7. வயோதிக அமீரும் ஹஜருத்துர்ரும்

Egypt Palace

ஐயூபி சுல்தான்கள் ஆட்சி செலுத்திவந்த காலத்திலெல்லாம் அரசர்களைவிட அமீர்களே வன்மை வாய்ந்தவர்களாக விளங்கிவந்தார்கள். சிற்சில

சமயங்களில் அரசர் பெயரால் அவர்களேகூட ஆணை பிறப்பித்து வந்தார்கள். சுல்தான்கள் பலவீனமாயிருந்த காரணத்தால் அந்த அமீர்கள் அப்படிப் பிராபல்ய மடையவில்லை. ஆனால், அவர்கள் அமீர்களுக்கு விசேஷ சலுகைகாட்டி வந்தமையாலேயே இவர்கள் பலம் பெற்றுக் கொண்டார்கள். அல்லாமலும், முஸ்லிம் ராஜ்யங்களின் சாம்ராஜ்யமாகிய கிலாஃபத்தும் அதைக் கொண்டு நடாத்திய கலீஃபாக்களும் அதுசமயம் பாக்தாதில் இருந்தபடியாலும், மிஸ்ர் தேசத்தின் மக்களின் இஷ்டத்துக்கு விரோதமாக அந்த கலீஃபாக்களின் கட்டளைகளைப் பிரயோகிப்பதைவிட உள்ளூர் அமீர்களின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டால் தங்கள் மக்களை நன்றாகக் கட்டியாள முடியுமென்று சுல்தான்கள் உணர்ந்திருந்தபடியாலும், அரசாங்கத்துக்கு ஆபத்து வரும்போது வெகுதூரத்திலிருக்கும் கலீஃபாவிடமிருந்து உதவியைப் பெறுவதைவிடத் தங்களுடன் எப்பொழுதும் பக்கத்திலேயே இருந்துவரும் அமீர்களிடம் சர்வ சௌகரியங்களையும் பெற்றுக்கொள்வது சுலபமாக இருந்தபடியாலும், அந்த சுல்தான்கள் அமீர்களை நல்ல அந்தஸ்தில் எப்போதும் வைத்திருந்ததுடன், விசேஷ அதிகாரங்களையும் அவர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.

தங்களைக் கொண்டுதான் சுல்தான் ஆட்சி செலுத்த முடிகிறதென்பதையும், சுல்தானைக் கொண்டுதான் தாங்கள் கண்ணியம் பெற முடிகிறதென்பதையும் அவர்கள் அறிந்திருந்தமையால், அவர்கள் தங்கள் நிலைமையை உயர்த்திக் கொண்டதுடன், சுல்தான்களுக்கு வலக்கரமாகவும் விளங்கினார்கள். அதிகாரம் என்பதொன்று அளிக்கப்பெற்ற எவர்தாம் அதைப் பிரயோகிக்காமலிருக்கமுடியும்? அந்த அமீர்களும் அதே போல அதிகாரிகளாகவும் முன்னணிப் பேர்வழிகளாகவும் மிளிர்ந்துவந்தார்கள். இக்காரணம் பற்றியே வலுவடைந்துள்ள அமீர்களைப் பகைத்துக் கொண்ட சுல்தான்களும் வாழ முடிந்ததில்லை; சுல்தானைப் பகைத்துக் கொண்ட பலவீனமான அமீர்களும் முன்னேற முடிந்ததில்லை. இதுதான் எகிப்தின் சரித்திரம் கண்ட உண்மை. நமது இச்சரித்திரம் கூட அதே விஷயத்தைத்தான் நிரூபிக்கப் போகின்றது.

அஃதொருபுறமிருக்க, அரசாங்கத்திலுள்ள பொதுமக்கள் அந்த ஐயூபி மன்னர்களை நேரில் கண்டு எதையும் முறையிட்டுக் கொள்ள முடியாமலிருந்ததும் அமீர்களின் அதிகார வளர்ச்சிக்குத் துணைபுரிந்து வந்தது. என்னெனின், அந்த வம்சத்து சுல்தான்கள் ஆட்சி புரிந்துவந்த போதுதான் கிறிஸ்தவர்கள் அடிக்கடி சிலுவையுத்தத்தை நடத்திக் கொண்டேயிருந்தார்கள். எனவே, போர்முனைக்கு அவர்கள் சண்டையிடச் சென்றுவிட்டால், பொதுமக்கள் அமீர்களின் ஆதிக்கத்துக்கே முற்றமுற்றத் தலைசாய்க்க வேண்டியிருந்தது. அம்மாதிரியான அவசர சந்தர்ப்பங்களில் அந்த அமீர்கள் எவ்வளவு உரிமை பெற்றிருந்தார்கள் என்றால், சுல்தான்களே கூடச் செய்யமுடியாத காரியங்களையும் அவர்கள் செய்து காட்டினார்கள்.

அமீர்களுக்குப் பயந்த பொதுமக்கள் அரசாங்கத்துக்கே விசுவாசமுள்ள பிரஜைகளாக ஆகிவிட்டார்கள். சிலுவையுத்தத்தை முடித்துக்கொண்டு சுல்தான்கள் திரும்பி வந்ததும், அமீர்களின் ஆட்சிச் சிறப்பையும் பொதுமக்கள் அவர்களுக்கு அடங்கி நடப்பதையும் கண்டு, ஆச்சரியமுற்றுவிடுவர். அப்பால் அமீர்களின் செல்வாக்கையும் அவர்களின் அந்தஸ்தையும் பற்றி நாம் அதிகம் கூறுவானேன்?

மிஸ்ரின் சுல்தானாய் விளங்கிய ஸலாஹுத்தீன் ஐயூபி மரணமடைந்த பின்னர் அந்நாட்டுக்கு அவருடைய ஆண்மக்கள் மூவருள் ஒருவரேனும் பட்டத்துக்கு வராமல் அந்த ஸல்தனத் அவருடைய சகோதரர் ஸைபுத்தீன் ஆதில் என்பவருக்கு எப்படிக் கிடைத்தது, தெரியுமா? ஸலாஹுத்தீன் போர் புரிவதற்காக ஷாம்தேசம் சென்றிருந்தபோது, அவருடைய தம்பி ஸைபுத்தீன் என்பவரே மிஸ்ருக்குத் தலைமையான அமீராயிருந்தார். சுல்தான் வெளிநாட்டிலிருந்தபோது, இந்த ஸைபுத்தீன் எவ்வளவு சாமர்த்தியமாக ஆட்சியைப் பாதுகாத்து வந்தாரென்றால், ஸலாஹுத்தீன் மாண்டசெய்தி கேட்டதும் மிஸ்ர் தேச மக்கள் ஸைபுத்தீனையே சுல்தானாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அந்த ஸைபுத்தீன் ஆதிலின் மைந்தர் அல் மலிக்குல் காமில் இப்போது ஆட்சி செலுத்தி வருகையில், அவரின் கீழிருந்த அமீர்கள் தாங்களும் முன்னுக்கு வரவேண்டுமென்னும் ஆசையால் ஒருவரையொருவர் போட்டி போட்டு நற்கருமம் புரிவதில் முனைந்து நின்றனர் என்பதில் அதிசயிக்கத்தக்க அம்சம் என்ன இருக்கிறது?

எனவே, ஐயூபி சுல்தான்கள் அமீர்களின் கைப்பொம்மைகளாக இல்லாவிட்டாலும், அமீர்கள் சொல்கிறபடி கேட்டு நடக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இருந்தார்கள். இஸ்லாத்தில் எதேச்சதிகாரம் அனுமதிக்கப்படவில்லை. அஃதேபோல் அதிகாரிக்குக் கீழே இருப்பவர்களும் தங்களுக்கு மேலே இருப்பவர்களைக் கவிழ்க்க அதிகாரம் பெற்றிருக்கவில்லை. மக்களின் பிரதிநிதிகளான அமீர்களை இந்தப் பரந்த நோக்கத்துடனேதான் அந்த சுல்தான்கள் விசேஷ அதிகாரங் கொடுத்து உயர்ந்தபதவியில் வைத்துக் காத்துவந்தார்கள். அமீர்களுக்குப் பொதுமக்கள் ஆதரவும் மன்னரின் தயவும் இருந்ததை அவர்கள் எதுவரை துர்வினியோகப்படுத்தவில்லையோ, அதுவரை உன்னதமாகவே இருந்துவந்தார்கள். ஆனால், எப்போது அவர்கள் தங்களின் ஏகபோக உரிமையைத் தவறாகப் பிரயோகிக்கத் தலைப்பட்டார்களோ, அப்போதே அவர்கள் தங்களுக்கு விநாசகாலத்தை விளைவித்துக் கொண்டார்கள். இச் சரித்திரத்தை நீங்கள் படித்துமுடித்ததும், அவ்வுண்மையை நன்கு தெரிந்துகொள்வீர்கள்.

காஹிராவில் அந்தமாதிரியான நல்ல அமீர்களுள் மிகவும் உன்னத நிலையில் ஒரு கிழஅமீர் இருந்துவந்தார். ஐயூபி வம்சத்தினர் ஸல்தனத்துக்கு உயர்வதற்கு முன்னே அவர் பிறந்தவர். அக்கிழவர் சிறுபிராயத்தினராய் இருந்தபோதுதான் (கி.பி. 1169-இல்) ஸலாஹுத்தீன் மிஸ்ர் தேசத்திற்கு வஜீராக நியமனம் பெற்றார். எனவே, நமது சரித்திரம் நடைபெறுகிற இந்த 1236-ஆம் ஆண்டில் அவ் அமீருக்குச் சுமார் 75 வயது நிரம்பியிருந்தது. அவர் மிகவும் சாந்தகுணசீலர். ஐயூபி வம்சத்து முதல் சுல்தானின் ஆட்சியின்போதே காஹிரா அரண்மனைக்குள் அமீராக வந்தவர். ராஜீய விஷயங்களில் மகா நிபுணர். அதிகமும் கற்றுத்தேர்ந்தவர். ஸலாஹுத்தீன் சிலுவை யுத்தம் புரிந்துகொண்டிருந்த காலத்தில், அவர் தம்பி ஆதில் மிஸ்ரில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இவரே உறுதுணையாய் இருந்தார். எனவேதான், ஐயூபி வம்சத்திலுள்ள யாவர்க்குமே இவர்மீது மட்டற்ற அன்பும் அபிமானமும், நேசமும் பாசமும் இருந்து வந்தன. தாவூத் பின் மூஸா என்னும் அழகிய நாமம் பெற்றவர்; மிகச் சிறந்த கண்ணிய புருஷர்.

ஆனால், அந்த அமீர் தாவூதுக்கு எல்லா அதிருஷ்டமும் இருந்தும், அவர் வாலிபப் பருவத்திலேயே சட்டப்படி நான்கு மனைவியரை மணந்திருந்தும், இறுதிவரை ஒரு புத்திரபாக்கியமும் கிடைக்கப்பெறாத கிழடாகி ஏங்கித் தவித்திருந்தார். என்னெனின், அவருடைய மனைவிகள் ஒவ்வொருவராக அவருக்கு முன்னே காலமாகி விட்டனர். முதுமை அடைந்து விட்ட அவர்மீது அரண்மனையிலுள்ள அத்தனைபேரும் புத்திரர்களேபோல் பாசஞ் செலுத்திவந்தும், அவர் மனம் மட்டும் சதா சஞ்சலத்திலேயே உழன்று கொண்டிருந்தது. ஆண்டவன் தான் நாடியதை மட்டுமே நாடியவர்களுக்குக் கொடுப்பானன்றோ? பெரிய தத்துவ சாஸ்திரமெல்லாம் பயின்று கரை கடந்த அந்த அமீர் தாவூத் தம் இறுதிக் காலத்தில் மனச் சாந்தியையும் நல்ல சந்துஷ்டியையும் பெற்றுக்கொள்வதற்கு என்ன வழியிருக்கிறதென்று எண்ணியெண்ணி ஏங்கிக்கொண் டிருந்தார்.

இறுதியாக ஒருநாள் அவர் சஞ்சலங் கலந்த உள்ளத்தினராய்த் தமது பல்லக்கில் போய்க்கொண்டிருக்கையில், நாம் முன்னே விவரித்த அஜீஜ் என்னும் வர்த்தகர் அந்த அமீரை அண்மினார்.

“யா அமீர்! அடியேன் தங்களிடம் சில விஷயங்களைத் தனித்துப்பேச ஆசைப்படுகிறேன். தங்கள் அனுமதி கிடைக்குமா?” என்று அஜீஜ் தாழ்மையுடன் விண்ணப்பித்துக்கொண்டார்.

“தனித்துப் பேசவா? ஏன், தாரளமாய் இப்போதே பேசலாமே!”

“இல்லை! அது ரகசியமான விஷயம்.”

“ரகசியமான விஷயமா? அப்படியானால், நாளைக் காலை என் மாளிகைக்கு வரலாம்.”

“அப்படியே, அமீர்!” என்று ஏற்றுக்கொண்டு, அஜீஜ் விலகிவிட்டார்.

குறிப்பிட்டபடி அடுந்தநாள் காலையில் அஜீஜ் அமீரைப் போய்ப் பார்த்தார். தாம் இன்னாரென்பதை அவருக்கு அறிமுகப்படுத்திக்கொண்டார். அமீரும் அவரை அன்புடன் அமரச் செய்து, விசேஷம் என்னவென்று விசாரித்தார்.

“தாங்கள் நெடுநாட்களாக வாட்டமுற்றிருக்கும் மனக்கவலைக்கு நான் ஒரு தக்க மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறேன் என்று நினைப்பதால்…” என்று பூர்வபீடிகையுடன் ஆரம்பிக்கு முன்னே, அமீர் தம் வாயில் வைத்துப் புகைத்துக்கொண்டிருந்த ஹுக்காவின் முனையைச் சட்டென்று வெளியிலெடுத்தார்.

“தக்க மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறீரா!” என்று ஆச்சரியத்துடன் வினவினார்.

“அமீருல் முஅல்லம்! அப்படித்தான் நினைக்கிறேன். என்னெனின், இத்தனை நாட்களாகத் தாங்கள் தேடித்திரியும் புத்திரபாக்கியம் தங்களை இப்போது தானே நாடி வந்துகொண்டிருக்கிறது!”

அமீர் அஜீஜை முறைத்துப் பார்த்தார். தம்மிடம் இதுவரை எவரும் இவ்வளவு சகஜமாக ஹாஸ்யம் கலந்த தொனியுடன் பேசாதிருக்க, இந்த அஜீஜ் இப்படிப் புதிர் போடுவது போல் விஷயத்தை ஆரம்பித்தது அவருக்குப் பேரதிசயமாகவும் எதிர்பாராச் சம்பவமாகவுமே இருந்தது. ஆனால், அஜீஜ் அதையொன்றும் பொருட்படுத்தாமல் மேலே பேசினார்:

“நான் தங்களிடம் பரிகாசம் பண்ண வரவில்லை. ஆனால், ஆண்டவனே பார்த்துத் தங்களுக்கு அனுப்ப நாடியிருக்கும் பரிசைக் குறித்தே கூறவந்தேன். இந்த மிஸ்ர் தேசம் தோன்றிய நாளாக எவரும் கண்டிருக்க முடியாத வனப்பும், வசீகரமும், அறிவுக்கூர்மையும் பெற்றுமிளிரும் அநாதையான பூங்கொடியொன்றை வெளிநாட்டிலிருந்து அல்லாஹுத் தஆலா இங்கே அனுப்பிவைத்திருக்கிறான். அவளை நான் ஐந்தாறு வருஷங்களாகக் கவனித்து வருகிறேன். அத்தகைய கிடைத்தற்கரிய பொருள் தங்களுக்கே உரிமையாக வேண்டுமன்றி வேறெவர் கையுள்ளும் சேர்ப்பிக்கப்படக் கூடாது என்பதுதான் என் தாழ்வான அபிப்ராயமாகும்.”

“ஏ, அஜீஜ்! எனக்கோ, முதுமை முற்றிவிட்டது. என் இறுதி நிமிடத்தை நான் எந்த நேரமும் எதிர்பார்த்தவனாய் இருக்கிறேன். இந்த வயதில் நீர் குறிப்பிடுகிற அந்த இளம் பெண்ணை நான் எதற்காக விவாகம் செய்துகொள்ள வேண்டும்? எனக்கோ. ஆண்டவன் வேறு கவலையைத் தந்திருக்கிறான். இந்த நேரத்தில் நீர் என் வாலிப தசையின் முறுக்கைக் காட்டச் சொல்கிறீர்…”

“அமீர்! மன்னியுங்கள். அடியேன் அந்த எண்ணத்துடன் தங்களிடம் பேசவில்லை. தங்களுக்கு மனைவியாக யான் ஒரு பெண்ணை பரிந்துரை செய்கிறேனென்று நினைக்காதீர்கள். ஆனால், தங்களுக்குப் புத்திரியாக ஒரு சிறுமியைக் கொடுக்க ஆசைப்படுகிறேன் என்பதையே கூறிக்கொள்ள வந்தேன். என் நெருங்கிய நண்பர் முஹம்மத் யூசுப் என்பவர் அச்சிறுமியை வளர்த்து வருகிறார். அவளுக்கு வயது 12 அல்லது 13தான் இருக்கும். இவள் இன்னம் பூப்பைக்கூட அடையவில்லை. அவ்வளவு பெரிய மூளையை அந்த எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா எப்படி அவ் இளம் மண்டைக்குள்ளே படைத்தானென்பதையே என்னால் நம்ப முடியவில்லை. யானும் என் வயதில் எத்தனையோ சாதுரியம் நிரம்பியவர்களைக் கண்டிருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட ஒரு மிகச் சிறந்த கடைந்தெடுத்த அமுதத்தைப் பார்த்ததில்லை. நமது இவ்வற்புத தேசத்தின் பழங்கால நாகரிகத்துச் சரித்திரங்களை எல்லாங்கூடத் துழவித் துருவிப் பார்த்துவிட்டேன். ஆனால், இவளைப் போன்ற அத்துணை ஆழிய ஞானமும், தேறிய அறிவும் படைக்கப்பெற்ற ஒருத்தியைப் பற்றிக் கேள்விப்படவுமில்லை. சகலகலா வல்லுநராகிய தங்களிடம் அவள் ஒப்படைக்கப்பட்டால், பாற்கடலில் அன்னம் மிதந்ததேபோல், அவளது தீக்ஷண்யமும் அறிவும் உங்களைப் பெரிதும் பரவசத்துக்கு ஆளாக்கி விடுமென்று நான் நிச்சயமாக நம்புகின்றேன். தாங்கள் வேண்டுமானால், அவளை இங்கே வரவழைத்துப் பேசிப்பாருங்கள்; நான் சொல்லிய அனைத்தும் மிகக் குறைவான வார்த்தைகள் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.”

அமீர் கண்களை மூடிக்கொண்டே சிந்தித்த வண்ணம் இருந்தார். அவ்வப்போது தாடியைக் கோதிக்கொண்டார். பிறகு நிதானமாக ஹுக்காவின் புகையை ஒருமூச்சு இழுத்துவிட்டு, “அவ்வளவு சிறந்த ஞானமுள்ளவளா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“அதைப்பற்றி யான் ஒன்றும் அதிகம் சொல்ல விழையவில்லை. அதைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். அவளை இங்குக் கொண்டு வருதற்கு மட்டும் அனுமதியளியுங்கள்; பின்னர்த் தாங்களே நேரில் முடிவு செய்துகொள்ளுங்கள். அவளைத் தாங்கள் புத்திரியாக வைத்துக்கொள்ளத்தக்க அருகதை அவளுக்கு இருக்கிறதென்று தாங்கள் கருதினால், ஏற்றுக்கொள்ளுங்கள்; இன்றேல், நிராகரித்து விடுங்கள். அதனால், யானொன்றும் வருந்தமாட்டேன்,” என்று வெகுநயமாகப் பேசினார் அஜீஜ்.

“அவள் இப்போது எங்கே இருக்கிறாள்?” என்று அமீர் விசாரித்தார்.

“ஏன், இதே காஹிராவில், இந்த பஹ்ருன்னீல் (நைல் நதி) கரையருகிலே இருக்கிறாள்.”

“அவள் பெயர்?”

“ஷஜருத்துர் – முத்துத் திவலை.”

“இஃதென்ன, விசித்திரமான பெயராய் இருக்கிறதே! ஷஜருத்துர், ஷஜருத்துர்? – இந்த மாதிரியான அதிசயப் பெயரை நான் எங்குமே என்றுமே கேட்டதில்லையே?”

“ஆம்! அவள் முத்தின் திவலையேதான். அவளை நீங்கள் ஒருமுறை கண்ணால் கண்டால், அந்தப் பெயரைவிட வேறு பொருத்தமான எந்தப் பெயரைக்கொண்டும் அவளை அழைக்க முடியாதென்பதைத் தாங்களே நன்கு கண்டுகொள்வீர்கள்.”

அமீர் ஒரு சிறிது யோசித்தார். அஜீஜ் அவர் வாயையே அதிக ஆவலுடன் கவனித்தார்.

“தாங்கள் சிந்திக்க வேண்டுவது ஒன்றுமே இதில் இல்லை. ஒரே ஓர் உத்தரவும் அனுமதியும் மட்டும் கொடுங்கள். இன்னம், ஒரு மணி நேரத்தில் யான் அவளை இங்குக் கொணர்ந்து நிறுத்துகிறேன்.”

“சரி! போய்க் கூப்பிட்டுவாருமே, பார்க்கலாம்!” என்று அந்த வயோதிக அமீர் தலையசைத்தார்.

அஜீஜ் வெடுக்கென்று எழுந்தார்; ஸலாம் சொன்னார்; வேகமாய்த் திரும்பினார்; பத்து நிமிஷத்தில் யூசுபின் வீட்டுக்குள் வந்து சேர்ந்துவிட்டார். அங்கே வந்தபோது என்ன காட்சியை அவர் கண்டாரென்பதைச் சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நாம் கூறினோமல்லவா?

அழகிய மகாராணி ஒருத்தி அலங்காரம் புரிந்துகொண்டு ஒய்யாரமாய் இருப்பதைப் போன்ற அத்துணை ரூபலாவண்ய சௌந்தர்ய தேஜஸுடன் ஷஜருத்துர் ஜோடித்துக் கொண்டு நிற்பதையும், அவள் அரண்மனைக்குத் தான் போகப்போவதாக அழுத்தந்திருத்தமாகக் கூறியதையும் கண்டு அஜீஜ் அப்படியே பிரமித்துப் போனார். அமீரிடம் அனுமதிபெற்று வந்துவிட்டாலும். ஷஜரை இனித்தான் போய்ப் பயணப்படுத்த வேண்டுமென்று அவர் சிந்தித்த வண்ணம் நடந்து வந்திருக்க, இங்கே இவள் முன்னமே சித்தமாயிருப்பதையும், யூசுப் மட்டும் மனமுடைந்துபோய் வீற்றிருப்பதையும் கண்டு, வியப்புற்றார். அல்லாமலும், அவருக்கு இன்னொரு பயமும் இருந்தது: ஒருவேளை ஷஜருத்துர் நேற்றிலிருந்து இன்றைக்குள் தன் மனத்தை மாற்றிக்கொண்டு, யூசுபுடனேயே எப்போதும் தங்கிவிடுவதென்று முடிவு செய்திருந்தால், தாம் அந்த அமீரிடம் கொடுத்த வாக்கு என்னாவது என்னும் கவலையும் அவரை அதுவரை வாட்டிக் கொண்டிருந்தது.

யூசுபும் அஜீஜும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டனர். சற்றுநேரம் நிசப்தம் நிலவியது. அஜீஜ் நேரத்தைக் கடத்த விரும்பவில்லை. யூசுபிடம் ஏதோ குசுகுசு வென்று பேசினார். ஷஜருத்துர்ரோ, தான் ஏதோ பெரிய சுல்தானாவாக உயர்ந்துவிட்டதாகவே மனப்பால் குடித்துக்கொண்டிருந்தாள். ஒரு கால்மணி நேரத்தில் எல்லாம் சரியாகி விட்டன. யூசுபும் இணங்கியிருப்பதாக அவர் முகபாவம் உணர்த்திற்று. மூவரும் புறப்பட்டார்கள், அரண்மனையை அடுத்துள்ள அமீரின் மாளிகையை நோக்கி. ஓர் ஒட்டகத் தொட்டிலில் ஷஜருத்துர் முக்காடிடப்பட்டு அமர்த்தப்பட்டாள். யூசுபும் அஜீஜும் அவ் வொட்டகத்துக்கு முன்னால் நடந்தனர். கொஞ்சநேரத்தில் அவர்கள் அமீர் தாவூதின் மாளிகையெதிரில் போய் நின்றனர்.

ஷஜருத்துர் அவள் வாழ்நாளிலேயே இன்றுவரை இவ்வளவு பெரிய மாளிகையை எங்கே கண்டிருக்கிறாள்! அம்மாளிகையின் வனப்பை அவள் வெறிக்கவெறிக்கப் பார்த்தாள். அப்போது அஜீஜ் அவளை நெருங்கி, “குழந்தாய்! நீ இப்போது ஓர் அமீரின் முன்னால் நிறுத்தப்படப் போகிறாய். அவர் உன்னைக் கேட்கிற கேள்விகளுக்கு நீ சரியான பதில் கூறுவதைப் பொறுத்தே உன் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். நீ ஏதும் இசகுபிசகாகப் பேசி, அவருடைய அதிருப்திக்கு ஆளாய்விட்டால், பிறகு எங்கள்மீது குறை சொல்லிப் பயனில்லை,” என்று மெதுவாக அறிவுறுத்தினார்.

அஜீஜும் யூசுபும் ஷஜருத்துர்ரைக் கூப்பிட்டுக்கொண்டு அந்த மஹலின் தலைவாயிலைக் கடந்தார்கள். அவளுக்கோ, அது சுவர்க்கத்தின் வாயிலாகவே காட்சியளித்தது.

மாளிகையின் முன்மண்டபத்திலிருந்த விசாலமான அறையில் காசிமீர ஜமக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் பட்டுத்திண்டுகள் அடுக்கி, ஓர் உயரிய வெல்வெட் விரிப்புப் பரத்தியிருந்தது. நறுமணமூட்டும் சாம்பிராணிப் புகை கம்மென்று வீசிக்கொண்டிருந்தது. பஸராவிலிருந்தும் பாக்தாதிலிருந்தும் வந்த கனி வர்க்கங்கள் வைத்திருந்த பெரிய தங்கத் தாம்பாளமொன்று அத் திண்டுகளுக்குப் பக்கத்திலிருக்கும் சிறிய முக்காலிமீது நின்றுகொண்டிருந்தது.

சேவகனொருவன் அம் மூவரையும் அங்கே அமரச் சொல்லிவிட்டு, உள்ளே போய் அமீரிடம் அவர்களின் வரவைத் தெரிவித்தான். அந்தக் கிழவரும் உடனே வெளியே வந்து அந்த மஹலின் எதிர்ப்புறத்திலிருந்த வாயில் வழியே நுழைந்தார். மூவரும் எழுந்து நின்று ஸலாம் சொன்னார்கள்.

அமீர் அவர்களைக் கவனித்தார். ஷஜருத்துர் சிறுபெண்ணாயிருந்தாலும், பெரிய தர்பாரில் தலைநிமிர்ந்து நிற்பது மரியாதைக் குறைவாதலால், நாணத்தால் தரையை நோக்கிக் குனிந்து நின்றுகொண்டிருந்தாள். அஜீஜ், அமீரிடம் தம் நண்பர் யூசுபையும் அவர் வளர்ப்புப் பெண்ணையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களை அமரச் சொல்லி, அமீர் சைக்கினை காட்டினார். ஷஜர் உட்காராமல் நின்று கொண்டேயிருந்தாள்.

“குழந்தாய்! உன் பெயரென்ன?” என்று மெல்லக் கேட்டார் அவர்.

“யா அமீருல் அஃலம்! என் இயற்பெயர் இன்னதென்று யான் அறியமாட்டேன். ஆனால், என்மீது அன்பு பூண்டவர்கள் கூப்பிடும் பெயரை மட்டுமே யான் தெரிந்துகொண்டிருக்கிறேன்; அவர்கள் என்னை ‘ஷஜருத்துர்’ என்று அழைப்பார்கள்.”

அமீர் அப்படியே மெய்ம்மறந்து போயினார். ‘இவள் பேசுகிற வார்த்தைகள் எவ்வளவு மதுரமாகவும் இலக்கணம் பொருந்தியனவாகவும் மிளிர்கின்றன!’ என்று கருதிக்கொண்டார்.

“ஷஜருத்துர்! நீ எங்கிருந்து வருகின்றாய்? உன் பெற்றோர் யாவர்?”

“என் பெற்றோர் காலஞ்சென்று விட்டனர். நான் பிறந்தது துருக்கிதேசம்; எகிப்தில் வளர்ந்தேன்.”

“உன் சரித்திரம் என்ன? நான் அதைத் தெரிந்துகொள்ளலாமா?”

ஷஜர் பெருமூச்செறிந்தாள். சுருக்கமாகவும், மிக விளக்கமாகவும், நல்ல இலக்கியமொழியில், மணிகோத்தாற் போன்ற வார்த்தைகளில் தன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லி முடித்தாள். ஆனால். அவ் வரலாற்றைக் கூறுகையில், தான் யூசுபிடம் வந்து சேர்ந்த தகவலை மட்டும் சிறிது திரித்துவிட்டாள். என்னெனின், முன்னம் பர்கானா யூசுபின் வரலாற்றை இவளிடம் கூறியபோது, தன் அண்ணன் எப்படி அரசாங்க விரோதியாகக் கருதப்பட்டுவந்தார் என்பதை விளக்கியிருந்தாளல்லவா? அதை இவள் மறக்காததால், அமீரிடம் உண்மையைச் சொல்லி யூசுபை மாட்டிவிட அவள் துணியவில்லை. வயோதிக அமீர் அவள் பேசிய வார்த்தைகளின் இனிமையில் மெய்ம்மறந்து சொக்கிப்போனார்.

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 16-30 நவம்பர் 2011

<<அத்தியாயம் 6>>     <<அத்தியாயம் 8>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment