இப்னு கஸீரின் நபிமார்கள் வரலாறு – விமர்சனம்

by நூருத்தீன்

ஹாபிஸ் இப்னு கஸீரின் (ரஹ்) ‘அல்-பிதாயா வந்நிஹாயா’ என்ற வரலாற்றுத் தொகுப்பிலிருந்து ‘கஸஸுல் அன்பியா’ எனும் நபிமார்களின் வரலாற்றை ஆயிஷா பதிப்பகத்தினர் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். தரமான நூல், அழகிய பதிப்பு. முதல் பாகமும் இரண்டாம் பாகமும் ஆதம் (அலை) வரலாற்றில் துவங்கி மூஸா (அலை) வரலாறு வரை சொல்கின்றன.

இப்னு கஸீரின் அரபு மூல நூல்களுடன் தொடர்புள்ளவர்களுக்கு அதை வேறு மொழியில் மொழிபெயர்ப்பதன் சிரமம் புரியும். அதுவும் சமகால வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அதை மொழி மாற்றவேண்டும் என்பது மூச்சிரைக்கும் வேலை. ஆலிம் நூ. அப்துல் ஹாதி பாகவியின் உழைப்பு அவ்வகையில் ஆச்சரியம் ஏற்படுத்துகிறது. அல்லாஹ் அவரது உழைப்பை ஏற்றுக்கொள்வானாக.

நபிமார்களின் வரலாறு குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் ஆகியனவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள நூல். ஆயினும் பலவீனமான, ஆதாரம் குன்றிய ஹதீஸ்கள் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கும். அவ்விடங்களிலும் அதிகப்படியான ஆய்வுகள் தேவைப்படும் இடங்களிலும் மொழிபெயர்ப்பாளர் அவற்றைக் கவனமாய் அடிக்குறிப்பில் தெரிவித்துள்ளது நல்ல விஷயம்.

வேதம் அருளப்பெற்றவர்களின் கதைகளிலிருந்தும் விபரங்கள் உள்ளன. மூல ஆசிரியர் இப்னு கஸீரே அதை ஆய்வு செய்து, விளக்கமளித்து, நெருடல்களை, புறந்தள்ள வேண்டிய விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். வாசகர்கள் அதை அறிந்து பொறுப்புடன் படிக்க வேண்டியது அவசியம்.

தமிழாக்கம் சிறப்பாகவே உள்ளது. அதே நேரத்தில் இஸ்லாமிய தமிழ்ப் பிரசங்கங்களில் பிரத்யேகமாகப் பயன்படும் வார்த்தைகளும் ஆங்காங்கே உள்ளன. தமிழ் மொழியில் வல்லமை உள்ளவர்களிடம் அளித்து படிதிருத்தம் மேற்கொண்டிருந்தால் மொழிநடை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

இஸ்லாமிய வரலாற்றில் ஆர்வம் கொண்டு படிப்பவர்கள், இஸ்லாமியக் கல்வி பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம். யதார்த்த வாசகர்களுக்கு ஒரே மூச்சில் முடியாது. கூடாது என்பதும் என் கருத்து. சிறிது சிறிதாகப் படித்தால் நலம்; எழுத்தின் போக்கு புலப்பட்டு எளிதாகி விடும். இதை குறை என்று சொல்ல முடியாது. மூல நூலே அத்தகைய உயர் தரம்.

ஏதோ ஒரு நாவலைப்போல் படித்தோம், தூக்கிவைத்துவிட்டோம் என்று இந்நூலைக் கருதினால் அது பிழை. அவ்வப்போது படிக்க, விபரங்கள் தேட என்று தொடர்ந்து பயனளிக்கக்கூடிய நூல் இது. அதனால், கடின அட்டையுடன் இதை அச்சிட்டிருந்தால் புத்தகம் சேதமுறாமல் நெடுநாளைக்குப் பாதுகாக்க ஏதுவாக அமைந்திருக்குமே என்பது என் ஏக்கம். குறிப்பாக இரண்டாம் பாகத்தின் அட்டை, புத்தகத்தின் பளுவைத் தாங்க போதுமானதாக இல்லை.

நபிமார்களின் வரலாறு நம் மூதாதையர்களின் வாழ்க்கை. இறைவன் அவற்றை அறிவித்துள்ளது படித்துப் பொழுதைக் கழிப்பதற்கன்று. ஏராளமான பாடங்கள் பொதிந்துள்ளன. வாசகர்கள் வாங்க வேண்டும். படித்துப் பயனுற வேண்டும்.

நூல்:

இப்னு கஸீரின் நபிமார்கள் வரலாறு
முதல் பாகம் – விலை: INR 175/-
இரண்டாம் பாகம் – விலை: INR 225/-

மொழிபெயர்ப்பு ஆசிரியர்:

நூ. அப்துல் ஹாதி பாகவி

வெளியீடு:

ஆயிஷா பதிப்பகம்
78 பெரிய தெரு
திருவல்லிக்கேணி, சென்னை-5
தொலைப்பேசி: 044 4356 8745

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment