04. மூலக்கூறு

by நூருத்தீன்

பிரதமர் நரேந்திர மோடியை ஏதோ ஒரு நாட்டின் ஏர்போர்ட்டில் எதிரும் புதிருமாய்ச் சந்தித்து விடுகிறீர்கள். அவரிடமும் அவரது ஆட்சி நிர்வாகத்திலும் உங்களுக்கு ஆயிரம் குறை, புகார், பிரச்சினை. ஆனால் ஒற்றை வாக்கியத்தில், ஒரே ஒரு வாக்கியத்தில்

அவரிடம் நீங்கள் பிரச்சினையைக் கூற வேண்டும். என்ன சொல்வீர்கள்?

‘என்ன இது? இந்தத் தொடரின் நோக்கம் மோதி உறவாடுவதா, மோடியுடன் மோதி உறவாடுவதா?’ என்று திகைக்க வேண்டாம். மீண்டும் சுருக்கமாய் நினைவூட்டிக் கொள்வோம். நமக்குப் பிறரிடம் ஏற்படும் பிரச்சினைகளை, ஏமாற்றங்களை, உரிமை மீறல்களை, அவர்களது வாக்குறுதி மீறல்களை, தீயொழுக்கங்களை உரிய முறையில் மோதி, பேசி, எதிர்கொள்வது எப்படி என்பதுதான் இந்த மோதி மோதி உறவாடு.

மேற்சொன்ன பிரச்சினைகளில் நாம் சிக்கிக்கொள்ளும்போது ஒன்றும் பேசாமல் எப்பொழுதுமே அமைதியாக இருந்துவிடுவதோ அல்லது முரட்டுத் தனமாக அவற்றை எதிர்கொள்வதோ எப்படியான எதிர்வினைகளை உருவாக்கும்; பாதகமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத்தான் குத்துமதிப்பாக முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம்.

அவை இரண்டுமே சரி வராது என்றால் அடுத்து என்ன செய்வது? எப்படித்தான் பேசுவது?

பிரச்சினைகள் நம்மிடம் சொல்லி வைத்து அனுமதி பெற்றுக்கொண்டு வருவதில்லை. திடுமென்று வரும். சிறிதும், பெரிதுமாக வரும். புதிது புதிதாக வந்து இறங்கும். நாளும் பொழுதும் ஏதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்கும். அவற்றைச் சரியானபடி கையாள்கிறோமா, உரியவர்களிடம் முறைப்படி பேசுகிறோமா என்பதை எப்படி அறிவது? அதற்குச் சில குறிப்புகள் உள்ளன.

நீங்கள் சரியான இடத்தை அதாவது பிரச்சினையின் மூலக்கூறைத் தொட்டிருக்க வேண்டும். எப்படியென்றால், பல விஷயங்கள் முட்டி மோதும்போது “என்னதான்பா உன் பிரச்சினை?” என்று முத்தாய்ப்பாய்க் கேட்போமில்லையா, அதைப்போல் பிரச்சினையின் முக்கியமான ஆணிவேரை நீங்கள் இனங் கண்டிருக்க வேண்டும்.

பிரச்சினை ஒன்றைச் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுகிறீர்கள். ஆனால் அதில் தெளிவின்றி உங்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது; எரிச்சலுறுகிறீர்கள்; பேச ஆரம்பித்த பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் உங்கள் பேச்சு வார்த்தை அமைகிறது; அல்லது முன்னர்ப் பலமுறை அவரிடம் பேசிய அதே பிரச்சினையை மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பனவற்றுள் ஏதாவது ஒரு காரணம் உங்களது பேச்சுவார்த்தையில் அமைந்திருந்தால் நீங்கள் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஏனெனில் பிரச்சினையை எதிர்கொண்டு மோத நினைக்கும்போது பொதுவாக நாம் சில தவறுகளைச் செய்வோம். தயக்கம், கூச்சம், அச்சம் போன்ற ஏதோ ஒரு காரணத்தினால் பிரச்சினையின் முக்கியமான அம்சத்தை விட்டுவிட்டு உப்புச் சப்பில்லாத சிறு விஷயத்தைப் பேசிக் கொண்டிருப்போம். அதையும் சுற்றி வளைத்துப் பேசுவோம்.

எதற்குப் பொல்லாப்பு, வீண் சச்சரவு என்ற எண்ணத்தில் கடினமான விஷயத்தை விட்டுவிட்டு எளிதான, சிறிய விஷயத்தைப் பேசித் தீர்க்க முனைவோம்.

ஒருவர் தொடர்ந்து தவறிழைப்பவராக இருப்பார். உதாரணத்திற்கு உங்கள் கடையின் சிப்பந்தி தினசரி ஒரு மணி நேரம் தாமதமாகவே வேலைக்கு வருகிறார். இன்று அவரது தாமதத்தினால் முக்கியமான ஒரு வாடிக்கையாளரை இழந்து விடுகிறீர்கள். உங்கள் சிப்பந்தியிடம் இன்று ஏற்பட்ட பிரச்சினையைச் சுட்டிக் காட்டி அதை மட்டும் பேசுவீர்கள்; அல்லது அவரது கால தாமத ஒழுங்கீனத்தை இதற்கு முன்னரே அவரிடம் பேசியிருந்தும் என்னவோ இப்பொழுதுதான் அது புதிதாக நடைபெறுவதுபோல் அவரிடம் பேசுவீர்கள்.

இவற்றில் என்ன தவறு? இவையெல்லாம் தவறான அணுகுமுறைகள் என்றால் ஏன்? எதற்கு? எப்படி?

ஒவ்வொன்றையும் விரிவாய்ப் பார்ப்போம். அதற்கு முன் மேலும் சில முக்கிய முன் குறிப்புகள்.

நாம் விரும்பும் தீர்வு நமக்கு அமைய வேண்டுமானால், பிரச்சினையின் மூலத்தைக் கண்டுணர்ந்து அதனுடன்மோத வேண்டும் என்று மேலே பார்த்தோம். நாம் எதிர்பாராத வகையில் திடீரென பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சரி, தொடர்ந்து நிகழும் பிரச்சினையினால் நாம் ஒருநாள் பொறுமையிழுந்து போனாலும் சரி, உணர்ச்சி வசப்பட்டோ, அவசரப்பட்டோ உடனே அதற்கு எதிர்வினை ஆற்றவேண்டும் என்று இறங்கக் கூடாது. அப்படிச் செய்வதால் நாம் பிரச்சினையின் முக்கிய விஷயத்தை விட்டுவிட்டு வேறு அனாவசிய வாக்குவாதத்தில் மாட்டிக் கொள்வோம்.

எனவே, உயிர் போகும் பிரச்சினை என்றாலன்றி நிதானமாகவே பிரச்சினையை அணுக வேண்டும். உயிர் போகும் பிரச்சினை என்றால் பரவாயில்லையா என்று அபத்தமாகக் கேட்கக்கூடாது. அதற்கு உடனே ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டும்.

அடுத்த முன் குறிப்பு, பிரச்சினையை அறுத்து, பிரித்துக் கூறு போட வேண்டும். பிறகு அவற்றுள் எது முக்கியமானது, தீர்க்கப்பட வேண்டியது என்பதைக் கண்டறிய வேண்டும். அந்தப் பிரச்சினையின் முக்கிய அம்சத்தை நாம் எதிர்கொள்ளப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டும். அப்படி முடிவு செய்ததும் அந்தப் பிரச்சினையை ஒற்றை வாக்கியத்தில், ஒரே ஒரு வாக்கியத்தில் நமக்குச் சொல்லத் தெரிய வேண்டும்.

அதில்தான் வெற்றியின் முதல்படி அமைந்திருக்கிறது.

நீங்கள் கூறப்போகும் அந்த ஒற்றை வாக்கியம் பிரச்சினையின் மூலத்தை உங்களது எதிர்த்தரப்புக்கு அப்பட்டமாய்த் தெரிவிக்க வேண்டும். அவரது கவனத்தை ஈர்த்து, பேச்சுவார்த்தைக்குத் துண்டுகோலாய் அமைய வேண்டும். அந்த அடிப்படையில்தான் அடுத்து உங்களது முட்டலும் மோதலும் அமையப் போகின்றன. எனவே அந்த முதல் ஒற்றை வாக்கியம் வெகு முக்கியம்.

இப்பொழுது சொல்லுங்கள், மோடியிடம் என்ன சொல்வீர்கள்?

திறமையான சரியான வாக்கியத்தைச் சொல்பவருக்கு மனம் மகிழுங்கள் நூல் இலவசம்.

(தொடரும்)

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 7 நவம்பர் 2015 அன்று வெளியானது

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–மோதி மோதி உறவாடு முகப்பு–>

 

 

 

Related Articles

Leave a Comment