ஷஃபான் மாதத்து அமைவாசை இரவு வருவதற்கும், முஸ்லிம்கள் அந்த நேரிய போரில் – ஜிஹாதில் – பெருவெற்றி பெறுவதற்கும் பொருத்தமாயிருந்தது. பெற்ற வெற்றியின் பெரு மகிழ்ச்சியால் குளிரின் பற்பறை கொட்டும் நளிரையும் பொருட்படுத்தாமல்

அம் முஸ்லிம்கள் தங்கள் எஞ்சிய கடமையில் கண்ணுங் கருத்துமாயிருந்தார்கள். லூயீ மன்னரின் கைகளில் விலங்கு பூட்டப்பட்டதேபோல், அப்படையிலிருந்த எல்லாப் பிரதான பிரமுகர்களும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் பட்ட பாட்டைப் பார்த்த பல எதிரிகள் உயிர் தப்பினால் போதுமென்று, திரும்பிப் பார்க்காமல் ஓட்டமாகப் புறமுதுகிட்டு ஓடினார்கள். ஆற்றில் குதித்து நீந்தியோடிய கயவர்கள் பலர்; தரை மார்க்கமாய் இருட்டிலே பதுங்கி ஒளிந்து பறந்து சென்றவர் பலர்; முஸ்லிம்களை அக்கும்பிருட்டிலே ஏமாற்றுவதற்காகப் பொய்யாகவேனும் கலிமாவையும், தக்பீரையும் ஓதிக்கொண்டு புறமுதுகிட்டவர் பலர். நள்ளிரவில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும்போது  திடீரென்று  பூகம்பம் வந்தால் உறங்கிய மக்கள் எப்படிப் புத்தி தடுமாறிப் பதறியோடுவரோ, அதையே அப் புறமுதுகிட்டோடும் கிறிஸ்தவர்களின் ஓட்டமும் முற்ற நிகர்த்திருந்தது. அப்படி ஓடிய பேடிகளுள்ளும் அனேகர் மம்லூக்குகளின் நேரிய வாளுக்கு இரையாயினார்கள்.

பேடிகளைப்போலப் புறமுதுகிட்டு ஓடியவர்களைப் பிடித்துப் பயனில்லை என்பதற்காக முஸ்லிம்கள் அத்தகையினரைத் துரத்திப் பிடிக்காமல் களத்தில் சிக்கிய பிரதானிகளையும் பிரமுகர்களையுமே கைது செய்தனர். அதற்குள்ளே ருக்னுத்தீன் கட்டளை பிறப்பித்து, இனிமேல் எவரையும் கொல்லக் கூடாது என்று ஆக்ஞாபித்து விட்டபடியால், எல்லா முஸ்லிம்களின் கட்கமும் உறையுள்ளே சொருகப்பட்டு விட்டன.

இனிப் பயமில்லை என்னும் நிலைமை ஏற்பட்டவுடனே இலக்ஷக்கணக்கான தீவட்டிகள் கொளுத்தப்பட்டன. பனியின் கொடுமையும், பிணத்தின் கவுலும், குருதி வெள்ளமும், குற்றுயிராய்க் கிடந்தோரின் முணக்கச் சப்தமும் மிகுந்த பயங்கரக் காட்சியை அளித்தன. நரியின் வாயிலே சிக்கிய கோழியைப் போல லூயீயும் அவர் சகாக்களும் தலை கவிழ்ந்து அவமானத்துடனே நின்றார்கள்; கைது செய்யப்பட்ட அத்தனை பேர்களும் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். ருக்னுத்தீனும் பிரதான அமீர்களும் தத்தம் கைகளில் தீவட்டியைப் பிடித்துக் கொண்டு அக் கைதி ஒவ்வொருவரின் முகத்தையும் உற்று உற்றுப் பார்த்தார்கள். இருளிலே தவறுதலாய் முஸ்லிம்கள் எவரும் கைது செய்யப்பட் டிருக்கக்கூடுமோ என்பதை விளங்கிக் கொள்ளவே இம் முறை பின்பற்றப்பட்டது. ஆயிரக் கணக்கான அத்தனை கைதிளும் “சிலுவை யுத்த பக்தர்களே” என்பது1 நிச்சயமாவதற்குள் இரவின் கடைச்சாமம் பிறந்து விட்டது.

பொறியுள் சிக்கிய எலியைப்போல் அக் கைதிகள் பரிதபித்தார்கள். அற்றைக்குச் சுமார் 1,200 ஆண்டுகட்கு முன்னே சிலுவையில் அறையுண்ட இயேசு கிறிஸ்து, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கதறியதாக விவிலிய வேதம் பகர்கிறதல்லவா? அஃதேபோல் இப்போது லூயீ தம் மனத்துக்குள்ளே, “என் தேவனே, என் தேவனே, ஏன் எங்களைக் கைவிட்டீர் ?” என்று முணுமுணுத்துக் கொண்டார். புனித நகராகிய ஜெரூஸலத்தைக் கைப்பற்றுவதற்காகவென்று கூறிக்கொண்டு, சிலுவை யுத்தம் என்ற பெயரால் அநியாயமாகவும் அக்கிரமமாகவும் பேராசை கொண்டு, வெறிச் செயலால் படையெடுத்துத் துள்ளிய கிறிஸ்தவர்கள் அது சமயம் பெற்றுக்கொண்ட படுதோல்வியைக் கண்டு இற்றை நாள் கிறிஸ்தவர்களும் வெட்கித் தலை குனிகிறார்கள். தேச சரித்திரத்தில் எவரேனும் ஒருவர் முட்டாட்டனமாய்ச் செய்துவிடும் அபகீர்த்திமிக்க அவமானச் செய்கை உலகம் உள்ளளவும் அச் சமூகம் உள்ளளவும் எங்ஙனம் நீங்க முடியும்? ஐரோப்பிய சரித்திராசிரியர்கள் எவ்வளவுதான் இது காலை வெள்ளை பூசிப் பார்த்தாலும், இவர்களுடைய முன்னோர்கள் இழைத்துவிட்ட கறுப்புக் கறை இன்னம் வெண்மையாக மாட்டேன் என்கிறது. இச் சரித்திராசியர்களின் முயற்சி தெனாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்கிய கதையையே நிகர்த்துக் காணப்டுகிறது.

இந்த யுத்தம் காஹிரா நகரின் வெளியிலேயே நடந்து முடிந்தது. லூயீயும் அவருடைய சகாக்களும் கைவிலங்குகளுடன் கைதிகளாக நடாத்திச் செல்லப்படுகிறவரையில் அக் கிறிஸ்தவர்கள் காஹிராவுள் நுழையவே முடியவில்லை; என்னெனின், நாம் முன்னமே வருணித்திருப்பதுபோல் அன்று அந்தச் சிலுவை யத்தக்காரர்கள் நீலநதியோரமாகக் கரையிறங்கிய போதே எல்லாக் காஹிரா வாசிகளும் குபீரென்று பாய்ந்து சென்று, அவர்களை வளைத்துக்கொண்டார்கள். அன்று வளைத்துக் கொள்ளப்பட்ட அவர்கள் இந்தப் பதினொரு நாட்போர் முடிகிற மட்டில் அரையங்குலமும் முன்னேறவும் முடியவில்லை; பின்னேறவும் முடியவில்லை. ஆதலால், அந்த எட்டாவது சிலுவை யுத்தம் என்னப்படும் கிறிஸ்தவர்களின் அநீதியான அக்கிரமப்போர் அந்தக் காஹிராவின் புறவெளியிலேயே நிகழ்ந்து முடிந்து விட்டது ! யுத்தம் நிகழ்ந்த அந்த ஸ்தலத்துக்கு மன்ஸூரா என்று பெயர். எனவே, சரித்திரத்தில் இன்றுங் கூட அன்றைய வெற்றிக்கு “மன்ஸூராவில் கிடைத்த மாபெரும் வெற்றி” என்றே பெயரிட்டழைக்கிறார்கள்.

ருக்னுத்தீன் இட்ட கட்டளைப்படி எல்லா முஸ்லிம் வீரர்களும் தங்கள் ஆயுதங்களை எறிந்துவிட்டு, ஆளுக்கொரு தீப்பந்தத்தைப் பற்றிக்கொண்டு, கையில் சிக்கிய பகைவர்களை ஒழுங்காகச் சிறைபிடித்துக் கொண்டே இருக்கையில், களத்திலிருந்து வடதிசை நோக்கிப் புறமுதுகிட்டோடிய கயவர்கள் திரும்பிப் பார்க்காமல் ஓடிக்கொண்டே இருந்தார்கள். சுற்றிலும் தீப்பற்றி எரிகிற வீட்டிலிருந்து மனிதர்கள் எவ்வளவு பரபரப்புடன் உயிர் தப்பிப் பாய்ந்து தலைகால் தெரியாமல் திகைத்துப் பறப்பார்களோ, அதே மாதிரி இவர்களும் பறந்தார்கள். முதலைகள் நிரம்பிய நீல நதியில் உயிர் தப்பிய மீதிப்பேர் தட்டித்தடுமாறி இருளிலே கரையேறினார்கள். கரையோரமாய் இருந்த நாணற் புதரிலும், சேற்று மணலிலும் சிலர் புதையுண்டார்கள். ஓடுகிய ஓட்டத்தில் கால் தடுக்கி விழுந்தவர் எழுமுன்னே பின்னே ஓடிவந்தவர்கள் ஏறித்தொகைத்துப் பாய்ந்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் ஓடினார்கள், ஓடினார்கள்; அப்படி ஓடினார்கள். அவர்களுக்கிருந்த மூளைக் குழப்பத்தில் முஸ்லிம்கள் தங்களை இன்னம் விரட்டிக் கொண்டு வருவதாகக் கிலியடைந்தே, நிற்காமலும், திரும்பிப் பார்க்காமலும் தீ மிதிக்கிறவனைப் போல் பறந்து பாய்ந்தார்கள்.

இதற்கிடையே ஒரு சம்பவம் நிகழ்ந்தது : முன்னம் கிறிஸ்தவத் துணைப் படையொன்று நீல நதியின் நெடுந் தொலைவிலே தென்பட்டதென்று கூறினோமல்லவா? அந்தக் கிறிஸ்தவர்கள் இந்நேரம் காஹிரா பிடிபட்டிருக்கும் என்றும், சுல்தான் ஒழிக்கப்பட்டிருப்பார் என்றும், சிலுவை யுத்தக்காரர்கள் ஜய சீலர்களாய் மிஸ்ரிலே ராஜகம்பீரமாய் வீற்றிருப்பார்கள் என்றும் வீண் மனோராஜ்யம் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்கள் ஆத்திரமோ அவசரமோ படாமல் சாவகாசமாக நீல நதியில் தெற்கு நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் காஹிராவுக்குச் சில மைல் தூரத்தில் இருக்கையிலேயே பொழுது போய்விட்டபடியால், அமாவாசை இருளில் நள்ளிரவில் போய் என்ன செய்வதென்று கருதி, இருட்டியவுடனே தங்கள் பிரயாணத்தை நிறுத்தித் தோணிகளை ஓரத்தில் கட்டிவிட்டு, கரையிறங்கித் தங்கினார்கள். அவர்கள் அறுசுவையுடன் கூடிய அரிய உணவுகளைச் சமைத்து உண்டு விட்டு, பீப்பாய்க் கணக்கில் மதுவையும் குடித்துவிட்டுக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்கள். இதே நிமிஷத்தில் மன்ஸூராவில் சிலுவை யுத்தக்கார்கள் சிதறடிக்கப் பட்டதையேனும், லூயீ மன்னரும் மற்றும் பிரமுகர்களும் முஸ்லிம்களால் சிறைபிடிக்கப் பட்டதையேனும், எஞ்சியவர்கள் புறமுதுகிட்டு இப் பக்கம் ஓட்டோட்டமாய் ஓடி வருகின்றனர் என்பதையேனும் இவர்கள் ஒருசிறிதும் அறியமாட்டார்கள்.

இப்படிப்பட்ட அவசர சந்தர்ப்பத்திலே, மூடுபனியும் அமாவாசை இருளும் கூடியவேளையிலே அந்தப் புறமுதுகிட்டு ஓடிவந்தவர்கள் இந்தத் துணைப்படைகள் பாசறை இறங்கியிருந்த இடத்திலே பேரோலம் இட்டவர்களாய் வந்து மோதிக் கொண்டனர். நடுச் சாமத்தில் இப்படித் திடீரென்று பெருங்கூட்டத்தின் அலையொன்று வந்து எதிர்பாராமல் மோதியதைக் கண்ட இந்தத் துணைப்படையினர், ஓடிவந்தவர்கள் தங்களைப் போன்ற சகோதரக் கிறிஸ்தவர்களே என்பதை உணர முடியவில்லை. ஆயின், மிஸ்ரிலுள்ள முஸ்லிம்கள் தங்கள் வருகையை எப்படியோ தெரிந்து கொண்டமையால் இப்படிச் சடாரென்று எதிர்த்துத் தாக்க வந்துவிட்டனர் போலுமென்று கலக்கமுற்று விட்டனர். ஆகவே, இருட்டின் காரணத்தாலும், மதுவின் போதையாலும், முன்பின் யோசிக்க வழியின்மையாலும் அங்கே வந்து சேர்ந்த கிறிஸ்தவர்களை இந்தக் கிறிஸ்தவர்கள் பாய்ந்து தாக்கினார்கள். தலைதப்பினது தம்பிரான் புண்ணியமென்று குடல் தெறிக்க ஓடி வந்த அந்தக் கிறிஸ்தவர்கள் இந்த மாதிரியான ஆபத்தை இவ்விடத்தில் சற்றுமே எதிர் பார்க்கவில்லை. முஸலிம்கள் நதி மார்க்கமாக முற்கூட்டியே முன்னோக்கிச் சென்று வழியில் இப்படிப் பதிவிருந்து, தாங்கள் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து நின்று, திடீரென்று எதிர்த்துத் தாக்குகின்றனர் போலுமென்று அவர்கள் நினைத்து விட்டார்கள். ஆதலால், எப்படியாவது தப்பிக்கொள்வது ஒன்று மட்டுமே பிரதானம் என்றெண்ணிய அவர்கள் கண் மூஞ்சி தெரியாமல், வந்தது வரட்டுமென்று, உயிர் போனாலும் ஒருகை பார்த்துவிடுவோம் என்று முரட்டுத்தனமாகப் புதிய ஊக்கத்துடன் போராடினார்கள்.

எனவே, எந்தக் கிறிஸ்தவப் படைக்கு மற்றொரு கிறிஸ்தவப்படை துணையாக அனுப்பப்பட்டதோ, அதே கிறிஸ்தவப் படையும் புறமுதுகிட்டோடி வந்த படையும் மையிருட்டில் ஒன்றுடனொன்று முட்டிக்கொண்டன. ஒரு சாரார் தம் எதிர்ச்சாராரை முஸ்லிம் விரோதிகள் என்று அவ்விரு கக்ஷியினருமே நினைத்துக் கொண்டு விட்டபடியால், விடிகிறவரை ஆயிரக்கணக்கான பேர்வழிகள் அநியாயமாய்க் கொன்று குவிக்கப்பட்டார்கள். அமாவாசை இருளாய் இல்லாமல், மூடுபனியும் இல்லாது, சிறிதாவது வெளிச்சம் இருந்திருக்குமானால், அவர்கள் மிகமிகப் பெரிதாகப் பொருத்திருந்த சிலுவை அடையாளங்கள் விஷயத்தை விளக்கியிருக்கும். கும்பிருட்டிலே சிலுவை அடையாளம் தெரியவில்லை. தங்களைத் தாங்களே பரஸ்பரம் பலியிட்டுக் கொள்ள வேண்டிய பொல்லாத இரவாக அது வந்து வாய்த்தது. அநியாயக்காரர்களை இப்படித்தான் ஆண்டவன் மதிமயங்கச் செய்துவிடுகிறான் தக்க தருணத்தில்.

போர்க்களத்தில், அதிலும் அந்த அநாகரிக காலத்து ஐரோப்பிய கிறிஸ்தர்களின் ஒழுங்கு முறையற்ற பெருங்குழப்பத்தில், இத்தகைய தப்பபிப்பிராயமும் தவறான உணர்ச்சியும் நள்ளிரவின் நளிர் பிடித்த நேரத்திலே விளைந்துவிட்டதென்றால், பின்னர் நிகழ்ந்த முடிவை நாம் விவரிப்பானேன்? இப்லீஸ் என்னும் ஷைத்தான் இடையிலே தன் கைவரிசையைக் காட்டிவிட்ட படியால், அந்தக் குழப்பம் மிகுந்த யுத்தம் மேலும் குழம்பிப் போய் விட்டது. “கோட்டைக்குள்ளே படை வெட்டு” என்று சொல்கிறார்களே, அது மிகப் பொருத்தமாகப் பிரயோகிக்கப்பட வேண்டுமானால், இந்த நிகழ்ச்சி ஒன்றுக்கே உவமிக்கப்படலாம்.

கிழக்கு வெளுத்தது. உயிரிழந்தோர் போக ஒரு சில நூறு பேர்களே எஞ்சியிருந்தனர். அவர்களும் கிலி பிடித்துப்போய்ப் பிசாசுகளே போல் தோன்றினார்கள். மன்ஸூரா போர்க்களத்தில் ஒழுங்கு முறைப்படி முஸ்லிம்கள் போர் புரிந்தபடியால், அங்கேயுங்கூட இப்படிப்பட்ட சகிக்கொணாக் கண்ணராவியான காட்சி விளையவில்லை. இங்கேயோ, வரைமுறை அற்ற விதத்தில் படுகொலைகள் தாராளமாகப் புரியப்பட்ட படியால், உதிர வெள்ளம் சிறு வாய்க்காலாக ஓடி, நீல நதியில் பாய்ந்தது. கவந்தக் குவியல்கள் சிறு குன்றுகளே போல் குவடிட்டு விட்டன.

நன்றாய் விடிந்து வெளிச்சம் பரவ ஆரம்பித்த பின்னரே அவர்கள் கண் விழித்தார்கள். பிறைக் கொடி ஏந்தியவர்களுடன் சிலுவைக் கொடி பிடித்த தாங்கள் இரவெல்லாம் போர் புரிந்தாகக் கருதியிருந்த இரு சாராரும், அந்த விடியக்காலை வெளிச்சத்தில் எங்குப் பார்த்தாலும் சிலுவைக் குறிகள் மட்டுமே இறைந்து கிடந்ததையும், வாளுக்கிரையானவர்கள் அத்தனை பேரும் அந்தக் குறி தீட்டப்பட்ட அடையாளங்களுடனே வீழ்ந்து கிடந்ததையும், அவ்விடம் முழுதிலும் மருந்துக்குக்கூட ஒரே ஒரு பிறைக்கொடியேனும் ஒரு முஸ்லிமேனும் காணப்படாததையும் கண்டு திகைத்துப்போயினார்கள். நிச்சயமாகவே அல்லாஹுத் தஆலா வரம்பைக் கடக்கிறவர்களை நேசிக்கிறதில்லை என்பதையும், அத்தகைய வரம்பிகந்தவர்களுக்கு மிகப் பொல்லாத தண்டனையையே சித்தஞ் செய்து வைத்திருக்கிறான் என்பதையும் இவ்வொரு நிகழ்ச்சி மட்டுமே நிரூபிக்கப் போதுமன்றோ?

சூரியன் கிளம்பிய பிறகு அந்த எஞ்சி நின்றவர்களின் கண்ணும் நன்றாகத் திறந்தது; மது மயக்கமும் ஒருவாறு தீர்ந்தது. முட்டாட்டனத்தாலும் அறியாமையாலும், ஆத்திர புத்தியாலும், தங்களைத் தாங்களே பலியிட்டுக்கொண்ட வெட்கக் கேடான இச் சம்பவத்தை யுன்னியுன்னி அன்னவர்கள் மனமுருகினார்கள். சென்றது சென்று விட்டது என்று இறுதியாக மனந்தேறி, ஒருவரை யொருவர் கட்டிக்கொண்டு கதறியழுது, இனி என்ன செய்வது? என்று ஆலோசிக்கத் தொடங்கினர். தேவனின் கோபத்துக்குத் தாங்கள் ஆளாகி விட்டதாலேயே இத்தகைய விபரீதமான வெகுமதி கிடைத்தது என்று அவர்கள் முடிவு கட்டினார்கள். லூயீ மன்னரும் கோமகன்களும் முஸ்லிம்களிடம் கைதியாகி விட்ட விஷயத்தையும், அடுத்து நடந்த இந்த அக்கிரமச் சம்பவங்களையும் உடனே ஓடிப்போய்ப் போப்பாண்டவரிடம் தெரிவித்து, இனி என்ன செய்யலாமென்று அவரையே கேட்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். என்னெனின், அந்தக் காலத்திலெல்லாம் கிறிஸ்தவர்கள் போப்பாண்டவர் ஒருவரையே சகல துறைகளிலும் கண் கண்ட தெய்வமாகவும், பிழையேதுமே செய்ய முடியாத தெய்விகப் பிறவியாகவும், அவரிட்ட கட்டளையே தேவ கட்டளை என்றும், மத, அரசியல், சமூக, யுத்த, பொருளாதார அத்தனை துறைகளிலும் அவரிடும் ஆக்ஞையே முடிவானதென்றும் கருதி வந்தார்கள். இன்றுங் கூடக் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களுடைய போப்பாண்டவர்கள்மீது கொண்டிருக்கும் பக்தி விசுவாசத்துக்கு வேறெதையுமே இணையாகக் கூற முடியாது.

மரியாதையுடன் உடனே திரும்பிப்போய்ப் போப்பாண்டவரிடம் சொல்ல வேண்டுமென்னும் முடிவை எட்டியவுடனே அவ் வெஞ்சி நின்ற படையினர் அக்கணமே பயணப்பட்டு விட்டார்கள். இனியுங் காலந் தாழ்த்தினால் ஒரு வேளை காஹிரா வாசிகள் தங்களைத் துரத்தி வந்து நிர்மூலமாக்கி விடக் கூடுமென்று பயந்துவிட்ட காரணத்தால் அவர்கள் வெகு துரிதமாக ஆயத்தமானார்கள். தோணிகளிலிருந்த பாய்களை அவிழ்த்து விட்டு, அப் படுதோல்வியடைந்த வீரர்கள் நதிஓடுகிற திக்காகிய வடக்கு நோக்கி, நீரோட்டத்தின் வேகத்திலேயே பின்வாங்கி ஓடினார்கள். கிறிஸ்தவப் படைகளும், அவற்றுக்குத் துணைபுரிய வந்த உதவிப் படைகளும் இச் சிலுவை யுத்தத்தில் பெற்றுக் கொண்ட ‘வெகுமதி’ இதுதான். இனி காலா காலத்துக்கும் மிஸ்ர்மீது படையெடுத்து வருவதில்லை என்னும் சூளுறவுடனே அவர்கள் தங்கள் தாய்நாட்டை நோக்கித் திரும்பினார்கள்.

அதே சமயத்தில் காஹிராவிலே என்ன நடந்தது என்பதைக் கவனிப்போம் :

இரவின் கடைச்சாமத்தில் அந்த ஒன்பதாவது லூயீ மன்னரும், அவரைச் சார்ந்த குட்டி தேவதைகளும் சிறை பிடிக்கப்பட்டதன் பின்னர், எல்லா முஸ்லிம் வீரர்களும் பெருத்த தொனியில் தக்பீரை முழக்கிக் கொண்டும், ஆண்டவனின் நாமத்தை உரைத்துக் கொண்டும், வெகு கம்பீரமாகவும், சொல்லொணா மகிழ்ச்சியுடனும் காஹிரா நகர்க் கோட்டையுள்ளே நுழைந்தார்கள். அக் கோட்டையின் மேற்கு வாயில் எதிரிலேதான் போர் நிகழ்ந்ததாகையால், அவர்களும் அந்த வாயில் வழியேதான் உள்ளே நுழைந்தார்கள். எல்லா வீரர்களும் அமீர்களும் சுல்தான் வியாதியாய்ப் படுத்திருந்த கிழக்கு வாயில் வரையில் அவ் யுத்தக் குற்றவாளிகளை நடத்திச் சென்று, அவர் முன்பினில் சமர்ப்பிக்க ஆசைப்பட்டார்கள். அப்போது ருக்னுத்தீனின் நிலைமை பரம சங்கடமாகி விட்டது. இத்தனை நாட்களாக அரும்பாடுபட்டு மறைத்து வந்த உண்மை இப்போது வெளிப்பட்டு விடுமே என்று அவர் கவலுற்றார். எனினும், மிகவும் சாமர்த்தியமாகச் சமாளித்துக் கொண்டு, அந்த மேற்கு வாயிலைக் கடந்தவுடன் எல்லாரையும் அப்படியே நிற்கும்படி கட்டளையிட்டு விட்டார்.

ஒருவர் பாக்கியில்லாமல் எல்லாரும் உள்ளே நுழைந்த பின்னர் மேற்கு வாயிற்கதவு மூடப்பட்டது. ருக்னுத்தீன் தம் குதிரைமீது ஏறிக்கொண்டு, வரிசைக் கிரமமாய் நின்ற வீரர்களை நோக்கிச் சிறிய பிரசங்கமொன்றை நிகழ்த்தினார். எல்லாரும் மெளனமாக நின்று கேட்டார்கள். விலங்கு பூட்டப்பட்டிருந்த போர்க் குற்றவாளிகள் அவமானத்தால் தலைகுனிந்து நின்றார்கள் :-

“ஏ முஸ்லிம் வீரர்காள் ! இன்று நம் நாட்டுச் சரித்திரத்தில் மிகவும் புனிதமான நன்னாளாகும். சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காக ஆண்டவன் அசத்தியத்தை அழித்த புண்ணிய தினம் இன்றேயாகும். அவன் உங்களெல்லீரின் வீரத்தையும் இறை பக்தி விசுவாசத்தையும் சோதிப்பதற்காக இச் சோதனையை இறக்கினான். நீங்களெல்லாம் ஆண்டவன் மீது கொண்டிருக்கும் பக்தி சிரத்தையின் காரணமாக இக் கிடைத்தற்கரிய பெரு வெற்றியைப் பெற்றதுடன், ‘முனிவர்’ என்னும் பட்டம பெற்ற லூயீ மன்னரையே கைது செய்யும் பாக்கியத்தையும் கிடைக்கப் பெற்றீர்கள். அன்று ஸலாஹுத்தீன் ஐயூபி நிலை நாட்டிச் சென்ற பெரும் புகழை இன்று நீங்கள் காப்பாற்றியதுடன், அதனை மிகைத்தும் விட்டீர்கள்.

“இறுதித் தீர்ப்பு நாள் வருமளவும் அகில உலக முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் உங்களுடைய இப்போதைய இணையற்ற தியாகத்துக்கு முற்ற முற்றக் கடமைப்பட்டே இருப்பார்கள். நமது அன்பின் அணிகலம், குணக்குன்று, ஸாஹிபுல் ஜலாலுல்மலிக் சுல்தான் ஸாலிஹ் உங்களுடைய இப் பெரிய சாதனையைக் கேட்டு உள்ளம் பூரித்துப் புளகாங்கிதம் பூப்பார் என்பதில் ஐயம் ஏதுமேயில்லை. எனினும், உடல் நலிவால் சிறிது பலங் குன்றி, ஹக்கீம்களின் உபதேசப்படி பூரண ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அவரை இந்தக் கடைச்சாமத்தில் நாம் எல்லாரும் பெருந் திரளாய்ச் சென்று மிகுந்த கூக்குரலிட்டு அவர் உடலுக்கு உள்ளத்துக்கும் அதிர்ச்சியை மூட்டினால், ஒருவேளை வியாதி அதிகரித்தும் விடலாம். நாளைப்பகல் வரையில் நம் சுல்தானுக்கு நாம் இடையூறு விளைப்பது கூடாது. மேலும், ஷாமிலிருந்து வந்த தூதனொருவன் நம் இளவரசர் காஹிராவை நோக்கி வேகமாய் வந்துகொண்டிருப்பதாகவும், அவரும் வெற்றியுடனே வருவதாகவும் அறிவித்தான். நாளை மறுதினம் புனிதமிக்க ரமலான் பிறக்கப் போவதால், அந்தப் பெருமகிழ்ச்சியோடு நாம் எல்லாக் கொண்டாட்டங்களையும் சேர்த்துக் கொண்டாடுவோம்.

“உங்களுக்கு இருக்கிற குதூகலத்தின் காரணமாக இக்கணமே சுல்தானைச் சந்திக்க ஆவலுறுகிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன் என்றாலும், இந்த வேளையிலே பலஹீனமுள்ள அவரை உபத்திரவப் படுத்துவது அறவே கூடாதாகும். அவர் ஷாமிலிருந்து திரும்பியது முதல் நம் பொருட்டு ஓயாமல் உழைத்த காரணத்தாலேயே இன்று நாம் இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்திருக்கிறோம். தற்சமயம் நீங்களெல்லீரும் கொண்டிருக்கிற மட்டற்ற பெருமகிழ்ச்சியைச் சற்றுப் பொறுமையுடனே நாளைப் பகல் வரையில் அடக்கிக்கொள்ளுங்கள். நீங்களெல்லீரும் மிகவும் களைத்துப் போயிருப்பதால், போய்ப் படுத்து நன்கு நித்தரை புரியுங்கள். நானும் மிகவும் சலித்துப் போயிருக்கிறேன்.”

சேனைத் தலைவர் போதித்தபடி அவ்வீரர்கள் அனைவருமே மெளனமாகக் கலைத்து தத்தம் இல்லம் ஏகினர். முக்கியமான அமீர்களும் ருக்னுத்தீனும் மட்டுமே எஞ்சி நின்றார்கள். கைது செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த லூயீயையும் அவருடைய பரிவாரங்களையும் அவர்கள் இழுத்துச்சென்று, பயங்கரக் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையுள்ளே தள்ளிவிட்டார்கள். பின்னர், சிறைச்சாலையின் அதிபதி இப்புதிய கைதிகளுக்காக நேர்த்தியான உணவும், சிறந்த பானவகைகளும் பரிமாறினார். என்னெனின், முஸ்லிம்கள் என்றுமே தாங்கள் சிறைபிடித்த கைதிகளை உபத்திரவப் படுத்தியதும் இல்லை; அல்லது பட்டினிபோட்டு வதைத்ததும் இல்லை. அவர்களும் மனிதர்களே என்னும் மறுத்தற்கரிய உண்மையை நன்குணர்ந்து, அக் கைதிகளைத் தங்கள் நண்பர்களினும் மேலாகவே நடாத்தினார். அந்தக் காலத்தில் வேறெத் தேசத்தாரும் எதிரிகளையும் கைதிகளையும் நடாத்தியதைவிட முஸ்லிம்களே மிகமிகக் கண்ணியமான முறையிலே அன்னவர்மாட்டு அன்புடனும் பக்ஷத்துடனும் பிரியத்துடனும் நடந்துகொண்டனர். தங்கள்மீது அநியாயப்போர் தொடுத்து அவ் வக்கிரமத்தின் பலனாகப் படுதோல்வியடைந்து போயிருந்தும், முஸ்லிம்கள் அக் கிறிஸ்தவர்களை முதலில் மனிதர்களாகக் கருதினார்கள். இஸ்லாத்தின் எதிரிகள் என்பதற்காக அவர்களை வதைபுரியவில்லை; அல்லது இசகுபிசகாக மாட்டிக்கொண்டார்கள் என்பதற்காக அநாகரிகமான முறையில் அவர்கள்மீது பழிதீர்த்துக் கொள்ளவு மில்லை.

“பகைவர்கள் படைகளை எறிந்து பணிந்து விட்டால், நீங்களும் சண்டையை நிறுத்தி விடுங்கள்,” என்பது எமது வேதக்கட்டளை (2 : 192,193).

லூயீ மன்னரும் அவருடைய சகாக்களும் முஸ்லிம்களின் இந்த இனிய விருந்தோம்பும் வேளாண்மைச் செயலைக் கண்டு வியந்து போயினர்கள். எனவே, அவர்களுக்கிருந்த பெரு வியப்பால், தங்கள் முன் வைக்கப்பட்டிருந்த உண்டிப் பண்டங்களை வெறிக்க வெறிக்கப் பார்த்துவிட்டு, எதிரில் நிற்கும் ருக்னுத்தீளையும், சிறை அதிகாரிகளையும் மாறி மாறிப் பார்த்துத் திருதிரு வென்று விழித்தார்கள்.

“ஏ, ரிதா பிரான்ஸ்! சிலுவை யுத்தம் புரிந்து நீங்களெல்லாம் மிகவும் களைத்துப் போயிருக்கின்றீர்கள். நீங்களெல்லாம் உணவருந்தி இரண்டு நாட்களாயின என்பதை நான் நன்கறிவேன். எனவே, இந்த உண்டியைப் புசித்து உங்கள் பசியை ஒருவாறே ஆற்றிக் கொள்ளுங்கள். நீங்களெல்லீரும் இந்த எதிர்பாரா நேரத்தில் இங்கே வந்து சேர்வீர்கள் என்பதை இச் சிறையதிகாரி முன்னமே அறியமாட்டாராதலால், உங்களுக்கென விசேஷமான உணவுகளைச் சித்தஞ் செய்ய இயலவில்லை. ஏதோ, இதுபோது உள்ளதைப் புசித்துப் பசியைப் போக்கிக் கொள்ளுங்கள். நாளை முதல் நல்ல உணவுகளைச் சித்தஞ் செய்து கொடுக்கிறோம்!” என்று ருக்னுத்தீன் அன்பு ததும்பும் இன்மொழிகளால் அளவளாவி உபசரித்தார்.

படுதோல்வியால் அடைந்த பேரவமானத்தை விட, இம் மாதிரியான இனிய இஸ்லாமிய நன்மொழிகளைக் கேட்டதால் லூயீயும் அவர் பிரதானிகளும் இப்போது இன்னம் மனங் குன்றித் தலைகவிழ்ந்து விட்டனர். ருக்னுத்தீன் தங்களிடம் இம்மாதிரியான மதுர மொழி பேசி மனம் நலியச் செய்வதைவிட, நல்ல கசையடி கொடுத்தாலும் தேவலையே! என்று மனஞ்சலித்தார்கள். அவர்கள் கைதான உடனேயே தங்கள் இறுதிக் காலம் வந்துவிட்டதென்று கருதினார்கள். முஸ்லிம்கள் தங்களை எல்லா வகையாலும் பேரவமானப் படுத்துவார்கள் என்று நினைத்தார்கள்; சித்திரவதை புரிவார்கள் என்று எண்ணினார்கள்; பட்டினி போட்டுச் சாவச் செய்வார்கள் என்று எதிர் பார்த்தார்கள். ஆனால், அதற்கெல்லாம் நேர் மாறாக இப்படி வேளாண்மையுடன் விருந்துபசாரம் புரிவதைக் கண்டு திகைத்ததுடன், மெய்விதிர்த்தும் விட்டார்கள். அந்த அநாகரிகம் பிடித்த ஐரோப்பியர் அந்தக் காலத்தில் தங்கள் பகைவர்கள் மாட்டுக் காட்டிய அத்தனை மிருகத்தனமான சித்திரவதைகள் அனைத்தையும்விட இந்த முஸ்லிம்கள் இன்னம் கேவலமாக நடந்துகொள்வார்கள் என்று எண்ணியிருந்த லூயீயும் மற்றையோரும், ருக்னுத்தீனின் இனிய மொழிகளைக் கேட்டு, ஆச்சரியமுற்று விட்டார்கள்.

“ஏன் யோசிக்கிறீர்கள்? நீங்கள் பசித்துக் களைத்தீருக்கிறீர்கள். நன்றாய்ப் புசியுங்கள்!” என்று அச் சிறையதிகாரி பிரெஞ்சு மொழியில் பிரிசாலம் பிடித்தார். அவர் மிகவும் வயது முதிர்ந்தவராகையாலும், ஏறக்குறைய எல்லாச் சிலுவை யுத்தங்களிலும் அனுபவம் பெற்றிருந்தமையாலும், ஐரோப்பிய பாஷைகளைக் கற்றிருந்தமையாலும் பிரேஞ்சு மொழியைத் தெளிவாகப் பேசினார்.

அரபிகளின் மத்தியில் தமது தாய்மொழியைப் பேசுகிற ஒருவரைக் கண்டதும், லூயீ திடுக்கிட்டார். பிளந்த வாயை மூடாமல் சிறையதிகாரியைப் பிரெஞ்சு மன்னர் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஏன் பதுமைபோல் பார்க்கின்றீர்கள்? நன்றாய்ச் சாப்பிடலாமே!”

லூயீ தம் சகாக்களைத் திரும்பிப் பார்த்தார். அவர்களுடைய முகங்களில் கலக்கம் பெரிதும் குடிகொண்டிருந்தது. பசியால் பரிதபித்ததைவிட, அச்சத்தால் அவர்கள் வதனம் வெளுத்துப்போயிருந்தது.

ருக்னுத்தீனும் அச் சிறையதிகாரியும் லூயீயின் மனக்கலக்கத்தைக் கண்டு ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.

“ஸாஹிப்! இந்த உணவில் நாம் விஷத்தைக் கலந்திருக்கக் கூடுமோ என்று இந்த நசாராக்கள் பயப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அதனாலேதான் அவர்கள் இவ்வுணவைத் தொட யோசிக்கிறார்கள்,” என்று சிறையதிகாரி சந்தேகத்துடன் கூறினார்.

ருக்னுத்தீன் புன்முறுவல் பூத்தார். சட்டென்று குனிந்து அந்தக் கைதிகளுக்காகப் பரிமாறப்பட்டிருந்த உணவுத் தட்டங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு கவளத்தை அள்ளியள்ளி வாயில் போட்டுக் கொண்டார். இன்னம், அன்னவர்களைப் பார்த்து, “எதிரிகள் பணிந்து சமாதானத்தின் பக்கல் சார்ந்துவிடுவார்களாயின், அதனை எம் முஸ்லிம்கள் ஏற்காது நிராகரிப்பது கூடாது. அதனால், அப் பகைவர்கள் எம் முஸ்லிம்களை ஏய்த்துவிட வேண்டுமென்று எண்ணியிருந்தாலும், அவர்கள் கோரும் சமாதானத்தை ஏற்று மதித்து நடக்க வேண்டுமென்பதும், எதிரிகள் யுத்தத்தை நிறுத்திவிட்டவுடனே எம் முஸ்லிம்களும் அதனை நிறுத்திவிடவேண்டுமென்பதும் எங்கள் வேதக் கட்டளை,” என்று தைரியமும் புன்னகையும் தவழ்ந்த வதனத்துடனே கூறினார்.

சிறையதிகாரி ஊகித்தது உண்மையாய் விட்டது. லூயீயும் அவருடைய பிரதானிகளும் உணவில் விஷம் கலந்திருக்கும் என்றுதான் அஞ்சினார்கள். ஆனால், ருக்னுத்தீன் அதே உணவை அள்ளி வாயில் போட்டுக்கொண்டதைக் கண்டு பெரிதும் திருப்தியுற்று, அவசரம் அவசரமாக அந்த விருந்து போஜனத்தை அள்ளியள்ளி உள்ளுக்குத் தள்ளினார்கள். ருக்னுத்தீன் வியப்புடன் தந் தலையை ஆட்டிக்கொண்டார்.

முஸ்லிம்களிடம் சிக்கிக்கொண்டவர்கள் பெற்றுக்கொண்ட வெகுமதியின் பெருமை இது.

ருக்னுத்தீன் இந்த விருந்துபசாரத்தை முடித்துவிட்டுச் சிறையினின்று வெளியேறினார். கோழியும் கூவிற்று.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

 


1. சிலுவை யுத்தம் புரிவதற்காக வந்த கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு யுத்தத்தின் போதும் தங்கள் கொடி, கேடயம், துணிமணி, ஆயுதங்கள், பாடி வீடுகள் முதலிய ஒவ்வொன்றன்மீதும் சிலுவைக் குறியையே பொறித்துக் கொண்டு வந்தார்கள். இப்படி அடையாள மிட்டுக் கொள்வதால் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு இடையிலேயே ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாமல் இருப்பதற்காகவே இம் முறையை அனுஷ்டித்தார்கள். ஆனால், போர்க் களத்தில் பொருதுகொண்டிருக்கையில் அடையாளம் தெரிவதற்காகக் கிறிஸ்தவர்கள் கழுத்திலே கறுப்புத் துணியைச் சுற்றி, அதைச் சிலுவைபோல் அமைத்து, மார்பிலே தொங்கவிட்டுக் கொண்டார்கள். நாளடைவில் அதுவே நாகரிகமிக்க ட்டை (Tie)  யாக மாறிவிட்டது ! இன்று ‘ட்டை’கட்டுவது கண்ணியமாக ஆங்கிலம் படித்தவர்களால் கருதப்படுகிறது! 


 

<<அத்தியாயம் 41>> <<அத்தியாயம் 43>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

 

 

Related Articles

Leave a Comment