07. உறவுக்கு உலை

by நூருத்தீன்

‘எள்ளல், எகத்தாளம், நக்கல், சரமாரியான புகார், குறை என்று ஆரம்பித்தால் எப்படி எதிர்த்தரப்புக் கடுப்பாகித் தன் குறையை மறைக்க முயலுமோ அதேபோல் எடுத்த எடுப்பில் நெற்றியில் அடித்தாற் போல் அவரின் குறையை உடைத்துப் பேசும் போதும் எதிர்த்தரப்புக் கடுப்பாகித்

தன் குறையை மறைக்க முயலாதா?’ என்று ஆத்தூர் அங்காடி ஹஸன் கேட்டிருந்தார்.

ஒற்றை வாக்கியத்தில் கேள்வி கேட்பதைப் பற்றி எழுதியிருந்ததற்கு அவரது கேள்வி இது.

வாஸ்தவமான கேள்விதான்.

இதைப் படிக்கும்போதே ஆரோக்கியமான கேள்வி இது; பதில் அளிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா இல்லையா?

இதையே அவர், “யோவ்! பெரிய அப்பாடக்கராட்டம் எழுதியிருக்கே. அப்படீல்லாம் கேட்டா மட்டும் பிரதமரு பதில் சொல்லிடுவாரா? உன் பெயரைக் கேட்டதுமே ‘அந்த ஜாதியா நீ? போடா நாயே’ன்னு போயிடமாட்டாரு?” என்று எழுதியிருந்தால் எப்படியிருக்கும்?

ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றின் மூலக்கூறைக் கண்டறிந்து அதை ஒற்றை வாக்கியத்தில் தெளிவாக, நேர்மையாகக் குறிப்பிட்டு ஆரோக்கியமான உரையாடலுக்கும் பேச்சுவார்த்தைக்கும் சம்பந்தப்பட்டவரை உந்துவதுதான் அங்குச் சொன்ன விஷயத்தின் சாராம்சம். மேலும் சற்று விரிவாய்ப் பின்னர் இத்தொடரில் அது இடம்பெறத்தான் போகிறது.

சில சமயங்களில் திரும்பத் திரும்ப நிகழும் பிரச்சினைகள் சில புதிய பிரச்சினைகளை, பக்க விளைவுகளான பிரச்சினைகளை உருவாக்கும். இது என்ன புதுப் பிரச்சினை என்கிறீர்களா? நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்தாம். கவனித்திருக்க மாட்டோம்.

“எப்பப் பார்த்தாலும் ஃபேஸ் புக்கே கதின்னு கிடக்குறீங்களே! வீட்டுல நான் ஒருத்தி எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு அல்லாடுறேனே, கூடமாட ஒத்துழைச்சா என்ன?” என்று புலம்பும் தர்மபத்தினியை அலட்சியப்படுத்திக் கொண்டே இருக்கிறார் கணவர். ஒருநாள், “ஆமாம்! நான் இப்படித்தான். அதுக்கு என்னாங்கறே. ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம்னா வுடுறியா? படா ரோதனை” என்று அதட்டி, ஆரவாரம், ரகளைச் செய்துவிட்டார்.

அந்தப் பேச்சு, தடித்துப் பிரச்சினை திசை திரும்பி, “பண்டிகையின் போது மாமனார் எனக்குப் பாயாசம் வைக்காமல் அவரே எல்லாவற்றையும் நக்கிவிட்டார்” என்று கணவரும் “ஊரில் இருந்து வந்த எங்க அம்மாவை உங்க அம்மா அன்னிக்கு என்ன வார்த்தை சொன்னாங்க தெரியுமா?” என்று மனைவியும் எந்தக் காலத்திலோ நடந்த விஷயத்தைப் பேசி இப்பொழுது சச்சரவெல்லாம் முற்றிலும் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கும்.

இங்கு முக்கியப் பிரச்சினை என்ன? தனியாக அல்லாடும் மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் ஒத்தாசை. அதைத் தொடர்ச்சியாக நிராகரிக்கும் கணவன்!

இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் புத்திசாலிகள் என்ன செய்வார்கள் எனில் திசை திருப்பும் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு உடனே மோதி அதைச் சரி செய்துவிட்டு, முக்கியப் பிரச்சினைக்கு நகர்வார்கள்.

பக்க விளைவுப் பிரச்சினைகளைக் கையாள்வதையும் பிறகு தனியாகப் பார்க்கத்தான் போகிறோம். அதனால் இப்பொழுது தொடர் பிரச்சினைகளின் அடுத்தக் கட்டத்தைப் பார்ப்போம்.

ஒருவரிடம் ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே இருந்தால், அது அடுத்தக் கட்டமாக இருவர் மத்தியிலான உறவைப் பாதிக்கும். அவரிடம் தொடர்ந்து ஏற்படும் ஏமாற்றங்கள் அவர் மீது மதிப்பின்மையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கி ஏராளமான தீய பின் விளைவுகளுக்கு வழி வகுத்துவிடும். அது வளர்ந்து, அவரது செயல்களினால் ஏற்பட்ட பிரச்சினைகள் மறந்துபோய், அவரது உள்நோக்கம் பற்றிய தப்பான அபிப்ராயம் உருவாகி அதுதான் இப்பொழுது பெரும் பிரச்சினையாக மனத்தை உறுத்த ஆரம்பித்திருக்கும்.

நிர்வாகியாக இருப்பவர் சம்பந்தப்பட்ட ஊழியர் திறமையில்லாதவர், தகுதியில்லாதவர் என்ற முடிவுக்கு வந்திருப்பார்.

தம்பதியராக இருந்தால் இழந்த மரியாதையும் உருவாகிவிட்ட நம்பிக்கையின்மையும் மோதித் தீர்க்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகளாகியிருக்கும்.

முதல் இரண்டு மோதல்களில் நாம் பார்த்த பிரச்சினைகளைவிட உறவைப் பாதிக்கும் பிரச்சினை வெகு முக்கியமானது.

ஒருவரது செயல்களினால் ஏற்படும் பிரச்சினைகளைவிட ஏமாற்றத்துக்கு உள்ளானதைவிட, அவர் மீது நீங்கள் முற்றிலுமாய் நம்பிக்கை இழந்துவிடுவது பெரிய விஷயமல்லவா?

நிர்வாகமோ, தாம்பத்தியமோ, சமூகமோ எதுவாக இருந்தாலும் நீங்கள் சார்ந்திருப்பவரின் திறமையின்மீது சந்தேகமும் அவரது வாக்குறுதிகளின்மீது நம்பிக்கையின்மையும் மதிப்பின்மையும் ஏற்பட்டால் என்னாகும்?

பரஸ்பர உறவை அது பெரிதும் பாதித்து –

“நாம் இனி இணைந்து பணியாற்ற முடியாது. குட்பை”

“நாம் ஒன்றாகச் சேர்ந்து குப்பைக் கொட்ட முடியாது.”

“இனி சேர்ந்து வாழ்வதில் பயனில்லை. ஆளைவிடு”

“போதும் உன் சங்காத்தம். நான் பிரிந்து போய் மறுமலர்ச்சியைப் பெயரில் சேர்த்துக் கொண்டு என் கட்சி இனி தனிக் கட்சி”

என்று பிளவுகள், பிரிவுகள்.

எல்லாம் புரிகிறது. ஆனாலும் புரியவில்லை என்கிறீர்களா?

ஒன்றும் பிரச்சினையில்லை. ஆங்காங்கே சில உதாரணங்களைப் பார்த்துக் கொண்டே தொடர்வோம்.

(தொடரும்)

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 03 டிசம்பர் 2015 அன்று வெளியானது

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–மோதி மோதி உறவாடு முகப்பு–>

Related Articles

Leave a Comment