அட்வாஸ்

by நூருத்தீன்

Take a Stand என்ற ஆவணப்படம் பார்த்தேன். விமர்சனம், மார்க், புள்ளிகளுக்கு அப்பாற்பட்ட அனுபவம் அது. ஆவணப்படம், அட்வாஸு என்று ஆரம்பிக்கிறதே ஒருவேளை ஆதிவாசி

மேட்டரோ என்று திகிலடைந்து விலக நினைப்பவர்கள் நிற்கவும்; தொடரவும். விஜய், ஜோதிகா, டைரக்டர் ஹரி ஆகியோரின் கௌரவத் தோற்றம் உண்டு.

பெண்களுக்கு எதிராக நிகழ்வுறும் உபத்திரவம், பாலியல் கொடுமை, குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள்மீது நடைபெறும் வன்முறை போன்றவற்றைத் தடுப்பதற்கு முயற்சி எடுக்கவும் அவ்விதம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாய் ஒன்றிணைந்து ‘குரல்’ கொடுக்கவும் உருவாகியுள்ள ஆண்களின் அமைப்பு பற்றிய படம் Take a Stand.

இப்படியான அமைப்புகள் இதற்கான சங்கங்கள்தாம் ஏராளம் உள்ளனவே, இதில் என்ன விசேஷம் என்று தோன்றுகிறதல்லவா? இருக்கிறது. குரல் கொடுக்க முன்வந்துள்ள ஆண்கள் குரலற்ற இனம். அவர்கள் ‘உச்’சுக் கொட்டி பரிதாப்படும் பெண்களும் அவர்களது இனமே. செவியிருந்தும் கேட்க முடியாமல், வாயிருந்தும் பேச முடியாமல் பிறவிக் குறைபாடு உள்ளவர்கள் அவர்கள். கேட்காவிட்டால் என்ன? பேச முடியாவிட்டால்தான் என்ன? கையிருக்கு சைகைக்கு, கண்ணிருக்கு காண்பதற்கு என்று அவர்களுக்கான சைகை மொழி உருவாகிவிட்டது. தமிழிலில் ஜோதிகா நடித்து வெளிவந்த ‘மொழி’ படம் நினைவிருப்பவர்கள் அந்த மொழியில் கைதட்டிவிட்டுத் தொடரவும்.

சைகை மொழி என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டாலும் பேசும் மொழி நாட்டுக்கு நாடு வித்தியாசப் படுவதைப்போல் இதுவும் பல மொழி. ஏறத்தாழ முந்நூற்று சொச்சம் சைகை மொழி உருவாகி நடைமுறையில் உள்ளது என்பது ஆச்சரியமான தகவல். நாடளவில் பிரிவினை ஏற்பட்டாலும் இந்தோ-பாக்கிஸ்தானி சைகை மொழி (Indo-Pakistani Sign Lanugage) என்று நமக்கும் பாக்கிஸ்தானுக்கும் ஒரே சைகை மொழி என்பது ஆறுதலான உபதகவல். இந்த முந்நூற்று சொச்சத்தில் ஒன்று அமெரிக்கர்களுக்கான American Sign Language – ASL.

கேட்கவியலா, பேசவியலா குறைபாடுள்ள அந்த மக்கள் இந்த மொழியைக் கற்று, படு தேர்ச்சியுடன் உரையாடிக் கொள்வதும் தகவல் பரிமாறிக் கொள்வதும் காண்பதற்கு வித்தியாசமான அனுபவம். இந்தக் கட்டுரையின் வசதிக்காக அந்தக் குறைபாடுள்ளவர்களை ASL மக்கள் என்று குறிப்பிட்டுக் கொள்வோம். ASL மக்கள் தங்களுக்குள் தங்கள் மொழியில் பேசிக் கொள்கிறார்கள் சரி. அவர்கள் வட்டத்திற்கு வெளியே? பள்ளிகளில் இதர மொழிகளை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து படிப்பதுபோல் ASL–ம் எடுத்துக் கொள்ளலாம். அப்படி அம்மொழியைக் கற்றுத் தேறும் மற்றவர்கள் ASL மக்களுக்கும் வெளிவட்டத்திற்கும் பாலம்.

மேலே குறிப்பிட்ட, கொடுமைகளுக்கு உள்ளாகும் ASL பெண்களுக்குக் குரல் கொடுக்க, ஆதரவு கரம் நீட்ட அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உருவாகியுள்ள அமைப்பு Abused Deaf Women’s Adovacy Services – ADWAS. இதன் நிர்வாகிகளில் மிகப் பெரும்பாலானவர்கள் பெண்கள். இவர்கள் தங்களது சேவையைச் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதைக் கவனித்த ASL ஆண்களுக்கு தங்கள் பங்குக்கு அந்த யோசனை தோன்றியது. அந்தப் பெண்களுக்காகச் சேவையாற்றும் ADWAS அமைப்புடன் நாமும் இணைந்து நம்மாலான ஆதரவு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஓர் அமைப்பை உருவாக்கிவிட்டனர். அது Engaging Deaf Men Project – EDMP.

உருவாக்கிவிட்டால் மட்டும் போதுமா? அதற்கான செயல்பாடுகளில் இறங்கி, ADWAS அமைப்பினருடன் கலந்துரையாடல், சந்திப்புக் கூட்டம் என்று திட்டமிட்டு நகர்ந்து அதன் ஓர் அம்சம்தான் Take a Stand ஆவணப்படம். சியாட்டில் பொது நூலகத்தில் அமைந்துள்ள அரங்கில் கடந்த சனியன்று மாலை இந்தப் படம் திரையிடப்பட்டது. ASL மொழியை விருப்பப்பாடமாக எடுத்துப் பயிலும் மகள் அழைத்ததால் துணைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம். பெரிதாக ஏதும் ஆர்வம் இன்றி சென்றால், எதிர்பார்த்ததற்கு மாறாய்க் கனிசமான கூட்டம். பெரும்பாலானவர்கள் ASL மக்கள். ஒரு மணிநேரம் படம். அடுத்த ஒரு மணி நேரம் அந்தப் படத்தில் ஈடுபட்டவர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி.

“இடம் பிடியுங்கள் வருகிறேன்” என்று மகள்களிடம் சொல்லிவிட்டு, சிறிது நேரம் கழித்து அரங்கினுள் நுழைந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது என்று குழப்பமாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நம்மவர்களை எப்படி அடையாளம் காண்போம்? அமர்ந்திருப்பவர்கள் கையை உயர்த்தி, ஆட்டி, சைகை செய்து அழைப்பார்கள். நாமும் பாப்கார்னும் கையுமாய் விரைவோம். இங்கு அரங்கினுள் ஒரு சிலரைத் தவிர அத்தனைப் பேரும் கையை ஆட்டி, சைகை செய்து, ஒருவருக்கொருவர் ASL-ல் பேசிக்கொண்டிருக்க, மக்காவில் மொட்டைத் தலைக்காரரைத் தேடும் நிலை எனக்கு! ஒருவழியாக மகள்களின் கை அசைவைக் கண்டதும் மனசுக்கு ‘அப்பாடா’.

{youtube}MgK3VtnxOEE?|600|450|0{/youtube}

படம் ஆரம்பித்து ஓட ஆரம்பித்தது. சப்தம் மட்டும் வரவில்லை. முழுக்க முழுக்க ASL மொழிப் படம். மற்றவர்கள் விளங்கிக் கொள்ள ஆங்கிலத்தில் சப்-டைட்டில். டிவியில் படம் பார்க்கும்போது சில நேரங்களில் mute செய்து பார்த்திருப்போம். ஆனால் அந்த அனுபவத்திற்கும் சப்தமற்ற இந்த சைகை மொழி படத்தைப் பார்ப்பதற்கும் ஏக வித்தியாசம். சப் டைட்டில் இருந்தாலும் செவிக்குச் சப்தமின்றி பொதுவான படங்களைப் பார்க்க நேரும் ASL மக்களின் உணர்வுக்கு அண்மையில் செல்ல முடிந்த தருணம் அது.

ASL மக்கள் தங்களது மொழியிலேயே அந்தப் படத்தைப் பார்த்தார்கள்; நகைத்தார்கள்; ஆமோதித்தார்கள். அவற்றையெல்லாம் சப் டைட்டிலின் உதவி கொண்டு என்னைப் போன்றவர்கள் செய்து கொண்டிருந்தோம். படத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் வாய்பேசும் ஒருவர் தலைகாட்டி, அந்த நிமிடங்கள் மட்டும்தான் படத்தில் சப்தம்.

பிறகு நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் அளிக்க அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் படத்தில் பங்கேற்ற ASL மக்கள். சைகை மொழியிலேயே கேள்வி; சைகை மொழியிலேயே பதில் என்று நிகழ்ச்சி நடந்தது. ஆனால் ASL பயின்ற சிலர் முன் வரிசையில் அமர்ந்து அவற்றை நமக்கு மொழி பெயர்த்தனர். அதில் வியப்பு யாதெனில், சைகை மொழியில் ASL மக்கள் பேசியதை, தடங்கலற்ற வேகத்தில் உரையாடலுக்கான அதே ஏற்ற இறக்கத்துடன் அவர்கள் மொழி பெயர்த்த லாவகம். சிறந்த பின்னணிக் குரலுடன் காட்சிகளைப் பார்த்த அனுபவம் அது.

இறுதியில் ASL மக்கள் தங்கள் மொழியில் கைதட்டியபோது என் இரு கைகளும் உயர்ந்து விரல்களை அகலவிரித்து ASL மொழியில் நானும் க்ளாப்ஸ்.

வெளியே வரும்போது பேராசை தோன்றியது. டைரக்டர் பேரரசு நடிகர் விஜய்யைக் கதாநாயகனாக அமைத்து முழு நீள ஆக்ஷன் படமொன்றை ASL மொழியில் இயக்க வேண்டும்.

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 11 நவம்பர் 2014 அன்று வெளியான கட்டுரை

அவ்வப்போது – தொடர் கட்டுரைகள்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

Related Articles

Leave a Comment