த குற்றத்தின் கொடூரம் அப்படி!

oOo

மதீனாவின் அன்ஸாரிப் பெண்களுள் ஒருவர் உம்முவரக்கா. உயர்குடியைச் சேர்ந்தவர். ஏகத்துக்குச் செல்வ வசதி. தம் ஊரில் வீதியெங்கும் வீடெங்கும் இஸ்லாம் அறிமுகமாக ஆரம்பித்த ஆரம்பக் கணங்களிலேயே, தமக்கு அமைந்திருந்த மேட்டிமை, செருக்கு, இன்ன பிறவற்றை எல்லாம் ஒதுக்கி எறிந்துவிட்டு, எளியோருடன் எளியவராய் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் அவர். அடுத்து? முன்பே பல தோழர்கள் தோழியர் மூலமாய் நமக்கு அறிமுகமான நிகழ்வுகள்தாம். இஸ்லாத்தை ஏற்றத் தருணம் முதல் குர்ஆன், நபியவர்களின் போதனைகள் என்று ஆழ்ந்துபோனார் உம்முவரக்கா. குர்ஆனின் கருத்துகளில் மூழ்கி எழுவது நாள் தவறாமல், நொடி தவறாமல் இயல்பாகிப்போனது.

நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்து வந்து இரு ஆண்டுகளில் சூழ்ந்தது பத்ருப் போர் மேகம். முஸ்லிம் வீரர்களின் படை அணி ஆயத்தமாக ஆரம்பித்தது. உடல் தருவேன்; உயிர் தருவேன் என்று மதீனாவாசிகளான நாம் வாக்குறுதி அளித்திருக்கிறோம். வீட்டில் இன்னும் என்ன வேலை; நாமும் போகலாம் என்று தோன்றியது உம்முவரக்காவுக்கு. வெறும் சம்பிரதாயமான, மனத்தளவிலான நினைப்பெல்லாம் இல்லை. விடுவிடுவென்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தவர், “அல்லாஹ்வின் தூதரே! நானும் படையினருடன் இணைந்துகொள்ள அனுமதி அளியுங்கள். போரில் காயம் அடைபவர்களுக்குச் சிகிச்சை அளிப்பேன்; வீரர்களுக்குப் பணிவிடை செய்வேன். இந்த வாய்ப்பின் மூலமாக அல்லாஹ் நாடினால் எனக்கு உயிர்த்தியாகியாக வாய்ப்பும் கிடைக்கலாம்” என்றார்.

ஆண்கள் களத்திற்கு ஓடிவருவது இருக்கட்டும். ஒரு பெண், தாம் அல்லாஹ்வுக்காக உயிர் துறப்பதை ஏதோ பந்தயத்தில் முதல் பரிசு கிடைப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்பதுபோல் வந்து சொல்கிறார் என்றால், அதற்கு ஆழ் மனத்தில் தைரியம் அப்பியிருக்க வேண்டும். அல்லாஹ்வின் மீதும் அவன் நபியின் மீதும் மட்டற்ற பற்று இரத்த நாளமெங்கும் பரவியிருக்க வேண்டும். அவையெல்லாம் இல்லாதவரையில் உயிரைக் கையில் ஏந்தி ஓடிவரும் துணிவு இலேசில் அமைந்து விடாது.

அதற்கு நபியவர்கள் அளித்த பதில் ஓர் ஆச்சரியம். “உம்முவரக்கா. நீங்கள் வீட்டிலேயே தங்குங்கள். அல்லாஹ் உங்களுக்கு உயிர்தியாகப் பரிசை அருள்வான்.”

முஸ்லிம்கள் முதல் முறையாகக் களம் காணப்போகும் போர் பத்ரு. மக்கத்துக் குரைஷிகளோ பெரும் வெறியுடன் நிறையப் படை பலத்துடன் வருகிறார்கள் என்றது செய்தி. இங்கு முஸ்லிம் படையணியிலோ இணைந்துள்ள ஆண்களுக்கே போதிய ஆயுதங்களோ வாகன வசதியோ இல்லாத நிலை. இப்படி ஏகப்பட்ட சவால்கள். நபியவர்கள் இந்தக் காரணங்களுக்காக சாக்குப் போக்கு, ஒப்புக்கான ஆறுதல் சொல்லி உம்முவரக்காவைத் திருப்பி அனுப்பிவில்லை. அதன் பின்னே தீர்க்க தரிசனம் ஒளிந்திருந்தது. தோழர்களும் அதை அப்படியே எவ்விதத் தயக்கமும் இன்றி அப்பட்டமாக நம்பினார்கள்.

அல்லாஹ் உங்களுக்கு உயிர்தியாகத்தை அருள்வான் என்று நபியவர்கள் சொல்லிவிட்டார்கள் அல்லவா? அதனால் அன்றிலிருந்து அவர்கள் அனைவருக்கும் அவர் ‘உயிர்த்தியாகி உம்முவரக்கா!’ அவரை அப்படித்தான் அழைத்தார்கள்.

வீட்டிற்குத் திரும்பிய உம்முவரக்கா மேலும் சிறப்பான இறைபக்தி, எக்கச்சக்கமான பணிவு, அடக்கம் என்று அமைந்துபோனார். கடமையான தொழுகைகள், நள்ளிரவுத் தொழுகை, நோன்பு, குர்ஆன் என்று முழுநேரமும் ஆழ்ந்து மூழ்கி, நாளுக்குநாள் அது வளர்ந்து வந்தது.

காலமோ அது தன்பாட்டுக்கு நகர, உயிர்த்தியாகி உம்முவரக்கா உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் நபியவர்களிடம் வந்தார் அவர். தம் வீட்டில் தொழுகைக்கு பாங்கு சொல்ல முஅத்தின் வேண்டும் என்பது கோரிக்கை. அதற்கு அனுமதியளித்தார்கள் நபியவர்கள். வீட்டின் ஒரு பகுதியைத் தொழும் இடமாக அமைத்துக்கொண்டு, அங்கு அவருடைய தோழியர், உறவுப் பெண்களுடன் தொழுகை நடக்க ஆரம்பித்தது.

இவருக்குத் திருமணம் நிகழவில்லை என்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமது பெரிய வீட்டில் தனியாக இருந்தவரின் உதவி ஒத்தாசைக்கு மட்டும் இரு அடிமைகள். வீட்டு வேலைகளைச் செய்வதற்குப் பெண்ணடிமையும் இதர வெளி அலுவல்களுக்கு ஆண் அடிமையும் அவருக்குத் துணை புரிந்தனர். அவர்களை அடிமைபோல் கருதாமல், தாய் தம் குழந்தைகளிடம் பாசம் கொள்வது போல், அன்பும் அக்கறையுமாக நடத்தி வந்தார் உம்முவரக்கா. அதன் உச்சபட்சமாக, தாம் இறந்ததும் இரு அடிமைகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உயில் எழுதப்பட்டது. அக்காலத்தில் அடிமைகளுக்கு விடுதலை என்பது எசமான்-எசமானியாய்ப் பார்த்து விடுவித்தால்தான் ஆச்சு! அதைச் சிறப்பாக ஆரம்பித்து வைத்திருந்தது இஸ்லாம். உயில் விபரம் தெரிந்த அடிமைகளுக்கு மகிழ்ச்சி! காத்திருக்க ஆரம்பித்தனர் அவ்விருவரும்.

காலமோ அது தன்பாட்டுக்கு நகர்ந்துகொண்டிருந்தது. நபியவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்க, அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றார்கள். உயிர்த்தியாகி உம்முவரக்கா உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு மரணித்த பின்னர், உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவானார். காலம் நகர நகர, உம்முவரக்காவின் இரு அடிமைகளுக்கு மட்டும் பொறுமை குறைய ஆரம்பித்தது. உயில் எழுதி வைத்தோமா, இறந்து போனோமா என்று இல்லாமல் இந்த மாது நிதானமாகக் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தால், நாம் எப்பொழுது விடுதலையாவது? என்று அவர்களது மனத்தில் நாசகார எண்ணம் ஆட்டம் போட்டது. அதன் விளைவு, கொடூரத்தில் முடிந்தது.

ஒருநாள் இரவு உம்முவரக்கா ரலியல்லாஹு அன்ஹா உறங்கும்போது, இரு அடிமைகளும் தங்கள் எசமானியின் கழுத்தை நெரித்துக் கொன்றனர். அவரது உடலை ஒரு துணியால் போர்த்தி, வீட்டின் மூலையில் தள்ளிவிட்டு, ஆஹா சுதந்திரம்! என்று தப்பித்தனர். அது தப்பான சுதந்திரம், முதலுக்கே மோசம் என்று தெரியாமல் போனது அந்த மடையர்களுக்கு.

மறுநாள் காலை எப்பொழுதும் போல் சுப்ஹுத் தொழுகைக்கு எழுந்த கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு என்னவோ சரியில்லை என்று தோன்றியது. தொழுகை முடிந்தது. தோழர்களிடம், “எல்லா இரவுகளிலும் என் சிற்றன்னை உம்முவரக்கா குர்ஆன் ஓதும் சப்தம் கேட்கும். ஆனால், நேற்றிரவு எனக்குக் கேட்கவில்லையே!” என்றார்.

உடனே தம் தோழர்களுடன் உம்முவரக்கா வீட்டிற்கு விரைய, வீட்டில் யாரையும் காணவில்லை. நிசப்தம் அவர்களை வரவேற்றது. நிச்சயம் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது என்று உமரின் உள்ளுணர்வு அடித்துச் சொல்லியது. துணியுடன் சுருட்டப்பட்டுக் கிடந்த உம்முவரக்காவின் உடலைக் கண்டுவிட்டார்கள் தோழர்கள். உமரின் வாயிலிருந்து வெளிவந்த முதல் வார்த்தை, “அல்லாஹ்வும் அவன் தூதரும் உண்மையையே உரைத்தார்கள்!”

வெகுதூரம்கூட அந்த அடிமைகள் தப்பி ஓடியிருக்கவில்லை. பிடித்து இழுத்து வர, குற்றத்தை ஒப்புக்கொண்டனர் இருவரும். கொல்லுங்கள் அவர்களை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டனர் அவ்விருவரும்.

குர்ஆனுடனே வாழ்ந்து வந்தவர் உம்முவரக்கா. அதை மனனம் செய்த ஹாபிழா, தாம் வாழும் வீட்டிலேயே உயிர்த்தியாகி ஆகிப்போனார். குர்ஆனை ஓதுகின்ற அவரது குரலே அவருடைய இருப்பிற்கும் இறப்பிற்கும் அடையாளமாகிப் போனது.

ரலியல்லாஹு அன்ஹா!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

உதவிய நூல்கள்: Read More

Related Articles

Leave a Comment