இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா – 8

by admin

 8. அரபுக்கதை

தாவூத் ஷா ஒரு இதழாளர் மட்டுமல்ல; எழுத்தாளருங்கூட. அவர் அரசியலைப் பற்றி மட்டும் எழுதவில்லை; சமயம் – சமுதாயம் பற்றி மட்டும் எழுதவில்லை. படிப்பதற்கு இனியப் பொழுதுபோக்குக் கதைகளும் எழுதினார்.

தாவூத் ஷா நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார். “தாருல் இஸ்லாம்” போல அல்லாமல், இந்த நூல்கள் பல நூலகங்களில் இப்போதும் உள்ளன. கோட்டக்குப்பம் நூலகத்தில் நிறைய நூல்கள் இருக்கின்றன. நீடூர் நூலகம், கம்பம் அலி சேகரிப்பு, இளையான்குடி நூலகம் என்று பல நூலகங்களிலும் தாவூத் ஷாவின் நூல்களை இப்போதும் பார்க்க முடிகிறது. ஆனால், எல்லா நூல்களையும் பட்டியல் போட்டாலும் 30-40க்கு மேல் தேறாது. குறிப்பாக தாவூத் ஷா எழுதிய கதைகளைக் காண முடியவில்லை.

அரபுக்கதைகள்

தாவூத் ஷா எழுதிய கதைகளில் மிக முக்கியமானது, அரபுக் கதைகள். “அன்று இந்தக் கதைகளைப் படித்தவர்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்” என்கிறார், ஜே.எம்.சாலி. அவ்வளவு அருமையான கதைகள்.

இப்போது பல அரபுக் கதைகள் வெளிவந்துள்ளன. இவை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. சுருக்கப்பட்ட கதைகளும் கூட.
தாவூத் ஷா நேரடியாக அரபு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தார். அரபியிலிருந்து அரபுக் கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது இதுவே முதல் முறை.

அல்பு லைலா வலைலா

அரபுக் கதைகளுக்கு “அல்பு லைலா வலைலா” என்று தாவூத் ஷா பெயர் சூட்டினார். “ஆயிரம் இரவும் அப்பால் ஓரிரவும் என்னும் கதை அரபி மொழியில் ‘அல்பு லைலா வலைலா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயரின் பொருள் ‘ஆயிரத்தோர் இரவு’ என்றே சொல்ல வேண்டும். இன்னமும் ஆழ்ந்து நோக்குவோமாயின், ‘ஆயிரம் இரவும் அப்பால் ஓரிரவும்’ என்பதுதான் அந்த அரபிப் பெயரின் நேரான பொருளாகும்” என்று தாவூத் ஷா விளக்கம் தருகிறார்.

“அரபு நாட்டுக் கதையின் அசல் அரபு மூலம் தற்சமயம் தமிழ்நாட்டில் எம்மைத் தவிர வேறு எவர் கையிலும் இல்லை. அந்த 1001 இரவு கதைகளையும் அசல் அரபு மூலத்திலிருந்து தமிழில் அப்படியே வெளியிட்டால் ஒரு இலட்சம் பக்கங்கள் வரை ஆகலாம்” என்றும் அவர் சொல்லுகிறார்.

ரஞ்சித மஞ்சரி

சென்னையில் கார்டியன் அச்சகத்தை விலைக்கு வாங்கியதும் “சீக்கிரம் முஸ்லிம்களுக்கு என்று பொதுவான ஒரு வாரப் பத்திரிகை வெளியிட உத்தேசித்திருக்கிறோம்” என்று தாருல் இஸ்லாம் 1927 ஏப்ரல் இதழில் தாவூத் ஷா அறிவித்திருந்தார்.

ஆனால், அந்த இதழை 1932 செப்டம்பரில் தான் அவர் வெளியிட்டார். “ரஞ்சித மஞ்சரி” என்று பெயர். அவரே ஆசிரியராக இருந்தார். பொதுவான கதை கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள், சிரிப்புகள் இந்த இதழில் இடம் பெற்றன.

இதன் மூலம் இதழிலேயே அரபுக் கதையை தொடராக வெளியிடத் தொடங்கினார், தாவூத் ஷா. “அல்பு லைலா வலைலா என்னும் ஆயிரத்தோர் இரவில் சொல்லப்பட்ட அதியற்புதக் கதைகள்” என்று பெயரிட்டார். “மெளலானா வரைவது” என்று புனைப் பெயரும் பூண்டார்.

மாதந்தோறும் தொடர்ந்து வெளிவரும் என்று தாவூத் ஷா அறிவித்தார். ஆனால், எத்தனை மாதம் வெளி வந்தது என்பதை அறிய இயலவில்லை. ஆனால், விரைவில் நின்றுவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. பிறகு அதை நூலாக வெளியிடும் முயற்சி நடந்தது.

1955 ஜனவரி தாருல் இஸ்லாம் இதழில், “1001 இரவுகளில் சொல்லப்பட்ட எல்லாக் கதைகளையும் நாம் அசல் அரபு மூலத்திலிருந்து மொழி பெயர்த்து வைத்திருக்கிறோம். 2 மாதத்துக்கு ஒன்றாகத் தொடர்ந்து சிறுசிறு வெளியீடுகளாக ‘அரபுக்கதை’ என்ற பெயருடன், மிகச் சொற்ப விலையில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்” என்ற விளம்பரம் காணப்படுகிறது.

1955 மார்ச்சு இதழில் “முதல் வெளியீடும், இரண்டாவது வெளியீடும் இப்போது விற்பனைக்குத் தயாராகி விட்டன. ஒவ்வொரு வெளியீடும் பிரதியொன்று ஒரு ரூபாய் விலையில் கிடைக்கும். ஒவ்வொரு வெளியீடும் நாகரிகமான மூவர்ண ஆர்ட் அட்டையுடன் கண் கவரும் வண்ணம் மிளிர்கின்றது. அடுத்தாற் போல் மூன்றாவது, நான்காவது வெளியீடுகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டே இருக்கும்” என்ற விளம்பரம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து வெளிவந்ததா? தாவூத் ஷா நடத்திய ‘ஷாஜகான் புக் டிப்போ’ விளம்பரங்களில் கூட அரபுக் கதைகள் இல்லை. முதலிரு நூல்களைக் கூட இப்போது காண முடியவில்லை. நூலகங்களிலும் இல்லை. எல்லாம் இஸ்லாம் சமய நூலகங்கள். இதுவோ கதை. அதுவும் இனக் கவர்ச்சி நிறைந்த கதை. அதனால் நூலகங்களில் பாதுகாத்து வைக்கவில்லை போலிருக்கிறது.

மும்தாஜ்-நூர்ஜகான்

இன்னும் பல கதைகளை தாவூத் ஷா எழுதியிருக்கிறார். மும்தாஜ், நூர்ஜகான் ஆகியோர் வரலாற்றை எழுதியுள்ளார்.

இந்தியாவை ஆண்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்ததும், அவருடைய மூத்த மகன் எட்டாம் எட்வர்டு பட்டத்துக்கு வருவதாக இருந்தது. அவர் சிம்சன் என்ற அழகியைக் காதலித்தார்; மணந்து கொள்ள விரும்பினார். ஆனால், சிம்சன் ஏற்கனவே மணமாகி விவாகரத்துப் பெற்றவர். எனவே, அவரை மணந்து கொள்ள எட்டாம் எட்வர்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை. மணிமுடியை விடக் காதலே பெரிதெனக் கருதிய அவர், முடி துறந்து, சிம்சனை மணந்தார். இந்த மாபெரும் காதல் காவியத்தை “சிம்சனா? சிம்மாசனமா?” என்ற பெயரில் தாவூத் ஷா வெளியிட்டார். (இந்நூலில் அரபுக்கதை முதல் பாகம் வெளிவந்து விட்ட விளம்பரம் இருக்கிறது.)

கப்பல் கொள்ளைக்காரி
தாவூத் ஷா எழுதிய வேறு பெருங்கதைகள் (புதினங்கள்);
கள்ள மார்க்கெட்டு மோகினி
காதலர் பாதையில்
ரஸ்புதீன்
ஜுபைதா
கப்பல் கொள்ளைக்காரி
காபூல் கன்னியர்
கரளபுரி இரகசியம்
காதல் பொறாமையா? அல்லது பொறாமைக் காதலா?
ஹத்திம் தாய்
மலை விழுங்கி மகாதேவன்

இவைதான் எனக்குக் கிடைத்தவை. இன்னும் பல இருக்கின்றன. தாவூத் ஷா சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். “அகமது உன்னிசா மூட்டை கட்டுகிறாள்” ஒரு நல்ல நகைச்சுவை சித்திரம் என்கிறார், ஜே.எம்.சாலி.

உடல்நல நூல்கள்

சில உடல் நல நூல்களையும் தாவூத் ஷா எழுதியிருக்கிறார்.

“சுவாசமே உயிர்” என்பது ஒரு நூல். மூட்சுப் பயிற்சி செய்வதன் பயனை இந்நூலில் அவர் விளக்குகிறார்.

“ஜீவ வசிய பரம இரகசியம்” என்று ஒரு நூல். இதுவும் உடல் பயிற்சி நூல்தான். வாசகர்களைக் கவர்ந்து இழுக்க “பரம இரகசியம்” என்று பெயர் சூட்டியிருக்கிறார். உடற்பயிற்சி செய்யும் முறைகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

மனோவசியம் பற்றி “மெஸ்மரிசம்” என்ற நூலும் எழுதியிருக்கிறார்.

மனோவசியத்தை வைத்தே “பண்டிதை மெஸ்மரிசா” என்ற பெருங்கதை எழுதினார். அதுதான் “பயங்கரக் கப்பல் கொள்ளைக்காரி”

மார்டன் தியேட்டர் தயாரித்த “மின்னல் கொடி” என்ற திரைப்படம் இந்தக் கதையைத் தழுவியது என்று, தைகா சுஐபு ஆலிம் அவர்கள் தெரிவித்தார்.

“மணவாழ்க்கையின் மர்மங்கள்” என்று ஒரு நூல்.

அக்கால அதிசயங்களை அறிமுகப்படுத்தி “உலக அதிசயங்கள்” என்று ஒரு நூல்.
இப்படிப் பலதுறை நூல்களை தாவூத் ஷா எழுதியிருக்கிறார். எழுதியதை அனுபவத்திலும் கடைப்பிடித்தார். காலையில் நடைபோவது அவரது வழக்கம்.

கட்டுரைகள்

“குர்ஆன் மஜீதை நான் மொழிபெயர்த்த முழு விருத்தாந்தம்” என்பது, தாருல் இஸ்லாமில் ஈராண்டுப் போலத் தொடர்ந்து வெளிவந்த கட்டுரை.
“எம் மலாய் நாட்டு அனுபவம்” என்ற பயணக் கட்டுரையும் தொடராக வெளிவந்தது.

முஸ்லிம் தமிழ் வாசகம்

சிறுவர்கள் படித்த அந்நாளையப் பாட நூல்களில் இந்து சமயக் கதைகளே இடம் பெற்றன. அதற்கு மாற்றாக “நூதன முஸ்லிம் தமிழ் வாசகம்” என்ற நூலை தாவூத் ஷா எழுதினார். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு இந்நூலை சொல்லித் தர அரசு அனுமதி அளித்தது.

இந்நூலில் இடம் பெற்ற இரண்டு சிறுகதைகளை பெரியவர் தைகா சுஐபு ஆலிம் அவர்கள் நினைவு கூர்ந்தார். சிறு வயதில் நாமும் பள்ளியில் படித்த-கேட்ட கதைகள் தான். ஆனால், இந்தக் கதைகள் தாவூத் ஷா எழுதியவை என்பது இப்போதுதான் தெரிகிறது. இரண்டும் பாரசீகக் கதைகள்.

“குலாம் காதரும் குல்லாவும்” என்பது ஒரு கதை. குலாம் காதர் ஒரு குல்லா வியாபாரி. ஒருநாள் குல்லாக்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு, வியாபாரத்துக்கு போகிறார். வழியில் களைப்பு ஏற்பட்டு, ஒரு மரத்தடியில் படுக்கிறார். தூங்கி விழித்துப் பார்த்தால் குல்லாக்களைக் காணோம். எங்கே போயின? நாலாபுறமும் பார்க்கிறார். மேலேயும் நோக்குகிறார். குல்லாக்களுடன் நிறைய குரங்குகள் அமர்ந்திருந்தன. அவர் தூங்கும்போது குரங்குகள் குல்லாக்களை எடுத்துக் கொண்டு, மரத்தில் ஏறிவிட்டன. குல்லாக்களை மீண்டும் எப்படிப் பெறுவது? குலாம் காதருக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. தனது தலையில் வைத்திருந்த குல்லாவைக் கையில் எடுத்துத் தூக்கி எறிந்தார். உடனே குரங்குகளும் தங்கள் தலையில் வைத்திருந்த குல்லாக்களை எடுத்து வீசி எறிந்தன! கீழே விழுந்த குல்லாக்களைப் பொறுக்கி மூட்டை கட்டிக் கொண்டு, குலாம் காதர் குதூகலத்துடன் நடந்தார்.

இன்னொரு கதை: அல்நாசர் ஒரு முட்டை வியாபாரி. வியாபாரத்தைக் கவனியாமல் அடிக்கடி பகல் கனவுகளில் மூழ்கி விடுவார். ஒருநாள் அது போல பகல் கனவு கண்டார். முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வைக்கிறார். குஞ்சுகள் கோழிகளாக வளர்கின்றன. அந்தக் கோழிகள் முட்டையிடுகின்றன. முட்டை-குஞ்சு-கோழி என்று பெருகிக் கொண்டே போகின்றன. அல்நாசர் கோடீஸ்வரன் ஆகிவிடுகிறான். அந்த நாட்டின் இளவரசியை மணந்து கொள்ளுகிறான். இளவரசி அவனுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள். “சோற்றுக்கு ஏண்டி உப்புப் போடவில்லை?” என்று அல்நாசர் அவளைக் காலால் எட்டி உதைக்கிறான்… அவன் கால்பட்டு, காலடியிலிருந்த முட்டையெல்லாம் உடைந்து விடுகின்றன!
எவ்வளவு நீதி நிறைந்த கதைகள்!

தாவூத் ஷா எழுதிய “நூதன முஸ்லிம் தமிழ் வாசகம்” இப்போது யாரிடமாவது கிடைக்குமா? கிடைத்தால், மீண்டும் அச்சிட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாமே!

(தொடரும்)

நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா

ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்

Related Articles

Leave a Comment