28. தமீதாவின் வீழ்ச்சி

லூயீயின் கடல்போன்ற படைத்திரளைக் கண்ட தமீதாவின் கவர்னர் கதிகலங்கிப் போயினார். ஷெ­ய்கு ஜீலானீ என்னும் அந்த நிர்வாகி மிகவும் கெட்டிக்காரர், சமயோசித புத்தி படைத்தவர், சிறந்த

வீரர், முதிர்ந்த ஞானி என்பதில் ஐயமில்லை. ஆயினும், திடுதிப்பென்று சற்றுமே எதிர்பாராத சமயத்தில் இவ்வளவு பெரிய படையுடன் குபீரென்று வந்து பாயும் லூயீயை எப்படி எதிர்ப்பது? சுல்தானோ, திமஷ்கில் இருக்கிறார்; சுல்தானாவோ, காஹிராவில் இருக்கிறார்; படைப்பலமோ மிகச் சொற்பம்; சுல்தானாவிடம் போய்க் கலந்தாலோசித்துவிட்டு வரலாமென்றாலோ, அதற்கிடையில் என்ன நடக்குமென்பதை எவரால் கூறமுடியும்? அன்று நீலநதி வெள்ளப் பிரவாகத்தில் சிக்கிக்கொண்ட கிறிஸ்தவர்கள் திகைத்த திகைப்பைவிட இப்போது தமீதா வாசிகள் விழித்த விழிப்பு அதிக பரிதாபகரமாயிருந்தது. ஜீலானீ சிறிது நேரமே சிந்தித்தார். இதுபோதுள்ள சூழ்நிலையில், அதிலும் சுல்தானும் அவருடைய படைகளும் உள்ளூரிலில்லாத இச் சந்தர்ப்பத்தில் கிறிஸ்தவர்களை யெதிர்த்துப் போராடுவது முதலாவது முட்டாட்டனமாய்ப் போய்விடுமென்று உணர்ந்து கொண்டார். எதிர்ப்பதென்றாலும், சிறிதாவது பலமோ, அல்லது துணையோ வேண்டாமா?

சென்றமுறை தமீதா முற்றுகைக்கு இலக்காயினமையால் விளைந்த முடிபுகளை ஜீலானீ நன்கறிவார். எனவே, காட்டுமிறாண்டி ஜாதியார்களை வீணே எதிர்த்து இந்நகரைப் பாழ்படுத்துவதைவிடப் பேசாமல் தமீதாவை விட்டு எல்லாரும் வெளியேறி ஓடிப்போய், சுல்தானாவிடம் வி­ஷயத்தை விளக்கி, ஷாம் சென்றிருக்கும் ஸாலிஹையும் அவர்தம் படைகளையும் மிஸ்ருக்கு வரவழைத்துப் பெரிய போர் நிகழ்த்தி லூயீயையும் அவருடைய சேனைகளையும் புறமுதுகிட்டோடச் செய்வதே தான் சரியான முறையென்று முடிவுசெய்தார். அவருடைய ஸ்தானத்தில் வேறெவர் இருந்தாலும், இதைவிடச் சிறந்த வழியை எப்படிப் பின்பற்றமுடியும்? எனவே, அவர் தமீதாவைச் சீக்கிரத்திலே காலிசெய்துவிட்டு, எல்லாரையும் அழைத்துக்கொண்டு நீலநதி மார்க்கமாக விர்ரென்று வெளியேறிக் காஹிராவுக்குள்ளே ஓடிவந்துவிட்டார்.

உரித்து வைக்கப்பட்ட வாழைப் பழம்போலிருந்த தமீதாவை லூயீ லபக்கென்று விழுங்கிவிட்டார்! கிறிஸ்தவர்கள் ஒரு சண்டையும் போடாமல், ஓருயிரையும் கொல்லாமல் ஒரே நிமி­ஷத்தில் இவ்வளவு சுலபமாக அந்நகரைக் கைப்பற்றிவிட முடியுமென்று கனவுகூடக் கண்டனரில்லையே!

தமீதாவை விட்டு வெளியேறிய கவர்னரும், அவருடைய பரிவாரங்களும், பொதுமக்களும் காஹிராவுக்கு வந்து சேர்கிற வரையில் ஷஜருத்துர்ருக்கு ஒரு செய்தியும் தெரியாது. எல்லாம் மின்வெட்டுகிற வேகத்திலே ஒன்றையடுத்து மற்றொன்று நடந்தபடியாலும், கிறஸ்தவர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்களென்னும் செய்தியைத் தூதர்கள் சுல்தானாவிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கு முன்னமே ஜீலானீயும் அவருடன் வெளியேறியவர்களும் காஹிரா வந்தடைந்து விட்டமையாலும், ஷஜருத்துர் முற்கூட்டியே எதையும் தெரிந்துகொள்ள மார்க்கமில்லாது போயிற்று. தமீதாவுக்குள்ளே கிறிஸ்தவப் படைகள் நுழைகிற வரையில் அவ்வூர்வாசிகள் எப்படி ஒன்றும் அறியாதவர்களாயிருந்தார்களோ, அப்படியே இருந்தது காஹிராவின் நிலைமையும்.

அன்று ஹி.647-ஆம் ஆண்டின் ஜமாதியுல் ஆகிர் பிறை 10 (அஃதாவது, 18-09-1249) நடந்துகொண்டிருந்தது. இன்னமுங்கூட ஷாமிலிருந்து சுல்தான் திரும்பி வரவில்லை. மாலையில் அரச தர்பாரை முடித்துவிட்டு ஷஜருத்துர் அஸ்ர் (மாலைத் தொழுகை) தொழுதுகொண்டிருந்தார். அவர் தொழுதுகொண்டிருக்கும்பொழுதே பல அடிமைகள் அவரிடம் ஓடிவந்தனர். வந்த அவசரத்தில் அவர்கள் ஏதேதோ பேசியிருப்பார்கள். ஆனால், அரசியார் தொழுதுகொண்டிருந்தமையால், அவர்கள் பேசாமல் நின்றுவிட்டார்கள் அவர்கள் பேசக்கூடாத சந்தர்ப்பத்தில் மாட்டிக் கொண்டபடியால், மெளனமாய் நின்றார்களென்றாலும், அவர்கள் நெஞ்சுக்குள் அடித்துக்கொண்டிருந்த அவசரமிக்க ஆத்திரம் அவர்களைப் பொறுமையிழக்கச் செய்துவிட்டதென்பது முகத் தோற்றத்திலேயே தெற்றெனப் புலனாயிற்று. ஷஜருத்துர் அந்த நான்கு ரக்ஆத் தொழுகையைத் தொழுது முடித்த அந்தச் சில நிமிடங்களும் அவர்களுக்கு அத்தனை நூற்றாண்டுகளாகவே தோற்றின.

ஷஜருத்துர் தொழுது, ஸலாம் கொடுத்தார். அவர் துஆ ஓதுமுன்னரே ஓர் அடிமை அவரெதிரில் சென்று நின்றான். வியப்புக் கலந்த பார்வையுடனே அவ்வடிமையை சுல்தானா நோக்கினார். “என்ன, இவ்வளவு படபடப்பான விசேஷம்?” என்று கேட்பது போலிருந்தது அவரது முகத்தோற்றம்.

“யா சாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! தமீதாவின் ஷெ­ய்கு ஜீலானீயும் அவர் பிரதானிகளும் இங்கே வந்து அரண்மனைக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களை அவசரமாகவும் உடனேயும் பார்க்க வேண்டுமாம்! தங்கள் திருவுளச் சித்தத்தை அடியேன் அறியவே இங்கு ஓடிவந்தேன்,” என்று அந்த அடிமை மிக்க மரியாதையாகவும் விரைவாகவும் பேசினான்.

ஜீலானீயின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் ஷஜருத்துர்ரின் வதனம் கறுத்துப் போய்விட்டது. அன்று ஸாலிஹிடம் வாது புரிந்ததிலிருந்து அவரையறியாமலே ஓர் உள்ளுணர்ச்சி தமீதாவைப் பற்றியும், கிறிஸ்தவர்களைப் பற்றியும் அடிக்கடி மனத்துள் எழுந்துகொண்டேயிருந்தபடியால், ஏதோ பேராபத்து வந்துவிட்டது என்பதை அவ்வரசியார் இயற்கையாகவே உணர்ந்தார். உடனே மெய்ப்பதறிச் சட்டென்றெழுந்து, மந்திரி பிரதானிகளை அக்கணமே தர்பாருக்குக் கூப்பிட்டு வரவேண்டுமென்று கட்டளையிட்டுவிட்டு, காற்றில் மிதந்து பறக்கும் பருந்தைப்போல் விர்ரென்று அத்தாணி மண்டபத்துக்கு விரைந்தேகினார்.

வழக்கத்துக்கு விரோதமாக இன்று சுல்தானா இப்படி இரண்டா முறையாக மாலைப்பொழுதில் அரசவை செல்வதைக் கண்டு அரண்மனையிலுள்ளோர் அனைவரும் திகைத்துப் போனார்கள். ஒருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும், சாவி கொடுக்கப்பட்ட இயந்திரம் தானே இயங்குவது போல் அங்கிருந்தோர் அனைவரும் மூச்சுவிடாமல் தத்தம் வேலையைக் கவனிக்கலாயினர். அரசியார் நடந்து செல்லும் இருமருங்கிலும் மம்லூக்குகள் அணிவகுத்து நின்றனர். அரசவைக்குச் செல்லும்போதெல்லாம் அவரை வழக்கமாகத் தொடர்ந்து செல்கிற தோழியரிருவர் ஷஜருத்துர்ரின் பின்னே விரைந்தனர். பராக்குக் கூறுகிறவர்கள் பராக்குக் கூறினர். எல்லாம் ஒழுங்காகவும் வழக்கத்துக்கேற்பவும் நடந்தேறின. ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்: என்றைக்கும் அரசியார் இரண்டாமுறையாக ஒரே நாளில் அரசவை கூட்டியதில்லை; எப்போதும் அவர் இன்றைப்போன்ற அவ்வளவு விரைவாகவும் அவசரமாகவும் நடந்து சென்றதில்லை.

ஷஜருத்துர் பதுமைபோல் அரியாசனத்தின் மீது அமர்ந்திருந்தார். எல்லா மந்திரி பிரதானிகளும் அங்கே திருவோலக்கத்தில் கூடியிருந்தனர். அரசியார் முகம் மிகவும் கலவரமுற்றிருந்தது. கூடியிருந்தோர் உடலெல்லாம் அதிசயத்தாலும் ஆச்சரியத்தாலும் படபடத்து விலவிலத்தன. அத்தாணி மண்டபம் முழுதுமே அச்சம் குடிபுகுந்திருந்தது. அரசியார் ஆசனத்தில் அமர்ந்ததும் கம்பீரமான தொனியில், “ஜீலானீயை இங்கே கொண்டு வாருங்கள்!” என்று கடுமையாகக் கட்டளையிட்டார்.

அடுத்த வினாடியில் தலைகவிழ்ந்தவண்ணம், கைகளை மரியாதையாய்க் கட்டிக்கொண்டு, சென்னி தாழ்த்தி, அந்த ஜீலானீ அரசவையுள் நிதானமாய் நுழைந்தார். அவர் முகம் பயங்கரமாயிருந்தது. அச்சத்தாலும் அவமானத்தாலும் அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கவர்னரென்னும் ஹோதாவில் அவர் தீரயோசித்தே தமீதாவைத் துறந்துவிட்டு வந்திருந்தாலும், இப்போது சுல்தானாவின் திருமுன்பினில் எவ்வாறு தம் நடத்தைக்கு சமாதானம் கூறுவது? என்று தயக்கங்கொண்டிருந்தார். தவறு செய்துவிட்ட குழந்தையை அடிக்கத் தந்தை கூப்பிடும்போது அக்குழவி எப்படிப் பயந்துபயந்து முன்னோக்கிச் செல்லுமோ அப்படியிருந்தது அவருடைய நடை. அல்லது தன்னைப் பலிகொடுக்கவே கொண்டுசெல்கிறானென்பதை ஆடு உணர்ந்துகொண்டால் அஃது எப்படிப் போகுமோ, அப்படியிருந்தது அவரதுள்ளம். ஸல்தனத்தின் யோசனையைக் கேட்காமல் ஒரு கவர்னர் இப்படித் தம் சொந்த இஷ்டத்துக்கு நடந்துவிட்டால், அந்தக் காலங்களில் எப்படியிருந்திருக்கும் என்பதை நீங்களே நிதானியுங்கள்!

அரியாசனத்துக்கு எதிரே கவர்னர் ஜீலானீ வந்து நின்றார். அவருடைய அவயவங்களின் செயல்கள் மின்சாரத்தால் இயங்கும் பதுமையின் கைகால்களைப்போல் பணியாற்றினவேயன்றி, உயிருள்ள மனிதரின் உறுப்புக்களைப் போல வேலை செய்யவில்லை. சற்றே நடுங்கும் நாவுடனும், சிறிதே கம்மிய குரலுடனும் அவர் பேசினார்:–

“யா சாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! பேராபத்து திடீரென்று வந்துவிட்டது. நாம் எவருமே சற்றுமே எதிர்பாராத நிலைமையில் பிரெஞ்சு மன்னன் லூயீ லக்ஷ­க்கணக்கான நசாராக்களுடனே கடல்கடந்து வந்து தமீதாவைத் தாக்க ஆரம்பித்தான். ஸல்தனத்தின் இன்றைய நிலைமையில் ராணுவ பலம் மிகவும் குறுகியிருப்பதால், மிகச் சொற்பமான என்னுடைய படையினரையும் இச்சமயத்தில் வீம்புக்காகப் பலியிட்டுவிடுவது சிறிதுமே விவேகமாகாதென்று அடியேன் கருதிய காரணத்தாலும், எதிர்த்து நின்றால் ஏராளப் பொருள் நஷ்டமும் உயிர் நஷ்டமும் விளைந்துவிடுமென்று நிச்சயமாய்த் தெரிந்துகொண்டேனாகையாலும், யானறிந்த யுத்தத்தந்திர முறையைக் கடைப் பிடித்து நடக்க வேறு வழி இல்லாத காரணத்தாலும் தமீதாவை அப்படியே விட்டுவிட்டு, எல்லாருடனும் ஓடிவந்துவிட்டேன்.

“யா மலிக்காத்தல் முஸ்லிமீன்! யான் இந்த நடவடிக்கையை யெடுக்குமுன்னர்த் தங்களுக்குச் செய்திவிடுத்துத் தங்கள் பதிலைப் பெறுவதற்கு முன்னே அந்தக் கடல்போன்ற எதிரிக்கூட்டம் தமீதாவைத் தரைமட்டமாக்கி, அத்தனை நிரபராதிகளின் உயிரையும் உறிஞ்சு விடுமென்று யான் அஞ்சியே என் தீர்க்கமான உசிதத்தைக் கைக்கொண்டேன். அடியேன் செய்த நடவடிக்கையை மலிக்காவாகிய தாங்கள் அங்கீகரித்து, இச் சிறியேனை மன்னிக்கும்படி அடிபணிந்து கேட்டுக்கொள்கிறேன்!”

வலது முழங்கையை ஆசனக் கைப்பிடியில் நாட்டு, மணிக்கட்டின் பின்புறத்தில் தமது வலது கன்னத்தை ஊன்றியவண்ணம் வீற்றிருந்த ‘அலகில் புகழ்ப்படாம் போர்த்த அரசியார்’ திருவதனத்தில் சொல்லொணாச் சஞ்சலம் வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. தாம் பயந்துக்கொண்டிருந்த அதே சம்பவம் இப்படி வந்து வாய்த்ததே என்று பெருமூச்செறிந்தார். அன்று அமீர் தாவூத் இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் பட்ட உபத்திரவங்களை அவர் முன்னம் ஷஜருத்துர்ருக்கு வருணித்தபோது இருந்த உள்ளத்துடிப்பைவிட இப்போது இவருடைய மனவேதனை சகிக்க முடியாததாய்ப் போய் விட்டது. ஆண்டவன் ஸல்தனத்துக்கு இடும் சோதனைகளை ஸுல்தான் வெளிநாடு சென்றிருக்கும் போதுதானா விடவேண்டும்!

“ஏ ஷெய்கே! அக்கிரமக்காரர்களுக்கு ஆண்டவன் உதவி செய்வதில்லை யென்பதையும், நீதிமான்களின் பக்கமே அவன் சதா ரஹ்மத் செய்கிறானென்பதையும் நீர் அறிந்திருக்கிறீரல்லவா? அப்படியிருக்க, அந்த அநியாயக்காரர்களாகிய கொடிய நசாராக்களுக்கு அஞ்சிப் புறமுதுகிட்டோடி வந்திருக்கிறீரே, இதுவும் ஆண்மையா? அல்லது நீர் கூறுகிற அரச தந்திரமா? தமீதாவை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டு ஓடிவந்து விடுவதற்காகவா உம்மை நாம் அப்பகுதிக்கு இதுகாறும் ஆளுநராக நியமித்திருந்தோம்? ஊரை விட்டுவிட்டு, அதிலும் காட்டிக் கொடுத்து விட்டு ஓடிவந்ததுடன், உமது செய்கையை நாம அங்கீகரிக்க வேண்டுமென்றும் கூறுகிறீரே! இதுதான் நமது ஸல்தனத்தில் நடக்கும் வீரச்செயல் போலும்! என்ன தைரியத்தைக்கொண்டு இங்கேவந்து நெஞ்சு நிமிர்ந்து நிற்கிறீர்?” என்று ஷஜருத்துர்ரின் வீங்கி வடியும் ஹிருதயத்துக்குள்ளிருந்து சுடச்சுட வார்த்தைகள் வெகு வேகமாய்ப் பறந்தன.

“யா மலிக்கா! யான் என் உயிருக்குப் பயந்தாவது, எதிரிகளுக்கு அஞ்சியாவது இங்கு ஓடிவந்து விடவில்லையே! ராக்ஷஸர்களேபோல் லக்ஷ­க்கணக்கில் திரண்டுவந்து நிற்கும் காட்டுமிறாண்டிகளான அந்த அநாகரிகப் பிசாசுகள் நேர்மையான முறையில் இந்த யுத்தத்தை ஆரம்பித்திருந்தால், என் கடைசித்துளி உதிரம் இருக்கிறவரையில் எப்பாடு பட்டேனும் தமீதாவைக் காப்பாற்றியிருப்பேனே! பகற்கொள்ளையடிக்கவும், படுகொலை புரியவும், தீயிட்டுக் கொளுத்தவும், படுநாசம் விளைவிக்கவுமே கங்கணங் கட்டிக்கொண்டு, சிலுவை யுத்தம் என்கிற பெயரால், பைத்துல் மு(க்)கத்தஸைக் கைப்பற்றப் போவதாகப் பொய்ந் நடிப்பு நடித்துக்கொண்டு நம்மீது பேடிகளேபோல் மிருகத்தனமாய் வந்து பாய்கிற பகுத்தறிவில்லா அநாகரிக முரடர்களை யான் எப்படி எதிர்ப்பது, அல்லது எப்படித் தடுத்து நிறுத்துவது? தர்மயுத்தமுறை தவறி நடக்கிற அயோக்கியர்களிடம் நாம் எப்படித் தர்மயுத்த நியாயத்தைக் கைக்கொள்ள முடியும்?

“யா சாஹிபா! பரந்த அறிவுவிசாலம் படைக்கப் பெற்ற தங்களுக்குப் பழைய சரித்திரம் தெரியுமே! சென்ற ஆறாவது சிலுவை யுத்தத்தில் மலிக்குல் காமில் ஐயூபி அமீர்களின் துணைக் கொண்டு எவ்வளவோ நீதமாக நடந்திருந்தும், கிறிஸ்தவர்கள் அளித்த பரிசு என்னவாயிருந்ததென்பதை நம்முள் எவரேனும் மறக்க முடியுமா? அப்படிப்பட்ட மூர்க்க சிகாமணிகளிடம் எதிர்த்து நின்று தமீதாவுக்கு எதிரிகளின் சித்திரவதையைச் சம்பாதித்துக் கொடுப்பதை விட, யாதொரு சேதமுமின்றி அப்படியே அவர்களிடம் விட்டு வந்ததில் தவறென்ன இருக்கிறது, மலிக்கா! மேலும், யான் கிறிஸ்தவர்களுக்குப் புறமுதுகிட்டு ஓடிவந்து விடவில்லையே! நிலமையை விவரமாகத் தங்களிடம் நேரில் விளக்கி, அடுத்து நடக்கவேண்டியவற்றுக்கு ஆயத்தங்கள் செய்வதற்காகவே அன்றோ இங்கு வந்திருக்கிறேன்! சகலமும் கற்ற தங்களிடம் யான் வாது புரியவில்லை. எனது நிலையில் வேறெவர் இருந்தாலும் இதைவிடச் சாதுரியமாக எந்தத் திட்டத்தைக் கைக்கொண்டிருக்க முடியும்?” என்று அந்த பரிதபிக்கத்தக்க கவர்னர் தம் கக்ஷி­யைச் சொல்லி வாதித்தார். அவர் குரல் தீர்க்கமாயிருந்தாலும், குடலெல்லாம் குலுங்கிக்கொண்டிருந்ததென்பது முகத்திலே நன்கு தொனித்தது.

“நீர் பகர்வதில் ஏதாவது தத்துவரீதியான தர்க்கமிருப்பதாக எமக்குத் தோன்றவில்லையே! தமீதாவை எதிரிகளின் சித்திரவதையிலிருந்து காப்பாற்றுவதற்காக அவர்கள் வாய்க்குள்ளே அந்நகரை வலியத் திணித்துவிட்டு வந்ததாகக் கூறுகிறீரே! இப்பொழுதுமட்டும் அந்தக் கொடிய நசாராக்கள் தமீதாவிலே தர்ம ஆட்சி நடத்துவார்களென்று நினைக்கிறீரோ? இந்த ஸல்தனத்தின் வீரபராக்ரம சிங்கமாகத் திகழும் சுல்தான் மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீனின் ஆளுநராகிய நீர் கோழைத்தனமாக ஓடிவந்துவிட்ட வீரத்தை நான் மெச்சுகிறேன்! அந்தக் காலத்தில் ஓர் அமீரின் பராமரிப்பின் கீழே இந்த ஸல்தனத் இருந்து வந்தபோது தமீதாவாசிகளும் அதன் ஆளுநரும் இறுதிவரை போராடி வீரசுவர்க்கம் புகுந்து இம்மிஸ்ரின் கீர்த்திக்கு அதிகப் புகழைச் சம்பாதித்துத் தந்திருக்க, இன்று சுல்தானின் மனைவியாகிய எம்முடைய பராமரிப்பில் இருந்துவருகிற இந்த ஸல்தனத்தில் நீர் புறமுதுகிட்டோடிவந்த கதையைப் பார்த்து யாரே சிரிக்க மாட்டார்! சிங்கம்போல் தாடி வளர்த்துக் கொண்டிருக்கிற உமது உடலுக்குள் ஆண்டவன் ஆட்டுக்குட்டியின் ஹிருதயத்தையா அமைத்துவிட்டான்?

“நீர் இழைத்த இந்த முதல்தரமான, முஸ்லிமுக் கேற்காத கோழைத்தனத்துக்குப் பரிகாரமாக எம்மை வீணே முகஸ்துதி செய்கிறீர்; உம்முடைய ஸ்தானத்தில் வேறெவரேனும் இருந்திருந்தால், அவர் உம்மைவிடச் சாதுரியமாக நடந்திருக்க முடியாது என்று கூச்சமில்லாமல் கூறுகிறீர். நன்று, நன்று! உமது வீரச் செயலைக் கண்டு மெச்சினோம்! ஏ, தமீதாவை எதிரிகளின் வாய்க்குள்ளே சாதுரியமாய்த் திணித்துவிட்டு வந்த வீராதி வீரரே! உமக்கு ஏற்ற பரிசையும் சம்மானத்தையும் இப்போது தந்து கெளரவிப்பதற்கு நாம் அசக்தராயிருக்கிறோம். இவ்வளவு வீரதிர பராக்ரம மிக்க உம்மை அந்த தமீதாவுக்கு ஆளுநராக நியமித்த எம் கணவர் இங்குத் திரும்பி வந்ததும், அவர் கையைக் கொண்டே உமக்கேற்ற பரிசுகளை வழங்கச்சொல்லி ஸிபாரிஷ் செய்வோம்!” என்று மலிக்கா ஷஜருத்துர்ரின் வாயினின்று பிறந்த சொற்கள் அரசவையில் குழுமியிருந்தோரனைவரின் குடலையும் ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டன. ஜீலானீயோ, விலவிலத்துப்போய், யானையின் துதிக்கை அந்தரமாய்த் தொங்குவதைப் போல் நின்றுகொண்டிருந்தார்.

“யா சாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! என்னைக் குற்றவாளி என்று தாங்கள் கருதினால், எனக்கேற்ற தண்டனையை இப்பொழுதே தாங்கள் வழங்கி விடுங்கள். யான் என் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், சுல்தான் வருகிறவரையில் என்னைக் குரையுயிராய் வைத்திருந்து சிறுகச் சிறுகக் கொல்லாதீர்கள். இந்த ஸல்தனத்தின்மீதும், சுல்தானாவாகிய தங்கள்மீதும், சுல்தானாகிய மலிக்குல் ஸாலிஹ்மீதும் அடியேன் கொண்டு நிற்கிற மெய்யான ராஜபக்தி விசுவாசத்தின் காரணமாகவே அடியேன் தொண்டாற்றி வந்தேன். இப்போதுங்கூட யான் எல்லாவற்றையும் தீரத் தெளிய ஆலோசித்தே, ஆண்டவனுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் சற்றும் மாற்றமில்லாத முறையில் தமீதாவைத் தாத்காலிகமாக எதிரிகளிடம் விட்டுவந்தேன். என் நிய்யத்தின் நோக்கத்தைத் தங்களிடம் யான் விவரமாய் வருணித்தும், என்னைத் தவறாய்த் தாங்கள் கருதினால், யான் என்னதான் செய்ய இயலும், மலிக்கா! என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே சுய நோக்கத்துடன் யான் தமீதாவைத் துறந்து ஓடி ஒளிந்து வரவில்லையாகையால், என் உயிர்க் கிறுதியான தண்டனையைத் தாங்கள் வழங்குவதாயிருந்தாலும், யான் புன்முறுவலுடனே ஏற்றுக்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன். ஆனால்,…”

“ஏ, ஜீலானீ! உம்மிடம் வீண்வாது புரிந்துக்கொண்டிருக்க நாம் விரும்பவில்லை இங்கே தர்க்கம் பேசிக்கொண்டிருப்பதற்கோ, நீர் செய்தது நியாயமா, அல்லது அநியாயமா? என்று எடை போட்டுப் பார்ப்பதற்கோ, இங்கே அரசவைக் கூட்டப்படவில்லை. உமது கக்ஷி­யை நீர் சுல்தான் வந்த பின்னர்க் கூறிக்கொள்ளலாம். இப்போது உம்மிடம் பேசிக்கொண்டு நேரம் கடத்துவோமானால், தமீதாவில் புகுந்திருக்கும் அத்தனை எதிரிகளும் பொழுது விடிவதற்குள் இங்கே காஹிராவுள் வந்து நுழைந்து விடுவார்கள். உம்முடைய வாதத்தை நாம் சாவகாசமாயிருக்கும்போது ஆராய்ந்து முடிவு கூறுவோம். அடே…..யாரது? சுல்தான் வருகிற வரையில் இந்த ஷெய்கு ஜீலானீயைப் பந்தோபஸ்தில் வை!” என்று பிரதமக் காவற்கூடக் காவலாளிக்கு மலிக்கா கட்டளையிட்டார். அரசி ஆக்கினைப் பிறந்த தொனியின் எதிரொலி அடங்கு முன்னே ஜீலானீ சிறைக் கதவுளுக்கப்பால் கொண்டுப்போய் அடைக்கப்பட்டார்.

ஷஜருத்துர்ரின் கோபா வேசத்தால் அவருடைய கண்களில் தீப் பொறி பறந்தது. நாசித் துவாரங்கள் விரிந்து விரிந்து குவிந்தன. அதே கோபத்தின் வேகத்தில் அம் மண்டபத்திலிருந்த அத்தனை பேர்களையும் ஒரு முறை உற்று நோக்கினார். இடியேறு கேட்ட நாகம் போல் அவர்களனைவரும் சப்த நாடியும் ஒடுங்கிப்போய் மெளனமாய் வீற்றிருந்தனர். இம் மாதிரியான சந்தர்ப்பத்தில் மாற்றாந்தாயின் கோபத்தின் வேகம் எத்தன்மைத்தாயிருக்கு மென்பதை மற்றெல்லாரையும் விட நன்குணர்ந்திருந்த இளவரசன் தூரான்ஷாவின் உடல் குறுகிப்போய் விட்டது. மந்திரி பிரதானிகள் அசைவற்றிருந்தனர். அரசியின் மெய்காப்பாளர் வாளா இருந்தனர். இரண்டு மூன்று நிமிஷம் கழித்து அரசி பேசினார்:–

“ஏ, பிரதானிகளே! இனிச் சிந்திப்பதற்கோ, வீணே செலவிடுவதற்கோ ஒரு நிமிஷ அவகாசமுமில்லை. தமீதாவைக் கைப்பற்றிய பிரெஞ்சு மன்னன் இந்த ஜீலானீயைத் துரத்திக் கொண்டே வந்திருப்பானாயின், நாளைக் காலையில் கோழி கூவுவதற்கு முன்னே அவன் தன்னுடைய அத்தனை படைகளுடனும் நீலநதி வழியே இந் நகருக்குள் வந்து இறங்கிவிடுவான். இந்த ஸல்தனத்துக்கு இறைவன் மீட்டுமொரு கடிய சோதனையை இறக்கியிருக்கிறான். இனி என்ன செய்வது என்று யோசிப்பதில் பயனில்லை சென்றமுறை ஆண்டவன் பெரிய வெள்ளத்தையனுப்பிக் கிறஸ்தவக் கூட்டத்தை அமிழ்த்திக் கொன்றதைப்போல் இம்முறையும் செய்வானென்று அவன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு மல்லாந்து படுத்துக்கொள்வதில் பயனேதும் விளையப்போவதில்லை. ஓரொரு தடவையும் இயற்கையின் அற்புதம் நமக்கே உதவி செய்துகொண்டிருக்குமென்று எப்படி நம்ப முடியும்?

“இன்றிரவுக்குள் இக் காஹிராவிலுள்ள ஒவ்வோர் ஆண்பிள்ளையும் யுத்தத்துக்குத் தயாராக அணிவகுத்து நிற்கவேண்டும். அரசாங்கத்திலுள்ள சொற்ப ஆயுதங்கள் அத்தனை பேருக்கும் பற்றா என்பதை நாம் நன்கறிவோம். எனவே, அவரவரும் தத்தம் வீட்டிலுள்ள கொடுவாள், கத்தி, குண்டாந்தடி, குந்தாலி போன்ற சிறிய கருவிகளை ஒன்றுவிடாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்த்து வருகிற நசாராக்கள் யுத்த வீரர்களல்லர். வீண் கயவர்கள். போரிடும் முறை தெரியாதவர்கள். கூலிக்கு மாரடிக்கும் வெறும் பட்டாள இனத்தைச் சேர்ந்தவர்கள். லூயீ மன்னன் திடீரென்று ஏராளக் கும்பலைச் சும்மா கிளப்பிக்கொண்டு வந்திருக்கிறானேயன்றி, அவனுட்பட ஒரு கிறிஸ்தவனுக்காவது போரிடத் தெரியாது. ஆனால், நீங்களோ! பிறவியிலேயே வீரர்களாய் அவதரித்தவர்கள். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றபடி ஒரு சாதாரண வைக்கோல் துரும்பை வைத்துக் கொண்டேகூட எதிரிகள் அத்தனை பேரையும் அரை நொடியில் வீழ்த்திவிடும் தீரம்மிக்க முஸ்லிம் வீரர்கள். அஞ்சாதீர்கள். கவலைப் படாதீர்கள். கோழை ஜீலானியைப்போல் மனங் குன்றிவிடாதீர்கள்.

“இந்தக் காஹிராவில் வாழ்கிற வீரர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் அந்த நசாராக்களுள் இருபது இருபது பேர்கள்கள்கூட ஈடாகமாட்டார்கள். எழுங்கள்! ஆயத்தமாகுங்கள்! தமீதாவை நாம் இழந்த அந்த ஒரே துர்ப்பாக்கியத்துடன் நமக்கு வரும் அபகீர்த்தி அழியட்டும். இங்கே- காஹிரா நகருக்குள்ளே இருக்கிற நம்முடைய துருப்பிடித்த சாதாரண ஆயுதத்துக்குக்கூட அக் கிறிஸ்தவர்களின் எல்லா ஆயுதங்களும் நிகராகா. ஏ, முஸ்லிம்காள்! முஹம்மதின் (சல்) உம்மத்காள்! எழுமின்! உங்கள் வீரத்தைக் காட்டுமின்! கிறிஸ்தவ ஆட்டுக்குட்டிகளின் அநியாயத் தாக்குதலுக்குத் தற்காப்பைச் சித்தஞ்செய்ய இக்கணமே விரைமின்! வீரர்காள், விரைமின்!!”

அரசியார் பேசி வாய்மூடு முன்னரே காஹிரா நகர் முழுதும் இக்கட்டளை பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. ஷஜருத்துர்ரின்மீது மக்கள் கொண்டிருந்த அரிய பாசத்தாலும், அன்பாலும் எதிர்த்து வருகிற கிறிஸ்தவர்களின் நேர்மையற்ற தன்மைமீது அவர்கள் கொண்டிருந்த பேராத்திரத்தின் காரணத்தாலும் அன்றிரவுக்குள் அத்தனை காஹிரா வாசிகளும் போர்க்கோலம் பூண்டவர்களாய்த் தத்தம் கையில் அகப்பட்ட ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, எல்லா வகையான நிகழ்ச்சிகளுக்கும் பூரண ஆயத்தராய் விட்டார்கள்.

அன்றிரவு நெடுநேரம் வரை அரசவை கலையவில்லை. அரசியானதால் படவேண்டிய அத்தனை விதமான அவதிகளையும் அனுபவிக்க வேண்டிய பொல்லாத விதி ஷஜருத்துர்ருக்கு ஆண்டவனால் சித்தஞ் செய்து வைக்கப்பட்டிருக்க, அவர் எப்படித் தப்ப முடியும்? நீரில் மூழ்கும் மனிதன் மூச்சுக்குத் திணறுவது போலிருந்தது அரசியார் அவஸ்தை நிலைமை. பொழுது விடிவதற்குள் சகல ஏற்பாடுகளையும் செய்தாக வேண்டும்; ஸல்தனத்தின் கண்ணியத்தையும் கெளரவத்தையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும்; காலமெல்லாம் அரும்பாடுபட்டுத் தலைமுறை தலைமுறையாக ஐயூபி வம்ச மன்னர்கள் அருமையாக வளர்த்து வந்த மிஸ்ரின் ஸல்தனத்தை நேற்று வந்து நிழலுக்கு ஒண்டிய ஒரு துருக்கிப் பெண்மணி குட்டிச்சுவராக்கி விட்டாளென்னும் அபகீர்த்தி வராமலிருக்க வேண்டும். எதிரிகள் தமீதாவைப் பிடித்த பின்னர் என்ன செய்கின்றனர்? அவர்கள் எப்படி நடமாடுகின்றனர்? என்னென்ன திட்டங்களை வகுக்கின்றனர்? – என்னும் முழு விருத்தாந்தமும் விடிவதற்குள் வேவுகாரர்கள் மூலம் தெரிந்தாக வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக இந்த க்ஷ­ணமே சுல்தானுக்கு நிலைமையை விளக்கிச் சொல்லி, அவரையும், பெரும் பகுதியான படையினரையும் மிஸ்ருக்கு வரவழைத்தாக வேண்டும். உள்ளூரில் பிளவுண்டு கிடக்கிற மம்லூக்குகளுக்குள் இந்தச் சந்தர்ப்பத்தில் கலகம் விளையாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்… இன்னது செய்வதென்றே ஒன்றும் புலப்படாமல் ஷஜருத்துர் கண்களைச் சற்று நேரம் இறுக மூடிக்கொண்டார்.

எனினும், நிதானமாகவும் படிப்படியாகவும் எல்லாவற்றுக்கும் என்னென்ன நடவடிக்கைகளையெடுக்க வேண்டுமென்பதை அவர் மந்திரிகளுடன் கலந்தாலோசித்து, தக்க முடிவு செய்தார். ஒற்றர்வேலை பார்ப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த முதற்றர உளவர்கள் வடக்கே தமீதாவுக்கு அனுப்பப்பட்டனர். யுத்த நிலைமையை உத்தேசித்து, உள் நாட்டில் சிறு குழப்பம் செய்கிறவர் எவராயிருப்பினும் அவர் ராஜ துரோகக் குற்றத்துக்கான கடிய தண்டனையைப் பெற்றுக் கொள்வர் என்ற கடுமையான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஷாம்தேசத்தில் சென்ற இரண்டரை ஆண்டுகளாகப் போர் புரியும் சுல்தானை இக்கணமே மிஸ்ருக்குத் திருப்பியழைக்க வேண்டுமென்றும், என்றாலும் சென்ற காரியத்தை அவர் முற்றும் முடிக்காமையால் அவருடைய எஞ்சிய வேலைகளைக் கவனிக்க ஷாமுக்கு அவர் ஸ்தானத்தில் இளவரசர் தூரான்ஷாவை நியமித்தனுப்ப வேண்டுமென்றும் பொழுது விடியுமுன் முடிவு செய்யப்பட்டது.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 27>> <<அத்தியாயம் 29>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment