01. வஹீ அருளப்பெற்ற விவரம் – ஹதீஸ் 2

ஹதீஸ் 2

ஆயிஷா பிராட்டியார் (ரலி) கூறினார்: அல்லாஹ்வின் திருத்தூதருக்கு (ஸல்) ஆதியில் அருளப்பட்ட ஞான அறிக்கை நித்திரையின் போது அளிக்கப்பட்ட உண்மையான கனவாகவே இருந்து வந்தது;1 ஆகவே, அதன் உண்மை விடியற் காலத்தின் உதயத்தைப் போலே பிரகாசித்தே யொழிய (வேறு விதமாக) அன்னவர்கள் கனவொன்றையும் ஒருபொழுதும் கண்டது கிடையாது. பிறகு தனித்திருப்பதே அவர்களுக்குப் பிரியமாய்விட்டது; இன்னம், அன்னவர்கள் ஹிராவின் குகையினுள்ளே2 தங்களைத் தனிமையாகச் செய்துகொள்ளப் பழகிக் கொண்டார்கள்; அவர்கள் தங்கள் குடும்பத்திற்குத் திரும்பிவந்து, அதற்கு வேண்டிய ஆகாராதிகளையும் எடுத்துச் செல்லு முன்னே, அதில் அநேக இரவுகள் மட்டும் (தங்கியிருந்து) ஆண்டவனது வணக்கத்திலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டும் இருப்பார்கள்; பிறகும் கதீஜா (ரலி) பிராட்டியாரிடம்3 திரும்பி வந்து, அதே மாதிரியான (காலத்)துக்கு வேண்டிய ஆகாராதிகளை (அதிகம்) எடுத்துச் செல்வார்கள்; (எதுவரையிலென்றால்) அவர்கள் ஹிராவின் குகையில் இருந்த பொழுது, அன்னவர்கள்பால் சத்யம்4 வந்து சேர்ந்த வரையிலே; ஆகவே, வானவர் – (ஜிப்ரீல்) அவர்கள்பால் வந்து, ஓதுமென்றுங் கூறலுற்றார். அவர்கள் – (நபிகள் திலகம்) “நான் ஓதக்கூடிய ஒருவனல்லேன் என்று சொன்னேன்,” என்று சொன்னார்கள்; மேலும், தொடர்ந்து சொன்னார்கள்: “பிறகு அவர் – (வானவர்) என்னைப்பிடித்து, என்னால் இனிமேல் தாங்க முடியாத அத்துணைக் கடினத்துடனே என்னை அழுத்திவிட்டு, அப்பாலென்னை விலகவும் விட்டு, ஓதுமென்றுங் கூறினார்; நான் ஓதக்கூடிய ஒருவனல்லேன் என்று சொன்னேன். பிறகும் அவர் என்னைப் பிடித்து, என்னால் இனிமேல் தாங்க முடியாத அத்துணைக் கடினத்துடனே என்னை இரண்டா முறையாகவும் அழுத்திவிட்டு, அப்பாலென்னை மறுமுறையும் விலகவிட்டு, ஓதுமென்றுங் கூறினார்; நான் ஓதக்கூடிய ஒருவனல்லேன் என்று சொன்னேன்.” (மேலும் நபி பெருமான்) தொடர்ந்து சொன்னார்கள்: “பிறகு அவர் என்னைப் பிடித்து, மூன்ற முறையாகவும் என்னை அழுத்திவிட்டு, அப்பாலென்னை விலகவும்விட்டு, ‘சிருஷ்டித்த உம்முடைய ரக்ஷகனது திருநாமத்தைக் கொண்டு, ஓதுவீராக;- அவன் மனிதனை ஓர் உதிரக் கட்டியினின்று சிருஷ்டித்தான். -ஓதுவீராக; மேலும், உம்முடைய ரக்ஷகன் மகா கண்ணியமுள்ளவனாய் இருக்கிறான்,’5 என்றும் சொன்னார்.”

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்)6 தங்கள் ஹிருதயம் அடித்துக் கொண்டிருக்க, இதனுடனே* திரும்பிவந்து, குவய்லிதின் குமாரியாகிய கதீஜாவிடம் (ரலி) பிரவேசித்து, “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்,” என்றும் கூறினார்கள்; அவர்கள், அவரை விட்டு விம்மிதம் நீங்குமட்டும்7 அன்னவரைப் போர்த்தியும் வைத்தார்கள். அப்பால் அவர்கள் – (நபி பெருமான்) கதீஜாவின்பால் என்ன நிகழ்ந்ததென்று விவரித்துக் கூறியபொழுது, “எனக்காகவே யான் அஞ்சுகின்றேன்,”8 என்று அவருக்குச் சொன்னார்கள். (அப்பொழுது) கதீஜா பிராட்டியார் கூறினார்: ‘அப்படியில்லை; உங்களை அல்லாஹ் ஒருபொழுதும் அவமானத்திற்குக் கொண்டு வரமாட்டான் என்பதற்குச் சாக்ஷியாக யான் அல்லாஹ்வையே அழைக்கின்றேன்; ஏனென்றால் நீங்கள் உறவு முறையின் தளைகளைப் பிணித்து வைக்கின்றீர்கள்; பலஹீனர்களின் சுமையையும் சுமக்கின்றீர்கள்; ஆதரவற்றவர்களுக்காக அனுதாபமும் காட்டுகின்றீர்கள்; விருந்தினரைக் கண்ணியமும் படுத்துகின்றீர்கள்; உண்மையான சங்கடத்தில் (சிக்கியவர்கட்கு) உதவியும் புரிகின்றீர்கள்.’

பின்பு கதீஜா பிராட்டியார் அப்பெருமானாரைத் தம்முடைய பெரிய தந்தையின் குமாரராகிய – அப்துல் உஜ்ஜாவின் மகனாகிய அஸதின் குமாரராகிய நவ்பலின் புத்திரராகிய – வரக்காவின் பால் அழைத்துக் கொண்டு உடன் சென்றார்; இன்னம், அன்னவர் அஞ்ஞான காலத்தில்9 கிறிஸ்தவராக மாறிவிட்டிருந்த மனிதராயிருந்தார்; அவர் இப்ரானீ மொழியை எழுதும் பழக்கமுடையவராய் இருந்து, சுவிசேஷத்தி – (இன்ஜீலி)லிருந்து இப்ரானீ மொழியில், அன்னவர் வரைய வேண்டுமென்று அல்லாஹ் நாடியதை வரைந்துகொண்டுமிருந்தார்; அவர் கண் தெரியாமற் போய்விட்டிருந்த ஒரு தளர்ந்த வயது முதிர்ந்தவராயும் இருந்துவந்தார். ‘ஏ என் பெரிய தந்தையின் மைந்தரே! உம்முடைய சகோதரர் குமாரர்10 என்ன சொல்லுகிறாரென்று நீர் செவி தாழ்த்திக் கேளும்,’ என்று கதீஜா பிராட்டியார் அவருக்குச் சொன்னார். அப்பொழுது வரக்கா அவர்களை நோக்கி, ‘என் தம்பி மைந்த! நீர் என்ன கண்டீர்?’ என்று வினவினார். ஆகவே, அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) தாங்கள் என்ன கண்டார்களென்று அவருக்கு விவரித்துக் கூறினார்கள். (அப்பால்) வரக்கா அவர்களுக்குச் சொன்னார்: ‘இவர்தாம் மூஸாவின்பால் அல்லாஹ் இறக்கிவைத்த ஜி்ப்ரீல் என்னும் வானவராய் இருக்கிறார்;11 இந்த வேளையில் யானோர் இளவலாய் இருக்க வேண்டிற்றே; உம்முடைய ஜனங்கள் உம்மை வெளியேற்றுங்கால், யான் உயிருடனிருக்க வேண்டிற்றே.’ (அப்பொழுது) அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) “அவர்கள் என்னை வெளியேற்றுவார்களோ?” என்று வினவினார்கள். (இதற்கு) அவர் சொன்னார்: ‘ஆம்; நீர் கொண்டு வந்திருப்பதைப் போன்ற தொன்றுடனே எந்த மனிதனும், அன்னவன் விரோதப் பான்மையுடனே கொள்ளப்பட்டேயன்றி, (வேறு விதமாகத்) தோன்றியது எப்பொழுதுமே இல்லை; இன்னம், உமது காலம் என்னை (உயிருடனிருக்க)க் கண்டு கொள்ளுமாயின், நான் உமக்கு முழு உதவியையுங் கொண்டு உதவி புரியக் கடவேன்.’ அதன் பிறகு வரக்கா மரணமாகாது (அதிக நாள்) தாமதித்திருக்கவில்லை; (பின்பு) வஹீயும் தாற்காலிகமாய் நின்று போய்விட்டது.12 – (புகாரீ 1:1)


1. எனவே, உண்மைக் கனா (மனாம்) அல்லாஹ்வின் ஒருவித வஹீயாகவே இருந்து வருகிறதென்பது கண்கூடு. வேறொரு ஹதீதின் பிரகாரம் அர்ரூயா அஸ்ஸாலிஹா (சத்யமாய சூக்ஷ்ம தர்சனம்) நபித்துவத்தின் ஓரம்சமாய் இருந்து வருகிறது: “ ‘முபஷ்ஷிராத்தை (நன்மாராயத்தை) அன்றி, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை,’ என்று நபி பெருமானார் (ஸல்) நவின்றருளினார்கள்.” அதுகேட்டுத் தோழர்கள், “முபஷ்ஷிராத் என்பது யாது?” என்று வினவலுற்றார்கள். அதற்கு விடையில், “உண்மைக் கனா” என்று எம்பிரான (ஸல்) மறுமொழி கூறினார்கள் (புகாரீ 92:5). இஸ்லாத்தில் விசுவாசங் கொண்டவர்கள் காணுங் கனா நபித்துவத்தின் ஓரம்சமாய் இருக்கிறதென்று மிக வெளிப்படையாய்க் கூறப்பட்டிருக்கிறது (புகாரீ 92:26). :குர்ஆன் ஷரீபிலும் அல்புஷ்ரா (சத்யமாய சூக்ஷ்ம தர்சனங்கள்) மூமினானவர்களுக்கு – இஸ்லாத்தின் விசுவாசிகளுக்கு – இவ்வுலக வாழ்க்கையிலும் அருளப்படுமென்னும் உறுதிமொழி கூறப்பட்டுள்ளது (10:64). ஆகவே, நபித்துவம் என்பதும், வஹீ என்பதும் ஒன்றென்றே எண்ணிவிடற்க. நபித்துவம் என்பது முடிவடைந்து விட்டது; ஆயின், முதலிரண்டுவித வஹீயும் (குர். 42:51) என்றென்றும் மூமின்களுக்கு அருளப்பட்டேவரும்.

2. ஹிரா வென்னும் (6 அடிக்கு 4 அடியுள்ள) மலைப் பொதும்பு, மக்காவுக்கு வடகிழக்கில் சுமார் 3 மைல் தூரத்தில் இருக்கிறது ஒரு செங்குத்தான குன்றின்மீது. 

3. கதீஜா பிராட்டியார் (ரலி) 40 வயது சென்றிருந்த விதவையாய் இருந்தபொழுது, 25 பிராயமே எய்தியிருந்த எம்பிரானவர்கள் (ஸல்) முதல் மனைவியாக மணமுடித்துக் கொண்டார்கள். அப் பெருமானார் ஐம்பதாவது பிராயத்தை அடைந்தபொழுது, அப் பெருமாட்டியார் காலகதியால் 65-ஆவது வயதிலே தேகவியோகமாய் விட்டார்; அதுவரை அப் பிராட்டியே நபிபெருமானுக்குரிய ஏகபத்தினியாய் இருந்துவந்தனர்.

4. சத்யம் என்பது, “சத்ய தேவர்,” அல்லது “பரிசுத்த ஆன்மா,” அஃதாவது, ஜிப்ரீல் (அலை) என்னும் வானவரைச் சுட்டிக் காட்டும்; அவர் “வானவர்” என்றே அடுத்த மூச்சில் அழைக்கப்பட்டுள்ளார். நபிமார்களுக்குரிய முதற்றரமாகிய துரியாதீத வஹீ வானவர் ஜிப்ரீல் வாயிலாய் முதன் முதலில் நபிகள் திலகத்துக்கு அருளப்பட்டது, ஒரு செய்தியின்படி, ரமலான் பிறை 25-இ லாம். மற்றும் பலர், அது ரமலா’ன் 17-ஆவது பிறையென்று கூறுவர்; இஃது 27 என்பதற்கு மாறாய்த் தவறாக 17 என்று கூறப்பட்டுள்ளது போலும். என்னெனின், :குர்ஆன் ஷரீபில் கூறப்பட்டுள்ள வண்ணம் முதல் வஹீ லைலத்துல் கத்ர் இரவிலேதான் அருளப்பட்டிருக்கிறது. (அத். 97); இம் மாட்சிமிக்க இரவு ரமலான் பிறை 25, 27, 29 என்னும் மூன்றிரவில் ஓரிரவிலே வருகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களது கூற்றுப்படி, நபிகள் திலகம் (ஸல்) அதுபொழுது தங்கள் 40-ஆவது பிராயத்தை அடைந்திருந்தார்கள் (புகாரீ 63:28). 

5. இவை :குர்ஆன் ஷரீ‘பின் 96-ஆவது அத்யாயத்திலுள்ள முதல் மூன்று திருவாக்கியங்களாம்; ஆனால், அவ்வத்யாயத்தின் முதலைந்து திருவாக்கியங்களே அதுபொழுது நபிபெருமானுக்கு அருளப்பட்டன என்பதே எல்லோரின் ஏகோபித்த அபிப்ராயமாய் இருந்துவருகிறது. குர்ஆன் 96:1-5 ஆயாத்கள் அருளப்பட்டதன் பின்னால், அடுத்துவரும் ஹதீது விளக்குவதேபோல், குர்ஆன் 74-ஆவது அத்யாயத்திலுள்ள முதலைந்த ஆயாத்களுமே அடுத்தபடியாய் அருளப்பட்டனவென்று நாம் நன்கு தெரிந்து கொள்ளுகிறோம். 

6. “அல்லாஹ்வின் ஆசியும் சாந்தியும் அன்னவர்கள்மீது அமையக்கடவன” என்பதற்குரிய அரபு வாழ்த்து, ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் என்பதாய் இருக்கிறது; இதன் அரப்சுருக்கம் ஸல் என்பதாகும். எனவே, இனி இந்நூல் முழுதிலும் இவ் வாழ்த்தை இவ்வாறு (ஸல்) என்றே யாம் எழுதிவருவோம்; கவனித்துக்கொள்க. 

* அத்தூதுச் செய்தியுடனே. 

7. விம்மிதம் (அச்சம்) ஏற்பட்டதற்குக் காரணம், நபித்துவத்துக்குரிய வஹீ முதன்முறையாய் வரத்துவக்கியதால் விளைந்துள்ள அதிசயத்தால் நேரிட்ட ஆச்சரியமேயாகும். 

8. “எனக்காகவே யான் அஞ்சுகின்றேன்,” என்றது, நபிபெருமான் தங்கள் தோள்மீது சுமத்தப்பட்ட, மன்பதைகளைச் சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவருவதென்னும், அம் மாபெருங்காரியத்தில் தங்களால் வெற்றிபெற முடியுமோ என்று ஆதியிலே சிறிது ஐயங்கொண்டுவிட்டதைக் குறித்துக் காட்டும். என்னெனின், கதீஜா பிராட்டியார் கூறிய விடை இக்கருத்தையே ஊர்ஜிதப்படுத்துகிறது; மன்பதைகளைச் சீர்திருத்துவதென்னும் அம் மாபெருங் கைங்கரியத்துக்கு அருகதை வாய்ந்தவர் இக் குவலயத்தில் எவரேனும் இருக்கத் தகுமாயின், அப்படிப்பட்டவர் இப்பெருமானாரே என்று கதீஜா பெருமாட்டி (ரலி) எடுத்துக் காட்டினார்; என்னெனின், மன்பதையின் ஊழியத்திற்காக இதற்குமுன்பே இம் மஹானுபாவர் தங்களை அர்ப்பணம் செய்துவிட்டிருந்தார்கள்: “என் கடன் மக்கட் பணிசெய்து கிடப்பதே,” என்னுந் தியாக புத்தியுடனே இன்றுகாறும் காலங் கழித்து வந்துளார்கள். நபிப்பட்டம் அருளப் பெறுமுன்னேயே நம்பெருமானார் எவ்வாறு நானிலத்தாரின் நன்மையின் பொருட்டே உயிர் வாழ்ந்து வந்தார்களென்னும் உண்மையும் இதனால் இனிது விளங்கா நின்றதன்றோ? இந்த ஹதீதிலாதல், அல்லது வேறெந்த ஹதீதிலாதல், நபிகள் திலகம் (ஸல்) ஜின்னால் தாங்கள் கொல்லப்பட்டு விடக்கூடுமென்றோ, அல்லது தங்களுக்குப் புத்தி ஸ்வாதீனமில்லாது தடுமாறிப் போய்விட்ட தென்றோ அச்சங்கொண்டு விட்டார்களென்று அறைவதற்கொன்றும் ஆதாரம் அணுத்துணைகூட அகப்படவில்லை என்பது அதிக திண்ணமேயாம். முதல் வஹீ வந்துற்ற பொழுதே தாங்கள் நபியின் உன்னத அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு விட்டார்களென்றும், மன்பதைகளை எல்லாம் சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு முழுதும் தங்கள் தோள்மீது சுமத்தப்பட்டு விட்டதென்றும் நபிகள் திலகம் (ஸல்) நன்கு தெரிந்து கொண்டு விட்டார்கள். 

9. இஸ்லாத்துக்கு முன்னேயிருந்த காலம் அல் ஜாஹிலிய்யத் (அஞ்ஞானம்) அல்லது அய்யாமுல் ஜாஹிலிய்யத் (அஞ்ஞான காலம்) என்றே அழைக்கப்பட்டு வந்தது; இஸ்லாத்தில் உதயத்துக்குப் பின்னே ஞானமும் கல்வியும் நல்லவிதமாய் எங்கும் பரவத் தலைப்பட்டுவிட்டமையால், அதற்கு முந்தியுள்ள காலம் அவ்வாறு “அஞ்ஞான கால”மென்று அழைக்கப்படலாயிற்று. 

10. “சகோதரர் குமாரர்” என்பதும், இனியப்பால் “தம்பி மைந்தர்” என்பதும் உண்மையிலே உடன்பிறந்தார் மைந்தனை இங்குக் குறிப்பிடுவதில்லை; அரபிகள் மரபில் அவ்வாறு உறவு கூறி அழைப்பது வழக்கம். இது கரிசனத்தால் கூறப்படுவது. 

11. அரப் மூலத்தில் நாமூஸ் என்று அவ் வானவர் நாமம் கூறப்பட்டிருக்கிறது. இங்கு நாமூஸ் என்பவர் ஜிப்ரீலாகவே இருக்கிறார் (பராஇதுத் துர்ரிய்யா). “அரசன் தனது அந்தரங்கத்தை எவன்பால் நம்பி ஒப்படைக்கிறானோ, அவன் நாமூஸ்” என்று அழைக்கப்படுவான்; ஆயின், அப்பெயர் ஹதீதில், “அல்லாஹ் தன்னுடைய அறிவிப்புக்களை எவர்பால் ஒப்படைக்க நாடியுள்ளானோ, அப்படிப்பட்ட வானவர் ஜிப்’ரீலையே” சுட்டிக் காட்டுவதா யிருக்கிறது (நிஹாயா). இவ் வியாக்கியானமே இமாம் புகாரீயாலுங்கூட 60:22-இல் இதே ஹதீது மீட்டுங் கூறப்படுமிடத்திலே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து வஹீயுடனே வானவர் ஜிப்ரீல் (அப் பரிசுத்த ஆன்மா) தங்கள்பால் விஜயம் செய்தாரென்று நபிகள் திலகம் கூறியது மெய்யான சம்பவமென்றுதான் வரக்காவும் உண்மையிலே ஊர்ஜிதம் செய்கின்றார்; இன்னம், அன்னவரே மூஸா நபிக்கு வஹீ கொணர்ந்தவரென்றும் அறிவிக்கின்றார்; வரக்கா அவ்வாறு கூறத் துணிந்ததன் நோக்கம், பனீ இஸ்மாயீல்களில் (இஸ்மவேலருள்ளே) அஃதாவது, அரபிகளுள்ளிருந்து “மூஸாவைப் போன்ற” ஒரு தீர்க்கதரிசி எழுப்பப்படுவாரென்று பைபிள் வேதம் (உபாகமம் 18:18) கூறியுள்ள தீர்க்கதர்சனத்தைச் சுட்டிக் காட்டுவதாயே இருந்துவருகிறது. அது வருமாறு: “உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்…..” 

12. அதுபொழுது வஹீ தாற்காலிகமாய் நின்றுபோய்விட்ட வைபவம் நெடுநாள் மட்டும் நீடித்திருக்கவில்லை; நிச்சயமாக அஃது ஆறு மாத காலத்துக்கு மேலே நீடிக்கவில்லையென்பது திண்ணமேயாம். மூன்று வருட காலமட்டும் அவ் வஹீ ஓய்ந்து போய்விட்டதென்று இப்னு இஸ்ஹாக் கூறியிருப்பது சரித்திரச் சான்றுக்கு நேர்மாறாய் இருக்கிறது. நபிப்பட்டம் அருளப்பட்டு மூன்றாண்டுகளுக்கு நெடுநாட்கள் முன்னேயே குறைஷியரின் கொடுமை அவ்வாதிகால முஸ்லிம்களை அளவுக்கு மீறிய இன்னல்களுக்கும் இடையூறுகளுக்குமெல்லாம் ஆளாக்கிவிட்டதென்பதும், அதற்குள்ளே குர்ஆன்ஷரீபின் பெரும்பாகம் அருளப்பட்டு விட்டதென்பதும் சரித்திரமறிந்துள்ள உண்மைகளேயாம். குறைஷிகளின் கொடுமை மிகமிகப் பெருகிப்போய், நுபுவ்வத் – (நபிப்பட்டம்) வந்து நான்காவது ஆண்டிலே அது பொறுக்க முடியாது பொங்கிப் போய் விட்டமையால், நபிபெருமானார் அர்க்கம் (ரலி) என்பாரின் வீட்டினுள்ளே புகலிடம் தேடிக் கொண்டு, அங்கேயே கூட்டமான – (ஜமாஅத்) தொழுகையையும் தொடர்ந்து நடாத்தி வந்தார்களென்பதும் சரித்திரம் கண்டுள்ள சான்றாகவே இருந்து வருகிறது; இன்னம், ஆதிமுதற்கொண்டே அம் முஸ்லிம்களின் ஐங்காலத் தொழுகைகளில் குர்ஆன்ஷரீபி லிருந்து ஆயாத்கள் பல ஓதிவரப்பட்டன என்பதும் சரித்திரம் கூறும் சாக்ஷியமேயாம். 


<–முந்தையது–> <–அடுத்தது–>

<–முகப்பு–>

Related Articles

Leave a Comment