30. புர்ஜீகளும் பஹ்ரீகளும்

ந்த மனிதருடைய ராஜபக்தியை ஸாலிஹ் நஜ்முத்தீன் சந்தேகித்தாரோ அவரையும், எவருடைய வீரதீர பராக்கிரமச் செயல்கள் தம்முடையனவற்றை

விடக் குறைவானது என்று கருதினாரோ அவரையும் சுல்தான் என்றைக்குமே கருனையுடன் நடத்தியது கிடையாது. அன்றியும், மெளனமாகவே காரியத்தைச் சாதிப்பதில் கரைகடந்த நிபுணரும், நேர்மையான குணத்தில் நிகரற்றவரும், நீதி வழங்குவதில் சற்றும் பக்ஷபாதம் பாராட்டாதவருமான அவர் சொன்ன சொற்களைக் காப்பாற்றுபவர்; தமது நடத்தையைக் கொண்டே பிறர்க்கு வீரமும் ஆண்மையும் மூட்டுகிற தன்மை மிக்கவர். அப்படிப்பட்ட அவர் ஜீலானீயன் கக்ஷியை நிதானமாய்க் கேட்டார்;

அவரது தெளிந்த அபிப்பிராயத்திலே தமீதாவின் கவர்னர் மேற்கொண்ட நடவடிக்கை இஸ்லாமிய வீரமுள்ளது, அல்லது மன்னிக்கத்தக்கது என்று கிஞ்சித்தும் புலனாகவில்லை. எனினும், அவர் தாமாக அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்குமுன்னே தம்முடைய மந்திரிகளையும் கலந்தாலோசித்தார். முன்னமே ஷஜருத்துர் தம் அபிப்பிராயத்தை ஸுல்தானிடம் விளக்கிவிட்டிருந்தமையால், இப்போது மீண்டும் மனைவியைக் கலக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஸல்தனத்தின் இசகுபிசகான வேளையிலே, அதிலும் சிம்மாசனத்தின்மீது ஒரு ஸ்திரீ அமர்ந்து ராஜ்ய பாரத்தைத் தாங்கிவருகிற மிக நெருக்கடியான வேளையிலே, மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரென்று சுல்தானால் கருதப்பட்டு, தமீதாவின் கவர்னர் உத்தியோகத்தை ஒப்படைக்கப் பெற்றிருந்த ஒரு பொறுப்புமிக்க ஷெய்கு ஜீலானீ, பேடிகளாகிய அக் கிறிஸ்தவர்களுக்குப் பயந்து, ஊரையும் அவர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டு, புறமுதுகிட்டு, உயிருக்கு அஞ்சி ஓடிவந்துவிட்ட துரோகக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பெற்றார். ஷேக்ஸ்பியர் கூறியபடி, இந்த ஷெ­ய்கு ஜீலானீ சுல்தானுக்காகத் தொண்டூழியம் புரிந்ததில் பாதியளவு பக்தியுடன் இறைவனுக்கு ஊழியம் புரிந்திருப்பின், அவன் அவருக்கு இறுதிக் காலத்தில் இத்தகைய பேராபத்தையும் மாகொடுந் தண்டனையையும் விதத்திருக்க மாட்டானன்றோ?

ஷெ­ய்கு ஜீலானீக்குத் தீர்ப்புக் கூறப்பட்டதை யொட்டி, அடுத்த விவகாரம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது : அதுதான் மம்லூக்குகளைப் பற்றியது.

முன்னமோர் அத்தியாயத்தில் நாம் மம்லூக்குகளைப் பற்றிச் சிறிது வருணித்தோமல்லவா? அந்த மம்லூக்குகளின் தொல்லை இப்போது அதிகமாகப் பெருகிப் போயிருந்தது. ஷாம் தேசத்தில் பிடிபட்ட யுத்தக் குற்றவாளிகளும் ஷஜருத்துர்ரின் சாமர்த்தியத்தால் மம்லூக்குகளாகச் சிருஷ்டிக்கப் பட்டிருந்தார்கள் அல்லவா? எனவே, புதிய மம்லூக்குகள் கணக்கிலடங்காமல் அதிகரித்து விட்டனர். தொன்று தொட்டுக் காஹிராவிலே வதிந்துவந்த பழைய காக்கேசிய அடிமைகளுக்குப் பக்கத்தில் இந்தப் புதிய மங்கோலிய, துருக்கி அடிமைகள் வளர்க்கப்பட்டதைக் கண்டு அவர்கள் மனம் உடைந்தனர். ஸலாஹுத்தீன் காலந்தொட்டுத் தாங்கள் ஸல்தனத்திலே அடைந்திருந்த உச்சமும், அவ் வுச்சத்தின் உன்னதத்தால் தங்களுட் சிலர் அமீர்களாகவும் உயர்ந்திருந்த பெருமையெல்லாமும் மண்ணோடு மண்ணாகிவிட்டதையும், தங்களுக்குப் போட்டியாக வேறு மம்லூக்குகள் சிருஷ்டிக்கப் படுவதையும் கண்டு, அவர்கள் மனம் உடையாமல் வேறு எப்படியிருக்க முடியும்?

குதிரை குப்புறத் தள்ளியதுமின்றிக் குழியும் பறித்த கதை போலவே ஸாலிஹ் நஜ்முத்தீன் அமீர்களையும் கொன்றுவிட்டு, அவர்களின் இனத்தவரான மம்லூக்குகளுக்கும் பிடிமானமில்லாமற் செய்து, புதிய மம்லூக்குகளுக்கு அந்தப் பழைய கண்ணியமும் கௌரவமும் அளித்த செயல் காணப்பட்டது. எனவே, இரு வகையினராகிய மம்லூக்குகளையும் ஒரே இனமாக வாழச் செய்வது சுல்தானுக்கு மட்டுமின்றி, ஸல்தனத்துக்கே பேராபத்தென்பதை எவரே உணராம லிருப்பார்? அதிலும், லூயீயின் படைகள் மிஸ்ரின் தலைவாயிலிலே வந்து குந்திக்கொண்டிருக்கும் பொழுது, தலைநகரிலே இப்படிப்பட்ட பெரிய பிளவை வைத்துக்கொண்டு எப்படிச் சமாளிப்பது? அன்றியும், விவாகமான புதிதிலே ஷஜருத்துர் இந்தப் புதிய மம்லூக்குகளைப் பற்றிக் கிண்டலாக மொழிந்த வார்த்தைகளையும் சுல்தான் மறக்கவில்லை.

சுல்தானுக்கு அமீர்கள்மீது இருந்த ஆத்திரத்தால்தான் அவர்களைக் கொன்றாரேயொழிய, அவ்வமீர்களின் இனமாகிய பழைய மம்லூக்குகள்மீது வெறுப்புத் தோன்றவில்லை. தம்மை அவர்கள் பழிவாங்கிவிட்டால் என்ன செய்வது என்னும் சந்தேகம் மட்டும் அவரை வாட்டியமையாலேயே புதிய மம்லூக்குகளை உண்டு பண்ணினார். ஆனால், இப்புது மம்லூக்குகள் விசேஷ சக்தியைப் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டுவதும் அவசியமன்றோ? எனவே, சுல்தானின் பிரச்சினையெல்லாம் அந்த இரு தொகுதியினரையும் எப்படிப் பிரித்து வைப்பதென்பதும், புதிய மம்லூக்குகள் இறுதிவரை பலஹீனமுள்ள வெற்று அடிமைகளாகவே இருக்கும்படி எப்படிப் பாதுகாப்பதென்பதாகவுமே இருந்துவந்தது.

துருக்கி நாட்டிலிருந்தும், மங்கோலிய பிரதேசத்திலிருந்தும் கொண்டுவரப்பட்ட புதிய மம்லூக்குகள் மிகவும் பலசாலிகளாகவும், மூர்க்கர்களாகவும், சட்ட திட்டங்களுக்கு அடங்காதவர்களாகவும் இருந்தபடியால், அவர்களைக் காஹிராவுக்குள்ளே வைத்திருப்பதே கூடாதென்று எல்லோரின் ஏகோபித்த அபிப்ராயமுமாக நிலவிவந்தது. அவர்கள் சுல்தானுக்கு எவ்வளவுதான் நம்பிக்கையான தொண்டூழியம் புரியக் கூடியவர்களாயிருப்பினும், பொது அமைதிக்கு அப் பெரிய அடிமைப் பட்டாளம் பங்கம் விளைக்குமென்பது விளக்கமாயிற்று. தமீதாவுக்கு அனுப்பப்பட்ட பெரிய சைன்யத்தில் சென்ற மம்லூக்குகளின் எண்ணிக்கை அதிகமாதலால், எஞ்சி நின்றவர்கள் தொகை கொஞ்சமாயிருந்தது. எனவே, அவர்கள் விஷயமான முடிபைச் செய்வதற்கு இதுவே ஏற்ற தருணமாயிருந்தது.

இரண்டு மூன்று நாட்கள் தீர ஆலோசித்ததன் பயனாக ஸாலிஹ் ஒரு முடிபுக்கு வந்தார். சென்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் நீலநதியில் பெருக்கெடுத்து வந்த மாபெரு வெள்ளம் கிறிஸ்தவ சேனைகளைப் படுநாசமடையச் செய்ததல்லவா? அவ் வெள்ளம் தணிந்த பின்னர் அந்நதியின் நடுமத்தியிலே ஒரு பெரிய இடைக்குறை – மணல் திட்டு – ஏற்பட்டுவிட்டது. அந்த ஆற்றிடைக்குறை எவ்வளவு பெரிதாயிருந்ததென்றால், அது நீலநதியின் நடுவில் நிருமிக்கப்பட்ட பெரிய தீவுபோன்ற திடராகி விட்டது. பின்னும் பிறகும் பெரிய வெள்ளங்கள் வந்திருந்தால், அத்தீவும் அடித்துக் கொண்டு போகப்பட்டிருக்கும். ஆனால், அப்படிப்பட்ட பெருவெள்ளமொன்றும் வாராமையால், அத்தீவு நிலைகுலையாமலே இருந்தது. அன்றியும், அது பார்ப்பதற்கு மிக அழகாகவும் அமைந்திருந்தது. சுமார் ஒரு மைல் நீளமும் அரை மைல் அகலமுமுள்ள அவ்விடைக்குறை கடல்போன்ற நீல நதி நடுவே நின்றுகொண்டிருந்தது. அசல் சமுத்திர மத்தியிலிருக்கும் தீவு போலவே காட்சியளித்துவந்தது.

நீல நதியை நேரில் பார்க்காதவர்களுக்கு அஃது எவ்வளவு பிரம்மாண்டமான பெருநதியென்பது தெரியாது. ஒரு கரையிலிருந்து கொண்டு பார்த்தால் எதிர்க்கரை கண்ணுக்குத் தெரியாத தூரத்திலே இருக்கும். ஆழம் மிகவும் அதிகமாதலால், அந் நதி கடல் நிறத்தை நிகர்த்தே தோன்றும். எனவேதான், அந்நதியை முதன் முதலாகக் கண்ட அரபிகள் அதைக் ‘கடல்’ என்றே அழைத்தனர். ‘பஹ்ர்’ என்னும் அரபுவார்த்தைக்கே கடலென்றுதான் அசலில் அர்த்தம். ஆகவே, அக் கடல் போன்ற நதியை நதியென்று அழைக்காமல், கடலென்றே கூப்பிட்டனர். ஆதலால்தான், அரபிகள் அதற்கு பஹ்ருன்னீல் என்று பெயரிட்டிருக்கிறார்கள். அக்கடல் போன்ற நீல நதியின் மத்தியிலிருந்த தீவு மிகவும் பந்தோபஸ்தான ஸ்தலமாகக் காணப்பட்டது. கரையிலிருந்து அத் தீவுக்குள் போவதாயிருந்தாலும், அத் தீவிலிருந்து கரைக்கு வருவதாயிருந்தாலும், பெரும்படவுகளின் உதவியில்லாமல் போக வர முடியாது. அந்தத் தீவே இந்த நவீன மம்லூக்குகள் தங்கியிருப்பதற்கு மிகவும் ஏற்ற இடமென்று சுல்தானுக்கு எட்டிற்று.

மறு கணமே அவர் ஆக்ஞை பிறந்தது : துருக்கி, மங்கோலியா முதலிய நாடுகளில் வாங்கப்பட்ட அடிமைகளும், சமீபத்தில் ஷாம் யுத்தத்தில் பிடிபட்டு மம்லூக்குகளாக்கப் பட்டவர்களும் இக்கணமே அந் நீல நதியின் மத்தியிலுள்ள தீவுக்குள்ளே குடியேறி விடவேண்டும். சுல்தான் கட்டளை பிறந்தாலன்றி, அவர்கள் எக்காரணம் பற்றியும் காஹிராவுக்குள பிரவேசிக்கக் கூடாது. சுல்தானின் மெய் பாதுகாவலர்களான ஹல்கா மட்டுமே அரண்மனையில் வசிக்கலாம். ஏனை எல்லா நவீன மம்லூக்குகளும் அத் தீவிலேதான் சென்று வசிக்கவேண்டும். அவர்களுக்கு வேண்டிய சகல ஆகாரங்களும், உடுப்பு முதலியவைகளும் ஸல்தனத்தால் வழங்கப்படும். மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டாலன்றி, அவர்கள் அத் தீவை விட்டு வெளியேறினால், உடனே கொல்லப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய மம்லூக்குகளின் கதி இப்படியாயிற்று. பழைய மம்லூக்குகளாகிய காக்கேசிய அடிமைகளைப் பற்றி யென்றாலோ, அவர்கள் பழங்காலத் தொட்டு வாழ்ந்து வருகிற மம்லூக் கோட்டையிலேயே வசித்து வருதல் வேண்டும். தொன்று தொட்டு அவர்கள் அனுபவித்து வருகிற அத்தனை விதமான உரிமைகளையும் அவர்கள் வழக்கம்போலே ஆண்டனுபவித்து வரலாம். ஆனால், அவர்கள் தீவில் வசிக்கிற புதிய மம்லூக்குகளுடன் சேரக் கூடாது; அல்லது அவர்களைப் பகைத்துக் கொள்ளவும் கூடாது. சுல்தானின் ஏவல்களை இந்த மம்லூக்குகளும் நிறைவேற்றி வருதல் வேண்டும். இவர்களுடைய முன்னோர்களைப் போல் இவர்கள் அரண்மனையிலே பெரிய உத்தியோகங்களுக்கு மனுப் போடக் கூடாது. தீவில் வசிக்கிற அடிமைகள் எப்படி அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறார்களோ, அப்படியே கோட்டையில் வசிக்கிற அடிமைகளும் அடிமைகளாகத்தாம் வாழ வேண்டும். அமீர்களாகவும், பிரதானிகளாகவும், வேறு உயர்ந்த பதவி வகிக்கும் பிரபலஸ்தர்களாகவும் உயர்வதற்கு மார்க்கமே கிடையாது.

சுல்தானின் இந்தச் சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டவுடனே தீவுக்குரிய மம்லூக்குகள் தீவுக்குள்ளே குடியேற்றப் பட்டனர். கோட்டைக்குரிய மம்லூக்குகள் கோட்டைக்குள்ளே நுழைக்கப்பட்டனர். அன்று முதல் மிஸ்ரின் சரித்திரத்திலே இரு பிரிவுகளான மம்லூக்குகள் தனித்தனியே வளர ஆரம்பித்தனர். சுல்தான் ஸாலிஹ் புரிந்த இப் பெரிய முட்டாட்டனத்தால் ஐயூபி வமிசமே சீக்கிரத்தில் அஸ்தமித்துப் போய்விட்டதுடன், அந்த மம்லூக்குகளே பிற்காலத்தில் ஸல்தனத்தின் ஸுல்தான்களாக உயர்ந்து ஆட்சி புரியவும் ஆரம்பித்து விட்டனர். அன்று ஷஜருத்துர் பரிகாசமாகத் தம் கணவரிடம் பேசிய மொழிகள் இன்னம் சில ஆண்டுகளிலே மெய்யாகவே பலித்துப்போய், கேவலம் அடிமைகளாயிருந்த மம்லூக்குகள் மகோன்னத சுல்தான்களாக உயர்ந்து, ஐயூபிகளைவிடப் புகழ் பெற்றுவிட்டனரென்பதை நாம் கண்ணாரக் காணப் போகின்றோம்.

ஓர் ஊரில் இரண்டு பைத்தியக்காரர் என்ற பழமொழிப்படி, காஹிராவிலே இருவித மம்லூக்குகள் வாழ்ந்து வந்தபடியால், ஒரு சாராரிலிருந்து மற்றொரு சாராரைப் பிரித்துணர்த்துவதற்காகக் காஹிரா வாசிகள், காஹிரா வாசிகள், தீவில் வசித்த மம்லூக்குகளை பஹ்ரீகள் என்றும், கோட்டையுள் வசித்த மம்லூக்குகளை புர்ஜீகள் என்றும் நாமமிட்டழைக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘பஹர்’ என்றால் கடல் என்று அர்த்தமென்று கூறினோமல்லவா? எனவே, பஹ்ராகிய நீல நதியின் தீவிலிருந்தோரைக் ‘கடலுக்குரியவர்; அல்லது கடலில் வசிப்பவர்’ என்று பொருள் தரும் வார்த்தையாகிய பஹ்ரீ என்னும் நாமமிட்டழைத்தனர். ‘புர்ஜ்’ என்றால் கோட்டை என்று பொருள்; எனவே கோட்டையுள் வசித்தவர்களை ‘புர்ஜீகள்’ என்று கூப்பிட்டனர்.

இவ்வண்ணமாக ஸாலிஹ் நஜ்முத்தீன் மம்லூக்குகளின் பிரச்சினையைத் தாத்காலிகமாகத் தீர்த்து வைத்தார். பஹ்ரீ மம்லூக்குகளுக்கும் புர்ஜீ மம்லூக்குகளுக்கும் இவ்விதமாக நிரந்தர அடிமைத்தனத்தை உண்டுபண்ணிவிட்டு, அவர்கள் பிறகெப்பொழுதுமே சற்றும் வாலாட்ட முடியாத அவ்வளவு கீழான அந்தஸ்தில் அமுக்கி வைத்துவிட்டதாக அவர் மனப் பால் குடித்துக் கொண்டார்.

ஆண்டவனது அகடி தகடனா சக்தி அபூர்வமானதென்பதை யாரே அறியவல்லார்? பஹ்ரீ மம்லூக்குகளும் புர்ஜீ மம்லூக்குகளும் எதிர்காலத்தில் ஐயூபிகளுக்கே புதை குழிகளைச் சித்தம் செய்யப்போகிறார்கள் என்பதை எவரே அன்று எதிர்பார்த்தார்?

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 29>> <<அத்தியாயம் 31>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment